pacha malai poovu Serial Stories பச்சைமலை பூவு

பச்சை மலை பூவு – 21

21

“ரிஷிதரன் அண்ணாவை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அக்கா ” கேட்ட மருதாணியை ஆச்சரியமாக பார்த்தாள் தேவயானி.

” நம் விடுதியில் தங்கியிருக்கிறார் . .கொஞ்சம் உடல் நலமில்லாமல் இருக்கிறார். இதற்கு மேல் வேறு என்ன நினைக்க சொல்கிறாய் ? ” 

” ரொம்ப நல்லவர்… இல்லை அக்கா ? ” 

” மருதாணி நீ அவரை நாம் முதன் முதலில் சந்தித்த சூழலை மறந்து விட்டாய் என்று நினைக்கிறேன் ” 

” மறக்க வில்லை அக்கா .அந்த சூழ்நிலையை வைத்துத்தான் அவரை நல்லவர் என்று சொல்கிறேன். அன்று குடித்துக்கொண்டு போதையில் இருந்தாலும் நம்மை காப்பாற்றி அனுப்பி வைக்கவில்லையா ? ” ஞ







” அதுதான் நீயே சொல்லி விட்டாயே… உன் அண்ணா போதையில் இருந்தார் என்று தலைக்கு ஏறிய போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே ஏதோ ஒரு நல்லது செய்துவிட்டார் போல ” 

” என்ன செய்கிறோம் என்று தெரியாத அளவுக்கு போதையில் எல்லாம் அவர் இல்லை அக்கா ” 

” மருதாணி உனக்கு இரண்டும் கெட்டான் வயது .இது எதையும் எல்லோரையும் நம்பி விடச்சொல்லும். ரிஷிதரன் போன்றவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். ஒயருக்குள் பதுங்கியிருக்கும் மின்கம்பி போன்றவர்கள் .மிகவும் ஜாக்கிரதையாக தொடவில்லை என்றால் மின்சாரத்தை பாய்ச்சி நம்மை பொசுக்கி விடுவார்கள் .ஒரு அளவை தாண்டி ரிஷிதரன் மேல் நீ எந்த அபிப்ராயமும் வைத்துக்கொள்ள வேண்டாம் ” 

” என்ன அக்கா சாதாரணமாக கேட்ட ஒரு கேள்விக்கு இப்படி புரியாமல் விளக்கம் கொடுக்கிறீர்கள் ? மருதாணி சலித்தாள்.

” சரி ரிஷிதரன் அண்ணாவை விடுங்கள் .யுவராஜ் சாரை பற்றி சொல்லுங்கள் .அவரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? ” 

” ஒன்றும் நினைக்கவில்லை ” 

” என்னக்கா இப்படி சொல்லிவிட்டீர்கள் ? அவரைப் பற்றி உங்கள் வீட்டில் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள் ” 

” இந்த பேச்செல்லாம் இப்போது எதற்கு மருதாணி ? பாடத்தில் சந்தேகம் கேட்க வந்துவிட்டு எதை எதையோ பேசிக் கொண்டிருக்கிறாய் ” 

” எனக்கு படிப்பில் புத்தி போகவில்லை .” மருதாணி புத்தகத்தை மூடி வைத்தாள் குரலை ரகசியமாக குறைத்துக்கொண்டாள்.”  அக்கா நீங்கள் அந்த யுவராஜை கல்யாணம் செய்து கொள்ள போகிறீர்களா ? ” 




நொட்டென்று அவள் தலையில் கொட்டினாள் தேவயானி ” இது என்ன தேவை இல்லாத பேச்சு .அதுவும் பாடம் படிக்கும் நேரத்தில். ஒழுங்காக ஹோம்வொர்க் நோட்டை எடு .நேற்று நான் சொல்லிக்கொடுத்த சம்  கரெக்டா ? உங்கள் மிஸ் என்ன சொன்னார்கள் ? ” 

” அதெல்லாம் சரிதான். நீங்கள் நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்கள் .கல்யாணம் செய்து கொள்வதாக இருந்தால் யுவராஜ் வேண்டாம் ரிஷிதரன் அண்ணாவை கல்யாணம் செய்து கொள்ளுங்கள் . அவர்தான் அழகாக இருக்கிறார் நிறைய பணம் வைத்திருக்கிறார் ”  கொட்டு பட்ட தலையை தடவியபடி சொன்ன மருதாணியின் தலையை பற்றி அழுத்தி குனிய வைத்து பொத் பொத்தென்று முதுகில் மொத்தினாள் தேவயானி.

