Serial Stories Sollamal Thotu Sellum Thenral சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் – 27

27

பிரியத்தின் அடர்த்தி கூடும் போது
கைகுமித்து விடுகிறாய்..
இனியென்ன இருக்கிறது..?
என்னை பிழிந்து தருவதை தவிர..




“மைதிலி..”

பின்னால் கேட்ட அழைப்பில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள் மைதிலி.. அவள் மன அமைதிக்காக தனிமை வேண்டி இங்கே வந்து இந்த மரத்தடியில் அமர்ந்திருந்தாள்.

“ஏன் மைதிலி இங்கே தனியாக வந்து உட்கார்ந்து விட்டாய்..?”

“அது.. சும்மா கொழுந்தன்.. உள்ளே ரொம்ப இறுக்கமாக இருந்தது.. அதனால்தான் இங்கே கொஞ்சம் காற்றாட உட்கார்ந்தேன்..”

“உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் மைதிலி..”

“சொல்லுங்க கொழுந்தன்..”

“மைதிலி ப்ளீஸ்.. கொஞ்ச நேரம் நமக்கிடையே இருக்கும் இந்த உறவு முறையை மறந்து விட்டு, நாம் நமது கல்லூரிக் காலத்திற்கு போகலாம்.. நான் என்னுடைய கல்லூரி தோழி மைதிலியிடம் பேச விரும்புகிறேன்..”

மைதிலி ஒரு நிமிடம் கண்களை இறுக மூடித் திறந்தாள்..

“இங்கே உட்கார் ரவி.. உனக்கு என்ன வேண்டும்..?” அருகிலுள்ள இடத்தைக் காட்டினாள்..

அவளருகே அமர்ந்து கொண்ட ரவீந்தர்.. “நீ ஏன் இப்படி மாறிவிட்டாய் மைதிலி..” என்றான்.

“நானா..? நான் என்ன மாறிவிட்டேன்..?”




“ஒன்றுமறியாத அப்பாவி போல் நடிக்கிறாயே.. இதைத்தான் சொல்கிறேன்.. என் தோழி மைதிலிக்கு இது போன்ற பாவனைகள் வராது.. அவள் நேர்மையானவள்.. நடிக்க தெரியாதவள்.. எப்போதும் நிமிர்ந்து நிற்பவள்.. அவள் இப்போது எங்கே போனாள்..?”

“நான் அப்படியேதான் இருக்கிறேன் ரவி..” மைதிலியின் குரல் இறங்கியிருந்தது..

“பொய் மைதிலி.. நீ பழைய மைதிலியாக இருந்திருந்தால் இங்கே நம்ம வீட்டில் உனக்கு நடந்து கொண்டிருக்கும் கொடுமைகளுக்கு இப்படியா வாய் மூடிக் கொண்டிருப்பாய்..?”

மைதிலி பதில் சொல்லாமல் தன் விரல் நகங்களை ஆராய்ந்தாள்..

“உனக்கு நம்ம சண்முகவள்ளி மேடத்தை நினைவு இருக்கிறதா மைதிலி..? நம் காலேஜ் புரபசர்.. அவருக்கும் அவர் கணவருக்கும் ஏதோ குடும்ப சண்டை.. அவர் கணவர் நம் மேடத்துடன் பேச காலேஜூக்கு வந்தவர், எப்படியோ பேச்சு வளர்ந்து நம் மேடத்தை கைநீட்டி அடித்துவிட்டார்.. அப்போது ஸ்டாப் ரூமில் சில ஸ்டூடண்டும் லெக்சரர்சும் தான் இருந்தார்கள்.. ஆனாலும் அப்போது அங்கே இருந்த நீ எப்படி கோபத்தில் பொங்கினாய்.. அது எப்படி ஒரு பெண்ணை அவர் உங்கள் மனைவியாகவே இருந்தாலும் இப்படி பொது இடத்தில் வைத்து அடிக்கலாம் என மேடம் தடுக்க தடுக்க அவர் கணவரிடம் சண்டைக்கு போனாயே.. இறுதியில் மேடத்தின் கணவர் மேடத்திடம் சாரி சொன்ன பிறகுதானே விட்டாய்.. இந்த சம்பவம்தான் காலேஜில் உன்னை நான் கவனிக்க வைத்தது.. உன்னுடைய தோழமை வேண்டும் என்று ஏங்க வைத்தது.. அநீதி கண்டு பொங்கிய அந்த என் தோழி இப்போது எங்கே மைதிலி..?”

