Serial Stories Sollamal Thotu Sellum Thenral சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் – 31

31

ஆழ்கடலுக்குள் அமிழ்த்துகிறாய்
சமுத்திர சங்குகள் சில
கால்களில் இடறுகின்றன
முதுகோடும் நண்டாய் உன்னுடனோர்
சுய மீட்பெனக்கு..




“சரிதான் மைதிலி, அதனை அப்போது பார்த்துக் கொள்ளலாம்.. நீ இங்கிருந்து போகும் போது, அதுவரை நீ என் மனைவிதானே..” தானாகவே அவளது கையை பற்றிக் கொண்டான்..
“அப்படி ஒன்றும் இல்லை.. இது மாதிரி எண்ணத்தோடு என் அருகில் வர வேண்டாம்..”
“அச்சோ இப்படி சொன்னால் எப்படி மைதிலி.. நீ என் மனைவியாக இருக்கும் பட்சத்தில்தான் உன்னால் என் தம்பி.. தம்பி மனைவியின் பிரச்சனைகளை தீர்க்கமுடியும் மறந்து விடாதே..”
பரசுராமன் தன் கைகளுக்குள் இருந்த மைதிலியின் கையை பொக்கிசம் போல் மறுகையால் பொத்திக் கொண்டான்.
“கிண்டல் பண்ணுகிறீர்களா..?”
“கிண்டலா..? உண்னையா..? எவ்வளவு உயர்வானவள் நீ.. எவ்வளவு தூய்மையான சிந்தனைகள் உனக்கு.. நம் குடும்பத்தை இந்த அளவு சீராக்க நினைக்கும் உன்னை சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தை பிரிக்க வந்தவள் என தவறாக நினைத்தேனே… அந்த எண்ணத்திற்கு நிச்சயம் எனக்கு தண்டனை வேண்டும் மைதிலி.. உன் கைகளாலேயே..”
அவள் கையை தன் கன்னத்தில் பதித்துக் கொண்டான்.. “அறிவில்லாமல் உன்னை எத்தனை தடவை அடித்திருக்கிறேன்..? இப்போது உன் முறை மைதிலி, பழிக்கு பழி வாங்கிவிடு..”
மைதிலி திகைத்தாள்.. இவன் என்ன சொல்கிறான்.. இவனை அடிக்க சொல்கிறானா..? அதெப்படி அவளால் முடியும்..? எந்தப் பெண்ணால் அவள் புருசனை.. இல்லை இல்லை.. ஒரு ஆண்மகனை கைநீட்டி அடிக்க முடியும்..? ம்ஹீம் முடியாது.. தன் எண்ணங்களைக் கூட மாற்றி நினைத்துக் கொண்டவள் தன் இயலாமையை அவனுக்கு காட்ட விரும்பவில்லை..
“இப்போதும்.. அடி வாங்குவதும் கூட உங்கள் விருப்பம்தானோ..? நீங்கள் அடி என்றால் அடித்து விட வேண்டுமா..? அடிக்கத்தான் போகிறேன்.. இப்போதல்ல.. எனக்கு தோன்றும் போது.. என் மனது வெறுப்படையும் போது, நிச்சயம் உங்களுக்கு அடி இருக்கிறது.. எதிர்பார்த்து காத்திருங்கள்..”
பரசுராமனின் கண்கள் ஒளி வீசியது.. முகம் மலர்ந்தது..
“காத்திருக்கிறேன் மைதிலி..”
பொண்டாட்டி அடிப்பேன் என்று சொன்னால் எந்த புருசனாவது சிரிப்பானா..? லூசா இவன்.. இப்போது எதற்கு இளிக்கிறான்..? வெறுப்போடு அவன் முகத்தை பார்த்த மைதிலி அப்போது தான் அதனை உணர்ந்தாள்.. அவன் எடுத்து பதித்துக் கொண்ட அவள் கை அவனது கன்னத்திலேயே இருந்தது.. இன்னமும் காலை சேவிங் முடித்திராத சொர சொரப்பான அவன் கன்னத்தை உணர்ந்தபடி அங்கேயே தங்கியிருந்த தனது உள்ளங்கையில் அதிர்ந்த மைதிலி அவசரமாக தன் கையை உதறினாள்.




