Serial Stories vana malai pol oru kathal

வானமழை போல் ஒரு காதல் – 3

 

 

 3

நெற்றியில் பட்டையாக ஒரு விரல் அளவுக்கு நீளமாக திருநீறு தெரிய , சந்தன நிற காட்டன் சேலையில் சாத்வீகமாக தெரிந்தார் அந்த அம்மா .” என்ன படிக்கிறாய்மா ? ” மென்மையாய் பஞ்சு பொதிகள் வருடியது போல் இருந்தது அவரது பெண்மை தன குரல். அவர் பெயர் கூட மங்கைதான்.

 

முகத்தில் அடித்தது போல் பதில் சொல்ல வேண்டும் என்று நெட்டுருப் போட்டு வைத்திருந்தவள் தான். இந்த மென் குரலுக்கு தன்னை அறியாமல் கட்டுப்பட்டாள் .”  பிஎஸ்சி பைனல் இயர் ” 

 

” இவளும் உன் காலேஜ் தான்.”  அருகில் இருந்த மகளை காட்டினார். அவள் ஒடிசலாக உயரமாக இருந்தாள் .

 

” உங்களை காலேஜில் பார்த்திருக்கிறேன் .எனக்கு ஒரு வருடம் சீனியர் நீங்கள் .நீங்கள் பாட்டனி தானே ? நான் மேத்ஸ் . என் பெயர் திலகா ” தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள் அந்தப் பெண்.




 

அவளைப் பார்த்த நினைவு வாசுகிக்கு இல்லாததால் வெறுமனே தலையசைத்து வைத்தாள்.

 

” சின்னவனுக்கு லீவு கிடைக்கவில்லை .அதனால் அவன் வரவில்லை ” எந்த சின்னவன் அவன் ? வாசுகியின் மனது படபடத்தது.

 

உள்ளே இவர்கள் வந்து அமர்ந்தது முதல் சுற்றும் முற்றும் ஒரு ஆண்பிள்ளையை தேடிக் கொண்டிருந்தாள் அவள் .பெண் பார்க்க வருவதாக தானே அப்பா சொன்னார் .பெண் என்பது ஒரு ஆண் தானே பார்க்க வேண்டும் ? இப்படித்தான் அவளுக்கு குழப்பம் .சாதாரண பெண் பார்க்கும் படலத்திற்கு உரிய எந்த அறிகுறியும் இல்லாமல் ஏதோ ஒரு உறவினர் வருகை போல் இயல்பாக நிகழ்ந்து கொண்டிருந்தது அந்த நிகழ்வு.

 

” மகனுக்கு பிடித்துவிட்டது .எங்களுக்கு வேறு என்ன வேண்டும் ? உங்கள் மகளுக்கு நீங்கள் செய்ய நினைப்பதை செய்யுங்கள் .மற்ற விபரங்கள் எல்லாம் மகனிடமே பேசிக் கொள்ளுங்கள் .நாங்கள் வருகிறோம் ”  எழுந்து நின்று கைகளைக் குவித்தார் மங்கை.

 

” அதெப்படி முகத்தைக் கூட காட்டாத ஒருவனை என்னால் திருமணம் செய்து கொள்ள முடியும் ? ” தனக்கு கிடைத்த வாய்ப்பை விடாமல் பயன்படுத்தினாள் வாசுகி.

 

” அதெல்லாம் உனக்கு தெரிந்தவர்தான் “ராஜாத்தி அலட்சியமாக பதில் சொன்னாள்.

 

” அப்படி எவனையும் எனக்கு தெரியாது .அப்படியே தெரிந்தாலும் எனக்கு அவனை பிடிக்காது. நான் கல்யாணம் எல்லாம் பண்ணிக் கொள்ள மாட்டேன் ” என்று சூளுரைத்தவள் தலையில் கொட்டு வாங்கினாள்.

