Serial Stories Sollamal Thotu Sellum Thenral சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் – 25

25

சூறைக்காற்றும் பாறை போக்குமாய்
இப்போதுதான் மாறிவிட்டதிந்த வாழ்வு
உன் கட்டை விரல் என் கைப்பிடி விட்டு
விலகிய பின்பு தான்..




“எனக்கு இந்தப் புடவை.. இது ஜரி டூ ஜரிதானே..?” தங்கமாய் மின்னிய அந்தப் புடவையை ஆவலுடன் பிரித்து தன் தோளில் போட்டுக் கொண்டான் வந்தனா..

குங்குமத்தில் தங்கத்தை ஊற்றியது போல் சிவப்பும், கோல்டுமாக மின்னியது அந்தப் புடவை..

“இது முகூர்த்த சேலைதானே..?” மகாராணி விசாரிக்க, ஈஸ்வரி மகளின் தோளிலிருந்து புடவையை வாங்கி, பின்னால் திருப்பி அதன் பார்டர் பகுதியை ஆராய்ந்தாள்..

“ஆமாங்கம்மா முகூர்த்த சேலைதாங்க… என்பத்தையாயிரம் வரும்.. நீங்க என்னம்மா பார்க்கிறீங்க..? ஒரிஜினல் எங்க ஊர் பட்டுங்கம்மா.. நீங்க இந்த
அளவு ஆராய வேண்டாம்.. அருணாச்சலம் அண்ணாச்சி வீட்டுக்கு சாதாரண சேலையை கொடுப்போமா..? நீங்க தலைமுறையாக எங்க கடையில்தானே வாங்குகிறீர்கள்.. அண்ணாச்சி சொன்னாரென்றுதான் நாங்கள் எங்கள் கடையையே கொண்டு வந்துள்ளோம் அள்ளிக் குவித்துக் கொள்ளுங்கள்..”

அந்த புடவை வியாபாரி சொன்னது உண்மைதான்.. கிட்டதட்ட கடை போலத்தான் அவர்கள் வீட்டின் கூடம் முழுவதும் பட்டுச்சேலைகள் இரைந்து கிடந்தன.. வாசலில் மிகப்பெரிய வேன் நின்றிருந்தது.. அது காஞ்சிபுரத்தின் பெரிய கடை வேன்… அருணாச்சலம் கேட்டுக் கொண்டதற்கிணங்க பட்டுச்சேலைகளோடு அவர் வீட்டு வாசலில் வந்து நின்று கொண்டிருக்கிறது வழக்கமாக வீட்டு விசேசங்களுக்கு காஞ்சிபுரம் போய் பட்டு எடுப்பவர்கள்தாம், இந்த முறை பெண்கள் வீணாக அங்கே வரை அலைய வேண்டாமென அருணாச்சலம் செய்த ஏற்பாடு இது..




அந்த கடை ஊழியர் அவ்வளவு சொன்ன பிறகும் ஈஸ்வரி அந்தப் புடவையின் முந்தானையும், உடலையும் இணைக்கும் பகுதியை ஆராய்ந்து தனித்தனியே நெய்து சேர்த்திருந்த அதன் காஞ்சிபுரத் தன்மையை அறிந்து கொண்ட பிறகே திருப்தியானாள்.. அதிக உழைப்பு கொண்ட காஞ்சிபுர பட்டுக்களின் சிறப்பே இதுதானே..

“நீங்க ஆயிரம் உறுதி சொன்னாலும், நாங்களே பார்த்தால்தான் எங்களுக்கு திருப்தி.. என்னடி உனக்கு இந்தப் புடவை சரிதானா..?” ஈஸ்வரி கேட்க, முதலில் வேகமாக எடுத்த வந்தனாவின் முகத்தில் இப்போது யோசனை தெரிந்தது..

“இந்த புடவை விலை எவ்வளவு சொன்னீர்கள் அண்ணா..?”

“எண்பத்தையாயிரம் அம்மா..”

“எனக்கு இது வேண்டாம்.. வேறு காட்டுங்கள்..”

“ஏன்டி இதற்கு என்ன..?”

“இது ரொம்ப சீப்பாக இருக்கு.. எனக்கு கொஞ்சம் காஸ்ட்லியாக வேண்டும்.. அதுதான் நன்றாக உழைக்கும்.”

வந்தனாவின் பதில் காற்றில் மிதந்து வந்து அடுப்படியில் இருந்த மைதிலியின் காதில் விழுந்தது.. அவள் இதழ்கள் விரக்தியாக சிரித்தன..

