108 திவ்ய தேச தலங்கள் – 102.அழகர்மலை கள்ளழகர் கோயில்

108 திவ்ய தேசங்களில், மதுரை மாவட்டம் அழகர் மலை கள்ளழகர் கோயில், 102-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாவிருங்குன்றம் என்று அழைக்கப்படும் இத்தலம் இளங்கோவதியரையர் என்னும் முத்தரையர் மன்னரால் கட்டப்பட்டது. தெய்வ பிரதிஷ்டை அணையா விளக்கு இத்தலத்தில் எரிந்து கொண்டே இருப்பது தனிச்சிறப்பு.

மதுரையில் இருந்து 21 கிமீ தொலைவில் உள்ள இத்தலத்தை பெரியாழ்வார், ஆண்டாள், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.



தல வரலாறு: ஒரு காலகட்டத்தில் உலகில் இறப்பு என்பதே இல்லாமல் இருந்தது. யாரும் தவறு செய்யாமலும் இருந்தனர். ஒருநாள் ஒருவன் ஒரு பெண்ணை துரத்திக் கொண்டு வந்தான். அதைக் கண்ட தர்மதேவன், அவனை ஒரே அடியில் வீழ்த்தினார். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட சிவபெருமான், உலகில் தர்ம, நியாயம் அழியாமல் காப்பது உன் பொறுப்பு என்று தர்மதேவனிடம் கூறி, அதற்குரிய உருவத்தை அளிப்பதாகச் சொன்னார். அதன்படி தர்மதேவனுக்கு பற்கள் வெளியே தெரியும்படியான உருவம் அளிக்கப்பட்டது. (தவறு செய்தால் தர்மதேவன் தண்டிப்பார் என்று மனிதர்கள் பயப்படும்படியான உருவம் அளிக்கப்பட்டது)

தனது உருவம் குறித்து வருந்திய தர்மதேவன், தான் தினமும் எழுந்தவுடன் விழிக்கும் முகமாவது அழகாக இருக்க வேண்டும் என்று இந்த அழகர் கோவிலில் திருமாலை நோக்கி தவம் மேற்கொண்டார்.

தர்மராஜனின் தவத்தில் மகிழ்ந்த பெருமாள் அவருக்கு சுந்தரராஜப் பெருமாளாகக் காட்சி கொடுத்தார். பெருமாளின் கருணையை போற்றும் விதமாக தர்மராஜன் பெருமாளுக்கு தினமும் ஒருவேளையாவது பூஜை செய்து, அவரை வலம் வர வேண்டும் என்று விண்ணப்பித்தார். அதன்படி இன்றும் இக்கோயிலில் நடைபெறும் அர்த்தஜாம பூஜையை எமதர்ம ராஜனே நடத்துவதாக ஐதீகம். மேலும் அவரது விருப்பப்படி விஸ்வகர்மாவால் சோமசந்த விமானம் (வட்ட வடிவம்) கொண்ட கோயில் கட்டப்பட்டது.



கள்ளழகர்: வைகுண்டத்தில் திருமாலைக் காணாமல் திருமகள் அவரைத் தேடி அழகர் கோவில் வந்தார். பெருமாளுடன் திருமகளும் இத்தலத்தில் தங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் பேரில், திருமகளும் பெருமாளைக் கைப்பிடித்து அவருக்கு அருகில் கல்யாண சுந்தரவல்லி என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கிறார். பெருமாள், பிராட்டியின் திருமணக் கோலம் அனைவரது மனதையும் கொள்ளை கொண்டதால், அழகர் ‘கள்ளழகர்’ ஆனார். இதனாலேயே பெருமாளை நம்மாழ்வார், ‘வஞ்சக் கள்வன் மாமாயன்’ என்று போற்றுகிறார்.

கோயில் அமைப்பும் சிறப்பும்: பஞ்சாயுதம் (சங்கு, சக்கரம், கதை, வில், வாள்) தாங்கிய நிலையில் நின்ற கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது தனிச்சிறப்பு. சைவ, வைணவ பேதம் இல்லாமல் இத்தலத்தில் ஆராதனை நடைபெறுகிறது. இத்தலத்தில் புத்த மதம், சமண மதம், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்களும் வழிபாடு செய்துள்ளனர்.

இத்தல பெருமாளை வேண்டினால் விவசாய செழிப்பு, வியாபார விருத்தி, புதிய தொழில் வாய்ப்பு ஆகியன கிட்டும் என்பது நம்பிக்கை. விவசாயிகள் விளைச்சல் அறுவடைக்கு முன்பு தங்கள் நிலத்தில் கோட்டை கட்டி அதில் இருக்கும் தானியங்களை அழகருக்கு காணிக்கையாக செலுத்துவர். குடும்ப நலம், திருமண வரம், குழந்தைப் பேறு ஆகியவற்றுக்காகவும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

இத்தலத்தில் காவல் தெய்வமாக கருப்பண்ண சுவாமி (பதினெட்டாம் படியான்) விளங்குகிறார். அழகர் கோயில் தோசை பிரசாதமாக பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது. ராக்காயி அம்மன் கால் சிலம்பில் இருந்து மலைக் குகைக்குள் வற்றாத ஜீவ நதியாக சிலம்பாறு (நூபுர கங்கை) பாய்ந்து கொண்டிருப்பது தனிச்சிறப்பு.



