pacha malai poovu Serial Stories பச்சைமலை பூவு

பச்சை மலை பூவு – 16

16

என் வரையறைகளின் வட்டம் தாண்டி 

வழிந்து கொண்டிருக்கிறாய் ,

வழுக்கும் சொற்களை எப்போதும் 

உபயோகிப்பதில்லை நான் ,

உச்சி சூரியனின் நிச்சய சலனங்கள் 

என்னை பாதிப்பதில்லை ,

கொடாப்பு அடையும் கோழியென நான்

அணுகாதே …விலகிப் போ.




” ஓ மை காட் .வாட் இஸ் திஸ் ஆன்ட்டி ?/எவ்வளவு ஆயில் ? இத்தனை ஆயிலும் உடம்பிற்குள் போனால் என் உடம்பு என்ன ஆவது ? நோ நோ எக்ஸ்ட்ரீம்லி சாரி ஆன்ட்டி .ஐ கான்ட் கீப் இட் ” தன்முன் கொண்டு வந்து வைத்த வடையை தொட்டுப் பார்த்துவிட்டு கத்தலாக பேசியபடி தட்டை தள்ளி வைத்தான் யுவராஜன்.

” அப்படி ஒன்றும் எண்ணெய்  இல்லையே தம்பி நான் கவனமாக பார்த்து தான் செய்வேன் ”  சொர்ணம்  தயங்கிய படி சொன்னாள்.

” இது ஆயுலில் டீப் ஃப்ரை செய்தது தானே  ? பிறகு ஆயில் இல்லாமல் எப்படி இருக்கும்  ? சாரி ஆண்ட்டி ப்ளீஸ் டேக்  திஸ் அண்ட் கோ ” 

அவனது தெளிவான மறுப்புக்குப் பிறகு வாடிய முகத்துடன் சொர்ணம் வடையை எடுத்துக் கொண்டு உள்ளே போனாள்.

அருகில் அமர்ந்திருந்த சுந்தரேசனை கடந்து அந்த வடை தட்டு போனபோது அதிலிருந்து எழுந்த வாசம் அவனது நாவை ஊற வைத்தது .அம்மாவை தடுத்து அந்த வடைகளை வாங்கி ருசித்து தின்று விட அவன் நாவும் கையும் துடித்தது .ஆனால் இப்போது யுவராஜன் அந்த பலகாரத்தை இவ்வளவு குறை சொன்னபிறகு தான் அதனை வாங்கி சாப்பிடுவது என்பது தன் தலையில் தானே அடித்துக் கொள்ளும் ஆணி என்பதை வருத்தத்துடன் உணர்ந்து நாவில் ஊறிய எச்சிலை விழுங்கிக் கொண்டான்.

மச்சானுக்கு மறுப்புச் சொன்னால் மனைவிக்கு பதில் சொல்ல வேண்டுமே …சுந்தரேசன் அவஸ்தையுடன் நெற்றியை தேய்த்தபடி மனைவியைப் பார்த்தான் .அண்ணனின் பேச்சிற்கு அவனுக்கு மேடையமைத்து விழா எடுக்கும் எண்ணத்தில் இருந்தாள சுனந்தா.







“ஹா ஹா ஹா ”  என்ற அலட்டல் சிரிப்பு ஒன்றுடன் ” சரியாக சொன்னீர்கள் அண்ணா .அத்தை செய்யும் பட்டிக்காட்டு பலகாரங்கள் எல்லாமே இப்படித்தான் .எண்ணெய்யும் நெய்யும் வெல்லமும் கருப்பட்டியுமாக கொலஸ்ட்ராலையும் சுகரையும் எளிதாக உடம்புக்குத்  தருவதாகவே இருக்கும். ஆனால் இங்கே வருபவர்களுக்கு அப்படி உடம்பை கெடுத்துக் கொள்வது தான் பிடித்திருக்கிறது என்பதினால் நான் இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை” 

” இன்று உன் அத்தையை சமைக்கச் சொல்லி விடுகிறாயா அம்மா ? ”  என்று முன் தினம் ஒரு குடிலில் தங்கியிருந்த அபிராமி கேட்டதன் எதிரொலி இப்போது சுனந்தாவின் வாயிலிருந்து வந்தது.

” நீ குக்கிங்கிற்கே ஸ்பெஷலாக படித்திருக்கிறாய் சிஸ்டர். குக்கிங்கோடு சேர்த்து உனக்கு டயட்டும் கலோரிகளும் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள். சோ யூ குக் ஈஸிலி ஆக்கார்டிங்கிலி. பட் ஆன்ட்டி இஸ் கன்ட்ரி உமன் .அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் ” 

பட்டிக்காடு என்று வெளிப்படையாக தாயை ஏசிய அவனை எப்படி எதிர் கொள்வதென திகைத்தான் சுந்தரேசன் .ஆனால் அந்த பயம் தேவயானிக்கு இல்லை.

