ramanin mohanam Serial Stories ராமனின் மோகனம்

ராமனின் மோகனம் – 15

15

” வீட்டு வேலைக்கு இரண்டு பெண்களை வரச் சொல்லியிருக்கிறேன் .சமையல் கூட அவர்களே பார்த்துக்கொள்வார்கள் .நீ மனதை அலட்டிக் கொள்ளாமல் முழு ஓய்வு எடுத்துக் கொள்ளம்மா ”  கௌசல்யாவின் அக்கறை நிலானிக்கு எரிச்சலையே தந்தது.

” ஏன் எனக்கு ஏதாவது வியாதி என்று நினைத்தீர்களோ இப்படி எப்போதும் ஓய்விலேயே இருப்பதற்கு ? ” 

கௌசல்யா அயர்ந்தாள்.”  நிலானி என்ன இது ? அவர்கள் உன் மாமியார் மரியாதையாக பேசு ” அதட்டினாள் சுபத்ரா.

வாயை மூடிக் கொண்டாலும் நிலானியின் கொந்தளிக்கும் மனது அடங்கவில்லை. அதெபடி இவர்கள் எல்லோருமாக என்னை இங்கே விட்டு விட்டுப் போகலாம் உள்ளுக்குள் பொருமினாள்.

நிலானியின் தாயும் தந்தையும் திருமணம் முடிந்ததும் வாழப்பாடியிலேயே விடைபெற்று சென்னைக்கு கிளம்பி விட , அபிராமனின் உறவினர்கள் இதோ இப்போது இங்கே அவர்களைக் கொண்டு வந்து விட்டு விட்டு கிளம்பிக் கொண்டிருக்கின்றன .நிலானி இதனை எதிர்பார்க்கவில்லை .இந்த வீட்டுக்குள் மீண்டும் யாருமற்ற தனிமையில் அந்த சிடுமூஞ்சியுடன் அவளால் இருக்க  முடியுமென்று தோன்றவில்லை.




கழுத்தில் தாலி கட்டி விட்டானே தவிர அவனை கணவன் என்று நினைப்பதற்கான எந்த பிடிமானமும் நிலானிக்கு ஏற்படவில்லை .அவன் அப்படியேதான் இருந்தான். முதன் முதலில் அவளை ரயிலில் கடத்தி வந்து இந்த காட்டு பங்களாவுக்குள் பலாத்காரம் செய்ய முயன்ற அதே கொடியவனாகத்தான் இன்னமும் தோன்றினான்.

அன்று யாருக்கும் தெரியாமல் பலவந்தமாக என்னை அடைய முயன்றான். இன்று எல்லோருக்கும் தெரியப்படுத்தி அனைவரின் சம்மதத்துடன் என்னை… மேலே நினைக்கவே நிலானிக்கு கூசியது .இல்லை இந்த பொம்மை விளையாட்டிற்கு மற்றவர்கள் சம்மதித்து இருக்கலாம். ஆனால் என் சம்மதம் இவனுக்கு ஒருபோதும் கிடைக்காது தன்னைத்தானே உருவேற்றி நிமிர்ந்து கொண்டாள்.

” எனக்கு என் போன் வேண்டும் ” அழுத்தமாக்க்  கேட்டபடி தன் முன் வந்து நின்றவளை யோசனையோடு பார்த்தான் அபிராமன்.

தளராத நின்ற அவள் பார்வையை பார்த்ததும் தோள்களை குலுக்கி கொண்டவன் தன் பாக்கெட்டில் இருந்து அவள் போனை எடுத்து கொடுத்தான் .இவ்வளவு நாட்களாக இதனை பாக்கெட்டிலேயே வைத்துக்கொண்டு திரிந்திருக்கிறான்… கேட்ட போதெல்லாம் ஏதாவது ஒரு சாக்கு… கோபம் வந்தது அவளுக்கு.

” வெறும் டப்பா அல்ல .அதனை நான் உபயோகப்படுத்த வேண்டும்”  பேசுவது போல் ஜாடை காட்டினாள் .அவனோ அதனை கவனிக்காது குனிந்து தன் போனை நோண்டிக்கொண்டிருந்தான் .நொட்டென்று அவன் தலையில் கொட்டினால் என்ன என கைகள் துடித்தன.

அப்போது அவள் கையில் இருந்த போன் ஒலித்தது .ஆவலுடன் எடுத்து பார்க்க புது நம்பர் . ” என் நம்பர் தான் இது . உனக்கு பிஎஸ்என்எல் சிம் போட்டாயிற்று. இனி நீ பேசலாம் ” 

நிலானி முக மலர்ச்சியுடன் போனை பார்த்தபடி இருக்க ”  என் நம்பரை சேவ் செய்து கொள் .போனை தவறாக உபயோகிக்க மாட்டாய் என்று நம்புகிறேன் ” என்றான் .