 

” என்ன வாய்டி உனக்கு ? இன்னும் சிறுபிள்ளையென்ற நினைப்பா உனக்கு ?  ஒழுங்காக அவரை மரியாதையாக பேசு ” 

 

” என்னது ” ர் ” ரா ?  அந்த அளவு போயாச்சா ?  முடியாது .அவன்… இவன்… எவன்… என  அவள் அடுக்க அடுக்க தலையில் கொட்டு வாங்கினாள் தாயிடம் .கொட்டு வாங்கும் சகோதரியை ஓடிக்கொண்டிருந்த டிவியை ஆப் செய்து விட்டு கன்னத்தில் கை தாங்கியபடி சுவாரசியமாக ரசித்தாள் மாலினி .வாங்கிக் கொண்டிருந்த கொட்டுகளை விட இது தான் வாசுகிக்கு அதிகமாக வலித்தது.

 

” அடியே உனக்கு நாளைக்கு  டெஸ்ட் ஆரம்பமாகிறதே ? போடி போய் படி …” தாயிடம் வாங்கிய கொட்டுக்களை தங்கைக்கு திருப்பினாள்.

 

” போகிறேனே அதற்கு முன்னால் ஒன்றே ஒன்றை மட்டும் எனக்கு சொல்லி விடுங்கள் .இந்தக் கல்யாணம் நடக்குமா நடக்காதா ? “கேட்டுவிட்டு ராஜாத்தியிடம் ஒரு இடியை கன்னத்தில் வாங்கிக்கொண்டாள் மாலினி.

 

” அச்சாணியமாக பேசாதேடி .ஒரு நல்ல காரியம் நடக்கும் போது இப்படியா பேசுவாய் ? இந்த கல்யாணம் நிச்சயம் நடக்கும் நடக்கும் நடக்கும் ” மூத்த மகளுக்கும் சேர்த்தே சொன்னாள் ராஜாத்தி.

 

” அப்பாடா இந்த வீட்டில் எனக்கு போட்டிக்கு இருந்த ஒரே  ஒருத்தியும் இடத்தை காலி பண்ணுகிறாள் . சீக்கிரமாக இவளை இங்கிருந்து  காலி பண்ணுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் ” நிம்மதி மூச்சுடன் மாலினி எழுந்து போக வாசுகிக்கு  ஆத்திரமான ஆத்திரம் .இவர்கள் இருவருமாக இப்போதே அவளை வெளியே தள்ளிவிடுவார்கள் போலவே…

 

ஜெயக்குமார் முதல் நாள் அவளுக்கு பெண் பார்க்க வரும் தகவல் சொல்லிய நேரத்திலிருந்தே இந்த திருமண ஏற்பாடுகளை மறுத்து கொண்டிருக்கிறாள் அவள் .”  நான் மாஸ்டர் டிகிரி படிக்க போகிறேன் .ப்ளீஸ்பா இன்னும் இரண்டு வருடங்கள் போகட்டும் ” கெஞ்சினாள்.

 

ஜெயக்குமார் அசையவில்லை .” நான் மாப்பிள்ளையிடம் சொல்லிவிடுகிறேன் .கல்யாணம் பண்ணிக் கொண்டு மேலே படி…” 

 

எவன் இவருக்கு மாப்பிள்ளை ..? முகத்தையே காட்டாமல் தாய் தந்தையை மட்டுமே அனுப்பி வைத்தவனை தனக்கு பிடிக்கவில்லை என்றாள்.

 

” அதெல்லாம் ரெண்டு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டீர்கள் .பேசிக்கொண்டீர்கள் .உங்கள் இருவருக்கும் பிடித்தும் போய்விட்டது .பிறகு இது என்ன வெட்டி பிடிவாதம் ? அதட்டிய தந்தையை குழப்பமாக பார்த்தாள் .தானே அறியாமல் இதுவெல்லாம் எப்போது நடந்தது. 