” அதிகப்பிரசங்கி ..என்ன பேச்சு பேசுகிறாய் ? வர வர உனக்கு கொழுப்பு அதிகம் ஆகிவிட்டது .படிப்பில் கவனம் குறைந்து விட்டது .இதெல்லாம் என்ன பேச்சு ? ” 

” இன்னமும் கூடுதலாக இரண்டு அடி கூட அடிங்க .ஆனால் எனக்கு உங்கள் முடிவை சொல்லிவிடுங்கள் ” மருதாணி குனிந்து அடிகளை வாங்கியபடி சொன்னாள்.

” கையைப் பொத்திக்கொண்டு அடிப்பது போல் பாவனை காட்டினால் இவள் இப்படித்தான் பேசுவாள் தேவயானி. நன்றாக கையை விரித்து இரண்டு அடி போடு ” சொன்னபடி வந்தாள சுபா.

” சுபா அக்கா நீங்க எப்போ வந்தீங்க ? வாங்க ..” தேவயானி வரவேற்க அடியில் இருந்து தப்பித்த மருதாணி நிமிர்ந்து சுபாவை கோபமாக பார்த்தாள்.

” என் மேல் உங்களுக்கு என்ன கோபம் சுபாக்கா ? இப்படி என்னை போட்டு கொடுக்கிறீர்களே ? ” 

“வயதிற்கு ஏற்ற பேச்சா பேசுகிறாய் நீ ?/படித்து கிழித்தது போதும் எழுந்து போ ” சுபா அதட்ட முணுமுணுத்தபடி தனது புத்தகங்களை அள்ளிக்கொண்டு எழுந்து போனாள் மருதாணி.

” இந்த அரைக்காப்படிக்கு பேச்சை பாரேன் ” சுபா வியந்தாள்.

” இன்டர்நெட்டும் போனும் இந்த பிள்ளைகளை இப்படி கெடுத்து வைத்து இருக்கிறது .அதை விடுங்கள் அக்கா

இது நீங்கள் எங்கள் குடிலுக்கு வரும் நேரம் கிடையாதே .அடுத்த மாதம் தானே வருவீர்கள்?  இன்று என்ன திடீர் விசிட் ? ” 




” சும்மாதான் தேவயானி .உன்னை பார்க்க வேண்டும் போல் இருந்தது .அதனால் வந்தேன். வாயேன் அப்படியே மெல்ல வெளியே நடக்கலாம் ” 

தேவயானியும் சுபாவும் அந்த மலைப்பிரதேசத்தின் மாலை நேரத்தை ரசித்தபடி மெல்ல நடக்க துவங்கினர்.




” தருணுக்கு பெரம்பலூரில் ஒரு வேலை என்று சொன்னார். அதைச் சாக்கிட்டு உன்னுடன் பேச வேண்டும் என்று நான் இங்கே இறங்கிக் கொண்டேன் .இன்று இரவு நான் மட்டும்தான் இங்கே தங்க போகிறேன் .நாளை காலை அவர்  வந்ததும் இருவரும் கிளம்பி விடுவோம் ” தான் வந்த விவரம் சொல்லியபடி நடந்தாள் சுபா.

” என்னக்கா அப்படி என்ன விஷயம் பேச வேண்டும் ? ” 

” இங்கே நடந்து கொண்டிருக்கும் சில சம்பவங்களை கேள்விப்பட்டேன் .அதைப்பற்றித்தான் உன்னை எச்சரிக்கலாம் என்று…” 

” என்னக்கா ரிஷிதரனா ?”  முடிக்கும் முன்னால் குறுக்கிட்டு புன்னகையோடு கேட்டாள் தேவயானி.

” ஆமாம் கிட்டத்தட்ட ஒரு மாதங்களாக ரிஷிதரன் இங்கே தான் இருக்கிறார் போலவே ” 

” அவரை உங்களுக்கு தெரியுமா அக்கா ? ” 

” ம் . தெரியும் நேரில் பார்த்ததில்லை .ஆனால் அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். சசிதரன் சாரோடு தொழில் தொடர்புடைய குடும்பம் தானே எங்களுடையது. சசி சார் சொல்லித்தான் இந்த பசுமை குடிலை பற்றி எங்களுக்கு தெரியவந்தது. எங்கள் தொழில் வட்டாரங்களில் ரிஷிதரன் ஓரளவுக்கு பிரபலம் ” 

