pacha malai poovu Serial Stories பச்சைமலை பூவு

பச்சை மலை பூவு – 24

24

” இங்கே இப்படி உட்காருங்கள் அம்மா .பையன் வருவான் ” அவர்களுக்கு ஓரமாக கிடந்த பெஞ்சை காட்டிவிட்டு உள்ளே போனார் அந்த ஹாஸ்டல் ஊழியர்.

தேவயானியும் சொர்ணமும் அந்த பெஞ்சில் போய் அமர்ந்தனர். அவர்கள் அரவிந்தை பார்ப்பதற்காக அவன் தங்கியிருந்த கல்லூரி விடுதிக்கு வந்து இருந்தனர்.

” அம்மா , அக்கா…”  லேசான கத்தலோடு சுற்றி இருப்பவர்களைப் பற்றிய கவலையின்றி இரு கைகளையும் விரித்துக் கொண்டு அவர்களை நோக்கி வேகமாக வந்தான் அரவிந்த்.




” எல் கே ஜி யில் நீ படித்துக்கொண்டிருக்கும்போது மாலை உன்னை கூப்பிட வருகையில் இப்படித் தானடா கைவிரித்து ஓடி வருவாய் .இன்னமும் அதே போலத்தான் இருக்கிறாய் ” செல்லமாக சிரித்தபடி சொன்னாள் சொர்ணம்.




” நான் இன்னமும் அதே உங்கள் செல்ல பிள்ளை தானம்மா ” அம்மாவின் தோளில் சாய்ந்து கொண்டான் அரவிந்தன்.

” நீயெல்லாம் இன்னமும் மூன்று வருடங்களில் டாக்டராகி , உன்னிடமெல்லாம் நாங்கள் வைத்தியம் பார்க்க வேண்டியிருக்கிறது பாரேன் .பாவம்டா நம் மக்கள் ” தேவயானி தம்பியை கிண்டல் செய்ய ,அவன்

”  அக்கா வேண்டாம் .என் திறமையை இப்படி சந்தேகப்படாதீர்கள் ” கோபம் போல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டான்.

” அட என் திறமையான தம்பியே… உன்னை தெரியாமல் தப்பாக நினைத்து விட்டேனடா ” என தேவயானி விளையாட்டாக கன்னத்தில் போட்டுக் கொள்ள அரவிந்தன் அக்காவின் கையையும் பிடித்து தன்னோடு சேர்த்து பிடித்துக்கொண்டு கடகடவென சிரித்தான்.

” அரவிந்த் உனக்கு பீஸ் கட்டியாச்சுடா  ” தேவயானி சொல்ல அரவிந்தனின் முகத்தில் மகிழ்ச்சி கூடாரம்.

”  ரொம்ப நன்றி அக்கா ” 

” ஏய் என்னடா பெரிய மனுசன்  மாதிரி நன்றி எல்லாம் சொல்லிக் கொண்டு …” செல்லமாய் கடிந்தாள்.

” இந்த தடவை அண்ணன் ரொம்ப கஷ்டப் படுத்திட்டாரா ? ”  அம்மா ,  அக்கா இருவரையும் மாறி மாறி பார்த்தான் அரவிந்தன்.

” அதெல்லாம் ஒன்றம் இல்லைடா .அண்ணனுக்கு பணம் ரெடி பண்ண கொஞ்சம் நாள் ஆகிடுச்சு. அவ்வளவுதான் ” சொர்ணம் மகனை சமாதானம் செய்தாள்.




” அண்ணன் என்ன சொன்னார் அக்கா  ? ” அடுத்த கேள்வியை தமக்கைக்கு கொடுத்தான்.

” அதுதான் அம்மா சொன்னார்களேடா .அண்ணனுக்கு கொஞ்சம் செலவு இருந்தது .அதனால்தான் உனக்கு பீஸ் கட்ட தாமதமாகிவிட்டது. வேறு ஒன்றும் இல்லை ” 

” அக்கா …வந்து …உ…உங்க  பணத்தில் இருந்து எதுவும் எடுக்கவில்லையே ? ” தயங்கி தயங்கி கேட்டான்.

