Serial Stories Sollamal Thotu Sellum Thenral

Sollamal Thottu Sellum Thendral – 3

3

 

 

அருமை என உன்னை
பாராட்ட வைத்ததே
என் வாழ்நாள்
அருஞ்சாதனை..

“நீங்கள் ஆரம்பியுங்கள்.. நான் சேர்ந்து கொள்கிறேன்..”

“நா.. நானா.. நீ சொல்ல ஆரம்பிப்பாய்னு நினைத்தேன்..” அம்மாவும், அப்பாவும் குசுகுசுவென பேசும் பேச்சுக்களுக்கு காதை தீட்டிக் கொண்டிருந்தாள் மைதிலி.. அவர்கள் அவளிடம் பேசத்தான் ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.. இந்த திருமண விசயத்தை மகளின் காதில் ஓத கடும் பிரயத்தனங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.. மடியில் வைத்திருந்த கல்லூரி பாடத்தில் மனம் பதியவில்லை மைதிலிக்கு… திகுதிகுவென்று அவள் மனதினுள் ஒரு ரயில் ஒடிக் கொண்டே இருந்தது..

“படிச்சிட்டு இருக்கிறாயாடா..?” கேட்டபடி வந்து நின்ற தந்தையை நிமிர்ந்து பார்த்தாள்..

“சொல்லுங்கப்பா..” புத்தகத்தை மூடி வைத்துவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள்.. அவள் எதிர்பார்த்த தருணம் வந்து விட்டது..

“பரீட்சை எப்போதுடா ஆரம்பிக்கிறது..?”

“அடுத்த வாரம்பா.. வர்ற இருபதாம் தேதியோடு முடிந்துவிடும்..”

“அப்போது இன்னும் ஒருமாதத்தில் உன் கல்லூரி வாழ்வு முடியப்போகுதுன்னு சொல்லு..”

“அப்படி சொல்ல முடியாதுப்பா.. படிப்பிற்கு முடிவே கிடையாது.. பி.பி.ஏ முடிக்க போகிறேன்.. அடுத்து எம்.பி.ஏ படிக்கலாம்.. இரண்டு வருட படிப்பு.. படித்து முடித்து விட்டால் நல்லவேலை கிடைக்கும்..”

“நீ வேலை பார்த்தே ஆக வேண்டுமென்ற கட்டாயம் நம் வீட்டிற்கு கிடையாதேம்மா..”

“நான் எனக்காக என் அனுபவத்திற்காக இன்னமும் படித்து வேலைக்கு போக வேண்டுமென்று நினைக்கிறேன்.”

சிவராமனின் முகம் வாடியது.. அடுத்து எப்படி பேச்சை கொண்டு போவதென அவர் தவிப்பது தெளிவாக தெரிந்தது..

“படித்த வரை போதும் பாப்பா.. இனி வீட்டு வேலைகளை கற்றுக் கொண்டு, கொஞ்ச நாட்கள் அம்மாவுடன் வீட்டில் இரேன்..”

அப்பாவின் துணைக்கு அம்மா வந்து சேர்ந்து கொண்டாள்..

“அம்மா சொல்வதுதான் சரி பாப்பா.. இந்த பரீட்சை முடிந்ததும் படிப்பை நிறுத்திவிடு.. நாம் அடுத்த வேலைகளை பார்க்கலாம்..” சிவராமன் உற்சாகமாக பேசினார்..

“அடுத்து என்ன வேலைகள்பா..?”

“அது.. வந்தும்மா.. ஒரு வரன் வந்திருக்கிறது..”

“நான் இன்னும் படிப்பையே முடிக்கவில்லையேப்பா..”

“ஒரு மாதம்தானேம்மா இருக்கிறது.. பிறகு முடிஞ்சிடும்ல.. கல்யாணம் அதற்கு பிறகுதாம்மா..”

“கல்யாணமா..? என்னப்பா அவ்வளவு தூரம் போயிடுச்சா..”




சிவராமன் மௌனமானார்.. எப்படி சொல்வது என தினறலுடன் இருந்த தந்தையை கூர்ந்து பார்த்தாள் மைதிலி.

“அது.. வந்து பாப்பா.. நாங்களே எதிர்பார்க்க வில்லை.. திடீரென்று அமைந்துவிட்டது.. தட்ட முடியவில்லை..”

“என் மகள் மேலே படிக்க வேண்டும்னு சொல்லிப் பாருங்களேப்பா..”

“சொல்லலாம்மா.. ஆனால் நல்ல குடும்பமாக இருக்கிறாங்க நாம் தினமும் சந்தித்து உடனிருந்து தொழில் பார்க்கும் குடும்பம் வேறு.. சட்டென எதுவும் பேசிவிட முடியாது..”

