Serial Stories Sollamal Thotu Sellum Thenral சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் – 32

32

எனதல்லாத ஒன்றென உன்னை
நினைக்க தொடங்கிய நாள் முதல்
அலறி சிரிக்கின்றன சுவர் கண்ணாடிகள்
உன்னை மட்டுமே பிரதிபலித்தபடி




“உங்கள் வீட்டிற்கு கிளம்பி விட்டீர்களா அண்ணி..?” மைதிலி சித்ரலேகா அறை வாசலில் நின்று கொண்டு மெல்ல கேட்டாள்..
சித்ரலேகா அவசரமாக கட்டில் மேல் பரப்பி வைத்திருந்த தனது பேக்குகளை மூடினாள். ஒரு பேக் ஜிப் மூட முடியாமல் பிதுங்கியபடி இருக்க, அதன் மேல் ஒரு துண்டினை போட்டு மூடினாள்..
“ஆ.. ஆமாம் அண்ணி.. என்ன விசயம்..? உள்ளே வங்களேன்..”
“சும்மா உங்களுடன் பேசலாம்னு வந்தேன்..” அறையினுள் நுழைந்த மைதிலிக்கு உட்கார இடமில்லாமல் கட்டில், சோபா, சேர் எல்லாம் சித்ரலேகாவின் பேக்குகளினால் நிரம்பியிருந்தது..
“அது.. சும்மா அம்மா நாலைந்து புடவை கொடுத்தாங்க கொஞ்சம் வெள்ளி சாமான், என் ராஜாக்குட்டிக்கு சாப்பிட தட்டு, குடிக்க டம்ளர்னு அவ்வளவுதான்.. அதைத்தான் எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன்..”
பிறந்த வீட்டிலிருந்து தான் எடுத்துப் போகும் சாமான்களை தன் அண்ணன் மனைவிக்கு காட்ட விரும்பவில்லை அவள்.. இரண்டு பேக்குகளை எடுத்து கட்டிலுக்கடியில் தள்ளினாள்..
“உட்காருங்க அண்ணி..” இப்போது கிடைத்த இடத்தைக் காட்டினான்.. அவள் மறைக்க நினைத்த விசயத்தை தான் கவனிக்கவில்லையெனக் காட்டிக் கொண்டு அமர்ந்தாள் மைதிலி.
“அண்ணி கொழுந்தனையும் வந்தனாவையும் கவனித்தீர்களா..?”
“யாரை கல்யாண் அண்ணனையும் வந்தனாவையுமா.. அவர்களுக்கு என்ன..?”
“வந்து அவர்கள்.. வந்து.. சந்தோசமாக.. இருக்கிறார்களா..?” எப்படி சொல்ல எனத் தெரியாமல் மைதிலி தடுமாறினாள்..
“ஏன் அவர்களுக்கென்ன.. நல்லாத்தான் இக்கிறார்கள்.. வந்தனா அம்மா கொடுத்த பாட்டியோடு நகைங்களை இன்னமும் அம்மாகிட்ட திருப்பிக் கொடுக்கலை தெரியுமா..? அம்மா கிட்ட சொன்னால் கண்டுக்க மாட்டேங்கிறாங்க.. நீங்க அம்மாகிட்ட ஒரு வார்த்தை சொல்லுங்களேன்..”
மைதிலிக்கு வெறுப்பு வந்தது.. சை என்ன பெண்கள்..? எந்நேரம் நகை, புடவை என்று.. பல்லைக் கடித்தாள்..




