ramanin mohanam Serial Stories ராமனின் மோகனம்

ராமனின் மோகனம் – 20

20

வீட்டிற்கு திரும்ப வரும் வழி முழுவதும் நிலானி  அபிராமனின் முதுகோடு தான் ஒட்டி கிடந்தாள். குளிருக்கு கதகதப்பு போல் தன் கைகளால் அவனை இறுக்கமாக அணைத்து இருந்தாள் .முதுகில் முகம் புதைத்திருந்தாள்.

அபிராமன் ஒன்றும் பேசாமல் பைக்கை ஓட்டிக்கொண்டு இருந்தான்.

 தன் நெஞ்சில் கோர்த்து கிடந்த நிலானியின் கைகளில் அடிக்கடி ஒரு ஆதரவு  வருடல் மட்டும்.

” என்னை மேலே தூக்கிக்கொண்டு போகிறீர்களா ராம் ? எனக்கு உடம்பு சரியில்லை .படியேற முடியும் என்று தோன்றவில்லை .” மாடிப்படி முன் நின்று கொண்டு சிறு பிள்ளை போல் கைகளை தூக்கியவளை கருணையான பார்வையுடன் அணுகி கைகளில் தூக்கிக் கொண்டான்.

“இன்று என்னை தனியாக விட்டுவிடாதீர்கள் ராம் ” அவளது அறை பக்கம் திரும்பியவனை நடுங்கும் குரலில் தடுத்தாள் .அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்து படுக்கையில் மென்மையாக கிடத்தினான் .போர்வையை மூடி விட்டு தலையை வருடி ” அமைதியாக தூங்கு நிலா .விடிந்ததும் எல்லாவற்றையும் நாம் பேசிக் கொள்வோம் ” என்றான்.

தலையாட்டி மறுத்த நிலானி  அருகில் படுத்தவனின் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள் ” எல்லாவற்றையும் என்னிடம் சொல்லுங்கள் ராம் .நான் குறுக்கிட மாட்டேன் ”  கெஞ்சலாக கேட்டாள்.

“அந்த துப்பாக்கி தொழிற்சாலையில் உன் அப்பாவின் பங்கு மிக அதிக அளவில் இருக்கிறது. இவ்வளவு நாட்களாக இது எங்களுக்கு சந்தேகமாக மட்டுமே இருந்தது. இன்று உறுதியாகிவிட்டது ” அவனது வார்த்தைகளில் நடுங்கிய நிலானியின்  முதுகை வருடிஅமைதிப்படுத்தினான்.




அங்கே சற்று முன் திருக்குமரன் அந்த ஊர் ஆட்கள் சிலரை அழைத்து பேசிக் கொண்டிருந்தார். மூடப்பட்ட துப்பாக்கி தொழிற்சாலை விரைவிலேயே திரும்ப ஆரம்பிக்கப் போவதாகவும் எலக்க்ஷனில் தானே ஜெயித்து முதல்வராக போவதாகவும் , அதன் பிறகு இங்கே மீண்டும் தொழிற்சாலை தொடங்கப்படும் என்றும் அதுவரை அனைவரும் காத்திருக்கும் படியாகவும் பேசிக்கொண்டிருந்தார் .மிக அதிகபட்சமான சம்பள ஆசையை அந்த வறிய கிராமத்தவர்களுக்கு ஆசை காட்டிக் கொண்டிருந்தார்.

” இன்று இவர்கள் இங்கு கூட்டம் கூடலாம் என்று எனக்கு தகவல் வந்தது .யாருக்கும் தெரியாமல் நான் மட்டும்தான் போக எண்ணி இருந்தேன் .நீ அடம் பிடித்து என்னுடன் சேர்ந்து கொண்டாய் .இப்போது சொல் நிலா.  இதனை நான் சட்டத்தின் காதுகளுக்கு கொண்டு போகவா …? வேண்டாமா…? “

கேட்டவனை வியப்புடன் நிமிர்ந்து பார்த்தாள் . “என்னிடம் கேட்கிறீர்களா ராம் ? “

” அவர் உனது அப்பா நிலா . அவருக்கான  தண்டனை உன் மனதை புண்படுத்துமல்லவா  ? உன் சம்மதமின்றி இதில் நான் முடிவெடுக்க முடியாது. நீயே சொல் .இந்த விஷயம் நான் ராஜிக்கு தெரியப் படுத்தவா ?  வேண்டாமா  ? கேட்டுவிட்டு தனது ஆதரவை உணர்த்தும் வகையில்

அவளது நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான் .

