pacha malai poovu Serial Stories பச்சைமலை பூவு

பச்சை மலை பூவு -18

18

மேகத்தை உரசாமல் பறக்க தெரிந்த புறாக்கள் ,

வான் நீலத்தை முத்தமிட தவிக்கும் இதழ்கள் ,

நைந்த சகதியாய் ஆரம்பிக்கும் 

இக் காலை ,

வனப் பயணங்களில் யட்சியுடன் 

மகிஷனும் …

 

 

 

 




” ஏன் அக்கா பேசாமலேயே வருகிறீர்கள் ? ” சிறிது தூரம் நடந்த பிறகு மருதாணி கேட்டாள்.

” ஒன்றுமில்லை மருதாணி .இன்று என்னென்ன மூலிகை  பறிக்க வேண்டும் என்று யோசித்துக்கொண்டே வந்தேன் ” 

இருவருமாக  மூலிகைகள் பறிக்க வனத்தின் ஊடே நடந்து கொண்டிருந்தனர் .” வழக்கமான மூலிகைகள்தானே அக்கா  .யோசிக்க என்ன இருக்கிறது ?கற்றாழைபறிக்கவேண்டுமா ? ” 

“இல்லை கற்றாழை இருக்கிறது ” 




” ம் ரிஷிதரன் சார் வரவுமே  அவருடைய சிகிச்சைக்காக நீங்கள்தான் கற்றாழையை வீட்டிற்கு பின்னாலேயே ஒடித்து வைத்து வளர்த்து வருகிறீர்களே ? ” 

” ஆமாம் இன்று தேங்காய் எண்ணெய் காய்ச்ச வேண்டும் .நீ பள்ளியில் இருந்து வரவும் எனக்கு நினைவூட்டு மருதாணி ” 

” தேங்காய் எண்ணையை கடையில் வாங்கிக் கொள்ளலாம் இல்லையா அக்கா ? எதற்காக அந்த வேலையையும் இழுத்துப் போட்டுக்கொண்டு கஷ்டப்படுகிறீர்கள் ? ” 

” இது ரிஷிதரன் சாருக்காக கற்றாலையோடு சேர்த்து காய்ச்சும் எண்ணெய் . அது சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் .அதனால்தான் நானே காய்ச்சுகிறேன் ” 

” ஆனாலும் அவருடைய சிகிச்சையில் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறீர்கள் அக்கா ” 

” நோயை குணப்படுத்த நினைத்துவிட்டால் முழு மனதோடு அதில் இறங்கி விடவேண்டும் மருதாணி .இல்லையென்றால் அந்த வேலையை செய்யக் கூடாது .இந்த குடிலில் தங்கும் எல்லோருடைய உடல் நிலையிலும் எனக்கு இதே அக்கறை உண்டு ” 

” அந்த அக்கறைபடியாயானாலும் தொடர்ந்து நீ கவனித்து வரும் நோயாளியை இப்படியா பாதியில் அலட்சியப்படுத்துவாய் ? ”  பின்னால் கேட்ட குரலில் இரண்டு பெண்களும் வெலவெலத்து திரும்பி பார்க்க அங்கே ரிஷிதரன் நின்றிருந்தான்.

” இந்த நேரத்தில்    இங்கே  ஏன் வந்தீர்கள் ? ” 

” அண்ணா நீங்களும் மூலிகை பறிக்க வந்தீர்களா ? ” 

” ஓ நீங்கள் இருவரும் மூலிகை பறிக்க போகிறீர்களா ? ” 

” என்ன விவரம் என்று தெரியாமலேயே பின்னாலேயே வந்து விடுவீர்களா  ? ” கோபமாக கேட்டாள் தேவயானி

” எனக்கு தூக்கம் வரவில்லை தேவயானி .அப்படியே கொஞ்சம் நடந்து கொண்டு இருந்தேன். நீங்கள் இருவரும் காட்டுக்குள்  போவது தெரிந்தது .இந்த இருட்டுக்குள் எங்கே போகிறீர்கள் என்று உங்கள் பின்னாலேயே வந்தேன் ” 

” சத்தமில்லாமல் பின்னால் வந்து நாங்கள் பேசுவதை ஒட்டு கேட்டீர்களாக்கும் ? ” 




” அப்படி இல்லை. சும்மா நடக்க ஆரம்பித்தேன் .இந்த அதிகாலை காற்று ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கவே அப்படியே என் நடையை தொடர்ந்து விட்டேன் ” 

