Serial Stories Sollamal Thotu Sellum Thenral சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் – 29

29

யுகங்கள் தாங்கிய வெள்ளிநிலா இரவுகள்
ப்ரியமானவை,
தீ சுவைத்து தித்திப்பதில்லை நாவு
ஆனால் உனதந்த முத்தம்…




தங்களது தனிமையின் போது கணவன் அவளிடம் தேடும் தேவைகள் நினைவு வர, மைதிலியின் முகம் கோபத்தில் சிவந்தது.. இப்போது இவன் இதுபோல் முகத்தை வைத்துக் கொண்டு அழைப்பது அதற்காகத்தானே இருக்கும்.. சை இவனுக்கு எந்நேரமும் அந்த நினைவு மட்டும்தானா..?
மனம் கசக்கு கண்கள் கனல் கக்க அவனை முறைத்து விட்டு வீட்டிற்குள் நடந்தாள்.
“ஒரே ஒரு நிமிடம் மைதிலி..” பரசுராமன் இரண்டே எட்டுக்களில் அவளை அணுகி தோள்களை பற்றினான்.
“என்னை விடுங்க..” திமிறியவளை,
“ஒன்றுமில்லை மைதிலி.. ஒரே நிமிடம்தான்.. நீ நினைப்பது போல் இல்லை..” நெகிழ்வான குரலில் கூறியவன் மைதிலியை தன் மார்பில் சாய்த்து மென்மையாக இதமாக அணைத்துக் கொண்டான்.
அவனுக்கு பழக்கமற்ற இந்த மென்மையில் வியந்தபடி, டிக் டிக் என தன் காதுகளில் கேட்ட அவனது இதயத்துடிப்பில் மனம் தடுமாற அவனுள் அடங்கி நின்றாள் மைதிலி..
“மைதிலி..” என ஆரம்பித்தவன் பின் மௌனமானான்.. சிறிது நேரம் கழித்து மீண்டும் ஒருமுறை அவளை அழைத்தவன் மீண்டும் மௌனமானான்.. திரும்ப திரும்ப அவள் பெயரை மட்டுமே ராமஜெயம் போல் உச்சரித்தபடி நின்றான்.. அவன் குரலில் தவிப்பும், உடலில் நடுக்கமும் உணர்ந்த மைதிலி மெல்ல நிமிர்ந்து அவன் முகத்தை கேள்வியாக பார்த்தாள்..
அந்த சிறு விலகலிலும் பதறியவன் மீண்டும் அவளை தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான்.
“என்னை விட்டுப் போய் விடாதே மைதிலி..” புலப்பமான வேண்டுதலோடு இருந்தது அவன் குரல்.




“என்னாச்சு உங்களுக்கு..?” மைதிலிக்கு சந்தேகம் வந்திருந்தது.. அவள் இவ்வளவு நேரமாக அவளை அடித்ததற்காக கணவன் வருந்துகிறான் என்றே நினைத்திருந்தாள்.. ஆனால் இது வேறு ஏதோ விசயமென்று இப்போது தோன்றியது.
“நா.. நான் தப்பு செய்துவிட்டேன் மைதிலி.. என்னை மன்னித்துவிடு..”
மைதிலி விழி விரித்தாள் – “மன்னிப்பு” அவள் கணவன், அருணாச்சலம் அண்ணாச்சியின் மகன், மதுரையின் சிறந்த வியாபாரி, மரியாதையான பெரிய மனிதன், மூட்டை மூட்டையாய் பணம் சம்பாதிக்கும் வித்தை கற்றவன். பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறான்.. ஒரு பெண்ணிடம்.. அவன் மனைவியிடம்..
முதலில் நெகிழ்ந்த மைதிலியின் மனம், அடுத்த நிமிடமே விழித்துக் கொண்டது.. இவன்.. ராஜ சிம்மாசன ராஜகுமாரன் இவ்வளவு இறங்கி வந்து மன்னிப்பு கேட்கிறானென்றால், அவளது மன வீணை அபஸ்வர கீதமொன்றை வழியவிட்டது..
