Serial Stories Sollamal Thotu Sellum Thenral சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் – 24

24

நான் நினைத்ததில்லை நீ கொடுத்தது
நீ கொடுத்தது எதிர்பாராதது
நிகழ்வு தப்பிய நிறமங்கள்
சந்தேகிக்கிறது உயரங்களை

 

 




“என்ன மைதிலி இன்று என் அறைக்கு படுக்க வரவில்லையா..?” குறும்பு கொப்பளிக்க வந்து நின்றாள் வந்தனா.. மறைக்க முயன்றும் முடியாமல் அவள் முகத்தில் சந்தோசம் நீரலையாய் விரவிக் கிடந்தது..
மைதிலி அவளை வெறித்துப் பார்த்தாள்.. வந்தனா அன்று பரசுராமனுடன் வண்டியில் போனது நினைவு வந்தது.. அப்போது என்னென்ன சொல்லி வைத்தாளோ..? இந்த ராட்சசியால் என் வாழ்வு வீணாகிக் கொண்டிருக்கிறதே.. நினைத்த மறு கணமே அவள் மனசாட்சி அவளை இடித்தது..
இவள் சொன்னாள் என்றால் உன் புருசனுக்கு புத்தி எங்கே போயிற்று..? நாலு இடம் அலைந்து நானூறு மனிதர்களை தினமும் சந்தித்து தொழில் பார்ப்பவன்.. யார்.. எப்படி என இனங் காண முடியாதா..? தவறு இவள் மீதா.. உன் புருசன் மீதா..?
மைதிலி வந்தனாவை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தாள்..
“என் விரதம் முடிந்து விட்டது வந்தனா.. நான் இன்று முதல் என் கணவரோடுதான் படுத்துக் கொள்ள போகிறேன்.. புருசன், பொண்டாட்டியின் அந்தரங்கத்தில் தலையிடுவது மகாபாவம் வந்தனா.. அதிலும் நீ திருமணம் முடிக்காத சிறு பெண் வேறு.. நீ இப்படியெல்லாம் என்னோடு பேசுவது உன் அம்மா, அத்தை, மாமா என வீட்டுப் பெரியவர்களுக்கு தெரிந்தால் என்ன நடக்குமென்று நினைத்துப் பார்..”
“என்ன நடக்கும்..? நான் எப்படி பேசினாலும்.. என்ன செய்தாலும்.. இந்த வீட்டினர் யாரும் என்னை வெறுக்கவோ, ஒதுக்கவோ மாட்டார்கள்.. நான் இங்கே அதிகார மையம்.. என் சொல்படிதான் இங்கே எல்லாமே நடக்கும்.. இவற்றையெல்லாம் உன்னால் தாங்கிக் கொள்ள முடியாது.. அதனால்.. நீ.. இந்த வீட்டை விட்டு போய்விடேன்..”
மிகச் சாதாரணமாக பேசிய வந்தனா மைதிலிக்குள் கொதிப்பை விiத்தாள்..
“நான் இந்த வீட்டு மூத்த மருமகள் வந்தனா.. என்னை யாராலும் இந்த வீட்டை விட்டு வெளியேற்ற முடியாது.. என் பிணம்தான் இந்த வீட்டை தாண்டி வெளியே போகும்.. என் உயிர் போகாது.. அது இந்த வீட்டையே தான் சுற்றிக் கொண்டிருக்கும்..”
கண்கலங்க உயிர் நெகிழ உள்ளம் உணர்ந்து பேசினாள் மைதிலி.. வந்தனா மெலிதாக கை தட்டினாள்..