கண்கள் கலங்க அவன் கழுத்தை கட்டிக்கொண்டாள் நிலானி ” நான் வேண்டாம் என்றால அப்பாவை விட்டு விடுவீர்களா ? “

” நிச்சயமாக .சட்டத்தில் இருந்து அவரை விடுவித்து விடுவேன் .ஆனால் அவரது அரசியல் வாழ்க்கையை தொடர விட மாட்டேன் “

” எனக்காகவா  ராம் ?” எதிர்பார்ப்போடு குழந்தையாய் தன்னை அண்ணாந்து பார்த்து கேட்ட மனைவியின் துடித்துக் கொண்டிருந்த இதழ்களில் தன் இதழை பொருத்தினான் அபிராமன்.

” நம் காதலுக்காக “

நிலானியின் விழிகள் விரிந்தன ” என்னை காதலிக்கிறீர்களா ராம்  ? எப்போதுதிருந்து …? “

” எப்போதோ …?உன்னை பார்த்த முதல் கணத்தில் இருந்து கூட இருக்கலாம்…”

” உங்களைப் பற்றி தவறாக நினைத்து போலீசில் பிடித்துக் கொடுத்தவளையா  காதலிக்கிறீர்கள் ராம் ? எப்படி உங்களால் முடிந்தது ? “

அதற்கெல்லாம்   காரணம் சூழ்நிலைகள் தானே நிலா . குழந்தை போல் இருந்து கொண்டு முயன்று அதிகாரம் செய்துகொண்டிருந்த உன்னை உள்ளுக்குள் ரசித்துக் கொண்டிருந்தேன் நான் “

” ஆனால் நான் உங்களை காதலிக்கவே இல்லையே  ராம் ? “

” அப்படியா ?காதலிக்காதவனுடன் தான் இப்படி கட்டிக்கொண்டு இருப்பாயா ? ” சீண்டினான்.

” இது வேறு .இப்போது நீங்கள் என் கணவன் .ஆனால் அப்போதெல்லாம் உங்கள் மேல் கோபம் மட்டும் தான் எனக்கு வரும் “

” அந்தக் கோபத்தில் இருந்த உன் காதலை நான் உணர்ந்திருந்தேன் நிலா .ராஜி கூட உனது காதலை எனக்கு விளக்கிவிட்டு தான் போனாள் “

” உங்கள் தோழி ராஜலட்சுமியா ? அவருக்கு என்ன தெரிந்தது ? “

” என்னவோ தெரியவில்லை .பெண்ணுக்கு பெண்ணால் புரிந்து கொள்ள முடியும் என்றாள .எனக்காக நீ அன்று சேலை கட்டி இருப்பதாக சொன்னாள்.நான்  அவளுடன் பேசுவதை கூட உன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றாள .இதற்கு மேல் எனக்கு விளக்கம் தர தெரியவில்லை .ஆனால் நிலானி உன்னை காதலிக்கிறாள் ”  என்று அடித்துப் பேசி விட்டு போனாள்.

ராஜலட்சுமி நிலானியை மனதால் குன்ற வைத்தாள் . இந்த உண்மையான தோழியை பற்றி நான் தவறாக எண்ணி இருந்தேனே… தன்னையே நொந்து கொண்டாள் நிலானி .

”  காரணமே தெரியாமல் எனக்கு ஆறுதல் சொன்னது …ராம் என்ற உன்னுடைய பிரத்தியேகமான அழைப்பு என்று

உனது காதல் உறுதியான பிறகு தான் நமது திருமண முடிவை எடுத்தேன் நிலா “

” எதற்காக என்னை இங்கே கடத்திக் கொண்டு வந்தீர்கள் ராம் ? “

” முதலில் எனக்காக …பிறகு உனக்காக …நம் இருவருக்காகவும்தான் நிலா “

” நான் மரமண்டை ராம் எனக்கு புரியும்படி விளக்குங்களேன் ப்ளீஸ் “இறைஞ்சலாய் கேட்டவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.




