Categories: CinemaEntertainment

நீதியின் மறுபக்கம் திரைப்பார்வை

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குநர் – நடிகர் கூட்டணி நிறைய இருந்திருக்கிறது. சிவாஜி – பீம்சிங், எம்ஜி ராமச்சந்திரன் – ப.நீலகண்டன், கமல் – பாலசந்தர்,ரஜினி – எஸ்.பி.முத்துராமன் என்று பலரை சொல்லலாம். இதில் வருகிற இன்னொரு வெற்றிகரமான கூட்டணி விஜயகாந்த் – எஸ்.ஏ.சந்திரசேகரன்.



சினிமா ஆசையில் மதுரையில் இருந்து சென்னை கிளம்பி வந்த விஜயகாந்துக்கு சினிமா ஆரம்பத்திலேயே தனது அதிர்ஷ்டக் கதவை அகலத் திறக்கவில்லை. 1979 இல் இனிக்கும் இளமையில் அறிமுகமானவர் அகல் விளக்கு, நீரோட்டம், சாமந்திப்பூ போன்ற சில படங்களில் சின்ன வேடங்கள் ஏற்றார். 1980 இல் பழம்பெரும் இயக்குநர் கே.விஜயனின் தூரத்து இடி முழக்கத்தில் நாயகனானார். ஆனாலும், அதுவும் தோல்விதான்.

ஒரு வெற்றி கண்டிப்பாக தேவை என்ற நிலையில், சாதிக்கும் வெறியுடன் இருந்த எஸ்.ஏ.சந்திரசேகரனின் இயக்கத்தில் சட்டம் ஒரு இருட்டறையில் நடித்தார். எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கும் முதல் படம், அவள் ஒரு பச்சைக் குழந்தை தோல்வி. கண்டிப்பாக வெற்றி தேவை என்ற நிலையில் இயக்கியது, விஜயகாந்த் நடித்த சட்டம் ஒரு இருட்டறை. சட்டப் பின்னணியில் அப்போதையக் காலகட்டத்திற்கு புதிய முயற்சியாக அமைந்த அப்படம் மாபெரும் வெற்றியை பெற்று ஒரே இரவில் இருவரையும் நம்பிக்கைக்குரிய இயக்குநராகவும், ஹீரோவாகவும் அடையாளம் காட்டியது.

இதனைத் தொடர்ந்து விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த ராம.நாராயணனின் சிவப்பு மல்லி ஹிட். மீண்டும் எஸ்.ஏ.சி.யுடன் இணைந்த நெஞ்சில் துணிவிருந்தால் ஹிட். அதனைத் தொடர்ந்து வந்த சாதிக்கொரு நீதி, நூலறுந்த பட்டம், நீதி பிழைத்தது, பார்வையின் மறுபக்கம் என தொடர்ச்சியாக ஐந்து பிளாப்கள். பட வாய்ப்பு குறைய ஆரம்பித்தது. அடுத்து நடித்த பட்டணத்து ராஜாக்கள், ஆட்டோ ராஜா, சிவந்த கண்கள், ஓம் சக்தி, சட்டம் சிரிக்கிறது, நான் சூடிய மலர் என மேலும் ஐந்து தோல்விகள். பட வாய்ப்புகள் சுத்தமாக வறண்டு, ஆக்ஷன் ஹீரோவாக எழுந்து வந்தவர் விசுவின் டெளரி கல்யாணம் காமெடிப் படத்தில் நடிக்குமளவு சுருங்கிப் போனார்.



இந்தப் பக்கம் எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கும் அதே நிலை. சட்டம் ஒரு இருட்டறையும், அதையடுத்து இயக்கிய நெஞ்சில் துணிவிருந்தால் படமும் ஹிட். உடனடியாக சட்டம் ஒரு இருட்டறையை தெலுங்கில் இயக்கினார். பிறகு விஜயகாந்தை வைத்து இயக்கிய நீதி பிழைத்தது, பட்டணத்து ராஜாக்கள், ஓம் சக்தி மூன்றும் ப்ளாப். உடனே கன்னடத்துக்குப் போய் அங்கு சட்டம் ஒரு இருட்டறையை ரீமேக் செய்தார். தொடர்ந்து விஜயகாந்தை இயக்கியதால் ஒரு மாறுதலுக்கு ரவீந்திரன், அம்பிகாவை வைத்து இதயம் பேசுகிறது படத்தை எடுத்தார். அதுவும் தோல்வி. தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் போக இரண்டு தெலுங்குப் படங்களையும், இரண்டு கன்னடப் படங்களையும் இயக்கினார். ஆனாலும், தமிழ்தானே தாய்மொழி. அதில் சாதிப்பதுதானே சாதனை. மீண்டும் தமிழுக்கு வந்து சம்சாரம் என்பது வீணை படத்தை எடுத்தார். அதுவும் தோல்வி.

விஜயகாந்த், எஸ்.ஏ.சந்திரசேகரன் இருவரும் தோல்விமுகத்தில், வாய்ப்புகளே இல்லாமல் இருந்தவேளை பி.எஸ்.வீரப்பா எஸ்.ஏ.சந்திரசேகரனை தேடி வந்து வாய்ப்பு தருகிறார். பிரபுவை ஹீரோவாக்கி படம் பண்ணலாம் என்று திட்டம். அப்போது பிரபு நடித்திருந்த சந்திப்பு படம் வெளியாகி வெள்ளிவிழா கொண்டாடியிருந்தது. அவர் எஸ்.ஏ.சந்திரசேகரனின் இயக்கத்தில் நடிக்க மறுப்பு தெரிவிக்க, கார்த்திக்கிடம் சென்றனர். அவரும் கால்ஷீட் தராமல், கடைசியில் வாய்ப்புகள் இல்லாமலிருந்த விஜயகாந்தை ஒப்பந்தம் செய்தனர். அந்தப் படம்தான் சாட்சி. மலையாளத்தில் வெளியான ரத்தம் படத்தின் ரீமேக்கான சாட்சி சக்கைப்போடு போட்டது. எஸ்.ஏ.சி., விஜயகாந்த் இருவருமே சாட்சியால் மறுவாழ்வு பெற்றனர். அதன் பிறகு இருவருக்குமே நீண்டகால தோல்விகள் அமையவில்லை.