தேவயானி பாசத்துடன் தம்பியை பார்த்தாள். அவளுக்கென்று அப்பா சேர்த்து வைத்துவிட்டு போயிருக்கும் நகையும் பணமும் பேங்கில் இருக்கிறது .அவற்றின் மீது எப்போதும் சுனந்தாவிற்கு ஒரு கண் உண்டு. ஏதாவது அவர்களுக்கு சிறு பண இக்கட்டு வரும்போதும் உடனே அவள் முதலில் சொல்வது அந்த நகைகளையும் பணத்தையும் தான்.

” எங்களுக்கு தர வேண்டாம். உன் தம்பிக்காவது தரலாம் தானே ..? ” அரவிந்தனை முதன்முதலில் காலேஜில் சேர்க்கும்போது தேவயானியின் நகைகளை குறிவைத்து தலைகீழாக நின்று பார்த்தாள் .

” விற்கவா சொல்கிறேன் …அடமானம் தானே ? பிறகு உங்கள் அண்ணனே மீட்டுக் கொடுத்து விட்டு போகிறார் ” பல விதமாக பேசி பார்த்தாள்.

ஒருவேளை அந்த நகையும் பணமும் தேவயானியின் பொறுப்பில் இருந்திருந்தால் அவள் எடுத்துக்கொடுத்து இருக்கக்கூடும் .இதனை முன்பே ஊகித்தோ என்னவோ சங்கரன் அந்த பொறுப்பை தன் மனைவியிடம் கொடுத்துவிட்டு போயிருந்தார் .சொர்ணத்தின் கையெழுத்து இன்றி அவற்றை பேங்கில் இருந்து எடுக்க முடியாது .சங்கரனுக்கு பிறகு பல நேரங்களில் அந்த நகையும் ,  தொகையும் அக்னி பரிட்சைக்கு வாசல்  வரை சென்று  மீண்டு வந்திருக்கிறது.

எப்போதும் அவர்கள் குடும்பத்தின் மீதான மோதல்களை தன் கணவன் மூலமாகவே செய்யும் சுனந்தா இந்த நகை விஷயத்தில் மட்டும் கணவனிடம் போக மாட்டாள் .அது அவளுக்கு தோல்வியை தரும் என்று தெரிந்திருப்பாளாயிருக்கும்  என்று தேவயானி கணித்து இருந்தாள்.

அது என்னவோ சுந்தரேசனுக்கும் கூட அந்த நகையை  எடுத்து செலவழிக்கும் எண்ணம் இதுவரை வந்ததில்லை .அண்ணனிடம் முயன்று முடியாமல் தான் அண்ணி தன்னிடமும் அம்மாவிடமும் அது சம்பந்தமாக மோதி இருக்கிறாள் என்று தேவயானி முன்பே யூகித்து வைத்திருந்தாள் .இந்த விஷயத்தில் சுந்தரேசன் கொஞ்சம் கறார்தான் .தங்கைக்கு உரியவை .அவற்றை தொடக்கூடாது என்று வைராக்கியமாகவே இருந்து வந்தான் .அந்த வகையில் அண்ணனை நினைக்கும்போது தேவயானிக்கு கொஞ்சம் பெருமைதான்.

” என்னடா உனக்கு தெரியாதா ? அக்காவின் நகையை நாம் தொடுவோமா ?  அண்ணன் அதை திரும்பி கூட பார்க்க மாட்டார் என்று உனக்கு தெரியாதா  ? ” சொர்ணம் கேட்டதும் அரவிந்தனின் முகம் தெளிந்தது.

“ரொம்ப சந்தோசம் அம்மா ” குழந்தை போல் தாயின் தோள்களில் தலை சாய்த்துக் கொண்டான்.




“உன்னை பார்ப்பதற்காகவே ஒருமணிநேரம் காத்திருந்திருக்கிறோம் . தொண்டை காய்ந்து விட்டது …ஒரு காபி குடிக்கலாம் என்றால் அம்மாவும் மகனும் பிரிந்து எழுந்து வர மாட்டீர்கள் போலவே ” தேவயானி அவர்களை கிண்டல் செய்தாள்.

