karthikai deepangal Serial Stories

கார்த்திகை தீபங்கள்-1

1

பசுமையை குத்தகைக்கு எடுத்திருந்த்து தஞ்சாவூருக்கு அருகிலிருந்த அந்த சிறிய விவசாய கிராம்ம் .பச்சையை போர்த்திருந்த அந்த அழகான வயல்வெளிகளை தனது சுடுகதிர்களால் சுடத்தான் வேண்டுமா ….என யோசித்தபடி கதிரவன் வெளியே வர சோம்பல்பட்டுக் கொண்டிருந்த அதிகாலை .இன்னமும் வெளிச்சம் கங்கிருட்டில் இருந்த நேரத்திலும்  அந்த கிராமத்து விவசாயிகள் சோம்பலின்றி விழித்துக் கொண்டனர் .ஒவ்வொருவராக தங்கள் வயல்களை நோக்கி நடக்க ஆரம்பித்தனர் .

அச்சிறிய ஊரின் மேற்குத்தெருவில் நடுநாயகமாக அமைந்திருந்த்து அந்த பெரியவீடு . ஒரு விவசாயக் குடும்பத்தின் அதிகாலை விடியலுக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்த்து . வாசலை அடைத்து கோலம் போட்டுவிட்டு எழுந்து நின்று தன் கோலத்தை தானே ரசித்துக் கொண்டிருந்தாள் செண்பகம் .ஐம்பத்தைந்து  வயதிருக்கும் .அந்த வீட்டு எஜமானியம்மாள் சொர்ணத்தாய் திருமணம் முடிந்துபிறந்தவீட்டிலிருந்து  இங்கு வந்தபோது அவளுடன் மகளுக்கு வீட்டு வேலைகளுக்கு துணைக்கென அனுப்பி வைக்கப்பட்டவள் .  ணொர்ணத்தாயின் கணவர் பொன்னுரங்கத்தினால் நல்ல பையனாய் பார்த்து திருமணம் முடிக்கப்பட்டு  இந்த ஊரிலேயே தன் வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டவள் .

” என்ன செண்பா …காலங்கார்த்தாலே முற்றத்தில மெய்ம்மறந்து நிக்கிறியே என்ன …? ” எஜமானியம்மாவின் தோரணையும் , தோழியின் உரிமையும் கலந்து அதட்டியபடி வீட்டினுள்ளிருந்து வெளியே வந்தாள் சொர்ணத்தாய் .அவள் கைகளில் இருந்த பூக்கூடையில் செம்பருத்தி மலர்கள் நிறைந்திருந்தன. அந்த அதிகாலையில் தலைகுளித்து வெண்மையும் , கருமையுமாய் இடை தாண்டி நீண்டிருந்த கூந்தலை நுனி முடிச்சிட்டு , முகம் மஞ்சளால் பளபளக்க நெற்றி நிறைய குங்குமத்துடன் ,காதிலும் , மூக்கிலும் பளபளத்த வைரங்களின் ஒளி கன்னம் வரை டாலடிக்க , அம்மன் போல் உடனே கையெடுத்து கும்பிடலாமென்ற தோற்றத்துடன் நின்றிருந்தாள் சொர்ணத்தாய் .





” சும்மாதான் சொர்ணம்மா …கோலத்தை பாத்துட்டே நின்னுட்டேன் …” பணிவும் , பரிவும் கலந்து பதிலளித்தாள் செண்பகம் .தோழி போல் பழகியிருந்தாலும் சொர்ணத்தாய்கான முதலாளியம்மா அந்தஸ்தை தர செண்பகம் தயங்கியதே இல்லை .

