Serial Stories thanga thamarai malare தங்க தாமரை மலரே

தங்க தாமரை மலரே – 29

29

” உனக்கும் அண்ணிக்கும் இடையே ஏதாவது ரகசியம் இருக்கிறதா கமலினி ? ” மறுநாள் அவளிடம் கேட்டவனை கொஞ்சம் பயமாக பார்த்தாள் .

” அது …அப்படி ஒன்றும் இல்லையே …ஏன் கேட்கிறீர்கள் ? ” தடுமாறின கமலினியின் வார்த்தைகள் .

” அப்படியா…?  ஒன்றும் இல்லை என்றால் சரிதான் .அப்படி எதுவும் இருந்தாலும் என்னிடம் சொல்லிவிடு வாய்தானே ?  எதிர்பார்ப்போ நிச்சயமோ இருந்தது அவனது குரலில்.




உன்னிடம் ஏண்டா சொல்ல போகிறேன் ஏட்டிக்குப் போட்டியாக நினைத்து விட்டு உடனே நாவை கடித்துக் கொண்டாள் .இவனிடம் தானே சொல்லி ஆகவேண்டும் லேசாக முன் நெற்றியை ஒற்றை விரலால் தட்டி விட்டு கொண்டவளை வினோதமாக பார்த்தான் .

” என்ன பிரச்சனை கமலினி…? ” அனிச்சங்கள்  பூத்திருந்தன அவனது குரலில்…. வேண்டாம் கமலி இவன் உன்னை இந்தக் குரலில்  பேசி வசியப்படுத்த முயல்கிறான் அவளது மனம் அவளை எச்சரித்தது.

” அது ஏன் சார் உங்கள் அண்ணியை எப்போதும் மிரட்டிக் கொண்டே இருக்கிறீர்கள் ? உங்களைப் பார்த்தாலே அவர்கள் அரள்கிறார்கள்…” 

“பெரிதாக எந்த காரணமும் இல்லை கமலினி .அண்ணியை எங்கள் குடும்பத் தொழிலில் ஈடுபடுத்தி அவர்களது பங்கை அவர்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். அதற்கு அண்ணி ஒத்துழைப்பதில்லை .ஏதோ ஈட்டிக்காரனை பார்ப்பது போலவே என்னை எப்போதும் பார்க்கிறார்கள்”

” நீங்கள் நடந்து கொள்ளும் முறை அப்படித்தான் இருக்கிறது. ஏதோ பட்டுவிட்ட கடனைவலுக்கட்டாயமாகக அடைக்க முயல்பவனை போல் இருக்கிறது உங்கள் செயல்கள் ” 

” அப்படியா இருக்கிறேன் ? ” விஸ்வேஸ்வரன் புருவம் சுருக்கி யோசித்தான் .அப்பாடி இப்போதாவது யோசிக்கிறானே …மேற்கொண்டு பாரிஜாதம் விசயம் பேசுவோமா யோசித்து கொண்டிருக்கையிலேயே விஸ்வேஸ்வரன் அந்த கேள்வியை கேட்டு அவளை நிலைகுலைய வைத்தான் .

” இப்படித்தான் நான் உன்னிடம் நடந்து கொள்கிறேனா கமலினி ? அடமென்டாக அராஜகமாக …ம் ….? 

” இந்தப் பேச்சு நாம் பேசிக்கொண்டிருக்கவில்லை சார் ” 

” என்னைப் பற்றிய பேச்சு தானே பேசிக் கொண்டிருந்தோம். முதலில் என்னை நான் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா ? நடைமுறை செயல்களில் எங்கேயாவது ஏதாவது விரும்பத்தகாத ஐ மீன் நீ விரும்பாத விஷயங்கள் என்னிடம்  இருக்கின்றனவா ? ” தெரிந்து கொள்ளும் ஆர்வம் விஸ்வேஸ்வரனின் குரலில் கொப்பளித்தது

”  இன்று என்ன வேலை சார் ? ” பேச்சை மாற்றினாள்.அவன்  பெருமூச்சு விட்டான்.

” சோ… சொல்ல மாட்டாய் ? 

“அடுத்தவருடைய கருத்துக்கணிப்பு எனக்கு எதற்கு சார்? ” 

”  யார் அடுத்தவன் ?”  சீறினான் .