மைதிலி இன்னமும் தன் நகங்களைத்தான் ஆராய்ந்து கொண்டிருந்தாள்..




“லேடீஸ் பாத்ரூமிற்குள் எட்டிப் பார்த்தவன், காதலென்ற பெயரோடு கல்லூரிக்கு பின்புறமிருந்த மறைவு பகுதிக்கு உடன் படித்தவளை கூட்டிப் போனவன், பிராக்டிகல் கிளாசில் சில்மிசம் செய்த புரபசர், ஏன் ஒரு மாதிரி தவறான வார்த்தைகள் பேசிய கரஸ்பாண்டன்ட் என யாரையும், எந்த ஆணுடைய அநீதியையும் நீ மன்னித்த தில்லை.. தைரியமாக எதிர்த்து நின்றாய்.. என்னைப் போல் ஒருத்தி என உன்மீது எனக்கு விசேச பிரியம் உண்டானது.. உன்னை எனது நெருங்கிய நண்பர்களில் ஒருத்தியாக உயர்த்திக் கொண்டு, எப்போதும் உன்னுடன் சேர்நது சுற்றிக் கொண்டிருந்தேன்.. கல்மிசமில்லாத நம் தூய நட்பை தவறாகப் பார்த்தவர்களைக் கூட கண்டு கொள்ளாமல் நாம் தொடர்ந்து நட்புடனே பழகி வந்தோம்.. என்ன மைதிலி இதெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கிறது தானே..?”

“என் வாழ்வின் பசுமையான நாட்கள் அவை ரவி.. என்னால் மறக்க முடியாது..”

“அப்படியே நாம் இருந்திருக்கலாம் மைதிலி, ஆனால் விதி விடவில்லை.. உனக்கும் என் அண்ணனுக்கும் திருமணம் பேசினார்கள்.. எனக்கு ஏனோ சரி வராது என்று தோன்றியது.. எங்கள் வீட்டிற்கு வாழ வரும் பெண் எதிர் பேச்சு பேசாது, சத்தமில்லாமல் அடுப்படி வேலைகளை பார்க்கவேண்டும்.. இந்த குணங்கள் உனக்கு பொருந்தாது.. எனவே இந்த திருமணமும் பொருந்தாது என நினைத்தேன்.. எங்கள் வீட்டிலும் இந்த கல்யாணத்தை எதிர்த்து பேசினேன்.. அப்பாவும், அண்ணனும் ஒரு அதட்டலில் அடக்கி விட்டனர்.. உன் மூலமாக திருமணத்தை நிறுத்த எண்ணி உன்னிடம் பேச முயன்றேன்.. நீ அப்போதெல்லாம் என்னிடம் பேசவே தயாராக இல்லை.. விலகி விலகி போனாய்.. ஏன் மைதிலி..?”

“பெரிதாக எந்த விசயமும் இல்லை ரவி.. உன் அண்ணனுடன் எனக்கு திருமணம் பேசுகிறார்கள்.. நீயும் அது விசயம் பேசத்தான் என்னை அணுகுகிறாய் என தெரியும்.. அது இவ்வளவு சீரியசாக இருக்கும் என நான் நினைக்கவில்லை.. ஒரு நண்பனாக என்னை திருமண விசயம் சொல்லி கலாட்டா செய்வாய் என நினைத்தேன்.. எனக்கு என்னவோ அப்பொழுதெல்லாம் உன்னிடம் பேசவே மிகவும் வெட்கமாக இருக்கும்.. அதுதான் விலகி போனேன்..”

“எல்லாவற்றையும் சரியாக கணிப்பாயே மைதிலி.. இந்த விசயத்தில் மட்டும் எப்படி தவறான எண்ணம் கொண்டாய்..? நான் உன்னிடம் எங்கள் வீட்டை, என் கோபக்கார அண்ணனை விளக்க முயன்றேன்.. நன்றாக யோசித்து இந்த திருமண முடிவை எடு என உன்னிடம் எச்சரிக்கை கொடுக்க நினைத்தேன்.. ஆனால் அதற்கான சந்தர்ப்பத்தை எனக்கு சூழலும் கொடுக்கவில்லை.. நீயும் கொடுக்கவில்லை…!”

மைதிலி மீண்டும் மௌனமாகிவிட்டாள்..