“எதற்கு மன்னிப்பு..?”
“உனக்கு செய்த கொடுமைகளுக்கு..”
“என்ன செய்தீர்கள்..?”
“உன் உணர்வுகளை மதிக்காமல் நடந்து கொண்டதற்கு, உன்னை அடிமையாக நடத்தியதற்கு, உன்னை கை நீட்டி அடித்ததற்கு..” இன்னமும் ஏதோ சொல்ல வந்து அவன் குரல் தடுமாறி நின்றது.
மைதிலி அவன் முகத்திலிருந்து பார்வையை எடுக்காமல் நின்றாள்.. பரசுராமன் தடுமாறினான்.. வியர்த்த முகத்தை துடைத்துக் கொண்டான்.. தயங்கி தயங்கி பேச ஆரம்பித்தான்..
“நம் திருமணபேச்சு வீட்டில் ஆரம்பித்ததும் அதனை ரவீந்தர் மிகவும் எதிர்த்தான் மைதிலி.. அந்தப் பெண் என் தோழி.. நம் வீட்டிற்கு ஒத்து வரமாட்டாள் என்றான்.. ஆனால் அப்பா முடிவெடுத்து விட்டார்.. வாயை மூடுடா என்றுவிட்டார்.. அப்போது வந்தனா என்னிடம் உங்களைப் பற்றி சொன்னாள்..”
“எங்களை.. என்றால்..?”
“உ.. உன்னையும், ரவீந்தரையும் பற்றி.. நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் கா.. காதலிப்பதாகவும், அதனால் இந்த திருமணத்தை நிறுத்தும்படியும் சொன்னாள்..”
மைதிலியின் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.. கண்கள் வேதனையில் கலங்கியது..
“நா.. நான் உங்களை பற்றி விசாரித்தேன்.. நீங்கள் இருவரும் நெருக்கமாக பழகுவதாக எனக்கு தகவல் கிடைத்தது.. நா.. நான்.. அ.. அப்போது அதனை நம்பினேன்..”




மைதிலி ஆக்ரோசத்துடன் அவன் சட்டையை கொத்தாகப் பிடித்தாள்..
“என்னடா சொன்னாய் நீ..?”
அவள் முகத்தில் அருவெறுப்பு இருந்தது.. அசிங்கம் இருந்தது..
“அந்த நிலை எனக்கும் மிகவும் கொடுமையாகவே இருந்தது மைதிலி.. உண்மையை சொல்ல வேண்டு மென்றால் அதனை நான் நம்ப விரும்பவில்லை.. நமது திருமணத்தை நிறுத்தவும் விரும்பவில்லை நம் திருமணம் நடந்தது..”
மைதிலி தலையில் கை வைத்தபடி தரையில் அமர்ந்து விட்டாள். இரக்கமுடன் அவளைப் பார்த்த பரசுராமன் தனது ஒப்புக் கொடுத்தலை நிறுத்த விரும்பவில்லை தொடர்ந்தான்.
