Serial Stories vana malai pol oru kathal

வானமழை போல் ஒரு காதல்-7

7

 

 

 

 

 இந்த சந்தன பேளாவை எடுத்து போய் வரவேற்பில் வையுங்கள் அண்ணி ” 

 

”  அண்ணா இலை கட்டை எண்ணி  கொடுத்து இருக்கிறீர்களா ? ” 

 

”  ஏய் மாலினி அதோ வந்தனா சேலை மாற்றி விட்டாள். அவள் அவிழ்த்த  சேலையை மடித்து வை “

 




”  அண்ணி அந்த சந்தனத்தை  வரவேற்பில் வைத்துவிட்டு உங்களை இங்கே தானே வரச் சொன்னேன் .அங்கே நின்று பொழுதைப் போக்க  வேண்டாம் .இதோ இந்த சாமான்களையெல்லாம் பத்திரமாக பையில் போட்டு எடுத்து வையுங்கள்.  திரும்ப எடுக்கும்போது எனக்கு சரியாக இருக்க வேண்டும் .அது போல் கவனமாாா பார்த்து அடுக்குங்்்்் “

”  ஏய் வாசுகி ஏன் சும்மா வாயைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாய் ? வந்தனாவின் மேக்கப்பிற்கு உதவி செய்ய வேண்டியது தானே ? அவள் விரல்களுக்கு நெயில் பாலிஸ் வைத்துவிடு ” 

 

இன்ன வேலை என்று இல்லாமல் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்  கல்யாண வேலைகளை ஏவிக்கொண்டிருந்த கீதா வாசுகிக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கிக்கொண்டிருந்தாள்.

 

” வேலைக்காரர்களை ஏவுவது போல் வேலை சொல்கிறார்களே ”  ஆட்சேபமாய் முணுமுணுத்தாள்.

 

வந்தனா சுழற்றி போட்ட சேலையை மடித்து வைத்துக் கொண்டிருந்த மாலினியிடமும்  அதே ஆத்திரம் .அவள் அந்த பட்டுச்சேலையை கிழித்து விடலாமா என்ற எண்ணம் வைத்திருப்பது அவள் முகத்தில் தெரிந்தது.

 

வாசுகிக்கு  அந்த அளவு ஆத்திரம் இல்லை என்றாலும் கீதா அத்தையின் மேல் நிறைய கோபமும் வருத்தமும் இருந்தது.

 

” சொல்கிற வேலையை இப்படி வேகமும் அதிகாரமுமாக சொன்னால் நம்மால் எப்படி செய்ய முடியும் அம்மா ? ” தன் அன்னையிடம் ஆற்றாமையை கொட்டினாள்.

 

” விடு பாப்பா ஒரு பெண் தனது பிறந்த வீட்டு ஆட்களிடம்தான் கோபத்தையும் அதிகாரத்தையும் காட்ட முடியும். உன் அத்தை அதைத்தான் செய்து கொண்டிருக்கிறாள் .இதையெல்லாம் நாம் பெரிது படுத்தக்கூடாது ” சொல்லிவிட்டு நாத்தனாரின் அடுத்த ஏவலுக்கு ஓடினாள் ராஜாத்தி.

 

அம்மாவின் சமாதானப்படுத்தலில் திருப்தி அடையாத வாசுகியின் முகம் எரிச்சலை சுமந்து இருந்தது. தனக்கு இடப்பட்ட நெயில் பாலிஸ் தடவும் பணியை புறக்கணித்து விட்டு வரவேற்பில் வந்து நின்று கொண்டாள்.

 

” வரவேற்பு சரியில்லையே என்ற குரலுக்கு உடல் சிலிர்த்து விட நிமிர்ந்து பார்த்து விழிகளை விரித்தாள் .அவள் எதிரில் தேவராஜன் நின்று கொண்டிருந்தான்.

 

” நீங்களா  ? இங்கே எப்படி  ?” எனது அத்தை வீட்டு திருமணத்தில் இவனுக்கு என்ன வேலை இப்படி எண்ணமிட்டது அவள் மனம்.