அவனது குத்தல் பேச்சில் காயப்பட்டவள்  ” என் அம்மா அப்பாவுடன் பேசத்தான் போன் கேட்டேன். அம்மா அப்பா நண்பர்கள் எல்லோருடனும் பேசத்தான் போகிறேன் ” என்ன செய்வாய் என்ற சவாலுடன்  தன் போனில் அப்போதே அம்மாவிற்கு அழைத்தால் ஸ்விட்ச் ஆப் என்றது எதிர்முனை.

அப்பாவிற்கு அழைக்க திருக்குமரன் எடுத்து  உடனேயே ”  ஒரு பொதுக்கூட்ட மீட்டிங்கில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்”  கட் செய்துவிட்டார் .

இப்போது நிலானி  விழித்தாள். எதிரே இருப்பவனை நிமிர்ந்து  பார்க்கவும் கூசினாள் .ஐயோ .. கேலியாக பார்ப்பானே பேசுவானே…

இதழ் கடித்து தலை குனிந்து நின்றவளின் கைகளை பற்றினான் அவன் .” யாருக்கு போன் செய்து பேசினாலும்  இங்கே இருக்கும் விவரங்களை அனாவசியமாக யாருக்கும் கொடுக்க வேண்டாம் .நம் வீட்டு விவரங்கள் அந்தரங்கமானவை. அவை அடுத்தவர்கள் காதுக்கு போக கூடாது ” 

” இதெல்லாம் எனக்கும் தெரியும் .அப்படி ஒன்றும் உங்கள் குடும்பப் பெருமையை நான் யாருக்கும் சொல்லி விட மாட்டேன் ” வெடுக்கென பதில் கொடுத்தாள்.

” வெரி குட் .  என் வீடு போல தான் எனக்கு இந்த ஊரும் .இந்த ஊரைப் பற்றிய எந்த சிறு தகவல்களும் உன் மூலமாக வெளியே செல்லக்கூடாது ” இரும்பைப்போல் உறுதியாக இருந்தது அவனது குரல்.

பெரிய தொழில் நகரம் இதன் ரகசியத்தை நான் வெளியிட்டு விடப்போகிறேனாக்கும் உதடு சுழித்து கொண்டாள் நிலானி .பட்டென்று அவளது தோளை ஒரு கையால் பிடித்து நசுக்கினான்.

” அவ்வளவு அலட்சியம் வேண்டாம். இது எனக்கு முக்கியமான விஷயம்.”  சுற்றியிருந்து பார்ப்போருக்கு பாசமான தோள் வருடல் போல் இருக்கும் அது , நிலானிக்கு உயிர் வாதையை தந்தது .கண்ணீரை உள்ளே இழுத்து மெல்ல தலையசைத்தாள் .அதன் பின்னே அவள் தோளை விடுவித்தான் அவன்.

” உங்களையெல்லாம் பிரிகிற கவலை .அதனால் தான் இப்படி  சோகமாக நிற்கிறாள் ” சொன்னபடி  அவள் தோள்களை தழுவி தன்னருகே இழுத்துக் கொண்டான்.  எதிரே நின்று கொண்டிருக்கும் அவனது தாயார் காண  செய்த சமாளிப்பு இது என உணர்ந்தாள் நிலானி.

கௌசல்யா மகனை கூர்ந்து பார்த்தபடி நிற்க அவன் இரு கைகளையும் உயர்த்தினான் ”  கவலைப்படாதீர்கள் அம்மா .உங்கள் மருமகளை நான் நன்றாகவே பார்த்துக் கொள்கிறேன் ” ஒப்புதல் போல் கொடுத்தான்.




கைநீட்டி நிலானியின் கன்னத்தை வருடிய கௌசல்யா மற்றவர்கள் அனைவருடன் வீட்டை விட்டு வெளியேறினார். பத்து நாட்களாக கலகலத்துக் கொண்டிருந்த வீடு இப்போது திடீரென அமைதியாகிவிட நிலானியின் மனதில் ஒரு வெறுமை பற்றிக்கொண்டது.

மாலை மங்கிக்  கொண்டிருக்க நிறமிழந்து வரும் வானம் அவளுக்குள் ஏதோ ரசவாதங்களை உண்டாக்கிக் கொண்டிருந்தது .சிலுசிலுவென கூதல் காற்று ஜன்னல் திரையை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைய , அதன் குளிர்ச்சியில் உடல் கூசி இரு கைகளையும் குளிருக்காக  உடலோடு கட்டிக் கொண்டு சிலிர்த்தாள் நிலானி .அப்போது அவளது இடை பின்னிருந்து மென்மையாக வளைக்கப்பட்டது.

” குளிர்கிறதா …?” ரகசிய கொஞ்சலாய் கேட்ட குரல் அபிராமனுடையதுதானா சந்தேகம் வந்தது அவளுக்கு .இப்படி கொஞ்சும் குரலிலும் அவன் பேசுவானா் ஆச்சர்யம் தான் அவளுக்கு.