” காபி வேண்டுமா அக்கா …வாங்க கான்டீன் போகலாம் ” எழுந்த அரவிந்தனை தோள் அழுத்தி உட்கார வைத்தாள்.

” நீயும் அம்மாவும் பேசிக் கொண்டிருங்களடா . நான் போய் காபி குடித்துவிட்டு உங்களுக்கும் வாங்கி வருகிறேன் ” ஆணோ , பெண்ணோ தன் தாயுடனான சிறு தனிமையை  …இடையூறற்ற பாச பரிமாறலை எந்த வயதிலும் விரும்புவார்கள் என எண்ணிக்கொண்ட தேவயானி அக்காவாக இருந்தாலும் அம்மா மகனுக்கு இடையே ஒரு தனிமையை உண்டாக்கி விட்டு நகர்ந்தாள்.

” அரவிந்த் நீ படித்து முடித்ததும் அக்காவை மறந்துவிடக்கூடாது .மிகவும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்.”  சொர்ணம் நா தழுதழுக்க இளைய மகனிடம் வேண்டினாள்.




” என்னம்மா இதை நீங்கள் எனக்கு சொல்லவேண்டுமா ? அக்காவை விடுவேனா நான் ? ஏனம்மா இந்த தடவை பீஸ் கட்டுவதற்கு அக்கா தான் அண்ணாவிடம் பேசினார்களா ? ” 

 யூகமாய் கேட்ட மகனின் கன்னத்தில் தட்டிய சொர்ணம் ” இல்லை .அக்கா அண்ணாவிடம் பேசவில்லை .ஆனால்  உனக்கென நிறைய செய்திருக்கிறாள் .அது உனக்கு வேண்டாம் .சொன்னால் புரியாது .உன் படிப்புக்கு அக்கா அதிகம் உதவியிருக்கிறாள் . இதை மட்டும் நீ எப்போதும் மனதில்  வைத்துக்கொள் ” என்றாள் .

” சரிம்மா ” அரவிந்தன் தலையசைத்தான்.

” என்னம்மா அம்மாவும் மகனும் ஒரே கொஞ்சல் போல ” தஞ்சையில் இருந்து பஸ்ஸில் திரும்ப வரும்போது தேவயானி தாயை கிண்டல் செய்தாள்.

” உன்னைப் பற்றி தான்மா பேசிக்கொண்டிருந்தோம் ”  சொர்ணம் மெல்ல சொன்னாள்.




” என்னைப்பற்றியா …? அப்படி பேச என்ன இருக்கிறது ? ” 

சொர்ணம் பெருமூச்சுடன் பஸ் சீட்டில் பின்னால் நன்றாக சாய்ந்து கொண்டாள் .” ரிஷிதரன் தம்பியை வெளியேற்ற வேண்டும் என்று சுனந்தா உன்னை கட்டாயம் செய்தாளா ? ” 

தேவயானி திடுக்கிடலுடன் இது எப்படி உங்களுக்கு தெரியும் என்பதுபோல் தாயைப் பார்த்தாள்.

” நான் அடுப்படிக்கு உள்ளேயே இருந்தாலும் , என் கவனமெல்லாம் எப்போதும் என் பிள்ளைகள் மேல் தான் இருக்கும் தேவயானி. ரிஷிதரனுக்கு இங்கிருந்து போகும் எண்ணம் சிறிதும் இல்லை. சுந்தரேசன் அவரை வெளியேற்றி இருக்கமாட்டான் .அவரை நம் குடிலை விட்டு வெளியே போக வைத்தது நீ மட்டுமாகத்தான் இருக்க வேண்டும் .அதன் காரணகர்த்தா யுவராஜ் தானே ? ” 

” அதனால் என்ன அம்மா ..அவர் எத்தனை நாட்கள் தான் நம் இடத்தில் தங்க முடியும் ? என்றாவது ஒருநாள் வெளியேறி தானே ஆகவேண்டும் ? ” 

சொர்ணத்திடம் மீண்டும் பெருமூச்சு .கண்களை இறுக மூடிக் கொண்டாள்”  நான் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் ” 

” சரிம்மா ” என்றுவிட்டு  வெளிப்புறம் பார்வையை செலுத்தினாள்  தேவயானி.எதிரில் 

அசுரவேகத்தில் அவர்களை எதிர்த்து பின்னால் போய்க்கொண்டிருந்த மரங்களின் வேகத்தினாலோ என்னவோ அவள் கண்கள் கலங்க துவங்கியது.