“வசனம் நன்றாக இருக்கிறது.. டிவி சீரியல் ஹீரோயின் பேசலாம்.. பேசவும் கேட்கவும்தான் இது போன்ற வசனங்கள் நன்றாக இருக்கும்.. வாழ்ந்து பார்க்கும் போதுதான் அதிலிருக்கும் வேதனை புரியும்.. வீணாக உன் உடம்பை, மனதை வதைத்துக் கொள்ளாதே.. உன்னால் ஜெயிக்க முடியாது.. இங்கிருந்து போய்விடு..”
“போக வேண்டியது நானல்ல வந்தனா.. நீதான்.. இது என் வீடு.. என் புருசன் வீடு.. திருமணம் முடித்து வேறு வீட்டிற்கு போக வேண்டியவள் நீதான்..”
வந்தனாவின் முகம் சிவந்தது.. கண்கள் கொடூரமாக உருண்டன.. அனலாய் வந்தது அவள் மூச்சு.. மைதிலியை நோக்கி விரலை சொடுக்கிட்டாள்..
“ஏய் சவால் விடுறேன்டி.. உன்னை இந்த வீட்டை விட்டு விரட்டி விட்டு, நான் இந்த வீட்டு மருமகளாகிறேன் பார்க்கிறாயா..?”
மைதிலிக்கு சிரிப்பு வந்தது..
“நீ சின்ன பிள்ளைங்கிறதை காட்டிவிட்டாய் பார்த்தாயா..? உன் சவாலெல்லாம் கனவில் தான் நடக்கும்..”
“நடத்திக் காட்டுறேன்டி… நீ என்னதான் தலையணை மந்திரம் போட்டு மயக்கப் பார்த்தாலும் என் பரசு உன்னிடம் மயங்கமாட்டார்.. தோற்றுப் போன உன் மூஞ்சியை நாளை காலையில் நான் பார்க்கிறேன்.. குட் நைட்..”
வந்தனா போய்விட்டாள்.. மைதிலி கொஞ்ச நேரம் திக்பிரமை பிடித்து அமர்ந்திருந்தாள்.. பிறகு தலையை உலுக்கி தன்னை தேற்றிக் கொண்டாள்.. அவளுக்கு நம்பிக்கை இருந்தது.. அவள் கணவனிடம் விளக்கமாக பேசினால் அவன் தன் நியாயத்தை புரிந்து கொள்வானென மிக நம்பினாள்..
காத்திருந்தாள்..
பரசுராமன் அன்று வீட்டிற்கு மிக தாமதமாகத்தான் வந்தான்.. நடுநிசியை தாண்டிய பிறகும் சில மணிகள் கழித்தே வீடு திரும்பினான்.. வீடு முழுவதும் ஆழ்ந்த இரவு உறக்கத்தில் இருந்தது..
“எனக்கு சாப்பாடு வேண்டாம்..” கதவு திறந்தவளுக்கு முகம் பார்க்காமல் கூறி விட்டு, படுக்கையறைக்குள் போனவன் தன் தலையணை போர்வையுடன் வெளியே வந்து சோபாவில் படுத்துக் கொண்டான்..