“மிரட்டுறாங்களாப்பா உங்களை..?”

“சே.. சே.. அப்படில்லாம் ஒண்ணுமில்லம்மா.. நம்ம ஏரியாவில் மதிப்பான மனிதர்.. அவராகவே விரும்பி வந்து நம் வீட்டில் சம்பந்தம் செய்ய நினைக்கிறார்.. மறுப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது..”

“மறுப்பதற்கு காரணம் இருக்கிறதாப்பா..?”

“அது..” சிவராமன் தயங்கினார்.. என்ன சொல்ல.. மனைவியை பார்த்தார்..

“அது ஒண்ணுமில்லடா பாப்பா.. அவுங்க கொஞ்சம் பெரியகுடும்பம்.. கூட்டுக்குடும்பம்.. நல்ல வசதி.. நிறைய சொத்துக்கள்.. பெரிய வியாபாரம்தான்.. ஆனாலும் இதுபோல் பெரிய குடும்பமெல்லாம் உனக்கு சரிப்பட்டு வருமான்னு எங்களுக்கு சந்தேகம்..” அதோடு.. சரஸ்வதி கணவனின் உதவிக்கு வந்தாள்.. மகளின் அருகே அமர்ந்து அவள் கைகளை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டு பேசினாள்..

“அதோடு.. இன்னமும் வேறு என்னம்மா..?”

“அ.. அந்த பையன்.. படிப்பு கொஞ்சம் கம்மி..”

மைதிலி விழிகளை மூடி செய்தியை ஜீரணித்தாள்..

“என்ன படித்திருக்கிறார்..?”

“பத்தாவதோடு படிப்பை நிறுத்திவிட்டார்.. வீட்டிற்கு மூத்த பையன் என்பதால், அப்பாவிற்கு உதவ தொழிலுக்குள் வந்து விட்டார்..” இந்த பதிலை தந்தது சிவராமன்..

இவையெல்லாம் மைதிலி முன்பே அறிந்த தகவல்கள்தாம்.. ரகசிய செய்திகள் எதுவும் இதில் கிடையாது.. ஊரே அறிந்தவைதாம்.. அவள் மட்டுமே இதுவரை அறியாமல் இருந்தாள்.. அதுவும் சுமதி மூலம் அறிந்து கொண்டுவிட்டாள்..

“அவர்களிடம் இந்த படிப்பு விசயத்தை நீங்கள் பேசியிருக்கலாமே அப்பா..”

“லேசாக கோடி காட்டினேன் பாப்பா.. அவர்களுக்கு படிப்பு பெரிதாக தெரியவில்லை..”

ம்.. படிப்பின் முக்கியத்துவம் தெரியாத குடும்பம்-என ஓர் எண்ணம் ஓடியது மைதிலியின் மனதினுள்..

“அரிவாள் தூக்குபவர்களுக்கு படிப்பு பெரிதாக தெரியாது அப்பா..”

“பாப்பா..” மெல்லிய பதட்டத்துடன் சிவராமனும் மகளின் மறுபுறம் அமர்ந்து கொண்டார்.. அவளது இன்னொரு கையை எடுத்து தன் கைகளுக்குள் பொத்திக் கொண்டார்..

“நீ நினைக்கிற அளவு மோசமான குடும்பம் கிடையாது பாப்பா.. ஒரு பிரச்சனை என்றால் எனக்கென்ன என்று ஒதுங்கிக் கொண்டு போகாமல், எதிர்த்து நிற்கவேண்டும் என்ற தைரியத்தை கொடுத்து மகன்களை வளர்த்திருக்கிறார் அருணாச்சலம் அண்ணாச்சி.. தீமை கண்டால் பொங்குகிறார்கள் அவர் பிள்ளைகள்.. அவ்வளவுதானே தவிர வேறு ஒன்றும் கிடையாது..”

மைதிலி தலையசைத்துக் கொண்டாள்.. இதுவும் அவள் அறிந்ததுதான்.. அனுபவப்பூர்வமாக தெரிந்து கொண்டதும் கூட.. ஏனோ அவளுக்கு திடீரென ஆயாசமாக இருந்தது..

“இப்போது என்னப்பா செய்யவேண்டும்..?”

“நீதான்மா சொல்ல வேண்டும்..”

“என்ன சொல்ல வேண்டும்..?”

