Serial Stories Sollamal Thotu Sellum Thenral சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் – 28

28

சருகாகி நொறுங்கிடுவேனென
உறுதிப்படுகையில்..
ப்ரியத்தின் சொற்கள் சில
எதிர்பாரா உன் முத்தம்..




“அம்மா.. அந்த சந்திரஹாரம் மட்டும் இன்னைக்கு எனக்கு தாங்கம்மா ப்ளீஸ்..” கேட்ட சித்ரலேகாவை முறைத்தாள் மகாராணி..
“ஏன்டி அதே மாடல்ல உனக்கு ஒண்ணு செய்து போட்டோமே அது என்ன ஆயிற்று..?”
“ம்க்கும் அதில் கண்ணி விட்டுப் போச்சு.. ஆயிரம் தான் பார்த்து பார்த்து செய்தாலும், அந்தக் கால நகைகள் போல வருமா..?” சித்ரலேகா ஆசையுடன் அவர்கள் வீட்டு பாரம்பரிய நகைகளை வருடினாள்..
அந்த நகைகள் குடும்பத்திற்கு வரும் மருமகள்களுக்கு என மகாராணி உறுதியாக சொல்லிவிட, சித்ரலேகா முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள, அருணாச்சலம் மகளை சமாதானப்படுத்தி தங்கள் குடும்ப நகைகளைப் போன்றே இன்னொரு செட் செய்ய சொல்லி அதனை மகளுக்கு கொடுத்திருந்தார்.. ஆனாலும் சித்ரலேகாவிற்கு அந்த தனது பாட்டி காலத்து நகைகள் மேல் இருந்த மோகம் போகவில்லை..
சந்திரஹாரம் மட்டும் எனக் கேட்டுவிட்டு அத்தோடு சேர்த்து நெல்லிக்காய் மாலையையும், மரகத அட்டிகையையும் கூடுதலாக வாங்கி அணிந்த பின் தான் அவள் முகத்தில் திருப்தி வந்தது..
புதிதாக வரப்போகும் மருமகளுக்கென தங்கள் பரம்பரை நகை பெட்டி முழுவதையும் மகாராணி வந்தனாவிடம் கொடுத்துவிட அவளது முகம்
கோபுர தீபமாக ஜொலித்தது.. மூக்குத்தியையும் விட்டு வைக்காமல் அவள் பூட்டிக் கொள்வதை பொறாமையோடு பார்த்திருந்தாள் சித்ரலேகா.. அவளது பொறாமையை தூண்டும் விதமாக கண்ணாடியில் ஒவ்வொரு நகையாக அவள் பார்வையில் படும்படி தூக்கிக் காட்டி வந்தனா அணிய சித்ரலேகா பற்களை நறநறத்தாள்..




“நீ இந்த செட்டை போட்டுக்கோம்மா..” அவர்கள் முன் பெட்டி நிறைய நகைகள் இருந்தாலும் மகாராணி மைதிலிக்கு நீட்டிய சிறு நகைப்பெட்டி மேல் இரு பெண்களின் கவனமும் போனது..
அது முத்துக்களை தங்க நூலில் கோர்த்து இடையிடையே தங்க உருண்டைகளையும் சேர்த்து செய்யப்பட்ட முத்து ஆபரணம்.. நீள மாலை, கழுத்தட்டி, காதணி, கையணி என அனைத்தும் ஒரே டிசைனில் இருந்தது..
“எனக்கு என் நகைகள் இருக்கிறதே அத்தை..” மைதிலி தயக்கத்துடன் சொல்ல,
“இதையும் சேர்த்து போட்டுக்கொள் என்றேன்..” மகாராணி அதட்ட மௌனமாக நகை பெட்டியை வாங்கிக் கொண்டாள் மைதிலி..
“நகை வேண்டாமென்று சொல்லும் ஒரே பெண் நான் அறிந்த வரை நீங்கள்தான் அண்ணி..” என்றபடி வந்தான் ரவீந்தர்.. மைதிலி புன்னகைத்தாள்..
தனது நகைகளை சுழட்டி வைத்துவிட்டு அந்த முத்து செட்டை மட்டும் அணிந்து கொண்டாள்.. பாசிமாலை மாதிரி இருக்கிறது என வந்தனாவும், சித்ரலேகாவும் ஒதுக்கிய செட்தான் அது.. ஆனால் இப்போது மைதிலியின் கழுத்தில் ஏறவும் மிக அழகாக ஜொலித்தது.. பாரம்பரியமான அந்த நகை இப்போது நவீன நாகரீகமாகவும் தோன்றியது..
ஒருவேளை அதனை மைதிலி அணிந்த விதத்தில் கூட அந்த சிறப்பை பெற்றிருக்கலாம்.. மைதிலி அணிந்திருந்த மயில் கழுத்து நிற பட்டுப்புடவைக்கு சரியான பொருத்தமாக அந்த முத்துமாலை அமைந்துவிட சித்ரலேகாவும், வந்தனாவும் விழி விரித்தனர்..