” உங்களிடம் வேலை பார்க்கும் பணிப்பெண்ணிற்கு நீங்கள் முதலாளி என்னும் அடுத்தவர் தானே ? ” 

விஸ்வேஸ்வரனின் கை டேபிள் வெய்ட்டை இறுக்கிப் பற்றியது .மண்டையை உடைத்துவிடுவானோ ?  கமலினி கொஞ்சம் பயத்தோடு அவனை பார்த்தாள் . சர்ரென்ற  வேகத்துடன் அந்த டேபிள் வெய்ட்டை சுழற்றினான் .அது டேபிளில் சுழன்று அருகில் இருந்த சில சாமான்களை கீழே தள்ளிவிட்டு தானும் கீழே போய் டொம்மென்ற பெரும் சத்தத்துடன்  உருண்டு விழுந்தது. கமலினி கண்களை மூடி அந்த சத்தத்தை ஜீரணித்தாள்.

” இன்று மாலை 4 மணிக்கு என்னுடன் ஏர்போர்ட் வரவேண்டும் ” இப்போது பேச்சை மாற்றியது அவன் .




” எதற்கு …? ” 

“நிகிதாவை சந்திக்க…”  திரும்பவும் முதலில் இருந்தா கமலினிக்கு ஆயாசமாக வந்தது.

”  சாரி சார் இனி நிகிதா உடனான பிரச்சனையை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் ”  இதுதான் முடிவு என்பது போல் முடிக்க முயன்றாள் .

“அதனை இன்று நீ அவளை பார்த்து பேசிவிட்டு சொல்லு.உன்  முதலாளியாக சொல்கிறேன் ” அதிகாரம் காட்டி பேச்சை முடித்து விட்டான் .தனது வேலைக்கு லேப்டாப்பிற்கு திரும்பிக் கொண்டான் .

அன்று மாலை கமலினி ஏர்போர்ட்டில் நிகிதாவை சந்தித்தாள். நிகிதா மும்பை கிளம்பிக் கொண்டிருக்கிறாள் இனி திருச்சி வரப்போவதில்லை என அறிந்து அதிர்ந்தாள் .

” என்ன நிகிதா ஏன் இப்படி திடுமென்று ஒரு முடிவெடுத்தீர்கள் ?  இன்னும் கொஞ்ச காலம் காத்திருந்து இருக்கலாமே ? ” ஆங்கிலத்தில் அவளிடம் படபடத்தாள். 

” எதற்கு ? ”  அழுத்தமாக வந்தது நிகிதாவின் குரல்.

 விஸ்வேஸ்வரன் வழக்கம் போல் இருவரையும் பேசிக்கொண்டிருக்குமாறு விட்டு விட்டு ஓரமாக நின்று தன் போனில் தொழில் பேசிக்கொண்டிருந்தான். நிகிதாவின் ஒற்றை வார்த்தை கமலினிக்கு கோபத்தைத் தந்தது. அந்தஸ்து ,பணம் ,புகழ் ,செல்வாக்கு அனைத்தும் ஒருங்கே அமைந்த இருவரும் தங்கள் வாழ்வில் இணைய இருக்கும் பொன்னான வாய்ப்பை முட்டாள்தனமாக உதறுவது அவளுக்கு எரிச்சலை கொடுத்தது .இதனால் பாதிக்கப்படுவது அவள் அல்லவா….? 

” எதற்காக வா …? எங்கள் விஷ்வா சாரை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? அவரைப்போல் ஒருவரை திருமணம் செய்வதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் தெரியுமா ? ” 

”  ஆமாம் .தெரியும்…”  நிகிதா உடனே ஒத்துக் கொண்டாள் . ” ஆனால் அந்த அதிர்ஷ்டசாலி நான் இல்லை. நானும் விஷ்வாவும் திருமணம் செய்து கொண்டால் அது வெறுமனே வியாபார ஒப்பந்தமாகத்தான் இருக்கும் .எனக்கு என்னுடைய வாழ்க்கை பரஸ்பரம் புரிதலோடு காதல் பொங்க இருக்க வேண்டும் .என்னால் விஸ்வா உடன் விஸ்வாவால் என்னுடன் அப்படி வாழ முடியாது ” தீர்மானமாக இருந்தாள் நிகிதா .

“இல்லை நிகிதா கொஞ்சம் பொறுமையாக நான் சொல்வதைக் கேளுங்கள் .நம் நாட்டில் 80 சதவீதத்தினர் இந்த வகை வாழ்க்கை தான் வாழுகின்றனர். திருமணம் முடிந்து சில நாட்களில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் தன்மை வந்துவிடும் .எல்லாம் சரியாகிப் போகும் ” கமலினி நிகிதாவை சமாதானப்படுத்த முயன்றாள் .

