ithu oru kathal mayakkam Serial Stories

Ithu Oru Kathal Mayakkam – 19

19

 

” ஏய் ..இங்கே என்ன செய்கிறாய் …? ” தாரிகாவின் அதட்டலில் பதறி திரும்பிய சுகந்தியின் கையிலிருந்த சிறு ஸ்பூன் கீழே விழ , வெள்ளையாய் தரையில் சிதறிய பொருளை அருகில் போய் பார்த்த தாரிகாவிற்கு திகைப்பு.

” பாலாடை …” 

” ஆமாம் . இது எனக்கு ரொம்ப பிடிக்கும் .அம்மாவிடம் கேட்டால் தரமாட்டார்கள் .வெயிட் போட்டு விடுவாய் என்பார்கள் .அதனால்தான் நானே யாருக்கும் தெரியாமல் தின்கிறேன் .யாரிடமும் சொல்லி விடாதே அக்கா ” 

சுகந்தியின் திடீர் மரியாதைக்கு புன்னகைத்த தாரிகாவிற்கு தின்பண்டம் திருடித் திங்கும் சிறு பிள்ளையாக நிற்பவளின்   தலை வருடி அணைத்துக் 

கொள்ள தோன்றியது . ” இது அவ்வளவு ருசியாக இருக்குமா சுகந்தி ? ” விழி விரித்து அவளது பாவனையை தானும் முகத்தில் கொண்டு வந்தாள்

” ஆமாம்கா .சூப்பராக இருக்கும் .தின்று பாரேன் …” இன்னொரு ஸ்பூன் எடுத்து , காய்ச்சிய பாலின் மேல் படிந்து கிடந்த பாலாடையை கலையாமல் மெல்ல எடுத்தாள் .தாரிகாவின் வாயினுள் திணித்தாள் .தானும் சிறிது வாயிலிட்டுக் கொண்டாள் .

” ம் …டெலிசியஸ் ..” தாரிகா விழி மூடி சொல்ல …

” அப்படின்னா …? ” அடுத்த ஏடு எடுத்தபடி கேட்டாள் சுகந்தி.

” ருசியாக இருப்பதாக சொன்னேன் .சிம்பிள் இங்கிலீஸ் வேர்ட் .இது கூடத் தெரியாதா சுகந்தி ? ” 

” எனக்கு இங்கிலீஸ் தெரியாது ” 

” படித்தால் தெரிந்து விட்டுப் போகிறது .என்ன படிக்கிறாயா ? ” 

” வாயை மூடு ” சொன்னதோடு இன்னொரு ஸ்பூன் பாலாடை எடுத்து அவள் வாயில் திணித்தாள் .

” எந்த பூனை அடுப்படியை உருட்டுகிறது …?” திடுமென மயில்வாகனன் உள்ளே எட்டிப் பார்த்தான்

இரு பெண்களும் பால் பாத்திரத்தையும் , ஸ்பூனையும் பின்னால் மறைத்துக் கொண்டு திருதிருத்தபடி நிற்க , ” ஓ …பூனைகளா …? ” என்றான் அவன் 

” என்ன இது ? ” ஒரு விரல் நீட்டி தாரிகாவின் இதழ் கடையோரம் வழிந்து நின்ற பாலாடையை வழித்தெடுத்து நீட்டிக் கேட்டான் .

” வாயை துடைக்க மாட்டாயா ?” சுகந்தி பல்லைக் கடிக்க , தாரிகா அவன் கையை தட்டி விட்டாள. .

” ஆண்பிள்ளைக்கு அடுப்படியில் என்ன வேலை ..? வெளியே போங்க ” 
” முடியாது ” அழுத்தமாக கை கட்டி நின்றான் 

” சரி அபபோது இருந்து சமைத்து வையுங்கள் .நாங்கள் கொஞ்சம் வெளியே போய்விட்டு வருகிறோம் …” நிமிர்வாய் அறிவித்து விட்டு சுகந்தியின் கை பிடித்து அழைத்துக் கொண்டு வெளியேறினாள் .

சமைத்து வை என்ற பேச்சிற்கு நிச்சயம் கோப மூச்சு விட்டுக் கொண்டிருப்பானென்ற உறுதியுடன் வாசல் தாண்டியதும் திரும்பிப் பார்த்தவள்  முகம் சிவந்தாள் .

மயில்வாகனன  தன் விரலில் ஒட்டியிருந்த , தாரிகாவின் இதழிலிருந்து எடுத்த பாலேட்டை தன் நாவில் வைத்து சுவைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் .அவன் முகம் பரவசம் சுமந்திருந்த்து .தாரிகா மனம் படபடக்க பார்வையை திருப்பிக் கொண்டாள் .வேகமாக வீட்டை விட்டு வெளியேறினாள் .

