Serial Stories vana malai pol oru kathal

வானமழை போல் ஒரு காதல்-6

6

கண் முன்னால் விசும்பியபடி உட்கார்ந்திருந்த வாசுகியை எரிச்சலாக பார்த்தான் தேவராஜன்.

 

” இங்கே பார் வந்து பத்து நிமிடங்கள் ஆயிற்று .இன்னமும் அழுது கொண்டுதான் இருக்கிறாய் .வந்த விஷயத்தை சொல்லி முடித்தாயானால் நான் போய்க் கொண்டே இருப்பேன் ” 

 

ஒட்டுதலற்ற அவனது இந்தப் பேச்சில் வாசுகியின் இதயம் இன்னமும் வலித்தது .காயம்பட்ட வலியுடன் அவள் கண்களை உயர்த்தி அவனைப் பார்க்க அந்தப் பார்வையில் அவன் மனம் கொஞ்சம் நெகிழ்ந்தது.




 

“இங்கே பார் வாசுகி கடைக்கு புதியதாக மரங்கள் வந்து இறங்கிக் கொண்டிருக்கின்றன. நான் அருகில் இருந்து பார்த்து இறக்க வேண்டும் .இல்லையென்றால் ஏதாவது தகிடுதத்தம் பண்ணி விடுவார்கள் .நீ போன் செய்ததால் அவசரமாக ஓடி வந்தேன் .சீக்கிரமாக விஷயத்தைச் சொல் ” தாழ்ந்த குரலில் கேட்டான் .இப்போது அவன் குரலில் கொஞ்சம் மென்மை சேர்ந்து இருந்தது.

 

” அ…அது…வ….வந்து …”  வாசுகி மெல்லிய தயக்கத்தோடு ஆரம்பிக்க கையை உயர்த்தி தடுத்தான்.

 

”  ஒழுங்காக பேச வேண்டும் .உருப்படியில்லாத விஷயம் எதையாவது உளறினாய் என்றால் நான் பாட்டுக்கு எழுந்து போய்க் கொண்டே இருப்பேன் ” விரலை ஆட்டி கண்டிப்பாக பேசினான்.

 

அவர்கள் மீண்டும் அந்த தெருமுனை பிள்ளையார் கோயிலில் தான் வந்து அமர்ந்து கொண்டிருந்தனர் .வாசுகி போன் செய்ததும் தேவராஜன் அங்கே வந்து விட்டிருந்தான்.

 

” நீங்கள் என்னுடன் கொஞ்சம் வெளியே வர முடியுமா ? ” வாசுகி தயங்கிக் கொண்டே கேட்டாள்.

 

” எங்கே ? ” 

 

” ஹாஸ்பிடலுக்கு ” 

 

” எந்த ஹாஸ்பிட்டலுக்கு  ? எதற்கு  ? யாருக்கு என்ன ? ” 

 

” நம் ஊர் கவர்மெண்ட் ஹாஸ்பிடலுக்கு .அங்கே என் தோழி ராதா அட்மிட்  செய்யப்பட்டிருக்கிறாள் .அவளைப் போய் பார்க்க வேண்டும் ” 

 

” அவளுக்கு உடம்பிற்கு என்ன ? ” 

 

” வ…வந்து அவள் விஷம் குடித்து விட்டாள்” 

 

” என்ன…? ”  தேவராஜனிடம் மெல்லிய அதிர்ச்சி . ” ஏன் அவர்கள் வீட்டில் எதுவும் பிரச்சனையா  ? ” 

 

” இல்லை ” என்று கூறி நிறுத்திய வாசுகி தயங்கி பின் மீண்டும் மெல்ல சொன்னாள்  ” காதல் தோல்வி ” .

