ithu oru kathal mayakkam Serial Stories

Ithu Oru Kathal Mayakkam – 3

3

 

அடுத்த வீட்டு கல்யாணத்திற்கு போய்விட்டு , உங்க வீட்டு பையன்  யாரோ ஒருததியை கல்யாணமே செய்து கொண்டு வந்திருக்கிறான் .அதற்காக யாருமே கவலைப்பட மாட்டீர்களா …?  அவனை கொஞ்சமாவது திட்ட மாட்டீர்களா ? மயிலு என மகனை கொஞ்சும் தர்மராஜாவிடம் … சின்னவர் என அவனை சீராட்டும் ஊர் மக்களிடம் தாரிகா கேட்க விரும்பியது இதைத்தான் .

 

ஆனால் அந்தக் கேள்வியே அநாவசியம் போல் ஊர் மக்கள் தங்கள் சின்னவரை கொண்டாடிக் கொண்டிருந்தனர் . நீ செய்துட்டியா ராசா …அப்போ  அது சரிதான் …என்பதாக இருந்தன அவர்களின் செயல்கள் .தர்மராஜாவோ அட அழகான பொம்மையாக வாங்கி வந்துவிட்டாயே செல்லம் என மகனை மடியில் வைத்துக் கொள்ளும் யோசனையில் இருந்தார் .

 

அந்த விசிலடித்த மணி …எம்பிக் குதித்த தாவணி  பெண்கள் போன்ற இளவட்டங்களுக்கு , தாரிகாவின் பிள்ளை முக அழகே எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள போதுமானதாக இருந்த்து .மருதாயி போன்ற பெண்களுக்கு எங்கேயோ திருமணம் முடித்தாலும் சின்னவர் அவர்கள் முன் மாலை மாற்றிக் கொண்டதே படு திருப்தியாக போய்விட்டது . ஆக …நிறைய எதிர்ப்பு இருக்கும் , இந்த மீசைக்காரன் கொஞ்சமாவது தலை குனிவான் என்ற தாரிகாவின் எதிர்பார்ப்பில் ஒரு மூட்டை ஆற்று மண் .

 
புஸ்ஸென்று போய் விட்ட முகத்துடன் ஆரத்திக்காக முகம் நிமிர்த்தியவளின் கண்களில் பட்ட பெண்கள் அவளது நம்பிக்கைக்கு உரமூட்டினர் . தமயந்தி , அன்பரசி , அனந்தநாயகி – முப்பெருந்தேவியர் போன்றே அவளுக்கு தோன்றினர் .அவர்கள் முகத்தை , கண்களை , உடலசைவை பார்த்த இரண்டு நிமிடங்களிலேயே தாரிகா உணர்ந்து கொண்டாள் .இந்த திருமணத்தில் இவர்களுக்கு  விருப்பமில்லையென .

 

” யாஹ்ஹூ் ” என கத்திக் குதிக்க வேண்டும் போலிருந்த்து அவளுக்கு .அப்பாடா …உங்களுக்காவது ஆட்சேபனை தோன்றியதே …நட்பு கொப்பளிக்கும் கண்களோடு அவர்களை பார்க்க தொடங்கினாள் அவள் .ஆனால் அவளது நட்பழைப்பை ஏற்கும் எண்ணமெதுவும் அவர்களிடம் இல்லை .அதனை நிர்தாட்சண்யமாக தெரிவித்தது  அக்காவும் , தங்கையும் சேர்த்து சுற்றிய ஆரத்தி . வெடுக் வெடுக்கென வலமிருந்து இடம் மூன்று முறையும் , படக் படக்கென இடமிருந்து வலம் மூன்று முறையும் வேண்டா வெறுப்பாக சுற்றப்பட்டது .

 

தண்ணீரா …ஆசிட்டா ? தன் நடு நெற்றி ஆரத்தி பொட்டினை தொட்டுப் பார்த்துக் கொண்டாள் தாரிகா .ஆரத்தி எடுத்தவர்களின் மனக் கொதிப்பை சுமந்திருந்த்தோ அந்த செங்குழம்பு நீர் ? 

