Serial Stories thanga thamarai malare தங்க தாமரை மலரே

தங்க தாமரை மலரே – 13

13

” ஒரு வேளைக்கு ஒரு ஆளுக்கு சாப்பாட்டுக்கு எங்வளவு செலவாகுது தெரியுமா …? காய்கறி , அரிசி விலை தெரியுமா ..? மூட்டை அரிசி வாங்கிப் போட்டாலும் பத்து நாளில் காலியாயிடுது .அப்படி எவ்வளவைத்தான் கொட்டிக்குதுங்களோ …? “

கனகத்தின் கூக்குரலில் கண்களை முட்டிய நீரை உள்ளே இழுக்க முயன்றபடி பாத்திரங்களை தேய்த்துக் கொண்டிருந்தாள் புவனா .பாத்திரம் தேய்க்கும் வேலைக்காரி வரவில்லையென்றால் அந்த வேலையும்  புவனா தலையில்தான் .




”  வக்கனையா ஓசியில  வாங்கி வாங்கி தின்னுட்டு,  வர்ற பணத்தையெல்லாம் மனசார அப்படியே முந்தானைல முடிஞ்சு வச்சுக்குதுங்களே ….”

இப்படி ஒரு மனுசியால் பேச முடியுமா ..? புவனாவிற்கு மதியம் உண்ட உணவு வயிற்றுக்குள்ளிருந்து வெளியேறுவது போலிருந்த்து. சொரணை கெட்டு இன்னமும் இந்த வீட்டில் உணவுண்ண வேண்டுமா …என மனம் தவித்தது .

” இவ்வளவு பேசுறேன் கொஞ்சமாவது சூடு சொரணை வருதான்னு பாரேன் .தின்னதுக்கு நாலு ருபாய் தூக்கி தர மனசு வரல்லியே …”

” எதுக்காக பணம் தரணும் சித்தி ? ” கேள்வி பின்னால் இருந்து வர திரும்பி பார்த்து அதிர்ந்தாள் கனகம் . இவள் எப்படி அதற்குள் வந்தாள் ..?

” அம்மாவிடம் எதற்காக பணம் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் ? “

” அ ….அது …வ…வந்து …சு …சும்மா ” கனகம் தடுமாறினாள் .அந்த குடும்பத்தில் அவள் புவனாவிடம் மட்டும்தான் இப்படியெல்லாம் தான் தோன்றித்தனமாக நா கொடுக்கை சுழட்ட முடியும் .வேலாயுத்த்திடமோ , கமலினியிடமோ இப்படி நேரடியாக பேசி விட முடியாது . எப்போதாவது வந்து ஒரு நாளோ …இரண்டு நாட்களோ தங்கி விட்டு செல்லும் வெற்றிவேலனிடமோ பேசவே முடியாது .கனகம் வாயை திறந்தாளே அவன் கண்களை உருட்டி ஒரு முழி முழிப்பான் .இவளுக்கு கை கால்களெல்லாம் நடுங்கும் .

” ஆம்பளை பயடி அவன் .அவன்கிட்ட ஏதாவது தகராறு இழுத்து கையை கிய்யை நீட்டிட்டான்னா என்னலெல்லாம ஒன்றும் செய்ய முடியாது ….” குணசீலன் முன்னெச்சரிக்கை போல் மனைவியிடம் என்னை எதிர்பார்க்காதே எனச் சொல்லி வைக்க கனகத்திற்கு வெற்றிவேலனை பார்த்தாலே அர்ச்சுன்ன் பெயர் பத்துதான் .

வேலாயுதமோ தெருவில் போகும் எதுவோ …எதைப் பார்த்தோ கத்துகிறது ரீதியில் கனகத்தை கடந்து செல்பவர் .கமலினி அண்ணனை போல் மிரட்டலோ , அப்பாவை போல் தவிர்த்தலோ , அம்மாவை போல் அடங்கலோ இல்லாமல் நேரடியாக முகத்திற்கு முகம் பேசிவிடுவாள் .தெளிவாக நியாயம் சொல்லும் அவளது பாயிண்டுகளுக்கு கனகத்திற்கு பதில் சொல்ல தெரியாது .

