pacha malai poovu Serial Stories பச்சைமலை பூவு

பச்சை மலை பூவு – 22

22

குட்டியாக  இருந்த மண்பானையின் மூடி மேல் தம் போட வைத்திருந்த கங்குகளை நீக்கிவிட்டு மூடியை திறந்தாள் தேவயானி .உடன் பிரியாணி வாசம் அடுப்படி முழுவதும் பரவியது .

” பிரியாணியா ? யாருக்கு ? ” வாசம் சுனந்தாவை அடுப்படிக்கு இழுத்து வந்திருந்தது.

” ரிஷிதரன் கேட்டார் …அவருக்காக …” எந்திரமாக பதிலளித்தாள் தேவயானி.

ஒருமாதிரி தேவயானியை பார்த்த சுனந்தா பிறகு தோள்களைக் குலுக்கிக் கொண்டாள் ” ஆசைப்பட்டு கேட்டிருக்கிறார் கொண்டு போய் கொடு. அப்படியே பேசிவிட்டு வந்துவிடு ” உத்தரவு போல் சொல்லிவிட்டு போனாள்.

தன் கையால் மசாலா அரைத்து , சீரகசம்பா அரிசி வைத்து மண்பானையிலேயே பக்குவமாக வேகவைத்து இந்த பிரியாணியை பார்த்து பார்த்து சமைத்து இருந்தாள் தேவயானி .அதனை டிரேயில்  வைத்து எடுத்துக்கொண்டு ரிஷிதரனின் குடிலை நோக்கி சென்றாள்.




குடில் வாசலை நெருங்கும்போதே ரிஷிதரன் வெளியே வந்துவிட்டான் .மூச்சை இழுத்து உணர்ந்தவன் ” ஆஹா உன் பிரியாணி வாசம் அங்கே வரும்போதே இங்கே இழுக்கிறது ” என்றான்.

தேவயானி புன்னகையோடு உள்ளே வந்து  இலை விரித்தாள் ” உட்காருங்கள்.சாப்பிடலாம் ” 

” இது என்ன ஏஞ்சல் …பானையில் பிரியாணியா ? ” 




” ஆமாம் மண்பானையிலேயே பிரியாணி சமைப்பது .பாட் பிரியாணி என்று ஹோட்டல்களில் கூட கொடுக்கிறார்களே …நீங்கள் சாப்பிட்டதில்லையா ?  இது தனி ருசியாக இருக்கும். சாப்பிட்டு பாருங்கள்  ” இலையில் பரிமாறினாள்.

ஒரு வாய் எடுத்துவைத்த ரிஷிதரனின் கண்கள் பாராட்டாய்  விரிந்தன ” வாவ் எவ்வளவு ருசி ? மணம் …? சான்சே இல்ல ஏஞ்சல் .பெரிய பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் கூட நான் இவ்வளவு ருசியாக சாப்பிட்டது இல்லை ”  கரகரத்த குரலில் பேசியபடி சாப்பாடு வைக்க வைக்க சாப்பிட்டுக் கொண்டிருந்தவனை தாய்மையின் நெகிழ்வுடன் பார்த்திருந்தாள் .

” நீ சாப்பிட்டாயா ? ” கேட்டபோது சாப்பாட்டில் முடிவுக்கு வந்திருந்தான்.

” பார்த்தீர்களா… சட்டியை காலி பண்ணிட்டு சாப்பிட்டாயா என்று கேட்கிறீர்களே ? ” 

” ஓ சாரி சாரி ஏஞ்சல் .இந்த டேஸ்ட் எல்லாவற்றையும் மறக்கடித்து விட்டது .இப்போது இதோ இன்னும் இரண்டு வாய் அளவு இருக்கும் சாப்பிடுகிறாயா ? ” கேட்டதோடு கைநிறைய அள்ளிய கவளத்துடன் அவள் வாய்க்கு கொண்டு வந்தான்.

