Serial Stories thanga thamarai malare தங்க தாமரை மலரே

தங்க தாமரை மலரே – 31

31

” உங்களை நேரடியாக சந்திப்பேனென்று நான் நினைக்கவில்லை சார் ” மணிகண்டனின் குரலில் இன்னமும் பிரமிப்பு குறைந்திருக்கவில்லை .

” நான் சாதாரணமானவன்தான் மணிகண்டன் .எனக்கு இப்படி மிகப் பெரிய மரியாதைகளெல்லாம் வேண்டாம் ….”  மணிகண்டனின் கை பற்றி குலுக்கிய விஸ்வேஸ்வரனின் குரல் இயல்பாகவே இருந்த்து .




” கமலினி ரொம்பவும் முக்கியமென்றால் மட்டும்தான் …அதுவும் இந்த மலைக்கோவிலுக்கு மட்டும்தான் அழைப்பாள் .இன்று அழைக்கவும் அவளது வேலை விபரமோ என்று நினைத்துதான் வேகமாக ஓடி வந்தேன் .இங்கே உங்களை அறிமுகப் படுத்துகிறாள் ” 

” ஏன் கமலினி வேலைக்கு என்ன ?அவள் என் பார்ட்னர் மணிகண்டன் …” பேசிக் கொண்டிருந்தவன் கமலினி முறைக்கவும்…” என் பார்ட்னர் போல் கடையை பொறுப்பாக கவனித்துக் கொள்கிறாள் என்றேன் …” என மாற்றினான் .

” இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை சார் .கமலினி சின்ன வயதிலிருந்தே ரொம்ப சூட்டிகையான பெண் .எதையும் எளிதாக கற்றுக் கொள்வாள் .நாங்கள் இரண்டு பேரும் பள்ளியில் படிக்கும் போதே எனக்கு வீட்டுப்பாடம் கூட அவள்தான் செய்து தருவாள் “

” உங்கள் வயது என்ன மணிகண்டன் ? இருவரும் ஒரே வகுப்பிலா படித்தீர்கள் ? ” 

” அ…அது வந்து ..நான் கொஞ்சம் படிப்பில் வீக் .அதனால் பெயிலாகி …” மணிகண்டன் அசடு வழிய கமலினிக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருந்த்து .இவனை யார் இத்தனை விபரங்கள் கொடுக்க சொன்னது …?

” இன்ட்ரெஸ்டிங் …நீங்களும் கமலினியும் பள்ளித் தோழர்கள் .அப்புறம் சொல்லுங்க .உங்க நட்பு எப்போது மாறியது ? ” 

” எங்கள் நட்பு எதுக்கு சார் மாறனும் ? நாங்க இப்போதும் ப்ரெண்ட்ஸ்தான் …” வேகமாக இடையிட்ட மணிகண்டன் கமலினியின் போதும் நிறுத்து  பார்வையை கவனிக்கவில்லை .

” இப்போதும் ப்ரெண்ட்ஸ் ….? அது இல்லை மணிகண்டன் .நான் உங்களது திருமண ஏற்பாட்டை கேட்கிறேன் …” 

” அது …வீட்டில் பெரியவர்களாக பார்த்து பேசி முடிவு செய்தது சார் .நாங்கள் இரண்டு பேரும் அந்த மாதிரி எங்களை நினைத்து பார்த்ததே இல்லை .இப்போதும் நாங்கள் நண்பர்களாகத்தான் பழகிக் கொண்டிருக்கறோம் .அப்படித்தானே கமலினி ? ” 

” அப்படியா கமலினி ? ” 

இரு ஆண்களின் கேள்விக்கும் கமலினி பதில் சொல்வது போலில்லை .அவள் அங்குமிங்குமாக ஓடி விளையாண்டு  கொண்டிருக்கும் குழந்தைகளை சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் .

” கமலினி இப்படி இருக்க வேண்டிய பெண்ணே இல்லை சார் .அவள் வசதியாக முதலாளியாக வாழ வேண்டியவள் . ஏதோ கெட்ட நேரம் …இப்படி …” 

” மணிகண்டன் …” கமலினி அதட்டினாள் .

” அவர்கள் குடும்ப நிலைமை பேசினால் இவளுக்கு பிடிக்காது .ரொம்ப தன்மானமுள்ள பெண் ” மணிகண்டன் விஸ்வேஸ்வரனுக்கு மட்டும் முணுமுணுத்தான் 

அவன் தலையசைத்தான் .அவனது பார்வை இம்மியும் நகராமல் கமலினியின் முகம் தழுவிக் கிடந்தது.அப் பார்வையின் தீட்சண்யம் தாங்காமல் கமலினி எழுந்தாள் .

” அங்கே கொஞ்ச நேரம் நின்றுவிட்டு வருகிறேன் ” மலையின் ஓரம் ஊரை பார்க்கும் முனையை காட்டிவிட்டு நடந்தாள் . 

” கமலினி குடும்பததிற்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம் சார் .அதனாலேயேதான் ….” 