“அம்மா நம்ம முத்துமாலைதானா இது..? இதற்கு முன்பு இத்தனை அழகாக இருந்ததில்லையே..?” சித்ரலேகா வியப்புடன் மைதிலி அருகில் வந்து நகையை தொட்டுப் பார்த்தாள்..
“ஆமாம் அதேதான்.. உனக்கு வேண்டும் என்றால் நீயும் உன் முத்துமாலையை போட்டுக்கொள்..” மகாராணி தன் கழுத்தில் காசுமாலையை போட்டுக் கொள்ளத் தொடங்கினாள்..
தனக்கு முத்துமாலை சரியாக வருமா.. சித்ரலேகா யோசனையில் இறங்க,
“இதோ இப்படி கொத்தாக அள்ளும் அளவிற்கு கழுத்தில் போட்டிருக்கும் நகைகளை சுழட்டி வைத்து விட்டு, முத்துமாலையை மட்டும் போட்டுக் கொள், அப்போது அழகாக இருக்கும்.. வந்தனா இந்த யோசனை உனக்கும் தான்..” அக்காவிற்கும் அத்தை மகளுக்கும் ஒரே நேரத்தில் ஆலோசனை வழங்கினான் ரவீந்தர்..
“ம்ஹூம் நான் கல்யாணப் பெண்ணல்லவா.. எப்படி நகைகளை குறைக்க முடியும்..?” ஆட்சேபித்தபடி மேலும் ஒரு கோதுமை மாடல் செயினை தன் கழுத்தில் போட்டாள் வந்தனா..
சித்ரலேகா யோசித்தபடி இருந்துவிட்டு.. “அப்படியா அண்ணா..?” என உத்தரவாதம் கேட்டது உள்ளே நுழைந்த பரசுராமனிடம்..
“நீ எந்த நகை போட்டாலும் அழகுதான்டா செல்லம்.. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை நகைகளை மாற்றிக் கொண்டே இரேன்..” என தங்கைக்கு அருமையான ஆலோசனை வழங்கியவன்,
“நீ சொல்வதும் சரிதான் வந்தனா.. இன்று உங்கள் கல்யாணநாள்.. இந்த நாளில் நீதான் கதாநாயகி.. அதனால் நீ எல்லா நகைகளையும் போட்டுக்கொள்… இதோ
இதையும் சேர்த்தே போட்டுக் கொள்ளேன்..” என்றபடி இன்னமும் நகைப்பெட்டிக்குள் மீந்திருந்த இரண்டொரு செயின்களையும் எடுத்துக் கொடுத்தான்..
வந்தனாவின் முகம் தாமரையாய் மலர, இன்னும் எங்கெங்கு என்ன நகைகளை மாட்டலாமென்ற ஆலோசனையில் இறங்கினாள் அவள்..