சை,  என்ன இது எதற்கும் கலங்காதவள் .காரணமே தெரியாமல் இப்போதெல்லாம் அடிக்கடி கண்கள் கலங்குவது ஏன் …?இப்படி எல்லாம் அழக் கூடியவள் இல்லை தேவயானி .அவளுக்கு நினைவு தெரிந்து இறுதியாக அழுதது தந்தையின் மறைவின் போதுதான். அதுவும் ஆரம்ப அதிர்ச்சியில் கத்தி அழுது விட்டு,  பிறகு தன்னை சமாளித்து அழுகையை அடக்கிக் கொண்டு கதறிக் கொண்டிருந்த தாயை சமாதானப்படுத்த துவங்கினாள். 17 வயதிலேயே அவளது அந்த தைரியத்தை உறவினர்கள் ஆச்சரியமாக பார்த்தனர்.

ஆனால் இப்போதெல்லாம் அடிக்கடி கண்கள் கலங்குவதன் காரணம் தேவயானிக்கு புரிபடவில்லை. இந்த யுவராஜ் உடனான திருமண பேச்சிற்கு பிறகுதான் இப்படி தன் கண்கள் தானாகவே கலங்குவதாக  உணர்ந்தாள்.

டீ தேவயானி , நீ எவ்வளவு பெரிய தைரியசாலி …இந்த யுவராஜ் என்ன பெரிய ஆள் …அவனை கண்ணுக்குள் கண் நேர்  பார்வை பார்த்தால் உடனே பம்முவான் .அவனை சமாளிக்க உன்னால் முடியாதா ? நம் நாட்டில் எத்தனையோ பெண்கள் தலையெழுத்தாக வந்து சேர்ந்துவிட்ட புருசனை சமாளித்து தங்கள் பக்கம் மாற்றி குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கவில்லையா ? உன்னால்… தி கிரேட் தேவயானி… திமிர்பிடித்த தேவயானி …அகம்பாவம் பிடித்த தேவயானி …உன்னால் அவனை சரிப்படுத்த முடியாதா ? 

தனக்குத்தானே உரமூட்டிக்கொண்டு தலை உயர்த்திக் கொண்டவளின் இதழ்களில் புன்னகை வந்துவிட்டிருந்தது .திமிர் …அகம்பாவம் …நினைத்த உடனேயே ரிஷிதரனின் நினைவும் வந்துவிட்டது.

” இன்ட்ரெஸ்டிங் மேன் ,அட் தேட் டைம் வெரி டேன்ஞ்சரஸ் ” சத்தம் வெளியே வராமல் இதழ் மட்டும் அசைத்து அவனை விமர்சித்து கொண்டாள்.

அப்போது அவர்கள் பஸ் அருகே இணையாக கடக்க முயன்ற அந்த காரைப் பார்த்ததும் அவள் விழிகள் விரிந்தன. அதனுள் இருப்பது ரிஷிதரனா …?  அவனேதான் .அந்த கார்  ஐந்து நிமிடங்களாக அவர்கள் பஸ்சை முந்தும் முயற்சியில் இருந்தது. இப்போதுதான் அதன் ஜன்னல் கண்ணாடிகள் இறக்கப்பட்டன. அதோ அங்கே டிரைவர் இருக்கையில் அமர்ந்து இருப்பது ரிஷிதரன்தான் .அவன் வாயில் புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டை ஜன்னல்வழியாக வெளியே வீசினான் .மீண்டும் ஒன்றை பற்ற வைத்துக் கொண்டான்.