அத்தோடு தனது நியாயங்களை தயங்காமல் சொந்தங்களிடமும் கமலினி பேசி விடக் கூடியவள் என்பதினால் , தொழிலில் நொடித்துப் போன மச்சினர் குடும்பத்திற்கே உணவு , உறைவிடம் தந்து ரட்சித்து வருவதாக காட்டி வரும்  அவளது ரட்சகி  வேசம் உறவினர் முன்பு கலைவதை விரும்பாததால் கமலினியிடமும் அவள் அதிகம் வம்பு வைத்துக் கொள்ள மாட்டாள் .

இவர்கள் மூவர் போக , அந்த குடும்பத்தில் எஞ்சிய புவனாவிடம்தான் அவளது அத்தனை தாக்குதல்களும் இருக்கும் .இப்போதும் அப்படி ஒரு மறைமுக தாக்குதலின் போது திடீரென கமலினி வந்து நிற்கிறாள் .

” பிச்சையா ….? “

அதிரடியாய் முகத்தில் வந்து மோதிய கேள்வியில் வெகுண்டாள் கனகம் .

” பிச்சையா …? யார் …யாரை சொல்கிறாய் …? ” பாய்ந்தாள்

” ஈசி சித்தி .ஏதோ நாலு ரூபாய் வேண்டிமென்று கேட்டுக் கொண்டிருந்தீர்களே , வாசல் பிச்சைக்காரனுக்கு போட, உங்களிடம் இல்லாமல் அம்மாவிடம் சில்லரை கேட்டுக் கொண்டிருந்தீர்களா என்று கேட்டேன் …”

” ஆ …ஆமாம் .அப்படித்தான் …”

” அம்மா அந்த சில்லறையை கொடுத்துட்டாத்தான் என்னம்மா …? இந்தப் பிச்சைக்காரங்க தொல்லைதான் நேரம் , காலம் இல்லாமல் தாங்க முடியாமல் இருக்குதே .சில நேரம் வீட்டிற்குள்ளேயே கூட வந்துடுதுங்க …” வியர்வைக்கு வீசுவது போல் கமலினி கையை ஜாடையாக்க , கனகத்திற்கு உடல் எரிந்தது .

” ஏய் யாரைடி ஜாடை பேசுற …? “

” நீங்க சொல்லிட்டிருந்தீங்களே அந்தப் பிச்சைக்காரனை சொன்னேன் சித்தி …” சொன்னபடி தனது பேக்கை திறந்து ஐந்து ருபாய் நாணயம் ஒன்றை எடுத்து நீட்டினாள் .

” பிச்சை சித்தி .கொண்டு போய் போடுங்க …”

கனகம் ரௌத்ரமாகி நாணயத்தை தட்டி விட்டாள் .” என்னங்கடி அம்மாவும் , மகளும் நக்கல் அடிக்கிறீங்களா …? “

” உங்களை மாதிரி பரோபகாரியை நக்கல் செய்ய முடியுமா சித்தி ? “

” நான் ஒண்ணும் பரோபகாரி இல்லைடி .எனக்கும் குடும்பம் , பிள்ளைங்க இருக்குது .எங்களுக்கும் செலவு இருக்குது .உங்க குடும்பத்தை மாதிரி நாங்கள்  எல்லோரும் சம்பாதிக்கவில்லை .என் புருசன் ஒரே ஒருத்தர் இத்தனை பேருக்கும் சேர்த்து சம்பாதித்து போடுகிறார் . ஒரு ஆள் சம்பாதிக்க இரண்டு குடும்பம் உட்கார்ந்து தின்றால் என்னாவது …? எங்கே போவது …? “

” இப்போது உங்களுக்கு என்னதான் வேண்டும் சித்தி …? “




” உன் அண்ணன் மாதா மாதம் தரும் பணம் பற்றாது எனக்கு .இன்னமும்  பணம் வேண்டும் …” உறுதியாக நின்றது கனகத்தின் குரல் .

கமலினியின் மனம் கசந்து வழிந்த்து .” எவ்வளவு வேண்டும் …? “

” உன்னிடம் எவ்வளவு இருக்கிறது …? “

” சித்தி …என்னிடம் இருப்பதன் விபரம் உங்களுக்கு தேவையில்லாதது . உங்களுக்கு வேண்டியதை  மட்டும் சொல்லுங்கள் …”

” எனக்கு …” அவசரமாக யோசித்த சித்தியை வெறித்தாள் .புவனா வேண்டாம் என்பது போல் கமலினியை பார்க்க அவள் அமைதியாக இருக்கும்படி அன்னைக்கு  ஜாடை காட்டினாள் .

” உனக்கு இன்று எவ்வளவு கிடைத்தது …? ” கனகத்தின் கேள்வி கமலினி எதிர்பார்த்ததுதான்.