“திருமண மண்டபத்தில் நீங்கள் இருவரும் தனியாக நின்று பேசிக் கொண்டிருந்ததை பார்த்தேன் மைதிலி.. என் மனம் வெடித்தது.. இந்த திருமணத்தை நிறுத்துவதை யோசித்துக் கொண்டிருந்தேன்.. அப்போதுதான் நீங்கள் இருவரும் என்னைத் தேடி வந்தீர்கள்.. இந்த திருமணம் நின்று விடக்கூடாது என்ற தவிப்புடன் வந்தீர்கள்.. என் மனத்தில் ஒளி தெரிந்தது.. எனது தவறான நினைப்பிற்கு வருந்தினேன்.. நம் திருமணம் நடப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தேன். ஆனால் மணமேடையில் என் அருகே மணப்பெண்ணாக அமர்ந்திருந்த உன் பார்வை முழுவதும் ரவீந்தர் மேலேயே இருந்தது.. திரும்பவும் எனக்குள் குழப்பம்.. தாலியை கையில் எடுத்துக் கொண்டு உன்னிடம் சம்மதம் கேட்டேன்.. நீ முகம் சிவக்க தலை குனிந்து “ம்” என்றாய் பார்.. அப்போது நான் இந்த உலகத்தையே வென்ற மகிழ்ச்சியடைந்தேன்.. உன் கழுத்தில் தாலி கட்டிய மறு நிமிடமே எனக்கு உன் மீது அதிகாரம் வந்துவிட்டது. நீ என்னுடையவள் என்ற உரிமை தோன்றிவிட்டது. எப்போதும் உன்னை என் கைகளுக்குள் வைத்து பாதுகாக்கும் வேகம் வந்தது..
நமது முதலிரவன்று உன்னுடன் மனம் விட்டு பேச எனக்கு பயமாக இருந்தது.. ரவீந்தருக்கு ஆதரவாக, அவனைப் பிடிக்குமென்பது போல் நீ ஏதாவது சொல்லி விட்டாயானால் அதனை.. என்னால் தாங்கமுடியாது. அதனாலேயே அன்று உன்னை பேச அனுமதிக்காமல் என்னுடையவளாக்கிக் கொண்டேன்.. முழுக்க முழுக்க நீ எனக்குரிமையானவளாக இருக்க வேண்டும் என்ற அவசரம் எனக்கு..




நம் திருமணம் முடிந்த இரண்டாவது நாளே என் மனம் உணர்ந்துவிட்டது. உனக்கும் ரவீந்தருக்கும் இடையே நட்பை தவிர வேறெந்த உணர்வும் இல்லையென்று.. இதனை நான் வந்தனாவிடம் தெரியப்படுத்தினேன்.. அவள் ஒத்துக் கொள்ள மறுத்தாள். நீ ரவீந்தரை உயர்வாக நினைத்தாய்.. என் முகம் பார்க்கவே யோசிக்கும் நீ ரவீந்தரின் முகம் பார்க்கவும் மலர்ந்தாய்.. அவனிடம் சிரித்து பேசினாய்.. இதெல்லாம் எனக்கு ஆத்திரத்தை கொடுத்தது.. நீங்கள் இருவரும் உங்கள் உறவுகளை சொல்லாமல் இன்னமும் கல்லூரி காலத்திலேயே இருந்தீர்கள்.. அதனை என் மனம் ஒப்புக் கொள்ளவில்லை. என் தம்பி என் மனைவிக்கான மரியாதையை உனக்கு கொடுக்க வேண்டும் என நினைத்தேன்.. இந்தக் குழப்பங்களால் என்னால் உன்னை மனதளவில் நெருங்க முடியாது போனது..
ரவீந்தர் உலக சுற்றுலா கிளம்பி போனான்.. ஆனால் அப்போது நமக்கிடையே பிரச்சினையாக மாமாவின் உடல்நலம், அவரது மரணம், என வந்துவிட்டது. நீ அன்று வந்தனாவிடம் வாசலில் வைத்து கோபமாக பேசியது எனக்கு பிடிக்கவில்லை.. ஏனென்றால் நான் அவர்களை நம் வீட்டோடு மீண்டும் இணைத்துக் கொள்ளும் தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.. நீ அவர்களை எடுத்தெரிந்து பேசியது எனக்கு அப்போது பிடிக்கவில்லை..
பிறகு மாமாவின் மரண வீட்டில் வைத்து நீ ஆதரவாக என்னை வருடினாயே, அந்தக் கனம் நமக்கிடையே உள்ள பிணக்குகளெல்லாம் மாறிவிட்டதாக நினைத்தேன்.. இனி நம் வாழ்வு சுமூகமாகும் என நம்பினேன்.. அத்தையும், வந்தனாவும் நம் வீட்டிற்கே வந்தனர்.. உனக்கு அது பிடிக்கவில்லை போல.. நீ வந்தனாவை வீட்டை விட்டு வெளியேற்ற நினைத்தாய்.. இதனை என்னால் நம்ப முடியவில்லை.. நீ என்னைப் போன்றே வந்தனா, அத்தையை நம் குடும்ப ஆட்களாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென எதிர்பார்த்தேன்.
