ramanin mohanam Serial Stories ராமனின் மோகனம்

ராமனின் மோகனம் – 16

16

காலையில் விழிப்பு தட்டி எழுந்த பிறகே நிலானி உணர்ந்தாள் இரவு முழுவதும் அபிராமன் வீட்டிற்கு வரவில்லை என்பதை .இதோ வருகிறேன் என்று விட்டுப் போனவன் விடிந்த பிறகும் வரவில்லை .திருமணத்திற்கு முன்பு  அவளை கடத்தி வைத்திருந்த பொழுதிலும் கூட இங்கே அவளைத் தனியே விடாமல் உடன் கூட்டிக்கொண்டே அலைந்தான் .இப்போதோ……

 நிலானியின் நினைவுகள் பின்னோக்கி  அவனுடனான பைக் பயணங்களுக்கு சென்றன .உடல் நோகும் பயணங்களை அவளுக்கு அறிமுகப்படுத்தினான்தான் .ஆனால் இப்படி தனிமையில் விட்டுப் போகவில்லை.




பெருமூச்சுடன் தனது அறையை விட்டு வெளியே வந்தாள் .முதல் நாள் நள்ளிரவு வரை அவனுக்காக காத்திருந்து பார்த்துவிட்டு , அவள் முதலில்  தங்கியிருந்த… அபிராமன் அவளை அடைத்து வைத்திருந்த அறையிலேயே வந்து படுத்துக் கொண்டிருந்தாள் .எதிர் அறைதான் அபிராமனுடையது .ஆனால் அங்கே செல்ல அவள் விரும்பவில்லை.

திடுமென கீழே குக்கர் விசில் சத்தம் கேட்க திடுக்கிட்டவள் படபடவென படியிறங்கினாள். ஹால் சோபாவின்  நடுவே தரையை துடைத்துக் கொண்டிருந்தாள் ஒரு பெண்.”  ஏய் யார் நீ  ? பூட்டிய வீட்டிற்குள் எப்படி வந்தாய் ? ” 

தலை நிமிர்ந்த பெண் அவளுக்கு அறிமுகமானவள்தான் ” என்னை தெரியலீங்களாம்மா ? ”  என்றவள் துப்பாக்கிகள் தயாரித்ததற்காக  அபிராமனின் சுட்டலில் போலீசால் கைது செய்யப்பட்டவனின் மனைவி.

” தெரியுது.  ஆனால் நீ எப்படி உள்ளே வந்தாய் ? ” 

“காலம்பர ஐயாதான்  கதவை திறந்து. விட்டார் . வீட்டு வேலை செய்யறதுக்கு நானும் என் மாமியாரும் வந்திருக்கோம்மா ”  பணிவுடன் பதிலளித்தாள்

ஓ … இவர்களை வீட்டு வேலைக்கு என அழைத்து வந்து விட்டு விட்டு அவன் அறைக்குள் தூங்கிக் கொண்டிருக்க வேண்டும் என ஊகித்தாள் நிலானி.

“:ஐயா எந்திரிச்சிட்டாராம்மா ? ”  இந்த சாதாரன கேள்விக்கு இவள் ஏன் இப்படி நாணிக் கோணுகிறாள் புரியவில்லை.

” ஏட்டி புதுசா கண்ணாலம் கட்டுனவுக … இப்படி மூஞ்சிக்கு நேரவா அவுகள  கேள்வி கேப்ப ? “என்றபடி சமையலறையில் இருந்து வந்த அவளது மாமியாரிடமும் அதே நாணல் கோணல்.

” காப்பி சாப்பிடுங்கம்மா ”  இவளிடம் காப்பிக் கோப்பையை நீட்டியபடி தலைகுனிந்து நகம் கடித்தாள் .

அவர்களது வெட்கத்திற்கான காரணம் புரிபட நிலானிக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது. இங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது ..இவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.. பெருமூச்சுடன் காப்பியை வாங்கிக் கொண்டாள்.

