pacha malai poovu Serial Stories பச்சைமலை பூவு

பச்சை மலை பூவு – 23

23

” அரவிந்துக்கு செமஸ்டர் ஃபீஸ் கட்ட வேண்டும் சுந்தர் ”  சொர்ணத்தின் பேச்சுக்கு சுந்தரேசனிடம் லேசான தலையசைப்பு கூட இல்லை .மௌனமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

இப்படி அவன் மௌனமாக இருந்தானென்றால் அவனிடம் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு குறைந்தது ஒரு மாதங்களாவது ஆகும் என்று அர்த்தம் .அரவிந்துக்கு பணம் கட்ட இன்னமும் ஒரு வாரமே டைம் இருப்பது தேவயானியின் நினைவுக்கு வந்தது.

முன்னமே சொல்வதற்கு என்ன என்று தேவைகளைக் கேட்பதற்கு எரிந்து விழும் சுந்தரேசன் சொல்லும் ‘முன்னமே ‘ஒரு மாதங்களுக்கு முன்னால் ஆகும். எனவே சொர்ணம் இரண்டாவது மகனின் படிப்பு சம்பந்தப்பட்ட செலவுகளை ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே அவ்வப்போது முதல் மகனின் காதில் போட்டுக் கொண்டே இருப்பாள்.




முதல் நான்கைந்து தடவைகள் காதில் வாங்காதது போல் நகர்ந்துவிடும் சுந்தரேசன் பிறகு வரும்  சில தடவைகள் ‘ உம் ‘  என்று ம் கொட்டுவான் .அதன்பிறகு சில தடவைகள் சரிம்மா கட்டி விடலாம் என்று திருவாய் மலர்ந்து அருளுவான். அந்த ஒப்புதல் பேசிய நாட்களிலிருந்து  ஒரு வாரத்திற்குப் பிறகு அரவிந்தனின் காலேஜ் ஃபீஸ் கட்டப்படும். அந்நேரத்தில் பீஸ் கட்டும் நேரம் தாண்டி சிறிது பைனும்   சேர்ந்திருக்கும்.முணுமுணுத்துக்

கொண்டே அதையும் சேர்த்து கட்டுவான் சுந்தரேசன்.




இது தான் அவர்கள் வீட்டின் வழக்கமான நடைமுறை .இந்த முறை அரவிந்தனின் விஷயத்தை சுந்தரேசன் ‘ உம் ‘ கொட்டும் இடத்திற்கு  கொண்டுவந்து போன வாரமே நிறுத்தி வைத்து இருந்தாள் சொர்ணம் .ஆனால் திடீரென்று இப்போது மீண்டும் முதல் படிக்கே போகிறான் சுந்தரேசன் .இனி மற்ற படிகளை கடந்து அவன் சரியென்று பேசும் கட்டத்திற்கு வரும்போது அரவிந்தனுக்கு நிச்சயம் செமஸ்டர் ஆரம்பத்திருக்கும்.

பரிச்சை எழுத முடியாது என்ற கவலைக்கும் …அதனால் என்ன அடுத்த செமஸ்டரில் சேர்த்து எழுதிக் கொண்டால் ஆயிற்று என்ற அருமையான பதிலையும் வைத்திருப்பான் சுந்தரேசன். ஒரு வார்த்தை பேசாது எழுந்து கை கழுவிக் கொள்ளும் அண்ணனை கலக்கமாக பார்த்தாள் தேவயானி.

அவள் பார்வை அடுப்படிக்கு உள்ளே செல்ல அங்கே கதவு மறைவில் நின்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த சுனந்தாவின் சேலை நுனி தெரிந்தது .கணவனை முன்னால் அனுப்பிவிட்டு பின்னால் நின்று வேவு பார்க்கிறாள் .தேவயானிக்கு  சீயென்று வந்தது.

மேலும் நான்கு நாட்கள் சுந்தரேசனின் மௌனத்தை சந்தித்துவிட்டு கலக்கமாய் தெரிந்த தன் தாயைப் பார்த்ததும் தேவயானி இந்த பிரச்சனையின் சூத்திரதாரியையே நேரடியாக சந்திக்க முடிவு செய்தாள்.