பரசுராமனின் பார்வை இப்போது மனைவி பக்கம் திரும்பியது.. மைதிலி கணவனுக்கு முதுகு காட்டி நின்றபடி கண்ணாடியில் தன் அலங்காரத்தை சரி செய்து கொண்டிருந்தாள்.. பரசுராமன் அவள் தோள் தொட்டு தன்புறம் திருப்பினான்..
“எங்கே மைதிலி உன் நகைகளை பார்க்கலாம்..” திடுமென அவன் இப்படி எல்லோர் முன்னாலும் கேட்பான், தொட்டு திருப்புவானென எதிர்பார்க்காத மைதிலி திருதிருத்து நின்றாள்..
பரசுராமனனின் பார்வை பாலை நில வீழ் நீர் போல் மனைவி மேல் விழுந்த வேகத்தில் அவள் நெற்றி, கண், காது, மூக்கு, வாய் என அவள் முகம் முழுவதும் அவசரமாக பரவி அவளுள்ளேயே அமிழ்ந்தது..
“சேலையும் நகையும் உனக்கு நன்றாக பொருந்தியிருக்கிறது மைதிலி..” முணுமுணுத்தான்.. மைதிலி மீண்டும் கண்ணாடி முன் திரும்பிக் கொண்டாள்.
“அம்மா என் புது செருப்பை எடுங்க..” கண்ணாடியை பார்த்தபடி வந்தனா குரல் கொடுக்க, ஈஸ்வரி எடுத்து வந்த செருப்பை வேண்டாம் என்றான் பரசுராமன்..
“வந்தனா இந்த செருப்பு உனக்காக ஸ்பெசலாக வர வைத்தேன்.. இதைப் போட்டுக்கொள்..” தான் கொண்டு வந்த பையிலிருந்து ஒரு அட்டைப் பெட்டியை எடுத்துக் கொடுத்தான்..
“ஆஹா ரொம்ப அழகாக இருக்கிறதே..” வந்தனா கன்னத்தில் கை வைத்து கூச்சலிட, அவள் செருப்பை எட்டிப் பார்த்த சித்ரலேகாவின் முகம் வாடியது..
“எனக்கு கிடையாதா அண்ணா..?”
“உனக்கு வாங்காமல் வருவேனா செல்லம்.. இதோ பார் இது உனக்கு..”
“ரொம்ப அழகாக இருக்கிறது பரசு.. இது வித்தியாசமாக இருக்கிறதே.. எங்கே வாங்கினாய்..?” மகாராணி ஆச்சரியத்துடன் அந்தக் காலணிகளை வருடினாள்..
“பாம்பேவா அண்ணா..?” ரவீந்தர் விசாரிக்க,




