ramanin mohanam Serial Stories ராமனின் மோகனம்

ராமனின் மோகனம் – 14

14

” இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லைம்மா ” உற்சாகப் பந்தாய் துள்ளிக்கொண்டிருந்த தந்தையை வெறித்தாள் நிலானி.

” அப்படி என்ன பெரிய வாய்ப்பு அப்பா ? ” 

” ஜிபிஎஸ் குரூப் ஆஃப் கம்பெனியோட சம்மந்தி நான். இதை வெளியில் சொல்வதற்கு எவ்வளவு பெருமையா இருக்கும் தெரியுமா ? அதுவும் அந்த கம்பெனியின் ஒரே ஆண் வாரிசான அபிராமனின் மாமனார் ” மீசையை முறுக்கிக்கொண்டார்  திருக்குமரன்.

” அந்த அபிராமனைத்தான் இரண்டு நாட்களுக்கு முன்னால் உங்கள் மகளை கடத்தினானென்று புகார் சொல்லிக் கொண்டிருந்தீர்கள் ” 

” எதை…? அந்த டிவி பேட்டியை சொல்கிறாயா ? டிவியில் ஆயிரம் சொல்லுவோம் .பத்திரிக்கைக்கு இரண்டாயிரம் சொல்லுவோம் . அதெல்லாம் ஒரு கணக்கா ? எல்லாம் முட்டாள் ஜனங்களுக்காக…” 

” மக்கள் சேவையே லட்சியம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர் நீங்கள் ” 

” அட அந்த கன்றாவி பேட்டியை எல்லாம் பேசாதே என்கிறேன் “எரிச்சலோடு ஒலித்த தந்தையின் குரலை நம்பமுடியாமல் பார்த்தாள்.

“இந்த எலெக்சன்ல நான் ஜெயிச்சே  ஆகணும் .அதற்கு எனக்கு பணம் வேண்டும் .நிறைய நிறைய பெட்டி பெட்டியாக வேண்டும். இதுபோல் ஒரு பெரிய இடத்தை வளைத்துப் போட்டுக் கொண்டால்தான் நான் கேட்கும் நேரங்களில் எல்லாம் எனக்கு பணம் கிடைக்கும் .உன்னை மருமகள் ஆக்கிக் கொள்ள இங்கே யாருக்கும் தயக்கம் இல்லை .அதனால் நீ அபிராமனை கல்யாணம் செய்துகொள் ” 

” எல்லாவற்றிற்கும் ஏதாவது ஒரு விலை இருக்கும் அப்பா .இதற்கான விலை உங்கள் மகளின் நிம்மதியாக இருக்கலாம்…”

” அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது .இவ்வளவு பணம் இருக்கும் இடத்தில் நிம்மதி எப்படி இல்லாமல் இருக்கும் ? ” 

நிலானிக்கு திருக்குமரன் புரிந்து கொள்வாரென்ற நம்பிக்கை இல்லை .தேர்தலில் ஜெயித்து முதல்வர் நாற்காலியில் அமர வேண்டுமென்பது அவரது பதினைந்து வருடக் கனவு .

ஒரு வித வெறி என்று கூட சொல்லலாம்..

அரசியலில் வெகுநாட்கள் இருப்பவர்களின் உச்சகட்டமென்பது இந்த நாட்டை ஆளும் ஆசையாகத்தான் இருக்கும் .இவ்வகையில் தந்தையின் ஆசையில் நிலானிக்கு எந்த வருத்தமும் இல்லை .அது அவளை பாதிக்காத வரையில் …

” நான் அம்மாவுடன் பேச வேண்டும் அப்பா .ஏன் அவர்களை அழைத்து வரவில்லை ? ” நைந்த பிள்ளை மனம் தாயை தேடியது .

