10

தார் பூசிக் கொண்ட பருத்தி பஞ்சுகள்

கறுப்பாகத்தான் தெரிகின்றன,

சேறு அப்பிக் கொண்டதாலேயே  

குணம் மாறுமோ களிறுகள் ? 

சுபம் சொல்லி விழி மூட விடாமல்

கண்ணுக்குள் உறுத்தும் நீ ,

கள்ளங்கள் மேற் கொள்ளும்

கலியுக கண்ணனோ ?

தேவயானி அவன் அருகே நெருங்கி வந்து நின்று குனிந்து அவன் முகத்தை உறுத்தாள் . அவன் இமைகள் அழுத்தமாக மூடி இருக்க இதழ்கள் மட்டுமே தன்னையறியாமல் உளறிக் கொண்டிருந்தது . இது அவனுடைய ஆழ்மன உளறல் என உணர்ந்த தேவயானி திகைத்தாள் .இவன் இப்போது ஏஞ்சல் என்று யாரை நினைக்கிறான்  ? அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவன் உளறல் மேலும் அதிகரித்தது. தொடர்ந்து கையை ஆதரவு போல் முன்னே நீட்டினான் .நீண்ட கை காற்றில் துழாவியது.

தேவயானி அவன் கையைப் பற்றி கீழே இறக்கி மெல்ல படுக்கையில் வைத்தாள் . உளறி கொண்டிருந்த அவனது உதடுகளின் மேல் தன் இரு விரல்களை வைத்து அழுத்தி உதட்டு அசைவை நிறுத்தினாள் .இப்போது உளறல் நின்றுவிட அவன் முகம் சற்று அமைதியானாற் போல் தெரிந்தது .தொடர்ந்து சீரான மூச்சு வர அவன் ஆழ்ந்து உறங்கி விட்டான் என்று எண்ணி திரும்பினாள் .அன்று முழுவதும் அவனது ஏஞ்சல் அவளை பார்த்து  சிரித்துக் கொண்டே இருந்தது.

மறுநாள் மாலை மங்கும் நேரம் தான் 

ரிஷிதரனின் மயக்கம் அல்லது உறக்கம் கலைந்தது .அப்போதுதான் அவனது காயங்களுக்கு மூலிகைச் சாற்றை தடவிவிட்டு சுற்றிலும் இரைந்து கிடந்த மூலிகைகளை எடுத்து கட்டி மூங்கில் கூடைக்குள் போட்டு இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தாள் தேவயானி.



” ஏஞ்சல்…”  பலவீனமான குரல் முதுகுக்கு பின்னால் இருந்து கேட்க திரும்பிப் பார்த்தாள். இவளை பார்க்கவென ஒரு புறமாக சாய்ந்து படுத்து இருந்தவனின் கண்களில் நம்ப முடியாத ஆச்சரியம் தெரிந்தது .

” ஏஞ்சல் நீயேதானா …? ” 



” விழித்து விட்டீர்களா ? வலி எப்படி இருக்கிறது ? சாயாதீர்கள் காயம் இருக்கிறதில்லையா ? ” 

  தேவயானி வேகமாக எழுந்து அவன் அருகே வந்து அவனது சாய்வை சரியாக்கி நேராக படுக்க வைத்தாள்.

ரிஷிதரன் விழி சுழற்றி  சுற்றிலும் பார்த்தான் . ” நான் தேவலோகத்தில் இருக்கிறேனா ? ” 

இந்த நிலைமையிலும் பேச்சை பார் மனதிற்குள் அவனுக்கு வக்கணை காட்டிக்கொண்ட தேவயானி ” இது பசுமைகுடில். எங்கள் தங்கும் விடுதி ” நிதானமாக விளக்கினாள் .

” வாவ் என்ன ஒரு அழகான இடம்  ? ” இயற்கையான அச் சூழ்நிலையை அவன் கண்கள் சுற்றிலும் அமைந்திருந்த ஜன்னல்கள் வழியே ஒற்றி  விட்டு வந்தது .” பெயருக்கு ஏற்ற மாதிரி பசுமைக்குடில்தான்  ஏஞ்சல் உன்னுடையதா இந்த இடம் ? ” 

ஆமாம் என்று சொன்னால் சுனந்தா அடிக்கவே வந்துவிடுவாள் என்று நினைத்தபடி “என் அண்ணனுடையது  ” என்றாள் தேவயானி.