” இல்லை நான் சும்மா சொன்னேன். இன்று கிருத்திகை நான் வெஜ் சாப்பிட மாட்டேன் .உங்களுக்காகத்தான் சமைத்தேன் .நீங்கள் சாப்பிடுங்கள் ” 




” ஷுயர் ? ” 

” ஆமாம் நிஜம்தான் ” 

” சரி ” என்றுவிட்டு எஞ்சிய கவளங்களையும் உண்டு முடித்தான்.

” திருப்தியான சாப்பாடு ” மெலிதாய் ஏப்பம் விட்டவன் ” தேங்க்யூ ஏஞ்சல் ” என்றான்.

” இன்றும் நீ வர மாட்டாயோ என்று நினைத்தேன் ” என்றவனின் பார்வை இன்னமும் மர பீரோவிற்கு அடியில் கிடந்த பைல்களின் மேல் விழுந்தது.

அவற்றை அவன் வீசி எறிந்த மறுநாள் அறையை பெருக்கி துடைப்பதற்காக மருதாணி அந்த பைல்களை எடுத்து வைக்க முயன்றாள் ” வேண்டாம் மருதாணி அது அங்கேயே இருக்கட்டும் ” என்றாள் தேவயானி.

” ஏன் அக்கா இது ஏதோ ஆபீஸ் பைல்ஸ் போல் இருக்கிறது. முக்கியமானதாக இருக்கலாம். பத்திரப் படுத்த வேண்டாமா ? ” 

“பத்திரப்படுத்தும் அக்கறை இருப்பவர்கள் அதனை பார்த்துக்கொள்வார்கள். நீ அந்த பைலை எடுத்து அடியில் சுத்தம் செய்து விட்டு மீண்டும் அங்கேயே வைத்து விடு ” 

படுக்கையில் சாய்ந்து வெறுமனே கண்களை மூடிக் கொண்டிருந்த ரிஷிதரனை ஓரக்கண்ணால் பார்த்தபடி சொன்னாள் தேவயானி. இவர்களது பேச்சை அவன் கண்டுகொள்ளவில்லை.

” அண்ணா இந்த ஃபைல் …” மருதாணி குரல் கொடுக்க ”  நான் தூங்கிக் கொண்டிருக்கிறேன் ” என்று பதில் சொன்னான் அவன் .

கண்களை மூடிக்கொண்டு கால்களை ஆட்டியபடி இருந்த அவன் சொன்ன தூக்கத்திற்கு தேவயானிக்கு மிகுந்த கோபம் வந்தது. அதன் விளைவாகத்தான் அவன் பிரியாணி கேட்டு தேவயானியை தேடி அலையும் நிலைக்கு தள்ளப்பட்டான்.

” அது தான் அப்படி விரட்டிக்கொண்டு பின்னேயே வந்து நின்று விட்டீர்களே  ” தேவயானி சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்ய துவங்கினாள்.

” நான் இங்கிருந்து  பார்த்தபோது உன்னுடன் இருந்த பெண் எனக்கு தெரியவில்லை. நீ மட்டும் தனியாக இருந்து கைகளை அழகாக  ஆட்டி  பேசிக்கொண்டு …யு நோ ஏஞ்சல் அப்போது உன்னுடைய பாவனைகள் அழகாக நாட்டியம் ஆடுவது போல் இருந்தது .அந்த அழகான டான்ஸை கொஞ்சம் பக்கத்தில் போய் பார்க்கலாமென்று  நினைத்து சத்தமில்லாமல் வந்தால் கட்டையை எடுத்து அடிப்பேன் என்கிறாய். உன்னிடம் அடி வாங்குவது என்றால் அது நானாகத்தான் இருக்கும் என்பதில் எனக்கு உறுதி. சொல்லு ஏஞ்சல் அப்போது என்னைத் தானே காற்றில் கைவீசி அடித்துக்கொண்டு இருந்தாய் ” 




தேவயானி பதில் என்று புன்னகைத்தாள் .” சிரித்தே எல்லாவற்றையும் சமாளித்து விடு ” சலித்து கொண்டான்.