“அண்ணி நான் அதை சொல்ல வரவில்லை.. வந்தனா முகத்தை பார்த்தால் கொஞ்சம் கவலை தெரியவில்லை..”
“ஏனோ..? அவளுக்கு எதற்கு கவலை..? நல்லா புளியங்கொம்பாய் பிடித்திருக்கிறாள்.. பட்டும், நகையும் வந்து குமியும்.. வாசப்படியே விட்டு இறங்கும் போது காரில் கால் வைக்கலாம்.. இதுக்கு மேல் என்ன வேண்டும்..?”
“என்ன அண்ணி.. இது மட்டும் ஒரு பொண்ணுக்கு போதுமா.?”
“வேறு என்ன வேண்டும்..?”
“வாழ்க்கையில் நிம்மதி வேண்டாமா..? கணவனிடம் சந்தோசம் வேண்டாமா..?”
“அதற்கும் தான் அவளுக்கு என்ன குறைச்சல்..?”
“அண்ணி அவர்கள் முதலிரவு நல்லபடியாக நடந்தது போல் தெரியவில்லை.. கணவன் மனைவிக்குள் ஒட்டுதல் தெரியவில்லை..”
“அப்படியா சொல்கிறீர்கள் நான் கவனிக்கவில்லையே..”
“என்ன அண்ணி நீங்கள் பெரியவர்கள்.. இதையெல்லாம் கவனிக்க வேண்டமா..?”
“பெரியவளா.. எனக்கு அப்படி என்ன வயதாகி விட்டது.. உங்களைவிட இரண்டே வயதுதான் எனக்கு கூடுதல்.. என் ராசாக்குட்டி பிறந்து விட்டதால் எனக்கு வயசாயிடுச்சுன்னு நினைக்க வேண்டாம்..” தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த தனது பத்து மாத மகனைப் பார்த்தபடி சண்டை போடும் பார்முக்கு வந்தாள் சித்ரலேகா.
“ஐயோ அண்ணி.. நான் உங்களைப் போய் அப்படி சொல்வேனா..? நீங்கள் இன்னமும் ஸ்கூல் போகும் சின்னப்பொண்ணு போல் இருக்கிறீர்கள்.. உங்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறதென்றால் யாரும் நம்ப மாட்டார்கள்..” கூசாமல் ஐஸ் வைத்தாள்..
சித்ரலேகா முகம் மலர்ந்தாள்.. இன்னமும் இரண்டு பேக்குகளை கட்டிலுக்கடியில் தள்ளிவிட்டு இப்போது கிடைத்த இடத்தில் தான் அமர்ந்து கொண்டாள்..
“ம் சொல்லுங்க..”
“அண்ணி நேற்று காலையில் அவர்கள் முதலிரவு அறைக்குள் போய் பார்த்தேன்.. வைத்த பழங்கள், இனிப்புகளெல்லாம் அப்படியே இருந்தது.. பாலும் அப்படியேதான் இருந்தது.. அவள்- வந்தனாவைப் பார்த்தாலும்.. வந்து முதலிரவு முடிந்த பெண் போல் தெரியவில்லை…”
“அப்படியா.. இதை அம்மா, அத்தை எப்படி கவனிக்காமல் விட்டார்கள்..?”
“அதுதான் தெரியவில்லை அண்ணி, அவர்கள்.. பெரியவர்களிடம் பேச ஒரு மாதிரி இருந்தது அதுதான் உங்களிடம் சொல்ல வந்தேன்..”