அழகர் ஆற்றில் இறங்குதல்: திருமால் இவ்வுலகை அளக்க தனது திருவடியைத் தூக்கினார். அப்போது திருமாலின் தூக்கிய திருவடிக்கு பிரம்மதேவர் பூஜைகள் செய்தார். அப்போது திருமாலின் கால்சிலம்பு (நூபுரம்) அசைந்து அதில் இருந்து நீர்த்துளி தெளித்து அழகர்மலை மீது விழுந்தது. இது புனித தீர்த்தமாகக் கருதப்படுவதால் இந்த தீர்த்தத்தில் அமர்ந்து சுபதஸ் மகரிஷி திருமாலை நினைத்து தியானத்தில் ஆழ்ந்தார்.

அச்சமயத்தில் மகரிஷியைக் காண துர்வாச முனிவர் வந்தார். திருமால் நினைப்பில் இருந்த மகரிஷி துர்வாச முனிவரை சரியாக உபசரிக்கவில்லை. கோபமடைந்த துர்வாசர், மகரிஷியை தவளையாக (மண்டூகம்) மாறும்படி சபித்தார். தனது நிலையை எடுத்துக் கூறிய மகரிஷி, தனக்கு சாப விமோசனம் அருளும்படி துர்வாசரை வேண்டினார். அதற்கு துர்வாசர், “வேதவதி என்ற வைகை ஆற்றில் தவம் செய். அழகர் கோவிலில் இருந்து பெருமாள் வரும் சமயத்தில் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்” என்று அருளினார்.

அழகர் கோவிலில் இருந்து பெருமாள் கிளம்பி மதுரை தல்லாகுளத்தில் ஆண்டாள் தொடுத்த மாலையை அணிந்து கொண்டு குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார். சித்திரை பௌர்ணமிக்கு மறுநாள் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு காட்சி தந்து சாப விமோசனம் அளிக்கிறார். அழகர் கோவிலில் இருந்து மதுரை வந்து மீண்டும் கோயில் திரும்பிச் செல்லும் வரை அழகர் 7 வாகனங்கள் மாறுகிறார்.

இக்கோயிலின் ராஜ கோபுரம் முழுமை அடையவில்லை. ஆரிய மண்டபம், கல்யாண சுந்தரவல்லி தாயார் சந்நிதி, திருக்கல்யாண மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவற்றைக் கொண்டு கோயில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி இரணியன் கோட்டை, அழகாபுரிக் கோட்டை அமைந்துள்ளன.



மீனாட்சி கல்யாணத்துக்கு மதுரை வரும் கள்ளழகர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (வளரி), இடுப்பில் ஜமதாடு (கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் புறப்படுகிறார்.

கோயில் பிரகாரத்தில் உள்ள ஜ்வாலா யோக நரசிம்மரின் உக்கிரத்தைத் தணிப்பதற்காக நூபுர கங்கை நீர், தயிர், வெண்ணெய், தேன் முதலியவற்றைக் கொண்டு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

திருவிழாக்கள்: சித்திரைத் திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும். அப்போது நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைக் காண பல்லாயிரக்கணக்கானோர் கூடுவர்.

ஆடிப் பெருந்திருவிழா, ஐப்பசி தலை அருவி உற்சவம், வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில வருடப் பிறப்பின்போது பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும்.

 



What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நடிகை மனோரமா-8

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என்று மனோரமா…

2 hours ago

வேர்க்குரு எதனால் வருகிறது… வியர்க்குரு போவதற்கு என்ன செய்வது.?

கோடைக்காலத்தில் வெயிலினால் நம்முடைய ஆரோக்கியத்திலும், தோலிலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பருக்கள், அரிப்பு போலவே வேர்க்குருவும் இயல்பான ஒன்றாக இருக்கிறது.…

2 hours ago

கோடை காலத்தில் நம்ம ஊருக்கு ஏற்றதா ‘ஏர் கூலர்’?

வெயிலைச் சமாளிக்க நாம் பல போராட்டங்களை இந்தக் கோடைக் காலத்தில் மேற்கொள்வோம். அவற்றுள் ஒன்றுதான் ஏர் கூலர் வாங்குவது. பொதுவாக…

2 hours ago

இந்தியன் படத்தில் நம்பவே முடியாத 5 ஆச்சரியங்கள்…

1996ல் உலகநாயகன் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான போது இந்தியன் பட்டையைக் கிளப்பியது. அந்தக் காலத்தில் தமிழில் இந்தியன்…

2 hours ago

மகாபாரதக் கதைகள்/குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன…

5 hours ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

சுவாமி : கலியுகவரதராஜப் பெருமாள். அம்பாள் : ஸ்ரீதேவி, பூதேவி. தலவிருட்சம் : மகாலிங்கமரம். தலச்சிறப்பு : இக்கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய…

5 hours ago