” எங்கள் பின்னாலேயே… உங்களை தெரிவிக்காமலேயே…” 

” அடடா உனக்கு என்ன ஆயிற்று தேவயானி ? நீ இன்று என்னிடம் சண்டைபோடும் மூடில் இருக்கிறாய் போல ” 

” ஆமாம் அப்படித்தான் .எனக்கு மூடு சரியில்லை .நீங்கள் உங்கள் குடிலுக்கு போகலாம் .நான் பிறகு வருகிறேன் ” 

” மூன்று நாட்களாக நீதான் குடில் பக்கமே வரவில்லையே .நீ அங்கே வந்து இருந்தால் நான் இங்கே வந்திருக்க மாட்டேன் ” ரிஷிதரன் சூழ்ந்திருந்த இருளில் அவள் முக உணர்வுகளை பார்க்க முயன்ற படி கூறினான்.




தேவயானி மௌனமானாள் .அன்று யுவராஜன் சொன்னதோடு இல்லாமல் அவள் என்ன செய்கிறாள் என்பதையும் கண்காணித்தபடி இருக்க மூன்று நாட்களாகவே ரிஷிதரன் குடிலுக்கு செல்வதை தவிர்த்து வந்தாள் .அத்தோடு அவனைப்பற்றி சந்திரசேகர் கொடுத்த விவரங்கள் வேறு அவள் அடிமனதில் எட்டிக்காய் கசப்பாய் தேங்கிக் கிடந்தது.

” ஏன் அக்கா நீங்கள் மூன்று நாட்களாக சாரை பார்க்க போகவே இல்லையா ? பிறகு சாருக்கு யார் மருந்து தடவி விட்டார்கள் ?  ” 

” நன்றாக கேள் மருதாணி .பற்றி எரிந்த கொண்டிருந்த நெருப்பிற்கு உள்ளே நுழைந்து என்னை வெளியே இழுத்துப் போட்டு காப்பாற்றியது உன் அக்கா தான் .இங்கே தொடர்ந்து கவனமாக சிகிச்சையளித்து என்னை குணமாக்கியதும்  அவர்கள்தான் .இப்போது திடீரென்று என்னை கண்டுகொள்ளாமல் ஒதுங்கி போனால் நான் ஏன் என்று கேட்க மாட்டேனா ? கஷ்டப்பட்டு தினமும் எனக்கு நானே மறந்து தடவிக் கொள்கிறேன் தெரியுமா ? ” பரிதாபம் தோன்றும்படி கேட்டான்.




” உங்களுக்கு சிகிச்சை அளிப்பதைத் தவிர எனக்கு வேறு வேலைகள் இல்லை என்று நினைத்தீர்களா ? ” தேவயானி சீறினாள்

” ஆமாம் ஆமாம் அருவிக்கரை பக்கமாக நிறைய வேலை இருக்கும் தானே ? ” ரிஷிதரனின் குத்தல் குரலுக்கு புரியாமல் அவனை பார்த்தாள்.

” மருதாணி இன்று நானும் உங்களுடன் மூலிகை வேட்டைக்கு வரட்டுமா ? ”  ரிஷிதரன்  மருதாணியிடம் பேசச் சென்றிருந்தான்.

” ஆஹா வாங்க அண்ணா .நாங்கள் எப்படி மூலிகை பறிக்கிறோம் என்று நீங்களும் வந்து பாருங்கள் ” மருதாணி உற்சாகத்துடன் கை தட்டினாள் .

” அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் .நீங்கள் கிளம்புங்கள் ” தேவயானி மறுக்க…

” ஏன் உன்னுடைய மூலிகை ரகசியங்களை நான் தெரிந்து கொள்வேன் என்ற பயமா ஏஞ்சல் ? ரிஷிதரனின் குரல்  சீண்ட துவங்கியது.

” இப்படி மூலிகைகளை ரகசியமாகவே வைத்துக்கொண்டால் தேவை உள்ளவர்களுக்கு அது எப்படிப் போய்ச் சேரும்?  உனக்கு இந்த மூலிகைகளை பற்றிய அருமைகளை எல்லோருக்கும் தெரியப்படுத்தும் எண்ணமே இல்லை .நீ ரொம்ப மோசம். சரியான சுயநலவாதி நீ  ” மூக்கை சுருக்கிக்கொண்டு  புகார் கூறினான்.