” உங்களது இந்த திருமண ஏற்பாடா …? ” 

ஊகித்து கேட்ட விஸ்வேஸ்வரனை மணிகண்டன் மறுக்கவில்லை .

“கஷ்டத்தில் இருந்த கமலினியின் அப்பாவின் பாரத்தை ஏதோ ஒரு விதத்தில் குறைக்க என் அப்பா எடுத்த முடிவு , இதில் யாருக்கும் பெரிய அளவில் மறுப்பேதும் இல்லாத்ததால் …ப்ச் …அதை விடுங்கள் சார் .இப்போது கமலினியின் வேலைக்கு எதுவும் ஆபத்தில்லைதானே …? இப்படி சேல்ஸ் கேர்ள் வேலையெல்லாம் பார்க்க வேண்டிய பெண்ணில்லை அவள் .வேறு வழியில்லாமல்தான் இந்த வேலையை அவளுக்கு நான் காட்ட வேண்டியதாயிற்று ” 

விஸ்வேஸ்வரன் மணிகண்டனின் கை பற்றிக் குலுக்கினான் .” நன்றி மணிகண்டன் ” 

” எதற்கு ? ” 

” கமலினியை எனக்கு கொடுத்ததற்கு …ஐ மீன் என் கடைக்கு இப்படி ஒரு பணியாளை கொடுத்ததற்கு .கமலினியை எக்காலத்திலும் விட்டுக் கொடுக்க நான் தயாராக இல்லை . என்னுடன் எப்போதும் அவள் இணைந்துதான் இருப்பாள்….” 

விளக்குகள் மின்னும் திருச்சி் மாநகரத்தை வேடிக்கை பார்த்து முடித்து திரும்பிய கமலினியின் காதுகளில் விஸ்வேஸ்வரனின் கடைசி வார்த்தைகள் விழுந்தன .” என்ன வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருக்கிறீர்கள் ? ” மென் கத்தலாக கேட்டாள் .

” என் கடையில் …என் தொழிலில் …என்னோடு எப்போதும் இணைந்திருப்பாய் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்மேன்மா .நீ வேறென்ன நினைத்தாய் ? ” பயம் போல் உருண்ட விஸ்வேஸ்வரனின் விழிகளை நோண்டினால் என்னவெனும் ஆத்திரம் கமலினிக்கு வந்தது .

” மூன்று மாதங்களுக்கு முன்பு இங்கே வைத்துதான் சார் உங்கள் கடை வேலையைப் பற்றி கமலினிக்கு சொன்னேன் .அன்று கூட ஒரு குட்டிப்பெண் அங்குமிங்குமாக ஓடி விளையாண்டு கொண்டிருந்தாள் இல்லையா கமலினி … அவளோடு …” கமலினி பதறி ஒற்றை விரலால் தன் உதட்டை தொட்டு பேசாதே என ஜாடை காட்ட மணிகண்டன் அமைதியானான் .




ஏனென அவன் புருவம் உயர்த்த , அப்புறமென கமலினி விழி காட்டினாள் .

” இந்த பிள்ளையார்தான் அருள் கொண்டு கமலினியை என் கடைக்கு அனுப்பியிருக்கிறார் .சரிதானே மணிகண்டன் ? ” விஸ்வேஸ்வரன் சந்நிதியை பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டான் .

” அ …என்ன சார் …? ” கமலினி மேல் பார்வை வைத்திருந்த மணிகண்டன் தடுமாற , கமலினி விஸ்வேஸ்வரன் அறியாமல் அவன் கையை இரு விரலால் கிள்ளினாள் .

” ஸ் …ஆ…ஆமாம் சார் …அப்படித்தான் சார் ” 

” என் பேச்சை கவனித்தீர்களா மணிகண்டன் ? ” விசமம் தெரிந்தது விஸ்வேஸ்வரனின் பேச்சில்.

” ஓ …கவனித்தேனே .இப்போது இருட்டிவிட்டது .நேரமாகிவிட்டது .நாம் கிளம்பலாம் ” அவசரமாக எழுந்து கொண்டான் .இன்ஞின் பின்னோடும் ரயில் பெட்டி போல் கமலினியும் அவனை பின்பற்ற வேறு வழியின்றி விஸ்வேஸ்வரனும் எழுந்தான் 

” நான் பஸ்ஸில் போய் கொள்கிறேன் சார் .பை …” மலையிறங்கியதும் கார் நோக்கி நடந்த விஸ்வேஸ்வரனை தவிர்த்தாள் கமலினி .

” என்னுடன்தானே வந்தாய் .நானே டிராப் செய்கிறேன் .வா …” 

” பரவாயில்லை சார் .இப்போதுதான் நான் இருக்கிறேனே…நாங்கள் இருவரும் பஸ்ஸில் போய் கொள்கிறோம் .வா கமலினி …” மணிகண்டன் கமலினியின் தோளை லேசாக தொட்டு அழைத்து விட்டு கூட்டத்திற்குள் நடக்க , கமலினி விஸ்வேஸ்வரனை பார்க்காமலேயே அவன் பின்னால் நடந்து விட்டாள் . அதனால் லாவாக்கள் வழியும் அவன் பார்வை எரிமலையை அவள் தவிர்த்துவிட்டாள்.