 

” எனக்கும் அழைப்பு வந்ததே ”  அவன் புன்னகைத்தான் .ஒரே ஊரில் இருப்பவர்கள் என்ற முறையில் இவன் வீட்டிற்கும் அத்தை அழைப்பு வைத்திருக்கலாம் என்று உணர்ந்தவள் மெல்ல தலையாட்டிக்கொண்டாள்.

 

” வாங்க ” வீட்டினளாக கை குவித்து வரவேற்றாள்.

 

” எங்கே ? ” குறும்பாக கேட்டான் அவன்.

 

வாசுகி செல்லமாக முறைத்தாள் .” எங்கள் கல்யாண வீட்டிற்கு வந்தவரை  வாங்க என்று வரவேற்கிறேன் ” 

 

” ஓ நான் வேறு நினைத்தேன் ” என்றவன் கண்கள் சொன்ன சேதி  வாசுகியின் மனதை மயங்கச் செய்தது.

 

” உங்கள் வீட்டு கல்யாணம் தான் .பிறகு ஏன் இத்தனை எரிச்சல் ? ” ஒற்றை விரலால் அவள் முகத்தை சுற்றி காற்றில் வட்டமிட்டு காட்டினான்.

 

அவன் கேள்வியின் காரணகர்த்தா நினைவிற்கு வந்து விட வாசுகியின் முகம் மீண்டும் எரிச்சல் சுமந்தது.

 

” வசு  என்னடா  ? என்ன பிரச்சனை  ? ” அவனது கனிவான கேள்வியில் வாசுகியின் முகம் மலர்ந்தது .சிறு பிடித்தமின்மைதான் அதையும் கவனித்து விசாரிக்கிறானே அன்பு பொங்க அவனை பார்த்தாள்.




 

” அட தம்பி நீங்களே தானா ? தள்ளி இருந்து பார்க்கும்போது நான் நம்பவே இல்லை .இதுபோல்  விசேஷங்களுக்கு எல்லாம் நீங்கள் வர மாட்டீர்களே ? அம்மாவை தானே அனுப்பி வைப்பீர்கள் ?  இங்கே மட்டும் எப்படி …? ” கேட்டபடி தேவராஜன் அருகே வந்து நின்றார் ஒருவர்.

 

” இங்கே எனக்கு முக்கியமான ஒரு வசூல் வேலை இருக்கிறது அண்ணா .  அது நானே நேரடியாக கவனிக்க வேண்டிய வேலை. அதனால் தான் வந்தேன் ”  என்ற தேவராஜனின் விழிகள் குறும்பு சுமந்திருக்க இதழ்கள் அவளைப் பார்த்து குவிந்தன.

 

அவன் குறிப்பிட்ட வசூல் வாசுகிக்கு  புரிய அவள் முகம் சிவந்தது .பொது இடத்தில் வைத்துக்கொண்டு இது என்ன வேலை  ? செல்ல மிரட்டலுடன் அவனை பார்த்தாள்

 

” அட உங்களுக்கே வசூல் பாக்கியா தம்பி ? அப்படி எல்லாம் உங்களிடம் யாரும் பாக்கி வைத்து விட முடியாதே ”  வந்தவன் தேவாராஜனை ஆச்சரியப்பட , வாசுகி  இதழ் கடித்தாள் . இந்த ஆள் வேறு இங்கே உள்ள நிலைமை தெரியாமல்….

 

” அதையேன் கேட்கிறீங்க அண்ணா  ? புதிதாக ஒருவர் சும்மா என்னையே தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வைக்கிறார். சுட்டு விரலாலேயே என்னை ஆட்டுவிக்கிறார்  என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் ” பார்வை அவள் மீதே இருக்க பதில் வந்தவருக்கு இருந்தது .அவன் சொன்ன சேதி முழுவதும் தனக்குத் தான் என உணர்ந்த வாசுகி போதும் நிறுத்து என எச்சரிக்கையாய் அவனை பார்த்தாள் .அந்த இடத்திலிருந்து அவனை வெளியேற்றும் நோக்கத்துடன் சந்தனத்தை அவனுக்கு முன் நீட்டினாள்.

 

“அட உங்களையே அடிச்சிக்க ஒரு ஆளா ? கடகடவென்று  சிரித்த அந்த ஆள் முதல் ஆளாக சந்தனத்தை தொட்டு பூசிக்கொள்ள வாசுகிக்கு சந்தனத்தை அந்த ஆள் தலையில் கொட்டும் வேகம் வந்தது.

