pacha malai poovu Serial Stories பச்சைமலை பூவு

பச்சை மலை பூவு – 17

17

நிர்மலமாய் தேங்கி நிற்கிறது 

உன் பிரியம் ,

என் இதய விளிம்பை தொட

தயங்குகிறது அது ,

தலை கோத துடிக்கின்றன 

மோதிர விரல்கள் ,

எதையோ நினைத்து  எதிலோ இடறி

மணியாய் சிதறுகின்றன

என் முற்றத்து கோலங்கள் .




சற்றே கோரமாக மாறிவிட்ட முகம் அவனது தன்னம்பிக்கையை குலைத்து விடலாம் .நோயாளி குணமடைய மருந்துகளைக் காட்டிலும் தன்னம்பிக்கையே மிக முக்கியம் என்று பேசிக்கொண்டே சொர்ணமும் தேவயானியும் அந்த குடிலில் இருந்த எல்லா கண்ணாடிகளையும் நீக்கி இருந்தனர் .அன்றுவரை ரிஷிதரனும் தன் முகம் பார்க்கும் எண்ணம் இல்லாதவனாகத்தான் இருந்தான் .இன்று என்னவோ… திடீரென்று இப்படி கேட்கிறான்…

“அது எதற்கு ? ” 

” சொன்னேனே என் முகம் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று ” 

” முழுவதுமாக உங்கள் ட்ரீட்மெண்ட் முடியட்டுமே.  பிறகு பார்த்துக்கொள்ளுங்களேன் ” 

ரிஷிதரன் கட்டிலிலிருந்து இறங்கி அவள் அருகே வந்து நின்றான்.”  பார்க்க முடியாத அளவுக்கு மிகவும் அசிங்கமாக போய்விட்டேனா தேவயானி ? ” 

” இல்லை ” உடனே தலையசைத்து மறுத்தாள்.”  சாதாரண தோல் நிறமாற்றம் தான் .இன்னும் ஓரிரு மாதங்களில் சரியாகிவிடும் ” 

” அழகாகத்தானே இருக்கிறேன் என்று உன்னிடம் திமிராக சொன்னேன் இல்லையா  ? ” வேதனையின் இழையோடிய அவன் குரலை உணர்ந்த தேவயானி ஆறுதலாக அவன் தோளை பற்றினாள்.

” அழகாக இருந்தீர்கள். சொன்னீர்கள் .இப்போதும் லேசான நிற மாற்றம் தானே தவிர இப்படி நீங்கள் கவலைப்படும் அளவிற்கு முகம் மாறிவிடவில்லை ” 

” பிறகு ஏன் இங்கே இருந்த கண்ணாடிகளை எல்லாம் எடுத்துக்கொண்டு போனீர்கள் ? ” 




” அது ஒரு மனரீதியான சிகிச்சைதான் சார் .உடலால் காயங்களில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவர் நாளையே பழையபடி மாறப்போகும் தோற்றப் பொலிவிற்கு இப்போதே கவலைப்படவேண்டாம் என்றுதான் கண்ணாடிகளை சுழற்றி வைத்தோம் ” ய

” நான் அவ்வளவு மன பலவீனமானவன் இல்லை தேவயானி .எனக்கு முகம் பார்க்க  கண்ணாடி வேண்டும் ” 

அவன் பிடித்த பிடியை விடமாட்டான் என்று உணர்ந்து கொண்டவள் ”  சரி  ” என தலையசைத்தாள்.

” நாளை வரும்போது எடுத்து வருகிறேன் ” 

” ம்.. சீக்கிரம் கொண்டு வா .எந்த அளவு கோமாளியாக தெரிகிறேன் என்று பார்க்க வேண்டும் ” 

தேவயானி அவனை நம்ப முடியாமல் பார்த்தாள் . ” நான் உங்களை மிகவும் தைரியமானவர் .கல் மனிதர் என்றெல்லாம் நினைத்திருக்கிறேன் .ஆனால் திடுமென்று பார்த்த யாரோ ஒரு வெளி மனிதர் அறியாமல் சொன்ன ஒரு சொல்லுக்காக இப்படி உங்களை வருத்திக் கொள்வீர்களாக சார் ? ” 

” கல் மனிதன் …? ம் …நானும் அப்படித்தான் உணர்வுகளும் உணர்ச்சிகளும் இன்றி கல் போலவே இருந்துவிட வேண்டும் என்றுதான் நிறைய நேரங்களில் நினைப்பேன் .ஆனால் சில நாட்களாக ஏதோ ஒரு டிஸ்டர்பன்ஸ் .இந்த தீ விபத்து என் வாழ்க்கையின் போக்கை மாற்றி விட்டதாக நினைக்கிறேன் ” ரிஷிதரன் நெற்றிப் பொட்டை  அழுத்தி விட்டுக் கொண்டான்.

