pacha malai poovu Serial Stories பச்சைமலை பூவு

பச்சை மலை பூவு -15

15

அயர்ச்சிகள் கொடுத்துவிட்ட

அசந்த உறக்கங்களும்  ஒப்புதலில்லை உனக்கு 

என் விளக்கங்கள் எதிர்பார்க்கும் உன் சூழ்நிலைகள்

ஒவ்வுதலில்லை எனக்கு

கழுத்தடி ஈரத்திலும் கவனம் வைப்பவனே

வலையில் மாட்டிக்கொண்ட கயல் நான்

தள்ளிப்போ.




 ” இங்கே என்ன செய்கிறீர்கள் ? தேவயானியின் குரலுக்கு திரும்பிப் பார்த்து புன்னகைத்தான் ரிஷிதரன்.

” குடிலில் போரடித்தது. அதனால் அப்படியே இந்த பக்கம் மெல்ல வந்தேன் .இந்த பால்ஸ் சூப்பர் .ஏதோ ஒரு வித மன அமைதியை தருகிறது இந்த இடம் ” கொட்டிக்கொண்டிருந்த அருவியை பார்த்தபடி அமர்ந்திருந்தான் .

” உங்களை தேடி குடிலுக்கு போய்விட்டு  வருகிறேன் ”  சொன்னபடி கையில் வைத்திருந்த மருந்து கிண்ணத்தை அவன் அருகே வைத்துவிட்டு அவன் காயங்களை ஆராய்ந்தாள் .

” இந்த அருவியைப் பார்த்ததுமே குளிக்க வேண்டும் என்ற ஆவல் வருகிறது ஏஞ்சல் ” அருவியின் உற்சாகம் ரிஷிதரனின் குரலிலும்.

“இப்போதுதான் உங்கள் காயங்கள் ஆறிக் கொண்டு வருகிறது சார். இந்த நேரத்தில் அருவிக்குள் போனால் தண்ணீரின் வேகத்திற்கு காயங்கள் மேலும் ஆழமாகிவிடும். கொஞ்ச நாள் பொறுத்துக்கொள்ளுங்கள் ” 

” சரிதான் ”  பணிவான பிள்ளையாய் தலையாட்டி கேட்டுக்கொண்டான்.

” பாதத்தில் இருக்கும் காயங்கள் கொஞ்சம் ஆறியதும் கால் துரு துருக்கிறதோ … உடனே இப்படி வெளியே  ஓடி வந்து விட்டீர்களே ”  கேலி கலந்த கண்டிப்புடன் கேட்டாள்.

” என்ன…?  காயங்கள் ஆறி விட்டதா ….? இல்லையே இதோ பாரேன் எவ்வளவு காயங்கள் ? ” தனது இடது கையை நீட்டினான்.

” ம் ..அது தெரிகிறது.நான்  கால் காயங்களை சொன்னேன் .இவை  ஓரளவு ஆறிவிட்டன. கை காயங்களுக்கு அதிகபட்சம்  இன்னும் ஒரு வாரம் ஆகலாம் .நீங்கள் காயங்கள் ஆற வேண்டும் என்று நினைக்கிறீர்களா ? வேண்டாம் என்று நினைக்கிறீர்களா ? ” 

” அது எனக்கே தெரியவில்லையே …என்னென்னமோ நினைக்கிறேன். நினைப்பதெல்லாம் நடக்கவா  செய்கிறது  ? ” தன் முகத்தில் பதிந்திருந்த அவன் பார்வையை உணர்ந்த தேவயானியின் முகம் அவன் காயங்களிலிருந்து நிமிரவே இல்லை.




” இப்போதெல்லாம் நீ என் முகத்தை கூட பார்ப்பதில்லை ஏஞ்சல் ”  குறைபாட்டுடன் ஒலித்தது ரிஷிதரனின்  குரல்.

” என்னுடைய கவனம் எல்லாம் உங்கள் காயங்களின் மேல் மட்டுமே .அவற்றை ஆற்றவேண்டும். பழையபடி ஆரோக்கியமாக உங்களை உங்கள் அம்மாவிடம் ஒப்படைக்க வேண்டும் அவ்வளவுதான் ” 

காயங்களை ஆராய்ந்து கொண்டிருந்த அவள் கைகளிலிருந்து தன் கால்களை வேகத்துடன் உருவி கொண்டான் ரிஷிதரன் . ” அவர்களுக்காக என்றால் எனக்கு நீ வைத்தியம் பார்க்கவே வேண்டாம் ” 

எவ்வளவு கோபம்… ரௌத்திரமாய் ஒலித்த அவன் குரலில் திகைத்துப் பார்த்தாள் தேவயானி .ரிஷிதரணின்  முகம் உக்கிர சூரியனாய் காட்சி தந்தது.