” நான் எப்படி இங்கே வந்தேன் ஏஞ்சல்  ? நீதான் என்னை அழைத்து வந்தாயா  ? ” கேட்டவன் நெற்றியை லேசாக தட்டி யோசித்து…”  ஐ ரிமெம்பர் அந்த பயர் ஆக்சிடெண்டில் நீ தானே என்னை காப்பாற்றினாய்  ? எனக்கு அப்படித்தான்  ஞாபகம் .கனவில்லை தானே அது  ? ” என்றான்.

” நான் காப்பாற்றவில்லை பயர் சர்வீஸிலிருந்து ஆட்கள் வந்துவிட்டார்கள். அவர்கள்தான் உங்களை  காப்பாற்றினார்கள் ” 

” ஓ …ஆனால் இங்கே அழைத்து வந்தது …? ” 

” உங்கள் அம்மாவும் , அண்ணனும் .அவர்கள் இங்கே தான் தங்கி இருக்கிறார்கள் ” 

இவ்வளவு நேரமும் இலகுவாகவும் மலர்ச்சியாகவும் இருந்த ரிஷிதரனின் முகம் இப்போது இறுகியது. கண்களில் கோபம் தெரிந்தது .விருட்டென்று எழுந்து அமர்ந்தான்.

” நான் போகிறேன் ”  வேகமாக படுத்திருந்த இடத்திலிருந்து எழுந்தான் . வாயில் எங்கே என்று தேடி கவனித்து  நடந்தான் .



ரிஷிதரனுக்கு உடல் முழுவதுமே தீக்காயங்கள் இருந்தன. இடது கை மிக அதிக அளவில் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்தது .அவனுடைய பாதங்களில் கூட தீக்காயங்கள் இருந்தன .அதனைப் பற்றிய எந்த கவலையோ வேதனையோ இன்றி பாதங்களை தரையில் ஊன்றி நடந்து கொண்டிருந்தான் அவன். தேவயானி வேகமாக ஓடி அவனுக்கு முன்னால்  மறித்து நின்றாள்.

” எங்கே போகிறீர்கள் ? ” 

” வழியை விடு .எங்கேயாவது இந்த காட்டிற்குள் போய் தொலைந்து போகிறேன்  ” அவனது பேச்சில் திடுக்கிட்டாள் .இது என்ன பேச்சு …தேவயானி உணர்ந்து வைத்திருந்த அவனது கடின குணநலன்களுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது இந்த பேச்சு. அப்படி ஓடுகிறவனோ ..ஒளிகிறவனோ இல்லையே இவன் .

” உடல் முழுவதும் உங்களுக்கு காயங்கள் இருக்கிறதே. இப்போது நீங்கள் வெளியே போகக்கூடாது ” 

” இந்தக் காயங்கள் எல்லாம் என்னை ஒன்றும் செய்யாது. சில மனிதர்களின் நடவடிக்கைகள்தான் எனக்கு வேதனையைக் கொடுக்கும் .வழியை விடு …” அவன் பிடித்த பிடியிலேயே நின்றான்.

” முடியாது .உங்கள் காயங்களின் அளவு உங்களுக்கு தெரியாது .நான் உங்களை காப்பாற்றிக் கொண்டு வந்து இங்கே வைத்து சிகிச்சை அளித்து கொண்டு இருக்கிறேன். எனது சிகிச்சையை பாதியில் விட நான் சம்மதிக்க மாட்டேன்  ” தேவயானியின் பிடிவாதமும் அவனுக்கு சமமாக இருந்தது.

ரிஷிதரனின் முகம் மலர்ந்தது  ” நீதானே என்னை காப்பாற்றினாய்  ?நீதானே இங்கே கூட்டி வந்தாய்  ? மறைக்கப் பார்க்காதே ஏஞ்சல் .உண்மையைச் சொல் ” 

” ஆமாம் நான்தான்  ” ஒத்துக்கொண்ட தேவயானி உன் காயம் குணம் ஆகட்டும் பிறகு இதற்கெல்லாம் சேர்த்து உன்னை பேசிக் கொள்கிறேன் என மனதிற்குள்  வஞ்சம் வைத்துக் கொண்டாள்.