” நாம் சென்னையில் சந்திக்க நேர்ந்த இரண்டு சம்பவங்களும் மோதலாகவே அமைந்தன. தியேட்டரில் உன்னுடைய நடவடிக்கைக்கு எனக்கு காரணம் தெரியவில்லை .வழக்கமாக ஒரு இடத்தில் இருந்தால் அதன் சுற்றுப்புறங்களை கூர்மையாக கவனிப்பது எனது பழக்கம் .ஆனால் அன்று உன் அருகில் அமர்ந்திருந்த ஷிவானியின் நிலைமையை எப்படி கவனிக்காமல் விட்டேன் என்று தெரியவில்லை .அன்று உன் பின்னால் அமர்ந்துகொண்டு உன்னை மட்டுமே ரசித்துக் கொண்டிருந்ததில் என்னையே மறந்துவிட்டேன் என்று தோன்றுகிறது .அன்று தியேட்டரில் இருந்து வெளியே வந்ததுமே நீ வரச் சொன்ன போலீசே எனக்கு சல்யூட் செய்து என்னை அனுப்பி வைத்தனர்”

” மறுநாளே எங்கள் ஆபீஸிற்கு கட்சிக்கு நிதி தேவை என உன் அப்பா வந்து நின்றார். அவரது அந்தத் தேவையை எனக்கு சாதகமாக்கிக் கொண்டு உன்னோடு சில நாட்களை கழிப்பதற்காக உன்னை என்னுடன் அனுப்பி வைக்கச் சொல்லி கேட்டேன்”

” அதற்கு அப்பா ஒத்துக் கொண்டாரா ? ” விம்மிய நிலானியை ஆதரவாக அணைத்துக் கொண்டவன் , ” உன் அப்பா என்னையும் என் குடும்பத்தையும் நன்றாக அறிவார் .அப்படி பெண்களின் பின்னால் சுற்றுபவன் நான் இல்லை என்பது அவருக்கு தெரியும் .அத்தோடு நீயும் இந்த விஷயத்தில் நிலைதடுமாறாத பெண் என்பதையும் அவர் அறிவார் .அதனாலேயே உன்னை என்னுடன் அனுப்புவதற்கு அவர் சம்மதித்திருக்க வேண்டும் “

தந்தையின் குணக்  கீறல்களை செப்பனிடுவது போல் பேசுவனை மனம் குன்ற பார்த்திருந்தாள் நிலானி .” எத்தனையோ சமாதானங்களை சொல்லிக் கொண்டாலும் ஒரு தகப்பன் செய்யும் செயல் இதுவல்ல ராம். இவருக்கு மகள் என்ற வகையில் நான் அபாக்கியசாலி “

” உன் தந்தையின் மறுபக்கத்தை உனக்கு விளக்கிவிட வேண்டும் என்று பலமுறை முயற்சித்தேன் .நீ புரிந்துகொள்ள முயலவில்லை .அந்த கோபத்தை அடிக்கடி உன்னிடம் காட்டி இருக்கிறேன்”

” என்னை அப்பா  உங்களுடன் அனுப்பியதில் உங்களின் பங்கு நிறைய இருக்கிறது என்று நான் நினைத்தேன் .உங்களால் என் தந்தை மிரட்டப்பட்டு கொண்டிருக்கிறார் என்பது என்னுடைய கணிப்பு .அதனாலேயே பரிதாபத்திற்குரியவராய் எனக்குத் தெரிந்த தந்தை மேல் எனக்கு கோபம் வரவில்லை. வேண்டுமென்றே அவரை எனக்கு கெட்டவராக சித்தரிக்க முயல்கிறார்கள் என்று உங்கள் மீதுதான் கோபம் வந்தது”

” உன்னை இங்கே அனுப்பி வைத்ததில் உன் தந்தைக்கு இன்னொரு காரணமும் உண்டு .அந்த துப்பாக்கி தொழிற்சாலையைப் பற்றி ராஜி மூலமாக கேள்விப்பட்டு

அதனை விசாரிப்பதற்காக தான் நான் இங்கே வந்தேன் .அப்போதுதான் உன்னையும் என்னுடன் அனுப்பச் சொல்லி கேட்டேன்.  உன் மீது எனக்குள்ள ஆர்வத்தை அவர்  அன்றே புரிந்து கொண்டிருக்க வேண்டும் .நீயும் இங்கே வருவதால் உன் மீது கவனம் திரும்பி எனது விசாரிப்புகள் குறையும் என்று நினைத்திருக்கலாம் .அல்லது நாமிருவரும் இங்கே ஒன்றாக தங்கி  இருந்ததை  காரணம் காட்டி எங்கள் குடும்பத்தாரிடம் பேசி நமது திருமணத்தை முடித்துவிட திட்டமிட்டிருக்கலாம் .அதன் காரணம்தான் மகளை யாரோ கடத்தி விட்டார்கள் என்ற அவரது அந்த டிவி பேட்டி…”

தந்தையின் சாயம் வெளுக்க வெளுக்க நிலானியின் கண்கள் பொங்கி வழிய துவங்கின .” முட்டாள் எதற்காக இப்போது அழுகை ? “அதட்டியபடி கண்ணீரைத் துடைத்தான் அபிராமன்.