” கௌசல்யா அக்கா என்னை மட்டும் தானே அழைத்தார்கள் ?  அவர்களை எப்படி மறுக்க முடியும் ? ” 




” அவர்கள் என்ன சொன்னாலும் செய்து விடுவீர்களா அப்பா ? எனக்கு அம்மாவை பார்க்க வேண்டும் .வாருங்கள் நாம் போகலாம் ” 

” நீ இங்கிருந்து போகக்கூடாது நிலானி .உன் அப்பா மட்டும் போய் கல்யாண ஏற்பாடுகளை கவனிக்கட்டும் . கல்யாணம் முடிந்ததும் நாம் சென்னை போகலாம் ”  உறுதியான குரலில் அறிவித்தபடி உள்ளே வந்தார் கௌசல்யா.

இவர் இவ்வளவு நேரமாக எங்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தாரா  நிலானிக்கு திடுக்கிடலாயிருந்தது .சுதந்திரமாக பெற்றவர்களுடன் நாலு வார்த்தை பேசக்கூட முடியாமல் இது என்ன இடம் ? இங்கே இருந்து கொண்டு அவளது வாழ்வின் எதிர்காலத்தை அவளால் எப்படி முடிவு செய்ய முடியும் ?

” இல்லை ஆண்ட்டி நான் சென்னை போய் அம்மாவுடன் பேசி…” 

” தேவை இல்லை என்கிறேன். உன் அம்மாவுடன் நான் பேசி விட்டேன் .கல்யாணத்தின் போது உன் அம்மாவே இங்கே வருவாரே …அப்போது பேசிக் கொள் .நீ கிளம்பலாம் திருக்குமரன் ….” அதிகாரமான கௌசல்யாவின் உத்தரவிற்கு பிறகு திருக்குமரன் ஐந்து  நிமிடங்கள் கூட அங்கே இருக்கவில்லை உடனடியாக கிளம்பி விட்டார்.

மீண்டும் சிறைக்குள் அடைபட்ட உணர்வை அடைந்தாள் நிலானி .இங்கே என்ன நடக்கிறது ? இப்படி மிரட்டி ஒரு திருமணத்தை நடத்த முடியுமா ? ஓடிய எண்ணங்களுக்குள் ஒரு பரபரப்பு .ஒருவேளை அபிராமனுக்கும் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருக்குமோ… யோசித்துப் பார்த்தவளுக்கு அப்படித்தான் என்றே தோன்றியது.

உன்னையெல்லாம் அந்த மாதிரி பார்க்க …என்று இதழ் சுளித்தவன்தானே அவன் . எப்படி திருமணத்திற்கு சம்மதிப்பான் ?இதனை தெரிந்து கொள்ளும் எண்ணத்துடன் அபிராமனை தேடிப்போனாள்  நிலானி.

” அதோ அங்கே ஒன்று வைக்க வேண்டும் ” வீட்டுத் தோட்டத்தில் நின்று வேலை சொல்லிக் கொண்டிருந்தான் அவன். வீட்டை சுற்றி கேமராக்கள் வைக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது .இனி வீட்டு எல்லைக்குள்  யாரும் நுழையக் கூடாது என்பதில் அபிராமன் மிகுந்த உறுதியோடு  இருந்தான்.

” உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் ”  அருகே வந்து நின்றவளை  லேசாக திரும்பிப் பார்த்த தோடு .சரி அடுத்து ஒரு வேலையை சொல்ல போய் விட்டான் . சரி அதிக வேலை தான் முடித்துவிட்டு வரட்டும் அவனது வேலையின் அளவு தெரிந்த நிலானி காத்து இருந்தாள்.

ஆனால் அவர்கள் இருவருமாக தனியாக பேசிக் கொள்ளும் சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை .அங்கும் இங்கும் வேலை என்று 

வீடு தங்காமல்

அலைந்து கொண்டிருந்தவனை பார்த்ததும் நிலானிக்கு அந்த சந்தேகம் வந்தது .இவனுக்கு எங்கள் இருவருக்கும் திருமணம் பேசும் விஷயம் தெரியுமா  ? தெரியாதா ..? முதலில் இதனை தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணினாள்.