” எதைக் கேட்கிறீர்கள் …? “

” ஏதோ …நிறைய நகை விற்றாயாமே …அதில் எவ்வளவு கிடைத்தது …? “

கமலினி குமுறிய மனதை அடக்கினாள் .” உங்களுக்கு எவ்வளவு வேண்டும் …? “

” இன்னுமோர் ஐந்தாயிரம் …” கேட்டபடி கனகம் கமலினியின் முகத்தை உற்றுப் பார்த்து அவள் கையிருப்பை அறிய முயல …

“இப்போதே ஏ.டி.எம் மில் போய் எடுத்து வந்து தந்து விடுகிறேன் …” தன் ஹேன்டபேக்கை வைத்து விட்டு அப்படியே வெளியேறினாள் .

அன்று அவளுக்கு நகை கடையில் போன மாதம் பார்த்து கொடுத்த அந்த கோடிக்கணக்கான வியாபாரத்திற்கான இன்சென்டிவ் கிடைத்திருந்த்து .இது அவள் எதிர்பாராத்து . அன்று மாலை அவளை அழைத்த பாரிஜாதம் அவளுக்கு இன்சென்டிவ் கொடுக்க போவதாக அறிவித்தாள் .

” அக்கௌன்ட் நம்பர் சொல்லு கமலினி .பணம் மாற்றி விடுகிறேன் ” தன் மொபைலை எடுத்தபடி கேட்டாள் .கமலினி சொல்ல அப்பொழுதே அவள் மாற்றி விட்ட பணத்தின் எண்ணிக்கையில் மலைத்து நின்று விட்டாள் கமலினி .

” என்ன மேடம் …இவ்வளவு பணமா …? “

” இது நீ போன மாதம் பார்த்துக் கொடுத்த பிசினஸ்களுக்கு இரண்டு பர்சென்ட் இன்ச்சென்டிவ் கமலினி .இது நம் கம்பெனி ரூல்ஸ் .தொகை பெரிதாக தெரிந்தால் நீ பார்த்திருக்கும் வியாபாரமும் பெரியது என்று பொருள் …” புன்னகைத்தாள் .

கமலினியால் நம்பவே முடியவில்லை .அவளது விரிந்த விழிகளை பார்த்த பாரிஜாதம் ” சம்பளத்தை விட இது போன்ற இன்சென்டிவ்கள் நம்மை ரொம்பவே சந்தோசப்படுத்தும் கமலினி .இதனை நீ இன்று உன் குடும்பத்தோடு கொண்டாடு. இன்று உனக்கு பெர்மிசன் தருகிறேன் .சீக்கிரம் கிளம்பு ” மென் புன்னகையோடு  கூறினாள் .

தலையசைத்து வெளியேறிய கமலினி அங்கிருந்தே புவனாவை போனில் அழைத்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டாள் . அம்மா போனில் என்னுடன் பேசியதை சித்தி ஒட்டுக் கேட்டிருக்கிறாளென புரிந்து கொண்டாள் கமலினி .எவ்வளவு பணம் கிடைத்திருக்கறதென தெரிந்து கொண்டு அதற்கேற்ப பணம் பிடுங்க  ரொம்பவே முயன்றாள் …முடியாததால் கடைசியாக ஐந்தாயிரமாவது வாங்கிக் கொள்வோமென நினைத்து கேட்டுவிட்டாள் .

வயிற்றுக்கு பற்றியும் பற்றாமலும் மூவருக்கும் இவர்கள் போடும் சாப்பாட்டிற்கு மாதம் இருபதினாயிரமா …? கமலினிக்கு வயிறெரிந்த்து. ஆனால் அவர்களுக்கு வேறு வழியில்லை . பெருமூச்சுடன் பணத்தை எடுத்து எண்ணியபடி வெளியே வந்தவள் விஸ்வேஸ்வரனை பார்த்தாள் .