 

” ஓ  சரி .இப்போது நீ அவளைப் போய்ப் பார்த்து ஆறுதல் சொல்வதற்கு நான் உன்னுடன் வர வேண்டுமா ? ” 

 

” இல்லை நீங்களே அவளைப் பார்த்து பேச வரவேண்டும் ” 

 

” நானா…?  நான் எதற்கு…? ” 

 

” ஏ…ஏனென்றால்…அ… அவள் உங்களைத்தான் காதலித்துக் கொண்டிருக்கிறாள் ” 

 

” என்ன …? ” தேவராஜனின் அதிர்ச்சி துல்லியமாக தெரிந்தது.

 

 

” ஆமாம் கடந்த ஒரு மாதமாக அவள் உங்களை தான் காதலித்து கொண்டிருக்கிறாள். நாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக நேற்றுதான் உறுதியாக என் தோழிகளிடம் சொன்னேன் . இன்று அவள் மனம் உடைந்து போய்….” 

 

” விஷத்தை குடித்து விட்டாளாக்கும்  ? ” தேவராஜனின் குரலில் நக்கல் இருந்தது

 




ஒரு பெண்ணின் உயிர் விஷயம் இதில் இவனுக்கு என்ன இத்தனை அலட்சியம் என வாசுகிக்கு கோபம் வந்தது.

 

” ஒரு உயிர் போய்க் கொண்டிருக்கிறது .விளையாடாதீர்கள் ” கொஞ்சம் கோபமாக பேசினாள் .

 

தேவராஜன் கைகளை கன்னத்தில் தாங்கிக்கொண்டு அவளை கூர்ந்து பார்த்தான் . ” உன்னை போல ஒரு பேக்கை  நான் பார்த்ததே இல்லைடி ” 

 

வாசுகிக்குள் கோபம் திரியில் பற்ற வைத்த நெருப்பு போல் சுறுசுறுவென்று பரவியது . ” என்னை பார்த்தால் உங்களுக்கு எப்படி தெரிகிறது ?  லூசு போல் தெரிகிறேனா ? ” 

 

” சந்தேகமே இல்லை. அப்படியே தான் .எவளோ ஒரு தோழி விஷம் குடித்து விட்டாள் என்று நம் திருமணத்தை நிறுத்தச் சொன்னாயாக்கும் ? ” 

 

ஆமாம் அப்படித்தான் ராதாவின் நிலையைக் கேட்டதும் வாசுகி முதலில் போன் செய்தது தேவராஜனுக்கு தான் .அவன் போனை எடுத்த நிமிடமே ”  நமது திருமண ஏற்பாட்டை நிறுத்தி விடுங்கள் ” என்று தான் பேசினாள் .அதில் கோபமுற்றவன்தான் இங்கே அவளை அழைத்து வைத்து பேசிக்கொண்டிருக்கிறான்.

 

” சரி வா நாம் போய் உன்னுடைய அந்த ஆருயிர் தோழியை பார்த்து விட்டு வரலாம் ” 

 

” அவள் என்னுடைய சும்மா தோழி .அவ்வளவுதான் ஆருயிர் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது முனுமுனுத்தபடி ” தேவராஜனின் பைக்கில் ஏறிக் கொண்டாள் வாசுகி.

 

” அந்த சும்மா தோழிக்காக தானே நீ உன் திருமணத்தை நிறுத்தப்போவதாக பேசிக் கொண்டிருக்கிறாய் ? ” 

 

” இல்லை நான் அங்கே ராதாவை பார்க்கவில்லை .ஒரு உயிரை பார்க்கிறேன் .அவ்வளவுதான் ” .தேவராஜன் ஆக்சிலேட்டரை முறுக்கியதில் அவனது கோபம் தெரிந்தது.

 

ஆஸ்பத்திரி வாசலில் நின்றிருந்த சரண்யாவும் சாரதாவும் தேவராஜனுடன் பைக்கில் வந்து இறங்கிய வாசுகியை வியப்பாக பார்த்தனர்.