 

” வலது கால் ” தாரிகாவின் உயர்ந்து விட்ட இடது காலை கவனித்து திருத்திய தமயந்தியின் குரல் கத்தலாக இருந்த்து , கற்குவளைக்குள் உருளும் தட்டாங்கற்களை போல் . கடகடத்த அக்குரலில் தானாக நடுங்கிய தாரிகாவின் தேகத்தை உணர்ந்தோ என்னவோ மயில்வாகன்னின் கை ஆதரவாக அவள் கையுடன் கோர்த்தது .

 

” வா …” தன்னோடு இணைத்து இழுத்தது .நடுக்கம் குறைந்த தாரிகா ஏதோ ஓர் திருப்தி பரவ , வலதுகால் எடுத்து வைத்து தன் வாழ்வின் அடுத்த கட்டத்திற்குள் நுழைந்தாள் .

 

” பொண்ணு மாப்பிள்ளைக்கு பாலும் , பழமும் கொடுக்க ஏற்பாடு பண்ணுங்கம்மா ” தர்மராஜா தன் மகள்களிடம் கொஞ்சம் கத்தலாக  சொன்னார்.ஏனெனில் ஆரத்தி் எடுத்து முடித்த இரண்டு பெண்களுக்கும் திடுமென கால்வலி வந்துவிட்டது போலும் .ஹால் சோபாவில் போய் உட்கார்ந்துவிட்டனர் .தமயந்தியோ ஆள் அந்தர்த்தனம் ஆகியிருந்தாள் .

 

” சுகந்திகிட்ட எடுத்து வைக்க சொல்லியிரெக்கிறோம்பா ” அலுப்பு போல் அன்பரசி தன் கையை உதறிக் கொள்ள , வாய் திறந்து கொட்டாவி வெளியேற்றினாள் அனந்தநாயகி.

 

தாரிகாவிற்கு அவர்களுக்கு சபாஷ் போடத் தோன்றியது .வெளியூர் போய் திரும்ப வரும் வீட்டு ஆண் எவளோ ஒருத்தியை மனைவியென இழுத்து வந்தால் வீட்டுப் பெண்களுக்கு கோபம் வரும்தானே …நியாயமான இந்த எண்ணத்தினால் அவள் முகம் சகோதரிகளை பார்த்து புன்னகைத்தபடியே இருந்த்து .

 

” எப்போது வந்தீர்கள் இரண்டு பேரும் ? ” சகோதரிகளை சமாதானம் செய்யும் நோக்குடனோ என்னவோ மயில்வாகன்ன் அவர்கள் அமர்ந்திருந்த அந்த நீள சோபாவில் , அவர்களருகேயே அமர்ந்து தன்னருகே இருந்த இடத்தில் அமருமாறு தாரிகாவிற்கு ஜாடை காட்டினான். அந்த அமர்தலில் தாரிகாவிற்கு எந்த ஆட்சேபமும் இல்லை .ஏனெனில் அவளுக்கு அவர்களின்  பேச்சை கேட்க வேண்டியிருந்த்து . 
அக்காக்கள் தம்பியை திட்டுவார்களா …? தம்பி அக்காக்களின் திட்டுக்களை வாங்கி தலை குனிந்து நிற்பானா ? எழும்பிய ஆவலுடன் மயில்வாகன்ன் காட்டிய இடத்தில் அமர நகர்ந்தபோது அவளை  வேகமாக உரசி கொஞ்சம் தள்ளிவிட்டு அவள் அமர வேண்டிய இடத்தில் அமர்ந்து விட்டிருந்தாள் ஒரு பெண் .