ஒரு லட்சத்திற்கும் அதிகமான விலையில் காட்டும் புடவையைத்தான் வந்தனா தேர்ந்தெடுப்பாள்.. இதனை அவள் எந்த சபை நடுவிலும் நின்று சொல்ல தயார்..

“இதைப் பாருங்கம்மா.. இது ஒன்று இருபத்தியைந்து வரும்..” கடை ஊழியர் இப்போது எடுத்துப் போட்ட அரக்கு தங்க புடவை வந்தனாவிற்கு மிகவும் பிடித்து விட்டது..

“ஹை அரக்கு கலர்.. என் நிறத்திற்கு எடுப்பாக இருக்கும்..” இதையே வாங்கிக் கொள்கிறேன்.




உள்ளே மைதிலியின் உதட்டில் இகழ்ச்சிப் புன்னகை.. அவளுக்கு திருமணத்தின் போது கணவன் வீட்டார் எடுத்துக் கொடுத்த முகூர்த்த பட்டின் விலை ஒருலட்சம்.. அந்த ஒரு லட்சத்தை விட பத்து ரூபாயாவது அதிகம் இருக்கும் பட்டுச் சேலைதான் வந்தனா வாங்கிக் கொள்வாளென அவளுக்கு தெரியும்..

“அடுத்து நிச்சயப்பட்டு காட்டுங்க.. சித்ரா நீ இந்த ரகத்தில் உனக்கு புடவை எடுத்துக்கோம்மா..” மகாராணி மகளிடம் சொன்னாள்..

“ஏம்மா உங்க மருமகளுக்குத்தான் லட்ச ருபாய்க்கு எடுத்து தருவீங்களா..? எனக்கு ஐம்பதினாயிரம் தானா..?” சித்ரலேகா மற்போர் வீரனைப் போல் தயாராக நின்றாள்..

“ஐயோ அப்படி யாருடா செல்லம் சொன்னது..? உனக்கு இல்லாததா..? ஏய் நீ பேசாமல் இருடி.. குழந்தை அவளுக்கு பிடித்த சேலையை எடுத்துக்கட்டும்.. நீ உனக்கு எது வேணுமோ அதை எடுத்துக்கடா ராசாத்தி..” அருணாச்சலம் பாசத்துடன் மகளிடம் பேச, சித்ரலேகா உற்சாகமானாள்..

முதலில் போடப்பட்ட மணப்பெண்ணிற்குரிய முகூர்த்த சேலை குவியலிலேயே தனக்கான சேலையை தேடத் துவங்கினாள்.. அவளது செய்கையை கோபமாக பார்த்தாள் வந்தனா.. எனக்கும் இவளுக்கும் ஒரே விலை சேலையா.. அவள் மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தது.. இறுதியில் சித்ரலேகா தேர்ந்தெடுத்த ரத்த சிவப்பு நிற சேலையின் விலை கிட்டதட்ட வந்தனாவின் சேலை விலை.. வந்தனா விளக்கெண்ணெய் குடித்தது போல் முகத்தை வைத்தக் கொண்டாள்..

அவளது முக பாவனையில் பரசுராமனுக்கு சிரிப்பு வர அவன் தான் அமர்ந்திருந்த சேரிலிருந்து குனிந்து கீழே அமர்ந்திருந்த வந்தனாவின் காதிற்குள் கிசுகிசுத்தான்..

“வந்தனா கல்யாணப் பொண்ணுக்கு ஆறுபட்டு சேலைகள் எடுப்பது நம்ப குடும்ப வழக்கம்.. நீ கூடுதலாக ஒன்று எடுத்துக்கோ.. சித்ராவோட புடவையோடு கணக்கு போடும் போது சரியாகிவிடும்..” ஆலோசனை சொன்னான்.

“ஹை அப்படியா சொல்றீங்க….?” வந்தனா விழிகள் வட்டமாக விரிந்தது..

“மகா மைதிலிக்கும் இதே ரகத்தில் எடுக்க சொல்லி விடு.. எல்லோருக்கும் ஒரே விலையில் இருந்து விட்டு போகட்டும்..” அருணாச்சலம் சொல்ல மகாராணி தலையசைத்து மீண்டும் மைதிலியை அழைத்தாள்..

இனியும் உள்ளேயே இருக்க முடியாது என்று தெரிவிந்துவிட மைதிலி வேண்டா வெறுப்பாக கூடத்திற்கு வந்தாள்… வந்து நின்றவளின் கண்களில் பட்டது, இயல்பான பெண் ஆர்வத்துடன் பார்க்க கண்களை பறிக்கும் வகையில் அங்கே கிடந்த பட்டுப் புடவைகள் அல்ல… சேரில் அவனும் தரையில் அவளுமாக அமர்ந்திருந்தாலும் குனிந்து சிறு குரலில் ரகசியம் பேசிக் கொண்டிருந்த பரசுராமனும், வந்தனாவும்தான் மனதின் வெறுப்பு கண்களில் தேங்கி நிற்க அவள் நின்ற இடம் வேலி மரக் காடானது அவளுக்கு..