அப்போது தேவயானியின் போன் ஒலிக்க எடுத்துப் பார்த்து முதலில் முகம் மலர்ந்து பின்  சிறிது யோசனை வந்து போனை ஆன் செய்து காதில் வைத்தாள்.

” அக்கா எப்படி இருக்கிறீர்கள்  ? ” எதிர்முனையில் பேசியது அவளுடைய தம்பி அரவிந்த்

” நான் நன்றாக இருக்கிறேன்டா .நீ எப்படி இருக்கிறாய் ? உன் படிப்பு எப்படி போகிறது ? ” 

” நான் நன்றாக இருக்கிறேன் அக்கா. படிப்பு….”  என்று இழுத்தாற் போல் சொல்லிவிட்டு பேச்சை நிறுத்தினான் அரவிந்தன். அந்தப்பக்கம் தம்பியின் தவிப்பை தேவயானி உணர்ந்தாள்.

மேலும் சில பொதுவான கேள்விகளின் பின்பு”  சரிடா நான் பார்த்துக்கொள்கிறேன் ” என்ற குறிப்பான ஆறுதலுடன் போன் பேச்சை முடித்தாள்.

” யார் ஏஞ்சல் உன் தம்பியா ?  எங்கே படிக்கிறான் ?  என்ன படிக்கிறான் ? ” 

“. அரவிந்த் .தஞ்சை மெடிக்கல் காலேஜில் செகண்ட் இயர் படிக்கிறான் ” 

” அட அப்படியா அப்போ இன்னும் மூன்று வருடங்களில் உங்கள் பசுமை குடிலுக்கு ஒரு டாக்டர் வரப்போகிறார். இங்கே தங்க வருபவர்களுக்கு நீங்களே சமைத்தும் போட்டு நீங்களே வைத்தியமும் பார்த்து அனுப்புவீர்கள் அப்படித்தானே ? ” இலகுவாய் கேலி பேச ரிஷிதரன் அழைக்க தேவயானி மெல்ல தலையசைத்தாள்.

இப்போது சட்டி நிறைய பிரியாணி நின்றாயே… அதற்குப் பிறகும் எப்படி இது போல் பேசுகிறாய் ? இந்த மாதிரி ஒரு பதில் வாதத்தை எதிர் பார்த்தவன் , இந்த மெல்லிய தலையசைப்பிற்கு யோசித்தான்.




”  என்ன விஷயம் ஏஞ்சல் ? ” சட்டென கிண்டலிலிருந்து  ஆதரவிற்கு மாறி விட்ட  அவன் குரல் தேவயானியை நெகிழ்த்தியது .தவிப்புடன் உதட்டை மடித்து கடித்தாள் .அவள் கருவிழிகள் அவஸ்தையுடன் அங்கும் இங்கும் அலை பாய்ந்தன .அவள் மன போராட்டத்தை உணர்ந்த ரிஷிதரன் மிக உடனே அவளுக்கு ஆறுதல் அளிக்க விழைந்தான் .ஆனால் அவள் அதனை விரும்ப மாட்டாள். ஆறுதலை மட்டுமல்ல உதவியையும் கூட …ரிஷிதரன் தனது இயலாமையை கையை மடக்கி கட்டிலில் ஓங்கி குத்தி வெளிப்படுத்தினான்.

வேகத்துடன் படுக்கையில் விழுந்த அவன் கை குத்துக்களை பார்த்தபடி இருந்த தேவயானி மெல்ல இதழ் அசைத்தாள்.

” எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும் ” 




ரிஷிதரனின் குத்துக்கள் நின்றன. காட்டுக் குயிலின் கான ஓசை  போலொரு விசில் சத்தம் அவன் உதட்டில் இருந்து வெளிவந்தது.”  ஹெல்ப்… நீ… என்னிடம் இல்லை …இல்லை நான் உனக்கு செய்யும் சந்தர்ப்பம்… ஆஹா இது எவ்வளவு அற்புதமான தருணம். மிகவும் சந்தோசமாக இருக்கிறேன் ஏஞ்சல். என்ன செய்ய வேண்டும் நான் ? ” 

கொடுக்கும் உதவியை பாக்கியம் என பேசும் அவனை நெகிழ்வாக பார்த்தபடி ” உங்கள் காயங்கள் 70% ஆறிவிட்டன சார் .இனி நீங்கள் உங்கள் வழக்கமான வாழ்க்கைக்கோ  அல்லது இந்த தழும்புகளை மறைப்பதற்கான மேல் சிகிச்சைக்கோ செல்லலாம் ” என்றாள் 

” ப்ச் ..ழஅதெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது நீ ஏதோ உதவி…. ” படபடத்துக் கொண்டு போனவன் பேச்சை நிறுத்தி அவளை கூர்ந்தான் .” என்ன உதவி கேட்க போகிறாய்  ? ” அவன் குரலில் இறுக்கம் வந்திருந்தது.

” உங்கள் உடம்பு சரியாகிவிட்டது சார் .நீங்கள் இங்கிருந்து கிளம்பலாம் ” 

” இங்கே தங்குவதும் , கிளம்புவதும் என்னுடைய விருப்பம் ”  உறுமலாய் ஒலித்தது அவன் குரல்.

” நான் உதவி கேட்கிறேன் ” மெலிந்து ஒலித்தது தேவயானியின் குரல்.

” இதுதான் உதவியா ? ” 

”  எனக்காக …ஏதாவது செய்யவேண்டுமென்று துடித்துக் கொண்டு இருந்தீர்களே . இப்போது இதனை…” 

” முடியாது ” அவள் பேச்சு முடியும் முன் இடையிட்டவன் இரு விரல்களை சுண்டி காட்டினான் .” பணம் கொடுக்கிறேன் .ஆயிரங்களை தாண்டி லட்சங்களை நெருங்கி உன் அண்ணனுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் .அக்கவுண்டில் பணம் வந்து விழும் போது நன்றாக இருந்தது தானே …பற்றவில்லை என்று கேட்டு வாங்கும்போதே என்னை வெளியேறச் சொல்லும் உரிமையை நீங்கள் இழந்து விட்டீர்கள் ” சிம்மமாய் முழங்கினான் .

இன்னமும் வேண்டும் என்று கேட்டு வேறு வாங்கினார்களா …தேவயானியின் முகத்தில் அவமானம் தெரிந்தது. மேலே பேசமுடியாமல் அவள் இதழ்கள் நடுங்கின .நிமிர்ந்து ரிஷிதரன் முகம் பார்க்க முடியாமல் குன்றினாள் .

ஒரு முழு நிமிடம் அவள் முகத்தை பார்த்தபடி இருந்தவன் தன் கண்களை இறுக்க மூடி திறந்தான் ” என்ன விஷயம் தேவயானி ? ” கடுமை போய் மென்மை வந்திருந்தது குரலில்.

உதட்டை மடித்து கடித்தபடி தேவயானி தலையை  ஆட்டினாள் .” சொல்ல மாட்டாய்  ? ” கோபத்துடன் கட்டிலில் இருந்த தலையணையை அடித்து கீழே தள்ளினான் .அது தேவயானியின் முகத்தைத் தாக்கி கீழே விழுந்தது .கண்களை இறுக மூடி நின்று அந்த தாக்குதலை ஏற்றுக்கொண்டாள் அவள்.




” போக முடியாது என்றால் என்ன செய்வாய் ? நீ சொல்வதையெல்லாம் கேட்கும் கட்டாயம் எனக்கு கிடையாது ” 

” உடல்நலம் சரியில்லாததால் இங்கே இருந்தீர்கள் .இப்போது காயங்கள் ஆறிவிட்டது தானே ? “

” இங்கே நீங்கள் விடுதி நடத்துகிறீர்களா ? மருத்துவமுகாம் நடத்துகிறீர்களா ? ” 

அவனது நக்கலுக்கு அவள் பதில் சொல்லவில்லை.

