karthikai deepangal Serial Stories

கார்த்திகை தீபங்கள்-28

28

” பொன்னிக்காவுக்கும் கதிர்வேல் மச்சானுக்கும் என்ன பிரச்சனை பூந்தளிர் …? “

தானியங்களை யாக குண்டத்திற்குள் கொட்டி மந்திரங்களை உச்சாடனம் செய்து கொண்டிருந்த சாஸ்திரிகளை கவனித்துக் கொண்டிருந்த பூந்தளிர் அனுராதாவின் கேள்வியில்  திடுக்கிட்டாள் .

” என்ன உளறுகிறீர்கள் …? அவர்களுக்குள் பிரச்சினை என்று யார் சொன்னது …? “

” மெல்ல …மெல்ல… ஏன் இப்படி டென்சனாகிறாய் பூந்தளிர் …? அப்போ இரண்டு பேருக்குமிடையே ஒன்றுமில்லை என்கிறாய் …? “

” அப்படி ஒன்றுமில்லை …”

” ஓஹோ …கீர்த்தனா விசயமாக கூட ஒன்றுமில்லையோ …? ” பூந்தளிரின் அடி வயிற்றில் கத்தி சொருகியது போலிருந்த்து .

” உங்களுக்கு என்ன தெரியும்…? ” கலக்கமாக இருந்த்து பூந்தளிரின் கேள்வி .

” எல்லாம் தெரியும் …” அமர்த்தலாக வந்த்து அனுராதாவின் பதில் .

” எ…என்ன தெரியும் …? “

” உஷ் …யாகத்தை கவனி ….” திரும்பிக்கொண்டாள் .பூந்தளிரின் உள்ளம் அதன்பிறகு ஹோமத்தில் போகவில்லை .உள்ளம் படபடத்தபடி இருந்த்து . இவள் ஏதோ தெரிந்துதான் கேட்கிறாளா …? இல்லை போட்டு வாங்குகிறாளா ….? கீர்த்தனா விசயம் அனுராதாவிற்கு சொல்லக்கூடியவர்கள் பொன்னி , கதிர்வேலன் , குருபரன் , பூந்தளிர் மட்டும்தான் .நிச்சயம் இந்த நால்வரும் இது விசயமாக வாய் திறக்கபோவதில்லை . இந்த அனுராதா ஏதோ என் வாயிலிருந்து பிடுங்க நினைக்கிறாள் .தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாள் .

அனுராதாவிடமிருந்து நகர்ந்து போய் வேறொரு யாக்குண்டத்தில் அமர்ந்து கொண்டாள் .அங்கே பொன்னி கீர்த்தனாவுடன் அமர்ந்திருந்தாள் . மஞ்சள் பூசிய முகம் பொலிவாய் மினுங்க , அம்மனாய் அமர்ந்திருந்த பொன்னியை வாஞ்சயாய் பார்த்தாள் .எத்தனையோ நாட்கள் கழித்து இப்போதுதான் பொன்னி அக்கா நிம்மதியாய் இருக்கிறாள் .இப்போதெல்லாம் ஒரு புது அழகு தெரிந்த்து அவள் முகத்தில் . பூந்தளிர் அவளை ரசித்தபடி இருந்தபோது , அவர்களுருகே கதிர்வேலன் வந்து அமர்ந்தான் . கைகளில் குச்சயில் சுற்றப்பட்டிருந்த பஞ்சுமிட்டாய்கள் இரண்டு வைத்திருந்தான் .அதனை கீர்த்தனாவிடம் நீட்டினான் .

அவள் ஒன்றை வாங்கிக்கொண்டு போதுமெனக் கூற ,மற்றொன்றை பொன்னியிடம் கொடுத்தான் . அவள். சிறு பள்ளையா  நான் …என்க   , கதிர்வேலன் அதனை அவள் வாயருகே கொண்டு செல்ல , அவள் செல்லமாக முறைக்க
பிறரறியாமல் ஓர் ரகசிய காதல் அங்கே நடந்து கொண்டிருந்த்து .