” நான் முட்டாள் தான் ராம் .இல்லையென்றால் இவரை அப்பாவாக நம்பி இருந்திருப்பேனா ? “

” அப்படி இருந்ததனால் தானே நீ எனக்கு கிடைத்தாய் நிலா. இல்லையென்றால் உன் பாதையில் நீயும் என் பாதையில் நானும் போய் கொண்டிருந்திருப்போம் .எல்லாம் நன்மைக்குத்தான்…”

” நன்மைக்கா ?  அப்போதெல்லாம் என்னை எப்படி மிரட்டி கொண்டிருந்தீர்கள்” சிணுங்கினாள் நிலானி.

” என்னை என்ன செய்யச் சொல்கிறாய் நிலா ? நீ கண் முன்னால் தேவதை போல்  நடமாடிக் கொண்டிருக்கிறாய். ஒவ்வொரு நிமிடமும் உன்னை தொட வேண்டும் என்று கைகள் துடிக்கிறது .ஆனால் இது தப்பு என்று மனசாட்சி உறுத்துகிறது. அதனால் எனக்கு நானே ஒரு வில்லன் முகமூடி போட்டுக் கொண்டு சும்மா உன்னை மிரட்டலாக தொட்டுப் பார்த்துக் கொண்டேன் “

” வில்லனா ?  இல்லை ராம் பார்த்துப் பார்த்து சமைத்துப் போட்டு என்னை ஒரு தாயாக அல்லவா பார்த்துக் கொண்டீர்கள் “

” அடடா அப்போது அந்த வில்லன் கேரக்டரிலும் நான் பெயில் தானா ? ” வருத்தம் போல் கேட்டவனின் முகத்தை ஆசையாக பார்த்தாள் நிலானி.

” அது இருக்கட்டும் .இப்போது மீதியை சொல்லுங்கள் .என் அப்பாவின் நோக்கமும் நம் திருமணம் தான் என்று தெரிந்த பிறகும் எப்படி என்னையே திருமணம் செய்துகொள்ள நினைத்தீர்கள் ? “

” உன் அப்பாவிற்கு எதிராக நிற்பதென்றால்  ஒரு வாரம் உன்னை இங்கே வைத்திருந்து விட்டு மீண்டும் வீட்டிலேயே கொண்டு போய் விட்டிருக்க வேண்டும் .ஆனால் உன்னை திரும்பவும் உன் அப்பாவிடம் விட எனக்கு மனம் வரவில்லை. அது உனக்கு பாதுகாப்பற்ற இடம் என்று என் மனம் பதறியது. என் கைக்குள் இருந்து உன்னை விடுவிக்கும் எண்ணமே எனக்கு இல்லை. எங்கள் வீட்டில் எல்லோரும் தேர்தல் முடிந்த பிறகு திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள் .ஆனால் அது வரை உன்னை பிரிந்து இருக்க எனக்கு மனமில்லை .அதனாலேயே அம்மா அப்பாவிடம் சொல்லி உடனே நமது திருமணத்தை முடிக்க செய்தேன். சென்னையில் திருமணம் வைத்தால் ஜிபிஎஸ் குடும்பத்தின்  சம்மந்தி என்று வெளி உலகத்திற்கு டமாரம்  கொட்டி இந்த தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடி கொள்வார் உன் அப்பா என்பதனால்  எங்கள் சொந்த கிராமத்தில் எளிமையாக திருமணத்தை நடத்தினோம் “




” இதையெல்லாம் எனக்கு விளக்க முற்பட்டிருக்கலாமே  ராம் “

” எங்கே உன் கண்களைத் தான் அப்பாவின் பாசவலை மூடியிருந்ததே… அந்த நேரத்தில் நான் ராஜி என் குடும்பத்தார் எல்லோருமே உன்னுடைய எதிரிகள் அணியில் இருந்தோம் .நாங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் இருபக்க கத்தியாய் எங்கள் பக்கமே திரும்பி விடக்கூடிய அபாயம் இருந்தது .சரியாகச் சொல்வதானால் உன்னுடைய மதிப்பில் இறங்க எங்கள் யாருக்குமே விருப்பம் இல்லை என்பது தான் உண்மை .எப்படியும் சட்டப்படி உன் தந்தையின் லட்சணம் ஊருக்கு தெரியவரும் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று போகிற போக்கில் விட்டு விட்டோம் “