“கண்டிப்பாக உங்களுக்கு அடி இருக்கிறது..” அவன் கன்னம் பதிந்த கையை தன் முந்தானையில் துடைத்துக் கொண்டாள்.. வேகமாக அறையை விட்டு வெளியேறினாள்.
“எப்போது வேண்டுமானாலும் என்னைக் கூப்பிடலாம் மைதிலி..”
பின்னால் ஒலித்த குரலுக்கு அவனை திரும்பி முறைத்தாள்..
“கல்யாண்-வந்தனாவிற்காக சொன்னேன்மா… நீ வேறு எதற்கென்று நினைத்தாய்..?” அப்பாவி வேடமிட்டான்.
“பக்கத்தில் வீட்டாட்கள், இருக்கிறார்களா.. வெளியாட்கள் இருக்கிறார்களா என்ற கவலையின்றி
பட் பட்டென்று கைநீட்டி அறைவீர்களே.. அது போன்ற ஒரு சூழலுக்காக நானே அழைக்க வேண்டுமோ.. என நினைத்துவிட்டேன்..” அவனது அப்பாவி வேடத்தை தான் வாங்கிக் கொண்டு விழி விரித்தவள் துயரம் கண்டு விட்ட அவன் முகத்தில் திருப்தியாகி வெளியே போனாள்..
“சம்பிரதாயங்களெல்லாம் சும்மா ஒரு கணக்குக்குத்தான் அண்ணி.. ஓரளவு அதனை நாம் கடைபிடித்தாயிற்று.. சாந்தி முகூர்த்தம் பெண் வீட்டில் என்பதால் நேற்று உங்கள் வீட்டில் அந்த சடங்கை முடித்தாயிற்று.. இனி என்ன..? நீங்கள் வழக்கம் போல் இங்கேயே இருக்க வேண்டியதுதானே..?” மகாராணி தன் நாத்தனாரை உரிமையுடன் அதட்டிக் கொண்டிருந்தாள்..
ஈஸ்வரி தயங்கிக் கொண்டிருந்தாள்..
“வந்தனா உங்கள் வீட்டு பெண் அண்ணி.. அவளை இங்கே விட்டு விடுகிறேன்.. நான் என் வீட்டிற்கு போய் விடுகிறேன்..”
“அதுதான் ஏன் என்கிறேன்.. இது உங்கள் பிறந்தவீடு.. இங்கேயே இருப்பதில் உங்களுக்கு என்ன தயக்கம்..?”
“இதுவரை இது என் பிறந்த வீடாக மட்டுமே இருந்தது.. இப்போது என் சம்பந்தி வீடாகவும் மாறிவிட்டது.. பிறந்த வீட்டில் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் இருக்கலாம்.. ஆனால் சம்பந்தி வீட்டில் அளவோடுதான் இருக்க முடியும்..”
ஈஸ்வரியின் நியாயம் மைதிலிக்கு மிகவும் கொடுமையாகத் தெரிந்தது.. இதென்ன சம்பிரதாயம் கணவனை இழந்து தனிமையில் இருக்கும் பெண், ஒரே மகளையும் திருமணம் செய்து அனுப்பிவிட்டு மேலும் தனிமையில் இருக்க வேண்டும் என்பது.. எந்த வகையான சாஸ்திரம்..?
மைதிலி வந்தனாவைப் பார்க்க அவள் ஒரு ஓரமாக அமர்ந்தபடி தன் கை வளையல்களை நகர்த்திக் கொண்டிருந்தாள்.. தாயை பிரியும் வேதனை அவள் முகத்தில் தெரிந்தது..
மகாராணியின் மறுப்புகளுக்கு புன்னகையோடு பதிலளித்தபடி ஈஸ்வரி தன் வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.. மைதிலி கண்களை சுற்றி கணவனை தேடி அவன் பின் வாசலில் இருப்பதை பார்த்து அங்கே போனாள்..
குடோனுக்குள் கொண்டு போகாமல் வெளியே அடுக்கப் பட்டிருந்த சில மூட்டைகளை சோதித்துக் கொண்டு நின்றிருந்தான் அவன்..
“கல்யாணம் முடிந்த கையோடு ஒருபெண் பிறந்த வீட்டை சொந்தங்களை தலை முழுகி விட வேண்டுமா..? என்ன நியாயம் இது..?” வேங்கையாய் தன் முன் நின்ற மனைவியை பார்த்ததும் விழிகளை உருட்டினான் பரசுராமன்.. கொஞ்சம் பதட்டமாக சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான்.
“மைதிலி அடிக்க போகிறாயா..?” பாவனை காட்டினான்.
மைதிலிக்கு அப்போது உண்மையாகவே அவனை அடிக்கத் தோன்றியது.. ஒற்றை விரலை அவன் முன் ஆட்டினாள்..