பார்க்காத்து போல் பூந்தளிர் அதனை பார்த்துக் கொண்டிருந்தபோது ” அட …டா ..என்ன காதல் ….அக்காவும் மச்சானும் ….அசத்துறாங்களே ….” மீண்டும் அனுராதாதான் . திரும்பவும் பூந்தளிரின் அருகே வந்து அமர்ந்து கொண்டிருந்தாள் . பூந்தளிர் காது கேட்காத்து போல் திரும்பிக் கொண்டாள் .

” உனக்கு ஒன்று தெரியுமா பூந்தளிர் …பொன்னி அக்காவும் , கதிர்வேல் மச்சானும் முன்பு திருமணம் முடிந்த புதிதில் இப்படித்தான் மிகுந்த அந்நியோன்னியமாக இருப்பார்களாம் .என் கணவர் சொல்லியிருக்கிறார் .நான் பார்த்தவரை இரண்டு பேரும் ஒருவரையொருவர் முறைத்தாற் போலத்தான் இருப்பார்கள். வயது போய்விட்டதே …என நாங்கள் எங்களிக்குள் பேசிக்கொண்டோம் .ஆனால் இப்போது பாரேன் இரண்டு பேரும் புதிதாக மணம்முடித்த தம்பதிகள் போல் கொஞ்சிக் கொள்வதை ….இது எப்படி பூந்தளிர் …? இருவருக்கும் திடீரென்று என்ன ஆனது …? “

” உங்கள் கண்ணில் காமாலை போல …அதுதான் கண்டதெல்லாம் மஞ்சளாக தெரிகிறது .அவர்கள் எப்போதும் போலத்தான் இருக்கன்றனர் .எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை …” அனுராதாவின் கேள்வியை ஆரம்பத்திலேயே முனை முறித்தாள் .

” ஓ…உனக்கு வித்தியாசமே தெரியலையா …? அது சரி நீ நேற்று வந்தவள் .அதுவும் பெரிய இடத்து விசயங்களெல்லாம் உன் போல் குடிசைவாசிக்கு என்ன தெரியும் …? ” பூந்தளிர் உதட்டை கடித்து தன்னை அடக்கினாள் .இல்லை …வாயை திறக்க கூடாது .இவள் வேண்டுமென்றே வம்பிழுக்கிறாள் .

” சரிதான் அனுக்கா ….நீங்களும் கூட என்னை போல்தானே .எங்கள் கல்யாணத்தோடு எனக்கு என் அம்மா வீட்டில்  ஐம்பது பவுன் போட்டார்கள் .உங்களுக்கு எத்தனை …நூறு இருக்குமா …? ” பெண்ணின் மதிப்பை அவளது பிறந்தக சீர் கொண்டு நிரணயிக்க நினைப்பவளில்லை பூந்தளிர் .ஆனால் அவளை அப்படி ஓர் இக்கட்டிற்கு தள்ளினாள் அனுராதா .

என் பிறந்த வீட்டு சீர் விசயம் இவளுக்கெப்படி தெரிந்த்து …? முப்பது பவுன் பேசி அதிலும் பாதியை விழுங்கி ஏதோதோ சொல்லி , பேசியென அவள் பிறந்தவீடு அவளை ஒப்பேற்றிவிட்டிருந்த்து . இவள் …பற்களை கடித்தாள் அனுராதா .இது போல் அனுராதாவை குத்தலாக பேசிவிட்டோமே என்ற வருத்தத்தில் பூந்தளிர் அவள் முகம் பார்க்கவில்லை .பார்த்திருந்தாளானால் அவள் விழிகளில் மின்னிய குரூரத்திற்கு யோசித்திருப்பாள் .