” விடு என்னை .எங்கே இழுத்துக் கொண்டு போகிறாய் ? ” சுகந்தி அவள் கையை உதறினாள் .

” வீட்டிற்குள்ளேயே பொத்தி பொத்தி வைத்து உன்னை சிறு பிள்ளையாகவே வளர்த்து வைத்திருக்கிறார்கள் .நான் உனக்கு வெளி உலகத்தையும் காட்டுகிறேன் .வா …” 

” வெளியில் வேண்டாம் அக்கா .என்னைப் பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள் …” சுகந்தியின் கண்களில் மிரட்சி . இதே பயம் தாரிகாவிற்கும் இருந்தாலும், மயில்வாகனன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வானென்ற நம்பிக்கை இருந்த்து .சமீபமாக அவர்கள் இருவருக்கும் வெளியே போய் வர அதிக கட்டுப்பாடுகள் இல்லை .ஆனால் தாங்கள் கண்காணிப்பிற்குள் இருக்கிறோம் என்பதனை அவளால் உணர முடிந்தது . 

என்னை வேவு பார்க்கிறீர்களா …சிலிர்த்தெழுபவள்தான் அவள் .ஆனால் இப்போது இலக்கு தான் மட்டுமல்ல என்பதனை உணர்ந்து அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறாள் .

” அதெல்லாம் ஒன்றும் ஆகாது .உன் மச்சான் …இல்லை நானே பார்த்துக் கொள்வேன் ” சுகந்தியிடம் அவள் மச்சான் பெருமை பேச தயாரில்லை அவள் .

” எனனை என் மச்சான் பார்த்துக் கொள்வார் ” அவள் பாதியில் விட்டதை பெருமிதமாக சுகந்தி நிரப்ப தாரிகா பல்லை நறநறத்தாள் .நெறிபட்ட அவள் பற்களுக்கிடையே இருந்த்து சந்தேகமின்றி மயில்வாகன்ன்தான் .

” இப்போது எங்கே போகிறோம் ? ” 

” உன் அப்பாவை பார்க்க ” தாரிகாவின் பதிலில் சுகந்தி திரும்பி வீட்டை நோக்கி ஓடும் முடிவெடுக்க , அதை எதிர்பார்த்தே அவள் கையை அழுத்தமாக பற்றியிருந்தாள் தாரிகா .

” ஏய்  ஓடினாயானால் காலை ஒடித்து விடுவேன் .” உறுதி தெறித்த தாரிகாவின் குரலில் சுகந்தி ஸ்தம்பித்து நின்றாள் .

” என்னை தனியாக கூட்டி வந்து மிரட்டுகிறாயா ? இரு வீட்டுக்கு போய் மாமாவிடம் , மச்சானிடம் உன்னை மாட்டி விடுகிறேன் …” சுகந்தி உதடு பிதுக்கி அழ ஆயத்தமாக , தயங்காமல் அவள் தலையில் கொட்டினாள் தாரிகா .

” மூச் .வாயை மூடு …” அதட்டும் போதே  அவள் விழிகளில் பக்கவாட்டு மரங்களுக்கிடையே நின்றிருந்த மயில்வாகனன் கண்ணில் பட்டான் .இவள் பார்வையை சந்தித்ததும் நாக்கை துருத்தி ஒற்றை விரலாட்டினான் .இவன் இங்கேதான் சுற்றிக் கொண்டிருக்கிறானா …இப்படித்தான் பின்னாலேயே சுற்றி வேவு பார்ப்பானா? 

தாரிகா அழுத்தி இன்னமும் இரண்டு கொட்டுக்களை சுகந்தியின் தலையில் கொடுத்தாள் . இப்போது என்ன செய்வாய்… பார்வையை மயில்வாகனனுக்கு அனுப்பினாள். இதோ வர்றேன் என்பது போன்ற அசைவை அவன் வெளிப்படுத்த தாரிகா பதறினாள் .இல்லை இவன் இப்போது இந்த சுகந்தி முன் வந்து நின்றானானால் எல்லா காரியமும் கெட்டுவிடும் .இவள் சுலபமாக அவன் தோள்களில் தொற்றிக்கொண்டு நகர்ந்து விடுவாள். தனது திட்டம் வீணாவதில் தாரிகாவிற்கு உடன்பாடில்லை .