” இந்தத் துவையல் உவ்வே ”  தட்டில் வைத்திருந்த துவையலுக்கு முகத்தை சுளித்துக் கொண்டிருந்தால் சுரபி .

” எனக்கும் தான் பிடிக்கல .வேற வழி இல்லாம சாப்பிட்டிட்டு இருக்கேன் .” தன்யாவின் முகத்தில் அவஸ்தை.

 நிலானிக்குமே அந்த துவையல் அப்படித்தான் இருந்தது .முழுதுமாக சாப்பிட்டு முடிக்க முடியும் என்று தோன்றவில்லை. அபிராமனை பார்க்க எந்த பாவமும் காட்டாமல் இயல்பாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான் அவன் .அந்த துவையலையும்  சேர்த்துக் கொண்டுதான்.

என்ன மனிதன் இவன் ?  எப்படித்தான் இப்படி எதற்கு அசங்காமல் இருக்க முடிகிறது ? சட்டென்று தனது தட்டில் இருந்த துவையலை  எடுத்து அவன் தட்டில் போட்டாள் . அவன் திரும்பி முறைக்க ” உங்களுக்கு ரொம்ப பிடித்தது போல் தெரிந்தது அதனால் தான் வைத்தேன் ”  பற்களை காட்டினாள்

உடனடியாக மற்றவர்கள் அனைவருமே இதே போன்ற தப்பித்தலுக்கு  ஆயத்தமாக , அதனை உணர்ந்த அபிராமன் ”  சித்தி இங்கே நிறைய பேருக்கு  திரும்ப துவையல் வேண்டுமாம். கொண்டு வாருங்கள் ” கத்தலாய் சொன்னான்.

அனைவரும் அலறலுடன் தங்கள் தட்டை மூடிக்கொள்ள காலியாக இருந்த  நிலானியின் தட்டில் மீண்டும் துவையல் வைக்கப்பட்டது . ” பிரண்டைத் துவையல் .உடம்புக்கு நல்லது மிச்சம் வைக்காமல் சாப்பிடு ” என்ற அறிவுரையுடன்…

அபிராமனின் அடர்ந்த மீசைக்குள்  ஒளிந்திருந்த சிரிப்பை நிலானியால் உணரமுடிந்தது .பாவி எப்படி கோர்த்து விடுறான்  பாரு …திணறியபடி துவையலை உண்ணத்  துவங்கினாள். அவனோ சலனமின்றி நிலானி வைத்த துவையலையும் சேர்த்து சாப்பிட்டு விட்டு எழுந்தான்.

” உங்களுடன் பேச வேண்டும் ” அவசரமாக முணுமுணுத்தாள்.

” பிறகு ” ஒற்றை வார்த்தை பதிலுடன் வாசலுக்கு நடந்துவிட்டான் . அப்போது வாசலில் ஒரு வாகனம் வந்து நிற்கும் ஓசை கேட்க தொடர்ந்து நாய்களின் குரைக்கும் சத்தம்.

” ஏய் மதுரை வீரனும் கட்டபொம்மனுமா  ? ” சுரபி கிரீச்சிட  அனைவரும் வாசலுக்கு ஓடினர் . தானும் போய் பார்த்த நிலானிக்கு  பய உருண்டை ஒன்று தொண்டைக்குள் உருண்டது.

குதிரை போன்ற உயரத்துடன் இருந்தன அந்த நாய்கள். பின்கால்களை தரையில் ஊன்றி  முன் கால்களை தூக்கி அபிராமனின் தோள்களில் வைத்து குரைத்தபடி இருந்தன. அபிராமன் அவைகளை பாசத்துடன் வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தான் .ஆவலுடன் வாசலுக்கு ஓடி வந்த பெண்கள் அருகே போகவில்லை தள்ளியே நின்று பார்த்தனர்.