“கிண்டல் பேசாதீர்கள்.. நான் சீரியசாக பேசுகிறேன்..”
“ஹி.. ஹி.. சீரியசாக பேசினாலும் இந்த விரலை மடக்கி கொள்ளேன் மைதிலி.. நம் வேலையாட்கள் எல்லாரும் வரும் நேரம்..” கொஞ்சம் அசடு வழிந்தபடி பத்திரம் சொன்ன அவள் ஒற்றை விரலை மடக்கி இறக்கினான்..
போனால் போகிறதென பெரிய மனது பண்ணி விரலை மடக்கிக் கொண்ட மைதிலி, “உங்க அத்தை அவர்கள் வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள்.. இது இனிமேல் சம்பந்தி வீடாம்.. இங்கே இருக்க மாட்டார்களாம். வந்தனா விழித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள்.. என்ன நியாயம் இதெல்லாம்..?”
“மைதிலி உனக்கு என் மீது கோபம் இருப்பது தெரியும்.. அதற்காக இந்த நாட்டில் யார் என்ன தவறு செய்தாலும் அதற்கு நான்தான் காரணம் போல் என்னை அதட்டுகிறாய் பார்.. அதனை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை…” சோகம் போல் சொல்லிவிட்டு தோளில் கிடந்த துண்டினால் கண்களை ஒற்றிக் கொண்டான்..
மைதிலி எரிமலையாய் பொங்கி அவன் தோள்களை குத்தினாள்.. “விளையாடும் நேரமா இது..?”
“ஏய் அடிக்கும் முன்னால் சொல்லி விடு என்றேனே..” பரசுராமன் மேலும் அவளை வம்பிழுத்துக் கொண்டிருக்க..
“அண்ணா என்ன விசயம்னா..?” கல்யாணசுந்தரம் குடோனுக்குள்ளிருந்து வெளியே வந்து நின்றிருந்தான்.. அண்ணியின் தோளடித்தலுக்கு காரணம் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவனிடமிருந்தது..
“ஏன்டா நாங்க புருசனும் பொண்டாட்டியும் அந்தரங்கமாக ஏதாவது பேசிக்கொள்வோம்.. அடித்துக் கொள்வோம்.. அதற்கு விவரம் கேட்பாயா நீ..? சும்மாவே உனக்கு கிடைக்க வேண்டிய அடியை நான் வாங்கிக் கொண்டிருக்கிறேன்.. போடா.. உன் பொண்டாட்டி அழுது கொண்டிருக்கிறாளாம்.. போய் என்னவென்று கேளு..”
“வந்தனவா.. எதற்கு அழுகிறாள்..?”
“ஆமான்டா அதையும் என்னிடமே கேளு.. சீக்கிரம் போடா அடுத்த அடி எனக்கு விழப் போகுது..”
அண்ணனின் அலப்பறையில் சிரிப்பு வந்து விட கல்யாணசுந்தரம் வீட்டிற்குள் போனான்.
மைதிலி நறுக்கென்று பரசுராமனின் தோளில் கிள்ளினாள்..
“என்ன கலாட்டா இது..? எப்போதும் உங்களை அடித்துக் கொண்டிருப்பது போல்..”
“பொய்யா சொல்கிறேன்.. இங்கே பார்..” தன் தோள்களை கிள்ளியபடி இருந்த அவள் விரல்களைக் காட்டினான்.. மைதிலி வேகமாக கையை எடுத்துக் கொண்டாள்..
“நான் உங்களைத்தானே போய் கேட்க சொன்னேன்.. அவரை ஏன் அனுப்புகிறீர்கள்..?” அடுத்த குற்றச்சாட்டை ஆரம்பித்தாள்..
“அழுவது அவன் பொண்டாட்டிம்மா.. சமாதானம் அவன்தான் செய்ய வேண்டும்..”
“ஓ..” மைதிலி புரிதலுடன் விழி விரித்தாள்.
“இதெல்லாம் தெரிந்து கொள்ள நிறைய சூட்சுமங்கள் படிக்க வேண்டும்.. தெரிந்து கொள்கிறாயா.. சொல்லித்தரவா..?” மனைவியின் ‘டீ’ வாய் குவிந்த வாயில் குவிந்திருந்தது பரசுராமனின் பார்வை..
மைதிலி அவசரமாக தன் முகத்தை அவனிடமிருந்து திருப்பிக் கொண்டாள்.. “நான் உங்கள் அத்தையிடம் உங்களை பேசச் சொன்னேன்.” அவனை விட்டு தள்ளி நின்று கொண்டாள்..
“பேசலாம் மைதிலி வா..” அவளுக்கு கை நீட்டினான்.
“நான் எதற்கு..?” முறைத்தாள்..




