Serial Stories thanga thamarai malare தங்க தாமரை மலரே

தங்க தாமரை மலரே – 18

18

” அழகாக இருக்கிறாய் கமலி ” புவனா நெகிழ்வோடு மகளின் இரு கன்னங்களையும் பற்றி நெற்றியில் முத்தமிட்டாள் . வேலாயுதம் கலங்கிய கண்களுடன் மகளின் தலையில் ஆசீர்வாதமாக கை வைத்தார் . ” தாமரை பூ மாதிரிடி என் மகள். எப்படி மலர்ந்து நிற்கிறாள் பாரேன் ”  பெருமையோடு மனைவியிடம் மகளை சீராட்டினார் .

” ம் …நம் மகள்னு சொல்லுங்க …” பாசத்திற்கான உரிமை கொண்டாடிய தன் பெற்றோரை வாஞ்சையாக பார்த்தவள் இருவரின் தோள்களிலும் கை போட்டுக் கொண்டாள் .

” வேலாயுதம் – புவனா தம்பதியினரின் மகளாகிய நான் இன்று மிக அழகாக இருப்பதாக உணர்கிறேன. …” அறிவிப்பு போல் பேச தந்தையும் , தாயும் மனம் விட்டு சிரிக்க , அப்போதுதான் எழுந்து காலை காபிக்காக அடுப்படிக்குள் வந்த கனகவல்லியின் கண்களில் இந்த பாசப்பிணைப்பு விழுந்த்து .அவளது கண்கள் கன்ன்றன .வயிறு எரிந்த்து .விடிந்தும் விடியாத அதிகாலையில் இந்த குடும்பத்திறகு என்ன கொஞ்சல் வேண்டிக் கிடக்கிறது ? அவள் பார்வை அலங்காரத்துடன் நின்றிருந்த கமலினி மேல் குரோதமாக விழுந்த்து .

கமலினி அன்று கட்டியிருந்த்து சாதாரண இளம்பிள்ளை  காட்டன் சேலைதான் .இளம்பிள்ளை என்பது சேலம் அருகே உள்ள நெசவு தொழிலாளர்கள் அதிகம் இருக்கும் ஊர் .அங்கே மிகத்தரமான பருத்தி புடவைகள் தறியில் நெய்யப்படுகின்றன .மிக்க் குறைந்த விலைக்கும் கிடைக்கின்றன.  கல்லூரியில் படிக்கும் போது தோழிகள் அனைவரும் நெசவு தொழிலாளர்களின் நன்மைக்கென ஒன்றாக பேசி முடிவெடுத்து இளம்பிள்ளை ஊருக்கு சென்று மொத்தமாக ஆளுக்கு இரண்டு , மூன்றென புடவைகளை வாங்கி வந்தனர் .அதில் ஒரு புடவையில் கற்பனையாக சில கை வேலைகளை செய்து பருத்தி புடவையை பட்டுப்புடவையின் தோற்றத்திற்கு மாற்றியிருந்தாள் கமலினி . இன்று அந்தப் புடவையையே அணிந்திருந்தாள் .

” காலங்கார்த்தாலே எந்தக் கோட்டையை பிடிக்க இந்த மகாராணியம்மா இப்படி அலங்கரிச்சுட்டு கிளம்பியிருக்காங்க ? ” கனகத்தின் கேள்வி காய்ச்சிய இரும்புக் கம்பியாய் மூவரின் இதயத்துனுள் பாய்ந்த்து .

” அவள் கல்யாண வீட்டிற்கு போகிறாள் கனகம. ” புவனா மெல்லிய குரலில் கூறினாள்…




” அது எந்த கல்யாண வீடு …? எனக்கு தெரியாத எந்த சொந்தக்கார வீடு ? இப்போல்லாம் நம்ம சொந்த பந்தங்கள் உங்க குடும்பத்தை மட்டுமே விசேசங்களுக்கு அழைக்க ஆரம்பிச்சுட்டாங்க போலவே ” முகவாயில் கை வைத்து அதிசயித்தாள் .

” இது சொந்தக்காரங்க கல்யாண வீடு இல்லை. அவள் ப்ரெண்ட் வீட்டு கல்யாணம் .நீ கிளம்பும்மா .அப்பா உன்னை கல்யாணவிட்டு வாசலில் விட்டுட்டு வேலைக்கு போகிறேன் ” வேலாயுதம் சொல்ல ,கனகத்தினால் மேலே பேச முடியவில்லை .