” ஆனால் மருத்துவ முகாம்களுக்கு சிகிச்சை பெற வருபவர்கள் யாரும் இப்படி பணத்தை அள்ளி வீச மாட்டார்கள்  ” ரிஷிதரன் கோபமும் வெறுப்புமாக  சொற்களை வாரி இறைத்தான் .

” எனது மைண்ட் ரிலாக்ஷேசனுக்காக இந்த விடுதியில் தங்கியிருக்கிறேன் .அதற்கு மிக அதிகப்படியான பணமும் கொடுத்து கொண்டிருக்கிறேன். என் இஷ்டப்படிதான் இங்கிருந்து செல்வேன் ” 

” இன்னும் இரண்டு நாட்கள் நன்றாக யோசித்து உங்கள் முடிவை சொல்லுங்கள் ” 

” இன்னமும் இரண்டு மாதங்கள் இங்கே தான் தங்கும் ஐடியா வைத்திருக்கிறேன் .என்ன செய்யப் போகிறாய் ? ” 

தேவயானி விழி உயர்த்தி அவனை இரங்கலாய் பார்த்தாள் .ரிஷிதரன் முகத்தை திருப்பிக்கொண்டான்.

“இந்த காரியத்தை சாதிப்பதற்காகத்தான் இப்படி பிரியாணி எல்லாம் செய்துகொண்டு வந்து என்னை ஏமாற்ற நினைத்தாயா ? ” மேஜை மேலிருந்த பிரியாணி பானையை அவன் கோபத்துடன் தள்ள தேவயானி பதட்டத்துடன் நகர்ந்து பானை கீழே விழாமல் பிடித்தாள்.

” நீங்கள் கேட்டீர்கள் .என் கையால் உங்களுக்கு செய்து தர நினைத்தேன் .இதைத்தவிர வேறு எந்த உள்நோக்கமும் இந்த பிரியாணியில் இல்லை”  சொன்னபடி பானையை பத்திரமாக கீழே வைத்தாள்.

” நம்ப மாட்டேன். போடி…”  வெடித்தான்

அவனது’ டி’ யை கண்டனமாக பார்த்தாள் .”  என்னடி முறைக்கிறாய் ? அப்படித்தான் கூப்பிடுவேன் .உன்னை நம்ப மாட்டேன். நீ சொல்வதை கேட்க மாட்டேன் .இங்கிருந்து போகமாட்டேன். உன்னால் முடிந்ததை செய்துகொள் போடி ” 

தேவயானி அவன் அடித்து தள்ளி இருந்த தலையணையை எடுத்து மீண்டும் கட்டில் மேல் வைத்தாள். அவனது குத்துக்களால் சுருண்டு கசங்கியிருந்த கட்டில் விரிப்பினை சுருக்கம் நீக்கி சரி செய்தாள் .கீழே இருந்த மண்பானையை எடுத்துக்கொண்டாள்.

அவளது நிதானமான செய்கைகளை ஆத்திரத்துடன் பார்த்திருந்தான்் ரிஷிதரன.” நன்றாக யோசித்து முடிவை சொல்லுங்கள் சார் …இரண்டே நாட்களில்  ” அழுத்தமாக சொல்லிவிட்டு வெளியேறினாள்.




” திமிருடி உனக்கு .அகம்பாவம் பிடித்தவள் நீ ” அவள் முதுகுக்கு தனது வசவுகளை கொதிப்பாய் அனுப்பினான்.

வாசலில் நின்று திரும்பிப் பார்த்த தேவயானி ” ஆமாம் அந்த திமிரும் அகம்பாவமும்தான் என்னை முழு மனுஷியாக நடமாட வைக்கிறது ” சொல்லி விட்டு போய்விட்டாள்.