 

” தேவராஜ் தம்பியை நம் வீட்டில் வைத்து நீ பார்த்தாயே …? பிறகும் அவரது கடைக்கு போய் அவருடன் ரொம்ப நேரம் பேச கூட செய்தாயே ? அவர் தொழிலை கூட உனக்கு அன்று முழுவதும் சுற்றிக் காட்டி விட்டேன் .நீயும் அவரும் தெளிவாக பேசியும் கொண்டீர்கள் .இன்னமும் சம்பிரதாயமாக எதற்கு வீட்டிற்கு என்றுவிட்டார் மாப்பிள்ளை .இதற்குமேல் இன்னும் என்ன வேண்டும் உனக்கு ? ” 

 




வாசுகி இமைக்கவும் மறந்து அப்படியே நின்று விட்டாள் .அப்படியானால் அந்த தேவராஜன் தான் மாப்பிள்ளையா  ? இன்னென்று சொல்ல முடியாத ஒரு உணர்வு அவள் நரம்புகளில்.

 

” என்னடி சொல்ற உண்மையாகவா ? ” தோழிகள் நால்வரும் கன்னத்தில் கை தாங்கியபடி வட்டமாக கல்லூரியில் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து இருந்தனர்.

 

” இங்கே படிப்பு முடிந்ததும் நாம் நால்வரும் மேற்படிப்பிற்கு ஒன்றுபோல் சென்னை போகவேண்டும் என்று பேசி வைத்திருந்தோமே ?  இப்போது இப்படி சொல்கிறாயே ? ” 

 

” எனக்கு மட்டும் ஆசையா என்ன ? என் அப்பா எல்லா ஏற்பாடுகளையும் எனக்கு தெரியாமலேயே நடத்தி முடித்துவிட்டு உனக்குத்தான் தெரியுமே என்கிறார் .நான் என்ன செய்ய ? ” 

 

” அப்படி எந்த தேவ குமாரனையடி

 உங்கள் அப்பா செலக்ட் பண்ணி இருக்கிறார் ? ” 

 

” தேவகுமாரன் இல்லைடி .அவன்  தேவராஜன்…அது தாண்டி அன்று தியேட்டரில் நமக்கு டிக்கெட் எடுத்து கொடுத்தானே அவன் தான் ” 

 

உடனே ”  இல்லை… இல்லை…”  எனும் கத்தல் ராதாவிடம் இருந்து வர மற்றவர்கள் அவளை வினோதமாகப் பார்த்தனர். ”  எதுக்குடி இப்படி கத்துற ? ” 

 

 

” வேணாம்டி வாசுகி .எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தி விடுடி ” 

 

” ஏன்டி ? “

 

” அது வந்து… அவரைத் தான் நான் ஒருவாரமாக காதலித்துக் கொண்டிருக்கிறேன் ”  சுடிதார் ஷாலின்  முனையை முறுக்கிக்கொண்டு ராதா அநியாயத்திற்கு வெட்கப்பட தோழிகள் மூவரும் சேர்ந்து அவள் முதுகில் மொத்தினர்.

 

” கொழுப்புடி உனக்கு ?  அப்படி எவனையாவது பார்த்தவுடன் உனக்கு லவ் வந்துவிடுமா ? ” 

 

” ஏய் அவரை நீங்கள் அன்று தியேட்டரில் அவசரத்தில் சரியாக பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். அன்று பார்த்தோமே ஒரு படம் அந்த ஹீரோவை விட இவர்  எவ்வளவோ பெட்டர் .அன்று கூட ஸ்கிரீனில் அந்த ஹீரோவிற்கு பதில் இவர்தான் என் கண்களுக்குத் தெரிந்து கொண்டிருந்தார் . நான் படம் முழுவதும் அவர் கூடதான் டூயட் பாடிக்கொண்டு …” கனவு மின்ன பேசிக் கொண்டிருந்தவள் சட்டென நிறுத்தி, ” 

டீ வாசுகி எப்படியாவது உன் வீட்டில் பேசி அவரை எனக்கு விட்டுக் கொடுத்துவிடடி ” என கெஞ்சுதலாக முடித்தாள் .