”  விஷ்வா ஒரு நிமிடம் வாருங்களேன் ” நிகிதா தள்ளி நின்ற விஸ்வேஸ்வரனை சத்தமாக கூப்பிட்டு விட கமலினி அதிர்ந்தாள் .நான் இங்கே தொண்டை தண்ணீர் வற்ற இவளுக்கு என்று சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கிறேன் .இவள் பட்டென்று அவனைக் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறாள் …எரிச்சலோடு பார்த்தாள்.

 விஸ்வேஸ்வரன் அடுத்த நொடியே அங்கே வந்தான் . ”  உங்கள் ஸ்டாப்புக்கு நோ நோ ஐ அம் சாரி உங்கள் பார்ட்னருக்கு நன்றாக ட்ரெயினிங் கொடுத்து கூப்பிட்டு வந்து இருக்கிறீர்கள் போலவே…? ” 

”  ட்ரெய்னிங்கா….?  நானா….?  என்ன ட்ரைனிங் …?” 

” எங்க பாஸ் நல்லவரு …வல்லவரு… நாலும் தெரிஞ்சவரு…  நல்ல வழி நடப்பவரு . இப்படி உங்கள் புகழ் பாடிக் கொண்டே இருக்கிறாள். என் காது ஜவ்வு கிழிந்துவிட்டது ”  நிகிதா காதைக் குடைந்து கொள்ள கமலினிக்கு அவளை நறுக்கெனக் கிள்ளினால்  என்ன என தோன்றியது .விஸ்வேஸ்வரன் வேறு அப்படியா பேசினாய் என்றொரு காதல் பார்வை பார்க்க  கமலினியின் கிள்ளும் எண்ணம் அதிகரித்தது… இப்போது இருவருக்கும் சேர்த்து.

”  என்ன சொன்னாய் கமலினி ? “கன அக்கறையாய் கேட்ட விஸ்வேஸ்வரன் கதை கேட்கும் ஆர்வம் உடையவன் போல் அவள் அருகே அமர்ந்துகொண்டான். கையை கன்னத்தில் தாங்கிக்கொண்டு அவளைப் பார்த்தபடி இருந்தான்.

”  எனக்கு ப்ளைட்  அறிவிப்பு வந்துவிட்டது நான் கிளம்புகிறேன் ” நிகிதா எழுந்து நடக்கத் துவங்கினாள் அவள் செல்வதை பார்த்தபடி செய்வதறியாமல் அமர்ந்திருந்த கமலினி கடைசி நிமிடத்தில் எழுந்து வேகமாக அவளை நோக்கி ஓடினாள் .

” நான் சொல்வதை மீண்டும் யோசித்துப் பாருங்கள் நிகிதா.  நீங்கள் மீண்டும் திருச்சி வர வேண்டும். உங்கள் இருவரின் திருமணம் விஷ்வாவிற்கு தொழிலில் பெரிய முன்னேற்றத்தை கொடுக்கும் .டைமண்ட்் பிசினஸ் அவர் மிகவும் எதிர்பார்த்து நிறைய செய்யத் துடிக்கும் தொழில் “என்றாள் .

 நிகிதா மெல்லிய சிரிப்புடன் அவள் கன்னம் தட்டினாள் .பயப்படாதே கமலினி .எனது முடிவால் எங்கள் தொழிலில் எந்த மாற்றமும் இருக்காது .நான் டாடியிடம் பேசி விடுகிறேன் ” .கையசைத்துவிட்டு நடக்க ஆரம்பித்தவள் நின்று அவள் கையைப் பற்றினாள்.

” இன்னும் எத்தனை நாட்களுக்கு நீங்கள் இருவரும் உங்களையே ஏமாற்றிக் கொள்ள போகிறீர்கள் கமலினி ? ”  கமலினி திகைத்தாள்.