“நீ பக்கத்தில் இல்லாமல் நான் எந்த வேலையை செய்திருக்கிறேன் மைதிலி..” பரசுராமன் விரல் சூப்பும் பப்பாவாக மாறியிருந்தான்..
மைதிலி பல்லைக் கடித்தாள்.. இவன் அலப்பறை தாங்க முடியவில்லையே..
“என்ன பிரச்சனை அண்ணி..?” ரவீந்தர் இப்போது குடோனுக்குள் இருந்து வந்திருந்தான்.. அவனது பார்வை சந்தேகத்துடன் இருவர் மீதும் படிந்தது..
“ம்.. அடுத்த ஆராய்ச்சி வந்தாச்சு.. உன் தளபதி.. எனக்கெல்லாம் இப்படி ஏன்னு கேட்க ஆளில்லை..” பரசுராமன் சலித்துக் கொண்டான்..
“டேய் போதும்டா அப்படி பார்க்காதே.. இங்கே இப்போது அடியும், கிள்ளலும் வாங்கிக் கொண்டிருப்பது நான் தான்..”
“அப்படியா..?” ரவீந்தரின் பார்வை மைதிலியிடம் உறுதி கேட்க, அவள் விழித்தாள்.. ரவீந்தரின் சந்தேகம் அதிகரித்தது.. குற்றல் பார்வையுடன் அண்ணன் பக்கம் பார்த்தான்.
“நம்பவில்லையென்றால் இங்கே பார்.. கிள்ளிய தடத்தை..” சற்று முன் மைதிலி அழுத்திக் கிள்ளியதால் சிவப்பாய் தனது தோளில் இருந்த இரண்டு புள்ளிகளைக் காட்டினான்..
“ஓகே கன்டினியூ..” என்றபடி மீண்டும் குடோனிற்குள் திரும்பினான்..
“பாவி இவனெல்லாம் ஒரு தம்பியா..?” பரசுராமன் வெறுத்துப் பேச மைதிலிக்கு சிரிப்பு வந்தது.. கை மூடி வாயை மறைத்தாள்..
“டேய் எங்கேடா பேகிறாய்..? இதோ இந்த மூட்டைகளெல்லாம் ஈரமாக இருக்கிறது.. பிரித்து களத்தில் காய வைக்க சொல்லு.. காயும் வரை நீ பக்கத்திலிருந்து கவனி..” குட்டியாய் தம்பிக்கு ஒரு தண்டனையை வழங்கி விட்டு “வாம்மா..” என மனைவியின் கையோடு கை கோர்த்துக் கொண்டு வீட்டிற்குள் போனான்..
ரவீந்தர் முகம் நிறைந்த புன்னகையுடன் உற்சாக சீட்டியுடன் மூட்டைகளை தன் தோளில் ஏற்ற தொடங்கினான்.
வந்தனாவின் அருகே நாகரீக இடைவெளியுடன் அமர்ந்திருந்த கல்யாணசுந்தரத்தை கவனித்தபடி, மைதிலியின் அருகே தோளுரச அமர்ந்தான் பரசுராமன்.. கோபமாய் திரும்பி பார்த்த மைதிலியிடம்..
“புருசன் பொண்டாட்டின்னா இப்படித்தான் உட்காரனும் மைதிலி..” என்றபடி வந்தனா – கல்யாணை கண்களால் காட்டினான்..
மைதிலி புரிந்து கொண்டு கணவனின் உரசலை பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டாள்.. அவர்கள் எல்லோரும் ஈஸ்வரி வீட்டை விட்டு வெளியேறுவதை பற்றிப் பேச அமர்ந்திருந்தனர்.
“ஏன் ஈஸ்வரி இப்படி பிடிவாதம் பிடிக்கிறாய்..?” அருணாச்சலம் தங்கையை அதட்டலாக கேட்டார்.