ஆனால் உன்னால் வந்தனாவுடன் ஒத்துப் போக முடியவில்லை.. எப்போதும் உங்கள் இருவருக்கும் சண்டை வந்து கொண்டே இருந்தது.. இதனால் எனக்கு உன் மீது அதிருப்தி கூடிக் கொண்டே போனது.. வந்தனா நீ நிச்சயம் அவளை வீட்டை விட்டு விரட்டி விடுவாய் எனக் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தாள்.. நான் அப்படி நடக்காது என்று அவளை சமாதானம் செய்து கொண்டிருந்தேன்.. ஆனால் அவள் சொன்னதே உண்மை போல் நீ உன் தோழிகளிடம் அவளை வீட்டை விட்டு அனுப்ப போவதாக என் காதுபடவே பேசிக் கொண்டிருந்தாய்.. என்னால் நம்பவே முடியவில்லை.. உன்னை இப்படி பார்க்க நான் விரும்பவில்லை. என் ஆத்திரம் அதிகமாகி அன்று உன் தோழிகள் முன்பாகவே உன்னை..”




நீண்ட விளக்கங்களுக்கு பின் பரசுராமன் நிறுத்தினான்.. மைதிலியை பார்க்க, அவள் இப்போது தன் கால்களைக் கட்டிக் கொண்டு தரையில் அமர்ந்திருந்தாள்.. ஒரு மாதிரி வெறித்த பார்வையுடன் எதிரே பார்த்திருந்தாள்.. அவள் முகத்தில் கலக்கம் இல்லை.. கண்களில் சோகம் இல்லை.. கருங்கல்லை ஒத்த ஒரு கடினம் மட்டுமே இருந்தது.. அவளது அந்த நிலையில் மனம் வேதனையுற பரசுராமன் தயங்கி நிற்க..
“ம்.. அப்புறம்..” எனக் கேட்டு அவனை தொடர தூண்டினாள்..
“நீ திருமணம் முடித்து வந்தனாவை வேறு வீட்டிற்கு அனுப்ப போவதாக சொன்னாய்.. நான் அதே திருமணத்தை முடித்து அவளை வீட்டிலேயே வைத்துக் கொள்ள நினைத்தேன்.. அதனாலேயே அப்பாவிடம் கல்யாணசுந்தரம் – வந்தனா திருமணம் பற்றி பேசினேன்..”
“ம்.. அப்புறம்..” மைதிலியின் அதே கேள்வியில் துணுக்குற்றான்..
“வே.. வேறு என்ன..?”
“எல்லாம் சரிதான்.. இப்போது திடீரென இந்த ஞானோதயம் வருவதற்கு என்ன காரணம்..? இவ்வளவு நாட்களாக பேசாததையெல்லாம் இன்று பெண்டாட்டியிடம் ஏன் சொல்ல தோன்றியது..?”
“அ.. அது மைதிலி இதனை நான் உன்னிடம் மறைத்து விடலாம்.. ஆனால் இன்று என் மனக்கசடுகளையெல்லாம் உன் காலடியில் கொட்டி விட வேண்டுமென்ற தீர்மானத்தில் இருப்பதால், இனி நம் எதிர்கால வாழ்வில் எந்த நெருடலுமின்றி நாம் சந்தோசமாக வாழ வேண்டும் என்பதற்காக இதனையும் உன்னிடம் சொல்லி விடுகிறேன்.. நான் நேற்று இரவு திருமண மண்டபத்தில் நீயும், ரவீந்தரும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன்.. உங்கள் கள்ளமில்லா உள்ளத்தை தெரிந்து கொண்டேன்.. என்னையே நொந்து கொண்டேன்..”
