Serial Stories thanga thamarai malare தங்க தாமரை மலரே

தங்க தாமரை மலரே – 14

14

ஒரு முறைக்கு இரு முறை பணத்தை எண்ணி வாங்கினாள் கனகம் . ” ம் …சரி சரி அடுத்த மாதமும் இது போல் கொடுத்து விடு ” உத்தரவு போல் சொல்லிவிட்டு உள்ளே போனாள் .

” ஏம்மா இவ்வளவு லேட் ? ” புவனா கனகம் நகர்ந்த்தும் அவளருகே வந்து கேட்டாள் .

” அங்கே எங்க கடை ஓனரை  பார்த்தேன்மா . அவரோடு பேசிக் கொண்டிருந்த்தில் கொஞ்சம் லேட்டாயிடுச்சு …”

” சரிம்மா .போனில் நீ போனசாக பணம் கிடைத்திருப்பதாக சொன்னதும் நான்தான் சந்தோசத்தில் கொஞ்சம் குரலை உயர்த்தி பேசி விட்டேன் போல கமலி . அது இவள் காதை எட்டி இப்போது வந்த பணத்திறகு ஆபத்து வந்து விட்டது …” புவனாவின் குரலில் தன்னால்தானோ எனும் வருத்தம் .

” அட நீங்க வேறம்மா  .நீங்க மச்சிக்குள்ளே போய் மறைந்து கொண்டு பேசினாலும் சித்தி அங்கே பேசியதையும் கேட்டு விடுவார்கள் . அப்படி ஒரு காது அவர்களுக்கு. பணம் நம்மிடம் இருக்கும் போது கொடுப்பதற்கென்னம்மா …? சொல்லப் போனால் அப்படி கொடுத்து விடுவதால் நமக்கே கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது .இவர்களிடம் நாம் இனாமாக வாங்கி  உண்ணவில்லையெனும் நிம்மதி …”

” இந்த மாதம் உனக்கு போனஸ் கிடைத்ததால் கொடுத்து விட்டாய் .அடுத்த மாதமும் இப்படியே கிடைக்க வேண்டுமே கமலி ….? கனகம் மாதா மாதம் வேண்டுமென்றல்லவா சொல்லிவிட்டிருக்கிறாள் …”

” அம்மா நான் வேலை பார்க்கும் கடை மிகவும் பெரிய கடை . தினமுமே நிறைய வியாபாரம் நடக்கிறது .அதனால் மாதா மாதம் எனக்கு இனசென்டிவ்வாக ஓரளவு தொகை கிடைக்க வாய்பிருக்கிறது .அதனால் கவலைபடாதீர்கள் “

” ஓ …அப்பா அன்றே சொன்னார் கமலி. உனக்கு கிடைத்திருப்பது மிகவும் நல்ல வேலையென்று .அது சரியாக போய்விட்டது .” புவனா குதூகலிக்க கமலினியின் மனதினுள் சிந்தனைகளின் தோரணங்கள் .




நல்ல நிறுவனம் …நல்ல வேலை …நல்ல எம்.டி …அவள் மனதினுள் மின்னலாக மாறி மாறி மின்னினர் பாரிஜாதமும் , விஸ்வேஸ்வரனும் .கடையின் எம்டி பாரிஜாதம் என்பது சும்மா பெயரளவிற்குத்தான் என இந்த ஒரு மாதத்தில் புரிந்து கொண்டாள் .எம்.டி என பைல்  குறிப்பிட்டு காட்டும் இடங்களில் கையெழுத்து போட மட்டுமே பாரிஜாதம் பயனபடுத்த படுகிறாள் .மற்றபடி அங்கே முழு நிர்வாகமும் விஸ்வேஸ்வரன்தான் .அவன் கை ரப்பர் ஸ்டாம்ப் பாரிஜாதம் .

சொந்த தொழிலில் கணவன் – மனைவியின் இந்த நிலையில் பெரிதாக கவலைப்பட ஏதுமில்லைதான் .ஆனால் இருவரின் சொந்த வாழ்க்கையில் …அது எந்த அளவு அந்நியோன்யமாக இருக்கிறதெனபதில் கமலினிக்கு மிகுந்த குழப்பம் இருந்தது .இன்று விஸ்வேஸ்வரனின் லவ் பேச்சை கேட்டதுமோ…மிகுந்த அதிர்ச்சி .

இவனென்ன இப்படி பேசுகிறான். …? அந்த நிகிதாவை இவன் ஏன் லவ் பண்ண வேண்டுமாம் …? காரணம் விஸ்வேஸ்வரனே சொன்னான் .

காபி சொல்லிவிட்டு அமர்ந்திருந்த போது , இந்தியும் ஆங்கிலமும் கலந்து என்னென்னவோ பேசியபடி இருந்தனர் விஸ்வேஸ்வரனும் , நிகிதாவும் .எப்போதோ பள்ளியில் படிக்கும் போது எழுதிய பிரவேஷிகா .இப்போதும் கவனித்து கேட்டால் புரியக்கூடும் .ஆனால் கமலினியால் கவனிக்க முடியவில்லை …பிடிக்கவில்லை .