“என்ன பாப்பா இப்படி கேட்கிறாய்..? நாங்கள் உன் கல்யாண விபரம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.. இப்படி ஒட்டாமல் இருக்கிறாயே.. ஒரு வார்த்தை சரி என்று சொல்லக் கூடாதா..?” சரஸ்வதி வருத்தமாக பேசினாள்..

“சரசு நீ பேசாமல் இரு..” மனைவியை அதட்டிய சிவராமன்..

“சரி-சரியல்ல, வேண்டும்-வேண்டாம் இந்த பதில்களெல்லாம் உன் முடிவுதான் பாப்பா.. உனக்கு சரியென்று தோன்றும் பதிலை சொல்லு.. எதுவாக இருந்தாலும் எங்களுக்கு சம்மதம்தான்..” என்றார்..

மைதிலி தந்தையை நெகிழ்வாக பார்த்தாள்..

இது சிவராமனின் குணம்.. உன்னை பெற்று வளர்த்து படிக்க வைத்து என 
நீட்டி முழக்கி பட்டியல் போடும் பெற்றோர்களிடையே வித்தியாசமானவர்.. தன் பிள்ளைகளுக்கும் தனி இதயம்.. அதில் சில ஆசைகள் இருக்குமெனும் புரிதல் உடையவர்.. தன் ஆசைகளை பிள்ளைகள் மேல் திணிக்காதவர்.. சரஸ்வதியும் கணவனையே குணத்தில் கொண்டிருப்பவள்.. அதனால்தான் தங்களது ஒரே மகனை நேற்று வந்த ஒரு பெண்ணிற்கு முழுவதுமாக தூக்கிக் கொடுத்து விட்டு பெற்றோரென்ற எந்த அடையாளமும் காட்டாது தனியாக ஒதுங்கிக் கொள்ள அவர்களால் முடிகிறது..

எப்போதும் போல் இப்போதும் அண்ணனின் நினைப்பு மைதிலியினுள் கசப்பாக இறங்கியது.. அப்பாவிற்கு பதில் சொல்லிவிடலாமா என யோசித்தபடி வாய் திறந்தவளின் நினைவில் வந்தனா வந்து நின்றாள்.. மைதிலியின் மனம் குழம்பியது.. இந்த வந்தனாவை பற்றி அப்பாவிடம் சொல்லி விடலாமா..? சிறு மனப் போராட்டத்திற்கு பின் வேண்டாமென்ற முடிவினை அவள் எடுத்த மறுநொடி ரவீந்திரன் அவள் மனதினுள் வந்த நின்றான்..

உன்னிடம் நிறைய பேச வேண்டும்.. என சொன்ன ரவீந்திரனின் நினைவோடு அப்பாவிற்கு வாயசைத்தாள்..

“எனக்கு இரண்டு நாள் டைம் கொடுங்கப்பா.. யோசித்து சொல்கிறேன்..”

“அவ்வளவு தானேடா, தாராளமாக எடுத்துக்கொள்.. இனி நீயாக பேசும் வரை, நாங்கள் இந்த விசயம் பேச மாட்டோம்..” சிவராமன் மகளின் தலையை வருடிவிட்டு எழுந்தார்..

“உன் வாழ்க்கை உன் முடிவுதான் பாப்பா.. உன் மனதிற்கு திருப்தியாக இருந்தால் மட்டும் சம்மதம் சொல்லு..” இறுதியாக ஒருமுறை மகளுக்கு நினைவூட்டி விட்டு எழுந்தாள் சரஸ்வதி..

“அப்பா அம்மாவும் என் முடிவுதான் என்று சொல்லி விட்டார்கள்..” கல்லூரியில் தோழிகளிடம் சொன்னாள் மைதிலி..

“ஏய் நிஜமாப்பா.. நான் இதை எதிர்பார்க்கவில்லை தெரியுமா..?” சுமதி ஆச்சரியப்பட்டாள்..

“ஆனால் நான் எதிர்பார்த்தேன் சுமதி.. என் தாய் தந்தையை பற்றி எனக்கு தெரியும்..” மைதிலியின் குரலில் பெருமிதம் வழிந்தது..




“என்னடி ரொம்ப உருகுகிறாய்..? இதே போக்கில போனால் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லிவிடுவாய் போல..”

மைதிலி மௌனமானாள்.. யோசிக்க ஆரம்பித்தாள்..

“வேண்டாம்டி.. அந்த மாதிரி யோசித்து விடாதே.. அப்பா அம்மா நமக்கு சுதந்திரம் கொடுத்தால் நாம் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.. முட்டாள்தனமாக அதனை விலக்க கூடாது..”

“ஏன்டி அப்படி சொல்கிறாய்..? மைதிலி இந்தக் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்வதில் என்ன தவறு..?” சௌமியா கேட்டாள்..