“இல்லடா.. ராஜஸ்தான்.. நம் கடையில் ரொம்ப வருடங்களாக சரக்கு வாங்குவாரே மார்வாடி.. அவர் மூலமாக சொல்லி வைத்து ராஜஸ்தானில் இருந்து வர வைத்தேன்.. மைதிலி இது உனக்கு..”
மைதிலி சுற்றியிருந்தோருக்கிடையே மறுக்க முடியாத நிலைமையில் தயங்கி வாங்கினாள்.. ஆனால் அந்த பெட்டியை பிரித்து பார்த்ததும் ஆச்சரியத்தில் விழி விரித்தாள்..
அவள் கட்டியிருந்த மயில் கழுத்து நிற புடவைக்கு மேட்சான நிறமுடைய காலணி.. பாத விரல்களை முழுமையாக மூடிக்கிடந்த செருப்பின் முன் பகுதியில் பரவி விழுந்து கிடந்தது ஒரு மயிலிறகு.. அதன் பின்பகுதி செருப்பின் பக்கவாட்டுப் பகுதிகளில் நீண்டிருக்க, மயில் தோகையின் மைய கண் பகுதியில் ஒரு கரு நீல் ஒற்றைக் கல் பெரிதாக பொருத்தப்பட்டிருந்தது..
என்ன அழகான செருப்பு.. மைதிலியால் அதனை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.. “பிடித்திருக்கிறதா..?” ரகசியமாய் கேட்ட கணவனை புதிராக பார்த்தபடி திரும்பிக் கொண்டாள்.. எப்படி என் சேலைக்கேற்ற செருப்புகளை வாங்கினான் யோசித்தபடி ஒரு ஸ்டூலில் அமர்ந்து அந்த செருப்பை தன் காலில் மாட்ட முயன்றாள்..
“அப்படி இல்லை மைதிலி.. இப்படி இந்த வயரை இழுத்து இந்த கொக்கியில் மாட்ட வேண்டும்..”
விளக்கம் கொடுத்தபடி அவளுக்கு கீழ் தரையில் மண்டியிட்டு அமர்ந்து அவள் செருப்பின் வயரை இழுத்து மாட்டியவனின் கைகள் அவள் பாதங்களை அழுத்தமாக பற்றியது.. மென்மையாக வருடியது.. மைதிலி புரியாமல் அவன் முகம் பார்க்க பரசுராமனின் பார்வை யாசிப்பாய் அண்ணாந்து மனைவியை பார்த்தபடி இருந்தது..
இவன் இப்போது எதற்கு இப்படி பார்க்கிறான்.. மைதிலிக்கு புரியவில்லை.. அவள் தன் பாதங்களை அவன் கைகளிலிருந்து விடுவித்துக் கொள்ள முயன்றாள்.. பரசுராமன் விடாமல் அழுத்திப் பிடித்தான்.. வந்தனாவும், சித்ரலேகாவும் தங்கள் அலங்காரங்களில் கவனமாக இருக்க, மகாராணி அவர்களுக்கு முதுகு காட்டி கண்ணாடி பக்கம் திரும்பியிருந்தாள்.. கணவன்-மனைவியின் இச் சிறு விளையாட்டை பார்த்தபடி இருந்தது ரவீந்தர்.. அவன் முகம் ஆச்சரியத்தில் இருந்தது..
மைதிலி தன் பாதங்களை விடுவித்துக் கொள்ள முயற்சித்தபடி இருக்க, பரசுராமன் அதற்கு அனுமதிக்க வில்லை.. அவளை நோக்கிய தனது பார்வையையும் மாற்றிக் கொள்ளவில்லை..
“டேய் பரசு உனக்கு வேலை இல்லையாடா..?” மகாராணிதான் கண்ணாடி முன் இருந்து திரும்பவில்லை.. ஆனாலும் பின்னால் நடப்பதை கவனித்திருக்கிறாள்..
“போய் பந்தியை கவனிடா, ரவி நீ போய் வரவேற்பில் நில்லு..”
பரசுராமன் இப்போது மைதிலியின் பாதத்தை விட்டு விட்டு எழுந்தான்.. “வா போகலாம்..” அவள் எழ கை நீட்டினான்..