மைதிலி அதிர்ந்து நின்றுவிட்டாள்.. எந்த சூழ்நிலையிலும், எந்த பிரச்சினையிலும் அவள் கணவன் இப்படி தனி படுக்கையை நாடியவனில்லை.. மனைவியுடனான இரவுத் தனிமைக்காக மிக ஆவலுடன் காத்திருப்பவன்.. ஒருநாள் கூட அதை தவற விடும் மனமற்றவன்.. இன்று தானே படுக்கையறையை விட்டு வெளியே வந்து படுத்திருக்கிறான்.. ஏன்..? அந்த அளவு வெறுத்து விட்டேனா நான்..?
மைதிலி படுக்கையறையினுள் மனங் கலங்கி தவித்தபடி இருந்தாள்.. ஒரே ஒரு முறை ஹாலுக்கு போய் அவனை எழுப்பினால் என்ன யோசித்து விட்டு, அதே நொடி வந்தனா சொன்ன தலையணை மந்திரம் நினைவு வர, உடன் உடல் அருவெறுப்பில் குலுங்க, தன் கண நினைவுக்கு தன்னையே சபித்துக் கொண்டாள்.. அறை விளக்கை அணைத்து விட்டு அறைக் கதவை கூட மூடாமல், கட்டிலில் படுக்கவும் முடியாமல், உட்காரவும் முடியாமல் தவித்தபடி அறையினுள் நடந்தபடி இருந்தாள்.. ஒருமுறை லேசாக வெளியில் பார்த்தபோது அங்கு பரசுராமனும் படுக்காது இரவில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருப்பது தெரிந்தது..
மைதிலிக்கு ஏனோ ஒரு வித பயம் உண்டானது.. இவ்வளவு அமைதியற்று அவள் கணவனை ஒரு நாளும் பார்த்ததில்லை.. எந்த சூழலையும் உணர்வற்ற அமைதியான முகத்துடன் எளிதாக ஏற்றுக் கொள்பவன்.. இன்று இப்படி அல்லாடுகிறானென்றால்.. அவன் ஏதோ ஒரு திட்டம் போடுவதாக மைதிலிக்கு தோன்றியது.. அந்த திட்டம் நிச்சயம் தனக்கு எதிரான திட்டம் என அவள் உள் மனம் சொன்னது.. மைதிலி அதைப் போலொரு திகிலிரவை அவள் வாழ்க்கையில் சந்தித்ததில்லை..
“என்னாச்சு..?” பரபரப்பாய் தன்னருகில் வந்து கேட்ட வந்தனாவை நிமிர்ந்தும் பார்க்கவில்லை மைதிலி.. காபி டிகாசனை இறக்கி தம்ளர்களில் ஊற்றி பால் கலந்தாள்.. இரவு முழுவதும் பொட்டு மூடாத கண்கள் நெருப்பை வைத்து தேய்த்தது போல் எரிந்தன..
வந்தனா அப்போதுதான் எழுந்திரிந்திருந்தாள்.. எழுந்த உடனேயே இங்கே வந்து இவளிடம் நிற்கிறாள்.. இரவு புருசனும், பொண்டாட்டியுமாக பேசிய பேச்சுக்களை இப்போது அவளிடம் கூற வேண்டுமாம்.. சீ.. என்ன பிறவி இவள்..? மனம் வெறுத்தது மைதிலிக்கு..
“பரசு நேற்று என்ன சொன்னார்..?” கேட்க கூசவோ, குன்றவோ இல்லை வந்தனா..
“என் அனுமானம் சரி என்றால் நேற்று பரசு உன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசியிருக்க மாட்டார்.. சரியா..?” திருட்டுப் பூனையின் கண்களாக மின்னின வந்தனாவின் கண்கள்..
உலகத்து அருவெறுப்பு முழுவதும் திரண்டு உடல் எங்கும் பரவ, மைதிலி அவளை நிமிர்ந்து பார்த்தாள்..
“சீ..” ஒற்றை வார்த்தை, கண்ட கண்ட வார்த்தைகளை பேசி மைதிலி வந்தனாவை வைதிருந்தால் கூட அவளுக்கு இந்த அளவு பாதிப்பு வந்திருக்காது.. இந்த ஒற்றைச் சொல் அவளை மிகப் பாதிக்க, அவள் ருத்ரகாளியாய் மாறினாள்..
“ஏய் என்னடி.. என்னடி நினைத்துக் கொண்டிருக்கிறாய்..?” மைதிலியின் தோளை பிடித்து உலுக்கினாள்.. மைதிலி அசையாமல் நின்றாள்..
“எல்லோரும் உள் வராண்டாவிற்கு வாங்க..” அருணாச்சலத்தின் சத்தம் உரத்து வீடு முழுவதும் ஒலித்தது..




“என்ன விசயம்னு தெரியலையே…” வந்தனா பதட்டத்துடன் முணுமுணுத்து விட்டு வராண்டாவிற்கு போனாள்..
மைதிலிக்கும் படபடப்புதான்.. உள் வராண்டா என்பது அவர்கள் வீட்டின் நடுவாந்தர பகுதி.. எல்லா அறைகளையும் அங்கிருந்து பார்க்க முடியும்.. அருணாச்சலம் அங்கே உட்கார்ந்துதான் காலை பேப்பர் படிப்பது, காபி குடிப்பது, மகன்களிடம் தொழில் பேசுவது, மனைவியுடன் வீட்டு விசயம் பேசுவது எல்லாமே அங்கேதான் அவர்கள் வீட்டின் முக்கிய முடிவுகள் வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் இருக்கும் காலை நேரத்தில் அங்கேதான் எடுக்கப்படும்.. என்ன முடிவிற்காக மாமா எல்லோரையும் அழைக்கிறார்.. திதும் திதும் மனத்துடன் டிரேயில் காபி தம்ளரை அடுக்கிக் கொண்டு அங்கே போனாள் மைதிலி..
நடு வராண்டாவில் பெரிய மர நாற்காலி போட்டு அருணாச்சலம் அமர்ந்திருக்க, அவரருகே பரசுராமன் நின்றிருந்தான்.. மைதிலிக்கு மனதினுள் அமிலம் சுரந்தது.. வீட்டு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்..
“எல்லோரும் உட்காருங்க..” அருணாச்சலம் சொல்ல, எல்லோரும் வராண்டாவை சுற்றி ஓடிய படிகளில் ஆங்காங்கு அமர்ந்தனர்..
“காபியை கொடும்மா..”
மைதிலி எல்லோருக்கும் காபியை கொடுத்தாள்..
“நீயும் உட்காரும்மா..”
கால் நடுங்க ஒரு பக்கமாக அமர்ந்தாள்..
“யாரும் எதிர்பாராமல் ஒரு துக்க நிகழ்ச்சி நம் வீட்டில் நடந்து விட்டது.. அது என் மனதை மிகவும் பாதித்து விட்டது.. எனது ஒரே தங்கை.. அவளுக்கு இறுதி வரை ஒரு தூணாக நான்தான் இருந்திருக்க வேண்டும்.. ஆனால் ஏதோ வீம்பில் அவளையும் அவள் குடும்பத்தையும் தள்ளி வைத்திருந்து விட்டேன்.. என் தங்கை கணவனுடையே உயிரோடு போராடிக் கொண்டிருக்கும் போது கூட நான் என் வறட்டு கௌரவத்தோடு வாழ்ந்து கொண்டிருந்திருக் கிறேன்.. என் மனச்சாட்சி என்னை குத்திக் கொல்கிறது..”
உணர்ச்சி மிகுந்த அருணாச்சலத்தின் பேச்சு அனைவரையும் கண்கலங்க வைத்தது..
“என் தலை விதிக்கு நீங்கள் என்னண்ணா செய்வீர்கள்..?” ஈஸ்வரி தேம்பலுடன் எழுந்து வந்து அண்ணனின் காலடியில் அமர்ந்து கொண்டாள்.
“நீ என்ன சொன்னாலும் என் மனம் என்னை உறுத்திக் கொண்டேதான் இருக்கிறது ஈஸ்வரி.. உனக்கான கடமையிலிருந்து நான் தவறிவிட்டேன்.. உனக்கு நான் முன்பே வாக்கு கொடுத்திருந்தேன்.. உன் மகளை என் மருமகளாக்கிக் கொள்வதாக உறுதி கொடுத்திருந்தேன்.. ஆனால் அதனை எளிதாக தூக்கிப் போட்டு விட்டேன்..