” இப்போது அம்மாவை என்ன சொல்ல வருகிறீர்கள் யுவராஜ் ? ” 

முகத்திற்கு நேராக வந்து நின்று அவள் கேட்ட கேள்விக்கு கொஞ்சம் தடுமாறி விட்டான் யுவராஜ் . ” அது வந்து உன் அம்மா கொஞ்சம் ஓல்ட் லேடி  ” என்று சொல்லிக்கொண்டிருந்தேன் சமாளித்தான்.

” அதென்ன மூஞ்சில் அடித்தது போல் அண்ணனை பெயர் சொல்லுகிறாய்  ? உறவு சொல்லி கூப்பிடு ” அண்ணனை காப்பாற்ற பேச்சின் திசையை திருப்பினாள்  சுனந்தா.

தேவயானியின் மனம் சற்று முந்தைய ரிஷிதரனுடனான யுவராஜின்  அறிமுகத்திற்கு போய்விட்டது.




தேவயானியின் கைகளை வளைத்துப் பிடித்தபடி ரிஷிதரன் நின்றபோது அவன் முன்னால் அவளை விடுமாறு கத்தலுடன் வந்து நின்றான் யுவராஜ்.

” பியான்ஸி “அவன் சொன்ன வார்த்தையை மெல்ல ரிஷிதரன் சொல்லிப் பார்ப்பதை தேவயானி உணர்ந்தாள் .” யார் இவன்  ? “அதே முனகல் குரலில் கேட்டான்.இன்னமும் தன் பிடியை விடுவிக்கவில்லை .

” ஹேய் மேன் டூ யூ ஹியர் மை டாக்கிங் ? தேவயானி ஹூ இஸ் திஸ் கிளவுன் ? ஹி லுக்ஸ் லைக் காட் அப் ப்ரம் தி ஓவன் ” கிண்டலான சிரிப்பு ஒன்று யுவராஜிடம் .

அவனுடைய கேலிக்கு ரிஷிதரனின் கை தன் கை மேல் இறுகிய விதத்தில் அவனது கோபத்தை உணர்ந்தாள் தேவயானி.

” ஸ்கௌன்ட்ரல் ”  அடிக்குரலில் உறுமியபடி அவளை ரிஷிதரன் தன் பிடி தளர்த்தி லேசாக தள்ள தடுமாறி தள்ளி நின்று தன்னை சமாளித்துக் கொண்டவள் வேகமாக இருவருக்கும் இடையில் போய் நின்று கொண்டாள்.

” சார் இவர் என் உறவினர் தான் . பெயர் யுவராஜ் .இவர் ரிஷிதரன் நம் விடுதியில் தங்கி இருக்கும் கஸ்டமர்  ” அவசரமாக இருவரையும் அறிமுகம் செய்து வைத்து அமைதி காக்கும்படி ரிஷிதரனை கண்களால் வேண்டினாள் .

” ஏனோ …அதற்கு எனக்கு என்ன அவசியம் ?” வெளிப்படையாகவே கேட்டான் ரிஷிதரன் .

” ப்ளீஸ் ” சத்தமின்றி இதழசைத்து வலது கை விரல் குவித்து சிறு குழந்தைகளை  நாடி பற்றி கொஞ்சும் பாவனையை அவனுக்கு காட்டினாள் தேவயானி .

இரு கைகளையும் அழுத்தி மடித்து கண் மூடி ஒரு நிமிடம் நின்று தன்னை அடக்கிக் கொண் டவன் மீண்டும் கண் திறந்தபோது அவன் முகத்தில் கொஞ்சம் புன்னகை மலர்ந்திருந்தது.

” ஹலோ சார் ”  என்று யுவராஜுக்கு கை நீட்டினான்.

யுவராஜ் அவனை அருவருப்பாக பார்த்தான் .பாதி காயங்கள் ஆறி அவற்றின் தோல்கள் உரிந்து தொங்கியநிலையில் கொஞ்சம் பயமுறுத்தும் தோற்றத்துடன் நின்றிருந்த ரிஷிதரனின் கை தொட அவன் தயாராக இல்லை .தன் மறுப்பை… அருவருப்பை அவன் வெளிப்படையாகவே காட்டினான்.