இந்த வெற்றிக் கூட்டணியின் இன்னொரு வெற்றிப் படம் 1985 இல் வெளிவந்த நீதியின் மறுபக்கம். இது வெளிவந்த காலத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் மீண்டும் சின்ன தொங்கலில் இருந்தார். அவரது குடும்பம், புது யுகம் படங்கள் சரியாகப் போகவில்லை. அடுத்து ரஜினியை வைத்து எடுத்த நான் சிகப்பு மனிதன் வெற்றி பெற்றது. அது ரஜினியின் வெற்றியாகவே பார்க்கப்பட்டது. இந்நிலையில் தனது ஆஸ்தான நடிகர் விஜயகாந்துடன் இணைந்து தனது பேவரைட் மைதானமான சட்டப்பின்னணியில் நீதியின் மறுபக்கத்தை எடுத்தார். இதில் விஜயகாந்த் ஓர் அப்பாவி வெகுளி. சரியான ஏமாளி. அவரை பண்ணையாரின் மகள் ராதிகா விரும்புவார். ராதாரவி, வினுசக்ரவர்த்தி, சங்கிலி முருகன், வி.கே.ராமசாமி என ஒன்றுக்கு நான்கு வில்லன்கள். ராதாரவி விஜயகாந்தின் தம்பியை கொலை செய்ய, பழி விஜயகாந்த் மீது விழும். அப்பாவி விஜயகாந்த் எப்படி ஆக்ஷன் ஹீரோ விஜயகாந்தாகி சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துகிறார் என்பது கதை.

வழக்கமான எஸ்.ஏ.சி. பாணியிலான கதையில் அங்கங்கே ட்விஸ்ட் வைத்து, கிளைமாக்ஸில் நீதிபதியின் குடும்பத்தை வில்லன்கள் கடத்தி, நீதிபதியையே, தீர்ப்பை மாற்றி எழுது என்று மிரட்டுகிற போது, அவர்   எடுக்கும் துணிச்சலான முடிவு, படத்துக்கு ஒரு முழுமையை தந்து படத்தை வெற்றி பெறச் செய்தது. இந்தப் படத்தின் ஆரம்பத்தில் சிறுவனான விஜய் இறந்து போன தனது தங்கையின் புகைப்படத்துக்கு மலர் தூவும் காட்சி இடம்பெற்றிருந்தது. அதன் பிறகே டைட்டில் வரும்.

1985 செப்டம்பர் 27 வெளியான நீதியின் மறுபக்கம் நேற்று 38 வது வருடத்தை நிறைவு செய்தது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

உங்க வீட்டு குழந்தை மதிப்பெண் குறைவா எடுத்துட்டாங்களா?.! கவலை வேண்டாம்..!

“வருடம்தோறும் சொல்லிக்கிட்டே இருந்தேன்… காதிலேயே வாங்கினால்தானே! எதிர்வீட்டுப் பெண் நம்ம பெண்ணோட இருபது மார்க் அதிகம் வாங்கிட்டா… உங்க சித்தப்பா…

4 hours ago

எழில் எடுத்த முடிவு – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் உங்க அப்பா…

4 hours ago

சுவையான மட்டன் உப்புகண்டம் செய்வது எப்படி..?

ஆட்டு இறைச்சி உண்பதற்கு சுவையான சத்தான உணவு. அதை உப்பு சேர்த்து நன்றாக காய வைத்து உப்புக்கண்டமாக சாப்பிட்டால் கூடுதல்…

4 hours ago

‘மாயவன் வேட்டை’ திரைப்பட விமர்சனம்

இஸ்லாமிய புனித நூலான குரானில் சைத்தான்கள் என்று அழைக்கப்படும் ஜின்கள் பற்றிய ஆன்மீகம் மற்றும் அறிவியல் தொடர்பை சொல்வது தான்…

4 hours ago

உடலென நான் உயிரென நீ-9

9 புதிதாக வாங்கியிருந்த கட்டில் மெத்தை மேல் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் டால்பின்கள் துள்ளிக் கொண்டிருந்தன. திடுமென பார்க்கையி்ல் கட்டில் ஸ்விம்மிங் பூல் போல் தெரிந்தது. ஓடிப்போய் அந்தக் கட்டில் மேல் விழுந்து புரள ஆசைதான். ஆனால் அங்கே நடுநாயகமாக கணநாதன் அமர்ந்திருந்திருந்தானே ...எதை எதிர்பார்த்து அமர்ந்திருக்கிறான் ...? இல்லை ...முடியாது என சொல்லிவிட்டால் ...யோசனை ஓடும் போதே சற்று முன் ரூபாவுடன் போனில் பேசிய பேச்சுக்கள் நினைவு வந்தன . "  திருமணம் நல்லபடியாக முடிந்து நீங்கள் இருவரும் பெரியகுளத்தில் செட்டில் ஆனதில்…

8 hours ago

மருத்துவத்துறையில் இவ்வளவு படிப்புகளா… அரசு வேலைவாய்ப்பும் இருக்கா.?

எம்.பி.பி.எஸ்: ஐந்தரை ஆண்டுப் படிப்பான இதை படித்து மருத்துவப் பயிற்சியை முடித்த பிறகு, இந்திய மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்த பிறகே…

8 hours ago