” உனது இடுப்பு வலி சரியாகி விட்டது தானே ? ” என்றோ சரியாகிப்  போன வலிக்கு இன்று விசாரித்தான் .அத்தோடு வலியை இப்போதுதான் சரி செய்பவன் போல அவளது இடையில் விரல்களை ஓட விட்டான் .

” வலி எங்கே ? இங்கா… இங்கா… அவனது தேடலில் புதிது புதிதான ரத்த ஆறுகள் நிலானியின் உச்சந்தலையில் உற்பத்தியாகி உடல் முழுவதும் உற்சாக கூச்சலோடு ஓடின.

சிலிர்த்து சிவந்த உடலுடன் கண்களை இறுக்க மூடி நின்றாள் நிலானி. அவனை தள்ளிவிடு மனம் ஒரு பக்கம் எச்சரிக்க மறுபக்கம் அவன் உனது கணவன் என சொல்லிக் கொண்டிருந்தது இதயம். எரிதழல் போல் அவள் எரிந்துகொண்டிருந்த நேரத்தில்  அபிராமனின் விரல்கள் முழு சுதந்திரத்துடன் அவள் மேல் மடியத் துவங்கின .நான் உன் கணவன். இதற்கு உரிமையானவன் என ஒவ்வொரு அசைவிலும் அவளுக்கு செய்தி அனுப்பின அவ்விரல்கள். அந்த நொடிகளில் மிக மிக பலவீனமாக தன்னை உணர்ந்தாள் நிலானி.அதற்காக  தன்னைத் தானே மிகவும் வெறுத்தாள்.

அப்போது அவளை காப்பது போல் ஒலித்தது அபிராமனின் போன். இரு கைகளாலும் அவள் இடையை அழுந்தப் பற்றி அந்த போனின் இடையூற்றை  ஜீரணித்த அபிராமன் போன் நிற்கப்போகும் கடைசி நேரத்தில் எடுத்தான் .சட்டென அவனிடமிருந்து விடுபட நினைத்தவளை விடாமல் ஒற்றைக் கையால் வளைத்து தன்மீது ஒட்டிக்கொண்டு ” ஹலோ ” என்றான் போனில் எரிச்சலாக.

ஆண்மையை பிரகடனப்படுத்தும் அவனது ஜாக்குவார் பெர்ஃப்யூம் நாசிக்குள் நுழைந்து இம்சிக்க , 

அவனது இழுத்தலில் அவன் உடலோடு அப்பி நின்ற தன் நிலையில் இருந்து

விலகுவதா ?  இழைவதா ?  என்ற போராட்டத்தில் அவன் தோளில் தலைசாய்க்க முடியாமல் தடுமாறி  நிலானி நின்றது இரு நிமிடங்களாகத்தான் இருக்கும். அபிராமனின் கை  அவள் மேல் இருந்த இறுக்கத்தை குறைத்தது.  அவளை விட்டு விலகியவன் போன் பேச்சிலேயே தனது கவனத்தை வைத்து மெல்ல நகர்ந்து  அப்பால் சென்றான்.

ஒரு பத்து நிமிட தீவிரமான கிசுகிசு பேச்சுக்குப்பின் சற்றே அவன் குரல் உயர்ந்தது ”  நான் உன்னை இப்போது இங்கே கிளம்பி வரச் சொன்னேன் ராஜி ” 

ராஜியா…?  இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமியா ? நிலானி  திடுக்கிட்டாள். அபிராமனின் மிக நெருங்கிய தோழி . ஆனால்  இதோ அவர்களது திருமணத்திற்கு கூட வரவில்லை .அதன் காரணம் நிலானி அறியாதது இல்லை .தன் மனதில் சுமந்து கொண்டிருப்பவனை இன்னொருத்தியின் பக்கத்தில் கணவனாக வைத்துப் பார்க்க பிடிக்காமல்தான் அவள் வராமல் இருந்திருக்க வேண்டும். அவளுடன் இப்போது இவனுக்கு என்ன பேச்சு ? 




நிலானி குழம்பி தவித்துக் கொண்டிருக்கும் போதே”  கதவை பூட்டி ஜாக்கிரதையாக இருந்து கொள் .இப்போது வருகிறேன்”  என்று சொல்லிவிட்டு வந்து நின்று வாசலில் காத்துக்கொண்டிருந்த ராஜலட்சுமியுடன் ஒரே பைக்கில் கிளம்பி போய்விட்டான் அபிராமன்.

நிலானியின் மனதில் அப்போது வந்தவள் ஷிவானிதான் .அன்று தியேட்டரில் இவனைப் பற்றி அந்த சிறுமி சொன்ன குற்றச்சாட்டு நெருஞ்சிகளாக நிலானியின் மனதிற்குள் விழுந்தன.

இவன் வேடதாரி வெளி உலகிற்கும்  குடும்பத்தினருக்கும்… கசப்பாய் முடிவு செய்தது அவள் மனம்.

What’s your Reaction?
+1
5
+1
3
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!