அவளுடைய ஒத்துக்கொள்ளலில் பிரகாச முகம் காட்டிய ரிஷிதரன் அவளை நோக்கி கையை நீட்டினான் . ” என்னை படுக்கைக்கு அழைத்து போ ஏஞ்சல் ” 

” இவ்வளவு தூரம் நீங்களாகவேதானே நடந்து வந்தீர்கள்  ? ” படுக்கைக்கும் வாசலுக்கும் இடைப்பட்ட தூரத்தை காட்டினாள் அவள் .

” ஷ் …என் காலில் இருக்கும் புண் வலிக்கிறதே. கால்களை கீழே ஊன்ற முடியவில்லையே ”  திடுமென அப்போதுதான் வலி தோன்றிவிட்ட தனது இடது பாதத்தை  தூக்கிக் கொண்டு தடுமாறினான் அவன்.

தேவயானி சிறு முறைப்புடன் நீண்டிருந்த அவன் கையை பற்றி தனது தோளில் போட்டுக்கொண்டாள். ” இடதுகாலை   தரையில் வைக்காமல் மெல்ல நடந்து வாருங்கள் ” தாங்கலாக  அவனை படுக்கைக்கு அழைத்து போனாள்.

” கத்தி எதுவும் எடுத்துவிட மாட்டாயே ஏஞ்சல் ? ”  அவள் தோளில் இருந்த தனது கையின் நான்கு விரல்களை மெல்ல  அவள்மேல் தாளம் போல்  அசைத்து தட்டினான்.

” செத்த எலியை தூக்கி கொண்டு போய் போடும்போது கத்தி அவசியமா என்ன  ? ” அலட்சியமாக கேட்டாள்.

இந்த கேள்வியின் முடிவில் அவன் தன் மேல் தாளமிடுவதை நிறுத்தி  கோபத்தில்  கீழே தள்ளி விட்டாலும் விடலாம் என்றே நினைத்து இருந்தாள் .ஆனால் அவன் மென்மையாய் சிரித்தான்.

” அடடா கொஞ்சம் காயம்பட்டிருப்பதாலேயே புலி எலியாக போய்விட்டதே ” வருத்தம் காட்டினான்.

” புலி …? “அநியாயத்திற்கு ஆச்சரியம் காட்டினாள் அவள் .



” ஆம் புலி ”  மீசையை நீவி விட்டுக்கொண்டான் .ஒரு புறம் தீயில் லேசாக கருகி அரைகுறையாக இருந்த அவனது மீசையை பார்த்து தேவயானிக்கு சிரிப்பு வந்தது.

” ஏய் எதற்கு சிரிக்கிறாய் ஏஞ்சல் ? ” 

நோயாளியின் குறைபாட்டை வெளிப்படுத்துவது நியாயமாகாது  என தலையசைத்து தனது சிரிப்பை மறைத்துக் கொண்டாள்.

” ரிஷி தம்பி எழுந்துவிட்டாரா ? ” கேட்டபடி கொஞ்சம் பரபரப்புடன் உள்ளே வந்தாள் சொர்ணம்.

” யார்…? ”  என்றான்  அவளிடம் கிசுகிசுப்பாக .

” அம்மா ..” அவனுக்கு முணுமுணுத்து விட்டு

” இப்போதுதான் விழித்தார் அம்மா .உடனே கிளம்பப் போகிறேன் என்று ஓடிக்கொண்டே இருந்தார் .அவரை பிடித்து இழுத்து வைத்திருக்கிறேன் ”  அம்மாவுக்கு விளக்கம் கொடுத்தபடி ரிஷிதரனை தாங்கி பிடித்து மெல்ல  மீண்டும் படுக்கையில் அமர்த்தினாள் .

” ஹலோ ஆன்ட்டி  ” வெகுநாள் பழகியவன் போல சொர்ணத்திற்கு கை ஆட்டினான் அவன்.

” எப்படி இருக்கிறீர்கள் தம்பி ? காயங்களில் வலி குறைந்திருக்கிறதா ? ” சொர்ணம் தாயின் பரிவுடன் அவனை விசாரித்தாள் .

” தேவதைகளின் கவனிப்பு இருக்கும் போது வலிகளெல்லாம்   கிட்டே வருமா ஆன்ட்டி  ? ” அவனுடைய பேச்சில் தேவயானிக்கு திக்கென்றது.