“அண்ணி, இந்த வந்தனா இருக்கிறாளே, அவள் ஏழுருக்கு நாட்டாமை பண்றவ.. கல்யாண் அண்ணன் அப்பாவி, இவள் அவனை இழுத்து தூக்கி இடுப்புல வச்சுக்கிடுவா.. அவ சாமர்த்தியம் அம்மா, அத்தைக் கெல்லாம் தெரியும்.. அதுதான் அவளைக் கவனிக்காமல் இருந்திருப்பாங்க..”
“இருந்தாலும் நாம் ஒரு வார்த்தை கேட்கனுமில்ல அண்ணி.. எனக்கென்னவோ வந்தனா இந்தக் கல்யாணத்தினால் சந்தோசமாக இல்லைபோலன்னு தோணுது..”
“கல்யாணத்துக்கு முன்னால் அத்தனை சேலை, இத்தனை நகைன்னு கேட்டு கேட்டு வாங்கி போட்டு போட்டு சந்தோசப்பட்டாளே, அவளுக்கா கல்யாணத்தில் இஷ்டமில்லைன்னு சொல்றீங்க..?”
“அது வேறு அண்ணி.. அவள் சின்னப் பிள்ளைத்தனமாக ஏதோ முடிவெடுத்துட்டு இப்போது முழிக்கிறாளோ என்று எனக்கு இருக்கிறது..”
“இதனை நீங்கள் அவளிடமே கேட்டு விட வேண்டியதுதானே..?”
“கேட்கலாம்.. ஆனால் எப்படி கேட்பதென்றுதான் தெரியவில்லை..”
“இதில் என்ன தயக்கம்..? வாங்க நாமளே கேட்டுவிடுவோம்..” சித்ரலேகா உடனே கிளம்பிவிட்டாள்.
வந்தனா அவளது அறையில் கட்டிலில் படுத்துக் கொண்டு விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்.. இரண்டு பேரும் ஒன்றாக உள்ளே வரவும் முதலில் விழித்தவள் பிறகு சந்தேகமாக பார்த்தாள்..
“என்ன விசயம்..?”
“சும்மாதான் வந்தனா.. உன்கிட்ட பேசலாம்னு வந்தோம்..” சித்ரலேகா வந்தனாவின் தோள் பற்றி அவளை எழுப்பி உட்கார வைத்து விட்டு கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள்..
“ம் சொல்லு வந்தனா.. அப்புறம் எல்லாம் எப்படி போகுது..?”
“எது..?”
“அதுதான்மா உன்னோட லைப்.. மேரேஜ் லைப்.. எப்படி போகுது..?”
“நல்லாத்தான் போகுது.. ஏன் கேட்குறீங்க..?”
“அண்ணி கேட்டுக்கோங்க அண்ணி.. நல்லாத்தான் போகுதாம்..” சித்ரலேகா பட்டென போட்டு உடைக்க வந்தனா மைதிலியை முறைத்தாள்..
“இதெல்லாம் உன் வேலையா..? உனக்கு இப்போ என்ன தெரியனும்..?”
“ஏய் அண்ணியை எதற்குடி முறைக்கிறாய்..? எனக்கு பதில் சொல்லு.. அண்ணனும் நீயும் சந்தோசமாக இருக்கிறீர்களா..?” பட்டென நேரடியாகக் கேட்ட சித்ரலேகாவை மைதிலி ஆச்சரியமாக பார்க்க வந்தனா கோபமாக பார்த்தாள்..




“அதைப் பற்றி உனக்கு என்னடி..? என் பெர்சனல் விசயங்களில் நீ ஏன் தலையிடுகிறாய்..?”
“இது உன் சம்பந்தப்பட்டது மட்டும் இல்லை.. என் அண்ணனின் வாழ்க்கையும் இருக்கிறது.. அத்தோடு நம் குடும்ப கௌரவமும் சேர்ந்து இருக்கிறது.. நான் கேட்கத்தான் செய்வேன்..”
“உனக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை..”