” பீஸ்தானே கட்டிவிடலாம் ” உடனடி ஒப்புதல் கொடுத்த அண்ணியை கூர்ந்து பார்த்தாள். இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் எந்த பூகம்பத்தை ஒளித்து வைத்திருக்கிறாள் இவள்…




” இங்கே பார் தேவையானி , நம்முடைய குடும்ப நிலைமை உனக்கு மிக நன்றாகவே தெரியும் .உன்னுடைய கல்யாணம் , உன் தம்பியுடைய படிப்பு என்று… எங்களுக்கென்று ஒரு தனி வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாமல் அவ்வளவு செலவுகள் உன் அண்ணனின் தலையில் வந்து உட்கார்ந்து கொண்டே இருக்கிறது .என்னையோ , எங்கள் மகன் விநாயக்கையோ உன் அண்ணன் ஒரு நிமிடம் கூட நினைத்துப் பார்ப்பதே கிடையாது .அவருடைய நினைவுகள் எல்லாம் அம்மா , தங்கை , தம்பி… இப்படித்தான் இருக்கிறது .இந்த நிலைமையில் அடுத்தடுத்து

செலவுகள் மட்டுமே இருக்கும் இந்த குடும்பத்தில் என்னை கல்யாணம் செய்து கொடுக்கவே எங்கள் வீட்டில் மிகவும் யோசித்தார்கள் .ஆனாலும் ஏதோ ஒரு கெட்ட நேரத்தில் எங்கள் திருமணம் முடிவாகிவிட்டது என்று வை…” 

தேவயானிக்கு எரிச்சல் வந்தது .எந்த பெண்ணாவது தனது திருமணம் முடிவான நேரத்தை கெட்ட நேரம் என்று சொல்வாளா … என்ன பெண் இவள் ? 

” ஒருவகையில் இது ஒரு தியாகம் போலத்தான் ” வராத கண்ணீரை துடைத்துக் கொண்டாள் சுனந்தா. என்ன நடிப்பு …தேவயானியால்  வியக்காமல் இருக்க முடியவில்லை. பேசிய நகையை போடாமல் கல்யாணச் செலவு என்று பைசா செலவளிக்காமல் அவர்கள் மகளை தள்ளிவிட ஒரு இடம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சுனந்தாவின் பெற்றோர்கள். சுனந்தாவின் பொன்னிறத்தில் சுந்தரேசன் மயங்கி விட்டதை உணர்ந்தவர்கள் அப்பாவி சொர்ணத்திடம் எதை எதையோ பேசி சமாளித்து எப்படியோ ஒப்பேற்றி திருமணத்தை முடித்துவிட்டு இருந்தார்கள்.

உண்மை இவ்வாறு இருக்க சுனந்தாவின் தியாக சீலி வேடத்திற்கு தேவயானியின் மனம் மிகவும் நொந்தது .சுனந்தாவின் வீட்டில் யுவராஜுக்கு கிடைத்த வெளிநாட்டு வேலை எதேச்சையாக அமைந்துவிட , தாங்கள் ஒரு பரம்பரை பணக்கார குடும்பம் என்பதுபோல் சுனந்தா வீட்டினர் நடந்து கொள்ள ஆரம்பித்தனர் .சுந்தரேசனின் திருமணம் முடிந்த ஒரு வருடத்திலேயே யுவராஜ் – தேவயானி திருமணத்தைப் பற்றி அவர்கள் வீட்டில் பேசிவிட்டனர் . அப்போது அவர்களுடைய குறி தேவயானிக்கு என்று அவளுடைய அப்பா சங்கரன் சேர்த்து வைத்துவிட்டு போய் இருந்த 50 பவுன் நகைகள் மற்றும் கல்யாண செலவிற்கு என்று பேங்கில் போட்டு வைத்திருக்கும் சில லட்சங்கள் .இவைகளை அப்படியே விள்ளாமல் விரியாமல் தங்கள் குடும்பத்திற்கு சொந்தமாக்கிக் கொள்ள துடித்துக்கொண்டிருந்தனர் .

ஆனால் அப்போது சுந்தரேசன் தங்கையின் திருமணத்திற்கு தயாராக இல்லை .அப்போதுதான் படிப்பை முடித்திருந்த  தங்கைக்கு உடனடி திருமணம் என்பது அவனுக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது .அத்தோடு அவனது பசுமை குடிலுக்கு தங்கையின் தேவை இன்றியமையாததாக இருந்தது .அதனால் அவன் வெறும் பேச்சோடு யுவராஜ் – தேவயானி திருமணத்தை ஒரு வருடத்திற்கு என தள்ளி போட்டான் .இடையில் யுவராஜ் சிங்கப்பூர் வேலை கிடைத்து அங்கே போய் விட தங்கள் தரம் உயர்ந்து விட்டதாக பெருமை பேசிக்கொண்டிருந்தனர் சுனந்தா வீட்டினர் .