” இட்ஸ் ஓகே  சார் .உங்கள் உடம்பு குணமாகட்டும் .நாம் பிறகு பேசிக் கொள்ளலாம். தேவயானி வா போகலாம் ” 




ரிஷிதரன் மீண்டும் உக்கிர பார்வைக்கு வந்திருக்க தேவயானி மீண்டும் அவசரமாக இடையிட்டாள்.”  இவர்  என் அண்ணியின் அண்ணன் யுவராஜ் .சிங்கப்பூரில் வேலை பார்க்கிறார் இப்போது அண்ணியை பார்க்க இங்கே வந்திருக்கிறார் ” தங்கள் உறவு முறையை விளக்கி ரிஷிதரனின் கோபத்தை குறைக்க முயன்றாள. ஆனால் …




” ஹேய் ஹனி நான்  உன் அண்ணியை பார்க்க வரவில்லை .ஐ ஜஸ்ட் கேம் டூ சீ யூ . ” யுவராஜ் காதல் பார்வையுடன் தேவயானியின் அருகாமையில் வந்து நிற்க ரிஷிதரனின் கண்களில் கனல் தெரிந்தது.

” நான் தேவயானியின் அத்தான் .வி ஆர் என்கேஜ்டு ”  தனது உரிமையை யுவராஜ் சொல்லிக்கொண்டே போக ரிஷிதரனின் முகத்தில் அதிர்ச்சி வெளிப்படையாக தெரிந்தது .அப்படியா …என்பது போல் அவன் தேவயானியை பார்க்க அவள் மெல்ல தலையசைத்தாள்.

” தேவயானி வா வீட்டிற்கு போகலாம் “யுவராஜ் அவள் கைதொட்டு அழைக்க உடன் நடந்த வேவயானியை ” நில் …” ரௌத்திரமாக கத்தினான் ரிஷிதரன்.

” இதோ இப்படி என்னுடைய சிகிச்சையை பாதியிலேயே விட்டு போய்விட்டால்  எப்படி ? இதனை முடித்து விட்டு போ ” அதிகாரம் சொட்டியது அவன் குரலில். பணம் கொடுக்கும் முதலாளியின் அதிகாரம்.

” சி வில் கம் லேட்டர் ” 

” நோ ஐ நீட் ஹெர் நவ் …” என்றவன் சற்று நிறுத்தி தனது இடது கையை உயர்த்திக் காண்பித்து ”  பார் மை ட்ரீட்மென்ட்  ” என்றான்.

இந்த அவனது வார்த்தைக்கு கடும் ஆட்சேபத்தை விழிகளில் காண்பித்த தேவயானி நேராக அவன் விழிகளை பார்த்தாள்.”  மருந்து கிண்ணம்   கீழே விழுந்து உடைந்து மருந்து வீணாகி விட்டது சார் .நான் போய் மீண்டும் மருந்து தயாரித்துக் கொண்டு வந்து தான் உங்கள் சிகிச்சையை ஆரம்பிக்க முடியும் .நீங்கள் உங்கள் குடிலுக்கு போய் இருங்கள் . நான் ஒரு மணி நேரத்தில் வருகிறேன் ” அழுத்தமான குரலில் சொல்லிவிட்டு அவனது பதிலை எதிர்பாராமல் திரும்பி நடக்கத் துவங்கினாள். அந்நேரம் யுவராஜின் கைப் பிடியில் இருந்த தனது கையை நாசூக்காக விடுவித்துக் கொண்டாள்.

அப்போதைய ரிஷிதரனின் பார்வை இப்போதும் உடல் முழுவதும் சூடாக பரவியிருப்பதை உணர்ந்தாள் தேவயானி.

” சொல்லு தேவயானி ” சுனந்தா ஏதோ கேட்டுக் கேட்டுக்கொண்டே இருப்பதை உணர்ந்தவள் நிகழ்வுக்கு மீண்டாள்




” என்ன கேட்டீர்கள் அண்ணி ? ” 

” என் அண்ணாவை எப்படி அழைக்க போகிறாய் என்று கேட்டேன் மச்சானா  ? அத்தானா ? “

“அதனை பிறகு முடிவு செய்துகொள்ளலாம் அண்ணி ” 

” பிறகு என்றால் எப்போது ? ” 

” எங்கள் திருமணத்திற்கு பிறகு .அதுவரை அவரை பெயர் சொல்லியே அழைக்கிறேன் ” தேவயானி அழுத்தமான குரலில் முடித்துவிட சுனந்தாவிற்கு வேறு வழி இல்லை. சிறு முறைப்புடன் பின்வாங்கி விட்டாள்.