எனவே அவள் மயில்வாகன்னை  கெஞ்சுதலாக நோக்கினாள். வேண்டாம் அங்கேயே இருங்கள் என செய்கை காட்டினாள். அவன் முடியாது என்று தலையாட்ட.. தாரிகா இரு கைகுவித்து அவனிடம் கெஞ்சினாள். சரி ஒழிந்து போ ,என்பதான கையசைத்தாலுடன் மயில்வாகனன் மரத்திற்குப் பின்னால் தன்னை பதுக்கிக் கொண்டான்.
 தன் வாழ்க்கை மாறுதலுக்கான கலக்கத்தில் இருந்த சுகந்தி இவர்கள் இருவருடைய செய்கைகளையும் ,சைகைகளையும் கவனிக்கவில்லை அவள் கலங்கிப் போய் நின்றிருந்தாள். தாரிகா அவள் கை பற்றி இழுத்தாள் ” வா போகலாம்.”

திடுமென தனது தென்னந்தோப்பிற்குள் தன் எதிரே வந்து நின்ற மகளை சுந்தரேசன் நம்பமுடியாமல் பார்த்தார். “பாப்பா “இருகை விரித்து அழைத்தார். மகளின் சிறு பிராயம் முதல் அவளை தூக்கி கொஞ்ச முடியாத தன் நிலைமையை இப்போது ஈடு செய்து கொள்ளும் தந்தைமை அதில் தெரிந்தது. 

சுகந்தி அசையாமல் நின்று அவரை வெறிக்க ”  ஒரே ஒரு முறை உன்னை தொட்டு பார்க்க வேண்டும் போல் உள்ளதுடா பாப்பா . அப்பா கிட்ட வருகிறாயா ? ”  ஏக்கம் குழைந்து ஒலித்தது சுந்தரேசனின் குரல் .

சுகந்தி விழி விரித்தாள்.இந்த  அப்பா அவளுக்கு புதிதானவர். அவள் அறிந்த அப்பா எப்போதும் ஆக்ரோஷத்துடனும் வேகத்துடனும் சண்டையிட்டுக் கொண்டே இருப்பார். உச்சபட்சமாக  கத்தலாக பேசுவார் .சாமான்களை உடைப்பார் .இதுபோல் நெகிழ்ச்சியாக ஒருபோதும் அவர் இருந்ததில்லை .

சுகந்தியின் பாச உணர்வு தூண்டப்பட அவள் மெல்ல எட்டு எடுத்து வைத்து தந்தையின் அருகே சென்றாள். மகளின் முகத்தை கைகளில் ஏந்திய சுந்தரேசன் அவளது உச்சந்தலையில் முகம் பதித்து ஆழ்ந்து முகர்ந்தார் .அடுத்த நொடியே தந்தையின் உடல் மெலிதாக குலுங்குவதை சுகந்தி உணர்ந்தாள் . அழுகிறாரா … அவளால் நம்ப முடியவில்லை .அவ்வளவு பெரிய மனிதர் அழுவாரா  என்ன ? முகம் உயர்த்தி தந்தையை பார்த்தார்.

” என் செல்லத்தை உச்சி முகர் வதற்கு எனக்கு இருபது வருடங்கள் ஆகி இருக்கிறது  ” சுந்தரேசனின் குரல் அழுகையில் பிசிறடித்தது.

அவரது பாசத்தை நம்பமுடியாமல் உணர்ந்த சுகந்தி மெல்லிய குரலில் ”  அப்பா ” என்றாள் .

” சொல்லுடா.. சொல்லு குட்டிம்மா. இந்த வார்த்தையை உன் வாயிலிருந்து கேட்பதற்காக நான் எத்தனை ஆண்டுகள் அவர்களோடு போராடிக் கொண்டு இருந்தேன் தெரியுமா ? ” சுந்தரேசன் உடைந்து வெளிப்படையாகவே அழத் துவங்கிவிட்டார் .

சுகந்தியும் சிறு கதறலுடன் ” அப்பா “என்று அழைத்தபடி அவர் மார்பில் தஞ்சம் அடைந்தாள்.

இவர்கள் பேச்சுக்கு இடையூறு செய்ய விரும்பாத தாரிகா இவர்கள் பேச ஆரம்பித்த உடனேயே மெல்ல மெல்ல பின்னால் நகர்ந்து மரத்தின் பின்னே வந்தாள் .

” நினைத்ததை முடித்தாயிற்றா ? ” வெறுப்பாய் கேட்டபடி அதே மரத்தின் பின்னால் நின்று இருந்தான் மயில்வாகனன்.

error: Content is protected !!Our Official Facebook Page Click like For Regular Updates