Serial Stories Sollamal Thotu Sellum Thenral சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் – 30

30

வளரும் நிலவில் மாடிச்செடிகளோடு
பேசும் காற்று,
கூடு விட்டு கூடு பாய
என்னை தேர்ந்தெடுக்காதே..




மெல்லிய மஞ்சளில் வெளிச்சம் உமிழ்ந்து கொண்டிருந்த இரவு விளக்கைப் பார்த்தபடி படுத்திருந்தான் பரசுராமன்.. கீழே தரையில் பாய் விரித்துப் படுத்திருந்த மைதிலி உறங்கவில்லை என்பதனை உணர்ந்தான்.. அவள் ஏதோ தவிப்புடன் உறங்கப் பிடிக்காமல் உருண்டு கொண்டிருந்தாள்..
படுக்க வரும் நேரம் வரை எப்போதும் போல் வீட்டு வேலைகளை பொறுப்புடன் பார்த்தவள், இரவு புது மணமக்களுக்கான முதலிரவு ஏற்பாடுகளை வந்தனாவின் பிறந்த வீடான ஈஸ்வரியின் எதிர் வீட்டில் செய்து முடித்து விட்டு அறைக்குள் அசதியுடன் நுழைந்தாள்.
பாயை விரித்து கீழே படுக்க ஆயத்தமானாள்..
“நீ கட்டிலில் படுத்துக்கொள் மைதிலி, நான் பாயில் படுத்துக் கொள்கிறேன்..”
“தேவையில்லை.. நான் இங்கே இருக்க போவதே இன்னும் சில நாட்கள்தான்.. இந்த சில நாட்களுக்காக யாரும் எந்த தியாகமும் செய்ய வேண்டாம்..” படுத்துக் கொண்டாள்.
இனி இதுபோன்ற குத்தல் பேச்சுக்களுக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என பரசுராமன் தன் மனதை தயார் நிலையில் வைத்துக் கொண்டாலும், ‘இருக்கப் போவது சில நாட்கள்’ எனும் மைதிலியின் சொற்கள் அவனுக்கு உயிர் வாதையைக் கொடுத்துக் கொண்டிருந்தது.
“ஏன் மைதிலி தூக்கம் வரவில்லையா..? புரண்டு கொண்டே இருக்கிறாயே..? உடம்பு வலிக்கிறதா..?” அவள் புரளலில் மனம் தாங்காமல் கேட்டான்.
“உடம்பு வலித்தால் கால் பிடித்து விடலாமென்று நினைத்தீர்களோ..? நீங்கள் கால் பிடித்து விடும் லட்சணம் எனக்கு தெரியும்..” சுவர் பந்தாய் அவன் முகத்தில்றைந்தன வார்த்தைகள்..
பரசுராமன் கண்களை மூடிக் கொண்டான்.. அதன் பிறகு மைதிலி உருளவில்லை.. ஆனால் அவள் உறங்கவும் இல்லை என்பதை பரசுராமன் உணர்ந்தான்.. வெகு நேரம் விழி மூடாமல் கிடந்து விட்டு அதிகாலையில்தான் சிறிது கண்மூடினான் பரசுராமன். திரும்ப அவன் கண் விழித்து பார்த்த போது நன்றாக விடிந்திருக்க.. மைதிலி எழுந்து போயிருந்தாள்..