” நீங்கள் முயற்சி எடுத்துக் கொண்டுதான் இருந்தீர்கள் ராம். நான் தான் புரிந்து கொள்ளவில்லை .நம் திருமணம் முடிந்ததும் தாத்தாவிடம் ஆசீர்வாதம் வாங்க அழைத்து போனீர்களே.. நான் அவர் வீட்டிற்கு உள்ளேயே வர மறுத்து விட்டேன். அன்று உங்கள் பேச்சைக் கேட்டு அவரை சந்தித்து இருந்தால் அன்றே என் தந்தையை உணர்ந்து இருப்பேன் “

” ம் …சரி அதை விடு.இப்போது சொல் உனது தந்தையை என்ன செய்வது ?அவர்தான் இந்த தேசதுரோகச் செயலுக்கு  மூல காரணம் என்று ராஜி அவரை கைது செய்யத் துடித்துக் கொண்டிருக்கிறாள் .அவளை சமாளிப்பது கொஞ்சம் கடினம் தான் .ஆனால் நான் பார்த்துக் கொள்கிறேன் .நீ சொல் அவரை என்ன செய்யட்டும் ? “.

” எனக்கு மிகவும் டயர்டாக இருக்கிறது ராம் .கொஞ்சம் டயம் கொடுங்களேன் யோசித்துச் சொல்கிறேன்”  அயர்வுடன் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

” ஓகே… ஓகே நீ நன்றாக ஓய்வெடு. நாளை  யோசித்து உன் முடிவைச் சொல் உன் முடிவின் படிதான் அடுத்த  கட்ட நடவடிக்கைகளில் நான் இறங்குவேன். இப்போது தூங்கு ”  மென்மையாக அவள் முதுகை குழந்தைக்கு போல் தட்டி கொடுக்கத் தொடங்கினான். ஐந்தே நிமிடங்களில் நிலானி தூங்கி போனாள். உண்மை புரிந்த மனைவி தன் கைகளுக்குள் பாதுகாப்பாக இருக்கிறாள் என்ற நிம்மதியுடன் வெகு நாட்களுக்கு பிறகு அபிராமனும்  ஆழ்ந்து தூங்கிப் போனான்.

மறுநாள் காலை அவன் எழுந்தபோது நிலானி  அவன் அருகே இல்லை .கீழேயும் அவளைக் காணாமல் திகைத்தான் அபிராமன்.  எங்கே போய்விட்டாள் …? ஊருக்குள்ளும் வேகமாக விரிந்த அவன் தேடலின் பிறகு நிலானி அதிகாலையிலேயே அந்த வீட்டை விட்டு கிளம்பி போனது தெரியவந்தது.

மனம் பதறி நின்றான் அபிராமன். நிச்சயம் அவள் தந்தையிடம் போய் இருக்க வாய்ப்பில்லை என்பதனால் அடுத்து அவன் போன இடம் வாழப்பாடி.

” காலையிலேயே நிலா இங்கே வந்துவிட்டாள் தம்பி . என்னிடம் ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு இப்போதுதான் கிளம்பிப் போனாள் ” நிலானியின் தாத்தா தகவல் சொன்னார்.

” அவளிடம் எல்லா உண்மைகளையும் கூறி விட்டீர்களா ? ” பதட்டமாக கேட்டான் அபிராமன்.

” ஆமாம் தம்பி .அவை அவள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் தானே ? “

” ஐயோ தாத்தா அதனை இப்போதே தெரியப்படுத்த வேண்டிய நிலைமையில் அவள் இல்லை .நிறைய அதிர்ச்சிகளால்  பாதிக்கப்பட்டு மனமொடிந்து இருக்கிறாள் .இப்போது இந்த அதிர்ச்சியும் அவளுக்கு எதற்கு ? எல்லாவற்றையும் கேட்டுவிட்டு மனம் வெறுத்து அவள் எங்கே போய்விட்டாளோ ? “

அபிராமன் செய்வதறியாமல் தளர்ந்து அமர்ந்துவிட்டான்.

What’s your Reaction?
+1
5
+1
8
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!