Serial Stories vana malai pol oru kathal

வானமழை போல் ஒரு காதல்-8

8

 

” ரோஸ்மில்க்கை  எல்லோருக்கும் கொண்டு போய்க் கொடேன்  வாசுகி ”  கீதாவின் ஏவல்கள் வாசுகியை இப்போது பெரிய அளவில் பாதிக்கவில்லை .விருப்பத்துடன் அவள் ரோஸ்மில்க் தம்ளர்கள் நிறைந்திருந்த ட்ரேயை கையில் எடுத்துக்கொண்டாள் .வரிசையாக ஒவ்வொருவருக்காய் கொடுத்துக் கொண்டே வந்த அவளின் கண்கள் தேவராஜனின் மேலே இருந்தது.

 

” இது மட்டும் தானா  ? ” ரோஸ் மில்க் தம்ளரை எடுத்த தேவராஜனின் குறிப்பு கேள்விக்கு ” மாடியில் பந்தி நடந்துகொண்டிருக்கிறது சார் ” சிரிப்பை அடக்கிக் கொண்டு பதில் சொன்னாள் வாசுகி.

 

அவள் சொன்ன சாருக்கு அவளை முறைத்தவன் வெளியே வா என ஜாடை காட்டினான் வாசுகி தலையை ஆட்டி மறுத்தாள். சரி மாடிக்கு வா அடுத்த ஜாடை அவனிடம்…

 

முடியாது இப்போதும் தலையாட்டி மறுத்தவளை ஒற்றை விரலை ஆட்டி எச்சரித்தான்.  வா என்ற வலியுறுத்தலை வைத்துவிட்டு எழுந்து மாடி ஏறியவனை பார்த்தபடி நின்றாள் வாசுகி . இப்போது மாடிக்கு எதற்காம் …செல்லமாய் அவனுடன் ஊடியபடி இருந்தவளின் முதுகுப்புறம் அதிர்ந்தது .மாலினி அவள் முதுகுப் புறம் கோபத்துடன் நின்றிருந்தாள்.

 

” ஏவல் வேலை எதுவும் செய்ய கூடாது என்று பேசி  வைத்துள்ளோமே ? நீ என்ன இங்கே சர்வர் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாய் ? “

 

” அதனால் என்னடி ..? நம்ம அத்தை வீட்டு திருமணம் .நாம் பார்க்காமல் வேறு யார் வேலை பார்ப்பார்கள் ? ”  திடுமென மாறிவிட்ட அக்காவின் மனோபாவத்தில் மாலினி ஆ வென வாயை திறந்தாள்.

 

” இந்தா இந்த ரோஸ்மில்கை  கடைசி வரிசை வரை எல்லோருக்கும் கொடு .நான் மாடிக்கு போய் பந்தியை கவனித்து வருகிறேன் ” கையில் இருந்த ட்ரேயை தங்கையின் கையில் திணித்து விட்டு அவள் அதிர்ந்து நிற்பதை கண்டு கொள்ளாமல் நகர்ந்தாள் வாசுகி.




தேவராஜன் மாடிக்கு வர சொல்லும் காரணத்தை ஓரளவு ஊகித்தவளின் முகம் சிவந்தது .அன்று அவன் கேட்ட முத்தத்தை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறான் .அவனுக்கு பிடிகொடுக்காமல் நழுவிக் கொண்டு இருக்கிறாள் . அன்று ஆஸ்பத்திரியில் இவர்களைப் பார்த்த ஜெயக்குமார் திகைத்து நிற்க முதலில் சமாளித்தவன் தேவராஜன் தான்.

 

” வாசுகி பிரண்டுக்கு உடம்பு சரி இல்லையாம் மாமா. அவளைப் பார்ப்பதற்காக கூட்டிக் கொண்டு வந்தேன் ” 

 

” ஆமாம் அப்பா  ராதாவிற்கு ரொம்ப உடம்பு சரியில்லை. அவள் மயக்கம் போட்டு …இல்லை விஷம் குடித்து… மயங்கி …கீழே விழுந்து ” வாசுகி உளர தேவராஜன் அவள் கையை எச்சரிக்கையாய் அழுத்தினான்.

 

” பிரண்டை பார்க்கப் போகிறேன் என்று வந்து கொண்டிருந்தாள் மாமா. வழியில் அவளைப் பார்த்து நான் என் பைக்கில் கூட்டிக் கொண்டு வந்தேன் ” மேலும் விளக்கங்கள் சொன்னான். ஜெயக்குமார் மெல்ல தலையசைத்துக் கொண்டார்.

 

” நீங்கள் இங்கே எதற்கு அப்பா வந்தீர்கள்  ? “வாசுகி தயக்கத்துடன் கேட்டாள்.