———————–

அன்று அதிகாலை கோவிலின் வெளி பிரகாரத்தில் புதிதாக வைத்திருக்கும் உபதெய்வங்களுக்கான விழி திறப்பு விழா .அய்யனார் , காளி , முனீஸ்வரன் , மாடசாமி போன்ற உப தெய்வ சிலைகள் கோவில் பிரகாரத்தினுள் சிலையாக்கி வைக்கப்பட்டிருந்தன .இந்த வகை தெய்வங்களை காவல் தெய்வங்களாக்கி அவைகளை ஊர் எல்லையோரம்  வெட்டவெளியில் மழையிலும் , வெயிலிலும் தள்ளி விடுவர் .இவை பெரும்பாலும் குறைந்த சாதியினரின் குலதெய்வமாக இருக்கும் .

அது போன்ற சிறு சாதி தெய்வங்களுக்கும் முக்கியத்துவம்  கொடுத்து அவைகளையும் கோவிலினுள் தனி பீடத்தில் அமர்த்தி மரியாதை கொடுத்திருந்தார் பொன்னுரங்கம் .முன்பே இருந்த விஷ்ணு , துர்க்கை ,பெருமாள் , ஈசன் சிலைகளோடு இந்த தெய்வங்களும் சம அந்தஸ்தை பெற்றிருந்தன . தன்னருகே நின்றிருந்த பலவேசத்தின் தோள்களில் நட்புடன்  கையை போட்டபடி சிலைகளின் கண் திறப்பை பரவசத்துடனபார்த்தபடி இருந்த தன்  மாமனாரை பெருமித்த்துடன. பார்த்தாள் பூந்தளிர் .எவ்வளவு அற்புதமான மனிதர் இவர் . அவளும் ஒரு நேரம் தனது குடும்பத்திற்கு , தனக்கு பின்னாளில் பெயர் கிடைக்கவேண்டுமென்ற சுயநலத்துடன்தான் இவர் இந்த கும்பாபிசேக வேலைகளை பார்ப்பதாக நினைத்திருந்தாளே …

அப்படி நினைத்துதானே திருமணத்தை கூட மறுத்தாள் …? ஆனால் பொன்னுரங்கம் மட்டும் உறுதியாக இருந்து திருமணத்தை முடிக்காமல் இருந்திருந்தால் …பூந்தளிரின் உடலில் ஓர் மெல்லிய அதிர்வு ஓடியது . அப்படி ஏதாவது நடந்திருந்தால் அவள் …குருபரனை அல்லவா இழந்திருப்பாள் …? அவனில்லாமல் அவளால் இருந்திருக்க முடியுமா …? உடலின் ஒவ்வொரு அணுவும் முடியாது முடியாது என்க , கண்களை மூடி தன்னை நிலை நிறுத்திக் கொண்டாள் .

” ஏய் முக்கியமான நேரத்தில் கண்ணை மூடிக்கிட்டா எப்படி …? அங்கே பார் சுவாமி கண் திறத்தல் .சந்தனத்தை எடுத்ததும் கண்கள் எப்படி ஜொலிக்கிறது பார் மாடசாமிக்கு …” குருபரன்தான் பின்னாலிருந்து அவளை நிலைப்படுத்தினான் .




இத்தனை கூட்டத்திலும் , எத்தனை இடைஞ்சலிலும் எப்படித்தான் கவனிப்பானோ ….அவளது சிறு அசங்கலையும் , இடையூறையும் கூட கவனித்துவிடுவான் .உடனடியாக ஆதரவாக அருகே வந்துவிடுவான் .பெருமிதமும் , காதலுமாக கணவனை நோக்கினாள் .

” அடி வாங்க போற …எங்கே வைத்து …இந்த மாதிரி பார்வை ..? ஒழுங்கா சாமியை பார் …” அவள் முகம் பார்க்காமலேயே , தன் முழங்கையால் அவளை இடித்து கவனத்தை திசை திருப்பினான் .