 

வாசுகிக்கு வந்த கோபத்திற்கு அப்படியே அவள் கழுத்தை நெரித்து சாகடிக்கும் ஆசை வந்தது ” ஏன்டி  அமுக்கினி  கழுதை மாதிரி இருந்துகிட்டு என்னவெல்லாம் பண்ணிருக்க நீ ? ” 

 

” இதென்னடி வம்பாக இருக்கிறது ?இந்த இன்டர்நெட் யுகத்தில் ஒரு சுத்தமான கன்னிப்பெண் அவள் மனதிற்கு பிடித்த ஒரு வலிமையான ஆணை காதலிப்பது தப்பா ? ”  நீதி கேட்டுப் போராடும் எண்ணத்திற்கு வந்தாள் ராதா.

 

” ஏன்டி சினிமா டிக்கெட் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தவன் எல்லாம் உனக்கு ஹீரோவாகிவிட்டானா ? வாசுகி அவள் காதை பிடித்து திருகினாள்.

 

” சினிமா டிக்கெட் மட்டுமா எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார் ?இன்டர்வெல்லில் நமக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார் .பாப்கார்ன் வாங்கி கொண்டு வந்து கொடுத்தார் . நம் பின் வரிசையிலேயே நமக்கு காவலாக உட்கார்ந்திருந்தார் ” ராதா அடுக்க தோழிகள் திகைத்தனர்.

 

பாப்கார்ன்  ஐஸ்கிரீம் ஓகே .இடைவேளையின் போது வெளியே போய் இவற்றை வாங்க தயங்கிக் கொண்டு இருந்தவர்களை அணுகி தானே அவர்களுக்கு தேவையானவற்றை  வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான் .ஆனால் பின்  வரிசையில் தான் அவன் அமர்ந்திருந்தான் என்பதனை மற்ற மூவரும் அறியவில்லை .இதோ இவள் மட்டும்தான் கவனித்திருக்கிறாள்.

 

” நான் படத்தை விட அவனை மட்டும் தானடி கவனித்துக் கொண்டிருந்தேன்  ” ராதா சொல்ல மற்றவர்கள் ஆச்சரியப்பட்டனர்.

 

” எங்களிடம் அவனைப் பற்றி நீ ஒரு வார்த்தை சொல்லவில்லையோ ?”

 

” நான்தான் அவனை காதலித்துக் கொண்டிருந்தேனே..? பிறகு எப்படி உங்களிடம் சொல்லுவேன் ?  ரகசியமாக என் காதலனை ரசித்துக்கொண்டிருந்தேன் ” சொல்லி முடித்ததும் மீண்டும் தோழிகளிடம் அடி வாங்கினாள் ராதா

 

 

” கொன்னுடுவேன்டி கண்டதும் காதல்… அப்படி இப்படின்னு லூசு மாதிரி பேசிக் கொண்டிருந்தால் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை என்று உன்னை நம் காலேஜுக்கு பின்னால் இருக்கும் மொட்டைக் கிணற்றில் தள்ளி விட்டு விடுவேன் ” சாரதா எச்சரித்தாள்.

 




” இவள் கிடக்குறாடி லூசு. வாசுகி நீ அவரையே கல்யாணம் பண்ணிக்கோ ” சரண்யா பச்சைக் கொடி காட்டினாள்.

 

“என்ன …? இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன் “கத்திய ராதாவை மற்ற இருவரும் சேர்ந்து தரையில் அழுத்தினர்.

 

” வாசுகி உன் அப்பா சொன்னால் சரியாகத்தான் இருக்கும். நீ குழப்பங்கள் எதுவும் இல்லாமல் கல்யாணத்திற்கு சரி சொல்லு ” வாசுகி தலையசைத்து மறுத்தாள்.

 

” இல்லையடி நான் மேலே படிக்க வேண்டும். இப்போதே சமையல் , குழந்தை எனும்  இந்த குடும்பச் சிறையில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. இதனை  அவனிடமே பேசப்போகிறேன் ” உறுதி தெறிக்க பேசிய அவளது குரலில் அங்கே மகிழ்ந்தவள் ராதா ஒருத்தி மட்டுமே.

 




What’s your Reaction?
+1
21
+1
11
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!