அருகில் அமர்ந்திருந்தவனிடம் திரும்பி ஏதோ சொல்ல,  அவன் வாயைத் திறந்து குதிரை கனைப்பது போல் செய்தான் .சிரிக்கிறானாம் … அத்தோடு பின்பக்கம் திரும்பி ஏதோ சொல்ல , பின் சீட் ஜன்னல் கண்ணாடி திறக்காமல் இருக்க உள் இருக்கும் ஆட்கள் தெரியவில்லை .இப்போது தேவயானி சென்றுகொண்டிருக்கும் பஸ் வேகம் குறைத்து அந்தக் காருக்கு வழிவிட , கார் வேகமாக அவர்களை முன்னேறிச் செல்ல மிகச்சரியாக தேவயானியை கடக்கும் நேரத்தில் , காரின் பின் சீட்டில் இருந்து பெண் ஒருத்தி முன்னால் இருந்த ரிஷிதரனின் கழுத்தை பின்னிருந்து கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள்.அந்த காட்சியின் போது கார் அவர்களை தாண்டி விரைந்து சென்று  நிமிடத்தில் மறைந்துவிட்டது.

தேவயானி அவர்கள் பக்கத்து ஜன்னலின் கண்ணாடியை இழுத்து மூடினாள் .இவன் திரும்பவும் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டான்.  எங்கள் இடத்தில் இருக்கும் வரை பெரிய உத்தம சீலன் போல் வேஷம் போட்டுக் கொண்டிருந்தான் .இந்த லட்சணத்தில் ‘சொன்னால்தான் வருவேன் ‘என்று குறிப்பு வேறு …நீ இனிமேல் எங்கள் குடிலுக்குள் நுழையவே முடியாது .அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். மனதுக்குள் சூளுரைத்தபடி இறுக மூடிக் கொண்ட தேவயானியின்  இமைகளின் பின்னால் கருவிழிகள் நீருக்குள் கயலென மிதந்து கொண்டிருந்தன.


” மருதாணி …மருதாணி ”  திரும்பத் திரும்ப கதவை தட்ட , மருதாணி எழுந்து வரவில்லை .அவள் அம்மா சௌந்தரம்தான் எழுந்து வந்து கதவை திறந்தாள்.

” வாங்கம்மா .அந்த கழுதை இன்னமும் தூங்கிக்கிட்டு இருக்கு .இதோ எழுப்புறேன் ”  தலை முடியை அள்ளி முடிந்துகொண்டு உள்ளே போனாள்.

தலையைக் குனிந்து அந்த குடிசைக்குள் நுழைந்த தேவயானி ஓரமாக கோரைப் பாயில் சுருண்டிருந்த மருதாணியின் தோள் தொட்டு அசைத்தாள்.

” மருதாணி என்ன இப்படி தூங்குகிறாய் ? இன்று மூலிகை பறிக்க போக வேண்டுமே ” 

” ம் …ரொம்ப அலுப்பாக இருந்தது அக்கா .எழுந்திருக்கவே முடியவில்லை ” கண்களை தேய்த்துக்கொண்டு புரண்டாள்.

“ஏய் அம்மா கூப்பிடுறாகள்ல . எந்திரிச்சு போடி .விட்டா சூரியன் உச்சிக்கு வரவரைக்கும் தூங்குவா .மூஞ்சில தண்ணிய ஊத்தி கூட்டிட்டு போங்கம்மா ” சௌந்தரம் குரல் கொடுக்க மருதாணி எழுந்து உட்கார்ந்து விட்டாள்.

அலுத்து தெரிந்த அவள் தோற்றத்தில் கொஞ்சம் பரிதாபம் வந்தாலும் , இந்த வயதில் இது என்ன சோம்பல் …சுறுசுறுப்பாக காலையிலேயே எழுந்து படிக்க வேண்டாமா ? என்று நினைத்தவள் அவள் கையை பிடித்து இழுத்து எழுப்பினாள்.

அத்தோடு அன்று தேவயானிக்கும் மனதை இலகுவாக்கும் இந்தப் வனப் பயணம் மிகவும் தேவையாக இருந்தது .இயற்கையோடு இணைந்து நடக்கையில் மனபாரம் குறைந்து போகும் அல்லவா …மூலிகை காற்றை சுவாசித்தபடி மலைப்பாதையில் இருவரும் நடந்தனர்.