” சூடா இட்லி அவித்து வச்சிருக்கேன்மா .தொட்டுக்க நாட்டுக்கோழி குழம்பு .முதல்ல ஆட்டுக்கால் சூப்பு .அத குடிச்சிட்டு குளிச்சிட்டு வந்தீகன்னா இட்லி சாப்பிடலாம். புது சோடிகளுக்கு கறி மீனுன்னு  ஆக்கி போடணுமில்ல. அம்மா என்கிட்டே சொல்லிட்டுதா போயிருக்காக ” புதுமண தம்பதிகளுக்கான இந்த உபசரிப்பில் நிலானிக்கு  எரிச்சல் வந்தது.

” உங்கள் ஐயா நேற்று வீட்டிற்கு வரவே இல்லை தெரியுமா ? இவ்வளவு பெரிய வீட்டில் என்னை தனியாக விட்டுவிட்டு வெளியே போய் விட்டார் .நான் பயந்து கொண்டே இருந்தேன் ” 

 அவர்களது கேலிக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையிலும் அவர்கள்  போற்றிப் புகழும் ஐயாவின் யோக்கியதையை தெரியப்படுத்தும்  வகையிலும் கோடி காட்டி பேசினாள்.

” எதுக்கு பயங்குறேன்  ? உங்களுக்கு வேணும்கிற பந்தோபஸ்து செஞ்சிட்டு தானே போயிருக்காரு எங்கய்யா .வேலையாதானா  வெளிய போனாரு  பொறவென்ன பயம் ? ” 

அந்த வயதான பெண்மணியின் பேச்சில்தான் அந்த உண்மை நிலானிக்கும் உறைத்தது. இந்த வீட்டில் முதலில் அவள் இருந்த போது போதுமான பாதுகாப்பு இல்லாமல் ஒரு காட்டு பங்களாவாக இருந்தது. ஆனால் இப்போது வீட்டில் செய்யப்பட்டிருக்கும் கடினமான பாதுகாப்புகள் நினைவிற்கு வந்தன .

வீட்டைச் சுற்றி கேமராக்கள் , வாசலுக்கு நம்பர் லாக் பூட்டுக்கள்… போன்ற அறிவியல் பாதுகாப்புகளோடு உணர்வு பாதுகாப்பாய் 24 மணி நேரமும் வீட்டை சுற்றி வரும் கட்டபொம்மன் , மதுரைவீரன்.

பாதுகாப்பான அரணுக்குள் தான் இருப்பதை உணர்ந்தாள் நிலானி .அவள் முகத்தில் பரவிய திருப்தியை  பார்த்தவள் ”  இத்தன பந்தோபஸ்து இல்லைன்னா  உங்கள கூடவே கூட்டிட்டு போயிருக்க மாட்டாரா  ஐயா ? ” சொல்லிவிட்டு அவள் குடித்த காபி கப்பை வாங்கி கொண்டு போனாள்.

இந்தப் பாதுகாப்புகள் அப்போது இல்லாமல் இருந்ததால்தான் என்னை கூடவே கூட்டிக் கொண்டு அலைந்தானோ ? நிலானிக்கு மனது இலகுவானது போல் இருந்தது. அப்போதெல்லாம் தன்னை கஷ்டப்பட வைக்க வேண்டும் என்றுதான் கூடவே இழுத்துக் கொண்டு திரிவதாக எண்ணி இருந்தாள் .ஆனால் அதற்கு இப்படி ஒரு காரணம் இருக்குமானால்… அவள் இதழ்கள் மென்மையாய் புன்னகைத்தன.

குளித்துமுடித்து கீழே இறங்கி வரும் வரை இதழ்களில் இருந்த அந்தப் புன்னகை ஹால் சோபாவில் அமர்ந்து காத்துக் கொண்டிருந்த ராஜலட்சுமியை கண்டதும் மறைந்தது.