அவன் முகம் கழுவித் துடைத்துக் கொண்டிருந்த போது மைதிலி அறைக்குள் பரபரப்போடு வந்தாள்.. அவள் முகத்தில் ஆத்திரம் நிரம்பியிருந்தது..
“இதற்குத்தானே பயந்தேன்.. கொஞ்சம் கூட என் பேச்சைக் கேட்காமல் இப்படி செய்து விட்டீர்களே..?”
“என்னாயிற்று மைதிலி..? எதற்கு இத்தனை கோபம்..? வா இப்படி உட்கார்.. நிதானமாக பேசுவோம்.”
ஆறுதலாய் தோள் தொட வந்தவளின் கைகளை பட்டென தட்டிவிட்டாள்..
“மனப்பொருத்தம் இல்லாதவர்களுக்கு உங்கள் வீம்பிற்காக திருமணம் செய்து வைத்து அவர்கள் வாழ்க்கையையே கெடுத்து விட்டீர்களே..”
“யார்.. கல்யாணசுந்தரம் – வந்தனாவையா சொல்கிறாய்..? அவர்களுக்கு என்னம்மா..? என்ன நடந்தது..?”
“ஒன்றும் நடக்கவில்லை.. அதுதான் பிரச்சனை.. அப்பா சொன்னதற்காக திருமணம் செய்து கொண்டவர், என்னுடன் போட்ட சவாலுக்காக திருமணம் செய்து கொண்டவள், இவர்களுடைய வாழ்க்கை எப்படி நல்லபடியாக ஆரம்பிக்கும்..?”
“ஏய் நில்லு நில்லு.. என்ன சொன்னாய்..? வந்தனா உன்னிடம் சவால் விட்டாளா..? என்னவென்று..?”
“நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா..? உங்கள் வீட்டுப் பெண் சொல்வதெல்லாம் உண்மையாகத் தெரியும்.. நான் அடுத்த வீட்டுப்பெண்.. நான் உண்மையே சொன்னாலும் பொய்யாகத்தான் தோன்றும்..”
“ப்ச்.. ஏன் மைதிலி இப்படி வார்த்தைக்கு வார்த்தை குற்றம் சொல்கிறாய்..? நான் உன்னை மிக மிக நம்புகிறேன்.. போதுமா..? இப்போது சொல்லு.. வந்தனா உன்னிடம் என்ன சொன்னாள்..?”
மைதிலியினுள் திடுமென ஒரு வன்மம் புகுந்து கொண்டது..
“அண்ணனை காதலித்துக் கொண்டிருப்பவளை தம்பிக்கு மணம் முடித்து வைத்தால், அவள் எப்படி நிம்மதியாக வாழ்வாள்..?”
“மைதிலி..” அதட்டலுடன் கையை ஓங்கிவிட்டான் பரசுராமன்.. உயர்ந்து நின்ற அவன் கையை புன்னகையோடு பார்த்தாள் மைதிலி..
“அடிக்கவில்லை..?”
பரசுராமனின் கை கீழே தொய்ந்து இறங்கியது.. அவன் முகத்தில் நெஞ்சில் காயம் வாங்கிய புலியின் வாதை இருந்தது.. அவள் தோள்களை இருகையாலும் அழுத்திப் பற்றினான்.. அந்த அழுத்தத்தில் வலி தெறிக்க, மைதிலி அவனை எரிச்சலாகப் பார்க்கும் போதே குனிந்து அவள் தோள்களில் தலையை சாய்த்துக் கொண்டான்.