” உனக்கு பரீட்சை நெருங்கி விட்டது தேவயானி .இனி நீ தினமும் காலையில் எழுந்து படிக்க உட்கார வேண்டும் ” தேவயானியின் கண்டிப்பிற்கு ‘ உம் ‘ கொட்டினாள் மருதாணி.

கையில் வைத்திருந்த கொம்பால் செடிகளை விலக்கிக்கொண்டு சிறு கம்பு ஒன்றால் நடைபாதையில் சரசரவென சத்தம் எழுப்பிக் கொண்டு இருவரும் முன்னேறினர் .எப்போதும் கலகலப்பு நிறைந்து கிடக்கும் அவர்களது பயணம் இன்று ஏனோ மிக அமைதியாக இருந்தது.

” கொஞ்ச நாட்களாகவே நமது விடுதி ரொம்பவுமே வெறிச்சோடிப் போய்க் கிடக்கிறது. இல்லையா அக்கா ? ” 

” அப்படியா சில நாட்களாகவே நமது குடிலின் எல்லா அறைகளும் நிறைந்திருக்கின்றன .பிறகு ஏன் உனக்கு இப்படி தோன்றுகிறது மருதாணி ? ” 

” ப்ச் … ஏனோ தோன்றுகிறது ” விட்டேற்றியாய்  பதிலளித்த மருதாணி சிறிதுநேரம் மௌனமானாள்.பிறகு …

” அக்கா ரிஷிதரன் அண்ணா திடீரென்று நம் குடிலை விட்டு போன காரணம் உங்களுக்கு தெரியுமா ? ” என்றாள் .

” எனக்குத் தெரியாது ” 

” பொய் சொல்லாதீங்க அக்கா .நீங்கள் தான் அவரை இங்கிருந்து விரட்டி விட்டீர்கள் என்று நினைக்கிறேன் ” 

” எதனால் நீ அப்படி நினைக்கிறாய்  ? ” திடீரென்று அவர்கள் இருவருக்கும் பின்னால் இருந்து வந்த குரலுக்கு திடுக்கிட்டு திரும்ப அங்கே யுவராஜ் நின்றிருந்தான்.

தேவயானி கேள்வியோடு அவனையே பார்த்தபடி நிற்க”  நீங்கள் இங்கே வந்தீர்கள் சார் ? ”  விசாரித்தவள் மருதாணி.

” உங்களுக்கு துணையாகத்தான் .பெண்கள் இருவராக தனியாக இந்த இருட்டு நேரத்தில் காட்டுக்குள் வந்திருக்கிறீர்களே… பாதுகாப்பாக கூட வருவோம் என்று ….” பேசிக் கொண்டு போனவன் திடுமென பக்கத்து புதரில் எதுவோ ஓடும் சத்தம் சரசரவென கேட்க  “ஓவ் ” என்ற சத்தத்துடன் பதறி ஓரம் நகர்ந்து நின்றான்.

தேவயானி சிரிப்பை அடக்க,  மருதாணி வாய்விட்டு சிரித்து விட்டாள் . யுவராஜ் அவளை முறைத்தான் .” பாவம் உங்களுக்கு ஏன்  வீண் கஷ்டம் ? இந்த பகுதி உங்களுக்கு பழக்கமானது இல்லை .ஆனால்  எங்களுக்கு பழக்கமான இடம் தான். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நீங்கள் குடிலுக்கு போங்க ” 

தேவயானியின் சொல்லை தீவிரமாக தலையசைத்து மறுத்தான் யுவராஜ் .” இல்லை… இல்லை உங்களை …பெண்களை மட்டும் தனியாக காட்டுக்குள் அனுப்பிவிட்டு நான் மட்டும் எப்படி வீட்டில் இருப்பேன். வாருங்கள் எல்லோருமே போகலாம் ” 

சிறிய சுதந்திர காற்று …அதுவும் கிடைக்கவில்லையா …?சலித்தபடி தேவயானி நடக்க , எரிச்சலை வெளிப்படையாக காட்டியபடி மருதாணி நடந்தாள்.