ஏ.டி.எம்க்கு  அருகே இருந்த பெரிய மாலில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தான் .அவன் மட்டும் இல்லை . அவனுடன் ஒரு அழகான பெண்ணும் இருந்தாள் .மாலின் கண்ணாடி கதவை திறந்தபடி இருவரும் அருகருகே தோளுரச  வெளியே வந்த போது கமலினிக்கு சட்டென தோன்றியது உடல் , உயரம் , நிறமென எல்லாவற்றிலும் இருவரும் பர்பெக்டான ஜோடி என்பதுவே …

ஆறடிக்கும் அதிகமான உயரமுடைய விஸ்வேஸ்வரனின் அருகே பாரிஜாதம் மிக குள்ளமாக தெரிவாள் .கமலினி பெண்களின் சராசரி உயரத்தை விட சில இஞ்சுகள் அதிக உயரமுடையவளே . ஆனாலும் அவனருகில் நிற்கும் போது தான் மிகவும் குள்ளமென அவளுக்கு தோன்றும் .நேரடியாக அவன் கண்களை பார்க்க வேண்டுமென்றால் தலையை அண்ணார்ந்தாக வேண்டும் எனும் நிலையே அவளுக்கு வரும் .

ஆனால் இதோ இந்தப் பெண் கிட்டதட்ட அவன் தோளை தாண்டி வளர்ந்திருந்தாள் .எளிதாக அவன் கண் பார்த்து பேசினாள் .வளைவுகளும் , வனப்புமாக சுற்றியிருந்தோரை வசீகரித்தாள் .மாலின் படி இறங்குகையில் விஸ்வேஸ்வரனின் கை இயல்பாக அவள் தோளை வளைக்க கமலினியின் மனம் சுருங்கியது …யார் இவள் …?

வெற்றிடமாகி விட்ட மனதுடன் அவர்களை பார்த்தபடி அப்படியே அவள் நின்று விட்ட பொழுதில் விஸ்வேஸ்வரன் அவளை பார்த்துவிட்டான் .

” ஹாய் கமலினி …” அங்கிருந்தே கையாட்டினான் .பின்பே தன் நிலைக்கு திரும்பிய கமலினி தலையை உலுக்கிக் கொண்டு ,பரவாயில்லை .நீங்கள் கன்ட்டினியூ பண்ணுங்கள் , நான் கிளம்புகிறேன் …ஜாடை காட்டிக் கொண்டிருக்கும் போதே விஸ்வேஸ்வரன் அவளை நோக்கி நடந்து வர தொடங்கினான் .உடன் அந்த பெண்ணுடன் …

” ஷாப்பிங் வந்தாயா …? “

” ம் …ஆமாம் …” தலையசைத்தவளின் கண்கள் அந்தப் பெண்ணை மொய்க்க …

” இது நிகிதா . மை ப்ரெண்ட் …” அறிமுகம் செய்தான் .

” நிகி…இது கமலினி .மை ப்ரெண்ட் ” இந்த அறிமுகத்தில் கமலினிக்கு ஆச்சரியம் .

” ஹாய் …” கை குலுக்கிய நிகிதா மிக மென்மையாக இருந்தாள் . அழகாக புன்னகைத்தாள் .

” ஒரு காபி சாப்பிடலாமா ? ” எதிரேயிருந்த காபி ஷாப்பை விஸ்வேஸ்வரன் காட்ட , நிகிதா தலையசைக்க கமலினி மறுத்தாள் .

” எனக்கு வேலை இருக்கிறது சார் .நீங்கள் சாப்பிடுங்கள் நான் வருகிறேன் “




” பரவாயில்லை .பைவ் மினிட்ஸ்தான் .வா …” என்ற போது அவனது குரல் இறுக்கமாகியிருந்த்து.ஏனோ அந்தக் குரலை மறுக்க கமலினிக்கு தயக்கமாக இருந்தது .

மூவருமாக காபி ஷாப்பினுள் நுழையும் போது சற்று பின் தங்கி அவளிடம்  ” ப்ரெண்ட் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன் .சார் என்கிறாயே …” கோபம் அவன் குரலில் .கமலினி புரியாமல் அவனை ஏறிட …

” சரி …சரி …முட்டைக் கண்ணை உருட்டாதே .உன்னை இங்கே உடன்  அழைத்ததற்கு காரணம் இருக்கிறது.  நிகிதாவை நன்றாக கவனித்துக்கொள் .இவள் சம்பந்தமாக எனக்கு உன் உதவி வேண்டியதிருக்கும் “

” என்ன உதவி …? “

” நான் இவளை லவ் பண்ண வேண்டும் .அதறகு நீ ஹெல்ப் செய்ய வேண்டும் ” விஸ்வேஸ்வரன் சாதாரணமாக சொல்ல கமலினிக்கு தலை சுற்றுவது போலிருந்த்து.




What’s your Reaction?
+1
22
+1
17
+1
3
+1
2
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!