” மதுரை வீரனுக்கும் கட்டபொம்மனுக்கும் அபி மட்டும் தான் நல்ல பழக்கம் .வேறு யாருடனும் அது அவ்வளவாக ஒட்டாது .எங்களுக்கெல்லாம் அவற்றை பார்த்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும் ” தன்யாவின் விளக்கத்திற்கு தலையசைத்துக் கொண்ட நிலானிக்குமே அதே உணர்வு தான். இவைகள் என்ன அசுர்ர்களா என்றுதான் அந்த நாய்களை நினைத்தாள்.

” பொம்மு , வீரா  என் பின்னால் வாருங்கள் ” கட்டளையிட்டுவிட்டு அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டை சுற்றி வர துவங்கினான் அபிராமன். வீட்டை காப்பதற்கான பயிற்சி போலும்  இது என நினைத்தபடியே அவர்களை ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நிலானிக்கு அந்த நாயின் பெயர்கள் ஆச்சரியமானது .கட்டபொம்மன் மதுரைவீரன் என்ன அழகான பெயர்கள் .இவன் எதிலும் வித்தியாசமானவன்தான் மனதிற்குள் கொஞ்சம் அவனை பாராட்டி கொண்டாள்.

முதன்முறையாக நிலானியின் பாராட்டை பெற்று இருப்பதை அறியாத அபிராமன் தனது காரியத்தில் கண்ணாக இருந்தான் .வீட்டிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தான். இடையில் அவனது வழக்கமான எஸ்டேட் வேலைகள். ஒரு வாரம் விரைவாகக் கழிந்துவிட அன்று அனைவருமாக வாருங்கள் ஊருக்குப் போகலாம் என்று கிளம்ப எங்கே என்று தெரியாமலேயேதான் காரில் ஏறினாள் நிலானி.

அவர்கள் சென்ற கிராமத்தில் அந்த பெரிய பண்ணை வீடு வாசலில் பந்தலும் வாழைமரமுமாக அவர்களை வரவேற்ற போது கூட  யாருக்குத் திருமணம் என்ற கேள்வியோடு உள்ளே நுழைந்தவளுக்கு கிடைத்த பதில் அந்த திருமணம் அவளுக்குத்தான் என்பது.

” திருமணத்தை சென்னையில் வைக்காமல் இந்த பட்டிக்காட்டில் ஏன் வைக்கிறீர்கள் ? எதை மறைக்கப் பார்க்கிறீர்கள் ? ” அடக்க முடியாமல் கௌசல்யாவிடம் சீறினாள்.




” இந்தப் பட்டிக்காடுதான் எங்கள் சொந்த ஊர் .உன் அப்பாவின் சொந்த ஊர் .உன் தாத்தாவின் சொந்த ஊர் .இதை விட்டுவிட்டு அந்த பகட்டான பட்டினத்தில் உங்கள் திருமணத்தை வைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது ? ” கௌசல்யாவின் கருத்தை  நிலானியால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

திருமணத்திற்கு முதல் நாளைய சடங்குகளில் மறுப்பில்லாமல் கலந்துகொண்ட அபிராமனை ஆச்சரியமாக பார்த்தாள் .இவனுக்கு இந்த திருமணம் ஓகே தானா  ?சடங்குகளின் போது அவனிடம் கிசுகிசுப்பாக கேட்டே விட்டாள்.

” சரி என்பதால் தானே இங்கே உட்கார்ந்திருக்கிறேன் ” அழுத்தமாக வந்தது அவனது பதில்.

அடுத்து ஒரு கேள்விக்கான சந்தர்ப்பம் அவளுக்கு வாய்க்கவே இல்லை அல்லது

  அவன் அளிக்கவே இல்லையா ? 

” என் அம்மா அப்பா  ? ” எனக்  கேட்டவளுக்கு ”  வருவார்கள் ” என்ற பதில் மட்டும் தரப்பட்டது .அவர்கள் சொன்னது போன்றே கல்யாண நாள் அன்று காலை ஆர்ப்பாட்டமாக வந்து இறங்கினார்கள் திருக்குமரனும் செங்கமலமும்.