 

” ராதா எப்படி இருக்கிறாள் ? ” வாசுகி பரபரப்பாக விசாரிக்க ” உயிருக்கு ஒன்றும் ஆபத்து இல்லை என்று டாக்டர் சொல்லி விட்டார் .இப்போது போலீஸ் வந்திருக்கிறது .அவளிடம் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள் ” 

 

தோழிகள் கொடுத்த தகவலை கேட்டபடி தேவராஜன் ஆஸ்பத்திரிக்குள் சென்றான். போலீசிடம் ராதா என்ன சொல்வாள் … இதோ இவன் தான் காரணம் என்று கைகாட்டி விடுவாளோ இந்த எண்ணம் வந்தவுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்த தோழிகளை கவனிக்காமல் வேகமாக ஆஸ்பத்திரிக்குள் ஓடினாள் வாசுகி.

 

ராதா இருந்த வார்டுக்குள் நுழைய போன தேவராஜனின் கையை பற்றி இழுத்தாள் .” வேண்டாம் தேவ் .நீங்கள் இப்போது உள்ளே போகாதீர்கள் ” 

 

” ஏன் ? ”  தேவராஜனின் முகத்தில் புதிதாய் ஒரு மின்னல் குடி வந்திருந்தது .அவனது பார்வை தன் கைப்பற்றியிருந்த வாசுகியின் கையின் மேல் இருந்தது.

 

” உள்ளே போலீஸ் இருக்கிறார்கள் .அவள் உங்களைப் பற்றி ஏதாவது சொல்லிவிட்டால்…” 

 

” முட்டாள் தப்பே செய்யாத என்னை போலீசை பார்த்து பயந்து ஒளிந்து கொள்ள சொல்கிறாயா ? “

 

” உங்கள் வீர தீர  பராக்கிரமத்தை எல்லாம் பிறகு காட்டிக்கொள்ளலாம் .இப்போது இந்தப் பக்கம் வாருங்கள் ” அவனை கைப்பிடியாக இழுத்து கொண்டு வார்டின் பக்கவாட்டிற்கு  இழுத்து சென்றாள். அவர்கள் ஒதுங்கிய இடம் ராதா படுத்திருந்த கட்டிலுக்கு நேரான ஜன்னலாக இருக்க அதன் வழியாக உள்ளே நடந்து கொண்டிருப்பதை அவளால் தெளிவாக பார்க்க முடிந்தது

 

 

” என்னம்மா வேறு எதுவும் பிரச்சனை இல்லையே ?  இது தானே காரணம்  ? ” போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாவிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்.

 

” வேறு எந்த பிரச்சனையும் இல்லை சார். இது எனக்கு காலேஜில் பைனல் இயர் .அரியர்ஸ் நிறைய வைத்துவிட்டேன். எப்படி எல்லாவற்றையும் கிளியர் பண்ண போகிறாய் என்று நேற்று அம்மா கொஞ்சம் திட்டினார்கள் .ஏதோ கோபத்தில் விஷத்தை குடித்து விட்டேன்  .இப்போது அந்த முட்டாள் தனத்திற்காக வருத்தப்படுகிறேன்  ” பலவீனமான குரலில் ராதா போலீசிடம்  ஒப்புதல் கொடுத்து கொண்டிருந்தாள்.

 

வாசுகி அவளது விளக்கத்தை ஆவென பார்த்துக்கொண்டிருக்க தேவராஜன் அவள் முகத்தின் முன் சொடக்கிட்டான். ” உன் காதுகளில் எதுவும் பிரச்சனை கிடையாது தானே ? ”  என சந்தேகம் கேட்டான்.

 

திரும்பி முறைத்தவளிடம் “:உன் தோழிக்கு எத்தனை அரியர்ஸ் ? ” என்றான்

 




வாசுகி விழி மூடி யோசித்து மனதுக்குள் விரல் விட்டு எண்ணி ” எட்டு என்று நினைக்கிறேன். ஆனால் இதற்காகவெல்லாம் இப்படி  முடிவெடுப்பவள் இல்லை அவள் ”  என்றாள்  அவசரமாக.