” ஆமாம் அக்கா இந்த மூலிகைகளை பற்றி எல்லோருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்றுதானே அடிக்கடி சொல்வீர்கள். ரிஷிதரன்  அண்ணாவும் நம்மோடு வரட்டுமே. அவரும் தெரிந்து கொள்ளட்டும் ” மருதாணி சொல்ல தேவயானி ரிஷிதரனை  முறைத்தாள்.

” கால் காயங்கள் எல்லாம் மாறிவிட்டன ஏன்ஜல் .எனக்கு நடப்பதில் எந்த கஷ்டமும் இருக்காது ” காலை லேசாக தூக்கி காட்டினான் .

” உங்கள் காயங்கள் ஆறியதை நீங்கள் சொல்லித்தான் நான் தெரிந்து கொள்ள வேண்டுமா ? ” 

” நீதான் ரொம்ப நாட்களாக என் குடில் பக்கமே வரவில்லையே ? பிறகு எப்படி உனக்கு தெரியும் ? ” 

” வருடக்கணக்காக அவளை பார்க்காதது போல் பேசியவனை என்ன செய்வதென்று தேவயானிக்கு தெரியவில்லை .போகலாம் என்று இருவருக்கும் கை காட்டிவிட்டு , ” வாயை திறக்காமல் வரவேண்டும் ”  என்று ஒரு கட்டளையை ரிஷிதரனுக்கு வைத்தாள்.




” ஓ ” என்று ஒற்றை விரலை உதட்டின் மேல் வைத்துக்கொண்டு அவர்களை பின் தொடர்ந்தவன்  பத்து எட்டுக்கள் நடக்கவுமே ” இப்படி தினமும் வருவாயா ஏன்ஜல் ? ”  என்று ஆரம்பித்தான்.

” இல்லை அண்ணா 10 நாள் அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை தான் வருவோம் ” மருதாணி பதிலளித்தாள்

” இந்த இருட்டு இவ்வளவு  புதர்களுக்கு நடுவே எப்படி பயமில்லாமல் வருகிறீர்கள்  ? ” 

” இது எங்களுக்கு பழக்கமான பாதைதான் அண்ணா .இங்கே எந்த ஆபத்தும் கிடையாது ” 

” அப்படி சொல்ல முடியாது மருதாணி .அப்படி நினைத்து தானே அன்று பப்ளிமாஸ் மரம் பார்க்க போனோம் .அங்கே அரக்கர்கள் கூட்டம் இருக்கவில்லையா ? ”  தேவயானி கேட்க மருதாணி சிரித்தாள்.

” ஏய் நான் எவ்வளவு முக்கியமான விஷயம் பேசிக்கொண்டிருக்கிறேன். நீ இப்படி பல்லை காட்டுகிறாயே ? ” 

” அண்ணன்தான் அன்று நம்மை காப்பாற்றி விட்டாரே அக்கா ” 

” உன் அண்ணன் கிழித்தார் ” முணுமுணுத்தவள் பக்கம் லேசாக சரிந்த ரிஷிதரன் ” ஏதாவது சொன்னாயா ஏஞ்சல் ? ” என்றான் அவளை விட முணுமுணுப்பாக . இருளில் மின்னிய அவன் பற்கள் நான் கேட்டு விட்டேனே என அறிவித்தது.

” அன்று எதற்காக அங்கே வந்தீர்கள் மருதாணி ? ” 

ரிஷிதரன் தன் பேச்சை மாற்றினான் .

” பப்ளிமாஸ் பழ மரங்கள் சிகப்பு கலர் சுளைகளோடு  அங்கே இருப்பதாக செல்லாயி சொன்னாள் அண்ணா . எங்கள் குடிலில் வெள்ளை கலர் சுளைகள் இருக்கும் மரம் தான் இருக்கிறது .அந்த சிகப்பு கலர் பப்ளிமாஸ் பழமரத்தின் கிளையை எடுத்துவந்து எங்கள் வீட்டில் வைத்து வளர்க்கலாம் என்று வந்தோம் ” 

” பப்ளிமாஸ் …? அது என்ன பழம் ? நான் கேள்விப்பட்டதே இல்லையே ? அன்று நாங்கள் இருந்த இடத்தில் அந்த மரம் இருந்ததா ? ” 

” உலகத்தையே மறந்து வேறு உலகத்தில் மூழ்கிக் கிடப்பவர்களுக்கு சுற்றி இருப்பது எப்படி தெரியும் ? ” தேவயானி சாடினாள்




” எனக்கு பப்ளிமாஸ் மரங்களை காட்டுகிறாயா மருதாணி ? ” ரிஷிதரன் தேவயானியை கண்டுகொள்ளவில்லை.