எங்கே கூப்பிடுகிறான்.. மைதிலி விழித்தாள்..
“பந்தியில் இருப்பவர்களை கவனிக்க வேண்டுமே.. நாம் இருவரும் போகலாம்..”
மைதிலி எழுந்து கொண்டாள்.. நீட்டிய அவன் கையை பிடிக்காமலேயே.. இருவருமாக வெளியேறுகையில் வாசலருகே அமர்ந்திருந்த தம்பியின் கன்னத்தில் இடித்தான் பரசுராமன்..
“இங்கே என்னடா பார்வை..? போய் வர்றவங்களை வரவேற்று கூட்டி வா..” செல்லமாக மிரட்டினான்..
“செய்த தப்பிற்கு மன்னிப்பு கேட்பதெல்லாம் பெரிய விசயம் அண்ணா.. அதுவும் நீங்கள் மன்னிப்பு கேட்ட விதம் சூப்பர்..”
“டேய் ஏதாவது புரளியை கிளப்பி விடாதடா.. நான் யாரிடம் எப்போது.. மன்னிப்பு கேட்டேன்..?” பரசுராமன் தலை உயர்த்தி கெத்தாக காட்டிக் கொள்ள, அண்ணனும், தம்பியும் புன்னகையுடன் மைதிலியை பார்க்க, அவள் யாரோ, யாரைப் பற்றியோ பேசுகிறார்களென்ற பாவத்துடன் அவர்களை கடந்து போனாள்..
“ம்ஹம் அண்ணா ரொம்ப கஷ்டம்..” ரவீந்தர் அண்ணனுக்காக பரிதாபப்பட, அவன் ரவீந்தரை முதுகில் மொத்தினான்.
“டேய் நீ உன் வேலையை பார்த்துக்கிட்டு போடா.. என்னை நான் பார்த்துக் கொள்வேன்..”
“ஒ.கேண்ணா ஆல் தி பெஸ்ட்..” புன்னகையோடு அண்ணனை வாழ்த்திவிட்டு போனான்..
பரசுராமன் கண்களால் மைதிலியை சலித்து பந்தியில் உபசரித்தபடி நின்றிருந்தவளுடன் போய் சேர்ந்து கொண்டான்.. அடிக்கடி அவள் தோளை உரசியபடி
தானும் பந்தியை கவனிக்க தொடங்கினான்.. திருமண வேலைகளாக எங்கே போனாலும் தன்னை உரசியபடியே பின்னால் வந்த கணவனின் செயலில் மைதிலி குழம்பினாள்.. இவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான்..?
சுமதியும், சௌமியாவும் திருப்தியான முகம் காட்ட, சிவராமனும், சரஸ்வதியும் பரவச முகம் காட்டினார்கள்.. இந்த பாவனைகள் மைதிலியினுள் ஒரு வித சலிப்பை தந்தன.. இதோ இப்படி என்னை உரசிக் கொண்டு கொஞ்சலும், குழைவுமாக இருக்கும் இவனது மறுபக்கத்தை இவர்கள் யாரும் அறிய மாட்டார்கள்.. நான் மட்டுமே அறிந்த அரக்க குணம் அது.. விரக்தியாக நினைத்துக் கொண்டாள்..
திருமண நேரம் நெருங்க, நெருங்கிய உறவினர்கள் மணமேடையில் ஏறி மணமக்கள் அருகே நின்றனர்.. உடல் முழுவதும் பூட்டிக் கொண்டிருந்த பொன்னகைகளால் முகம் புன்னகையால் ஜொலிக்க மணமேடையில் அமர்ந்திருந்தாள் வந்தனா.. இந்த பட்டும், நகைகளும் மட்டுமே வாழ்க்கை இல்லை வந்தனா.. அற்பமான இந்த பொருட்களுக்காக அற்புதமான உன் வாழ்க்கையை அடகு வைத்துவிட்டாயே.. மைதிலி மனக்கலக்கத்துடன் வந்தனா முகம் பார்த்து நின்றாள்..