” என்னக்கா சினிமா பிரபலம் போல் சொல்கிறீர்கள் ” 

” ஆமாம் ஒரு தொழிலை தொடங்கினால் அதனை மறுப்பது , நடந்து கொண்டிருக்கும் தொழிலிற்கு ஏதாவது இடைஞ்சல் கொடுப்பது , தேவையான மீட்டிங்குகளுக்கு வராமல் இருப்பது , சரியான நேரத்தில் முக்கியமான கையெழுத்துக்களை போடாமல் கழுத்தை அறுப்பது …இந்த மாதிரி பிரபலம் அவர் ” 

” ம் எப்படி அக்கா இதையெல்லாம் சகித்துக் கொள்கிறீர்கள் ? இந்த ரிஷிதரன் ஏன் இப்படி செய்கிறார் ? ” 

” யாருக்குத் தெரியும் ? தருணிடம் கேட்டால் வீட்டிற்கு அடங்காத பிள்ளை,   கை நிறைய பணம் இருக்கும்  பணக்கார வீட்டு குணக்கேடான பசங்க அப்படித்தான் இருப்பார்கள் .ஒரு கல்யாணம் முடிந்தால் சரியாகிவிடும் என்பார் ” 

” சரிதான் இவருடைய இந்த அடங்காதனத்திற்கு இன்னொரு அறியா பெண்ணின் வாழ்வை வேறு பலி கொடுக்க வேண்டுமா ? ” 




” காலங்காலமாக கோவில் காளையாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் ஆண்களை அடக்க நம் சமூகத்தில் கையாளும்  மிக எளிதான வழி இதுதான் தேவயானி .இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்  இப்படி இருக்கும் 80 சதவீத ஆண்கள் கல்யாணத்திற்குப் பிறகு மாறிவிடுகிறார்கள் என்பது தான் ” 

‘ சரிதான் .அப்போது கவலை இல்லை .இந்த ரிஷிதரன் எருமை மாட்டையும் அடக்குவதற்கு ஒரு பசு வரப்போகிறது ” தேவயானி கலகலவென சிரித்தாள் .

” எருமைமாடா ? ” சுபா ஆச்சரியத்துடன் தேவயானியை பார்த்தாள்.

” அந்த ஆளுக்கு நான் வைத்திருக்கும் பெயர் மகிசாசுரன் ….எருமை மாடு…”  தன் உச்சந்தலையில் இரு கைகளையும் கொம்பு  போல் வைத்து காட்டி தலையாட்டினாள் தேவயானி.

சுபா பட்டென்று சிரித்துவிட்டாள் ”  பார்த்து தேவயானி .அந்த ரிஷிதரன்  மிகவும் கோபக்காரர் என்பார்கள். இப்படி அவர் முன்னால் பேசி மாட்டிக் கொள்ளாதே ” 

” அவரை நான் கூப்பிடுவதே இப்படித்தான் .எனக்கென்ன பயம் ? ” சொன்னவளை கூர்ந்து பார்த்தாள் சுபா.

” இப்படி அவரிடமும் பேசுவாயா ? முதலில் உன்னிடம் சரியாக பேசுவாரா ? ” 

” ஏன் பேசுவதற்கு கூட பணம் கேட்பாரா ? ” 

” அப்படித்தான் சில மீட்டிங்குகளுக்கு வருவதற்கு லட்சங்களைத் தாண்டி கோடியில் கூட அவர் பணம் கேட்பதாய் கேள்விப்பட்டிருக்கிறேன் .கேட்ட பணத்தை கொடுத்துத்தான் அவருடைய அம்மாவும் அண்ணாவும் அவரை மிகச்சில தொழில் கூட்டங்களுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள் ” 

” ஆஹா என்ன குணம் …இந்த ரிஷிதரனிடம் எண்ணி சொல்வதற்கு கூட எந்த நல்ல குணமும் கிடையாது போலவே அக்கா ”  புன்னகையுடன் பேசிய தேவயானியை வியப்பாய் பார்த்தாள் சுபா.