”  நாங்களா என்ன ஏமாற்றுகிறோம் ? ” 

“என்னுடைய கணிப்புப்படி நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறீர்கள் . அதனை நீங்களே உணர்ந்து கொண்டீர்களா என்று தெரியவில்லை .இனியாவது உங்கள் கூட்டிலிருந்து வெளியே வாருங்கள் .குடும்பம் , பண்பாடு ,  பாரம்பரியம் என்ற சின்ன கூட்டுக்குள்ளேயே சுற்றிக் கொண்டு இருக்காமல் காதல் என்னும் பரந்த வான்வெளிக்கு வாருங்கள் உங்கள் மனதை திறந்து தெளிவாகப் பேசுங்கள். விரைவிலேயே காதலை தெரிவித்து கொஞ்ச நாள் காதலித்து பிறகு திருமணம் செய்து கொள்ளுங்கள்” 

 நிகிதா போய்விட்டாள். கமலினி ஸ்தம்பித்து நின்றாள் .இப்போது அவளுக்கு ஒரு சந்தேகம் வந்து இருந்தது. சட்டென திரும்பியவள் வேகமாக நடந்து வந்து முன்பு அவர்கள் அமர்ந்திருந்த இடத்தை அடைந்தாள் .அங்கே விஸ்வேஸ்வரன் முன்பு அவள் விட்டுச் சென்ற இடத்திலேயே கன்னத்தில் கை தாங்கியபடி அதே தோற்றத்திலேயே அமர்ந்திருப்பதில் கோபம் கொண்டாள்.

அவனருகே பொத்தென அமர்ந்தவள் ” அந்த நிகிதாவிற்கு வசனம் சொல்லிக் கொடுத்து கூப்பிட்டு வந்தீர்களோ ? ”  கேட்டாள் .விஸ்வேஸ்வரன் விழித்தான் .

”  நானா…?  என்ன சொல்லிக் கொடுத்தேன் ? அவளும் இதையே தானே என்னிடம் கேட்டாள் ?  ஏன் இருவரும் ஒன்று போல் பேசுகிறீர்கள் ? 

நானே அவளுடன் பேசவே பயந்து கொண்டு இருக்கிறேன் .காதல் அது இதுவென்று எதையும் சொல்லிவிடுவாளோ… என்று பயந்து அவளுக்கு பை  சொல்லக்கூட போகாமல் இங்கேயே உட்கார்ந்து இருக்கிறேன். அந்த பயத்தில்தான் துணைக்கு உன்னையும் கூட்டிக்கொண்டு இங்கு வந்தேன். ”  உண்மையை உரைத்த அவனது பேச்சில்  அப்பாவித்தனம் தெரிய கமலினிக்கு  தலையை முட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது இவனும் இவனது லவ் லட்சணமும் …




 ” நிகிதா என்ன சொன்னாள் கமலினி ? ” 

” ம் …இப்படி ஒரு மஞ்ச மாக்கானை வைத்துக்கொண்டு எப்படி சமாளிக்கிறாய்  என்று கேட்டாள் ? ”  எரிந்து விழுந்தாள்.

”  அப்படியா கேட்டாள் ?  வேறு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது போல் இருந்தது ”  விஸ்வேஸ்வரன் புருவம் சுருக்கி யோசிக்க தொடங்க கமலினி அவசரமாக எழுந்து நின்றாள் .

“வாருங்கள் போகலாம் நடக்கத் துவங்கினாள் ” 

” அந்த நிகிதா உடனான காதலும்  கல்யாணமும்  உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று தெரியும்தானே …?/இப்படி அவளை கோட்டை விட்டு விட்டீர்களே ? ”  கமலினியின் பேச்சு காதில் விழாதது போல் நேராக ரோட்டை பார்த்து காரை ஓட்டிக் கொண்டு  இருந்தான் .

” உங்களைத்தான் கேட்கிறேன் …” 

“என்னுடைய நல்லதை நான் பார்த்துக் கொள்வேன் .எனக்கு சம்மந்தம் இல்லாத யாரோ ஒருவர் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம் ” கமலினியின் முகம் வாடியது .காருக்கு வெளிப்புறம் திரும்பிக்கொண்டாள்.

”  உனக்கு வந்தால் ரத்தம். எனக்கு வந்தால்  தக்காளி சட்னியா…? ”  மெல்லிய குரலில் கேட்ட 

விஸ்வேஸ்வரன் அவளுக்கு கோபவெறி ஏற்றிக்கொண்டு இருந்தான். வலது கை முஷ்டி மடக்கி இடது உள்ளங்கையில் குத்திக் கொண்டாள்  கமலினி .