” ஊத்துற குளிர்ல …தலையில் ஒரு துண்டைக் கூட கட்டிக்காம இப்படி நின்னா என்ன அர்த்தம் …? உன் உடம்புக்கு ஒரு நோவு , நோக்காடுன்னு வந்தா யார் பார்ப்பாங்களாம் …?சட்டுன்னு    உள்ளே போய் அடுப்படி வேலையை கவனி .பூஜையை முடிச்சுட்டு வர்றேன் ….” வாசலில் வைத்திருந்த பிள்ளையார் சிலையை சுத்தம் செய்து விளக்கேற்றி பூஜையை ஆரம்பித்தாள் .காலை எழுந்த்தும் குளித்து முடித்து இந்த பிள்ளையாரின் தலையில் ஒரு செம்பருத்தி பூவை வைத்து விளக்கேற்றிய பிறகுதான் சொர்ணத்தாய் பச்சைத்தண்ணீரை கூட பல்லால் தொடுவாள் .

தங்க அரளியையும் , அடுக்கு செம்பருத்தியையும் கலந்து நேர்த்தியாய் பிள்ளையாரை அலங்கரித்துவிட்டு , நல்லெண்ணெய் தீபமேற்றி சாம்பிராணி போட்டவள் , அந்த புகையும் , வாசமும் கலந்து தெய்வீகமாய் தோற்றமளித்த பிள்ளையாரை கண்டு நெக்குருகி தானாக குவிந்துவிட்ட கரத்துடன் வணங்கினாள் .

” ஏம்புள்ள …கதிர் காயுதாக்கும் உனக்கு .இம்புட்டு குளிருக்குள் ஈரத்தலையோடு எவ்வளவு நேரம் நிற்ப ….? போ புள்ள போய் தலையை காய வை …” கரிசனத்தோடு பேசியபடி வந்து நின்ற பொன்னுரங்கம் , பொங்கும் குளிரை பெருட்படுத்தாமல்மேல் சட்டையற்ற  வெற்று மேனியில் மெல்லிய துண்டு மட்டும் கிடந்த உடம்புடன்  இருந்தார் .தலைமுடி முழுவதும் நரைத்து விட்டாலும் முடி உதிராமல் தலைமுழுவதும் அடர்ந்திருந்த்து .வெள்ளையாய் அடர்ந்திருந்த மீசையை முறுக்கி கூராக்கியிருந்தார் .கறுப்பாய் , உயரமாய் காவல் நிற்கும் அய்யனார் சிலையை நினைவுறுத்தினார் .

” என்னைய சொல்லிப்புட்டு மேல சட்டை கூட இல்லாம இந்த குளிருல் கிளம்புறீகளே ….”

” வெயிலிலும் குளிரிலும் கிடந்து காஞ்ச உடம்பு புள்ள இது .இந்த மார்கழி குளிர் என்ன செய்யும் …? வயக்காட்டு பக்கம் போய் வாரேன் …” கிளம்பினார்.

” ஏதாவது குடிச்சீகளா ….? “

” ம் …ம் .வயறு நிறைய நீராகாரம் குடிச்சாச்சு .நீ போய் காபியை குடி ….” மிக லேசாக விடியல் தொடங்கிவிட்ட அடிவானை பார்த்தபடி தன் வயல்களை பார்த்து நடந்தார் .பச்சை நாற்றுக்கள் மஞ்சளாகி கர்ப்ப வயிற்றுடன் பாரம் தாங்காமல் தலை சாய்ந்து படுத்திருந்தன. இந்த முறை அமோக விளைச்சல் பெருமையுடன் மீசை முறுக்கிக் கொண்டார் .மோட்டார் போட்டு பம்ப் செட்டில் அருவியாய் சீறும் நீரை வேடிக்கை பார்த்தார் . அவரை பார்த்ததும் ஓடிவந்து கும்பிட்டான் காங்கேயன் .வயல்களின் காவலுக்காக அங்கேயே அவனுக்கு ஒரு ஓரமாக வீடு கட்டிக் கொடுத்திருந்தார் .