 

” மயிலு …இப்படி பண்ணிட்டியே ராசா ? என்னையும் சுகாவையும்  செத்த நெனச்சி பாத்தியா ? ” பாசமாக தோள் வருடுவதை போலிருந்த அவள் பிடியின் பின் உண்மையில் இருந்த்து அவனது தோள் உலுக்கல் . இப்போது எங்கே அமர்வது தாரிகா தடுமாறியபடி நின்றிருந்தாள் . இவர்கள் யார் …? அந்த சுகா யார் ? அதென்ன பெயர் சுகா …? தாரிகாவினுள் இவ்வளவு நேரமாக இருந்த சுமூகம் போய் சிறு நெருடல் . 

 

 

” என்ன அத்தை உங்களையும் சுகாவையும் மறப்பேனா நான் ? அவளை எங்கே …? சுகா …? ” உரக்க கத்திய அவன் அழைப்புக்கு வந்த பெண் இளம்பெண்ணாக இருந்தாள்.கையில் பால் , பழம் தட்டு்வைத்திருந்தாள் .முகத்தில் கோபமும் , வெறுப்பும் வைத்திருந்தாள் .

 

இந்தப் பெண் சுகந்தியா ? இவளைத்தான் சுகா …என்று கொஞ்சிக்….இல்லை கூப்பிட்டுக் கொண்டிருக்கிறானா இவன்…? தாரிகா ஓரக் கண்ணால் சுகந்தியை அளவிட , அந்நேரம் அவளும் அதையேதான் தாரிகாவிடம் செய்து கொண்டிருந்தாள் . ஒரு சிறு நொடியில் இரு பெண்களின் பார்வையும் சந்தித்து விட , சுகந்தி வெடுக்கென முகம் திருப்பி டொக்கென கையிலிருந்த தட்டினை டீபாயில் வைத்தாள் .

 

” கொண்டு வந்தாச்சு ” அன்பரசி , அனந்தநாயகியிடம் தெரிவிக்க , அவர்கள் எங்கோ தூரமாக பார்த்துக் கொண்டிருக்க , மயில்வாகன்ன் தன் அருகே அமர்ந்திருந்த பெண்ணிடம் சமாதானமாக பேசியபடி இருக்க , தாரிகா கவனிக்க ஆளில்லாமல் தனியாக நின்று கொண்டிருந்தாள் .விழி சுழற்றி பார்த்த போது வீட்டிற்கு வெளியே ஊர் மக்கள்  வாசல் , சன்னல்கள் வழியாக இங்கேயே பார்த்தபடி இருப்பதும் , வீட்டு வேலையாட்கள் அருகே  வராமல்  தூரமாக ஒதுங்கி நின்று இங்கே பார்வையை வைத்திருப்பதும் தெரிந்த்து .

 

தாரிகா உதடுகளை மடித்துக் கடித்து தனது தனிமையை ஜீரணிக்க முயன்று கொண்டிருந்த போது… ” தமயந்தி ” என தர்மராஜாவின் கர்ஜிப்பு குரல் கேட்டது , அவர் அவ்வளவு நேரமாக வாசலில் நின்று யாரிடமோ …ஏதோ விபரம் பேசிக் கொண்டிருந்தார் .இப்போது அவரது குரலுக்கு உள்ளிருந்து கிட்டதட்ட ஓடிவந்தாள் தமயந்தி . தானிருந்த இடத்தை விட்டு எழுந்திருந்தாள் மயில்வாகனன அருகிலிருந்த பெண் . இப்போதுதான் தாரிகாவை கவனித்த மயில்வாகனன் எழுந்து எதிர் இரட்டை சோபாவில் அமர்ந்தான் .உடன் வந்து அமருமாறு அவன் கண்கள் அழைக்க , வேறு யாராவது வந்தாலும் வருவார்கள்…எனும் கிண்டலுடன் பார்த்தவளுக்கு கை நீட்டினான் .