” கேன் வீ ஆர்டர் சம் ஸ்நாக்ஸ் …? ” விஸ்வேஸ்வரன் பொதுவாக கேட்க , நிகிதா ” யா ..சம் ஸ்வீட்ஸ் …” என்று கொண்டிருக்கும் போது … கமலினி ” பார் வாட் ? ” என்றாள் .

நிகிதா அவளை புதிராக பார்க்க , விஸ்வேஸ்வரன் மெனு கார்டிலிருந்து தலை நிமிர்ந்து அவள் கண்களை சந்தித்தான் .கமலினி சற்றும் தயங்காது அவனை பார்த்தபடியே மீண்டும்  கேட்டாள் .

” பார் வாட் …? ” இந்த முறை கேள்வி அழுத்தமாக இருந்த்து .

” வாட் …பார் …” நிகிதா இழுக்க …” பார் அவர் ஸ்டொமக் …” விஸ்வேஸ்வரன் தனது வயிற்றை தட்டிக் காண்பிக்க நிகிதா களுக்கென்ற சிரிப்புடன் மெனுகார்டுக்கு குனிந்து கொள்ள ,இன்னமும் அசையாது நின்ற கமலினியின் பார்வைக்கு தோள்களை குலுக்கிய  விஸ்வேஸ்வரன் மெல்ல அவள் புறம் சரிந்து முணுமுணுத்தான் .

” பார் மை பிசினஸ் “

அவனது தொழில் ….?ஆம் .அந்த நிகிதா மும்பையை சேர்ந்த தொழிலதிபரின் ஒரே மகள் .அவள் அப்பாவின் தொழில் வைர வியாபாரம் . ஆஸ்திரேலியாவில் அவருக்கு சொந்த வைர சுரங்கமே இருக்கிறது .இந்த விபரங்களை காபியின் போது ஒவ்வொன்றாக மெல்ல சொன்னான் .

சோ …அதனால் …இவனுக்கு அவளை காதலிப்பது அத்தியாவசியமாகி விடுமா …? அதுவும் இவனுடைய குடும்பத்தை மறந்து …பாரிஜாதமும் , சௌபர்ணிகாவும் கமலினியினுள் வட்டமடித்துக் கொண்டிருந்தனர் .

” அதெப்படி சேகர் ராதாவை இரண்டாவதாக கல்யாணம் பண்ண முடியும் …? அவன் முதல் மனைவி விடுவாளா …? சட்டம்தான் விடுமா …? ” சங்கவி சீரியலில் சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தாள் .

” ஆமாம் பெரிய சட்டம் .பணம் வைத்திருப்பவர்களை சட்டம் என்ன செய்து விடுமாம் …? சேகரிடம் கோடி கோடியாக பணம் இருக்கிறது .அது அவனுடைய எல்லா தப்பையும் சரி செய்துவிடும் ” நியாயம் பேசிக் கொண்டிருந்தாள் கனகம்

.

மற்ற நாட்களாக இருந்தால் இந்த சித்தியெல்லாம் நியாயம் பேசுகிறாள் பாரேன் …என்றுதான் கமலினிக்கு தோன்றியிருக்கும் .இன்றோ …இதுதான் உண்மையோ …உலகம் இப்போது இப்படித்தான் பணத்தின் பின்னால் போகிறதோ  என்றிருந்தது அவளுக்கு .அந்த இரவினை தூக்கமின்றி கழித்தாள் அவள் .

” இவை நியூ மாடல் .இவற்றை முன்னால் அடுக்க வேண்டும் .இதில் இந்த பச்சை ஆரத்தை நீ இன்று அணிந்து கொள் .உன்னுடைய இந்த ஹால்ப் ஒயிட் பட்டு சாரிக்கு இந்த பச்சை மயில் ஆரம் நன்றாக பொருந்தும் …. பேச வேண்டும் கமலினி . எங்கே பேசலாம் ? ” புதிதாக வந்திருந்த வண்ணமயில் ஆரம் நகைகளை அவளுக்கு விளக்கம் சொன்னபடி இடையில்  கேட்டான் விஸ்வேஸ்வரன் .

” மிகவும் அழகாக இருக்கின்றன சார் .இந்த டிசைன்கள் .கலர்புல்லான இந்த மயில் ஆரங்கள் நிச்சயம் எல்லா பெண்களுக்கும் பிடிக்கும் ….மதியம் உணவிறகு பின் சிறிது ஓயவு கிடைக்கும் போது உங்கள் அறையில் பேசலாம் ” நகைகளை பார்த்தபடி பதில் சொன்னாள் கமலினி.