நீ இல்லையென்றாலும் அந்த மறுப்பு இன்னமும் உன் மனதை உருக்கிக் கொண்டிருப்பதை நான் அறிவேன்.. உன் கண்ணீரை துடைக்க, என் பாவத்தை குறைக்க என்ன செய்யவதென தெரியாமல் நான் தவித்துக் கொண்டிருந்த போதுதான் நம் பரசு இந்த யோசனையை சொன்னான்..”
இப்போது அனைவரும் ஆவலுடன் பரசுராமனை பார்த்தனர்.. பரசுராமன் தன் தந்தை மீது பார்வையை வைத்திருந்தான்..
“ம்.. சொல்லுங்கப்பா..” தந்தையை தூண்டினான்.
“நம்ம வீட்டு செல்ல பெண்ணை நம் வீட்டிலேயே வைத்துக் கொள்ள, எப்போதும் போல் அவளை கண் கலங்காமல் பார்த்துக் கொள்ள, உன் மகள் வந்தனாவை என் மகன் கல்யாணசுந்தரத்திற்கு மணம் முடித்து தர கேட்கிறேன் ஈஸ்வரி..”
அருணாச்சலம் முடிக்க அவர் உரைத்த செய்தியில் அனைவரும் ஒரு நிமிடம் மௌனமாக..
“வேண்டாம் மாமா..” சொன்னவள் மைதிலி.. அவள் முகத்தில் பதட்டம் இருந்தது.. பயம் இருந்தது..
“இ.. இந்த யோசனை வேண்டாம் மாமா.. நாம் வந்தனாவிற்கு வேறு நல்ல மாப்பிள்ளை பார்க்கலாம்..” மைதிலி பதட்டத்துடன் எழுந்து வந்து அருணாச்சலத்தின் முன் மண்டியிட்டாள்..
“இந்தக் கல்யாணம் வேண்டாம் மாமா..”
“ஏய், எந்திரிச்சி அந்தப் பக்கம் போ..” பரசுராமன் பற்களை நறநறத்தான்.
“மாமா கொஞ்சம் யோசித்து எந்த முடிவையும் எடுங்க.. இப்படி அவசர அவசரமாக எதையும் பேசாதீர்கள்..”
“ஓ என் அண்ணன் முன் யோசனை இல்லாதவர் என்கிறாயா..?” கேட்டவள் ஈஸ்வரி.. அவள் குதறும் பார்வையுடன் மைதிலியை பார்த்துக் கொண்டிருந்தாள்.. அண்ணனின் இந்த யோசனை ஈஸ்வரிக்கு மிகவும் பிடித்திருந்தது.. இதனை இழக்க அவள் தயாராக இல்லை..
“இல்லை பெரியம்மா அப்படி சொல்லவில்லை.. திருமணம் என்பது காலம் முழுவதும் தொடர வேண்டிய பந்தம்.. அதனை முடிவெடுக்கும் முன் நன்றாக யோசிக்க வேண்டும்..”
“அப்போ நான் யோசனையில்லாமல் பேசுகிறேன் என்கிறாய்..?” அருணாச்சலத்தின் கேள்வி குத்தீட்டியாய் மைதிலியை குத்தியது..