” லேய் ….எல்லா பக்கமும் தண்ணீர் சரியா பாயுதான்னு பாருலே …” ஏவி விட்டு தானும் வாய்க்கால்களை கண்காணிக்க தொடங்கினார் . மண்ணடைத்து நின்ற சில இடங்களை தானேமண்வெட்டியால்  சரி செய்தார் .வெளேரென வானம் வெளுக்க ஆரம்பித்து விட , குளிர் சற்று குறைய தொடங்கியருந்த்து .வியர்வையில் நசநசத்த தன் அக்குளகளை துண்டினால் துடைத்தபடி கிணற்றை நோக்கி நடந்தார் .பதினைந்தடி நீள அகலத்துடன் சதுரமாய் அவர்கள் வயலின் நடுவே அமைந்திருந்த்து அந்த நல்ல தண்ணீர் கிணறு . ஏழு தலைமுறைகளாக அவர்கள் குடும்பத்திற்கு உரியதாக இந்த கிணறு இருந்து வந்துள்ளது .  முதலில் மன்னராய் இருந்து ஜமீன்தாராகி , மிராசுதாராகி இன்று பண்ணையாராக வந்து நிற்கிறது பொன்னுரங்கத்தின் குடும்பம் .கணக்கில்லாமல்   சுற்றியருந்த நிலங்களும்  கொஞ்சம் கொஞ்சமாக அடுத்தவர் ஆக்ரமிப்பு , தானம் , பங்கு பிரிப்பு என தேய்ந்து வந்து இன்று  இருநூறு ஏக்கராய் சுருங்கி நிற்கிறது .

இந்த கிணற்றை மட்டும் அவரின் முன்னோர்கள் விட்டு விடாமல் தங்களுடனேயே தக்க வைத்துக் கொண்டதில் வற்றாத அக்கிணறு இன்னமும் நீர்வளத்தை வாரி இறைத்து இன்னமும் அப்பகுதியில் பொன்னுரங்கத்தை நிலச்சுவான்தாராகவே வாழ வைத்துக் கொண்டிருக்கிறது . கைப்பிடிச் சுவரை பற்றியபடி கிணற்றினுள் எட்டிப் பார்த்து பெருமூச்சுவிட்டார் பொன்னுரங்கம் .அவர் சிறு வயதில் இந்த கிணற்றில் குளிக்க வரும் போது கூட நீர்மட்டம் இதோ …இந்த கண்ணில் தெரியும் திரடு வரை இருக்கும் .இந்த கை பிடி சுவரின் மேல் ஏறி நின்று அவர உடன்பிறந்த , ஒன்றுவிட்ட     அண்ணன்கள்  தம்பிகளுடன்  போட்டியிட்டு கிணற்றினுள் குதித்துள்ளார் .இப்போது பாதி அளவிற்கு உள் போய்விட்டது கிணற்று நீர் .

முன்பு   கி ணற்றடியில் ஐந்து இடங்களில் சுனை ஊறிக்கொட்டிருந்த்து.இப்போது இரண்டு சுனையில்தான் நீர் வந்து   கொண்டிருக்கறது. ஊற …ஊற எடுத்து விடுவதாலோ இல்லை ஊறுதல் குறைந்து விட்டதாலோ …கிணற்று நீர் நாளாக …நாளாக உள்ளிறங்கிக் கொண்டிருக்கிறது .ம் …என் தலை உருளும் வரையாவது தாங்குமோ என்னமோ … என் பங்குக்கு நானும் மோட்டாரை பொருத்தி உன்னை உறிஞ்சிக் கொண்டிருக்கிறேன் ….மனபாரத்தோடு கிணற்றின் ஓரத்தில் உள்ளிறங்கி குளிக்க வசதியாக கட்டி வைத்திருந்த படிக்கட்டுகள் வழியாக உள்ளிறங்கி ..நீரினுள் பாய்ந்தார் .வாலிப வயது போல் மேலிருந்து உள்ளே குதிக்கும் தெம்பு இப்போதில்லை .