தேவயானியின் கணிப்புப்படி யுவராஜ் சிங்கப்பூர் செல்லவுமே அவனுடனான தனது திருமணப் பேச்சு முடிவிற்கு வந்து விட்டதாகவே நினைத்திருந்தாள் .ஆனால் சிங்கப்பூரில் இருந்து வந்த இரண்டாவது நாளே என் பியான்ஸி என்று உறவு கொண்டாடிக் கொண்டு வந்து நின்ற யுவராஜ் அவளை மிகவுமே குழப்பினான் .முன்பே அம்மாவும் , அண்ணனும் பேசி வைத்த ,  ஓரளவு முடிவான விஷயம் .இப்போது சட்டென்று உடைக்க முடியாமல் அன்று தலையசைத்து வைத்தாள்.




தொடர்ந்து இங்கேயே தங்கி கொண்ட யுவராஜ் சில நாட்களிலேயே அவன் வந்த விஷயத்தை வெளிப்படுத்தினான். அது …அவன் கையில் சில லட்சங்கள் வைத்திருக்கிறான். அவற்றை இங்கே சுந்தரேசனின் பசுமைக்குடிலில் முதலாக போடுவதற்கு தயாராக இருக்கிறான் .பதிலாக சுந்தரேசன் அவனுக்கு தனது தொழிலில் பங்கு கொடுக்கவேண்டும் .அவனது தங்கையை திருமணம் செய்து கொள்ளும் போது இந்த தொழில் பங்குகள் மிகவும் நியாயமானதாக மாறிவிடும் .லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து உன் தங்கையை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறேன் என்பதுபோல் வசனங்கள் பேசி சுந்தரேசன் மனதை நெகிழ்த்தி வைத்திருந்தான் யுவராஜ்.

சுந்தரேசனின் கணக்கீடு இந்த விசயத்தில்  வேறாக இருந்தது .அது தொழில் சம்பந்தப் பட்டதாக இருந்தது. யுவராஜின் பணத்தை வாங்கி தனது தொழிலுக்குள் போட்டு கொண்டால் பேங்க் லோன் தேவை இல்லை .அதனால் வட்டி கட்டும் செலவும் இல்லை .அத்தோடு தங்கையின் திருமணமும் முடிந்து கூடவே தங்கை , தங்கை கணவன் என்று தனது தொழிலுக்குள் வேலை பார்ப்பதற்கு நிரந்தரமாக இரண்டு நம்பிக்கையான வீட்டாட்கள் கிடைக்கிறார்கள்.




 அவன் அறிந்த வரையில் கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாத கையில் ஓரளவு பணப்புழக்கம் இருக்கும் , தோற்ற திருப்தி்யுடைய ,  ஃபாரின் ரிட்டர்ன் யுவராஜ்  தங்கைக்கு மிக பொருத்தமான கணவன் .அவனது மனைவியின் அண்ணன் என்பது கூடுதல் தகுதி .சுந்தரேசன் தனது ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடிபட்டு தனது தனது மடியில் வீழ்வதாக உணர்ந்தான்.

யுவராஜின் கோரிக்கைக்கு வேகமாக தலையசைத்து வைத்தான். இதனால் மனைவியிடமும் நல்ல பெயர் வாங்கிக் கொண்டான் .இந்த சுந்தரேசனின் எண்ணங்களுக்கு சொர்ணத்திடமும் மாற்றுக்கருத்து எதுவும் இல்லாததால் அவள் பக்கமிருந்தும் மறுப்பேதும் வரவில்லை .தேவயானி சிறிது நேரம் தனது எதிர்கால வாழ்வை மனதிற்குள் ஓட்டிப் பார்த்தாள்.

கட்டுப்பாடுகளுடன் அவர்கள் நடத்தி வரும் விடுதியை இன்னமும் விரித்து குடில்களை அதிகரித்து தொழிலை பெருக்க வேண்டும் என்ற அண்ணனின் வெகு நாள் ஆசையை அவள் அறிவாள் .அந்த நேரத்தில் இங்கே உள்ளிருந்தே உழைப்பதற்கு குடும்பத்து ஆட்கள் என நிறைய பேர்களின் தேவை இருக்கும் என்பதையும் உணர்ந்திருந்தாள் .இந்தவகையில் யுவராஜின் பணத்திற்கும் திருமணத்திற்குப் பின்னான அவர்கள் இருவரின் உழைப்பிற்குமான அண்ணனின் கணக்கீட்டில் தேவயானிக்கு எந்த வருத்தமும் கிடையாது.  இந்த தொழில் அப்பா ஆரம்பித்து,  அண்ணன் வளர்த்துக் கொண்டிருப்பது .இது தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்க வேண்டும் என்று அவள் விரும்பினாள்.




