vana malai pol oru kathal

வானமழை போல் ஒரு காதல் – 12

12

 

 

 

கொத்தாய் படுக்கையில் கிடந்த மல்லிகை மலர்களோடு சந்தனமாய் மணத்துக் கொண்டிருந்தது வாழைப்பழத்தில் குத்தி வைக்கப்பட்டிருந்த பத்திக்குச்சிகள் .மேலும் அறைக்குள் பன்னீர் தெளித்து இருப்பார்கள் போலும். அந்த மணம்  மனதை மயக்கும் விதத்தில் அறையை சூழ்ந்திருந்தது .வாசுகி அறையில் நடுவில் வந்து நின்று சுற்றிலும் பார்த்தாள் .தம்பதிகளுக்கு ஏற்ற கச்சிதமான சிறிய அறை.

 




திருமணம் முடிந்து கணவனுடன் முதல் நாள் வாழ்வை தொடங்க இருக்கும் பெண்ணின் மனதை மகிழ வைக்கும் சூழலுடன் இருந்த அந்த அறையில் வாசுகிக்கு எந்த குறைபாடும் இல்லை. ஆனால் இதோ இப்படி முதலிரவு அறைக்குள் அவள் மட்டுமாக தனியாக நின்று கொண்டிருப்பது தான் மனதை அரித்துக் கொண்டிருந்தது.

 

” சாமி கும்பிட்டு திருநீறு வைத்துக்கொண்டு அறைக்குள் போங்க ”  என்று மங்கை சொல்ல ”  முதலில் நீங்கள் ஆசீர்வாதம் செய்யுங்கள் அம்மா ” என்று அன்னையின் கால் பணிந்தான் தேவராஜன் .வாசுகியும் குனிய  இருவரையும் அணைத்து எழுப்பிய மங்கை ” மனையும் மக்களுமாக நிறைவாக வாழுங்கள் ”  என்று வாழ்த்தினாள் .

 

வாசுகி மாமியாரின் முகத்தினை கூர்ந்து பார்க்க மங்கை அவள் பார்வையை சந்திக்காது இருவருக்கும் நெற்றியில் திருநீறு பூசி விட்டாள்.கௌதம் நண்பர்களுடன் சினிமாவிற்கு சென்றிருக்க திலகாவை முதலிலேயே படுக்கச் சொல்லி அனுப்பிவிட்டு இருந்தாள் மங்கை .” மாடிக்கு போங்க நான் போய் படுக்கிறேன் ”  அவள் அறையை நோக்கி சென்றாள்.

 

அப்போது தேவராஜனின் போன் ஒலிக்க அதனை எடுத்து பேசியவன் ”  அப்படியா …” என எதிர்முனை பேச்சை கேட்டபடி சோபாவில் அமர்ந்தான் .மங்கை திரும்பி வந்து ” என்னப்பா ? ” என கேட்க  ” ஆடிட்டிங் பைலை எடுத்துக்கொண்டு வாங்கம்மா .ஆடிட்டர் சில விவரங்கள் கேட்கிறார் ” என்றான்.

 

மங்கை ஏதோ பைலை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கஅம்மாவும் மகனுமாக சோபாவில் உட்கார்ந்து கொண்டு ஏதோ கணக்கு பார்க்க ஆரம்பித்தனர். வாசுகி விழித்தபடி அதே இடத்தில் நின்றிருந்தாள் .சிறிது நேரம் கழித்து அவளை உணர்ந்த தேவராஜன் ” நீ மாடிக்கு போய் படு வாசகி .நான் கொஞ்ச நேரத்தில் வந்து விடுகிறேன் ” என்று சொல்ல அவள் வேகமாக மாடி ஏறி வந்து விட்டாள் .

 




மலர்கள் கொட்டிக்கிடந்த கட்டிலில் அமர பிடிக்காமல் ஓரமாக கிடந்த மர நாற்காலியில் அமர்ந்து கொண்டாள் வாசுகி .அவள் மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. முதலிரவு அறைக்குள் போகும் நேரத்தில் அப்படி இவனுக்கு என்ன வேலை வந்துவிட்டதுஅவன் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அவர்களுக்கான தனிமை இந்த நேரம் .ஆனாலும் அதையும் தாண்டி இந்த தொழில் பேச்சு அவனுக்கு முக்கியமாக போனதோஇதற்கு அவன் அம்மாவும்  ஒத்துக்கொள்கிறார்களே  உறுமி தள்ளியது அவளது மனம்.