“என்ன யோசனை மைதிலி.. தாலி கட்டும் நேரம் வந்துவிட்டது அங்கே பார்…?” அவள் தோள்களை இடித்துக் கவனப்படுத்தினாள் பரசுராமன்.
கெட்டிமேளம் முழங்கத்துவங்க மலர்களும் அட்சதைகளும் மேடையில் குவியத் தொடங்கின.. தன் கையில் இருந்த அட்சதையை பார்த்தபடி மைதிலி அப்படியே நின்றிருந்தாள்.. அவள் தோள் சுற்றி தன் இடக்கரத்தை போட்டு ஆதரவாக அணைத்தான் பரசுராமன்..
“ஷ் மைதிலி தப்பு எதுவும் நடக்காது.. அவர்கள் நல்லபடியாக வாழ்வார்கள்.. கடவுளை வேண்டிக் கொண்டு அவர்களுக்கு ஆசிர்வாதம் சொல்லு..”
பரசுராமனின் வார்த்தைகள் அந்நேரம் மைதிலிக்கு பாலைவனச் சோலையாக தெரிந்தது..
“தாயே மீனாட்சி இவர்கள் இருவரும் நெடுங்காலம் ஒற்றுமையான தம்பதிகளாக வாழ வேண்டும் தாயே..” மதுரையை ஆண்டவளிடம் மனமுருக வேண்டிவிட்டு
தன் கையிலிருந்த அட்சதைகளை மணமக்கள் மேல் போட்டாள்.. பரசுராமன் மனைவியை பின்பற்றினான்.. மந்திரங்கள் முழங்க, மங்கல இசை ஒலிக்க கல்யாணசுந்தரம் வந்தனாவின் கழுத்தில் திருப்பூட்டினான்.
“மைதிலி மறுவீட்டுக்கு நம் வீட்டுக்கு பொண்ணு மாப்பிள்ளை வருவதற்கு முன்பு, நீ போய் நம் வீட்டை ஒரு பார்வை பார்த்து விடுகிறாயா..? நேற்று நம் சொந்தங்கள் நிறையபேர் அங்கே தங்கினார்கள்.. வீடு எப்படி கிடக்கிறதோ தெரியவில்லை.. போட்டோ வீடியோ எடுப்பார்கள்.. நீ முன்னால் போய் கொஞ்சம் சரிப்படுத்தி வைத்து விடேன்..”
மகாராணியின் பேச்சுக்கு தலையசைத்து கிளம்பிய மைதிலியுடன் அட்டைப்பூச்சியாய் ஒட்டிக் கொண்டான் பரசுராமன்..
“நானும் உடன் போகிறேன்மா.. மைதிலியை வீட்டில் கொண்டு போய் விட ஆள் வேண்டுமே..”
காரை ஓட்டியபடி நொடிக்கொரு தடவை தன்னை திரும்பிப் பார்க்கும் கணவனின் பார்வையை உணர்ந்தும் மைதிலி ஒருமுறை கூட அவன்புறம் திரும்பவில்லை..
“இந்த சேலை உனக்கு பிடித்திருக்கிறதா மைதிலி..? உன் நிறத்திற்கும், உடலுக்கும் அழகாக பொருந்தியிருக்கிறது.. அன்று நீ புடவை செலக்ட் பண்ண வரமாட்டேனென்று விட்டாய்.. இந்தப் புடவையை உனக்காக நான்தான் செலக்ட் செய்தேன்..”
மைதிலிக்கு ஆச்சரியம்தான்.. இந்த புடவை மிக அழகாக இருந்தது.. இவ்வளவு ரசனையானவனா அவள் கணவன்..?




“உனக்கு புடவை எடுத்த அன்றே அதற்கு பொருத்தமாக இந்த செருப்புகளையும் ஆர்டர் கொடுத்து விட்டேன்.. அந்த மார்வாடி என்னிடம் போட்டோக்கள் கொண்டு வந்து காட்டினார்.. அதில் இரண்டு மூன்று மாடல்களை சேர்த்து உன் புடவைக்கு பொருத்தமாக
இந்த மயில்தோகை ஐடியாவும் பண்ணி இந்த செருப்புகளை ஸ்பெசல் ஆர்டர் கொடுத்து வாங்கினேன்..”
இதுவும் மைதிலிக்கு ஆச்சரியம் கொடுக்கும் தகவலே.. தொட்டதெற்கெல்லாம் மனைவியை பாய்ந்து பாய்ந்து அடிக்கும் ஒரு சராசரி ஆணின் ரசனை, இது
போல் மேம்பட்டதாக இருக்குமென அவளால் நம்ப முடியவில்லை..
“உனக்குப் பிடித்திருக்கிறதுதானே..?” மனைவியின் விருப்பத்தைக் கேட்கும் ஆவல் அவனிடம்..
“சேலையும், நகையும், செருப்பும் மட்டுமே வாழ்க்கை என நினைக்கும் சராசரி பெண்ணில்லை நான்..” பட்டென பேசினாள்..
பரசுராமன் மௌனமாகிவிட்டான்.. அதன் பிறகு கார் ஓட்டுவதில் மட்டுமே கவனம் காட்டினான்..
இருவருமாக வீட்டிற்குள் வந்ததும் வாசல் கதவை பூட்டி அதன் மேல் சாய்ந்து நின்றான் பரசுராமன்..
“மைதிலி..” வீட்டினுள் போய்க் கொண்டிருந்தவளை அழைத்தான்.. அவனது குரலில் வேறுபாட்டை உணர்ந்த மைதிலி மெல்ல அவனை திரும்பிப் பார்த்தாள்.. பரசுராமனின் பார்வை மயிரிழை கூட பிசகாது மனைவியின் மீது அச்சடித்து நின்றிருந்தது..

What’s your Reaction?
+1
9
+1
4
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!