” ஓ “என்று தலையாட்டிய மருதாணியை இடை வெட்டினாள் தேவயானி.”  என்ன தலையாட்டுகிறாய் ?  அந்த கண்றாவி இடத்திற்கு திரும்பவும் போகக்கூடாது என்று பேசி வைத்திருந்தோமே மறந்து விட்டாயா ? வளவளவென்று பேசாமல் முன்னால் நட ” 

மருதாணி தலையை குனிந்து கொண்டு சற்று பெரிய எட்டுக்களுடன் முன்னே தெரிந்த சிறு மேட்டில் ஏறினாள் .

” நான் நல்லவன் இல்லை தேவயானி. நீயே சொல்வதுபோல் மகிஷாசுரன் தான் .அதனை நான் என்றுமே மறைத்ததில்லை .அத்தோடு என் குணத்தை பற்றியும் நீ மிக நன்றாகவே அறிவாய் ” 

” தின பேப்பரில் தலையங்கமாய் போடுமளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்ன… செய்தி போட்டு விடலாமா  ? ” தேவயானியின் கேள்விக்கு புன்னகைத்தான் அவன்.

”  தேவயானி நான் என்னை விளக்க முயல்கிறேன் எந்த மறைவும் இல்லாமல் .அன்று உங்கள் இருவரிடமும் அந்த மாதிரி நடந்து கொள்ள காரணம்…”  என்று ஆரம்பித்தவன் சற்று நிறுத்தி ,”  மருதாணி எனக்கு ஒரு சந்தேகம் .உனக்கு பழக்கமான இடமென்றாலும்  இங்கே உனக்கு கொஞ்சம் பயம் தானே …அதுதான் உன் அக்காவை இணைபிரியாமல் உடன் வந்து கொண்டே இருக்கிறாய் ” என்றான்.




முன்னால் நடந்து கொண்டிருந்த மருதாணி நின்று திரும்பி இடுப்பில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு  ” அண்ணா இதெல்லாம் ரொம்ப ஓவர் .உங்களுக்கு அக்காவோடு தனியாக பேச வேண்டும் என்றால் வெளிப்படையாக சொல்ல வேண்டியதுதானே ? நானே கொஞ்சம் முன்னால் நடந்து விட்டு போகிறேன் .எதற்காக தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிறீர்கள் ” என்க நல்ல வேலை முகத்தில் வழியும் அசடு இருட்டில் தெரியவில்லை என்று நினைத்துக்கொண்டான் ரிஷிதரன்.




” ஏய்…மருதாணி போகாதே…நில்லு ”  தேவயானி அதட்டிக் கொண்டு இருக்கும்போதே ” நான் இல்லை .உங்க ஆட்டத்திற்கு நான் வரவில்லை ” என்றபடி சிறு ஓட்டம் ஒன்றுடன் கொஞ்சம் முன்னால் நகர்ந்து போய்விட்டாள் மருதாணி.

” என்ன இப்படி செய்கிறீர்கள் ? ” தேவயானியின் கோப கேள்விக்கு ” பத்து நிமிடம்தான் தேவயானி .நாம் அவளுடன் சேர்ந்து கொள்ளலாம் ” என்றபடி அவளுடன் இணையாய் நடந்தான் ரிஷிதரன்.

” இந்த காட்டிற்குள் எங்களைத் தேடி நிறைய பெண்கள் வருவது  உண்டு ” தாழ்ந்த குரலில் பேசினான்.

” எப்படி …எப்படி …உங்களை தேடி வருவார்களா ? ” 

” அவர்களாக இல்லை எங்கள் ஏற்பாட்டின்படிதான் ” கொஞ்சம் குன்றலாக பேசினான் ” அன்று அப்படி வந்த பெண்கள் தான் என்று உங்கள் இருவரையும் நினைத்தோம்” 

தேவயானி நடையை நிறுத்திவிட்டு கனன்ற கண்களுடன் அவனைப் பார்த்தாள் ” பணத்திற்காக உங்களைத் தேடி வரும் பெண்களை போன்றா நாங்கள் இருந்தோம் ? ” 

” இந்த மலை பிரதேசத்திலேயே கூட சில பெண்கள் அப்படி வருவதுண்டு தேவயானி .அன்று உங்களை அப்படித்தான் நினைத்தோம் ” 

” சீச்சி  பொய் சொல்லாதீர்கள் .அப்படி எல்லாம் இங்கே யாரும் கிடையாது ” 

” பொய் .அதை நான் சொல்ல மாட்டேன் .தவறே செய்தாலும் அதனை வெளிப்படையாக சொல்லி விடுவேன்.