“தப்பாக பேசாதே மைதிலிப்ளீஸ்.. நடந்ததை சொல்லு..” தெருவில் விளையாடி கீழே விழுந்து காயம்பட்ட குழந்தை தாயின் தோள் சாய்ந்து விம்முமே, அப்படித்தான் பரசுராமன் அப்போது இருந்தான், குழைய தொடங்கிய தன் மனதை அதற்கு அனுமதிக்காது அதட்டி நிமிர்த்திய மைதிலி..
“நீங்களும் வந்தனாவும் காதலித்தீர்களா..?”
தோளில் பரசுராமனின் கை அழுத்தம் அதிகரித்தது..
“பழிக்கு பழியா மைதிலி..? நான் உன்னைக் கேட்டதற்கு எனக்கு பதிலா..?”
“இல்லை.. இப்படி நான் சொல்லவில்லை.. வந்தனாதான் சொன்னாள்..”
பரசுராமன் வேகமாக முகம் நிமிர்ந்தான்.
“வந்தனாவா.. அவளா உன்னிடம் சொன்னாள்..?”
“நான் சொன்னது சரியாகிவிட்டது பார்த்தீர்களா..? நீங்கள் நம்பவில்லை..”
“எப்போது சொன்னாள்..?” பரசுராமனின் குரல் வறண்டு வந்தது..
“ம் சரியாக சொல்வதனால், மார்ச் 20ம் தேதி..”
“என்ன மார்சச்ா.. நம் திருமணத்திற்கு முன்பா..? அப்போதே நீங்கள் இருவரும் சந்தித்தீர்களா..? உண்மையாக சொல் மைதிலி..”
படபடத்தவன் மைதிலியின் கேலிப் புன்னகை முகத்தை பார்த்ததும், தன் பேச்சை நிறுத்தினான்…
அவள் தோள்களை அரவணைத்துக் கொண்டு அவளை அழைத்துப் போய் கட்டிலில் அமர்த்தினான்.. அவளைப் பார்த்தபடி தானும் கட்டிலில் திரும்பி அமர்ந்தான்.
“சொல்லு மைதிலி.. ஒன்று விடாமல் சொல்லு..”
“வந்தனா என்னை நான் படித்த காலேஜிக்கு வந்து பார்த்தாள்.. நீங்களும் அவளும் ரொம்ப வருடங்களாக காதலித்து வருவதாகவும் குடும்ப சண்டையால் இப்போது இரு வீட்டிற்குமிடையே பேச்சு இல்லை ஆனால் விரைவில் சரியாகிவிடும். அதன் பிறகு எங்கள் திருமணம் நடந்து விடும்.. அதனால் இப்போது இந்த திருமணத்தை நான் நிறுத்தி விட வேண்டுமென்று கேட்டாள்.. ஒருதடவை இல்லை.. மூன்று தடவை நம் திருமணத்திற்கு முன்பே அவள் என்னை சந்தித்திருக்கிறாள்..”
“நான் அவளை மிகவும் நம்பினேன்.. பாம்புக்கு பால் வார்த்து வந்திருக்கிறேன் போலவே..” பரசுராமனின் குரலில் வேதனை இருந்தது..
“நம் திருமணத்திற்கு பிறகு நான் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த போதும்.. இதையேதான் சொன்னாள்.. நான் உங்களை விட்டுப் போய் விட வேண்டுமாம்.. அவள் இங்கே உங்களை கல்யாணம் முடித்து வந்துவிடுவாளாம்..”
பரசுராமன் அளவற்ற மின்சாரம் தாக்கி அதிர்ச்சியில் இருந்தான்..
“அவள் அவ்வளவு உறுதியாக சொல்லும் போது, எனக்கென்னவோ அவள் உங்களை மிகவும் தீவிரமாக காதலிக்கிறாள் என்றே தோன்றுகிறது..” கன்னத்தில் கை வைத்துக் கொண்டு நிதானமாக சொன்னாள் மைதிலி..