தலையை துவட்டியபடி மேலே வந்தவர் தோளிலிருந்த துண்டை ஈரம் பிழிந்து உதறி உடலை துடைத்தபடி நடந்தார் .பச்சை நெல் வாசம் நாசியை நிறைத்தது .ஆழ்ந்து இழுத்து நுகர்ந்து கொண்டார் .” ஐயா அந்த ஓரமா பூச்சி தெரிஞ்ச மாதிரி இருந்த்துங்கய்யா ….” காங்கேயன் கவலையான குரலில் சொன்னான் .அறுவடை நேரத்தில் பூச்சி வைத்தால் பயிர் என்னாவது …? ஆனால் பொன்னுரங்கம் கவலைப்படவில்லை .





” கவலைப்படாதே காங்கேயா …என் மருமகப் பொண்ணு அதை எல்லாம் கவனிச்சுக்கடுவா … ” சட்டென அவர் மனக்கண் முன்னால்  பார்டர் பாவாடையும் , நைலக்ஸ் தாவணியும் , இரட்டை ஜடையுமாக   சைக்கிள் மிதித்தபடி வந்து நின்று பூவாக சிரித்தாள் பூந்தளிர் .அருமையான பெண் மனதிற்குள் சீராட்டிக் கொண்டார் .

” அதுக்கென்னங்கய்யா தெரியும் …சின்னக்கழுதை .நான் பார்த்து மூக்கொழுகிக்கிட்டு திரிஞ்சது .இப்போ என்னவோ டவுன் காலேசுல போய் படிச்சுட்டு வந்துட்ட கித்தாய்ப்புல கையில போனை வச்சு அமுக்கி பார்த்து என்னென்னமோ …சொல்லுது .நீங்களும் அதுக்கெல்லாம் தலையாட்டிக்கிட்டு …இப்போ இவ்வளவு பெரிய முடிவெடுத்துட்டீங்க …” பவ்யமாய் கை கட்டி நின்றாலும் தன் ஆதங்கத்தை குறைந்த குரலில் வெளியேற்றினான் அந்த விசுவாச ஊழியன் .

” காங்கேயா …எனக்கே புத்தி சொல்லுறியா நீ …? ” முதலாளியின் அதட்டலில் பதறியவன் …” இல்லைங்கய்யா …நம்ம குடும்பம் பாரம்பரியம் என்ன …பெருமை என்ன …நம்ம குடும்பத்துக்கு போய் …அந்த வடக்கு தெரு பொண்ணை ….”

” வாயை மூடுடா .அந்த பொண்ணு தை மாசம் என் வீட்டு மருமகளாக போகிறா .அப்புறம் அவள் உனக்கு முதலாளியம்மா .அவளை பற்றி குறைவாக ஒரு வார்த்தை பேசினாயானால் ….ம் …ஜாக்கிரதை ….” விரலாட்டி எச்சரித.துவிட்டு நடந்தார் .

————————-++++++

வீட்டில் சொர்ணத்தாய் அடுப்படிக்குள் நுழைந்த போது , மூத்த மருமகள் பொன்னி எழுந்து குளித்து அடுக்களை வேலைக்குள் நுழைந்திருந்தாள் .இட்லி தட்டில் துணி விரித்து மாவை ஊற்றிக் கொண்டிருந்தாள் .செண்பகம் தரையில் அமர்ந்து சொளவில் அரைக்கீரையை நிரப்பி வைத்து   ஆய்ந்து கொண்டிருந்தாள் .சொர்ணத்தாய் கண்களை அந்த பெரிய அடுக்களை முழுதும் ஒரு சுற்று ஓடவிட்டாள் .ம்ஹூம் …இரண்டாவது மருமகள் அனுராதாவை காணவில்லை .என்ன பெண்ணோ ….ஒரு நாளாவது நேரத்திற்கு எழுந்து வந்திருக்கிறாளா …? கல்யாணம் முடிந்து இரண்டு பிள்ளையையும் பெத்துட்டா .புருசனுக்காக இல்லாவிட்டாலும் பெற்ற பள்ளைகளுக்காகவாது காலையில் அடுப்பு முன் வந்து நிற்கமாட்டாளா …?