ஒரு மணி நேரம் கழித்து கையில் மருந்துடன் குடிலுக்குள் நுழைந்த சொர்ணத்தை பார்த்ததும் ரிஷிதரனுக்கு கோபம் அதிகமானது.

” உங்கள் மகளை எங்கே ஆன்ட்டி ? ” 

” அவளுக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது தம்பி. அதனால் என்னை அனுப்பினாள் ” 

” ஓ .. என்ன வேலை ? ” 

” வீட்டிற்கு விருந்தாளி வந்திருக்கிறார். அவரை கவனிக்க வேண்டும். அவருடன் என் மகளும் மகனும்  ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள் ” 

” யார் அந்த விருந்தாளி  ஆன்ட்டி ? “

” அவர் பெயர் யுவராஜ். என் மருமகளின் அண்ணன் ” 

” அவருக்கும் …தேவயானிக்கும்…”  மேலே பேச மனமின்றி தவித்தாற்போல் நிறுத்தினான்.

சொர்ணம் அவனை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தாள். ” உங்களுக்கு தெரியுமா தம்பி?  என் மருமகளின் அண்ணனுக்கும் என் மகளுக்கும் திருமணம் செய்யலாமென ஒரு யோசனை வைத்திருக்கிறோம.” 

” யோசனையா …? முடிவா ஆன்ட்டி ? ” 




” மூன்று வருடங்களுக்கு முன்பே தேவயானி கல்லூரிப் படிப்பை முடித்த போதே சுனந்தா வீட்டில் இந்த பேச்சை பேசி விட்டார்கள் . யுவராஜுக்கு அப்போது சிங்கப்பூரில் வேலை கிடைத்துவிட்டதால் அவர் அங்கே போய்விட்டார் .இதோ இப்போதுதான் வந்திருக்கிறார். திரும்பவும் மருமகள் அம்மா வீட்டில் திருமணப் பேச்சை எடுத்திருக்கிறார்கள் ” 

” ஓஹோ ” சொர்ணம் சொன்ன தகவல்களை உள் வாங்கிக் கொண்டான் ரிஷிதரன்.

” இந்த இளவரசனை நினைத்துக் கொண்டுதான் படிப்பை வேண்டாம் என்றாயாக்கும் ” மறுநாள் காலை உணவு கொண்டு வந்த தேவயானியிடம் கேட்டான்.

” இளவரசன்…? ”  புருவம் உயர்த்தினாள் அவள்.

” ஆமாம் யுவ …ராஜன் அல்லவா ? அதுவும் இவன் பிரிட்டிஷ் இளவரசன் .

அப்படி  ஆங்கிலம் வெள்ளமாக கொட்டுகிறது ” ரிஷிதரனின் பேச்சில் தேவயானி பக்கென சிரித்துவிட்டாள்.

இறுகி இருந்த ரிஷிதரனின் முகமும் அவளுடைய சிரிப்பை பார்த்ததும் இளகி மலர்ந்தது .” இப்போது எதற்கு இந்த சிரிப்பு  …? ” தன்னுடைய புன்னகையை காட்டாது இருக்க  பிரயத்தனப்பட்டான் அவன்.

” மூன்று வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூர் போகும் போது அவர் சாதாரண இளவரசராகத்தான் இருந்தார். இப்போது வெளிநாட்டு வாசம் .அவரை பிரிட்டிஷ் இளவரசர் ஆக்கி திருப்பி அனுப்பியிருக்கிறது .ஆனாலும் உங்களுக்கு தைரியம் அதிகம் சார் எங்கள் உறவினரையே என்னிடமே கலாய்க்கிறார்களே ” 




” கலாய்க்கிறேனா ? இவனுக்கு  அந்த தகுதி கூட கிடையாது ” 

” ரிலாக்ஸ் சார். முன்பின் அறிமுகமில்லாதவர்கள் திடுமென்று உங்களை இந்த காயங்களோடு பார்க்கும்போது இப்படித் தான் நினைப்பார்கள் .அதிலும் யுவராஜ் கொஞ்சம் அலட்டல் பேர்வழி .சற்று   அதிகமாவே தான் பேசிவிட்டார் விடுங்கள் ” கோமாளி , அடுப்பிலிருந்து எழுந்து வந்தவனென்னும் யுவராஜின்  விமர்சனங்களுக்கு சமாதானம் சொன்னாள் .

” அவனுக்கு நீ சப்போர்ட்டா ? அதுவும் என்னிடம்…? ” 

“ஐயோ இன்று உங்களுக்கு என்ன ஆயிற்று ?நான் என்ன சொன்னாலும் தவறாகவே எடுத்துக் கொள்கிறீர்கள் .இந்தப் பேச்சில் எனக்கு இங்கே வேலையே ஓடவில்லை “அவன் கால்களை காண்பித்தவள் எழுந்து அவனுடைய வலது கையை எடுத்து அவன் வாயின் மீதே வைத்து பொத்தினாள்.