 உனக்கு சில விவரங்கள் தெரியாது தேவயானி .அன்பும் பாதுகாப்பும் நிறைந்திருக்கும் உன் உலகத்திற்கு வெளியே ஆசைகளும் மோகமுமாக  இன்னொரு உலகமும் இருக்கிறது. அதை நீ அறிய மாட்டாய் .அறியவும் வேண்டாம் .உன் போன்ற தேவதைகளுக்கு ஏற்ற உலகம் அது கிடையாது ” 

” உங்கள் கண்றாவி  விளக்கங்கள் எனக்கு தேவையில்லை .சீக்கிரம் நடங்கள் மருதாணி என்ன செய்கிறாள் என்று பார்க்கவேண்டும் ” 

” ஆனால் உனக்கு விளக்குவது எனக்கு தேவை .உனக்கு பிடிக்காவிட்டாலும் நீ இப்போது அதை கேட்டு தான் ஆக வேண்டும் ” 

தேவயானி பற்களை கடித்துக் கொண்டு தன்னை அடக்கிக் கொண்டாள். சற்று விரைவாக முன்  நடக்க முயன்றவளின் கைப்பற்றி நிறுத்தியவன்”  ப்ளீஸ் தேவயானி ” தயவாய் வேண்டினான்.

” உங்கள் நண்பர்கள் பணத்தை தூக்கி எறிந்து எங்களை அழைப்பதையும் பார்த்துக் கொண்டு இருந்தவர்தானே நீங்கள் ? சை கையை எடுங்கள் ” 

” அப்போது உங்களைப்பற்றிய எங்கள் எண்ணத்தைத்தான்  சொன்னேனே தேவயானி .இப்படி வரும் பெண்களில் சிலர் அதிக பணத்திற்காக சில சமயம் விருப்பம் இல்லாததுபோல் நடிப்பது உண்டு .அன்று முதலில் நான்  உங்களையும் அப்படித்தான் …..” ரிஷிதரன் பேசிக்கொண்டிருக்கும் போதே மனம் கொதிக்க தேவயானி வேகமாக முன்னால் நடக்க துவங்கினாள் .அகன்ற எட்டுக்களோடு  மீண்டும் அவளோடு இணைந்து கொண்ட ரிஷிதரன் ”  சாரி தேவயானி ” மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.




அந்த மன்னிப்பு தேவயானியின் மன கொதிப்பை அடக்கும் வல்லமை உடையதாக இல்லை. அவள் ரிஷிதரனின் அருகாமையை கூட விரும்பாது சிறிது முன்னால் தள்ளியே நடந்தாள்.

” நீ கையில் கத்தி எடுக்கவும்தான் எனக்கு உங்களது உறுதியான நிலை புரிந்தது .வேகமாக உன்னருகில் வந்தேன். உன் களங்கமற்ற முகம் உன்னைப்பற்றி எனக்கு தெளிவாக எடுத்துச் சொன்னது .தவறான எந்த நினைவுகளுக்குள்ளும் உன்னை பொருத்த முடியாது..உங்கள் இருவரையும் அங்கிருந்து வெளியேற்றி அனுப்பிவைத்தேன் ” 

” பொய் ” மீண்டும் அவனை சாடினாள் . ” அப்படி என்னைப் பற்றி நல்லவிதமாக நினைத்தவர் எதற்காக என்னுடைய விபரங்களை விசாரிக்கச் சொல்லவேண்டும் .அதுவும் மிரட்டலாக ” 

இரண்டு எட்டு முன்னால் வைத்து அவள் பாதையை மறித்து நின்று அவள் முகத்தை கூர்ந்து பார்த்தான் ” சந்திரசேகரிடம் பேசினாயா ? அந்த ஆள் வேறு என்ன சொன்னான் ? ” 

” எல்லாமே சொன்னார் . அவருடைய மகள்களைப் பற்றி நீங்கள் கேட்டதையும் கூட …'” பிசிறு தட்டியது  தேவயானியின் குரல்.