” அப்படி மாற்றி இருந்தால் அது நல்ல மாற்றமாக தான் இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு சார் .ஏனென்றால் அந்த விபத்திற்கு பிறகு உங்களுடைய நாட்கள் எங்களுடைய இந்த பசுமைக்குடிலில் தான் கழிந்திருக்கின்றன. எங்கள் விடுதியை தேடிவரும் யாரும் மனக்குறையோடு திரும்பியதில்லை .இயற்கையோடு இணைந்த எங்கள் கவனிப்பு அவர்களது குறையை நீக்கித்தான் திருப்பி அனுப்பும் .அதனால்தான் ஒரு முறை இங்கே வந்தவர்கள் மீண்டும் மீண்டும் இங்கே வராமல் இருக்க மாட்டார்கள் .

அந்தவகையில் உங்கள் மனதை தொல்லை செய்யும் எல்லா விஷயங்களையும் சமாளித்து இங்கிருந்து போகும் போது முழு மனநிறைவு உள்ள மனிதராக செல்வீர்கள் ” 

ரிஷிதரன் இமைக்காமல் அவளைப் பார்த்தான் .” அப்படி நான் போகும்போது நீயும் என்னுடன் வருகிறாயா ஏஞ்சல் ? ” 

தேவயானியின் முகம் சட்டென மாறியது .கொதிப்பும் கோபமும் அவள் விழிகளில் தெரிந்தது .உதட்டை பற்களால் அழுத்தி கடித்து தன் கோபத்தை அடக்கினாள் .

இளஞ்சிவப்பு உதட்டின் மேல் பளீர் வெண்மையில் முத்துச்சரமென படிந்திருந்த பற்களை ரசனையுடன் பார்த்தபடி புன்னகைத்தான் ரிஷிதரன்.

” ஒரே ஒரு அறை கொடுக்கலாம் என்று தோன்றுகிறது தானே ஏஞ்சல் ? ” கேட்டுவிட்டு நான் தயார் என்பதுபோல் கன்னத்தை  திருப்பி காட்டிக்கொண்டு நின்றான்.




கண்களை இறுக மூடிக் கொண்டவள் ” ப்ளீஸ் சார் நீங்கள் போய் படுத்து ஓய்வெடுங்கள் ” கடித்த பற்களுக்கிடையே குதறலாய் வார்த்தைகளை துப்பினாள்.

” இந்த காயங்கள் எல்லாம் ஆறிய பிறகு ஒருநாள்கூட நான் இங்கே இருந்தேனானால் என் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது ஏஞ்சல் . இவைகள்தான் என்னை உன்னிடமிருந்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறது “தனது கை காயங்களை காட்டினான்.




” உங்களை நான் போகச் சொன்னேன் “பொறுமையின் எல்லைக்கு வந்திருந்தாள் தேவயானி.

” ரிலாக்ஸ் தேவயானி. நான் சும்மா கலாட்டாவிற்கு கேட்டேன் .நான் கேட்டதன் காரணம் கூட என்னுடன் வந்து அந்த கோச்சிங் சென்டரில் சேர்ந்து படிக்கிறாயா என்பதுதான் ” 

” என் படிப்பை நான் பார்த்துக்கொள்கிறேன் சார். நீங்கள் உங்கள் உடம்பை மட்டும் கவனியுங்கள் .போய் படுங்கள் .மருதாணி எண்ணெய்யை தடவிக்கொள்ள மறக்காதீர்கள் ” 

லேசான கையசைவு ஒன்றுடன் வெளியேறி விட்டாள்.