பரசுராமன் கோபமாக எழுந்தான்.
“நான் இப்போதே போய் அவளிடம் கேட்கிறேன்..” மைதிலி அவன் கையை பிடித்து தடுத்தாள்..
“என்ன கேட்க போகிறீர்கள்..? நீ என்னைக் காதலித்தாயா என்றா..?”
“அதனை நான் இப்போது கேட்டுத் தெளிந்து கொள்வது அவசியம்தானே மைதிலி..”
“ஆமாம் அவசியம்தான்.. ஆனால் அதனை யாரிடம் கேட்கப் போகிறீர்கள்..? வந்தனா இப்போது உங்கள் அத்தை மகளல்ல.. உங்கள் தம்பி மனைவியிடம் போய் என்னைக் காதலிக்கிறாயா எனக் கேட்பீர்களா..? உங்களுக்கே அசிங்கமாக படவில்லை..?”
வேகம் போய் பரசுராமன் தொய்ந்து அமர்ந்து விட்டான்..
“கடவுளே..” பரிதவிப்புடன் தன் தலையை தாங்கிக் கொண்டான்.. மைதிலி கண்ணகற்றாமல் அவன் தவிப்பை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்..
“வந்தனாவிற்கு குழந்தை உள்ளம் மைதிலி.. பின் விளைவுகளை யோசிக்காத குழந்தை அவள்.. அந்த சிறு பிள்ளை புத்தியில்தான் இப்படியெல்லாம் பேசிவிட்டாள்.”
“அவள் குழந்தை போன்றவள்தான்..” மைதிலியும் ஒத்துக் கொண்டாள்..
“உங்களுக்கு முன்பாக நானும் அதை உணர்ந்து கொண்டேன்.. தன் தாய் மாமனின் வீட்டில் தன்னை தவிர்த்து மற்றொரு பெண்ணின் அதிகாரத்தை அவளால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.. அப்படி வந்துவிட்ட என்னை விரட்ட நினைத்தாள்.. இது முழுக்க சிறுபிள்ளைத் தனம்தான்.. அவளது அந்த அறியாமையை அவளையே உணர வைத்து, எல்லாவற்றையும் சரி பண்ண முயற்சித்துக் கொண்டிருந்தேன்.. இடையில் நீங்கள் புகுந்து எல்லாவற்றையும் கலைத்து விட்டீர்கள்..”
“கல்யாணும், வந்தனாவும் மகிழ்வாக வாழத் தொடங்கி விட்டால் எல்லாம் சரியாகிவிடும் மைதிலி..”
“வாழ வேண்டுமே.. இதோ இப்போதுதான் அவர்கள் முதலிரவு அறைக்குள் போய்விட்டு வருகிறேன்.. அவர்கள் வாழ்க்கையை ஆரம்பித்ததற்கான எந்த அறிகுறியும் அங்கு இல்லை..”
மைதிலியின் குரலில் கலக்கம் வந்திருந்தது.. பரசுராமன் அவளை வாஞ்சையாய் பார்த்தான்.
“இவர்களது வாழ்க்கையைத்தான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாயா..? இதைத்தான் முடித்து விட்டுப் போவேன் என்றாயா..?”
“ஆமாம்.. வந்தனாவின் வாழ்க்கை நான் செம்மையாக்க நினைத்த ஒன்று.. அதனை நல்லபடியாக மாற்ற வேண்டியது என் கடமை..”
“எனக்கென்னவோ இதில் கவலைப்பட ஒன்றும் இருப்பது போல் தெரியவில்லை.. கணவன்-மனைவி இன்றில்லாவிட்டால், நாளை சேர்ந்து வாழ ஆரம்பித்து விடப் போகிறார்கள்..”
“கணவன்-மனைவி என்ற எண்ணமே இல்லாதவர்கள் எப்படி சேர்ந்து வாழ்வார்கள்..?”
“எனக்கு புரியவில்லை மைதிலி..”
“நீங்கள் வந்தனாவை காதலித்தீர்களா..?”
பரசுராமன் முகத்தில் கோபச் செம்மை ஏறியது.. பற்களை கடித்து தன் கோபத்தை அவன் அடக்கினான்.. மைதிலி அவனை வேடிக்கை பார்த்தாள்..
“அடிப்பீர்களென்று நினைத்தேன்..” மைதிலியின் பார்வை பரசுராமனின் கைகளில் இருந்தது..
பரசுராமன் கைகளை குவித்து கட்டிலில் குத்தினான்.
“வேறு பேசு மைதிலி..”