 

” அட ஆமாம் அண்ணா .என் நிலைமை இப்போது மிகவும் பரிதாபமாக இருக்கிறது ” சோகமாக சொன்னபடி சந்தனத்தை தொட்டு மெல்லிய கீற்றாக  தன் நெற்றியில் இட்டுக் கொண்டவன் மிகுதி சந்தனத்தை பிறர் அறியாமல்  இரு விரல் சுண்டி அவள் பக்கம் உதறினான் .தன் முகம் கழுத்து என விரிந்து பரவிய சந்தனத்தின் வாசத்திலோ  என்னவோ வாசுகியின் உடல் சிலிர்த்து அடங்கியது.

 

தேவராஜன் மறைமுகமாக சுட்டிக் காட்டிய தேவையை வாசுகி உணர்வாள். அன்று அவன் பிடிவாதமாக கேட்டு நின்ற முத்தத்தை இதோ இன்று வரை அவள் கொடுக்கவில்லை .அன்று ராதாவை பார்க்க  இவர்கள் இருவரும் உள்ளே போகும்போது சாரதாவும்  சரண்யாவும் அவர்களுடன் இணைந்து கொண்டனர் .இவர்களைப் பார்த்ததும் ராதாவின் அம்மா ” கொஞ்சம் பார்த்து கொள்ளுங்கம்மா .  நான் வீடு வரை போய் சாப்பாடு எடுத்து கொண்டு வந்து விடுகிறேன்.  அப்படியே உங்கள் பிரெண்டுக்கு கொஞ்சம் புத்தியும் சொல்லுங்கள் ” என தழுதழுத்த குரலில் சொல்லி விட்டு போய் விட்டாள்.

 

” என்னடி இவள் நிஜமாகவே படிப்பிற்காகவா இப்படி செய்தாள் ? ”  வாசுகி தோழிகளிடம் கேட்க ” அதைத்தானே நீ இங்கே உள்ளே வரும்போது சொல்லிக்கொண்டிருந்தோம் .நீ காதில் வாங்காமல்  ஓடி வந்து விட்டாய் ” என்றனர் தோழிகள் .

 

” எப்படி இருக்கிறாய் ராதா ? ” தோழியை விசாரிக்க துவங்கினாள் வாசுகி.பலவீனமாக தலையசைத்தாள் ராதா.

 

” ஏண்டி இப்படி ஒரு முட்டாள்தனத்தை செய்தாய் ? “

 

” தெரியலடி ஏதோ ஒரு வேகம் .அம்மா என்றுமில்லாமல் நேற்று ரொம்ப திட்டிக் கொண்டிருந்தார்கள். மேலே படிக்க வைக்க வேண்டாம் .நம்மால் செலவழிக்க முடியாது படிப்பை முடித்து விட்டு நான் வேலைக்கு போகவேண்டும் என்று வீட்டில் பேசிக் கொண்டிருந்தார்கள் .அப்போதுதான் எனது இப்போதைய படிப்பை பற்றிய பேச்சு வந்தபோது என் அரியர்ஸ்  அவர்கள் கவனத்திற்கு வந்தது  .இப்படி இருந்தால் எப்படி வேலை கிடைக்கும்  என்று எல்லோருமாக என்னை திட்டத்  தொடங்கிவிட்டார்கள் .கொஞ்சம் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் எனது குடும்பத்திற்கு உதவ முடியாமல் போய்விடுமோ என்று எனக்கு தோன்றிவிட ஒரு நிமிடத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் எலி மருந்தை எடுத்து தின்று விட்டேன் ” ராதா வருத்தத்துடன் பேசினாள்.

” எந்த பிரச்சனைக்கும் வாழ்க்கையை முடித்துக் கொள்வது சரியான தீர்வு கிடையாதுங்க. இத்தனை வருடங்கள் இத்தனை  பாடுபட்டு உங்களை வளர்த்தவர்களுக்கு கோபமாக உங்களைத் திட்டும் உரிமை இல்லையா  ? ” தனது தலை மாட்டில் இருந்து வந்த குரலுக்கு அண்ணாந்து பார்த்த ராதாவின் முகம் உடல் பலவீனத்தையும் தாண்டி பிரகாசித்தது. அதனை உணர்ந்து கொண்ட வாசுகியின் முகம் கூம்பியது.