“வந்தனா உன் நன்மைக்காகத்தான் நாங்கள் இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம்.. இப்படி எடுத்தெரிந்து பேசினால் எப்படி..?” மைதிலி அதட்டினாள்..
“என் வாழ்க்கையை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.. நான் பார்த்துக் கொள்வேன்.. ஏய் மைதிலி உன்னோடு போட்ட சவாலில் நான் ஜெயித்து விட்டதால் என்னை ஏதாவது பொய் காரணம் சொல்லி வீட்டை விட்டு அனுப்ப நினைக்கிறாயா..?”
“சவாலா..? அது என்ன சவால்..?” சித்ரலேகாவின் குரலில் சுவாரஸ்யம் கூடியிருந்தது..
“சித்ரா இவள் என்னை இந்த வீட்டிற்குள் இருக்க விடாமல் வேறு வீட்டிற்கு விரட்டுவேன் என்று சவால் விட்டாள் தெரியுமா..? ஆனால் அதில் நான் ஜெயித்து விட்டேன்.. உன் அண்ணனை கல்யாணம் செய்து கொண்டு இங்கேயே வந்துவிட்டேன்.. அது பொறுக்க முடியாமல் ஏதேதோ என்னைப் பற்றிக் கதை சொல்லிக் கொண்டிருக்கிறாள்..” வந்தனா தன் பக்க ஆதரவிற்காக மாமன் மகளை இழுத்தாள்..
“என்ன அண்ணி நீங்கள் இப்படி செய்யலாமா..? இது உங்களுக்கே நியாயமா..?” சித்ரலேகா குரல் உயர்த்த மைதிலி குழம்பினாள்..
“இப்படி ஒரு அருமையான திட்டம் வைத்திருக்கிறீர்கள்.. முன்பே என்னிடம் சொல்லியிருக்கலாமே.. நானும் உங்களுக்கு உதவி இருப்பேன்… உங்கள் எண்ணமும் பலித்திருக்கும், இப்போது பாருங்கள் என்னவெல்லாம் நடந்து விட்டது..” சித்ரலேகா கன்னத்தில் கை வைத்துக் கொண்டாள்..
“ஏன்டி உனக்கு கொழுப்பா..?” வந்தனா சித்ரலேகாவை கொட்ட அவள் பதிலுக்கு கிள்ளினாள்..
“உனக்குத்தான்டி கொழுப்பு, கண்டபடி சபதமெல்லாம் போட்டு கல்யாணம் செய்து கொண்டு இப்போது என் அண்ணனின் வாழ்க்கையை கெடுத்துக் கொண்டிருக்கிறாய்..”
“நான் இல்லைடி.. உன் அண்ணன்தான் என் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறார்..”
“நீ முதலில் ஒழுங்கான பொண்டாட்டியாக இருடி..”
“நீ முதலில் உன் வீட்டிற்கு கிளம்பிப் போ.. இங்கே உனக்கு என்ன வேலை..?”
“அடியேய் என்னையா போகச் சொல்கிறாய்..? உன்னை நான் வீட்டை விட்டு விரட்டாமல் விடமாட்டேன்.”
சித்ரலேகாவின் வார்த்தைகள் வந்தனாவினுள் தாக்கத்தை உண்டாக்க, அவள் கண்கள் கலங்க ஆரம்பித்தது.. அப்போது அறை வாசலுக்கு போன அவளது பார்வை விரிந்தது..
“பரசு..” கத்தியபடி கூடத்திற்கு ஓடினாள்..
“என்ன அண்ணி இப்படி பேசிவீட்டீர்கள்..?” மைதிலி கேட்க..
“இவளுக்கெல்லாம் இப்படித்தான் பொட்டில் அடித்தது போல் பேசனும் அண்ணி இல்லைன்னா மூளையில் ஏறாது.. அங்கே பாருங்கள் கள்ளிக்கு கண்ணீர் கடைக்கண்ணுலன்னு சொல்வாங்க.. என்னமா நடிக்கிறாள் பாருங்க..” சித்ரா நொடித்தாள்..