யுவராஜுடனான அவளது திருமணத்தின் பின் இதே அவளுடைய வேலையை தொடர வேண்டும் .அவளுக்கென்று அப்பா வைத்துவிட்டுப் போன நகைகளும் பணமும் கூட இந்த தொழிலுக்கு உள்ளேயே போடப்படலாம் .அதனாலென்ன அவளுடைய தந்தைக்கு ஆற்றும் கடமை என அவளுக்கும் இருக்கிறதுதானே …அத்தோடு இவைகள் தந்தையே அவளுக்கு கொடுத்த நகைகள்தானே… இந்த பணம் நகைகளோடு கூடுதலாக அவளுடைய உழைப்பையும் தர வேண்டியது இருக்கும் .இருக்கட்டுமே இதோ அண்ணி , அம்மா போல் அவளும் இங்கேயே இருந்து விட்டுப் போகிறாள் .இதனால் தம்பி அரவிந்தின் படிப்பு நல்லபடியாக முடிந்தால் சரிதான்.

அப்படி முடிந்து அவனாவது இந்த சூழலை விட்டு வெளியேறி சற்று வெளியுலக காற்றை சுவாசிக்கட்டும் …நினைக்கும்போதே மனதில் ஏதோ வெற்றிடம் உருவாக இதழ்களை அழுத்தி கடித்து தன்னை சமாளித்துக் கொண்டாள் தேவயானி .இரண்டு நாட்கள் யோசித்து சம்மதமென தனது தலை அசைவை அண்ணனிடம் கொடுத்திருந்தாள் .தொடர்ந்து அவளை சுற்றிவந்த யுவராஜின் தொல்லைகளையும் ஓரளவு சமாளிக்க முயன்றாள்.

அதோ அங்கே அப்படி செய்யலாம் …இங்கே இப்படி மாற்றலாம் …என்று ஏதாவது ஓர் உளறலோடு  அவளை இழுத்துக் கொண்டு யுவராஜ் அந்த பசுமை குடிலை சுற்றிவருவதை பல்லை கடித்து பொறுத்துக் கொண்டாள் .ஆனால் கணவன் என்ற அதிகாரத்தை காட்டி இப்போதே அவளை அவளை கட்டுப்படுத்த முயன்ற போது துணிந்து எதிர்த்தாள் .

இந்த எதிர்ப்பு தனது எதிர்கால வாழ்க்கைக்கு மிகவும் தேவை என்று நினைத்தாள் தேவயானி. இது அவளது சுய கௌரவம் , தன்னம்பிக்கை .ரிஷிதரன் அடிக்கடி சொல்வது போல் திமிர் , அகம்பாவம் .இருந்து விட்டு போகட்டும் .இந்த திமிரும், அகம்பாவமும் இல்லாமல் தேவயானியே இல்லை .

 உன்னை திருமணம் செய்ததற்காக உன் பேச்சுக்களுக்கெல்லாம் தலையாட்டும் பொம்மை அல்ல நான்… என்பதை அடிக்கடி யுவராஜுக்கு பேச்சிலும் , செய்கையிலும் காட்டிக் கொண்டே இருந்தாள். இந்த நிகழ்வுகளில் எல்லாம் அவர்களிடையே பெரும்பாலும் இருந்தவன் ரிஷிதரன் .முன்பே ரிஷிதரன் மேல் ஏதோ ஓர் எரிச்சலில் இருந்த யுவராஜ் இப்போது மிக அதிகமாக அவனை வெறுக்க துவங்கினான் .தான் தேவயானியை நெருங்குவதை ஏதோ ஒருவகையில் 

ரிஷிதரன் தடுப்பது போல் ஒரு பிரமை யுவராஜுக்கு .முதன் முதலில் அவன் பசுமை குடிலுக்கு வந்தபோது சற்று நெருக்கமாக அவர்களிருவரும் நின்றிருந்த காட்சியும் கூட யுவராஜின் மன புகைச்சலின் காரணமாக இருக்கலாம்.