 

தேவராஜன் இன்று இரவு அறைக்குள் வரவே போவதில்லை என்றே அவள் மனம் உறுதியாக நினைக்க தொடங்கிய மறுநிமிடம் கண்கள் சொருகி தூக்கம் வர ஆரம்பித்தது அவளுக்கு .மெல்ல மெல்ல தூக்கத்தில் போய்க் கொண்டிருந்தவளின்  உச்சந்தலையில் மென்மையாய் பதிந்தன இரு இதழ்கள் .தன்னவனின் அருகாமையை ஸ்பரிசத்தை உணர்ந்தும் விழி திறக்க வில்லை அவள் .கண்களை இறுக்கிக்கொண்டாள் .இப்போது அவன் இதழ்கள் கண்களின் மேல் பதிந்தன.

 

” என்ன அழகான இமையடி உனக்கு ” நீண்டு வளர்ந்து நிமிர்ந்து நின்ற இமை மயிர்களில் அவன் நாக்கு கோலமிட்டது. சிலிர்த்த சிதறிய தன் உணர்வுகளில் உடல் குறுகியவளை  மொத்தமாக தன் கைகளுக்குள் இழுத்து இறுக்கி அணைத்தான் அவன் .

 

அதற்குள் என்ன தூக்கம் ? “காதுக்குள் கிசுகிசுத்தான்.

 

” உங்களுக்குத்தான் வேலை இருக்கிறதேபோங்க போய் வேலையை பாருங்க ” செல்ல ஊடலுடன் அவன்  மார்பை பிடித்து தள்ளினாள் அவள்இடையில் கை கோர்த்து அவளை நாற்காலியிலிருந்து தூக்கி நிறுத்தியவன் ” எத்தனை நாட்கள் என்னை ஏங்க வைத்தாய்பைத்தியம் மாதிரி உன் பின்னால் சுற்ற வைத்தாய்  ? அதற்கெல்லாம் உன்னிடம் வகை வகையாக வாங்க வேண்டாமாஅவள் கழுத்தில் அழுத்தமாய் கோர்த்த அவன் கைகள் அவளைத் தன்னை நோக்கி இழுத்தது.

 

” உன்னுடைய பயந்தாங்கொள்ளி பிரண்ட்டுக்காக வெட்டியாக ஆஸ்பத்திரிக்கு அழைந்ததற்கு எனக்கு கொடுக்க வேண்டியதை  இன்னமும் தரவில்லை ”  இதழ் குவித்து காட்டினான்.

 

” அதுதான் கணக்கை சரியாக வைத்திருந்து கச்சிதமாக நேரம் பார்த்து கேட்கிறீர்களே ..பிறகென்ன ? ” வெட்கத்துடன் அவனை தள்ள முயன்றாள் வாசுகி.

 

” அப்போதே கொடுத்திருந்தாயானால் அதன் கிக்கே வேறு மாதிரி இருந்திருக்கும். இப்போதும் ஓகே தான் .ஆனால் அந்த முத்தம் போல் வராது ” 

 

” ஏனோ இரண்டிற்கும் என்ன வித்தியாசம்  ? துடித்துக் கொண்டிருந்த அவனது இதழ்களின் முத்தத்தை எதிர்கொள்ள தயங்கி பேச்சை வளர்த்தாள் வாசுகி.

 

” காதலிக்கும் போது கொடுக்கும் முத்தத்திற்கும் கல்யாணத்திற்கு பிறகு கொடுக்கும் முத்தத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.திருட்டு மாங்காய் களுக்கு எப்போதுமே ருசி அதிகம் தெரியுமா ? ” அவனது விளக்கத்தில் அவள் கன்னங்கள் சிவந்தன.

 

”  உங்களுக்கு அப்போது அப்படி முத்தம் கொடுக்கத் தானே பிடிக்கும் .இப்போது எதற்கு வந்தீர்கள்தள்ளுங்கள் போலியாக அவனை விரட்டி தள்ளினாள் .அவளை இறுகப் பிடித்துக்கொண்ட தேவராஜன் கொழுகொம்பு மேல் கொடி போல அவளுடன் பிணைந்தான்.

 




” ஏய் எனக்கு புல் ரைட்ஸ் இருக்குதடி .இப்போ நான் எனக்கு எப்படி எல்லாம் தோன்றுகிறதோ அப்படி எல்லாம் உன்னை ….” பேசிக்கொண்டே போனவனின் வாயை பொத்தினாள்.