” சகோதரர்களுடன் முரண்பாடுகள் இருப்பது சகஜம்தான் .பெற்ற தாயிடம் கூடவா இத்தனை கோபம் ? ” மென் குரலில் கேட்டாள்




” அவர்களைப் பற்றி பேசாதே என்றேன்  ” பற்களை நறநறத்தான் 

” ஏனோ அங்கே காயம்பட்டு கிடந்தபோது உங்கள் அம்மாவும் அண்ணாவும் எப்படி தவித்தார்கள் தெரியுமா ? உங்களை காப்பாற்ற இங்கே தூக்கிக் கொண்டு ஓடி வந்தவர்கள் அவர்கள்தான் ” 

” அன்று என்னை காப்பாற்றியது நீதான் .அவர்கள் இல்லை .அவர்களால் காப்பாற்ற படுவதாக இருந்தால் நான் அந்த நெருப்பிலே வெந்து எரிந்து போயிருப்பேன் ” 

தேவயானி அதிர்ந்தாள். இது என்ன இவனுக்கு இவ்வளவு கோபம் …நம்ப முடியாமல் அவன் முகத்தை ஊன்றி பார்த்தாள் .ஆட்சேபத்தை கண்களில் காட்டினாள்.

” இப்படித்தான் என் முகத்தை பார்ப்பாயானால் நீ என்னை பார்க்கவே வேண்டாம் ”  ரிஷிதரன்  தன் முகத்தை திருப்பிக் கொண்டான்.




” கொஞ்சம் வலியைப் பொருத்துக் கொள்வீர்களா ? ” தேவயானியின் கவனம் அவன் காயங்களுக்கு மாறியிருந்தது.

” வலிகள் எனக்கு பழக்கமானவை உடலிலும் , மனதிலும்…”  வெறுமையான அவனுடைய பேச்சில் திகைத்தாள் தேவயானி .உடலில் பற்றி எரிந்துகொண்டிருந்த நெருப்பை சலனமில்லாமல் பார்த்துக்கொண்டிருந்த ரிஷிதரன் அவள் நினைவிற்கு வந்தான்.

உடல் மரத்துப் போயிற்றா இவனுக்கு …? அல்லது மனமா…? 

” இதோ காலில் ஆறி வடுவாய் மாறி கொண்டிருக்கும் இந்தக் காயங்களை நீரில் கழுவி அழுத்தி  துடைத்துவிட்டு  , மீண்டும் மருந்து தடவினால் இன்னும் சீக்கிரம் ஆறும் .கொஞ்சம் வலிக்கும் பொறுத்துக் கொள்வீர்கள் தானே ? ” கேட்டபடி கையில் கொண்டு வந்திருந்த பஞ்சினை எடுத்து காயங்களை துடைக்க துவங்கினாள்.

தன் அருகில் இருந்த மருந்து கிண்ணத்தில் இருந்த மயிலிறகை தொட்டு வருடியபடி மௌனமாக அமர்ந்திருந்தான் ரிஷிதரன் .காய்ந்திருந்த காயத்தின் மேல் தோல்களை அழுத்தி துடைக்கும்போது வரும் சிறு வலிக்கு சிறிதும் உடல் அசைக்காது அமர்ந்து இருந்தவனை மனதிற்குள் வியந்தபடி தன் வேலையை தொடர்ந்தாள் தேவயானி .கல் மனிதன் தனக்குள் யோசித்துக்கொண்டு பேச வேண்டிய வார்த்தைகளை மெல்ல மனதிற்குள் அமைத்தாள் .

” நேற்று சந்திரசேகர் சாரை பார்த்தேன் ” 

ரிஷிதரனின் பார்வை அருவியை பார்த்தபடி எனக்கென்ன என இருக்க … ”  உங்களிடம் தான் பேசிக் கொண்டிருக்கிறேன் ”  என்றாள்.