 நகையும் , பணமும் , தொழிலும் மேலாக அழகுமாக தன் கைக்கு கிடைத்திருக்கும் தேவயானியை இழக்க அவன் விரும்பவில்லை.

விளைவு இதோ இப்போது தன் சகோதரி மூலமாக யுவராஜ் தேவயானிக்கு வைத்திருக்கும் கட்டளை , அந்த ரிஷிதரனை மிக உடனடியாக பசுமை குடிலை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பது.

அண்ணனின் இந்த விருப்பம் நிறைவேற சுனந்தா தன்கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம் அரவிந்தனின் படிப்பு. சொர்ணமும் தேவயானியும் இந்த ஒரு விஷயத்தில் தான் கொஞ்சம் அடங்குவார்கள் என்பதை அவள் நன்றாக புரிந்து வைத்திருந்தாள் .எனவே அரவிந்தனின் பீஸ் கட்டும் கடமையை கணவனின் மூலம் தள்ளிப்போட வைத்தாள்.

” ரிஷிதரனை உடனடியாக இங்கிருந்து அனுப்பும் அளவு உங்கள் அண்ணனுக்கு  அவரால் என்ன பிரச்சனை வந்தது  ? ” கோபமாக கேட்ட தேவயானியை அலட்சியமாகப் பார்த்தாள் சுனந்தா

.

” இதோ இந்த பிரச்சனை தான் ” அவளது படபடப்பை சுட்டிக் காட்டினாள் .” தான் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண் இன்னொருவனுடன் சற்றே நெருக்கமாக பழகுவதை எந்த ஆணால் …” 

” அண்ணி ஜாக்கிரதை .என் கேரக்டரின் மீது ஏதாவது பழுது சொல்வீர்களானால் பிறகு நடப்பதற்கு நான் பொறுப்பு கிடையாது ” சுனந்தா பேச்சை முடிக்கும் முன் இடையிட்டு எச்சரித்தாள் தேவயானி.

சுனந்தா உடனடியாக சுதாரித்துக் கொண்டாள் .” எனக்கு உன்னை தெரியாதா தேவயானி ? நான் பொதுவாக ஆண்களின் மன நிலையை சொன்னேன் .நாம் பெண்கள் தானே கொஞ்சம் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும் ” தேனினை குரலில் குழைத்தாள்.




அப்படித்தானோ என்று இருந்தது தேவயானிக்குமே … யுவராஜிடம் தனது நிமிர்வை காட்டுவதற்காக கொஞ்சம் அதிகப்படியாக ரிஷிதரனுடன் இணைந்து பழகிவிட்டோமோ என்ற ஊவா முள் அவள் உள்ளத்தை உறுத்த  துவங்கியது. இந்த குற்ற உணர்வு நெஞ்சத்தை தாக்க அவள் ரிஷிதரனை அங்கிருந்து அனுப்ப சம்மதித்தாள்.

” ரிஷிதரனால்  நமக்கு நல்ல வருமானம் .அதனால் உன் அண்ணா அவரை அனுப்ப மாட்டார். உன் அம்மாவிற்கு ரிஷிதரனை இங்கேயே வைத்திருந்து மிகவும் நல்லவனாக மாற்றி அவர் அம்மாவிடம் அனுப்பவேண்டும் என்ற எண்ணம் .அதனால் அவரும் ரிஷிதரனை அனுப்ப சம்மதிக்க மாட்டார் .அந்த ரிஷிதரனுக்கும் இங்கிருந்து போகும் எண்ணம் இருப்பது போல் தெரியவில்லை .இனி மீந்திருப்பவள் நீதான் . நீயேதான் ரிஷிதரனை இங்கிருந்து அனுப்பி வைக்கவேண்டும் ” 

சுனந்தாவின் ஒவ்வொரு பேச்சும் மிகவும் நியாயமாக தெரிய தேவயானி அவளுக்கு தலையாட்டினாள் .ஆனாலும் அவ்வளவு எளிதாக ரிஷிதரனை இங்கிருந்து அனுப்பிவிட முடியும் என்று அவள் நினைக்கவில்லை. முடியாது என்ற அவனது மறுப்பை அவள் எதிர்பார்த்தே இருந்தாள் .அவனது யோசிப்பிற்கென இரண்டு நாட்கள் நேரம் கொடுத்தாள் .தனக்குச் செய்யும் உதவி என்ற கோரிக்கையை அவனுக்கு வைத்தாள்.