தேவயானி சொல்லிவிட்டு போன ஓய்வு ரிஷிதரனின் உடலுக்கு கிடைக்கவில்லை. காரணம் அவன் மனம் ஓய்வின்றி சதா எதையோ சிந்தித்தபடியே இருந்தது .அவன் தொடர்ந்து தனது குடிலுக்கு உள்ளேயே ஓயாமல் நடந்தபடியே இருந்தான் .விறுவிறுவென நடப்பது பிறகு சிறிது நின்று ஜன்னல் வழியாக வெளியே வெறிப்பது மீண்டும் நடப்பது என்று அவனுடைய பொழுதுகள் கடிகாரத்தின் சின்ன முள்ளென நகர்ந்தன .மதிய உணவை சொர்ணமும் மாலை சிற்றுண்டியை மருதாணியும் எடுத்து வந்தனர்.

மாலை சிறு உணவின் பின் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தவன் அதிர்ந்தான் . அங்கே யுவராஜும் ,  தேவயானியும் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தனர் .அவர்கள் போகும் பாதை அருவிக்கரைக்கு போவது . ஒளி மங்கி கொண்டிருக்கும் இந்த மாலை வேளையில் இவர்கள் இருவருக்கும் அருவிக்கரையில் என்ன வேலை ரிஷிதரனின் உள்ளம் கொதித்தது.

அவர்கள் கண்ணில் இருந்து மறைந்ததும் மீண்டும் அறைக்குள் நடக்கலானான். ஒரு சிகரெட் குடித்தால் என்ன என்ற  உந்துதல் அவனுக்கு வந்தது .அறை முழுவதும் தேடி சிகரெட் கிடைக்காமல் போக ஆத்திரத்துடன் டேபிளில் குத்தினான்.

” ஐயோ எதற்கு அண்ணா இவ்வளவு கோபம் ? ” மருதாணி குடில் வாசலில் நின்றிருந்தாள். சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்து போக வந்திருந்தாள் .ரிஷிதரன் தனது கோபத்தை கட்டுக்குள் கொண்டுவந்தான்.




“ஒன்றுமில்லை மருதாணி கொஞ்சம் மூட் அவுட் ” 

” எதற்கு அண்ணா மூட் அவுட்  ? உங்களுக்கு ஏதாவது வேண்டுமா ? ” 

” ஒரு சிகரெட் ” சொன்ன பிறகே அதனை வாய்திறந்து சொல்லி விட்டதை உணர்ந்து உதடு கடித்தான்.

மருதாணி யோசனையுடன் அவனைப் பார்த்தாள் . ” ஏதாவது டென்ஷனில் இருக்கிறீர்கள் அண்ணா ? டென்ஷனின் போதுதானே ஆண்கள்  சிகரெட் பிடிப்பார்கள் ? ” 

” மருதாணி இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் ? ” ரிஷிதரனுக்குள்   சிறு பெண்ணிடம் தவறாக கேட்டு விட்டோமே என்ற உறுத்தல் முன்பு இருந்தது .இப்போது அவள் கேட்ட விளக்கத்தில் மன உறுத்தல் அதிகமானது.

” அதெல்லாம் தெரியும் அண்ணா .என் பிரண்ட்ஸ் சொல்லியிருக்கிறார்கள் ” 

” ஓஹோ தப்பும்மா .இப்படி எல்லாம் ஆம்பளைங்க பத்தி பேசக்கூடாது. நீ சின்னபொண்ணு படிப்பில் மட்டும் உன் கவனத்தைச் செலுத்து ” 

” சரிங்க அண்ணா இங்கே சிகரெட் எல்லாம் கிடைக்காது. இந்த விஷயத்தில் சொர்ணத்தம்மாளும் சுந்தரேசன் அண்ணாவும் ரொம்ப ஸ்ட்ரிக்ட் .அன்னைக்கு உங்க டிரஸ் எல்லாம் அடுக்கி வைக்கும்போது சிகரெட் பாக்கெட்டை பார்த்துவிட்டு நான்தான் அவர்களுக்கு தெரியாமல் துணிக்கடியில் மறைத்து வைத்தேன் .ஆனாலும் கண்டுபிடித்து எடுத்து விட்டார்கள் .இதெல்லாம் பழகியவர்களுக்கு உடனே விட முடியாது தானே அண்ணா ? ” 

” இதெல்லாம் உனக்கு தேவையில்லாத ஆராய்ச்சி மருதாணி .இப்போது எனக்கு ஒன்றும் தேவையில்லை நீ 

பாத்திரங்களை எடுத்துக்கொண்டு போ ” 

மருதாணி சென்றதும் ஒரு முடிவு எடுத்த ரிஷிதரன் குடிலை விட்டு வந்து அருவிக்கரையை நோக்கி நடந்தான்.