” எப்படியும் நீ கோச்சிங் சென்டரில் சேர்வதற்கு ஒத்துக் கொள்ளப் போவதில்லை .நீ யாரை பார்த்தால் எனக்கென்ன ? ” 

” நீங்கள் என் படிப்பிற்காக காட்டிய அக்கறையை அவர் சொன்னார் ” 

” அந்த அக்கறைக்காக படிக்கப் போகிறாயா என்ன ? ” உன்னை தெரியுமே எனக்கு என்பதாக இருந்தது அவன் குரல்.

” யோசித்துச் சொல்வதாக அவருக்குச் சொல்லி இருக்கிறேன் ” 

சலிப்புடன் கையசைத்தான் அவன் . உன் யோசனையில் எனக்கு நம்பிக்கையில்லை என்றது அந்த கையசைவு.







” சந்திரசேகர் உங்களைப் பற்றி மிகவும் வருத்தப்பட்டார் ” 

” அந்த ஆள் எல்லாம் வருத்தப்படும் நிலையிலா நான் இருக்கிறேன் ? ” 

” வயதில் பெரியவர் .அதற்காவது  மரியாதை கொடுக்கலாமே ” 

” அவரவர் செயல்கள்தான் அவர்களுக்கு மரியாதையை தேடித் தருமே தவிர வயது அல்ல ” 

” சரி அந்த விஷயத்தை விடுங்கள் .அவருக்கு  வேண்டாம் அவருடைய வேலைக்காகாது மரியாதை தரலாமே ” 

” யாரிடம் வேலை பார்க்கிறாரோ அங்கேதான் மரியாதையை சம்பாதித்து கொள்ள வேண்டும் .எனக்கு அவர் என்றுமே வேலை பார்த்தது இல்லை ” 

” சார் அவர் உங்கள் நிறுவனத்தில் தான் வேலை பார்க்கிறார் .அதை மறந்து விட்டீர்களா ? ” 

” என் நிறுவனமா …? அது எங்கே இருக்கிறது்…?  அப்படி ஒன்று கிடையாது  ” அலட்சியமாக உதடு சுளித்தான் .

” இந்த தவறான நினைப்பில்தான் அந்த நிறுவனத்தின் முன்னேற்றத்தில் அக்கறையின்றி ஒரு சிறிய கையெழுத்துக்காக அவரை அங்குமிங்கும் அலைய வைத்து துன்புறுத்தி கொண்டிருக்கிறீர்களா ? ” 

” தேவயானி இந்த விஷயம் எனக்கு பேச பிடிக்கவில்லை .வேறு பேசு. ” 

” உங்களுக்கு பிடித்தமான விஷயங்களை மட்டும் பேச வேண்டுமென்று எனக்கு என்ன சார் கட்டாயம் ? நான் எனக்கு நியாயமான விஷயங்களை மட்டும் தான் பேசுவேன் .அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் போய்க்கொண்டே இருக்கலாம் ” 




போக மாட்டான் என்று ஏதோ ஓர்  நிச்சயத்துடனே தேவயானி இதனை சொல்ல ரிஷிதரன் அவளுடைய சிசுருசைகளிலிருந்து தனது கால்களை விடுவித்துக் கொண்டு எழுந்து நின்றான் .அப்படி போவதானால் போயேன் தேவயானி அலட்சியத்துடன் அவனை பார்க்க அவன்ஆத்திரத்துடன் நிலம் அதிர நடந்து அருவியை நோக்கி நடக்கலானான்.

அவன் நோக்கத்தை உணர்ந்த தேவயானி ” ரிஷி வேண்டாம் நில்லுங்கள் ” என்றபடி பின்னால் ஓடினாள்.

வேக நடையுடன் போன ரிஷிதரன் நீருக்குள் இறங்கி அருவியை  அடைய பாதி தூரத்தில் இருந்த போது அவனை எட்டி தோள்களை பற்றி விட்டாள் . ”  என்ன முட்டாள்தனமான வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் சின்னப் பிள்ளை போல் ?  இத்தனை காயங்களோடு அருவிக்குள்  போய் நின்றால் என்னவாகும் ? ” கோபம் தாங்காமல் அவன் தோள்களை குத்தினாள்.

ரிஷிதரன் அவளை இமைக்காமல் பார்த்தான் .” என்ன பிளாக்மெயில் செய்கிறீர்களா  ? ” கோபமாக கேட்டாள்.