 

” எனக்குத் தெரிந்தவர் ஒருவர் உடம்பு சரியில்லாமல் இங்கே அட்மிட் ஆகியிருக்கிறார். அவரை பார்க்க வந்தேன் .இப்போது வாசுகியை நானே கூட்டிக்கொண்டு போகிறேன். நீங்கள் கிளம்புங்கள் தம்பி  “ஜெயக்குமார் சொல்லி விட தேவராஜனுக்கு  வேறு வழியிருக்கவில்லை 

.மனமின்றி அங்கிருந்து கிளம்பினான்.

 

திரும்ப வரும் வழியில் அப்பா ஏதாவது கேட்பாரோ என்ற பயத்துடன் வாசுகி இருக்க ஜெயக்குமார் ஒன்றுமே பேசவில்லை .ஆனால் மறுநாளிலிருந்து அவர்கள் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்யத் துவங்கினார் .இதோ தங்கை வீட்டு திருமணம் முடிந்த இரண்டாவது நாளில் தனது மகளின் நிச்சயதார்த்தத்தை வைத்துக் கொள்வதாக தேவராஜனின் வீட்டினருடன் பேசி முடித்து வைத்துள்ளார்.தந்தையின் ஏற்பாடுகளை நிறைவாக மனதில் நினைத்தபடி மாடி ஏறிக் கொண்டிருந்தாள் வாசுகி .

 

” என்ன அலமு  ஏதேதோ கேள்விப்பட்டேன் .எல்லாம் உண்மையா ? ”  மாடிப்படி அடியில் ஏதோ ஒரு பெண்ணின் குரல் குசுகுசுவென்று கேட்டது .அந்தப் பெண்ணின் குரல் வாசுகியின் மூளையின் ஏதோ ஒரு நரம்பை நெருட மெல்ல தனது வேகத்தை மட்டுப்படுத்தி மாடிப்படிக்கு அடியில் கவனத்தை செலுத்தி காதுகளை கூர்மையாக்கினாள்.

 

” ஆமாம் அக்கா .நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான் ” இப்போது ஒலித்துக்கொண்டிருக்கும் குரல் யாருடையது வாசுகியின் காதுகளோடு புலன்களும் கூர்மையானது. 

 

முதலில் ஒலித்த குரலை அவளால் இனம் காண முடிந்தது …இரண்டாவதாக ஒலித்த அலமுவின் குரல் …?

 

” என்ன அலமு  நீ ஏதேதோ திட்டம் போட்டாய் .இங்கே வேறு என்னவோ நடந்து கொண்டிருக்கிறது .இப்போதுதான் உன் மகனை பார்த்து விட்டு வருகிறேன் .இப்படி எல்லாம் வந்து உட்கார்ந்து கொண்டு இருப்பவன் அவன் இல்லையே ” 

 




” எல்லாம் என் கை மீறி நடந்து கொண்டிருக்கிறது .என்ன செய்யச் சொல்கிறீர்கள் ? ” 

 

தொடர்ந்த அந்தப் பெண்களின் பேச்சுகளை வாசகி மாடிப்படி ஓரமாக ஒதுங்கி நின்று சற்றே குனிந்து முழுவதுமாக கேட்டாள் .பதட்டம் உடல் முழுவதும் பரவ பிடிப்பை விட்டு மேலிருந்து கீழே விழுந்து விடுவோமோ என பயந்தவள் அப்படியே படிகளிலேயே அமர்ந்து விட்டாள்.

 

ஐந்து நிமிடங்கள் கூட அப்படி அவளால் அமர முடியவில்லை சாப்பிட மேலே ஏறுபவர்களும் கீழே இறங்குபவர்களும் ஆக அந்த மாடிப்படி நெரிசலாக இருந்தது .இங்கேயே ஏன்  உட்கார்ந்து கொண்டிருக்கிறாய் ? என்ற கேள்விக்கு பயந்தவள் மெல்ல எழுந்து மாடி ஏறினாள் . ஆனால் அவள் உடம்பில் எந்த ஸ்மரணையும் இல்லாமல் கீ கொடுக்கப்பட்ட பொம்மை போல் கை கால்கள் மட்டும் அசைய மூளை உறைந்து நின்றது .மனதிற்குள் ஏதேதோ எண்ணங்கள் முட்டி மோதி சூறாவளியாக அவளை அலைக்கழித்தன.

 

டைனிங் ஹாலின் சுவரை ஒட்டி அவள் செலுத்தப்பட்டவள் போல் நடந்து கொண்டிருக்கும்போது சுவரில் இருந்த கதவு ஒன்று லேசாக  திறக்கப்பட்டு உள்ளிருந்த அறையினுள் அவள் இழுத்துக்கொள்ள பட்டாள் .திடுமென நடந்துவிட்ட இந்த செயலில் சிறு அதிர்ச்சி அவள் மூளையை  தாக்க தனது பிரமை சிறிது கலைந்தால் வாசுகி.