” அனாவசிய டென்சனை மூளைக்கு ஏற்றி உடம்பை அலுப்பு படுத்திக் கொள்ள வேண்டாம் ” இப்போது உண்மையான அக்கறையே அவன் குரலில் .சரி தான் போடா என்று அவனை பேசும் ஆசைதான் கமலினிக்கு 

.ஆனால் அவன் உன் முதலாளி… அவளது மனச்சாட்சி உள்ளுக்குள் அவளை கொட்டிக்கொண்டே இருந்தது.

”  இளநீர் சாப்பிடலாமா ? ” ஏர்போர்ட்டை விட்டு வெளியேறவும் ரோட்டோர கடை ஒன்றில் காரை விஸ்வேஸ்வரன் நிறுத்த .

“எனக்கு வேண்டாம் ” கமலினி கைகளை கட்டிக்கொண்டாள். ஆனாலும் அவன் இறங்கிப்போய் இரண்டு இளநீர் வெட்ட சொல்ல நீயே குடி நான் வாங்கமாட்டேன் வீம்பாக நினைத்தாள் .

 அவள் முன் இளநீரை நீட்டியவன் ” இந்த நேரத்தில் அதிகமான டென்ஷன் இருக்கக்கூடாது கமலினி. நிதானமாக ஒரே சீராக உடம்பையும் மனதையும் பார்த்துக் கொள்ள வேண்டும் . உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் .அதற்காகத்தான் இது…”  ஸ்ட்ராவை அவள் உதட்டில் படும்படி அழுத்தினான் .

விஸ்வேஸ்வரன் இப்போது சொல்வது அவளது மாதாந்திர கவனிப்பு  நாட்களுக்கான எச்சரிக்கை என்பதை உணர்ந்த கமலினி திகைப்புடன் இளநீரை வாங்கி கொண்டாள் . ” எங்கள் வீட்டிற்குள் அறிவிப்பின்றி நுழைந்து பெண்களாய் பேசிய அந்தரங்க  பேச்சுக்களை ஒட்டு  கேட்டிருக்கிறீர்கள் ”  குற்றம் சாட்டினாள் . அவள் முகம் கூச்சத்தில் சிவந்திருந்தது.

” ஏதோ தவறு போல் கூச்சப்படுகிறாயே …இயற்கையான உடல் நிகழ்வுக்கு இத்தனை குன்றல் ஏன் கமலி ? இவையெல்லாம் பெண்களாகிய நீங்கள் உங்களுக்குள்ளேயே பொத்தி வைத்து தனிமையில் அனுபவிக்க வேண்டிய வேதனைகள் இல்லை .இதுதான்டா இன்று என் நிலை .இப்படித்தான்டா என் உடல் அமைப்பு …என்று பொட்டில் அடித்தாற் போல் சக ஆண்களிடம் தெரியப்படுத்த வேண்டும் .இந்த நேரத்தில் எனக்கு உதவுவது உனது கடமை .என்னை தாங்க வேண்டியது உனது வேலை .உனக்காக… உன் சந்ததிக்காகவென்றுதான் நான் மாதந்தோறும் இந்த ரணத்தை அனுபவித்து வருகிறேன் . வா …வந்து என் பாதங்களை தாங்கு .என் இடுப்பு வலியை ஏந்திக் கொள் .என் கால்களை வேதனை போக அழுத்தி விடு …இப்படி சொடுக்கு போட்டு அழைக்க வேண்டும் கமலினி .சும்மா பேச்சுக்கு சொல்கிறேனென்று நினைக்காதே .என் உள்ளார்ந்து சொல்கிறேன் . பெண்களாகிய நீங்கள் வரம் கொடுக்கும் தேவதைகள் .உங்களுக்கு முடியாத நாட்களுக்கு பணிவிடை செய்ய எங்களை அழைக்க வேண்டும் .அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தால்  மிக மகிழ்வேன் ” 

கமலினி கண்கள் விரிய அவனைப் பிரமிப்புடன் பார்த்தபடி இருந்தாள் .அவளது மனப் பாறைக்குள் கூர் விதையாய் மண்டியிட்டு நுழைந்தான் விஸ்வேஸ்வரன் . 

What’s your Reaction?
+1
30
+1
21
+1
2
+1
1
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

2 Comments
Inline Feedbacks
View all comments
Eswari
Eswari
4 years ago

This episode really super and the last words are extremely super. I love viswa and the way he expresses…

Padma u rock

Kurinji
Kurinji
4 years ago

Nee kathu kodukamaleye kathal unarthukiraan Kamali.

2
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!