” ஹாய் நிலானி எப்படி இருக்கிறீர்கள் ? அபி எழுந்துவிட்டானா ?அவனை கொஞ்சம் சீக்கிரம் வரச் சொல்லுங்கள் ” 

” ஏன் ? என்ன விஷயம் ? ” கத்தியாய் வெளிவந்த அவளது கேள்விக்கு ராஜலட்சுமியின் விழிகள் விரிந்தன.




” எங்களுக்கு நிறைய பர்சனல் ஒர்க் இருக்குதுப்பா .அதையெல்லாம் உங்களிடம் சொல்ல முடியுமா ? ” கிண்டலாய் சிரித்தன அவள் கண்கள்.

” அவர் என் கணவர். எங்களை தாண்டி உங்களுக்குள் என்ன பர்சனல்? ” 

” ஓ …கணவர் .அப்படியா ?பத்து நாட்களுக்கு முன்னால் வேறு ஏதோ சொன்னீர்களே ? ”  ராஜலட்சுமி அவளுக்கு எதிராக வந்து நின்று கைகளைக் கட்டிக் கொண்டு அவள் கண்களை உறுத்தபடி கேட்டாள்.

 நிலானி திருதிருத்தாள். இவளிடம் அன்று என்ன சொன்னேன்… தான் பேசிய பேச்சுக்களை நினைவுக்கு கொண்டு வர முயற்சித்தாள்.

” ஞாபகத்திற்கு வரவில்லையா ? ” 

” அன்றைக்கு நீங்கள் ஸேரி  கட்டிக் கொண்டு இருந்தீர்கள் இல்லையா ? ” 

  நிலானிக்கு முதலில் இதுதான் ஞாபகத்திற்கு வந்தது. இன்று ராஜலட்சுமியின் பேன்ட் , ஷர்ட் உடையில் திருப்தியாகி தலையசைத்துக் கொண்டாள் . ஏதோ ஆபிசியல் ஒர்க் தான் போல…

” இதுதான் நீங்கள் நினைவுபடுத்திக் கொள்ளும் அழகா ? ” இடுப்பில் இரு கைகளையும் தாங்கிக்கொண்டு சலிப்பாய் கேட்டாள் ராஜலட்சுமி.

” நீங்கள் கூட அன்று ஸாரிதான் கட்டிக் கொண்டு இருந்தீர்கள் . ஓ …எனக்கு போட்டியாகத்தான் அன்று  அந்த உடையை அணிந்தீர்களோ ? ” 

” உங்களோடு எனக்கு என்ன போட்டி ? ” திரும்பி கொண்ட நிலானியின் முகத்தை மீண்டும் தன் பக்கம் திருப்பினாள் ராஜலட்சுமி.

” யாரோ உங்களை கடத்திக்கொண்டு வந்து அடைத்து  வைத்திருப்பதாக அன்று சொன்ன ஞாபகம் ” 

இவள் வேண்டுமென்றே என்னிடம் வம்பு வளர்க்கிறாள்… நிலானி உதட்டை மடித்து கடித்து வார்த்தைகளை அடக்கினாள் .அவளுடன் பேச விரும்பாது வேகமாக திரும்பி மீண்டும் மாடிக்கு ஏறினாள். கீழே நின்று பார்த்துக் கொண்டிருந்த ராஜலட்சுமியின் மீதே கவனம் வைத்து ஏறியவள் மேலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த அபிராமனின் மேல் மோதிக் கொண்டாள்.

தடுமாறி சரிய இருந்தவளை தாங்கி நிறுத்தியவன் ”  ஏய் நிலா என்ன அவசரம்  ? ஏன் இப்படி ஓடி வருகிறாய் ?பார்த்து வரக்கூடாதா ? ” கரிசனமாய் கேட்டான் .