“ம்ஹூம் இதுதான் ரொம்ப முக்கியம்.. பதில் சொல்லுங்கள்.. நீங்கள் வந்தனாவை காதலித்தீர்களா..?”
“இல்லை..”
“பிறகு அவளை கல்யாணம் செய்து கொள்ள எப்படி சம்மதித்தீர்கள்..”
“அது.. அப்பா சொன்னதால்.. உன் கேள்வி தேவையற்றது மைதிலி.. நம் நாட்டு குடும்பங்களில் இன்னமும் திருமணங்கள் அம்மா, அப்பா சொல்லுக்காகவும், தொழிலுக்காகவும், சொந்தத்துக்காகவும் இப்படித்தான் இன்னமும் முடிவு செய்யப்படுகின்றன.. காதலெல்லாம் பின்னால் அவர்களுக்குள் வருவதுதான்.. இப்போது கல்யாண்-வந்தனா திருமணமும் அப்படித்தான்..”
“நீங்கள் சொல்வது சரிதான்.. ஆனால் இந்த திருமணம் அந்த வகையை சேர்ந்தது இல்லை.. முகம் தெரியாத யாரோ இருவர் மணம் செய்து கொண்டு பிற்பாடு காதல் வர கூடி வாழ்ந்து விடலாம்.. ஆனால் சிறுவயது முதல் ஒரே வீட்டிற்குள் உடன் பிறந்தவர்களின் பாசத்தோடு பழகி கொண்டிருந்தவர்களுக்கிடையே திடுமென திருமணம் செய்து வைத்தால்..”
“மைதிலி..” பரசுராமனின் குரலில் அதிர்ச்சி..
“நீங்கள் அண்ணன் தம்பி மூவருமே வந்தனாவை இன்னொரு சித்ரலேகாவாகத்தான் பார்க்கிறீர்கள்.. பழகி வந்திருக்கிறீர்கள்.. எங்கள் வீட்டுப்பெண் என்று அவளை கொண்டாடியிருக்கிறீர்கள்.. மகள் போல் வீட்டினுள் வளைய வந்தவளுக்கு திடுமென மருமகள் பதவி கொடுத்தால்..?”
பரசுராமன் நெற்றியை தேய்த்தபடி யோசனையில் ஆழ்ந்து விட்டான்.
“நன்றாக யோசித்து சொல்லுங்கள்… சித்ரா அண்ணிக்கும், வந்தனாவிற்கும் உங்கள் மனதில் என்றாவது வேறுபாடு நினைத்திருக்கிறீர்களா..?”
இல்லையென தலையசைத்தான்.
“உங்களுக்கும் வந்தனாவிற்கும் திருமணம் நடந்திருந்தாலும் இதே சங்கடம்தான்… இப்போதும் கல்யாண் கொழுந்தனோ வந்தனாவோ இந்த நிதர்சனத்தை உணரவில்லை.. அப்பா சொல் கல்யாணுக்கென்றால் வந்தனாவிற்கு தன்னைக் கொண்டாடி வளர்த்த
இந்த வீட்டை விடமனமில்லை.. ஆனால் திருமணம் முடிந்ததும்தான் இருவரும் தங்களுக்கென ஒரு தனி வாழ்விருப்பதை உணர்ந்திருக்கிறார்கள்.. தடுமாறுகிறார்கள்..”
“மைதிலி உன் வாதம் என்னை மிகவும் குழப்புகிறது.”
“எனக்குமே குழப்பம்தான்.. என் சிந்தனை தவறு என்றோ, தவறாக போய்விட வேண்டுமென்றேதான் இதோ இன்று காலை வரை நினைத்துக் கொண்டிருந்தேன்.. ஆனால் அது சரிதானென்று இப்போது சற்று முன் தெரிந்து விட்டது..”




“அப்படியே இருந்தாலும், இது சரியாகிவிடாதா..?”
“சரியாக வேண்டும்.. இல்லையென்றாலும் சரியாக்க வேண்டும்.. இனி நான் அதைத்தான் முயலப் போகிறேன்..”
“நிச்சயம் சரியாகிவிடும் மைதிலி.. உன்னுடைய முயற்சியில் என்னையும் சேர்த்துக் கொள்.. ராமருக்கு உதவிய அணில் போல் என் பங்கும் இதில் இருக்கட்டும்.”
வேண்டலோடு நீண்ட கணவனின் கையை யோசனையாகப் பார்த்தாள்..
“இந்த பொருந்தாத திருமணத்தில் எனது பங்கு ரொம்பவே இருக்கிறது மைதிலி.. இதனை நான்தான் சரி செய்ய வேண்டும்.. ஆனால் அதற்கான வழி எனக்கு தெரியவில்லை.. எனக்காக அதனை என் மனைவி செய்ய நினைக்கும் போது அவளுக்கு நான் உதவுவதுதானே முறை..”
“மனைவி, மாங்காய் என்பது எதுவும் பேச வேண்டாம்.. நான் வந்தனா-கல்யாண் வாழ்வு சீரடையத் தொடங்கியதும் இங்கிருந்து போய்விடுவேன்..”
மைதிலி உறுதியாக பேசினாள்..

What’s your Reaction?
+1
7
+1
3
+1
0
+1
2
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!