 

” எவ்வளவு நேரமாக இந்த ரூமிற்குள் காத்துக்கொண்டிருக்கிறேன் தெரியுமா ? ” கொஞ்சலாக கேட்டுக் கொண்டிருந்தவன் தேவராஜன் .அவன் பற்றி இழுத்த அவள் கையை வருடியபடி இருந்தான் .உணர்வுகள் ஏதுமற்று அவனை ஏறிட்டுப் பார்த்த வாசுகியின் கண்கள் வெறுமை சுமந்திருந்தது.

 

அது சமையல் சாமான்களை வைத்திருக்கும் ஸ்டோர் ரூம். தங்கள் இருவருக்குமான சிறு தனிமைக்காக தேவராஜன் அந்த அறையை தேர்ந்தெடுத்து இருப்பான் போலும்.

 

” ஏய் வசு  என்ன பார்க்கிறாய் ? ” விரிந்து விழித்தபடி இருந்த அவளது கண் இமைகளை வருடினான்.”  விசிறி போல உன்னுடைய இமை மயிர்கள் மிகவும் அழகு ” கொஞ்சல் குரலில் சொன்னபடி இதழ்களை குவித்து அவள் இமைகளின் மீது ஊதினான் .சில்லென்று கண்களில் பட்ட காற்றிற்கு படபடத்து சிமிட்டிய அவளது கண்ணிமைகளை ஆர்வமாய் பார்த்தவன் மெல்ல இதழ் குவித்து கண்களின் மேல் ஒற்றி எடுத்தான்.

 

” பட்டாம்பூச்சி சிறகடிப்பது போல் உள்ளது ” கிறக்கமான குரலில் பேசியபடியே மீண்டும் தன் இதழ்களை அழுத்தமாக அவள் கண்களில் பதித்தான்.

 

” ஏய் வசு உண்மையை சொல்லு .உனக்கு முத்தத்தை நினைத்து பயம்தானே ? அதனால்தானே என்னிடமிருந்து விலகி விலகி ஓடிக் கொண்டிருக்கிறாய் ? ” கண் மேல் அழுத்தம் விலக்காமல்லேயே  இதழசைத்து உரசி உரசி பேசினான் .

 

 அவள் மனதின் பாரமோ … அவன் இதழ்களில் வேகமோ… வாசுகியின் கண்கள் நீர் துளிர்த்தன. இளம் சூட்டுடன் உப்பரித்த தன் இதழ்களின் சுவையில் திகைத்து நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தான் தேவராஜன். கண்ணீர் வழிந்து கொண்டிருந்த வாசுகியில் குழம்பினான் .

 

” வசும்மா  என்னடா … என்ன ஆயிற்று ? ” 

 

அவன் கேள்விக்கு வாசிகியிடம் இருந்து பதில் வரவில்லை .ஆனால் அவளுடைய கண்ணீர் நிற்கவும் இல்லை. தேவராஜன் துடைக்கத் துடைக்க அவள் கண்கள் பொழிந்து கொண்டே இருந்தன .விரிந்த இமைகள் கண் பாப்பாக்களை அவன் முகத்தில் அழுத்தமாக பதித்திருந்தன.

 

அவளது இந்த நிலையை பார்த்த தேவராஜனின் முகம் இறுக்கமானது .” அறியாத முதல் முறை பயமென்று நினைத்தேன் வாசுகி . ஆனால் …இப்போது உ…உனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லையா ? நான் தொடுவதை நீ விரும்பவில்லையா ? ” வேதனை மிகத் தெரிந்த்து அவன் குரலில் .

 

அவனுடைய தடுமாற்றமான கேள்வி வாசுகியினுள்  எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. அவள் தன் நிலை மாறாமல் அவனை பார்த்த படியே நின்றாள்.

 




” ஏய் உன்னை தாண்டி கேட்கிறேன். ஏன் இப்படி நிற்கிறாய் தேவராஜன் ? ”  அவள் தோள்களைப் பற்றிக் குலுக்கினான்.

 

வாசுகி இப்போது வாய் திறந்தாள். அவள் விழிகள் நிலை மாறாமல் அதே இடத்திலேயே நின்றிருக்க, இதழ்கள் மட்டுமே அசைந்தன.”  நம் திருமணத்தை நிறுத்தி விடுவீர்களா ? ” 

 

அவளது கேள்விக்கு முதலில் கோபத்தில் சிவந்த தேவராஜனின் கண்கள் பிறகு பெரும் சலிப்பை வெளிப்படுத்தின .” உன்னுடைய முட்டாள்தனத்திற்கு அளவே கிடையாதாடி ” கைகளை குவித்து பக்கத்தில் இருந்த அரிசி மூட்டையின் மேல் குத்தினான். அவன் வேகம் தாங்க முடியாமல் அந்த மூட்டை ஓட்டை விழுந்து உள்ளிருந்துவங்கியது. வெளியே  சிதற துவங்கியது.




 

 

What’s your Reaction?
+1
19
+1
13
+1
3
+1
0
+1
0
+1
1
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!