________    

ஜன்னல்வழியாக தெரிந்த முழு நிலவை பார்த்தபடி படுக்கையில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள் தேவயானி .பௌர்ணமி இன்றைக்கா  அல்லது நாளைக்கா ?  பௌர்ணமிக்கும் … முந்தைய நாளுக்கும் என்ன வித்தியாசம்  ? நூலளவு இருக்குமா ? நக நுனி அளவு இருக்குமா ? அலைபாய்ந்து கொண்டிருந்த மனதை இழுத்துப் பிடிக்க ஏதேதோ சிந்தனைகளை மனதிற்குள் ஓடவிட்டாள்.

திடுமென்று ஏதோ ஒரு உணர்வு உடலை தாக்க எழுந்து ஜன்னல் வழியாக பார்த்தாள். அதோ அங்கே நிற்பது யார் ? கண்களை கூர்ந்து பார்த்து அடையாளம் கண்டவள் வேகமாக வாசல் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள்.

” இந்த நேரத்தில் இங்கே என்ன செய்கிறீர்கள் ? ” பின்னால் அவளது சலனத்தை உணர்ந்த பிறகும் இப்போது அவள் பேச்சைக் கேட்ட பிறகும் அசையாமல் கைகளை கட்டிக்கொண்டு நின்றபடி வானத்து நிலவை வெறித்திருந்தான்  ரிஷிதரன்.

“ரிஷி சார் உங்களைத்தான் கேட்கிறேன் .இந்த ராத்திரி நேரம் எதற்கு குடிலை விட்டு வெளியே வந்தீர்கள் ?ஏதாவது பூச்சி பொட்டு இருக்கும் உள்ளே போய் படுங்க ” 

” நீ ஏன் இப்போது வெளியே  வந்தாய் ? ”  ரிஷிதரன் இன்னமும் திரும்பவில்லை.

” நான்… தற்செயலாக ஜன்னல் வழியாக உங்களைப் பார்த்தேன். என்னவென்று கேட்கலாம் என்று வந்தேன் .குளிர் அதிகமாக இருக்கிறது இந்த குளிரில் இப்படி வெற்று உடம்புடன் நின்றால் உடம்பு என்ன ஆவது ? ப்ளீஸ் சார் உங்கள் குடிலுக்கு போங்க ” 

” இந்தக் குளிரெல்லாம் என்னை ஒன்றும் செய்யாது .ஆனால் உனக்கு ,என்மேல் அக்கறையா ? ” 

” சார் எதுவாக இருந்தாலும் நாம் நாளை காலை நிதானமாக பேசிக் கொள்ளலாம் .இப்போது நீங்கள் கிளம்புங்கள் ” 

” என்னைப் பற்றி உனக்கு என்ன கவலை ? நீ வீட்டிற்குள் போய் இதமாக போர்த்திக்கொண்டு படுத்து தூங்கு போ ” 







தேவயானி கோபத்துடன் திரும்பியிருந்த அவன் முதுகை முறைத்தாள் .பிறகு வேகமாக வீட்டிற்குள் போனாள். ரிஷிதரன் அசையாமல் அதே இடத்தில் நின்றான் .இரண்டே நிமிடங்களில் திரும்பி வந்தவளின் கையில் ஒரு உல்லன் ஷால் இருந்தது .அதனை பின்னிருந்தபடியே ரிஷிதரனின் தோள்மேல் போர்த்த  முயன்றாள்.

அவன் வேகமாக தன் தோள் தொட்ட ஷாலை உதறி கீழே எறிந்தான் .அதேவேகத்தில் அவள் கையை பற்றி இழுத்து தன் முன்னால் நிறுத்தினான் .அவள் விழிகளுக்குள் தன் பார்வையை செலுத்தினான்.