” கிப்டை எடுத்துக்கோம்மா …” புவனா நினைவுபடுத்தி கொண்டு வந்து கொடுத்த பரிசு பார்சலை கழுகாக  பார்த்த கனகம் , அது அளவில் கொஞ்சம் சிறியதாகவே இருக்க ,திருப்தியாக தலையசைத்துக் கொண்டாள் .

” என்ன இது …? குங்குமசிமிழா ? “

” இல்லை சித்தி .டைம்பீஸ் .ஐநூறு ருபாய் …” இழுத்து சொன்ன கமலினியின் கை பற்றி அழைத்து போனார் வேலாயுதம் .

” அவளிடம் எஏன்மா வம்பு வளர்க்கிறாய்.? “

” சும்மா விளையாட்டிற்கு அப்பா .இதன் உள்ளே இருக்கும் கிப்டை பார்த்தால் சித்திக்கு மயக்கமே வந்து விடும் ” குதூகலித்து சிரித்த மகளை அன்பாக பார்த்தார் .எத்தனையோ கஷ்டங்களுக்கிடையேயும் சிறு விசயங்களுக்கும் மலர்ந்து சிரிக்கும் மகள் தாமரை போலவே அவருக்கு தேன்றினாள் .

” நீ பிறந்து உன்னை என் கையில் கொடுத்த போது , அப்படியே இளஞ்சிவப்பாக உடல் முழுவதும் சிவந்து இருந்தாய் கமலிம்மா .கொஞ்சம் பெரிய தாமரை என் கைகளில் இருப்பது போல் இருந தது. அப்பொதே நான் உனக்கு முடிவு செய்த பெயர் கமலினி .வைத்த பெயருக்கு மாறு சொல்ல வழியின றி அப்படியே அந்த பெயரோடு பொருந்திப் போகிறாயடா “

“‘போங்கப்பா ்இது எத்தனை ஆயிரமாவது தடவைன்னு தெரியலை .போராக இருக்கிறதப்பா ” சிணுங்கிய மகளை மண்டபத்தினருகே விட்டு ” கிப்ட் பத்திரம்மா ” ஜாக்கிரதைப்படுத்தி அவள் மண்டபத்திற்குள் நுழையும் வரை பார்த்திருந்து விட்டு போனார் .

பெருமையாக கிப்டை வருடியபடி தெளித்த பன்னீரை ஏற்றுக் கொண்டு , இந்த கிப்ட் விஸ்வா சாருக்கு பிடிக்குமா …இதை பார்த்து என்ன சொல்வாரோ …? யோசித்தபடி உள்ளே போனாள் .

” சுதாகர் கல்யாணத்திற்கான கிப்ட் செலக்சன் உன்னடையது கமலினி .விலையை பற்றிய கவலை வேண்டாம் . கடை கேசியரிடம் வேண்டிய பணம் வாங்கிக்கொள் .கிப்ட் வித்தியாசமாக  இருக்க வேண்டும் .நம் தொழில்  சம்பந்தமாக இருந்தால் நன்றாக இருக்கும் ” என்று பொறுப்பை அவளிடம் ஒப்படைத்திருந்தான் .இடையில் அவள் கிப்ட் விபரம் பேச முயலும் போது கூட , தயார் பண்ணி விட்டாய்தானே …கல்யாணவீட்டில் வைத்து பார்த்துக் கொள்கிறேன் என்றுவிட்டான் .இ தோ …அந்த கிப்டுடன்தான் கமலினி வந்திருக்கிறாள் .எல்லோருக்கும் பிடிக்கவேண்டுமே …என்ற மன பரபரப்பு அவளுள் .

தெரியாதவர்கள் வீட்டு திருமணம் .அதிக பழக்கமற்றவர்கள் .எப்படி போய் …யாரை பார்த்து …தயங்கியபடி உள்ளே நுழைந்த்தும் நின்றவளை ” கமலினி வா…வா …ஏன் இவ்வளவு நேரம் ? தாலியே கட்டப் போகிறார்கள் பார் ” என வரவேற்றபடி வந்த விஸ்வேஸ்வரன் நிம்மதி மூச்சு விட வைத்தான் .