 

சீஎன்ன இப்படி பேசுகிறீர்கள் ? ” 

 

” தப்புதான் .இன்னமும் பேசிக்கொண்டே இருப்பது தப்புதான் .உன்னை பேச விடுவதும் தப்புதான் ” ஜொலிக்கும் கண்களுடன் அவள் இதழ்களை அவன் நெருங்கும்போது அறைக்கதவு தட்டப்பட்டது .திடுமென யாரோ அறைக்குள் வந்து விட்டது போன்ற கூச்சத்தில் வாசுகி சடாரென அவனைத் தள்ளிவிட்டு விலகி நின்றாள் .அனிச்சையாக தனது உடைகளை சரி பார்த்துக் கொண்டாள். சிறு குறுகலுடன் தன் தோள்களில் இரு கைகளையும் பொத்திக் கொண்டாள்.

 

அவளது பதற்றத்தில் தேவராஜனின் முகம் கனிந்தது. மெல்ல அவள் தலையை வருடியவன் ”  வசு எதற்காக இத்தனை பயம்நம் வீடுநம் அறை . இங்கே எதற்கு உனக்கு இவ்வளவு பதட்டம் ? ” மெல்லிய கண்டிப்புடன் அவன் விளக்கம் கேட்டுக் கொண்டிருக்கும்போது கதவு பொறுமையின்றி மீண்டும் தட்டபட்டது.

 

தேவராஜன் வேகமாக சென்று கதவை திறக்க வெளியே மங்கை நின்றிருந்தாள் . ” என்னம்மா இன்னமும் தூங்கவில்லையா நீங்கள் ? ” 

 

” இதனை மறந்து வைத்துவிட்டு வந்து விட்டீர்கள் தேவா . கொடுத்து விட்டு போகலாம் என்று வந்தேன் ” சொம்பு நிறைந்திருந்த பாலை நீட்டினார்.

 

தேவராஜன் பால் சொம்பை வாங்கி கொள்ளும் போது மங்கையின் கண்கள் தன்னை நோட்டமிடுவதை வாசுகி உணர்ந்தாள். மீண்டும் அவள் உடல் முழுவதும் ஒரு கூச்சம் ஓடியது.

 

” சரிம்மா நீங்க போய் படுங்க ” தேவராஜன் சொல்ல ” வாசுகி இந்த பால் முழுவதையும் குடித்து விட வேண்டும் ” அறைக்குள் பார்த்து  அழுத்தமாக சொல்லிவிட்டு மங்கை போய்விட்டாள்.

 

அம்மாவிற்கு மூட்டு வலிஇந்த பாலிற்காக   மெனக்கெட்டு மேலே வந்திருக்கிறார்கள் பாரேன் ” சொன்னபடி தேவராஜன் செம்பிலிருந்து தம்ளருக்கு  ஊற்றி ஆற்றிய பால் மிக லேசாக மஞ்சள் நிறத்தில் இருக்க வாசுகிக்கு  மீண்டும் பதட்டம் வந்தது.

 

” வசு நீதான் ரொம்பவும் டயர்டாக தெரிகிறாய் .இந்தா  முதலில் நீ குடி ” தேவராஜன் பால் தம்ளரை அவள்  வாயில் வைக்க பதறி சட்டென அந்த தம்ளரை தட்டி விட்டாள் அவள் .பால் தரை எங்கும் சிதறியது.

 

” வாசகி என்ன இது ? ” தேவராஜன் அதட்ட அவள் வேகமாக இருகைகளையும் ஆட்டினாள்.

 

” இல்லை வேண்டாம் .இந்தப் பாலை நான் குடிக்க மாட்டேன் .இதில் ஏதோ கலந்து  இருக்கிறார்கள் . நான் குடிக்க மாட்டேன் ” கத்தியபடி அவன் கையில் இருந்த பால் சொம்பையும் கீழே தட்டி விட்டாள் .பால் அறை முழுவதும் வழிந்தோடியது.

 

ஏய்  என்னடி  செய்கிறாய் நீஉனக்கு என்ன பைத்தியமா ? ” அவள் தோளை பற்றி உலுக்கினான் அவன்.

 

இதற்குள் சத்தம் கேட்டு மங்கை மீண்டும் மாடி ஏறி வந்து இருந்தாள். கதவை தட்டியபடி ” தேவா உள்ளே என்ன சத்தம் ? ” என்க தேவராஜன் போய் கதவை திறந்தான்.