பேசியபடி மைதிலியின் முகத்தை பார்த்த பரசுராமன் திகைத்தான் மைதிலியின் முகத்தில் புன்னகை நிறைந்திருந்தது.. வரட்டுப் புன்னகை..
துவண்டு கீழே அமர்ந்திருந்தவள் எழுந்து நின்றாள்.. பரசுராமனின் கண்கள் நேருக்கு நேர் பார்த்தாள்..
“இவ்வளவு நேரமாக நீங்கள் சொன்ன விபரங்களிலேயே இதுதான் ஹைகிளாஸ்.. ஆக நானும் ரவீந்தரும் எங்களுக்கிடையே இருக்கும் உறவை தெளிவாக பேசிக் கொண்டதை கேட்ட பிறகுதான் உங்களுக்கு என்னிடம் மன்னிப்பு கேட்க தோன்றியிருக்கிறது.. அப்படித்தானே..?”
“இல்லை மைதிலி.. அது அப்படி இல்லை.. உங்கள் இருவர்மீதும் எனக்கு தப்பான அபிப்ராயம் எப்போதும் இருந்ததில்லை.. நான்தான் சொன்னேனே.. நீ என்னை விட அவனை உயர்வாக நினைத்தாய்.. அதைத்தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. இப்போது எல்லாம் சரியாகி விட்டதாக எனக்குள் ஓர் எண்ணம்.. என் எண்ணப்படி வந்தனாவையும் பாதுகாப்பாக நம் வீட்டிற்குள்ளேயே கொண்டு வந்து விட்டாயிற்று.. இனி நாம் ஒற்றுமையாக வாழ ஆரம்பிக்கலாம் என்று நினைத்தேன்.. அப்போதுதான் உங்கள் இருவருடைய பேச்சுக்களை கேட்டேன்.. இனி உன்னிடம் மன்னிப்பு கேட்க கொஞ்சமும் தாமதிக்க கூடாது என்ற முடிவெடுத்து.. இதோ..” மீதியை முடிக்காமல் கேட்டேனென சைகை செய்தான்..
மைதிலி பற்கள் தெரிய நன்றாக மலர்ந்து சிரித்தாள்.. “நல்ல சமாளிப்பு” என்றாள்..
“தவறாக எதுவும் நினைக்க வேண்டாம் மைதிலி.. இதுதான் உண்மை.. என் மனதை அப்படியே சொல்லி விட்டேன்.. உனக்கு என் மீது நிறைய வருத்தங்கள், கோபங்கள் இருக்கும்.. அவற்றையெல்லாம் மறந்து விட்டு..”




“உங்களோடு கட்டிலில் புரள வந்து விட வேண்டுமா..?”
“மைதிலி..” பரசுராமன் அதிர்ந்தான்..
“என்னிடம் உங்களது ஒரே தேவை அதுதானே.. அதை மட்டும்தானே எதிர்பார்ப்பீர்கள்.. இப்போதும் நான் அதை செய்யதானே விரும்புவீர்கள்..”
“மைதிலி.. கொஞ்சம் யோசித்து பேசு..”
“ஓ நீங்கள் யோசிக்காமலேயே செய்து விட்ட செயல்களுக்கு நான் யோசித்து யோசித்து பேச வேண்டுமோ..?”
பரசுராமனின் முகம் மிகுந்த வேதனையை காட்டியது.. பேசு என்பது போல் அவளைப் பார்த்தபடி கைகளைக் கட்டிக் கொண்டான்..
“அதெப்படி நீங்கள் எல்லாப் பாவகங்களும் செய்துவிட்டு, ஒரே ஒரு மன்னிப்பை கேட்கவும் நான் எல்லாவற்றையும் மறந்து மன்னித்து விட வேண்டுமா..?”