” இன்னைக்கு கோவில்ல உனக்கு ஏதாவது பிரச்சினையா தளிர் …? ” கணவனின் இந்த கேள்வி பூந்தளிர் எதிர்பார்த்ததுதான் .

” ஆமாம் ….மொத்தம் பத்து தடவைதான் என்கிட்ட வந்து பேசுனீங்க …? நான் பதினைந்து தடவை வரனும்னு நினைத்திருந்தேன் ….” பூந்தளிர் குறும்புடன் சொன்னாள் .

” ஏய் …நான் அதையாடி கேட்டேன் …? அனுராதா மதினி உன்கிட்ட ஏதோ பேசிட்டிருந்தாங்களே …? “

” நாங்க பொண்ணுங்களுக்குள் ஏதாவது பேசுவோம் .உங்களுக்கென்ன …? ” குருபரன் கோபக்காரன் . அனுராதாவின் பேச்சு சரியாக புரிய ஆரம்பிக்காத இந்த நிலையில் அவளை பற்றி கணவனிடம் எதுவும் கூற பூந்தளிர் விரும்பவில்லை .அவன் பாட்டுக்கு எல்லோர் முன்னிலையிலும் அவளை ஏதாவது பேசி வைப்பான் .அனுராதா அதுதான் சாக்கென்று குதித்தாலும் குதிப்பாள் . கோவில் கும்பாபிசேகம் நல்லபடியாக நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் தன் வீட்டில் இது போலொரு அசுபம் நடப்பதை பூந்தளிர் விரும்பவில்லை. முதலில் கும்பாபிசேகம் நல்லபடியாக முடியட்டுமென நினைத்தாள் .

பூந்தளிரின் முகத்தை உற்று பார்த்தவன் ” ம் .சரி .ஆனால் உனக்கு என்ன பிரச்சினையென்றாலும் , எப்போது வேண்டுமானாலும் என்னிடம் சொல்ல தயங்க கூடாது .சரியா …? ” மென்மையாய் அவள் கன்னத்தை வருடிவிட்டு போனான் .
அன்றைய நாளின் குறை பொழுது அந்த இத வருடலுடனேயே கழிந்த்து .இந்த இதமற்ற ஒரு நாளையும் கற்பனை செய்யக் கூட பூந்தளிர் தயாரில்லை .

குருபரன் அத்தனை நாட்கள் மனைவியை விட்டு விலகியிருந்த்தற்கும் சேர்த்து ஈடு செய்வது போல் அவளுடன் அதிகம் ஒன்றினான் .கிடைத்த சிறு நிமிடத்தை கூட மனைவி அருகில் உட்கார்ந்து கழிக்க எண்ணினான் .அவனுக்கு சற்றும் குறையாத ஆவல்தான் பூந்தளிருக்கும் .அதனால் சூழ்ந்து கொண்டிருக்கும் கும்பாபிசேக வேலைகளுக்கிடையே கீற்றென  கிடைத்த சொற்ப நிமிடங்களை கூட , பார்வையிலேனும் ஒருவரையொருவர் தின்று கழித்துக் கொண்டிருந்தனர் தம்பதிகள்.

அன்று இரவு தூங்கிக் கொண்டிருந்தவளை எழுப்பிய குருபரன் அவள் நெற்றியில் அழுத்தமான முத்தம் பதித்தான் .கன்னத்திற்கு பயணம் செய்த இதழ்கள் காது மடல்களை கவ்விய போது ” பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம் ” என முணுமுணுத்தன .கணவனின் முத்தங்களில் கிறங்கிக் கொண்டிருந்த பூந்தளிரின் மனம் இன்பமாக அதிர்ந்த்து . அவளது பிறந்தநாள் .அடுத்தடுத்த ஙேலைகளில் அவளே மறந்து விட்டிருந்தாள் .