“ஐயோ மாமா நீங்க பெரியவங்க.. நான் அப்படி சொல்வேனா.. நான் சொல்வது..”
“ஏய் எந்திரிடி..” பரசுராமனின் கை அவள் தோளில் விழுந்து அழுத்தியது.. அந்த எச்சரிக்கைக்கு செவி சாய்க்கும் மனநிலையில் மைதிலி அப்போது இல்லை..
“மாமா யானைக்கும் அடி சறுக்கத்தான் செய்யும்.. எவ்வளவு முன் யோசனையுள்ளவர்களானாலும் சில விசயங்களில் தப்பான முடிவு எடுத்து விடுவார்கள்.. இப்போது நீங்களும் அது போல்தான்..”
அருணாச்சலத்தின் முன் மண்டியிட்டு அமர்ந்திருந்த மைதிலி துள்ளிப் போய் தள்ளி விழுந்தாள்.. ஆம் அவ்வளவு வேகத்துடன் அவளை அடித்து தள்ளியிருந்தான் பரசுராமன்.. அதிர்ந்து விழித்தவளின் முடியை கொத்தாக பற்றித் தூக்கினான்.
“என்ன பேச்சுடி பேசிட்டு இருக்கிறாய்..? யாரிடம் பேசுகிறாய்னு உனக்கு தெரிகிறதா..?” மீண்டும் கன்னத்தில் அறைந்தான்.
“அண்ணா..” பதறியபடி முன்னால் வந்தவன் ரவீந்தர் மட்டுமே.. மற்றபடி அந்த வீட்டில் உள்ள யாரும் குடும்ப தலைவரை எதிர்த்து பேசிய மைதிலியை மன்னிக்க தயாராகவில்லை..
“மன்னிப்பு கேளுடி, அப்பாகிட்டேயும், அத்தை கிட்டேயும் மன்னிப்பு கேளு.. இந்தக் கல்யாணத்தில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்று சொல்லு..”
“மாட்டேன்.. இந்தக் கல்யாணம் எனக்கு பிடிக்கலை.. இது நடக்க கூடாது..” மைதிலி கத்த பரசுராமனின் கை திரும்ப திரும்ப அவள் மீது ஆவேசமாக பதிய ஆரம்பித்தது.. அவனின் வேகத்தில் அனைவருமே ஸ்தம்பித்து நிற்க, ரவீந்தர் மட்டும் முன் வந்து அண்ணனின் கையை பிடித்தான்.. தடுத்து இழுத்தான்..




“அண்ணா இது தப்பு.. கொஞ்சமாவது மனிதத் தன்மையோடு நடந்து கொள்ளுங்கள்..”
“டேய் பரசு.. போதும் நிறுத்து.. மகா அந்தப் பொண்ணை உள்ளே போகச் சொல்லு..” அருணாச்சலம் சொல்ல, மகாராணி மைதிலியின் கையை பிடித்து கூட்டி வந்து அவர்கள் அறைக்குள் விட்டாள்..
“உன்னை புத்திசாலின்னு நினைச்சேன்மா.. ஆனால் என் புருசனுக்கே புத்தி சொல்ல வருவாயென்று நினைக்க வில்லை.. கொஞ்ச வருடங்கள் கழித்து இந்த வீட்டின் நிர்வாகம் உன் கைக்கு வரலாம்.. அப்போது உனது அதிகாரத்தையெல்லாம் காட்டு.. இப்போது மருமகளாக அடக்கமாக இரு.. இந்தக் கல்யாணத்தை நிச்சயம் நாங்கள் நடத்தத்தான் போகிறோம்..”
மகாராணி போய் விட்டாள்.. உள் வராண்டாவில் இருந்து கல்யாணசுந்தரம் – வந்தனா திருமணப்பேச்சுக்கள் காற்றுவாக்கில் அரைகுறையாக மைதிலியின் காதுகளில் வந்து விழ, மைதிலி செய்வதறியாது அழுதபடி தரையில் சுருண்டிருந்தாள்..

What’s your Reaction?
+1
3
+1
3
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!