“அதன் பிறகு உன்னை இங்கே இதே மண்டபத்தில் அதோ அந்த சுவர் ஓரமாக உங்கள் திருமணத்திற்கு முதல் நாள் சந்தித்தேன்-இல்லையில்லை நீயாகவே என்னைத் தேடி வந்தாய்.. ஒரே ஒரு நொடி இந்த திருமணத்தை நிறுத்தச் சொல்கிறாயோ என நினைத்தேன்.. ஆனால் நீ இந்த திருமணம் நிற்கக் கூடாது என்றாய்.. இந்த திருமணத்தை நடத்த வேண்டும் என்றாய்.. அப்போது உன் முகத்தில் தெரிந்த பரிதவிப்பு.. உண்மையாகவே சொல்கிறேன் மைதிலி அப்போது நான் மிக நிம்மதியாக உணர்ந்தேன்.. என் தோழிக்கு இந்த திருமணம் பிடித்திருக்கிறது.. அவள் இந்த திருமணத்தை விரும்புகிறாள்.. மிகப் பெரிய ரிலாக்சேசனை அப்போது உணர்ந்தேன்.. உற்சாகமாக உன்னை அண்ணனிடம் அழைத்து போனேன்.. திருமணம் நிற்காமலிருக்க திட்டங்கள் போட்டோம்.. அழகாக திருமணத்தை நடத்தினோம்.. என் மிகப் பிரியமான தோழி எனக்கு உறவினளாக மாறியதில் எனக்கு மிக மகிழ்ச்சி..”

“நானும் மிகுந்த மன திருப்தியோடுதான் உங்கள் வீட்டிற்கு மருமகளாக வந்தேன் ரவி..”

“வந்தாய் மைதிலி.. ஆனால் எங்கள் வீட்டிற்குள் வந்த பிறகு நீ ஏன் உன் குணாதிசயங்களை மாற்றிக் கொண்டாய் மைதிலி..? ஏன் அடக்கமாக அடுப்படிக்குள் போய் உட்கார்ந்தாய்..? தலை நிமிராமல் வீட்டு வேலைகள் செய்தாய்..?”

“இது பெரிய அதிசயமில்லை ரவி.. இதுதான் நம் நாட்டு பெண்கள் ஒவ்வொருவரின் நிலை.. திருமணத்திற்கு முன் ஒரு வாழ்க்கை, திருமணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை… இது நம் நாட்டு பெண்களின் தலையெழுத்து.. நானும் விதிவிலக்கல்ல..”

“சராசரி பெண்ணாகி விட்டாயே மைதிலி..” ரவீந்தரின் வேதனை குறையவில்லை..




“அதுவும் சமீபமாக நம் வீட்டில் உனக்கு நடக்கும் அநியாயங்கள், அவற்றையெல்லாம் எப்படி பொறுத்து போகிறாய் மைதிலி.. அண்ணன் இந்த அளவு கொடுமைக்காரராக இருப்பார் என்பது எனக்கு அதிர்ச்சி என்றால் அதைவிட பெரிய அதிர்ச்சி அவரது அராஜகங்களையெல்லாம் நீ தாங்கிக் கொண்டு இருப்பது.. தோழனாகவும் முடியாமல் கொழுந்தனாகவும் முடியாமல் தவித்துக் கொண்டிருப்பது நான்தான்.. சுமதியும், சௌமியாவும் அன்று என்னை வெளியில் பார்த்து என் முகத்தில் காறி துப்பாத குறைதான்.. அதன் பிறகு உன்னிடம் பேச முயல நீ வழக்கம் போல் விலகி போனாய்.. ஏன் மைதிலி..?”

“ப்ச்.. என்ன பேச சொல்கிறாய் ரவி..?”

“அன்று சுமதி, சௌமியா முன்னால்.. பிறகு நம் வீட்டில் உள்ள அனைவர் முன்னாலும்.. மீண்டும் மீண்டும் நீ அடி வாங்குகிறாய்.. அமைதியாக இருக்கிறாய்.. எனக்கு புரியவில்லை மைதிலி.. ஏன் சின்னண்ணா.. வந்தனா கல்யாணத்தை நிறுத்த நினைக்கிறாய்..? ஏன் அண்ணனிடம் அடி வாங்கிக் கொண்டு பேசாமல் இருக்கிறாய்..?”

மைதிலியிடமிருந்து பதிலில்லை..