” அம்மா …” பாய்ந்து சென்று தாயை அணைத்துக் கொண்டாள் நிலானி மெல்லிய விசும்பல் வந்தது அவளிடமிருந்து .செங்கமலம் ஆதரவாக மகளின் தலையை வருடினாள்.

” முகூர்த்தத்துக்கு நேரம் ஆயிற்று அபிராமனின் தந்தை உறுமலாய் குரல் கொடுக்க , திருக்குமரன் வேகமாக செங்கமலத்தின் கையைப் பற்றிக்கொண்டு மணமேடைக்கு வந்தார். தாரை வார்த்துக்கொடுக்கும் சடங்குகள் முடிந்த பின் அபிராமன் நிலானியின் கழுத்தில் தாலி கட்டினான் .

” இதெல்லாம் என்ன அம்மா ? ” தன் கழுத்திலிருந்த மாங்கல்யத்தை எடுத்து காட்டி தாயிடம் நியாயம் கேட்டுக் கொண்டிருந்தாள் நிலானி .இப்போதுதான் அவர்கள் இருவருக்கும் சிறிது ஒதுக்கமாக தனிமையான இடம் கிடைத்தது.

” எல்லாம் உன்னால் உன் நன்மைக்காகத்தானம்மா ”  செங்கமலத்தின் குரல் தழுதழுத்தது.

” உங்களுடன் போனில் கூட பேச முடியவில்லையே ஏன் அம்மா ? ” 

” அது என் போன் ஏதோ ரிப்பேர் ஆகிவிட்டது. வேறு போனுக்கு சொல்லி இருக்கிறேன் .அது வந்ததும் நானே உன்னுடன் பேசுகிறேன் ” 

நிலானி  நம்பிக்கை இல்லாமல் தாயைப் பார்க்க அவள் மகளின் கையை அழுந்த பற்றினாள் .” நம்பு நிலா நிச்சயம் நீ மிக உயர்ந்த வாழ்வு வாழப் போகிறாய் ” 

” இவர்களிடம் இருக்கும் பணத்தை வைத்து தானே இப்படி சொல்கிறீர்கள் அம்மா ? ” உடைந்த மனதுடன் கேட்டாள் நிலானி.

 ” இல்லை நல்ல மனங்களை வைத்து … ” செங்கமலம் பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே …

” என்ன கிளம்பவில்லையா ? ” வெளியே அபிராமனின் அப்பா ராஜமாணிக்கத்தின் குரல் கேட்டது.

உடன் பரபரப்புடன்  ” வா ” என  மகளின் கையைப் பற்றினாள் செங்கமலம்.

” எங்கே அம்மா ? ” 

” உன் தாத்தாவின் வீட்டிற்கு ஆசீர்வாதம் வாங்க….” 

நிலானி அதிர்ச்சியுற்றாள் ”  எனக்கே தெரியாமல் இங்கே எனக்கு ஒரு தாத்தா வீடா ? ” 




ஆசீர்வாதத்திற்கு என்று அவர்கள் போய் நின்ற இடம் ஒரு ஓட்டு வீடாக இருப்பதை நம்பமுடியாமல் பார்த்தபடி நின்றாள்.

” இங்கே இருக்கும் உங்கள் தாத்தாவிற்கு உன் அப்பா மிகுந்த அநியாயங்கள் செய்திருக்கிறார் ” அறிவிப்பாய்  அவள் காதுகளில் விழுந்தது அபிராமனின் குரல்.

இருக்கலாம் …சாதாரண வாழ்க்கையிலேயே தாய் தந்தையை தனிமைப்படுத்தி விரட்டும் இன்றைய சூழலில் , நாட்டுக்கென ஒரு பொது வாழ்வு வாழும் தனது தந்தையிடம் இதனை பெரிய குறையாக  நிலானி நினைக்கவில்லை .

அவள் அன்று தனது தாத்தாவை சந்திக்கவில்லை .

What’s your Reaction?
+1
8
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Priya
Priya
4 years ago

Nice story mem

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!