“உலக நடப்புதானே அண்ணா.. எப்போதும் உலகத்தோடு ஒத்துப் போக விடுவதுதானே நல்லது..”
“உறவுகளால் உண்டானதுதான் உலகம் அத்தை.. உறவுகளை மதிக்காமல் உலகத்தை பேண போகிறீர்களா..?” பரசுராமன் கோபமாகவே கேட்டான்..
“கொஞ்சம் எட்டத்தில் இருக்கும் உறவுகள்தான் எப்போதும் நிலைத்திருக்கும் பரசு..” ஈஸ்வரி புன்னகையுடனேயே சொன்னாள்..
“எல்லாமே நாமே உருவாக்கிக் கொள்ளும் சட்டங்கள்தான் அத்தை.. அதனை நாமே மாற்றுவதில் எந்த தவறும் கிடையாது..” கல்யாணசுந்தரம் கூறினான்.
“ரொம்ப சந்தோசம் மாப்பிள்ளை.. உங்கள் பேச்சு எனக்கு மிகவும் நிம்மதியைக் கொடுக்கிறது.. ஆனாலும் என்னை என் வழியில் விட்டு விடுங்கள்..”
கல்யாணசுந்தரம் முகத்தை சுளித்தான்..
“எதற்கு இந்த திடீர் மரியாதை..? எப்போதும் போல் பெயர் சொல்லியே கூப்பிடுங்கள்..”
“ம்ஹூம் அது தப்பு.. இனி தாங்கள் எனக்கு மாப்பிள்ளைதான்..”
“என்னமோ செய்யுங்கள்..” கல்யாணசுந்தரம் எரிச்சலுடன் எழுந்து போய்விட்டான்.
அனைவரும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் ஈஸ்வரி இங்கே தங்குவதற்கு ஒத்துக் கொள்ளவே இல்லை.




என் வீடு.. என் கணவரின் வீடு.. அங்கேதான் என் கடைசி காலம் கழியவேண்டும் என அவள் கண்கலங்க சொன்னபிறகு ஓரேடியாக அவளை மறுக்க யாராலும் முடியவில்லை..
“நீங்க நினைத்ததை சாதித்து விட்டீர்கள் இல்லையாம்மா..? நான் தப்பு செய்துவிட்டேனோன்னு இப்போது ரொம்ப நினைக்கிறேன்..”
வந்தனா தழுதழுத்த குரலில் சொல்லிவிட்டு எழுந்து போய் விட்டாள்..
மைதிலி வேதனையுடன் “பார்த்தீர்களா..?” என பரசுராமனிடம் ஜாடையாக கேட்க, அவன் இரு விழிகளையும் அழுந்த மூடித்திறந்து அவளுக்கு ஆதரவு பார்வை அளித்தான்..

What’s your Reaction?
+1
6
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!