 

அறை  முழுவதும் சிந்திக் கிடந்த பாலை அதிர்ச்சியாக பார்த்தாள் மங்கை .” என்னப்பா என்ன நடந்தது ? ” 

 

” ஒன்றும் இல்லை அம்மா .கை தவறி விட்டது ” தேவராஜன் சமாளித்தான்.

 

” ஐயோ அபசகுனம் போலிருக்கிறதே  ” மங்கை முனகியபடி துணியை எடுத்து  வந்து அறையை சுத்தம் செய்ய முயல , ” விடுங்க அம்மா நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் ” தேவராஜன் அவளை தடுக்க

 

அப்போது வாசுகி வேகமாக அறையைவிட்டு வெளிய வந்து கீழே இறங்கிப் போனாள்சரி அறையை சுத்தம் செய்ய வசதியாக வெளியே நிற்கிறாள் என தேவராஜன் நினைத்திருக்க வாசகி மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து விட்டாள்.

 

சுத்தம் முடிந்து மங்கை மீண்டும் கீழே இறங்கி வந்து பார்த்தபோது வாசுகி ஹால் சோபாவில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள் . அவளைத் தேடி கீழே வந்த தேவராஜன் இதனை நம்ப முடியாமல் பார்க்க மங்கை ஆதரவாக அவன் தோளைத் தட்டினாள் .

 

” அவளுக்கு ஏதோ மனக்குழப்பம் தேவாநாம் கொஞ்சம் அவளை விட்டுப் பிடிக்கலாம்இவளை நான் பார்த்துக் கொள்கிறேன்நீ மாடியில் போய் படு ”  மனதின்றி திரும்பித் திரும்பிப் பார்த்தபடி மாடி ஏறினான் தேவராஜன்.

 

விடிந்ததும் முதல் வேலையாக அவளை மாடிக்கு அழைத்தவன் கைகளை கட்டிக்கொண்டு சிறிது நேரம் அவள் கண்களை பார்த்தபடி இருந்தான் .பிறகு மெல்ல கேட்டான் ”  வாசுகி நீ அடிக்கடி சொல்வதுபோல் உனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையா ? ” 

 

வாசுகி அவனை பதிலின்றி நிமிர்ந்து பார்க்க ” நமது திருமணத்தை மூன்று முறை நீ நிறுத்தி விடு என்று சொல்லி இருக்கிறாய். ஒவ்வொரு முறையும் அதற்கு ஒரு அற்ப காரணத்தை சொல்லிக் கொண்டுஉன் குழந்தைத்தனத்தை  நான் ரசித்துக்கொண்டிருந்தேன் .ஆனால் நீ நேற்று இரவு நடந்து கொண்ட விதம் எனக்கு சந்தேகம் அளிக்கிறது .உன் மனதில் இருக்கும் உண்மையை சொல் ” 

 

” இப்போதாவது உங்களுக்கு என் மனதை கேட்க தோன்றியதே.” விடுதலையாய் உணர்ந்த வாசுகி அவன் அவன் முன் தன் மனதை  கொட்டினாள்.

 




அன்றே கொஞ்சம் சொல்லத் தொடங்கினேன்உங்கள் அம்மா தங்கை தம்பி என்ற பேச்சை எடுக்கவும் நீங்கள் அப்படி பேசாதே என்று என் வாயை அடைத்து விட்டீர்கள் . அத்தோடு என்னோடு பேசுவதற்கும் நீங்கள் தயாராக இல்லை. என்னால் உங்களிடம் ஒன்றும் சொல்ல முடியாமலேயே போய்விட்டது.

இப்போது நான் சொல்வது தான் உண்மை என்னை உங்கள் வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லைஅவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து என்னை கொல்ல  நினைக்கிறார்கள் . உங்கள் அம்மா நேற்று நம் முதலிரவு பாலில் கூட விஷம் கலந்து…”  மேலே பேச முடியாமல் அவளது கன்னம் அதிர்ந்தது.

 

அதிர்ச்சியுடன் தன் கன்னத்தை தொட்டு பார்த்த வாசுகி நம்ப முடியாமல் நின்றாள் .கை விரல்கள் பதியும்படி அவளை அறைந்திருந்த தேவராஜன் திமிறும் காளையாக ஆக்ரோசமாக நின்றிருந்தான்.

 

 




 

What’s your Reaction?
+1
24
+1
14
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!