” இல்லை என் மனநிலையை உனக்கு புரிய வைக்க முயன்றேன் ” 

” தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்பவர்களை மனிதர்கள் கணக்கில் சேர்க்க முடியுமா ? ” வெறுப்பாக அவனை பார்த்தாள்

” இல்லையே நான்  உனது மகிசாசுரன் தானே ஏஞ்சல் ? ” இறுகியிருந்த ரிஷிதரனின் முகம் இப்போது இளக்கம் கொண்டிருந்தது.

” ஆமாம் அசுரன் தான். என் உயிரை வாங்க வந்த எருமைத்தலை அசுரன்  ” இன்னமும் ஆத்திரம் தீராமல் சுளீரென்று அவன் தோளில் அடித்தாள்.

பாக்கியம் போல் தோளை சாய்த்து அவள் அடியை வாங்கிக் கொண்டவன் வலதுகையை அவளிடம் நீட்டினான் .” என்னை வெளியே அழைத்துப் போ ஏஞ்சல் ” 

தேவயானி அவனை முறைத்தாள்.

” இந்த தீ காயங்கள் எல்லாம் ரொம்பவே வலிக்கிறதே . ” நிற்கவே முடியாதவன் போல் தள்ளாடியவனை அப்படியே அந்த நீருக்குள் தள்ளி விடும் வேகத்தை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு நீண்டிருந்த அவன் கையை பற்றி இழுத்தபடி கரையேறினாள் . 

இந்த நோயாளி போர்வையிலிருந்து மீண்டு வாடா…பிறகு இதற்கெல்லாம் சேர்த்து உன்னைக் கவனித்துக் கொள்கிறேன் …மனதிற்குள்ளாக  அவனுக்கு ஒரு வஞ்சினம் வைத்துக் கொண்டாள் .

” அட உங்களுடைய இந்த மிரட்டலிலும் ஒரு சிறு நன்மை .இங்கே பாருங்கள் நானாக இழுத்து தேய்த்து எடுக்க வேண்டிய தொல்லை இல்லாமல் உங்கள் கால் காயங்களின்  மேல்தோல்கள் நீரில் ஊறி எளிதாக வந்து விட்டன ”  பஞ்சை எடுத்து வேகமாக காயங்களை சுத்தப்படுத்த துவங்கினாள்.




” இதோ பாருங்கள் காயமே இல்லை .தோலின் நிறம் மட்டும்தான் இங்கே எல்லாம் மாற வேண்டும் .அதற்கு மருதாணி எண்ணெய் தடவ வேண்டும் …” நிறம் மாறி தெரிந்த இடங்களை வருடியபடி தனது சிகிச்சையின் பலன் சொன்ன தேவயானிக்கு மிகுந்த சந்தோசம்.

” மருதாணி எண்ணெய்யா ? அது எதற்கு ஏஞ்சல் ? ” 

” இதோ இப்படி தீக்காயம்  ஆறிய இடங்கள் வெண்மை நிற தோலாக இருக்கின்றனவே இது மாறுவதற்கு .மருதாணி இலையை காய்ச்சி எண்ணெய்யாக்கி  தொடர்ந்து தடவி வர வேண்டும். இந்த வெள்ளை நிறம் மாறி உங்களது சாதாரணமான தோலின் நிறம் வந்துவிடும் ” 

” ஓ அப்போது இங்கே எனது காயங்களுக்கு நீ தடவுவது…? ” 

” அது கற்றாழை .கற்றாழைக்கு எல்லா புண்களையும் ஆற்றும் சக்தி உண்டு .கற்றாழையை பக்குவப்படுத்தி காய்ச்சி எண்ணெய் ஆக்கி அதைத்தான் உங்கள் தீக்காயங்களுக்கு தடவி வந்தேன் .வேதனையை குறைப்பதற்காக விராலி இலை கசாயம் கொடுத்தோம்.”  தனது மருத்துவமுறையை விளக்கி சொல்லிவிட்டு தான் கலந்து வைத்திருந்த மருந்து கிண்ணத்தை எடுத்துக்கொள்ள எழுந்தவளின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.

” என்ன இது …? நீங்கள் வரைந்தீர்களா ? ”  அவள் காய்ச்சி எடுத்து வந்திருந்த மூலிகை எண்ணெய் கிண்ணத்திற்குள்   இருந்த மயில் தோகையின் பின்புறத்தில் மூலிகை எண்ணெயை  தொட்டு தொட்டு அமர்ந்திருந்த பாறையின் மீது ஒரு அழகான ஓவியத்தை வரைந்து இருந்தான் ரிஷிதரன்.