” அத்தை காபி ….” பணிவோடு நீட்டிய பொன்னியிடமிருந்து ” ம் …” என்ற மாமியார் உறுமலுடன் காபியை வாங்கியவள்  ஒரு மர ஸ்டூலை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டு காபியை உறிஞ்ச ஆரம்பித்தாள் .” காலையில டிபனுக்கு என்ன செய்ய போற ….? “

” இட்லி , மாத்தோசை  உளுந்தவடை , முள்ளங்கி சாம்பார் , தக்காளி சட்னி , தேங்காய் சட்னி …வேறெதுவும் செய்யனுமா அத்தை …? “

” ம் …ம் …சேமியாவை போட்டு கொஞ்சம் கேசரி பண்ணிடு ….” உத்தரவிட்டு விட்டு ,ப்ரிட்ஜை திறந்து மதிய உணவிற்கான காய்கறிகளை ஆராய்ந்தாள் .வாடி விரைத்து சுருண்டு கொண்டிருந்த காய்களிலிருந்து நான்கை தேர்ந்தெடுத்து வைத்தவள் , மதிய உணவிற்கான பட்டியலை கூறிவிட்டு அத்தோடு இந்த கீரையையும் சேர்த்துக்கோ ….” என்றுவிட்டு ” காபி குடிச்சாச்சா செண்பா …” கேட்டபடி வீட்டின் பின்புறம்போனாள் .அங்கே தொழுவத்தில் வரிசையாக கட்டியிருந்த மாடுகளை கவனிக்க தொடங்கினாள் .

மிகப்பெரிய நாலு கட்டு வீடு அது .முன்வாசல் ஒரு தெருவில் ஆரம்பித்து , பின்வாசல் மறு தெருவில் முடிந்திருக்கும் .முதல்கட்டு அறைகள் அரிசி , பருப்பு மூட்டை சேமிப்பு  இடங்களாகவும் , வேலைக்கார்ர்கள் தங்குமிடமாகவும் இருக்க , இரண்டாவது கட்டில் விருந்தினர் அறைகளிருந்தன.மூன்றாவது கட்டில் வீட்டு உறுப்பனர்களுக்கான அறைகள் இருக்க , நான்காவது கட்டில் சமையலறை.  ,சாப்பாட்டு அறை ஸ்டோர் ரூம் போன்றவை இருந்தன. வீட்டின் பின்புறம் வேப்பமரங்களும் , அரச மரங்களும் சூழ்ந்து சிறு சோலை ஒன்றிற்குள் நுழைந்த உணர்வை கொடுக்கும் .அந்த இயற்கை சூழலில் ஓரமாக கொட்டடி அமைக்கப்பட்டு மாடுகள் வரிசையாக கட்டப்பட்டு சுத்தமாக பராமரிக்கப்பட்டு வந்தன .

பால் கறந்து கொண்டிருந்த வேலய்யன், எழாமல் குந்திய நிலையிலேயே வணங்கினான. தலையசைத்து அவன் வணக்கத்தை ஏற்றவள் அவன் பால் கறந்து கொண்டிருந்த மாட்டினருகில் சென்று அதன் முகத்தை மென்மையாக வருடிக்கொடுத்தாள் .மாடு துள்ளலுடன் அவள் கையை நக்கியது .கொஞ்சம் பசும்புல்லை எடுத்து அதற்கு கொடுத்தவள் அதன் கழுத்தை வருடிவிட்டு நடந்தாள் .தொடர்ந்து அந்த பெரிய வீடு முழுவதும் ஒரு சுற்று சுற்றி அந்தந்த வேலைகள் சரியாக நடக்கிறதா என கவனித்தவள் , மீண்டும் அடுப்படியினுள் நுழைந்தபோது ….” முதலில் எங்களுக்கு ஹார்லிக்ஸ் கொடுத்துட்டு பிறகு , சட்னி அரைக்க போங்க …” பொன்னியின் முந்தானையை பிடித்து இழுத்தபடி அதட்டிக் கொண்டிருந்தார்கள் ஏழு  வயது ராஜேந்திரனும் , ரவீந்திரனும் … இரண்டாவது மகன் முருகேசன் – அனுராதாவின்  பிள்ளைகள் .   இருவரும் இரட்டை பிள்ளைகள் .