ரிஷிதரனின்முகம் இருண்டது ” சந்திரசேகர் என்னை மிகவும் தொல்லை செய்து கொண்டிருந்தான.  அந்தத் தொல்லையிலிருந்து தப்புவதற்காகத்தான்  அவன் மகளை பற்றி பேசி வைத்தேன் ” 

” நீங்கள் தப்பிக்க யாரோ சம்பந்தமில்லாத பெண்களைப்பற்றி இப்படி தப்பாக பேசுவீர்களா? ” 

” அது …தவறுதான் .ஆனால் அந்த ஆளிடம் இருந்து தப்புவதற்கு எனக்கு வேறு வழி தெரியவில்லை ”  தேவயானி அவன் முகத்தை உற்றுப் பார்த்தபடி இருக்க இருகைகளையும் உயர்த்தி காட்டினான் அவன்.

“உன் விஷயம்…. நிஜமாகவே என் மனதார நான் உன்னைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள விரும்பினேன் .அன்று இருந்த சூழ்நிலையில் அதற்கு சந்திரசேகர் தான் சரியான ஆள் என்று நினைத்து தான் உன் விபரம் கேட்டு பேசினேன் ” 

” எதற்காக என்னைப் பற்றி தெரிந்துகொள்ள நினைத்தீர்கள்  ? உங்களை தேடி வர வைக்க எனக்கு

எவ்வளவு பணம் தேவைப்படும் என்று ….” மேலே பேச முடியாமல் தேவயானியின் குரல் கரகரக்க  பேச்சை நிறுத்தி தலையை திருப்பிக் கொண்டாள்.

ரிஷிதரன் அவள் பாதையை விட்டு விலகி நின்று நடக்குமாறு அவளுக்கு சைகை காட்டிவிட்டு தானும்




 மெல்ல நடக்கத் துவங்கினான்  .” அந்த மாதிரி பேசுவதற்கு என்னிடம் வேறு ஆட்கள் இருக்கிறார்கள் தேவயானி .அவர்களிடம் உன் விஷயம் சொல்ல நான் விரும்பவில்லை .அதிக ஆபத்தில்லாத சந்திரசேகரை உன் விஷயத்திற்கு தேர்ந்தெடுத்தேன் .ஏன் என்று தெரியாமலேயே உன்னைப் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள நான் ஆசைப்பட்டேன் .அவ்வளவுதான். ஓரளவு உனது குற்றச்சாட்டுகளுக்கான பதில்களை சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன் ” 

” பொறுக்கி ” வெளிப்படையாக அவனது காதுக்கு கேட்கும் விதத்தில் முணுமுணுத்தாள்.

” ஆமாம் ” உடனடியாக அவளது வசவை அவன் ஏற்றுக்கொண்ட விதத்தில் அவளுக்கு ஆத்திரம் வந்தது.

” மருதாணி ” உரத்த குரலில் அழைத்தபடி முன்னால் நடந்தாள். அவர்கள் வழக்கமாக மூலிகையைப் பறிக்கும் இடத்தில் மருதாணி சில மூலிகைகளை பறித்து கூடைக்குள்  போட்ட படியிருந்தாள்.

” இப்போதெல்லாம் அடிக்கடி அருவிக்கரை  பக்கம் போகிறாய் போலவே …அந்த பிரிட்டிஷ் இளவரசனுடன் ” ரிஷிதரனின் குரல் துருவலாய் வந்தது .

” ஆமாம் ” அலட்டாமல் பதில் சொன்னாள் தேவயானி.

” அப்படி தினமும் பேசும் அளவு என்ன விஷயம் இருக்கிறது ? ” 

” எங்கள் எதிர்கால வாழ்க்கையை பற்றி 

இருக்கலாம் சார். அதைப் பற்றி உங்களுக்கு என்ன கவலை ? ” 

” உன் எதிர்காலத்தைப் பற்றி எனக்கு கவலை இல்லை .என்னைப் பற்றிய விமர்சனம் எனில் நான் கவலைப்பட தானே வேண்டும் ” பாம்பின் சீறலாய் வெளிப்பட்டது அவன் மூச்சு .




தேவயானி புருவம் சுருக்கி அவனை பார்க்க ”  அந்த ஏலியனிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தேன் ” என்றான்.

தேவயானியின் முகம் கோபத்தில் சிவந்தது .அவள் தன் இடுப்பிலிருந்து சிறிய கத்தியை எடுத்தாள்.

What’s your Reaction?
+1
3
+1
3
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!