குளுமை சுமந்திருந்த அவன் விழிகளில் நெகிழ்ந்த நிலானி பாதுகாப்பான அவன் பிடிக்குள் இருந்து விடுபட விரும்பாமல் அவனைப் பார்த்தபடி இருந்தாள். அபிராமனின் கைகள் அவளை தழுவியபடி மெல்ல தன் அருகே இழுத்தன. வலது கை உயர்ந்து அவள் கன்னம் வருடியது.

” சாப்பிட்டாயா …? ” கன்னம்  வருடிய கை இப்போது இதழ்களில்.

” ம்ஹூம் …” பதில் சொன்ன இதழ்கள் இப்போது அழுத்தி செல்லமாகக் கிள்ளப்பட்டன.

” ஏன் …? வா சாப்பிடலாம் ” அரவணைப்பை விடாது ஒருவகை மோன நிலையில் இருவரும்  இறங்கத் தொடங்க…

” என்ன சொல்கிறீர்கள்  ? அப்படியா ? ” ராஜலட்சுமியின் குரல் கீழே உரத்து கேட்க இருவரும் தன்னிலை மீண்டனர் .கீழே படியின் முடிவில் ராஜலட்சுமி இவர்களுக்கு முதுகு காட்டி நின்றபடி போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள்.

அபிராமன் தன் அணைப்பில் இருந்த நிலானியை ஒதுக்கி நிறுத்தினான். நான்கெட்டுகளில் படிகளை கடந்து ராஜலட்சுமியை அடைந்தான் . ”  என்ன விஷயம் ராஜி ? ” பரபரப்பாக விசாரித்தான்.

கை போனை  அசைத்தபடி மெல்லிய குரலில் ராஜலட்சுமி ஏதோ சொல்ல அடுத்த நொடியே இருவரும் வீட்டை விட்டு கிளம்பிவிட்டனர்.

ஆவி பறக்க தன் முன்னால் வந்த சூப்பை வெறுத்து ஒதுக்கினாள் நிலானி .அந்த ராஜலட்சுமி வேண்டுமென்றே அபிராமனை ஏதோ காரணம் சொல்லி அழைத்து போனதாக அவளுக்குத் தோன்றியது .அவள்தான் அழைத்தாலென்றால் இவன் ஏன் ஓடுகிறானாம் ? இருவரையும் மனதிற்குள் திட்டி தீர்த்தாள்.

” சமைத்து வைத்து விட்டேன் .சாப்பிட்டு விடுங்கள் ” மீண்டும் மீண்டும் வலியுறுத்தி விட்டு வேலை செய்யும் பெண்கள் இருவரும் சென்ற பின் நிலானியை மீண்டும் தனிமை சூழ்ந்து கொண்டது.

தனது போனை எடுத்து நண்பர்கள் சிலருக்கு போன் செய்து பேசலானாள் .அனைவருமே அவளது திருமணத்திற்கு வாழ்த்துக் கூறினார்கள். அத்தோடு அவள் திருமணம் முடித்த குடும்பத்தை பிரமிப்பாய் பேசினார்கள் . அவள் அப்பா பெரிய மினிஸ்டர் .அதற்குத் தகுந்த வரன் தானே பார்ப்பார்கள் …பெரிய இடமாக பார்த்து அமர்ந்து விட்டாள்… சில பொறாமை பேச்சுகள் கூட வந்தன .அப்படி என்ன பெரிய வாழ்வு வந்துவிட்டது எனக்கு நிலானிக்கு இந்தப் பேச்சுக்களில் எரிச்சல்தான் வந்தது

ஒரு தோழியுடன் பேசிக் கொண்டிருக்கையில் அவளது போனில் ஒரு கால் மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்க அதனை பார்த்தவள் அதிர்ந்தாள். அது ஷிவானியிடமிருந்து வந்து கொண்டிருந்தது .ஷிவானி.. அபிராமனின் உண்மை சொரூபம் அறிந்தவள். இப்போது பேசுகிறாளென்றால் நிலாயின் கைகள் நடுங்கின.