” அஞ்சு நிமிசம் கண்ணுகளா .தோ வந்துடுறேன் …” இப்போது சாப்பிட வந்துவிடும் மாமனாருக்கு உணவு தயாரித்து வைத்து விடும்  அவசரம் பொன்னிக்கு .” ம்ஹூம் …முடியாது …பர்ஸ்ட் எங்களுக்குத்தான் ….”

” டேய் …விடுங்கடா …அம்மா இப்போ வந்தடுவாங்க ….”பெரிய மனுஷி தோரணையில்  சொன்னபடி வந்தாள் ஐந்து வயது கீர்த்தனா .முதல்மகன் கதிர்வேலன் – பொன்னியின் ஒரே மகள் .

” ஏய் …என்னடி டாங்கிற ….நாங்க உனக்கு அண்ணனுங்க ….ஒழுங்கா அண்ணான்னு கூப்பிடு …” குழந்தைகள் தங்களுக்குள் உறவு முறை சண்டைக்கிள் நுழைய கிடைத்த இடைவெளியில் பொன்னி சட்னி அரைக்கும் சாமான்களுடன் அம்மிக்கு நகர்ந்தாள் .இரண்டே நிமிடங்களில் குழந்தைகள் சண்டை அடிதடி ஆரம்பிக்கும் தருவாய்க்குள் நுழைகையில் அவர்களிடையே நுழைந்தாள் சொர்ணத்தாய் .

” சத்தம் போடாதீங்க பிள்ளைகளா …? உங்களுக்கு பாட்டி ஹார்லிக்ஸ் தர்றேன் …” பேரன் ,பேத்திகளை சமாதானப்படுத்தி பதமாய் ஹார்லிக்ஸ் ஆற்றி அவர்கள் கைகளில் கொடுத்து ரசித்து குடிப்பவர்களை பார்த்தபடி அமர்ந்திருந்த போது ….

” டிபன் முடிஞ்சதா பொன்னிக்கா ….பசங்களுக்கு பால் கொடுத்தீங்களா …? அவுங்க யூனிபார்ம் நேற்று அயர்ன் பண்ணி வைக்க மறந்துட்டேன் .கொஞ்சம் அயர்ன் பண்ணிடுங்களேன் …” படபடவென தனது ஓரக்கத்திக்கு வேலைகளை சொன்னபடி நுழைந்தாள் அனுராதா . மாமியாரை கண்டதும் தயங்கி நின்றாள் .

” ஒரு வழியா விடிஞ்சிடுச்சாக்கும் ….? “

முதலில் தடுமாறினாலும் பிறகு சுதாரித்து ” நேற்று நைட் படுக்க இரண்டு மணியாயிடுச்சு அத்தை . லேப்டாப்பில் ஒர்க் பண்ணினேன் ….” பண்ணிய வேலையை காட்டு என அதிகம் படிக்காத மாமியாரோ , ஓரக்கத்தியோ கேட்க மாட்டார்களென்ற தைரியத்தில் சொன்னவள் …” ஏய் பிசாசுங்களா சீக்கிரம் குடிச்சுட்டு குளிக்க வாங்க ….” பெற்ற பிள்ளைகளை அருமையாக விளித்தாள் .

” தெரியாத்தனமாக வீட்டிற்குள் பிசாசை கொண்டு வந்துட்டேன் போலவே ….” என்றபடி உள்ளே நுழைந்த பொன்னுரங்கத்தின் பார்வை அனுராதா மேலிருந்த்து .




What’s your Reaction?
+1
36
+1
31
+1
1
+1
3
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!