” உங்களுக்கு எப்படி …? யார் சொன்னது …? “

” பொண்டாட்டி மேல் அக்கறை இருந்தால் இதெல்லாம் தானாக தெரியும் …”

” ம் …சரி …சரி .ரொம்ப பெருமைபட்டுக்காதீங்க ..இப்படி முத்தம் கொடுத்தே சமாளிச்சிடலாம்னு நினைக்காதீங்க . என் பிறந்தாள் பரிசு எங்கே …? “

” யாருடி சொன்னா …வெறும் முத்தம் மட்டும்னு …இன்னமும் நிறைய …”

” ச்சீ … எனக்கு கிப்ட் தாங்கன்னா …” சிணுங்கினாள் .




” இதைவிட பெரிய கிப்ட் வேறென்னடி இருக்க போகுது …? ” ஆக்ரோசமாய் அவளை ஆக்ரமிக்க துவங்கினான் .துவண்டு அவனுள் கரைய ஆரம்பித்தாள் அவள் .

காலையில் குளித்து முடித்ததும் தனது போனில் வந்திருந்த நண்பர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தவளின் இடை பின்னிருந்து இறுக்கி கட்டப்பட்டது .
” ஏய் காலங்கார்த்தால புருசனை கவனிக்காமல் போனில் என்னடி பண்ற …? “

” என் ப்ரெண்ட்ஸ் .போனில் பிறந்தநாள் வாழ்த்து சொல்லியிருக்காங்க .அதை பார்த்துட்டு இருக்கேன் .”

” அப்படியா …யார் …யார் ..என்ன …வாழ்த்து சொல்லியிருக்காங்க …? “

தனது நட்புகளின் அன்பினை கணவனுக்கு காட்டும் ஆவலில் ஒவ்வொரு மெசேஜாக வாசிக்க ஆரம்பித்தாள் . திடீரென ஒரு செய்தியில் அவள் விரல்கள் உறைந்து நின்றன .அது …அந்த உழவன் மகனிடமிருந்து வந்திருந்த வாழ்த்து செய்தி . தான் அவளை காதலிப்பதாக ஆணித்தரமாக செய்தியாகவே அனுப்பியிருந்தான் அவன் . அவளது பிறந்தநாள் பரிசாக தனக்கு காதலை அளிக்கும்படி வேறு கேட்டுக் கொண்டிருந்தான் .

பூந்தளிரின் உடல் வியர்க்க கணவனை திரும்பி பார்த்தாள் .அவன் இவளது போனை கவனியாமல்பின்னிருந்து   அவள் தோளில் முகம் புதைத்தபடி இவளது வாசிப்புகளை மட்டும் கேட்டபடி இருந்தான் .

” ம் …சொல்லுடா …” அவன் கைகள் மனைவியின் இடையை அழுத்தியது .

என்ன சொல்வது …? இதை எப்படி சொல்வது …? இதனை இவன் எப்படி எடுத்துக் கொள்வான் …?

” என்னாச்சுடா தளிர் …? ” தோளில் புதைத்திருந்த தனது தலையை நிமிர்த்தி அவன் பார்த்தபோது பூந்தளிர் தன் போனை ஆப் செய்திருந்தாள் .

” நிறைய வேலை இருக்கு . மீதியை பிறகு பார்க்கலாம் …” குழப்பங்களில் ஆழ்ந்திருந்த அவள் மனதின் ஓரம் கணவன் சொன்னது போல் இந்த உழவன் மகனுக்கு  அதிக இடம் கொடுத்து விட்டேனோ …? இவனை எப்படி அப்புறப்படுத்துவது …? என்ற எண்ணங்கள் அரித்தபடி இருந்தன.

ஏலக்காய் வாசனையுடன் பொன் முறுவல் முந்திரி மினுங்க , நெய்யில் மிதந்தபடி அவள் முன் நீட்டப்பட்ட அல்வாவில் விழி விரித்தாள் பூந்தளிர் .