” காரணம் அந்த யுவராஜனா ? ”  பாம்பின் சீறல் போல் ஒலித்தது அவன் குரல் .தேவயானி அவன் விழிகளுக்குள் இருந்து தன் பார்வையை பிடிவாதமாக பிடுங்கிக் கொண்டாள் .கறுப்பு அரக்கனாய் நின்றிருந்த தூரத்து மலைகளில் பார்வையைப் பதித்தாள் .அதோ அந்த உயர்ந்து நிற்கும் அந்த மலைக் குன்றுகளுக்கும் இதோ இங்கே திமிறி நின்றுகொண்டிருக்கும் இவனுக்கும் அதிக வித்தியாசமில்லை என்று நினைத்துக்கொண்டாள்.

” ஷாலை போர்த்திக் கொள்ளுங்கள். ப்ளீஸ் உங்கள் குடிலுக்கு போங்க.”  நிதானமாக சொன்னாள். ரிஷிதரன் ரௌத்திரம் ஆனான் .தான் பற்றி இருந்த அவள் கையை இழுத்து சுண்டி அவளை சுழற்றி கீழே தள்ளினான். கீழே விழுந்தவள் இன்னமும் தனது நிதானம் இழக்காது அண்ணார்ந்து அவனைப் பார்த்தாள். இருளுக்குள் மின்மினியாய் மின்னிய அவள் விழிகளை பார்த்தபடி இருந்தவன் மெல்ல அவள் அருகில் நெருங்கினான்.

தனக்கு எதிரே கால்களை அகற்றி ஊன்றிக்கொண்டு மதகளிராய் நின்றவனை பார்த்த தேவயானியின் மனதினுள்  கீற்றாய் பய மின்னல் ஒன்று எழுந்தது.

இடுப்பில் இருகைகளையும் தாங்கிக்கொண்டு அவளைப் பார்த்தபடி  சில நிமிடங்கள் இருந்தான். மெல்ல முணுமுணுத்தான் .”  ஏஞ்சல் ” 




தேவயானி அந்த கணத்தில் அவனை பார்க்க விரும்பவில்லை.திரும்பிக் கொண்ட அவள் முகத்தை பார்த்தான் .வலதுகையை அவளுக்கு நீட்டினான் ”  வா ஏஞ்சல் ” அழைத்தான்.

தேவயானி இத்தனை நாட்களில் எத்தனையோ முறை ரிஷிதரனை தொட்டிருக்கிறாள் . தாங்கி பிடித்திருக்கிறாள் .படுக்க வைத்திருக்கிறாள் .ஆனால் இப்போது ….இதோ , வா என்று அழைக்கும் இந்த கரத்தின் நுனியை கூட தீண்ட அவள் பயந்தாள். உடலை உள்ளிழுத்து மூச்சை நிறுத்தும் புதைகுழி ஒன்று அந்த நீண்ட கரத்தின் பின்னால் இருப்பதாக உணர்ந்தாள்.

” ஏஞ்சல் வா ” ரிஷிதரன் மீண்டும் அழைத்தான் .தேவயானி தலையை நிலத்திற்கு குனிந்து கொண்டாள் .தீர்க்கமாக தலையாட்டி அவனது அழைப்பை மறுத்தாள்.

ரிஷிதரன் ஆத்திரத்துடன் கால்களை பூமியில் ஓங்கி உதைத்தான் .காலுக்கு அகப்பட்டதை எத்தி தள்ளினான். கல்லும் மண்ணுமாக  புழுதி பறந்தது அந்த இடம் . பார்வையை மறைத்த புழுதிக்கு முகத்தை மூடினாள் தேவயானி.

”  தேவதை இல்லைடி  நீ ராட்சசி .கோ டு ஹெல் ” கத்தினான். அழைப்பிற்கு நீண்டிருந்த கையை அவள் முகத்திற்கு நீட்டி ஏசினான் .விறுவிறுவென்று அவளை திரும்பிப் பாராமல் தனது குடிலை நோக்கி நடந்தான்.

மறுநாள் காலை தேவயானி ரிஷிதரனின் குடிலுக்கு போனபோது , அங்கே பச்சை மலையின் மூலிகை காற்று மட்டுமே நிரம்பி இருந்தது.

What’s your Reaction?
+1
1
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!