அறிவு கெட்டவளே… அடிமுட்டாளே…அவனைப்பற்றி நன்றாகத் தெரிந்தும் அவனையேவா  திருமணம் முடிப்பாய் ?  பணத்திற்காகவா ? இதுபோன்ற ஏசல்களை எதிர்பார்த்தவளுக்கு ஷிவானுயுடன் பேசும் விருப்பமில்லை .ஆனால் ஷிவானி அவளை விடுவதாக இல்லை .மீண்டும் மீண்டும் அவளது போன் வந்துகொண்டே இருக்க வேறுவழியின்றி போனை அட்டென் செய்தாள்.

“அக்கா …நிலானி  அக்காதானே பேசுவது ? பரபரப்புடன் உறுதிசெய்து கொண்டாள் ஷிவானி.

” ஆமாம் சொல்லு ஷிவானி எப்படி இருக்கிறாய் ? “

” நான் நன்றாக இருக்கிறேன் அக்கா .அன்று தியேட்டரில் நாம் பார்த்துக் கொண்டது .அதன்பிறகு பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால் நான் உங்களிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன் .போனில் கூட உங்களை தொடர்புகொள்ள முடியவில்லை .இப்போதுதான் சுபா அக்கா உங்களுடைய இந்த புது போன் நம்பரை கொடுத்தாள் .உடனே கால் பண்ணுகிறேன் ” 

ஷிவானி சொன்ன தியேட்டர் சம்பவம் நிலானியின் நெஞ்சப் படபடப்பை கூட்டியது . ” அ …அது…ஆ…ஆமாம்… அங்கே… ஆமாம் …அப்படித்தான் சந்தித்தோம் .பிறகு எனக்கு கொஞ்சம் வேலை வந்துவிட்டது .அதனால் ஊருக்கு வந்து விட்டேன் .பார்க்க முடியவில்லை இப்போது கூட நிறைய வேலை இருக்கிறது .நாம் பிறகு பேசலாமா ? ” 

” ஆஹா அப்படி உங்களை உடனே விட்டுவிடுவேனா ? உங்களிடம் பேச எனக்கு நிறைய விஷயங்கள் இருக்கிறதே ” 

” எ…என்ன விஷயங்கள் ? ” 

” முதலில் நீங்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டும் .முடிந்தால் குட்டியாக ஒரு டயமென்ட் பென்டன்ட்  வாங்கிக் கொடுங்கள் அக்கா .உங்களால் முடியும் .அதற்கு நான் வொர்த்  கூட ” 

ஷிவானியின் உற்சாகம் நிலானிக்கு புரியவில்லை ”  என்ன சொல்கிறாய் ஷிவானி ? ” 




” ஆஹா ஒன்றும் தெரியாத பச்சைப் பிள்ளை போல் கேட்பதை பார். அன்று தியேட்டரில்  அபிராமன் சாரை உங்களுக்கு நான் அறிமுகப்படுத்த வில்லை என்றால இன்று இந்த திருமணம் எது ?  எனக்கு நீங்கள் தேங்க்ஸ் பண்ண வேண்டாமா ? ” 

” நீ அறிமுகப்படுத்தினாயா ? ஷிவானி ப்ளீஸ் கொஞ்சம் தெளிவாக பேசு ”  குழம்பிய மூளையுடன் அதட்டினாள் நிலானி.

” சாரி அக்கா அன்று நான் செய்தது தப்புதான் .ஆனால் எனக்கு அப்போது வேறு வழி தெரியவில்லை .அபிராமன் சார் உங்களிடம் எல்லா விஷயமும் சொல்லியிருப்பார் என்று தெரியும் .என்னடா தப்பு செய்துவிட்டு பரிசும் கேட்கிறாள் என்று தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் .என் நிலைமையை நான் தெளிவாக விளக்கி விடுகிறேன் .பிறகு எனக்கு டயமென்ட்  வாங்கித்தரலாமா… வேண்டாமா என்று நீங்களே  முடிவு செய்து கொள்ளுங்கள் ” 

” சொல்லு ” வெடிப்பது போல் துடித்த தன் இதயத்தை தடவிக் கொண்டாள் நிலானி .