” மேடம் சாரிடம் என் விஷயம் கேட்டீர்களா ? ” கேட்டபடி தன் முன்னால் வந்து நின்ற சந்திரசேகரை பார்த்ததும் லேசாக நெற்றியில் தட்டிக்கொண்டாள் தேவயானி.

” சாரி சார் எனக்கு வேறு வேலை வந்து விட்டது .உங்கள் வேலையை மறந்தே போய்விட்டேன் ” 




” என்ன மேடம் இது ? ” சலிப்பான குறைபாடு சந்திரசேகரிடம்.

” வாட் சுட் யு வொர்க் பார் ஹிம் தேவயானி ?  ” 

கேள்வி கேட்ட யுவராஜை ஏற இறங்க பார்த்தான் சந்திரசேகர்.

” சார் யார் மேடம் ? ” 

” என் உறவுக்காரர் .நீங்கள் எதற்கும் ரிஷி சாரை குடிலில் போய் பார்த்து பேசி விட்டுப் போங்களேன் ” 

” மாதக்கணக்காக பேசிக் கொண்டேதான் இருக்கிறேன் மேடம் .அவர் எங்கே கேட்கிறார் ? ” 

” நீங்கள் அவருக்காக சின்சியராக சொன்ன வேலையை செய்வதில்லை என்று நினைக்கிறேன். முதலில் முதலாளியிடம்  எதையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று தொழிலாளி காட்டிக்கொள்வது தான் அவருடைய வெற்றியாக இருக்கும்.” 

எனக்கு என்றுமே அவர் வேலை பார்த்ததில்லை என்ற ரிஷிதரனின்  சலிப்பை மனதில் வைத்து இந்த அறிவுரையை சந்திரசேகருக்கு கொடுத்தாள் தேவயானி.

” அட போங்க மேடம். சசிதரன் சார் சொல்கிற வேலைகளையெல்லாம் என்னால் நீங்கள் சொல்கிறபடி செய்து முடித்துவிட முடியும் .ஆனால் இவர் எப்படிப்பட்ட வேலைகளை சொல்வார் என்று உங்களுக்குத் தெரியாது ” 

” அப்படி என்ன உங்களால் செய்ய முடியாத வேலையை சொல்கிறார் ? ” 

” அது …” என்றவன் குரலை தழைத்து ” யாராவது பெண்ணின் முழு விபரங்களை கொண்டு வா என்பார். நீங்களே சொல்லுங்கள் மேடம் இந்த வேலையெல்லாம் என்னால் செய்ய முடியுமா ? ” 

தேவயானியின் முகம் கன்றியது .யுவராஜன் பக்கத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருப்பது அவளுக்கு மிகுந்த சங்கடத்தை கொடுத்தது.

” அ…அப்படி எல்லாம் .,அ…அதையெல்லாம் அவர் உங்களிடம் எதிர்பார்க்க மாட்டார்”

” அட ஆமாங்க மேடம் .உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன… அன்னைக்கு நீங்க கோச்சிங் சென்டர் விவரம் கேட்க ஹோட்டலுக்கு வந்தீங்களே அன்னைக்கு உங்கள பாத்துட்டு உங்க விபரம் எல்லாம் எனக்கு வேணும்னு கேட்டார். நான் எனக்கும் இரண்டு பொண்ணுங்க இருக்காங்க . என் தொழிலையே மாற்றாதீர்கள்னு  சொன்னேன். அப்போது உன் பொண்ணுங்க விவரம் குடேன்னு கேட்கிறார் .இப்படி பேசுறவர்கிட்ட நான் எப்படி மேடம் வேலை பார்க்க முடியும் ? ” 

” சீச்சீ பொறுக்கி …பொம்பள பொறுக்கி  ” யுவராஜன் வாய்விட்டு முனங்கினான்.




” நீங்கள் போங்க சார் .நாம் பிறகு பேசலாம் ” தேவயானி முகம் வாட நெற்றியை பிடித்துக்கொண்டு தலை குனிந்து கொண்டாள்.