“நீயும் இந்த சேலைகளிலிருந்து உனக்கு பிடித்ததை எடுத்துக்கோம்மா..”




“எனக்கு பட்டுப்புடவைகளியெல்லாம் அவ்வளவு பழக்கம் கிடையாது அத்தை, கலர் கூட செலெக்ட் பண்ண தெரியாது.. நீங்களே எனக்கு ஒன்று எடுத்து விடுங்கள்..” தரையை பார்த்தபடி சொல்லிவிட்டு மீண்டும் அடுப்படிக்குள் போய்விட்டாள்.

பட்டுப்புடவை பார்க்க விரும்பாத பெண்ணா.. அங்கே வந்திருந்த கடை ஊழியர்களிலிருந்து குடும்பத்து ஆட்கள் வரை எல்லோருக்குமே மைதிலியின் நடவடிக்கை ஆச்சரியமே.. பரசுராமனின் முகம் இறுகியிருந்தது.

“சரி சரி அடுத்தடுத்த புடவைகளை எடுங்க..” அருணாச்சலம் குரல் கொடுக்க, மீண்டும் அனைவரும் புடவைகளுக்குள் நுழைந்தனர்..

“மாடம் டிசைன் காட்டுங்க..”

“மல்லி மொட்டு டிசைன்ல அரக்கு கலர் வேணும்..”

“இந்த இலந்தைப் பழ டிசைன்ல மாம்பழ மஞ்சள் கலர் இருக்கிறதா..?”

“அண்ணி உங்களுக்கு அன்னம் டிசைன் எடுத்துக்கோங்க..”

“நான் இந்த மயில் டிசைன் எடுத்துக்கலாமான்னு பாக்குறேன்..”

“அத்தை இந்த யாழி டிசைன் புடவையை நான் துணைப் பட்டாக எடுத்துக்குறேன்..”

“அம்மா எனக்கு இந்த யானை டிசைன் சேலை ஒன்றும் கூடுதலாக இருக்கட்டும்..”

புடவை பற்றிய பேச்சுக்கள் காதில் விழ காதுகளை மூடிக் கொண்டாள் மைதிலி.. அங்கிருந்து எங்கேயாவது தூரமாக ஓடிப் போய் விட வேண்டும் போலிருந்தது அவளுக்கு..

அவளுக்கு கொஞ்சமும் பிடிக்காத இந்த திருமணத்தை நிறுத்துவதற்காக அவளால் முடிந்த அளவு வீட்டினர் அனைவரிடமும் முயற்சித்துவிட்டாள்… ஆனால் கடுகளவு பலன் கூட அவளுக்கு கிடைக்கவில்லை.. இதோ திருமண ஏற்பாடுகள் ஜோராக நடந்து கொண்டிருக்கின்றன..

அன்று அத்தனை பேருக்கு எதிரே வைத்து அவளை அந்த அளவு அடித்த பின்னும் கூட, மைதிலி பரசுராமனிடம் அன்றே பேசவே முயன்றாள்.. இரவு அருகே பேச வந்தவளைப் பார்த்து “வா..” எனக் கை நீட்டினான் அவன்..

அவன் அழைப்பின் நோக்கம் புரிய மைதிலியின் மனம் தனலாய் எரிந்தது.. ஆனாலும் தன் கொதிப்பை அடக்கிக் கொண்டு,




“உங்களிடம் சில விபரங்கள் பேச வேண்டும்..” என்றாள்..

“நம் இருவருக்கிடையே பேச இதைத் தவிர வேறு எந்த விசயமும் கிடையாது.. இது சம்பந்தமாக என்ன விபரங்கள் வேண்டுமானாலும் கேள்.. விளக்கங்கள் தருகிறேன்.. மற்ற விசயங்களென்றால் ம்ஹீம் பேச்சே கிடையாது..” கட்டிலை கைகளால் தட்டிக் காண்பிடித்து அவன் சொல்ல மைதிலி நிஜமாகவே அருவெறுத்து போனாள்..

தன் அருவெறுப்பை மறைக்காமல் முகத்திலும் காட்டியவள்.. “சாக்கடையில் குளிக்க சொல்வது போல் இருக்கிறது..” கட்டிலில் இருந்து தலையணை ஒன்றை உருவி எடுத்து தரையில் போட்டுக் கொண்டு படுத்தாள்.