” அந்த ரிஷிதரனை பற்றி உனக்கு எந்த பயமும் இல்லையா தேவயானி ? ” 

” இல்லை அக்கா பயமுறுத்தும் அளவுக்கு அவரிடம் எந்த விஷயமும் இருப்பது போல் எனக்கு தெரியவில்லை ” 

” தொழில் விஷயங்களை விடு் அவருடைய குணம் …பெண்களிடம் அவர் நடந்து கொள்ளும் முறை… இதெல்லாம் உனக்கு தெரியும் தானே ?  அதன்பிறகும் அவருடன் எப்படி உன்னால் பழக முடிகிறது ? ” 

” இது எங்கள் தொழில் அக்கா .அண்ணன் அம்மா சம்மதத்துடன்தான் அவருக்கான வேலைகளை நான் செய்து கொண்டிருக்கிறேன் ” 




” உன் அண்ணனுக்கு தொழில் கண்ணோட்டம் மட்டும்தான். அம்மாவிற்கு அவர்களுடைய நெடுநாள் தோழியின் சங்கடத்தை தீர்க்க வேண்டும் என்ற வேகம் அவர்களது உதவாக்கரை மகனை திருத்தி தோழியிடம் ஒப்படைத்து விடலாம் என்று ஆசை  கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவர் அந்த ரிஷிதரன் ” 

பேசியபடியே பாதையை விட்டு ஒதுங்கி , செடிகளுக்கு நடுவே இருந்த ஒரு பாறை திட்டு மேல் அமர்ந்து கொண்டாள் சுபா .” இந்த மாதிரி ஒரு ஆளுக்கு வேலை பார்க்க  எப்படி உன்னை அனுமதிக்கிறார்கள் ? ” 

” மனிதர்களை கணிப்பதில் அம்மா திறமையானவர்கள் அக்கா. இங்கே வந்த நாளிலிருந்து அம்மாவிடமோ  என்னிடமோ ரிஷிரன் மிகவும் கண்ணியமாகதான் நடந்து கொண்டு இருக்கிறார்.”  தேவயானி சுபாவுக்கு எதிராக நின்றபடி பேசிக் கொண்டிருந்தாள் .

” இதனை என்னால் நம்ப முடியவில்லை தேவயானி .ரிஷிதரனை போல் ஒரு பிளேபாய் , உன்னைப்போல் ஒரு அழகான பெண்ணை கண்ணியமாக நடத்துகிறான் என்றால் …ம்ஹூம் நிச்சயம்  நம்ப முடியவில்லை ” 

” நிஜம் அக்கா. இன்றுவரை அவருடைய பார்வையில் கூட கண்ணிய குறைவை  நான் பார்த்ததில்லை. எத்தனையோ ஆண்களின் துச்சாதனன் பார்வையை எதிர்கொண்டவள் நான். நிஜமாகவே துச்சாதனன் என்று பெயரெடுத்த ஒருவனிடம் கிருஷ்ணனின் சாத்வீகத்தை பார்த்தேன்” 




” சரிதான் போ .அவரை கடவுள் ரேஞ்சுக்கு ஏற்றிக் கொண்டிருக்கிறாயே. ஜாக்கிரதை தேவயானி துச்சாதனனை கூட ஒரு கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கிருஷ்ணன் இருக்கிறானே …அவன் மிகவும் அபாயமானவன் .கட்டுக்குள் அடங்காதவன் .சற்று முன் நீ மருதாணியிடம் சொன்னாலே சொன்னாயே ஒரு உதாரணம் ..ஒயருக்குள்  ஒளிந்திருக்கும் மின்கம்பி .அதற்கு அப்படியே பொருந்திப் போவார் இந்த ரிஷிதரன் ” 

” தொட்டால் தானே அக்கா ஒயர்  ஷாக்கடிக்கும்… ஜாக்கிரதையாக தள்ளி நின்று கொண்டால்…” 

” சில மின்சாரங்கள் தேடிவந்து உடம்பை பிடித்துக்கொள்ளும் தேவயானி ” 

” வசமான உருட்டுக்கட்டை தயார் செய்து வைத்திருந்து அந்த கரண்ட்டை ஒரே அடி ….” சொன்னபடி தனது கையில் கட்டை வைத்திருக்கும் பாவனையோடு காற்றில் அழுத்தி வீசியபடி திரும்பியவள் திகைத்து அப்படியே உயர்த்திய கைகளுடன் நின்றுவிட்டாள்.

” யாருக்கு இவ்வளவு வேகமான அடி  ? ” கேட்டபடி எதிரே நின்று கொண்டிருந்தவன் ரிஷிதரனே தான். தேவயானி திருதிருவென விழிக்க துவங்கினாள்.