“நான் மருந்து தடவி முடிக்கும்வரை பேசக்கூடாது ” உத்தரவாக சொல்லிவிட்டு தனது வேலையை தொடர்ந்தாள் . மூடப்பட்ட வாயினால் வெளிப்பட துடித்துக்கொண்டிருந்த வார்த்தைகள் நாவை விட்டு ரிஷிதரனின் விழிகளை அடைந்தன.

” உங்கள் கால்களுக்கு மருதாணி எண்ணெய் தடவி இருக்கிறேன். இதோ இந்த கிண்ணத்தில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் இருக்கிறது. ஒரு மணி நேரம் கழித்து நீங்களே திரும்பவும் தடவிக் கொள்ளுங்கள்”  சொன்னபடி அவனை நிமிர்ந்து பார்த்தவள் உணர்வுக் கலவையாக ததும்பிக் கொண்டிருந்த அவன் கண்களை சந்தித்ததும் ஒரு நிமிடம் உறைந்து பின்  சரியானாள் .

கையை எடுக்கவா…?  கண்ஜாடை கேட்டவனை ” ரொம்ப குணவான் தான் ” முணுமுணுத்தபடி தான் பொத்தி வைத்த கையைத் தானே எடுத்து விட்டாள்.

“அதென்ன  நானே தடவிக் கொள்வது  ?எதற்காக நானே தடவிக்கொள்ள வேண்டும் ? அதெல்லாம் முடியாது .ஒரு மணி நேரம் கழித்து நீயேதான்  திரும்ப  வந்து எனக்கு மருந்து தடவி விட்டு போக வேண்டும் ” 

” கையை எடுத்திருக்க கூடாதோ ? ” தலை சாய்த்து சத்தமாகவே யோசித்தாள் .ரிஷிதரன் வாய் மூடி முறைத்தான் .

”  எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது சார் .அதனால்தான் உங்களையே பார்த்துக்கொள்ள சொல்கிறேன் ”  

” என்ன வேலை ? உன் வீட்டு அந்தப் புது விருந்தாளியை கவனிக்கும் வேலையா ? ” 

“நிச்சயம் .என் வீட்டு விருந்தாளியை நான்தானே கவனிக்கவேண்டும் ” நானில் அழுத்தம் காட்டினாள் .

” அதென்ன பெரிய ‘நான் ‘ உனக்கு மனதிற்குள் அதி புத்திசாலி என்ற நினைப்போ ?அப்படி புத்தியோடு இருப்பவள் இவனைப் போல் ஒருவனை திருமணம் செய்ய சம்மதிப்பாளா ? ” 

படபடத்து விட்டு நாவை கடித்துக் கொண்டான் ரிஷிதரன் .இந்த சில நாட்களில் அவன் தேவயானியை நன்றாகவே புரிந்து வைத்திருந்தான் . சிறு சிறு சீண்டல்களை விளையாட்டாக கடந்து செல்லும் இலகு உடையவள் அவளது சொந்த விசயங்களில் அவனது தலையீட்டை அனுமதிக்கமாட்டாள் .இப்போதும் என் திருமண விசயம் பேச நீ யாரடா ? எனும் பார்வை பார்த்தவளுக்கு கை உயர்த்தி் சரண் காட்டினான் .




” கிணறு இருக்கிறது என்று எச்சரிக்க வேண்டியது என் கடமை ” முணுமுணுத்தான் .

” எனக்கு கண் பார்வை நன்றாகவே இருக்கிறது .அத்தோடு மிக நன்றாகவே நீச்சலும் தெரியும் ” 

” திமிர் ” 

” ஆமாம் .அதுதான் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது ” என்றவளை வெறித்தான் .

” மறக்காமல் எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள் . மதிய உணவு அம்மா கொண்டு வருவார்கள் .எனக்கு வேலை இருக்கிறது ” அவன் சொன்ன திமிருக்கு தோதாக பேசிவிட்டு நகர்ந்தாள் .

” எனக்கு கண்ணாடி வேண்டும் .என் முகம் பார்க்க வேண்டும் ” தளர்ந்து ஒலித்த ரிஷிதரனின் குரலில் தயங்கி நின்றாள். 

What’s your Reaction?
+1
1
+1
5
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Kurinji
Kurinji
4 years ago

Enna Deva intha komali mappilaiyaa
Un ammaku mariyatai kodukaatavan.

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!