” சும்மா எதையோ கிறுக்கினேன் ” 

” எவ்வளவு அழகாக இருக்கிறது  ? இதைக் கிறுக்கினேன் என்கிறீர்களே ?  உங்களுக்கு ஓவியம் வரைய தெரியுமா ? ” 

அந்த கரடுமுரடான கற்பாறையின் மேலும் அவ்வப்போது தொட்டுத்தொட்டு புள்ளி வைத்த தொடர்பற்ற கோடுகளிலும் கூட எழிலை எடுத்துக்காட்டிய அந்த ஓவிய பாவையின் முகம் தேர்ந்த கலைஞனின் கை வாகினை காட்டியது.

“ப்ச் ஏதோ… பேச்சுவாக்கில் வரைந்தேன் .அதை போய் …” என்றவன் சட்டென கையால் அதனை தேய்த்து  அழித்துவிட தேவயானி திடுக்கிட்டாள்.







” எந்த விஷயத்தையும் முழு ஈடுபாட்டோடு செய்ய மாட்டீர்களா  ? எல்லாவற்றிலும் அரைகுறைதானா ? ”  எரிச்சலாக கேட்டாள்

” ஆமாம் நான் அப்படித்தான் .அரைகுறை தான் …” சொன்னவன் அவள் குற்றச்சாட்டு தந்த  கோபத்தோடு அவள் கொண்டுவந்து வைத்திருந்த மூலிகை எண்ணெயை கீழே தள்ளிவிட்டான். மண் பாத்திரம் கீழே விழுந்து உருண்டு நொறுங்கி எண்ணெய்  சிதறியது.

” யோவ் லூசா நீ ?இந்த மருந்தை காய்ச்சுவதற்கு நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா ? ” தேவயானி பொறுமை இழந்து கையை அவன் முகத்தின் முன் நீட்டியபடி கேட்க தன் முன்  நீண்ட கையை பற்றி முதுகுப்புறம்  வளைத்து அவளை  திருப்பினான்.

”  யாருடி லூசு ?  என்னை பாத்தா உனக்கு லூசு மாதிரியா  தெரியுது ?  நான் என்ன சட்டையை கிழித்து போட்டுக் கொண்டு  அலைகிறேனா ? ” 

” ஆமாம் அப்படித்தான் அம்மாவிற்கு அண்ணனிற்கு , தொழிலுக்கு என்று எல்லாவற்றிற்கும் பாதகம் செய்யும் நீ ஒரு முழு பைத்தியக்காரன் ” 

” கொழுப்புடி உனக்கு  ” பின்னால் மடக்கிய அவள் கைகளை அழுத்தி  அப்படியே  அவளை தன்னருகே இழுத்து அவள் முதுகுக்கு பின்னால் முகத்தருகே தன் முகம் கொண்டுவந்து ”  எப்போதுமே என் மீது குற்றம் மட்டுமே சொல்லிக் கொண்டே இருக்கும்  உன்னுடைய இந்த வாயை ….” என்று சொல்லி அவன் நிறுத்த தேவயானியின் உடலில் படபடப்பு உண்டானது .தேகம் நடுங்கியது.

ஆரம்பித்த வாக்கியத்தை முடிக்கும் எண்ணம் இன்றி  ரிஷிதரன்  அவனது பிடியை தளர்த்தாமல் அப்படியே அவளைப் பார்த்தபடி நின்றிருக்க தனக்குப்பின் இருந்த அவனது முக பாவனைகளை முன் பார்க்க முடியாமல்…பார்க்க விரும்பாமல்  தேவயானி தவிப்புடன் முன் திரும்பி நின்றிருக்க…




” ஹலோ ஹூவ் ஆர் யூ மேன் ? வாட் ஆர் யூ டூயிங் ? வொய் ஆர்  யூ கர்ட்டிங் மை  பியான்சி ? லீவ் ஹெர்  ” கர்ண கடூர கத்தலோடு அவர்கள் எதிரில் வந்து நின்றான் ஒரு இளைஞன்.

What’s your Reaction?
+1
2
+1
3
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Kurinji
Kurinji
4 years ago

Yaar athu vanthu udhai pada povathu.

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!