” யார் தேவையானி ? ” அவ்வளவு நேரமாக குத்துச் செடிகளாக  அடர்ந்திருந்த செம்பருத்தி செடிகளின் பின்னால் இருந்த பாறையில் உட்கார்ந்திருந்த சுபா எட்டிப்பார்க்க  அவள் இப்போதுதான் ரிஷிதரனின் கண்ணில் பட்டாள்.

” ஓ சாரி …இவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாயா ?  நான் குடிலில் இருந்து பார்த்தபோது நீ தனியாக நின்று கொண்டிருப்பது போல் இருந்தது …அதனால்தான்… சாரி …” கையை உயர்த்தி மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் சுபா.

” நீங்கள் ரிஷிதரன் ? ” 

” ஆமாம் என்னை உங்களுக்குத் தெரியுமா  ? ” 

” மிகவும் நன்றாக. நேரிடையாக இல்லாவிட்டாலும் பேச்சு வழியாக ….எனக்கு மிகுந்த பழக்கம் நீங்கள் ” 

” சாரி மேடம் எனக்கு புரியவில்லை ” 

” உங்களுடைய கம்பெனிகளில் சிலவற்றில் என் கணவரும் நானும் கூட ஷேர் ஹோல்டர்ஸ் .நிறைய பிசினஸ் மீட்டிங்குகளுக்கு வந்திருக்கிறோம் .அப் கோர்ஸ் எந்த மீட்டிங்கிற்கும் நீங்கள் வந்ததில்லை .அதனால் நாம் சந்திக்க முடியாமலேயே போய்விட்டது ”  விஷமமாக பேசினாள் சுபா.

” ஓ…”  என்ற மெல்லிய தலையசைப்பு மட்டும் அவளுக்கு கொடுத்தவன் ” தேவயானி எனக்கு இன்று நான் வெஜ் சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது .ஏதாவது தயார் செய்துகொண்டு வருகிறாயா ? ” என்று கேட்டான்.

” சரி நீங்க  போங்க பிரியாணி செய்து எடுத்து வருகிறேன் ” 

” எப்போது வருவாய் ? ” நகராமல் நின்றான்.

” பிரியாணி செய்து முடித்தபின் ” அழுத்தி சொன்னாள்.

” ஏங்க மேடம் நார்மலாக பிரியாணி செய்ய எவ்வளவு நேரம் ஆகும் ? ” ரிஷிதரன் இப்போது கேள்வியை சுபாவிற்கு வைத்தான்.

” அது நீங்கள் கேட்கும் பிரியாணியை பொறுத்து… உங்களுக்கு எந்த பிரியாணி வேண்டும் ? ”  சுபா புன்னகையோடு கேட்டாள்.

” எந்த பிரியாணி சீக்கிரம் செய்து முடித்து விடலாம். நீங்களே சொல்லுங்கள் மேடம் ” 

” உங்களுக்கு தேவை பிரியாணியா ? அல்லது சீக்கிரம் கொண்டுவரும் நபரா ? ” கேட்டுவிட்டு ரிஷிதரன் ஒருமாதிரி பார்க்கவும் ” ஐ அம் சாரி சார் எனக்கு தோன்றியதை கேட்டேன் .அப்புறம் இந்த மேடம் எல்லாம் வேண்டாம் என் பெயர் சுபா அப்படியே கூப்பிடுங்கள் ” 




” ஆனால் நீங்கள் இன்னமும் பிரியாணி விவரம் சொல்லவில்லையே மேடம் ” 

இவன் தன்னுடைய பேச்சை கவனிக்கிறானா என்ற சந்தேகம் வந்தது சுபாவிற்கு.

“சிக்கன் பிரியாணி செய்து எடுத்து வருகிறேன். நீங்க போங்க ” தேவயானி அவனை அனுப்ப முயன்றாள்

“ஒரு மணி நேரத்தில் வருவாயா ?”தன் வாட்சை திருப்பி பார்த்தான் அவன்.

” ம் ” தேவயானி தலையசைத்து முகம் திருப்ப , மனமின்றி அங்கிருந்து நகர்ந்தான்.

” தேவயானி ரொம்ப கஷ்டம் ” என்றாள் சுபா சிரித்தபடி .