“ஏய் என்னடி சொன்ன..?” தரையில் படுத்திருந்தவளின் தலை முடியை கொத்தாக பற்றித் தூக்கினான் அவன்..

சுள்ளென்று வலித்த தலைமுடியினால் கவலையின்றி நேராக அவன் பார்வையை சந்தித்தாள் அவள்.

“என்ன செய்ய போகிறீர்கள்..? நீங்கள் ஆணென்று நிரூபிக்க வேண்டுமா..? அந்த வகை நிரூபணங்கள் எனக்குத் தேவை இல்லை.. ஏனென்றால் அதனை நான் முன்பே மிக நன்றாகவே அறிவேன்.. மிகத் தெளிவாகவே அதை எனக்குக் காட்டியிருக்கிறீர்கள்.. அது பற்றாது.. இன்னும் வேண்டுமென்று நினைத்தால், அதற்கும் நான் தயார்தான்.. மனம் மரித்து போய் உடலும் சவமாகி ரொம்ப நாட்களாகி விட்டது.. சவங்களுக்கு நடப்பதை உணரும் ப்ரக்ஞை இருக்காது.. நீங்கள் உங்கள் இஷ்டம் போல்..”

பரசுராமனின் முகத்தில் அடிவாங்கிய அதிர்ச்சி தெரிய, அவள் பேச்சை நிறுத்த, அப்படியே அவள் முகத்தை திருப்பி, தரையில் கிடந்த தலையணையில் புதைத்து அழுத்தினான்..

“வாயை மூடுடி, இனி ஒரு முறை வாயைத் திறந்தாயானால் உன்னைக் கொன்று குழியில் இறக்கி விடுவேன்..”

“இனித்தான் அதை செய்யப் போகிறீர்களா..?” தலையணையில் புதைந்து கிடந்த முகம் கேட்ட கேள்வியில் ஆத்திரமானவன், எழுந்து அறையை விட்டு வெளியே போய்விட்டான்..

மைதிலி வெகுநேரம் அழுதபடி தரையில் தூங்காமல் கிடந்தாள்.. அதன் பிறகு கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை.. ஒருவர் இருக்கும் இடத்தில் அடுத்தவர் இருப்பதில்லை.. ஒரே வீட்டிற்குள் விரோதிகள் போல் வலம் வந்தனர்.. இரவுகளில் அவன் கட்டிலிலும், அவள் தரையிலுமாக படுத்துக் கொண்டனர்.. ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதை கூட தவிர்த்தனர்..

அதன் பிறகும் மைதிலி அந்த வீட்டில் மற்றவர்களிடம் திருமணத்தை நிறுத்துவதற்கான பேச்சுக்களுக்கு முயவே செய்தாள்.. வீட்டுப் பெரியவர்களான ஈஸ்வரி, மகாராணி, அருணாச்சலம் பக்கம் அவளால் போகவே முடியவில்லை.. ஈஸ்வரியும், மகாராணியும் அப்படி எதுவும் எங்களிடம் பேச வந்து விடாதே என பார்வையிலேயே சொல்லிக் கொண்டிருக்க, அருணாச்சலம் அவள் பார்ப்பதை தவிர்த்தார்.. அப்படியும் வர வைத்துக்கொண்ட தைரியத்துடன் அவர் முன் ஒரு நாள் போன போது..




“என்ன..?” எனக் கேட்ட அவரது அதட்டல் பாவனையில் கால்கள் நடுங்க ஓடி வந்து விட்டாள்..

அடுத்து வந்தனா.. இது சாத்தியமற்ற ஒன்று என்று தெரிந்த பின்னும் அந்த முயற்சியையும் விட அவள் தயாரில்லை.. ஆனால் முடிவு அவள் எதிர்பார்த்ததுதான்..

“நான் உன்னிடம் போட்ட சபதத்தில் ஜெயிக்க கூடாது.. அப்படித்தானே..? எப்பாயாவது என்னை இந்த வீட்டை விட்டு விரட்ட வேண்டும்.. அவ்வளவுதானே..?”

“இல்லை வந்தனா.. நான் சொல்ல வருவது உன் நன்மையைத்தான்..”

வந்தனா இரு கைவிரலாலும் காதிற்குள் நுழைத்து மூடிக் கொண்டாள்..

“நீ என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்..”

மைதிலி பெருமூச்சுடன் அவளை விட்டு நகர்ந்தாள்.. அடுத்து அவளது இலக்கு கல்யாணசுந்தரம்..