இவன் பாட்டிற்கு அம்மா எதிரிலேயே ஏஞ்சல் என்று அழைத்து வைத்தானானால் அதன் விளைவுகளை தேவயானியால்  கணிக்க முடியவில்லை.

” பாதத்தில் இருக்கும் காயத்தை மறந்துவிட்டு நடந்து கொண்டிருக்கிறார் அம்மா ” புகார் சொல்லி அன்னையின் கவனத்தை திருப்பினாள் . அழுத்தி கால் வைத்து நடந்ததால் மேல்தோல் வழன்று தெரிந்த அவன் காயத்தில் பதறினாள் சொர்ணம்.

” அம்மா முன்னால் ஏஞ்சல்… ஊஞ்சல் என்று ஏதாவது பிதற்றாதீர்கள் ”  அவனது தோள்  காயத்தை ஆராய்வது போல் அவன் முகம் அருகில் குனிந்து முணுமுணுத்தாள் தேவயானி.

குறும்பு பார்வையுடன் ஏதோ சொல்ல வாய் திறந்த ரிஷிதரன் தனது கால் பக்கம் ஸ்பரிசம் உணர்ந்து குனிந்தான் .உடன் பதறினான் .” ஐயோ என்ன ஆன்ட்டி இது நீங்கள் பெரியவர்கள் .என் கால்களை தொட்டுக்கொண்டு …” ஆட்சேபத்துடன்  சொர்ணத்தின் கையிலிருந்த தன் காலை உருவ முனைந்தான்.

” அட பரவாயில்லை தம்பி. என் மகன் என்றால் நான் செய்ய மாட்டேனா ?   நோய்க்கு மருந்து இடுவதில் வயதை பார்க்கலாமா ? ” 



புன்னகையோடு கேட்ட சொர்ணத்தை ரிஷிதரனால் மறுக்க முடியவில்லை. சற்று நெகிழ்வுடன் மௌனமானான் அவன் .சொர்ணம் அவன் கால்களை உயர்த்தி பிடித்துக் கொள்ள கலந்து வைத்திருந்த மூலிகைச் சாற்றை மயிலிறகால் தொட்டு எடுத்து அவன் பாதங்களில் தடவ துவங்கினாள் தேவயானி.

” இதோ இந்த விரல் இடுக்கு ”  அவன் கால் பெருவிரலை பிரித்து சொர்ணம் காண்பிக்க விரல் இடுக்குகளில் பரவியிருந்த காயத்திற்கும் மருந்து தடவினாள் .

” இந்த காயங்களுக்கு  கால்களை ஒன்றோடு ஒன்று சேர்த்து வைப்பதே கூடாது .இத்தோடு நீங்கள் நடக்கலாமா தம்பி ? ” கண்டிப்புடன் கேட்டபடி தான் வரும்போது கொண்டு வந்திருந்த மண் கலயத்தை எடுத்து அவன் முன் நீட்டினாள் சொர்ணம்.

” நீர்மோர் .குடியுங்கள் தம்பி. இப்போது உங்கள் உடம்பிற்கு நீர்சத்து நிறைய தேவை ” ரிஷிதரன் கைநீட்டி கலயத்தை வாங்கிக் கொள்ள முனைய ” பரவாயில்லை தம்பி . இங்கே பாருங்கள் உங்கள் வலது கை விரலில் கூட சின்ன காயம் .நானே கொடுக்கிறேன் ” தானே அவன் வாயில் வைத்து ஊட்ட தொடங்கினாள் . 

உடலும் மனமும் நெகிழ்ந்திருக்க மௌனமாக மோர் அருந்திக் கொண்டிருந்த ரிஷிதரனின் உடல் திடீரென நாணாய் விறைத்தது .காரணம் வாசல் புறம் இருந்துவந்த ”  ரிஷி…”  என்ற அழைப்பு.

கலங்கிய கண்களுடன் வாசலில் நின்றிருந்தாள் மனோரஞ்சிதம். ” விழித்து விட்டாயா ? எப்படி இருக்கிறாய் கண்ணா  ? ” கேட்டபடி உள்ளே வந்தவளை ஒரு வேக அசைவுடன் கை உயர்த்தி நிறுத்தினான் ரிஷிதரன் .அந்த அசைவில் அவன் வாய் தொட்டிருந்த மண் கலயம் கீழே விழுந்து உருண்டு உடைந்து சிதறியது .தேவயானியும் சொர்ணமும் திடுக்கிட்டு அவனை பார்த்தனர்.