” நீங்களா…? ”  கண்களில் ஒளி வெள்ளம் பாய கேட்டாள்.

” நானேதான் .மடத்தனமான என் வருங்கால பெண்டாட்டியின் மக்கு தோழியை , குவிந்து கிடக்கும் ஆயிரம் வேலைகளை விட்டுவிட்டு பார்க்க வந்து நின்று கொண்டிருக்கும் முட்டாள் தேவராஜனே தான் ” 

ஒரு சிறிய அறிமுகத்தில் தன்னையும் வாசுகியையும் ராதாவிற்கு தெளிவாக உச்சந்தலை ஆணி போல்   விளக்கி விட்ட தேவாராஜனை சாரதாவும் சரண்யாவும் வியப்பாக பார்க்க , அது எப்படி என்னை மடச்சி என்று சொல்லலாம் என அவனுடன் சண்டையிட வாசுகி ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள் .அப்போது ராதாவை திரும்பிப் பார்த்தவள் தேவராஜன் சொன்ன மக்கு என்ற சொல்லை அவள் கொண்டாட விரும்பிக் கொண்டிருப்பதை உணர்ந்தவள் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டாள்.  வசவு வாங்கிக்கொண்டு இவளுக்கென்ன இத்தனை  பரவசம்  ? அப்போது  அவளுக்கு இருந்த எரிச்சலுக்கு ராதாவிற்கு ரெண்டு கொட்டுக்கள் கொடுத்திருப்பாள் .ஆனால் துவண்டு போய் படுக்கையில் கிடந்து கொண்டு ராதா அவளது எண்ணங்களை முறியடித்து கொண்டிருந்தாள்.

” நான் காலேஜில் கடைசி வருடம் படிப்பில் இருந்த போது எனக்கு இருந்த அரியர் எத்தனை தெரியுமா ?  12 . கடைசி செமஸ்டரில் உட்கார்ந்து படித்து அந்த எல்லாவற்றையும் கிளியர் செய்தேன் .இது எல்லாம் கல்லூரி வாழ்க்கையில் மிகவும் சாதாரணமான ஒன்று .இதற்காகவெல்லாம் விலைமதிப்பில்லாத நம் உயிரை கொடுக்க நினைக்கலாமா ? ” தேவராஜனின் குரல் மென்மையும் கண்டிப்பும் கலந்து கேட்பவரை மெஸ்மெரிக்கும் வகையில் இருந்தது .அவனது குரலுக்கு எளிதாக வயப்பட்டு தலையசைத்தாள் ராதி .




”  தப்புதான். இனி இது போல் செய்ய மாட்டேன் ” சத்தியம் போல் உறுதி கொடுத்தாள்.

” சரி நாம் கிளம்பலாம் ” வாசுகிக்கு ஏனோ அங்கே இருக்க பிடிக்காமல் போக  தேவராஜனை  முணுமுணுத்து அழைத்தாள் .

”  நாங்கள் வருகிறோம் ”  தேவராஜன் உடனே கைகுவித்து கிளம்பி விட்டான் .ராதாவின் பார்வை பின் தொடர்ந்த அவனது முதுகை தன் உருவத்தால் மறைத்தபடி நடந்தாள் வாசுகி.

எப்போது …? என இதழ் குவித்து அவளிடம் ஜாடை கேட்டுக் கொண்டிருந்த தேவராஜனுடனான  பைக் பயணம் நினைத்த உடனேயே வாசுகியின் உள்ளத்தில் கிளர்ச்சியை பரப்பிக் கொண்டிருந்தது.

வார்டை விட்டு வெளியே வந்தவர்கள் எதிரே வந்து கொண்டிருந்த ஜெயக்குமாரை பார்த்ததும் திகைத்து நின்றனர் .அவர்களைவிட ஜெயக்குமாருக்கு மிகுந்த அதிர்ச்சி.




What’s your Reaction?
+1
24
+1
16
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!