“அப்பாவின் பேச்சுக்கு மறுபேச்சு பேசும் எண்ணம் எங்கள் வீட்டில் யாருக்கும் கிடையாது அண்ணி.. உங்கள் திருமணத்தின் போதும் அண்ணன் அப்படித்தான்.. இதோ என் திருமண முடிவும் அப்பாவுடையதுதான்.. இதில் மாற்றமில்லை..”

கல்யாணசுந்தரத்தின் பேச்சு மைதிலி எதிர்பார்த்ததுதான் என்றாலும், அவள் எதிர்பார்க்காதது அவனது பார்வை.. எங்கள் குடும்பத்தை அழிக்க வந்த கோடாரிக் காம்பே என்பது போல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்..

பரசுராமன் கோபமானவன்.. ரவீந்தர் படபடப்பானவன்.. கல்யாணசுந்தரமும் அமைதியானவன்.. இப்படித்தான் மைதிலி இதுவரை சகோதரர்களை கணித்து வைத்திருந்தாள்.. ஆனால் இப்போது கல்யாணசுந்தரம் அவள் கணிப்பிற்கு அப்பாற்பட்டவனாக விளங்கினான்.. பிடிவாதமாய் விரிந்த அவன் கண்கள் மர்மங்களை சுமந்திருப்பதாய் மைதிலிக்கு தோன்றியது.. இவன் அழுத்தமானவன் அவன் அண்ணனை போன்றே.. இவனிடம் மோதி மீள முடியாது.. மைதிலி சோர்வுடன் திரும்பினாள்.

இனி மீதமிருப்பவன் ரவீந்தர் மட்டும்தான்.. அவன் இவர்களின் யாரைப் போலவும் இருக்கமாட்டான்.. பொறுமையாக மைதிலியின் பேச்சுக்களை கேட்பான்.. அவள் நியாயங்களை புரிந்து கொள்வான்.. அவளுக்காக குரல் கொடுக்கவும் செய்வான்..

ஆனால்..

ஏனோ மைதிலிக்கு அவனை இப்பிரச்சனைக்காக அணுக தோன்றவில்லை.. ரவீந்தர் இப்பொழுதெல்லாம் அவள் கண்களுக்கு மிகச் சிறியவனாகத் தோன்றினான்.. வீட்டின் கடைப்பிள்ளையை ‘கடைக்குட்டி’ என ஒதுக்க வைத்து அவனுக்கென்ன தெரியும்.. சின்னப்பிள்ளை என்போமே அப்படித்தான் ரவீந்தர் அவளுக்கு தோன்றினான்.. இருவரும் தங்கள் தோழமையை மறந்து அண்ணி-கொழுந்தன் உறவிற்குள் தங்களை என்று பொருத்திக் கொண்டனரோ அன்றிலிருந்தே மைதிலிக்கு அவன் சிறு பையனாகிப் போனான்.. அவள் அந்த வீட்டின் பெரிய மனுசியாகிப் போனாள்.. வீட்டின் மிக முக்கிய இந்தப் பிரச்சினையை விவரங்களற்ற வீட்டுச் சிறு பிள்ளையிடம் கொண்டு செல்ல அவள் தயாரில்லை..

“போதும் விட்டுவிடு..”




பரசுராமனின் குரல் அன்று அதிசயமாக சிறிது மென்மை சுமந்திருந்தது..

“உன்னால் முடியாது மைதிலி.. இந்த திருமணத்தை நிறுத்தும் முயற்சியை விட்டுவிடு..”

கொஞ்சநாட்களாக வெட்டுடா.. குத்துடா பாவனையிலேயே அவளிடம் பேசிக் கொண்டிருந்த கணவன், இன்று கொஞ்சம் பரிவாய் குரல் கொடுக்கவும், மைதிலியின் மனதில் சலனம் வந்தது.. மீண்டும் இவனிடம்  முயன்றால் என்ன..? ஆவலுடன் நிமிர்ந்து கணவன் முகம் பார்த்தாள்..

மறு நொடியே அவன் “ஊஹீம்..” என தலை அசைத்தான்..

“இந்தா இது உனக்காக எடுத்த புடவைகள்..” மூன்று பட்டுப்புடவை அட்டைப்பெட்டிகளை அவளிடம் நீட்டினான்..

எரிச்சலுடன் அவற்றை வாங்கி மேசை மீது எறிந்தவள் தன் வழக்கமான இடத்தில் படுத்து, போர்வையை இழுத்து தலைவரை போர்த்திக் கொண்டாள்.

பரசுராமன் பெருமூச்சு ஒன்றுடன் கட்டிலில் படுத்துக் கொண்டான்.

What’s your Reaction?
+1
6
+1
4
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!