” என்னக்கா  கஷ்டம் ? ” 

” இதோ இவரை சமாளிப்பது … நான் கேள்விப்பட்டதற்கும் இந்த ரிஷிதரனுக்கும் குறைந்தபட்சம் நூறு வித்தியாசங்கள் .இப்படி யாரிடமும் அவர் கெஞ்சிக் கொண்டு நின்றதாக எனக்கு செய்தி இல்லை ” 

” அக்கா அவருக்கு பிடித்த சாப்பாட்டிற்காக அப்படி கேட்டுக்கொண்டிருந்தார் ” 

” அப்படியா …” சுபா தேவயானியின் விழிகளுக்குள் உறுத்தாள்.

தேவயானி பதில் சொல்லவில்லை .ஆபீஸ் பைல்களில் கையெழுத்து போடும் விஷயத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த பிரச்சனையால் அவள் முதல் நாள் முழுவதும் அவன் குடிலுக்கு போகவில்லை .இன்று அவளை வரவழைக்கவே ரிஷிதரன் இப்படி வந்து நின்றான் என்று அவளுக்கு தெரியும் .ஆனால் அதனை சுபாவிற்கு விளக்கமாக சொல்ல அவளால் முடியாது.

திடீரென்று சுபா மெல்ல சிரிக்க துவங்கினாள்.”  நீ சொல்வது சரிதான் தேவயானி. உன்னிடம் அவர் பார்வையில் கள்ளம் இல்லை .ஆனால் ஏதோ ஒன்று இருக்கிறது .அது எனக்கு புரிய மாட்டேனென்கிறது .வேறு ஒன்று நன்றாக புரிகிறது .இவர் நீ சொன்ன மின்கம்பியை விட மோசமானவராக இருக்கிறார் .நீ மிகவுமே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ” 

” எனக்கு தெரியாதா அக்கா ?  தன்னிடம் அல்லது தான் செய்து கொண்டிருக்கும் குற்றங்களை அடுத்தவரிடம் இருந்து மறைத்து தன்னை உத்தமனாக காட்டிக் கொள்வது தான் ஒரு மனிதனின் இயல்பு .ஆனால் ரிஷிதரன் ஒருநாளும் தன்னுடைய தவறுகளை மறைத்ததில்லை .நான் மிகவும் கெட்டவன் என்று அவரே சொல்லிக் கொள்வார் .தயங்காமல் தன் தவறுகளை பட்டியல் இடுவார்.அவரை கவனிக்க சொல்லும்  இந்த வித்தியாசமான குணமே அவரிடம்  

என்னை மிகவும் எச்சரிக்கையாகவும்  பழக வைக்கிறது ” 

” ஓ … நீ ரிஷிதரனைப் பற்றி மேலும் மேலும் ஆச்சரியமான இதுவரை நான் கேள்விப்படாத தகவல்களை கொடுக்கிறாய். அன்பும் அழகுமாக இப்படி ஒரு ஆண் தொடர்ந்து வேண்டிக்கொண்டே அருகில்  இருக்கையில் அவனை மறுப்பது என்பது ….சாரி டூ ஸே திஸ்  தேவயானி. எந்த பெண்ணுக்குமே இந்த ரிஷிதரனை மறுப்பது கொஞ்சம் கடினமான விஷயம் தான் ” 




” நான் கொஞ்சம் வித்தியாசமான பெண்ணில்லையா  சுபாக்கா …என்னை அவ்வளவு எளிதில் யாரும் வீழ்த்திவிட முடியாது ” 

சுபா தேவயானியை மெல்ல அணைத்துக் கொண்டாள்  ” யூ ஆர் கிரேட் “பாராட்டினாள்

” உன் விஷயத்தில் கவலைப்பட எனக்கு எதுவும் இல்லை என்று தோன்றுகிறது .ஒருவேளை நல்ல தகவல் எதுவும் இருந்தால் மறக்காமல் முதலில் எனக்கு சொல்லி அனுப்பு ” 

” இதோ இப்போதே சொல்லி விடுகிறேன் மேடம் .விரைவிலேயே என் அண்ணன் யுவராஜுக்கும் தேவயானிக்கும் திருமணம் நிச்சயம் செய்ய போகிறோம் .தேதி முடிவானதும் உங்களுக்கு சொல்லி அனுப்புகிறோம் .கண்டிப்பாக வந்து கலந்து கொள்ள வேண்டும் ”  நல்ல செய்தி என்ற அவர்களது இறுதி பேச்சை கேட்டபடி வந்த சுனந்தா சொன்னாள்.

சுபா திகைப்புடன் தேவயானியை பார்க்க அவள் பார்வையை தூரத்து மலை முகட்டிற்கு மாற்றிக்கொண்டாள்.

What’s your Reaction?
+1
1
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!