“ஏய் என்னடி திடீரென கட்சி மாறுகிறாய்..?” சுமதி அவளை முறைத்தாள்..

“திடீரென்றெல்லாம் மாறவில்லை.. ஆரம்பத்தி-லிருந்தே எனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம்தான்..”

“ஏன்டி உனக்கு எப்படி உங்க வீட்ல கல்யாணம் பேசினாங்க..?”

“ம்.. பேசிட்டாலும்..” சௌமியா விட்ட பெருமூச்சின் பின்னால் இன்னமும் மணம் முடிக்காமல் வீட்டிலிருக்கும் அவளைவிட இரண்டு வயது மூத்த அவள் அக்கா இருந்தாள்..

“எனக்கெல்லாம் அந்த பேச்சு வர குறைந்தது அஞ்சு வருசமாகும்.. இவளுக்கு படித்து முடித்ததும் வாசலில் வந்து நிற்குது.. அதைப் போய் வேண்டாம்பாளா..?”

“என்னடி இது கல்யாணம் பண்ணிக்கிறேன்னு யார் வந்தாலும் தலையாட்டிட சொல்கிறாயா..?”

“இது யாரோவோ.. போங்கடி முட்டாள்களா.. எவ்வளவு பெரிய வசதியான குடும்பம்.. பணத்திற்கு கவலையே கிடையாது.. நகை, பட்டு சேலைன்னு எப்போதும் கிடைச்சிட்டு இருக்கும்.. அந்த குடும்பத்தை யாராவது வேண்டாம் என்பார்களா..?”

“பட்டுச்சேலையும், நகையும் மட்டும்தான் முக்கியமாடி..?”

“ஏன் உனக்கு இது இரண்டும் தேவை இல்லையாக்கும்..? பொய் சொல்லாதடி.. ஒருவேளை உன் ஆசை டிசைனர் சேலை, டயமெண்ட் இப்படி இருக்குதோ..?”

“ஏய் உன் சீப்பான எண்ணமெல்லாம் எனக்கு கிடையாதுடி..” சுமதி சிலிர்த்து எழுந்தாள்..

மனம் நிறைய குழப்பமும் பயமுமாக இருந்த மைதிலிக்கு தோழிகளின் இந்த செல்ல சண்டை பெரிய ரிலாக்சேசனாக இருந்தது.. அவள் புன்னகையுடன் தோழிகளை ரசித்துக் கொண்டிருந்தாள்..

“உன் கனவுப்படி வசதியான குடும்பம் கிடைத்தால் நீ அவர்கள் பின்னாடி போ, என்னையும், மைதிலியையும் உன் பக்கம் இழுக்காதே, நாங்கள் இருவரும் வாழ்க்கை லட்சியத்தோடு இருப்பவர்கள்..” சுமதி மைதிலியின் தோளில் கை போட்டுக் கொண்டாள்..

“ம் எங்கே.. நானும் ஒரு வருசமாக அந்த ரவீந்தருக்கு ரூட் விட்டு பார்க்கிறேன்.. ஒண்ணும் படிய மாட்டேங்குதே..” சௌமியா விட்ட பெருமூச்சில் பக்கத்தில் இருந்த குரோட்டன்ஸ் பசுமை இழக்க ஆரம்பித்தது..

“அடிப்பாவி நீ சும்மா அவனை சைட் அடிக்கிறாய்னு நினைத்தேன்.. சீரியசாவா இருக்க..?”

“ரொம்ப சீரியசா இருக்கேன்டி.. ஏய் மைதிலி ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுடி.. இந்தக் கல்யாணத்துக்கு சரி சொல்லுடி.. உன் மூலமாக எனக்கும் ஒரு வழி கிடைக்கும்.”

“அடிங்..” மைதிலி நங்கென தோழியின் தலையில் கொட்டினாள்..

“உனக்காக நான் கல்யாணம் பண்ணிக்கனுமா..?”

“சரி வேண்டாம்.. நான் நேரடியாக தலைகிட்டயே போயிடுறேன்.. ரவி வேண்டாம்.. சின்னப்பையன்.. இன்னும் படிப்பையே முடிக்கலை.. படிச்சு முடிச்சு.. பிறகு சம்பாதிச்சு அதை எனக்கு கொடுத்து.. ம்ஹீம் சரிப்பட்டு வராது.. நான் நேரடியாக பரசுராமரிடமே போய்விடுகிறேன்.. எனக்கு வேண்டாம்.. இவள் எப்படின்னு..? என்னை கூட்டிப் போய் காட்டுகிறாயா..?”