” நல்லவேளை வந்தீர்கள் சார் .யாரையும் தெரியாதே …எப்படி உள்ளே வருவது என்று யோசித்துக் கொண டே இருந்தேன் “

” உனக்காகத்தான் வாசலுக்கு பக்கத்திலேயே வெயிட் பண்ணிக் கொண்டிருந்தேன் .யாரையும் தெரியாதென்றாயே …பொய்தானே …? அங்கே பார் அந்த அம்மா உன்னை வரவேற்கத்தான் வருகிறார்கள் ” விஸ்வேஸ்வரன் காட்டிய திசையில் ப்ரியம்வதாவின் அம்மா வந்து கொண்டிருந்தாள் .

” வாங்க சார் .வாம்மா கமலினி .நீங்கள் வந்த்தில் சந்தோசம் .உட்காருங்கள் ” உபசரித்து போனாள் .

” என் பெயரைக் கூட நினைவு வைத்திருக்கிறார்களே …” கமலினி ஆச்சரியப்பட,

” மறக்க கூடியவளா நீ …? அதை விடு .இது என்ன ஸேரி கமலினி. ..? வித்தியாசமாக இருக்கிறதே …”

” இது சாதாரண இளம்பிள்ளை காட்டன் சார் .இந்த சேலையுடைய விலை தெரியுமா ? வெறும் நானூற்றி ஐம்பது .இதோ இந்த ஒற்றை சில்வர் பார்டர் , கோல்டன் பீகாக் ஸ்டோன்ஸ் , ஓரத்தில் இந்த மணி எல்லாம் வைத்து இதனை டிசைனர் ஸேரி போல மாற்றியது நான் .எப்படி நன்றாக இருக்கிறதுதானே …? ” உற்சாகமாக கமலினி விவரித்தாள்




” ம் .உனக்கு க்ரியேட்டிவிட்டி மைன்ட் கமலினி. நீ ஏன் நம் கடையில் நகைகளை வடிவமைக்க டிரை பண்ணக் கூடாது ..? “

” சார் …நான் அது சம்மந்தமாக படிக்கவில்லை .பிறகு எப்படி …? “

” படிப்பை விட இதற்கெல்லாம் கற்பனைதான் தேவை கமலினி. இப்போது நிகிதாவையே எடுத்துக்கொள்.அவள் படிப்பதே ஜெம்மாலஜிதான் . ஆனால் கற்களின் விபரங்கள் ஏதாவது பேசினால் விழிக்கிறாள் “

இங்கே வந்தும் இவனுக்கு நிகிதா நினைவா …கமலினிக்கு கொஞ்சம் எரிச்சல் .வெறுமனே ‘ உம் ‘ கொட்டினாள் .மேடையின் கல்யாண சடங்குகளுக்கு கவனத்தை மாற்றினாள் .

” இந்தக் காதல் என்பது எப்படி இருக்கும் கமலினி ? எப்போது வரும் ? ” விஸ்வேஸ்வரனின் கேள்வக்கு விழித்தாள் .

” உஷ் சத்தத்தை குறைத்து பேசுங்க சார் .இவ்வளவு பெரிய ஆம்பளை காதல்னா என்னன்னு தெரியலைங்கிறதை யாரும் கேட்டால் கல்லெறிய முடிவெடுப்பாங்க”

” ஏய் …இல்லைப்பா காதல்னா என்னன்னு தெரியும் .ஆனால் அது எப்படி வருங்கிறதுதான் தெரிய மாட்டேங்குது.இந்த விசயத்தில் இதுவரை முன் அனுபவமும் ஒன்றும் இல்லை.   .ப்ளீஸ் ஹெல்ப் மீ கமலினி “

” ஓஹோ …அப்போது எனக்கு காதலை பற்றி நன்றாக தெரியும் .நான் அதில் அனுபவசாலி .அப்படியா ? “

” ம்ஹூம் …தப்பாக பேசாதே கமலினி. நான் உன்னிடம் கேட்கும் உதவி நிகிதாவின் மனநிலையை புரிந்து கொள்வதை .பெண்ணின் மனது பெண்ணற்கு தெரியும் என்பது ஒரு பாயிண்ட் . உன்னால் அடுத்தவர் மனதை துல்லியமாக அறிய முடிகிறது என்பது அடுத்த பாயிண்ட் . நீ ப்ரியம்வதாவை சமாளித்து நகை வாங்க வைத்தாயே .அப்போதே இந்த யோசனை எனக்குள. தோன்றிவிட்டது .அது மட்டுமல்ல நீ நம் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை குறிப்பாக பெண்களை மிக அழகாக புரிந்து வைத்துக் கொண்டு நகைகளை வாங்க வைக்கிறாய் .அதனால்தான் நிகிதாவை பற்றி அறிந்து கொள்ள …..அதை வைத்து நான் அவளை அப்ரூவ் பண்ண என உன் யோசனையை எதிர்பார்க்கிறேன் “