வந்தனா கூடத்தில் பரசுராமனின் கையை பிடித்துக் கொண்டு தேம்பிக் கொண்டிருந்தாள்..
“பரசு மைதிலியும், சித்ராவும் சேர்ந்து என்னை வீட்டை விட்டு போன்னு சொல்றாங்க..”
அடிப்பாவி.. என்றிருந்தது இரு பெண்களுக்கும்..
“அண்ணி இனி நாமளும் களத்தில் இறங்கலைன்னா சரிபட்டு வராது.. இப்போ என் ஆக்ட்டை பாருங்க..” சித்ரலேகா மூக்கை உறிஞ்சி கண்களை கசக்கிக் கொண்டாள்..
“அண்ணா..” நாடகபாணியில் கைகளை விரித்துக் கொண்டு, அழுகை குரலோடு அண்ணனிடம் ஓடினாள்..
“இரண்டு நாள் அண்ணா.. இரண்டே இரண்டு நாள் அதிகமாக இங்கே இருந்துவிட்டேன்.. அதற்கு இவள் எப்படியெல்லாம் பேசுகிறாள் தெரியுமா..? வந்த வேலை முடிந்து விட்டால் அவரவர் இடத்தை பார்த்து போக வேண்டியதுதானே என்று கேட்கிறாள்..”
பரசுராமன் இரு பெண்களின் புகார்களில் விழித்தான்.. விழியுயர்த்தி அறை வாசலில் நின்ற மனைவியிடம் பார்வையால் விளக்கம் கேட்க மைதிலி தோள்களை குலுக்கினாள்..
“என்னம்மா என்ன நடந்தது..?” கேட்டபடி ஆளுக்கொன்றாக தன் கைகளை பற்றி நின்றவர்களிட மிருந்து தன் கையை எப்படி உருவிக் கொள்வதென யோசித்தான்..
“இவள் என்னை உன் புருசன் வீட்டுக்கு போ என்கிறாள்..”
“இவர்கள் இருவரும் சேர்ந்து என்னை வீட்டை விட்டு விரட்ட முயல்கிறார்கள்..”
“வந்தனா அப்படி சொல்ல மாட்டாள் சித்ரா… மைதிலி நல்லபெண் வந்தனா..” இருவரையும் அவன் சமாதானப்படுத்த,
“ஓஹோ உங்க பொண்டாட்டிக்கு சப்போர்ட்டா..?” வந்தனா எகிறினாள்..
“என் புருசன் எனக்கு சப்போர்ட்.. உனக்கு சப்போர்ட் வேண்டுமானால் உன் புருசனை கூப்பிடேன்..”
மைதிலியும் இப்போது களத்தில் இறங்கிவிட பரசுராமன் அதிகமாக விழித்தான்.
“மைதிலி நான் பாவம்.. இப்படி மும்முளைத் தாக்குதல் நடத்தினால் நான் என்ன செய்வது..? யாருக்கு சப்போர்ட் செய்வது..?” மைதிலியிடம் முணுமுணுக்க அவள் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை..
“இவள் செய்யும் அநியாயத்தை என்னவென்று கேட்டுக் கொடுங்கள்..” தன் பங்குக்கு கணவனிடம் பிராது கொடுத்தாள்..
“கல்யாண் என்னைக் காப்பாற்றுடா..” பரசுராமன் அலறினான்.. அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்த கல்யாணசுந்தரம் மூன்று பெண்களிடையே விழித்தபடி நின்று கொண்டு அலறும் அண்ணனை பார்த்து திகைத்தான்..
“என்ன அண்ணா..?” ராமணின் லட்சுமணனாக அண்ணனுக்கு தோள் கொடுக்க வந்தான்..
மைதிலி பரசுராமனின் கையை பற்றியிருந்த வந்தனாவின் கையை நாசூக்காக எடுத்து விட்டு தான் கணவனின் கையோடு கை கோர்த்துக் கொண்டாள்..
“உன் ஆள் வந்தாச்சு வந்தனா.. நீ அங்கே போய் புகார் படி..”
வந்தனா திணறியபடி நிற்க.. “ஏய் போடி..” என சித்ரலேகா அவளை கல்யாணசுந்தரம் பக்கம் தள்ளிவிட அவள் இதனை எதிர்பாராது தடுமாறி கல்யாணசுந்தரம் மேல் மோதினாள்.. அவன் அவசரமாக அவளை
பற்றி நிறுத்தி நிதானப்படுத்த வந்தனா வேகமாக அவனிடமிருந்து விலகி அனைவரையும் கோபமாக முறைத்துவிட்டு வேகமாக தன் அறைக்குள் போய் விட்டாள்..
“நீ ஏன்டா நின்னு கொண்டிருக்கிறாய்..? போய் உன் பொண்டாட்டியை சமாதானப்படுத்து..” பரசுராமன் சொல்ல கல்யாணசுந்தரம் தயங்கி நின்று விட்டு பிறகு மெதுவாக அறைக்குள் நுழைந்தான்.
“ம்.. ஏதோ நம்மால் முடிந்தது.. இனி அவரவர் பாடு..” கைகளை உதறிக் கொண்ட சித்ரலேகா..




“அண்ணா நான் இன்று என் வீட்டிற்கு கிளம்புகிறேன் அண்ணா..” என அறிவித்து விட்டு தன் அறைக்கு போனாள்..
“இதென்ன ஐடியா மைதிலி..?” பரசுராமனின் ஆட்காட்டி விரல் தன் உள்ளங்கையில் அழுந்த பதிந்து கோலமிடுவதை உணர்ந்த மைதிலி அவன் கையை உதறினாள்..
“அடிப்பீர்கள் என எதிர்பார்த்தேன்..”
“எதற்கு..?”
“வந்தனா என்னைப் பற்றி கம்ப்ளைன்ட் செய்தாளே.. அப்படி அவள் பேசும் போதெல்லாம் எனக்கு தண்டனை தருவதுதானே உங்கள் பழக்கம்..” தன் கன்னத்தை தடவியபடி மைதிலி கேட்க பரசுராமனின் முகம் கறுத்தது.

What’s your Reaction?
+1
5
+1
3
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!