“நீ பேசமாட்டாய் என்று எனக்கு தெரியும் மைதிலி.. நீ மௌனம் காக்க காக்க நான் என்னை பெரிய குற்றவாளியாக உணர்கிறேன்.. இதோ இப்போது சற்று
முன் கூட அண்ணனிடம் அறைக்குள் வைத்து அடி வாங்கினாயே அதையும் வெறுமனே பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்.. அது மட்டுமல்ல அப்போது உன்னைப் பார்க்க வந்த நம் தோழிகளுக்கு உன் நிலைமை தெரியக் கூடாதென பொய் சொல்லி திருப்பி வேறு அனுப்பினேன்.. அந்த நேரத்தில் நீ மைதிலியின் தோழனாக இல்லாமல் அருணாச்சலத்தின் மகனாக பரசுராமனின் தம்பியாக மாறி விட்டாயே என என் மனமே என்னை குத்திக் கொன்று கொண்டு இருக்கிறது..”

“இதில் உன குற்றம் என்ன இருக்கிறது ரவி..? தேவையில்லாமல் உன்னை நீயே குழப்பிக் கொள்ளாதே.. நீ சரியாகத்தான் நடந்து கொள்கிறாய்.. ஏதாவது நினைத்து உன்னையே குழப்பிக் கொள்ளாதே..”

“இல்லை மைதிலி நான் சரியில்லை.. ஒரு உண்மையான நண்பனுக்கான கடமையை நான் செய்யவில்லை.. இதுவரை அப்படி இருந்தேன்.. இனியும் அதே போல் இருக்கமாட்டேன்.. நாம் இப்போது ஒரு முடிவுக்கு வருவோம்.. நாளை இந்த திருமணம் நடந்து முடியட்டும்.. அதன் பிறகு நீ.. உனக்கு வேதனை தரும் இந்த வாழ்க்கையை தொடர்ந்து வாழ வேண்டும்.. நீ உன் அம்மா வீட்டிற்கு போய்விடு..”

“வாயை மூடு ரவி..”




மைதிலியின் வேகத்தில் ரவீந்தர் திகைத்துப் போனான்.. வேகத்துடன் எழுந்து நின்ற மைதிலி உதடுகளை கடித்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.. கண்களை இறுக மூடி நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.. பின் மெல்ல கண்திறந்தாள் புன்னகைத்தாள்..

“என்ன கொழுந்தனாரே நாளைக் காலையில் கல்யாணம் ஆயிரம் வேலை இருக்கு.. அதைப் பற்றி யோசிக்காமல் கண்ட கழுதையெல்லாம் பேசிக் கொண்டு இருக்கிறீர்களே.. சின்னப் பையன்ங்கிறது சரியாத்தானே இருக்கிறது.. வெட்டியாக வாய் பார்க்காமல் எந்திரிச்சு உள்ளே போங்க கொழுந்தனாரே காலையில் சீக்கிரம் எழுந்திரிக்க வேண்டும்..”

சொன்னதோடு தாயின் பரிவோடு தன் கையை நீட்டி ரவீந்தரின் தலையை வருடினாள்.. ரவீந்தர் கண்ணசைக்காமல் அவளைப் பார்த்தபடி இருந்தான்.. பெருமூச்சு விட்டான்..

“சோ யூ ஹேவ் டிசைடேடு யுவர் லைப்.. ரைட்..?”

“யெஸ் இட்ஸ் மை லைவ்.. ஒன்லி ஐ ஹேவ் தி ரைட்ஸ் டூ டெட்டர்மைன் இட்…” மைதிலி… புன்னகைத்தாள்… எழுந்து மண்டபத்தை நோக்கி நடந்தாள்.. இரண்டு எட்டுக்கள் வைத்து விட்டு நின்று திரும்பி..




“இனி நமக்குள் அண்ணி-கொழுந்தன் உறவு முறை மட்டுமே இருக்கட்டும்.. நம் நட்பை நாம் மறந்து விடுவோம்.. அண்ணி என்ற மரியாதையோடே நில்லுங்கள்..” உறுதி தெறிக்க பேசியவள், அந்த பேச்சின் கடுமையை குறைக்க இறுதியில் புன்னகைத்தாள்..

“குளிர ஆராம்பித்துவிட்டது கொழுந்தன்.. உள்ளே போய் சமர்த்துப் பிள்ளையாக படுங்கள்.. நாளை நிறைய வேலை இருக்கிறது..” போய்விட்டாள்.. ரவீந்தர் அதன் பிறகு வெகுநேரம் அங்கேயே அமர்ந்திருந்தான்..

What’s your Reaction?
+1
6
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!