” ம் …அப்ரூவ் பண்ண …காதல் உங்கள் பிசினஸ் இல்லை சார். அதுவெல்லாம் மனதிலிருந்து தானாக வர வெண்டும் “

” கமலினி ப்ளீஸ் இது போல் அன் அபிசியலாக நாம் வெளியே மீட் பண்ணும்போதாவது ப்ளீஸ் கால் மீ விஸ்வா .இந்த சார் என்னை ஸ்வர்ணகமலத்திற்குள்ளேயே இழுத்து போகிறது . “

” அது …சரி டிரை பண்ணுகிறேன் ” மிகுந்த தயக்கத்துடன் தலையாட்டி வைத்தாள் .

” அதெப்படி எப்படி மனதிலிருந்து வர வேண்டுமா ? அதெப்படி வரும் ? எனக்கு அப்படி எதுவும் வரவில்லையே ? “

கமலினி அவஸ்தையுடன் தலையில் கை வைத்துக் கொண்டாள் .” முருகா என்னவெல்லாம் பேச வேண்டியதிருக்கிறது ? ” முணுமுணுத்தாள் .

அவள் கையை எடுத்து விட்டான. ” காதலை பற்றி பேசுவது கூட தவறா கமலினி ? “

” காதலை பற்றி காதலன் காதலிதான் பேச வேண்டும் ்நாம் ….”

” நாம் நண்பர்கள் . நண்பர்களுக்கிடையே காதல் பேசக்கூடாதா ? “

” பேசலாம்தான் . ஆனால் நான் ஒரு பெண் .நீங்கள் ஆண் .நாம் எப்படி … எ …எனக்கு சில விசயங்கள் பேச கூச்சமாக இருக்காதா ? ” சிவந்து கிடந்த அவளது முகத்தை கூர்ந்தான் .

” நான் காதல் பற்றித்தான் கேட்டேன் கமலினி. செக்ஸ் பற்றி பேசவில்லை .எதற்கு இத்தனை கூச்சம் ? “

அவனது விவரித்தலில் கமலினிக்கு ஆத்திரம் வந்த்து .” ஓ …அதைப் பற்றி கூட பேசுவீர்களோ …? “

” ஏய் .பேச்சை மாற்றாதே .பேச மாட்டேன் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தேன் …”

போடா …நீயும் உன் ப்ரெண்ஷிப்பும் …உன் வேலையும் என உதறி விட்டு போய்விடலாமா என கமலினி யோசிக்க ஆரம்பித்தாள் .ஆனால் ….




” என்ன ராஜினாமா கடிதமா ? ” விஸ்வேஸ்வரன் கிண்டலாக கேட்க …” இல்லையே .எதற்கு ராஜினாமா …?” கமலினி ரோசமாக மறுத்துக் கொண்டிருந்த போது …மணமக்களுக்கு கிப்ட் வழங்க அவர்கள் நின்ற வரிசை மேடை அருகே வந்துவிட்டிருந்த்து. தற்காலிகமாக தங்கள் வாதத்தை நிறுத்தி விட்டு இருவரும் மேடை ஏறினர் .

” ஹேய் விஸ்வா என்ன கிப்ட் இது …? உனது கிப்ட் எங்களுக்கு ஸ்பெசல் ” சுதாகர் கேட்க …

” சாரி சுதா நான் கொஞ்சம் பிசி. அதனால் இந்த வேலையை கமலினியிடம் தள்ளி விட்டேன் . இதற்குள் என்ன இருக்கிறது என்று கூட எனக்கு தெரியாது .ம் …பிரி .உங்களோடு சேர்ந்து நானும் பார்க்கிறேன் ,” விஸ்வேஸ்வரின் விவரிப்பில் மேடையில் இருந்தவர்கள் கேமெராக்கள் என சகல கண்களும் கிப்ட்டின் மேல் விழ , சுதாகரும் , ப்ரியம்வதாவும் ஆர்வத்துடன் பிரிக்க தொடங்க கமலினியின் இதயம் படபடவென துடிக்க ஆரம்பித்தது .

எல்லோருக்கும் பிடிக்க வேண்டுமே

What’s your Reaction?
+1
25
+1
12
+1
2
+1
0
+1
3
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!