 

” சரி வா அதையும் நேரடியாக அவளிடமே கேட்டு விடலாம்”  போலீஸ்காரர்கள் கிளம்பியிருக்க தேவராஜன் 

ஜன்னலிலிருந்து நகர்ந்தான்.

 

வார்டுக்குள் நுழையும் முன் வாசுகியின் கையைப்பற்றி நிறுத்தினான் .தன் மணிக்கட்டை அழுத்தமாக பற்றியிருந்த தேவராஜனின் தனக்கு ஏதோ செய்தி சொல்வதை உணர்ந்து அவனை நிமிர்ந்து பார்த்தாள் வாசுகி. உன்னை… உன் கையை தொட மாட்டேன் என அவனுக்கு சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்த தன்னை நினைவு வந்தது அவளுக்கு .சற்று முன்பு தான் அவன் கை தொட்டு இழுத்ததும் இப்போது அவன் இயல்பாக தன் கை பற்றிருப்பதும் அவளுள் ஆல வட்டமாக சுற்றின

 

” உன்னுடைய நினைப்பு தவறு என நிரூபணம் ஆகி விட்டால் என்ன செய்வாய் ? ” தேவராஜனின் இந்த கேள்வியில் குழம்பினாள்.

 

” என்ன செய்வேன் ? மிகவும் சந்தோஷப்படுவேன்… ” 

 

” பிறகு…? ” 

 

” பிறகு நம் திருமண ஏற்பாடுகளை தொடர சொல்வேன் ”  சொல்லிவிட்டு அப்போதுதான் தன் வாய் வழியாக திருமணத்தை நடத்தச் சொல்லி இருக்கிறோம் என உணர்ந்து உதட்டை கடித்தாள்.

 

அதனையே உணர்ந்த தேவராஜனின் விழிகள் மின்ன”  நீயே மறுப்பு சொன்னாலும் திருமண ஏற்பாடுகள் நிற்கப்போவதில்லை .அப்புறம்… ”  என்றான்

 

“இன்னும் என்ன அப்புறம் ?  எனக்கு புரியவில்லை ” 

 

” என் வேலைகளை எல்லாம் போட்டுவிட்டு ஒரு உதவாக்கரை விஷயத்திற்காக உன் பின்னால் இங்கே ஆஸ்பத்திரியில் வந்து நின்று கொண்டிருக்கிறேன் .இதற்கு நீ என்ன செய்யப் போகிறாய் வட்டி கடைக்காரன் போல் பேரம் பேசினான் .

 

” என்ன செய்யவேண்டும் ? சாரி கேட்க வேண்டுமா ? ” 

 

” ஆமாம் நான் சொல்லும் விதத்தில்…” 

 

” அது எந்த விதம் ? ”  கேட்கும்போதே வாசுகியின் மனது மத்தளம் கொட்ட ஆரம்பித்தது .இதோ இவனது பார்வை சரியில்லை… குழலூதும் மாயக் கண்ணனின் சாயலை அவள் அப்போது தேவராஜனின் முகத்தில் பார்த்தாள்.

 

அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தேவராஜன் தன் உதட்டை குவித்தான். ” ஒரு முத்தம் ” ஒற்றை விரலை நீட்டி காட்டி சொன்னான் .பிறகு அந்த விரலை தன் உதடுகள் மேல் வைத்தான்”  இங்கே  ” என்று இடம் சுட்டினான்.

 

மின்னல் ஒன்று தன்னுள் ஊடுருவியது போன்ற ஒரு வகை புது உணர்வில் சிலிர்த்து தலை குனிந்து நின்றாள் வாசுகி.

 

 




 

 

 

  

What’s your Reaction?
+1
27
+1
11
+1
3
+1
1
+1
2
+1
1
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!