“நீங்கள் என் உடலை காயப்படுத்தியதைக் கூட என்னால் தாங்கிக் கொள்ள முடியும்.. ஆனால் மனதை..? அந்த மரணகாயத்தை எப்படி மறக்க முடியும்..?”
“என்னவெல்லாம் பேசிவிட்டீர்கள்..? எப்படி யெல்லாம் நடந்து விட்டீர்கள்..?”
பரசுராமன் பதிலே பேசாமல் உன் துக்கங்களை கொட்டி ஆற்றிக்கொள் என்பதாக மௌனமாக நின்றிருந்தான்..
“உங்களுக்கு ஒன்று தெரியுமா.. நீங்கள் என்னை விரட்டி விரட்டி அடித்த போது, என் உணர்வுகளை உங்கள் காலடியில் போடு மிதித்த போது மிக அதிக வேதனை எனக்கு வந்த போதும் உங்களை விட்டுப் பிரிய வேண்டுமென நான் நினைத்ததே இல்லை தெரியுமா..? ஆனால் இப்போது நினைக்கிறேன்.. நானும் ரவீந்தரும் பேசிக் கொண்டதை கேட்டேன் என்றீர்களே, அந்தக் கணத்திலிருந்து நினைக்கிறேன்.. உங்களைப் பிரிந்து விட வேண்டும், உங்களை விட்டுப் போய்விட வேண்டுமென்று நினைக்கிறேன்..”
“மைதிலி..” பரசுராமன் பதட்டத்துடன் கத்தினான்.
“இப்போது கூட என் தன்மானத்தை காட்டாவிட்டால் நான் உப்பு போட்டு சாப்பிடுவதில் அர்த்தமே இல்லை..”
“இல்லை மைதிலி.. இது தவறான முடிவு.. நாம் பிரியக்கூடாது.. நான் உன்னை விடமாட்டேன்..”
“எங்களை முன்னால் பேச விட்டு பின்னால் ஒளிந்திருந்தீர்களே அந்த நிமிடமே என் மேல் உங்களுக்கு இருந்த அதிகாரம் போய்விட்டது..”
“வேண்டாம் மைதிலி.. அப்படி சொல்லாதே.. நான் செய்தது பெரிய தவறுதான்.. அதற்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்காதே..”




“உடல் நடுங்ககிறதா..? மனம் கலங்குகிறதா..? இதயம் துடிக்கிறதா..? எனக்கும் இப்படித்தான் இருந்தது.. நேற்று வரை எனக்கு.. இனி உங்களுக்கு..”
மைதிலி அவனுக்கு முதுகு காட்டி திரும்பி நின்று கொண்டாள்..
“நமது கணவன்-மனைவி உறவு இன்னமும் சில நாட்கள்தான்.. இங்கே இந்த வீட்டில் எனக்கு ஒரு கடமை இருக்கிறது.. அதனை முடிக்காமல் போனால் என்னை என் மனட்சாட்சி கொன்றுவிடும்.. அந்த வேலையை முடித்து விட்டு, நம் திருமண பந்தத்தையும் முறித்து விட்டு நான் என் பிறந்த வீட்டிற்கு போய் விடுவேன்..”
வான் அசரீரி போல் ஒலித்த மைதிலியின் நிச்சய குரலுக்கு பதில் சொல்ல பரசுராமனால் முடியவில்லை.. அவன் தவறு செய்தவனாய் தலைகுனிந்து இருந்தான்..
வாசல் அழைப்பு மணி ஒலிக்க ஒட்டவைத்துக் கொண்ட புன்னகையுடன் மைதிலி போய் கதவை திறந்தாள்.. புது மண மக்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றாள்.. நிமிடத்தில் அந்த வீட்டு மருமகளாகி தன் கடமைகளை செய்யத் தொடங்கினாள்.. ஆனால் அந்த பின்னிருந்த பற்றற்ற விலகளால் பரசுராமன் மட்டுமே உணர்ந்தான்.

What’s your Reaction?
+1
6
+1
3
+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!