” அன்று என்னிடம் தவறாக நடந்து கொண்டது பின்னால் அமர்ந்திருந்த அபிராமன் சார் இல்லை அக்கா. என் பக்கத்தில் அமர்ந்து இருந்தானே அந்த பொறுக்கிதான் ” 

யார் அந்த பொறுக்கி ? நிலானி  அன்றைய சம்பவத்தை மனதிற்குள் ஓடவிட்டாள் .அன்று தோழி  சுபாவுடன் அவளது வீட்டிற்கு வந்திருந்த கெஸ்ட் என்று சொல்லி சிலரை அழைத்து வந்திருந்தாள் .அவர்களில் ஒருத்திதான் ஷிவானி. கூடவே வந்த சிலரில் கசின் என்று அவள் அறிமுகப்படுத்திய இன்னொரு இளைஞனும் இருந்தான் .அவன் தான் அன்று ஷிவானியின் அருகில் உட்கார்ந்து இருந்தான்.

” அவன் எனக்கு சொந்தத்தில் அண்ணன் முறை வரவேண்டும் அக்கா .ஆனால் அன்று அவன் செய்த காரியம் ….” ஷிவானியின் குரல் கலங்கியது .

“எங்கள் குடும்பத்தினர் முன்னால் நான் அவனை காட்டிக் கொடுக்க முடியாது .யாரும் நம்ப மாட்டார்கள். அப்படி ஒரு நல்ல பெயரை குடும்பத்திற்குள் அவன் எடுத்து வைத்திருந்தான். நான் சொன்ன புகாரை அப்படியே என் மீதே கூட திருப்பிவிடுவான். அதற்கு பயந்தே நான் அன்று அந்நியனான அபிராமன் சாரை கை காட்டி விட்டேன்.”

உறவுகளுக்குள்… சொந்த வீட்டிற்குள் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இன்றைய நிலைமை நிலானியின் நெஞ்சை கண்ணாடியாய் அறுத்தது. அந்த சிறு பெண்ணிற்காக  மனம் பரிதாபப்பட்டது.

” உன் நிலைமை புரிகிறது ஷிவானி .உன்னை நான் தவறாக நினைக்கவில்லை. நீ சொல்வது போல் அன்றைய சம்பவத்திற்கு பிறகுதான் நானும் ராமும் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது .அதனால் தான் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு இதோ திருமணம் வரை வந்துவிட்டோம் . இதற்கு பிள்ளையார் சுழி போட்ட உனக்கு நிச்சயமாக டயமென்ட் பென்டன்ட் உண்டு .நான் சென்னை வருகிறபோது வாங்கித் தருகிறேன் “

” ரொம்ப தேங்க்ஸ் அக்கா .தவறு செய்து விட்டோமே என்று அன்றிலிருந்து எனக்கு நெஞ்சை அரித்துக் கொண்டிருந்தது .இப்போது பெரிய நன்மை செய்து இருக்கிறோம் என்ற திருப்தி வந்துவிட்டது ” 

திருப்தியுடன் போனை வைத்த ஷிவானியின் மனநிலை நிலானிக்கும் தொற்றிக்கொண்டது .துள்ளிக்குதித்து நடனம் ஆட வேண்டும் போல் இருந்தது .டிவியை ஆன் செய்து ஒரு மியூசிக் சேனலை வைத்தவள் உண்மையாகவே அந்த பாடலுக்கு ஏற்றபடி நடனமிட ஆரம்பித்தாள்் .

” ராமனின் மோகனம்… ஜானகி மந்திரம் …” காதலாய் கசிந்துருகி ஒலித்த அந்த பாடலுக்கு ராமனுக்கேற்ற ஜானகியாய்  நிலானியும்  கசிந்தாள் … உருகினாள் …காதலானாள் .

What’s your Reaction?
+1
6
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!