” அங்கேயே நில்லுங்கள் .மேலே ஒரு எட்டு எடுத்து வைத்தீர்களானாலும் நான் இங்கிருந்து போய்க்கொண்டே இருப்பேன் ”  மனோரஞ்சிதம் அப்படியே நின்று விட்டாள்.

“ரிஷி கண்ணா ஏன்டா இப்படி பேசுகிறாய்  ? ” தழுதழுத்தது அவளது குரல்.

“வாயை மூடுங்கள் உங்கள் கொஞ்சல்களையெல்லாம் ஏமாந்தவன் எவனிடமாவது வைத்துக்கொள்ளுங்கள். இப்போது வெளியே போங்கள் ” 

“ஒரே ஒரு தடவை உன்னை பக்கத்தில் வந்து பார்த்துவிட்டு …உடனே போய்விடுகிறேன் ரிஷி  ” கெஞ்சலாய் கேட்டாள் மனோரஞ்சிதம் .

“நோ திரும்பவும் சொல்கிறேன் .அடுத்து ஒரு எட்டு எடுத்து வைத்தீர்களானாலும் நான் இங்கிருந்து வெளியே போய்க் கொண்டே இருப்பேன்  ” சொன்னதோடு அவன் பாதங்களை தரையில் ஊன்ற முயல தேவயானி அவன் தோள்களை அழுத்தி தடுத்தாள்.

“என்ன செய்கிறீர்கள் ? பேசாமல் உட்காருங்கள் ” அதட்டினாள். அவன் ஓரு வேக உதறலில் தன் தோள் தொட்ட அவள் கையை தள்ளினான்.



” ஆன்ட்டி அவர்களை வெளியே போகச் சொல்லுங்கள் ” கத்தலாய் பேசினான்.



சொர்ணம் மனோரஞ்சிதத்தின் அருகில் வந்தாள் ”  மேடம் தம்பியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் கவலைப்பட வேண்டாம்.  இப்போது அவர் மிகுந்த கோபத்தில் இருக்கிறார் .நீங்கள் இந்த நேரத்தில் அவருடைய உடல்நிலையை நினைத்தாவது அவர் சொல்வதை கேட்பதுதான் நல்லது .வாருங்கள் நாம் உங்கள் குடிலுக்கு போகலாம் ” 

போகும் மனதின்றி விம்மலோடு மகனை பார்வையால் வருடிக்கொண்டிருந்த மனோரஞ்சிதத்தை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு வெளியே போனாள் சொர்ணம். கூடவே கவனித்துக் கொள் என்று மகளுக்கும் ஒரு பார்வை ஜாடை.

” அம்மாவிடம் இப்படித்தான் பேசுவீர்களா  ?” தேவயானி தாளமுடியாமல் கேட்க அவன் இறைஞ்சலாக அவள் பக்கம் கை நீட்டினான்.

” எனக்கு டயர்டாக இருக்கிறது ஏஞ்சல் 

என்னை படுக்க வையேன் ” 

கொஞ்ச நேரம் முன்பு குடுகுடுவென்று வாசலுக்கு ஓடினாயே அப்போது உனக்கு தேவைப்படாத உதவி இப்போது படுத்துக் கொள்வதற்கு தேவைப்படுகிறதா ? இப்படி அவனை கேட்க நினைத்தாலும் அவன் உடலின் காயங்கள் தேவயானிக்கு அந்த சந்தர்ப்பத்தை தர தயங்க வைத்தன.

அவனாக படுத்துக் கொள்ளும் போது இடது கை முழுவதும் இருக்கும் தீக்காயங்கள் அழுத்தப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்ற நியாயம் உணர்ந்தவள் மெல்ல அவன் தோள்களை தாங்கி இடப் பக்கம் அதிகம் சாய்ந்து விடாமல் அவனை படுக்கையில் சரித்தாள் . உடன் கண்களை இறுக்க மூடிக் கொண்ட ரிஷிரனின்  முகத்தில் மிகுந்த அயர்வு தெரிந்தது.

” தேங்க்யூ ஏஞ்சல் ” மெல்ல முணுமுணுத்தான் .சிறிது நேரத்திலேயே அவனது சீரான மூச்சு அவன் உறக்கத்திற்கு சென்று விட்டதை சொல்ல தேவயானி மெல்ல எழுந்தாள்.