இருவரும் கடையின் நான்காவது மாடியில் நின்று கொண்டிருந்தனர் .சுற்றிலும் வாடிக்கையாளர்களும் , சேல்ஸ்பெண்களுமாக இருந்த நிலையில் பிறர் கவனம் கவராமல் வியாபாரத்தோடு இணைந்திருந்தது அவர்கள் பேச்சு .

” என் அறையிலா …? வேண்டாம் கமலினி .எனக்கு இந்த வியாபார சூழலை விட்டு வெளியே போய் பேச வேண்டும் .எங்கே பேசலாம் சொல்லு .ம்ஹூம் இந்த நாக்‌ஷி – போல்கி ஆரத்தை மூன்றாவதாக வை .கோல்டன் மயில் ஆரம் முதலிலும் , ஆனட்டிக் மயில் இரண்டாவதாகவும் இருக்கட்டும் …”

கமலினிக்கு கோபம் வந்தது .வியாபாரத்தை தவிர இவனிடம் பேச அவளுக்கு என்ன இருக்கிறதாம் ..??

அவன் சொன்ன வரிசையில் ஆரங்களை அடுக்கியபடி ” இல்லை சார் என்னால் வெளியே வர முடியாது ” அழுத்தமாக சொன்னாள் .நகைகளை விட்டு பார்வையை அவள் முகத்திற்கு ஒரு நொடி உயர்த்தியவன் மீண்டும் நகைகளுக்கு குனிந்து கொண்டான் .

” வித்தியாசமாக எடுத்துக் கொண்டாயா கமலினி …? ஒரு ஹெல்பிற்காகத்தான்மா …” தயவாய் பேசினான் .

” ம் …பார்க்கலாம் …” அவன் முகம் பார்க்காமலேயே பதில் சொல்லிவிட்டு நகை அடுக்குகளுக்கு திரும்பிக் கொண்டாள் . அவனுடன் வெளியே போவதை தவிர்ப்பதற்கான வழிகளை யோசிக்க தொடங்கினாள் .

மதிய உணவு நேரத்தில் வியாபாரம் மட்டுமன்றி ஊழியர்களும் சற்று அசந்திருந்த போது , இப்போது வெளியே அழைத்தால் என்ன செய்வது …என்ற யோசனையில் இருந்தாள் .அவளது கவலை தேவையில்லாத ஒன்று என்பது போல் கடைக்குள்  வந்தாள் நிகிதா .திடுமென அவளை கடை வாயிலில் பார்க்கவும் கமலினி நம்ப முடியாமல் பார்க்க , அவள் கமலினியை கவனிக்காமல் லிப்ட்டில் புகுந்து மாடியேறினாள் .

பத்தே நிமிடத்தில் அவளும் , விஸ்வேஸ்வரனுமாக வெளியே கிளம்பியும் போய் விட்டார்கள் .இவனென்ன பப்ளிக்காக இப்படி இன்டீசன்டாக நடந்து கொள்கிறான் …? மாடியில் மனைவியை வைத்துக் கொண்டு இன்னொருத்தியின் கை பிடித்துக் கொண்டு  ஊர் சுற்ற  போவானா …?

பாரிஜாத்த்திறகு இது தெரியுமா …? தெரியாதா …? இந்த விசயத்தை பாரிஜாத்த்தின் காதுகளுக்கு கொண்டு போக கமலினி முடிவெடுத்த போது  , பாரிஜாத்த்திடமிருந்தே அழைப்பு வந்தது .

” விஸ்வா வெளியே கிளம்பி போய்விட்டார் தானே கமலினி …? “

” ஆமாம் மேடம் .அவர் …வந்து …அந்த …பெண்ணுடன் …” கமலினி தடுமாற பாரிஜாதம் அவளை கவனிக்கவில்லை .




” நாமும் கொஞ்சம் வெளியே போய் வரலாம் வா கமலினி “

” எங்கே மேடம் ..? “

” மலைக்கோவிலுக்கு …”

இந்த மத்தியான வெயிலில் எதறகு மலைக்கோவிலுக்கு …குழம்பியபடி உடன் போன கமலினிக்கு பாரிஜாதம் மலைக்கோவிலின் தாயுமானவர் சந்நிதியில் வைத்து சந்தானபாரதியை அறிமுகம் செய்து வைத்தாள் .

அந்த சந்தானபாரதியை பார்த்த உடனேயே கமலினிக்கு அடையாளம் தெரிந்தது .இவனதான் அன்று அரை இருளில் மறைவாக அமர்ந்து கொண்டு பாரிஜாத்த்துடன் பேசிக் கொண்டிருந்தவன் .

மதிய வெயிலில் கொதித்துக் கொண்டிருந்த கோவில் வளாகமோ …என்னவோ…கமலினிக்கு உடல் வியர்த்து தலை சுழன்றது .




What’s your Reaction?
+1
19
+1
16
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!