” ரிஷி சாரை பற்றி உங்களிடம் எச்சரிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் மேடம் .இதோ சொல்லிவிட்டேன் .கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள் .அப்படியே என்னுடைய வேலையையும் மறந்துவிடாதீர்கள் ” சந்திரசேகர் போய்விட்டான்.

” அந்த ரிஷிதரன் இன்னமும் எவ்வளவு நாட்கள் நம் விடுதியில் தங்குவான் தேவயானி ? “யுவராஜ் கேட்டான்.

” தெரியவில்லை .அவர் காயம் ஆறும் வரை என்று அம்மா சொல்லிக் கொண்டிருந்தார்கள் ” 

” இன்னும் ஒரு இரண்டு வாரங்கள் ஆகலாமா ? “

” ம் ” 

” இன்றுவரை அவனுடைய கவனிப்பிற்கு பணம் முழுவதும் நமக்கு வந்துவிட்டதா ? ” 

தேவயானி விருட்டென்று திரும்பி யுவராஜை முறைத்தாள்.

” இப்போது எதற்கு பணப் பேச்சு ? ” 




” உழைத்திருக்கிறோம் தேவயானி .அதற்குரிய சம்பளத்தை வாங்காமல் விட்டு விடக்கூடாது ” 

நீயா உழைத்தாய்? இப்படி உரிமை பேசுகிறாய் ?வாய்க்குள் துடித்த வார்த்தைகளை நாக்கிற்கு அடியில் அழுத்தி மறைத்தாள்.

” முடிந்தால் நாளையே இல்லை என்றால் இன்னமும் இரண்டு வாரங்களில் அவனிடமிருந்து பணத்தை வாங்கிக்கொண்டு சீக்கிரமே அவனை இங்கிருந்து விரட்ட வேண்டும் .அப்புறம் நீ இனிமேல் அவனுக்கு எதுவும் செய்யக்கூடாது. உன் அம்மாவையும் அந்த குட்டியையும் அவனுக்கு வேலை செய்ய அனுப்பு ” 

உத்தரவாக ஒளித்த யுவராஜின் குரலுக்கு பதில் சொல்ல முடியவில்லை தேவயானியால் .

” அவன் மூஞ்சியும் , மொகரையும் வேற்று கிரகத்திலிருந்து வந்த ஏலியன் போலவே இருக்கிறான் .அவனைப் பார்த்தாலே உனக்கு அருவருப்பாக இல்லையா ? ” 




” அவர் காயம் பட்டிருக்கிறார் .அருவருப்பு பார்த்தால் அவரை எப்படி குணமடைய வைப்பது ,,? ” மெலிதாக தாழ்ந்து ஒலித்தது தேவயானியின் குரல்.

” ஏன் தேவயானி இவனுக்கு மனதிற்குள் பெரிய மன்மதன் என்ற நினைப்போ ? ” 

தேவயானி மௌனமாக இருந்தாள்.

” அது எப்படித்தான் இவனுடைய  முகத்தை பார்த்து பொண்ணுங்க இவன்கிட்ட வராங்களா ? ” 

____

” ஓ அவர்களெல்லாம் இவன் முகரையை பார்த்து வருபவர்கள் இல்லையே…கட்டுக்கட்டாக பணத்தை தூக்கி வீசுவான். அதற்கு வருபவர்கள் தானே ” 

______

” இதோ இப்போது நீ கூட அப்படித்தானே ? ” 

” யுவராஜ் என்ன சொல்கிறீர்கள் ? ” கர்ஜித்து எழுந்தாள்.

” கோபப்படாதேம்மா. அவனிடமிருந்து நிறைய பணம் நமக்கு வருகிறது .அதற்காகத்தானே நீ அசிங்கம் பார்க்காமல் கழுவவும் துடைக்கவும் என்று அவனுக்கு பணிவிடைகள் செய்து கொண்டிருக்கிறாய் .அதைச் சொன்னேன் ” 




அண்ணாந்து வானம் பார்த்த தேவயானி ” இருட்டிவிட்டது. எனக்கு தலை வலிக்கிறது .நான் வீட்டிற்கு போகிறேன் ” 

தளர்ந்த நடையுடன் இருட்டில் நடந்து கொண்டிருந்தவளை முறைப்பாக பார்த்தபடி அமர்ந்திருந்தான் யுவராஜ்.

What’s your Reaction?
+1
0
+1
4
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!