“ஏய்.. திமிர்டி உனக்கு..” மைதிலியின் கொட்டுக்கள் இப்போது மிக அழுத்தமாக சௌமியாவின் தலையில் விழுந்தன..

“அதென்னடி உனக்கு கண்ணில் பார்க்கிறவனெல்லாம் மாப்பிள்ளையா..?” சுமதியும் சேர்ந்து கொண்டாள்..

“இல்லைடி.. நிறைய பணம் வைத்திருக்கிறவன் மட்டும்..” தோழிகளின் கொட்டுக்களை வாங்கிக் கொண்டு சொன்னாள் சௌமியா..

“கேலிக்கு கூட இப்படி பேசாதடி..” மைதிலி தோழியை ஆட்சேபித்தாள்..

“ஏய் கேலிக்கு இல்லடி.. நிஜமாகத்தான் சொல்றேன் மைதிலி.. படிப்பை மட்டும் காரணமாக வைத்து நல்ல வாழ்க்கையை விட்டுடாதடி.. எனக்கென்னமோ இது உனக்கு சரியான வாழ்க்கைன்னு தோன்றுகிறது..”

சௌமியா கேலி குறைத்து உணர்வாய் பேச, சுமதியும் தனது ஆட்சேபங்களை மாற்றிக் கொள்ளலாமா.. என யோசிக்க ஆரம்பித்தாள்.. இருவருமாக மைதிலிக்கு தனிமை கொடுத்து விலகிப் போக, மைதிலி மீண்டும் தன் வருங்கால வாழ்க்கை கடலுக்குள் விழுந்தாள்..

மைதிலியின் மனம் முழுவதும் வந்தனாதான் இருந்தாள்..

“நானும் பரசுராமுவும் லவ் பண்றோம்.. எங்க வீட்டுப் பகை காரணமாக பேசி வைத்த எங்க கல்யாணம் நின்று விட்டது.. அவர் அப்பா வீம்பிற்காகவே வேறு இடத்தில் திருமண ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்.. நீங்கள் கல்யாணம் வேண்டாமென்று தட்டி விட்டு விடுங்கள் கொஞ்ச நாட்களில் எங்கள் குடும்ப சண்டை சரியாகி எங்கள் கல்யாணமும் நடந்துவிடும்..”

வந்தனா இதுவரை மூன்று தடவைகள் மைதிலியை சந்தித்து விட்டாள்.. மூன்று தடவையும் அவள் சொன்னது இதைத்தான்.. இதில் பொய்யென்று எதுவும் இருப்பது போல் மைதிலிக்கு தெரியவில்லை.. இன்றும் கூட வந்தனா வருவாள்.. அவளுக்கு எப்போதும் போல் தலையாட்டலையோ, மௌனத்தையோ பதிலாக தர முடியாது.. இன்று சரியான பதில் சொல்ல வேண்டுமென்று நேற்றே உறுதியாக கேட்டு சென்றிருக்கிறாள்..

குழம்பிய மனதுடன் மெல்ல நடந்து கொண்டிருந்தவளின் பார்வையில் மரத்தடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த ரவீந்தர் பட்டான்.. அவனும் இவளை பார்த்துவிட்டான்.. அங்கிருந்தபடியே கையை உயர்த்தி ஆட்டினாள்..

சிறு தயக்கத்தின் பின் மைதிலியும் கையை உயர்த்தி அவனுக்கு ஆட்டினாள்.. டெஸ்ட் முடிந்ததா..? எப்படி எழுதியிருக்கிறாய்..? சைகையிலே கேட்டவனுக்கு நன்றாக எழுதியிருப்பதாக பதில் சைகை சொன்னாள்..

உன்னிடம் பேச வேண்டும் சைகை மொழி சொன்னபடி அவன் எழுந்து வர முயல, அவசரமாக கையசைத்து அவனை உட்கார்ந்து படிக்க சொன்னாள்.. நாளை பேசலாமென்றாள்.. அவன் தலையசைத்து உட்கார்ந்து படிப்பில் ஆழ்ந்து போனான்..

கல்லூரி நேரம் முடிவதற்கு முன்பே அன்று வீடு கிளம்பி, வந்தனாவை சந்திப்பதை தவிர்த்த மைதிலி, வீட்டிற்கு போனவுடன் நேரடியாக அப்பாவிடம் போய் நின்றாள்..

“அப்பா எனக்கு சம்மதம்.. மற்ற ஏற்பாடுகளை ஆரம்பியுங்கள்..”

What’s your Reaction?
+1
4
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
lavanya
lavanya
4 years ago

nice …

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!