பஸ்ஸில் டிக்கெட் எடுத்து அருகருகே  அமர்ந்ததும் மணிகண்டன் கமலினியை கூர்மையாக பார்த்தான் . ” விஸ்வேஸ்வரன் உன்னை லவ் பண்ணுகிறாரா கமலினி ? ” நேரிடையான அவனது இந்த கேள்வியை இமைகளை அழுத்தி மூடி  ஜீரணித்தாள் கமலினி. 

பின் வறண்ட குரலில் பதில் அளித்தாள் ” நிச்சயக்கப்பட்ட மாப்பிள்ளை வேறு ஒருவனை சொல்லி காதலா என கேட்பது ஒரு பெண்ணிற்கு கொடுமையான விஷயம் மணிகண்டன் ” 

 மணிகண்டன் தோள்களை குலுக்கிக் கொண்டான். ”  நாம் திருமணம் பேச பட்டவர்கள்தான் .ஆனாலும் என் மனதில் தோன்றியதை நான் கேட்காமல் இருக்க முடியாது. திருமணம் நிச்சயமானவர்கள் என்பதை தாண்டி நாம் நண்பர்கள் என்பதே நமக்குள் இன்னமும்

 இருப்பதாக நினைக்கிறேன். ப்ளீஸ் மறைக்காமல் சொல்லு கமலினி. “

கமலினி பரபரப்பான  இரவு நேர வெளிப்புற திருச்சி நகருக்கு பார்வையை திருப்பிக் கொண்டாள். ”  அவர் என்னிடம் காதலை சொல்லி விட்டார்”  மெல்ல முனுமுனுத்தாள்.

” நீ …? ‘  அடுத்த கேள்வி குத்தூசி யாய் சொருகியது அவளை .

” நம் இருவரின்  அப்பாக்களும் நமக்கு திருமணம் பேசி வைத்திருக்கிறார்கள் மணிகண்டன் ” 

”  நான் கேட்ட கேள்விக்கு இது பதில் அல்ல கமலினி “

” இல்லை இதுதான் பதில் ” 

” சரி இதனை நீ விஸ்வேஸ்வரனிடம் சொல்லி விட்டாயா ?  அதனால் தான் இந்த சந்திப்பு படலமா ? “

” ஆமாம் ” தலையசைத்தாள் .

முதலில் இதழ் பிரித்து மென்னகை புரிந்த மணிகண்டன் பின் சற்று சத்தமாகவே சிரித்தான் .” இப்போது எதற்கு சிரிக்கிறீர்கள் ? ”  கமலினி எரிச்சலாக கேட்டாள் .

“என்னைப் பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள..உனக்கு பொருத்தமானவனா என அறிந்து கொள்ள  ஸ்வர்ணகமலம் எம்.டி வந்தாராக்கும் ? ” 

 கமலினி பதில் சொல்லவில்லை .ஜன்னல் பக்கம் இருந்து திரும்பவும் இல்லை. எனக்கு அப்படி தோணவில்லை தனக்குள் சொல்லிக் கொண்டாள் .

” நம் இருவரின் திருமணமும் முக்கியம் என்று நீ அவரிடம் சொல்லி இருக்கலாமே கமலினி ” 

” எல்லாம் சொல்லி விட்டேன். ஆனாலும்…” 




”  பிடிவாதம் ம் …”  மணிகண்டனின் சிரிப்பு தொடர்ந்தது .

” சும்மா சிரிக்காதீர்கள் மணிகண்டன் .இதற்கு ஏதாவது முடிவு சொல்லுங்கள் ” அவர்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்திருக்க இருவரும் இறங்கி பேசியபடி நடந்தனர் .இருவரின் வீடும் பக்கத்து பக்கத்து தெருக்களில்.தெருக்கள் பிரியும் இடத்தில் தயங்கி நின்று கமலினி மணிகண்டனின் முகம் பார்க்க அவன் மெல்ல அவள் தோளில் தட்டினான் .

“கவலைப்படாமல் போ .ஏதாவது யோசிக்கலாம் கமலினி” .தலையசைத்து நடந்தாள் .இரண்டு எட்டுக்கள் எடுத்து வைத்த பின் நின்று திரும்பினாள் .அழைத்தாள் .

“மணிகண்டன் …யூ ஆர் கிரேட் மேன் ” 

” இல்லை. நான் சாதாரண மனிதன். உன் நண்பன் ”  புன்னகைத்து விட்டு  தன் வீட்டிற்கு நடந்தான் மணிகண்டன். 

அதுவரை அவர்களை தன் காரிலேயே பின்தொடர்ந்து வந்த விஸ்வேஸ்வரன் இந்த தோள் தட்டலை யோசனையோடு பார்த்தபடி தன் காரை திருப்பிக்கொண்டு போனான்.

What’s your Reaction?
+1
20
+1
15
+1
2
+1
2
+1
3
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!