இது என்ன செடி , அது என்ன கொடி , இதனை எதற்கு உபயோகிப்பாய் ? எப்படி பக்குவப்படுத்துவாய் ? சம்பந்தமில்லாமல் உளறியபடியே இருந்தான் யுவராஜ் .சிறிது நேரம் கழித்தே இரண்டு பெண்களும் அதனை உணர்ந்தனர் .

யுவராஜ் பேசிய விபரம்,  நடந்த விதம் , நின்ற தோரணை என எல்லாவற்றிலும் அப்படியே ரிஷிதரனை  நகல் எடுக்க முயன்று கொண்டிருந்தான். அதாவது தன்னை ரிஷிதரனாக எண்ணிக் கொண்டு ஒவ்வொரு செயலையும் செய்து கொண்டிருந்தான்.

” புலியை பார்த்து பூனை சூடு போடுகிறது ” முணுமுணுத்து விட்டு மருதாணி முன்னால் நடந்து விட்டாள். இதுபோன்ற கொடுமை எல்லாம் தொடர்ந்து தாங்க முடியுமா… என்ற கவலையுடன் மறந்தும் அவன் பக்கம் திரும்பி விடாமல் 

தளர்வாய் நடந்தாள் தேவயானி.

” தேவயானி நீ ஒன்று கவனித்தாயா  ? ” குரலை தாழ்த்தி அவளை நெருங்கி கிசுகிசு  பேச முயன்றான் அவன்.

வேகமாக அவன் அருகாமை விட்டு நகர்ந்து கொண்டு”  என்ன விஷயம் சொல்லுங்கள்  ” என்றாள்.

” இந்த மருதாணி கொஞ்ச நாட்களாக சரி இல்லை .ஒரு மாதிரி பித்து பிடித்தவள் போல் இருக்கிறாள்  கவனித்தாயா ? ” 

” ஆமாம் அவள் ஏதோ உடம்பு சரி இல்லை என்று சொன்னாள் ” 

” அதனை நீ நம்புகிறாயா ? நீ ரொம்ப அப்பாவி தேவயானி. இந்த குட்டி சரியில்லை…” 

” இது என்ன வார்த்தை ?ஏன் இப்படி அவளை அழைக்கிறீர்கள் ? ஒழுங்காக பெயர் சொல்லி கூப்பிடுங்கள் ” முகம் சுளித்து கண்டித்தாள்.

” ஆமாம் ஆமாம் இவளை குட்டி கணக்கில் சேர்க்க முடியாது .இவள் பெரிய வேலைகளை எல்லாம் செய்பவள் .அந்த ரிஷிதரன் நம் விடுதியை விட்டு போனபிறகு தான் இவளுடைய நடவடிக்கை இப்படி மாறிவிட்டது தெரியுமா ? ” 

” இப்போது என்னதான்  சொல்ல வருகிறீர்கள் ? ” 

” அந்த ரிஷிதரனுக்கும் …இந்த குட்டிக்கும் ஏதோ தவறான….” 

” வாயை மூடுங்கள் ” குரல் உயர்த்தி கத்தினாள். அந்த சத்தத்திற்கு முன்னால் நடந்து கொண்டிருந்த மருதாணி திரும்பிப் பார்த்தாள்.




” அக்கா ” என்ற அவளை மேலே நடக்குமாறு சைகை காட்டிவிட்டு யுவராஜை முறைத்தாள் தேவயானி.

” சீ  எவ்வளவு குப்பையாக மனதை வைத்திருக்கிறீர்கள் ? ” 

” நான் சொன்னால் நீ நம்ப மாட்டாய் 

.ஆனால் இதுதான் உண்மை .இந்த குட்டி செய்யும் புரட்டெல்லாம்  வெளியே தெரிய வரும் போது நீயே என்னிடம் ஓடி வருவாய் பாரேன் ” சவால் போல் பேசினான்.

உன்னிடம் ஓடி வரும் கொடுமை மட்டும் எனக்கு எந்த காலமும் வரக்கூடாது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் தேவயானி.

What’s your Reaction?
+1
1
+1
3
+1
0
+1
1
+1
0
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!