முதலில் அம்மாவும் அண்ணாவும் இங்கே கூட்டி வந்தனர் என்று சொல்லும்போது அவன் வேகமாக எழுந்து வெளியே போனதற்கு  தான் இங்கே அழைத்து வந்ததை சொல்ல வேண்டுமென்ற  பிடிவாதம் காட்டுகிறான் என்ற காரணத்தைதான்   நினைத்திருந்தாள் அவள் .ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில்கூட அம்மா அண்ணனால் தான் காப்பாற்றப்பட  அவன் விரும்பவில்லையோ  என இப்போது யோசி



மனோரஞ்சிதமும் சசிதரனும் அடிக்கடி இவனைப் பற்றி சொல்லும் குறைபாடுகள் எல்லாமே அப்படியே நூற்றுக்கு நூறு பொருந்தி வருவதை உணர்ந்தவள் பாவம் அவர்கள் இந்த அசுரனிடம் மாட்டிக்கொண்டு விழிக்கிறார்கள்  என்று பரிதாபப்பட்டபடி குடிலை விட்டு வெளியேறினாள்.

What’s your Reaction?
+1
4
+1
6
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Padma Grahadurai

Website Admin

Recent Posts

சுச்சி லீக்ஸ் பின்னணி தான் என்ன?

 இன்று காலையிலிருந்தே ஜிவி பிரகாஷ், சைந்தவி இருவரின் விவாகரத்து செய்தி தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதே சமயம் பாடகி…

5 hours ago

பிள்ளைகளால் கண்கலங்கிய நின்ற பாக்யா – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் அப்பாவாக போகும்…

5 hours ago

பொட்டுக்கடலை வெச்சு ஒரு ஸ்வீட் செய்யலாம்

சிறுவயது நியாபகங்களை ஆராய்ந்து பார்த்தால் தெரியும், 90ஸ் கிட்ஸ்களின் ஸ்நாக்ஸ் இந்த பொட்டுக்கடலைதான். வீட்டிலிருந்து ஒரு கைப்பிடி அள்ளி எடுத்துக்கொண்டு…

5 hours ago

தி ஃபேமிலி ஸ்டார் விமர்சனம்..

அறிமுக இயக்குநர்களை நம்பி படம் பண்ண மாட்டேன் என பயந்து நடுங்கும் விஜய் தேவரகொண்டா கீதா கோவிந்தம் படத்தை தனக்கு…

5 hours ago

உடலென நான் உயிரென நீ-10

10 ஏலக்காய் மணக்கும் டீயின் வாசனை  மதுரவல்லியை படுக்கை அறை வந்து எழுப்பி விட்டது .ஆஹா ...எழுந்ததும் இப்படி ஒரு டீ குடிக்க கிடைப்பது எப்பேர்பட்ட வரம் .வேகமாக எழுந்து கிச்சனுக்கு ஓடினாள். " எனக்கு ..." கை நீட்டியபடி நின்றவளை முறைத்தான் கணநாதன் . " ஏய் பல் தேய்த்தாயா ? போய் பல் தேய்த்து விட்டு வா .அப்புறம்தான் டீ " ஆற்றிக் கொண்டிருந்த டீயை குடிக்க ஆரம்பித்தான் . மூஞ்சியை பாரு .என்னைப் பார்க்க வைத்து குடிக்கிறான் ...உடம்பில் சேருமா அது ...போடா உர்ராங்குட்டான் ...வாய்க்குள் முணுமுணுத்தபடி போய் பேஸ்ட் ப்ரஷ்ஷை எடுத்தாள் . முகம் துடைத்து வந்த பிறகுதான் அவளுக்கு டீ நீட்டினான் . " உர்ராங்குட்டான் டீ போட்டுத் தருமா என்ன ? " திக்கென விழித்தாள்.…

9 hours ago

கர்ப்பிணிப் பெண்கள் பலாப்பழம் சாப்பிடலாமா..?

கர்ப்பிணிகள் பலாப்பழம் சாப்பிடுவது ஆபத்தானது என பல ஆண்டுகளாக கூறப்பட்டு வரும் நிலையில், அதற்கான காரணம் மற்றும் உண்மை என்ன…

9 hours ago