இரண்டு நாட்கள் என்பது அதிகமாகி ஒரு வாரம் வரை கூட நீட்டிக்கலாம் ரிஷிதரனின் பிடிவாத்த்தை நினைத்தபடி  தம்பிக்கு கட்டப்போகும் பணத்தின்  கெடு நாளை கலக்கத்துடன் மனதிற்குள் கணக்கிட்டபடி ரிஷிதரனிடம் வேண்டுதல் வைத்துவிட்டு வந்திருந்தாள்.

ஆனால் இதோ அவள் கேட்டு முடித்த அதே நாளிலேயே ரிஷிதரன் குடிலை விட்டு வெளியேறுவான் என்று அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை .எதைச் சாக்கிட்டு வெளியேறலாம் என்று இருந்திருப்பான் போல …இப்படி நினைத்துவிட்டு தலையை குலுக்கி தன்னை  மீட்டுக் கொண்டாள் .

வெறுமையாய் காற்று மட்டுமே சுழன்று  அடித்துக் கொண்டு இருந்த குடிலை விழி சுற்றி பார்த்தாள் .அதோ… அங்கே… அது என்ன …? 

வேகமாக கட்டிலின் அருகே போய் பார்க்க ரிஷிதரன் படுத்திருந்த கட்டிலின் நடுவே பைல்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை ரிஷுதரனின் ஆபீஸ் பைல்கள். சந்திரசேகர் கையெழுத்து கேட்டு அலைந்த ஃபைல்கள் .மனது மத்தளம் கொட்ட தேவயானி வேகமாக அந்த ஃபைல்களை எடுத்து புரட்டினாள்.

அவள் முன்பே சிலமுறை பீரோவிற்கு அடியில் கிடந்த பைல்களை எடுத்து  ரிஷிதரன்  முகத்தின் முன்னால் திறந்து வைத்துக்கொண்டு கையெழுத்துப் போடும் இடத்தை சுட்டிக்காட்டி தெளிவாக  பேசி அவனுக்கு எரிச்சல் மூட்டிக்  கொண்டிருப்பாள்.பிறகு இங்கே வைக்கிறேன் என்று சொல்லி அதே பழைய இடத்தில் பைல்களை பத்திரப்படுத்துவாள் .

 அப்படி அவள் காட்டிய இடங்களிலெல்லாம் இப்போது மிக தெளிவாக ரிஷிதரனின் கையெழுத்து இருந்தது.




தேவயானியால் இதனை நம்ப முடியவில்லை .அவளுக்காக …அவளது சொல்லுக்காக …கொஞ்சமும் அவனுக்குப் பிடிக்காத இந்த வேலையை செய்தானா  ? ஃபைலில் இருந்த ரிஷிதரனின் கையெழுத்தை ஒற்றை விரலால் வருடினாள்.

அப்போது பைலுக்குள் இருந்த சிறிய பேப்பர் துண்டு ஒன்று கீழே விழுந்தது .அதில் …

” சொன்னாய். போகிறேன் .சொன்னால்தான் வருவேன் ” சிறு குறிப்பு போல் இந்த வாசகங்கள் .




தேவயானிக்கு கண்கள் கலங்கி கண்ணீர் வருவது போலிருந்தது .பார்த்துக்கொண்டிருக்கும் போதே கையிலிருந்த பேப்பர் எழுத்துக்கள் மங்கிக் கொண்டே போக இப்போது தான் தனது கண்ணீரை உணர்ந்தவள் சீ சீ என்ன பைத்தியகாரத்தனம் தன்னைத்தானே கடிந்து கொண்டு இமைகளை சிமிட்டி கண்ணீர் விழி தாண்டி வழியாமல் சமாளித்தாள்.

” தேவயானி ” கூப்பிட்டபடியே உள்ளே வந்தாள் சொர்ணம்.

” ரிஷியை எங்கேம்மா ? வாக்கிங் போய் இருக்கிறாரா ? ” கேட்ட தாய்க்கு நடுங்கும் வலதுகையால் குடிலை சுற்றி காட்டினாள்.

” போய்விட்டார் ” பாலை நிலத்தின் வெடித்த நிலம் போல வறண்டு வந்தது அவள் பேச்சு.

” என்ன ? ” சொர்ணத்தின் அதிர்ச்சி வெளிப்படையாக தெரிய , அவள் இப்போது கூர்மையாக தன் மகளின் முகத்தை  கவனிக்க துவங்கினாள்.

What’s your Reaction?
+1
3
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!