 

ஒன்றும் வேண்டாம் …தாரிகாவிற்கு முறுக்கிக் கொள்ள தோன்றினாலும், சுற்றியிருந்த சூழ்நிலை அவள் வேகத்தை குறைக்க மௌனமாக அவனருகே போய் அமர்ந்தாள் .ஞாபகமாக மறதி போல் அவன் நீள் கையை தவிர்த்தாள் . பெரிய ஆபத்பாந்தவன் …அவன் நீண்ட கைக்கு உதடு சுளித்துக் கொண்டாள் . 

 

ஆனால் அருகமர்ந்த அடுத்த நொடி அவளது கை நொறுங்கும்படி பற்றப்பட்டது . ” ம் …” என்றோர்  அடக்கப்பட்ட உறுமல் அவனிடம் .தொடர்ந்து அவளோடு உராய்ந்தன  அவன் தோளும் , காலும் . தன் தேகம் தீயுரசியது போல் உணர்ந்தாள் அவள். 

 

” நாம் இருவரும் காதலித்து கல்யாணம் செய்திருக்கிறோம் .இப்படி மூஞ்சியை வைத்துக் கொள்ளாதே ” அவனது பேச்சில் அதிர்ந்தாள் 

 

காதலித்தேனா …? நானா …? இவனையா …? இதென்ன வன் கொடுமையாக இருக்கிறது …?  கன்னத்தில் கை வைத்துக் கொள்ள நினைத்தவளை மயில்வாகனின் முறைப்பு தடுத்தது . அடப்பாவி உன் ஊருக்குள் இப்படித்தான் பரப்பி வைத்திருக்கிறாயா …? இந்த  அநியாயத்தை அவளால் தாள முடியவில்லை .

 

” பிள்ளைங்களுக்கு பால் , பழம் கொடுங்க ” தர்மராஜா உத்தரவாக சொல்ல , தமயந்தியில் ஆரம்பித்து ஒவ்வொரு பெண்களாக பாலும் , பழமும் கொடுக்க வர ஆரம்பித்தனர் .

 

” இது என் அக்கா சங்கரேஸ்வரி மருமகளே ” தர்மராஜா அவளை இடித்துக் கொண்டு போய் சோபாவில் அமர்ந்த பெண் வந்த போது அறிமுகம் செய்தார்.

 

” இது சுகந்தி .அவளது மகள் ” என ஓரமாக முகத்தில்   சுண்டை வத்தல்களை காய வைத்துக் கொண்டிருந்த   பெண்ணைக் காட்டினார்.

 

உனக்கு அத்தை மகள் ரத்தினம் வேறா …?  மயில்வாகனனை பழித்தபடி ,தாரிகா பெயருக்கு கூட அந்த சுகந்தி பக்கம்  திரும்பவில்லை .பார்த்தால் மட்டும் …அந்த சுகா …சுகந்தி முறைத்துக் கொண்டுதான் இருக்க போகிறாள் .அது சரீய்…சுகந்தியை சுகான்னு கூப்பிடலாம்னு இவனுக்கு எவன் ஐடியா கொடுத்தது …? உதட்டையோ புருவத்தையோ சுளிக்க நினைத்தவளுக்கு காதலித்து மணந்திருக்கிறோமென்ற அவனது பேச்சு நினைவு வர இதழ்களை இழுத்து புன்னகைத்துக் கொண்டாள் .

 
அப்போது அவள் வாயில் பழம் ஊட்ட குனிந்த  தமயந்தியின் கண்கள் அவளது கழுத்தில் ஊன்றின . ஏதோ சலனம் அந்தக் கண்களில் .தமயந்தி மகனை திரும்பி பார்க்க , தாயின் பார்வையை உணர்ந்து கொண்ட மகனின் முகத்தில் லேசான சங்கடம் .

 

எதற்கு இப்படி அம்மாவும் மகனும் பார்க்கிறார்களாம் ? தாரிகா அநிச்சையாக கையுயர்த்தி தன் கழுத்து மஞ்சள் கயிற்றை தடவிக் கொண்டாள் .

 

 

2 Comments

Click here to post a comment

error: Content is protected !!Our Official Facebook Page Click like For Regular Updates