” பிறந்தநாள் வாழ்த்துக்கள் பூவு ….” பொன்னி புன்னகைத்தாள் .

” அக்கா …நீங்களா …எனக்காகவா …? ” திணறினாள் .

” இல்லை பூவு இதை நான் செய்யலை .நம் அத்தைதான் …காலையில் ஐந்து மணிக்கு எழுந்து கோதுமையை ஆட்டி …பாலெடுத்து , இரும்பு சட்டியில் போட்டு கிண்டி …எல்லாம் அவர்கள்தான் .எனக்கு கோதுமை அல்வா பக்குவம் அவ்வளவா வராது …”

பூந்தளிர் கண்கள் கலங்கியது .சொர்ணத்தாய்க்கு கோவில் வேலைகள் நிறைய இருப்பது அவளுக்கு தெரியும் . வேலைகளை முடித்ததும் அக்கடா வென்று படுத்து உறங்காமல் மருமகளுக்காக அதிகாலை விழித்து எழுந்து கை வலிக்க அல்வா கிண்டுவதென்றால் …

” ஏன்டி எப்போ பார்த்தாலும் இரண்டு பேரும் அடுப்படிக்குள்ஒருத்தி மூஞ்சை ஒருத்தி பார்த்து இளிச்சுட்டே நிப்பீங்களா …? சோளி பாடு பாக்க மாட்டீங்களா …? ” எப்போதும் போல் வசை பாடியபடி வந்த மாமியாரை நெகிழ்ச்சியுடன் பார்த்தாள். சட்டென அவளை நெருங்கி தோள்களை கட்டி அவள் மேல் சாய்ந்து கொண்டாள் .

” அத்தை ….” என்றதற்கு மேல் வார்த்தை வராமல் தடுமாறியவளை தள்ள முயன்றபடி கத்தினாள் சொர்ணத்தாய் .

” ஏன்டி இவளே காலங்கார்த்தாலே இப்படி ஏன்டி என் மேல வந்து விழுற …? மாமியார்ங்கிற மரியாதை இல்லையே …”

” தள்ளாதீங்கத்தை ்இன்னைக்கு எனக்கு பிறந்தநாள்…”

” ஏய் பிறந்தநாள்னா பெரியவங்க காலில்தான் விழுவாங்க .இப்படி மேலயா விழுவாங்க ….? “

” நான் இப்படித்தான் ….” விலகாமல் வம்பு செய்தவள் ” இவளை பாருங்களேன் …சின்னக்குழந்தை மாதிரி “என்ற சொர்ணத்தாயின் குற்றச்சாட்டுக்கு சட்டென விலகினாள் .

” எனக்கு பிறந்தநாள் .ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா …” பொன்னுரங்கத்தின் கால்களில் பணிந்தாள் .

” நல்லாயிரும்மா ….” வாழ்த்தி பொன்னுரங்கம் கைகளில் கொடுத்த ருபாய் நோட்டுகளுக்கு அனுராதாவிற்கு வயிறு எரிந்த்து .இப்படி இந்த வீட்டில் அவளது பிறந்தநாள் ஒருநாள் கூட கொண்டாடப்படவில்லையே …கணவன் , மனைவியுமாக அவர்கள் இருவருக்குள்ளும் தானே கொண்டாடியிருக்கிறார்கள் .இவள் கணவனை போல் என் கணவனுக்கு மனைவி பிறந்தநாளை எல்லோருக்கும் சொல்லி கொண்டாட வேண்டுமென ஏன் தோன்றவில்லை ….? அவள் எரிச்சலுடன் கணவனை பார்க்க அவன் தம்பி மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக் கொண்டிருந்தான் .




” ஐயோ காலிலெல்லாம் விழ வேண்டாம்மா .நல்லாயிரு …” கதிர்வேலன் துள்ளி மனைவி புறம் நகர்ந்துவிட்டு சொன்னான் . அவனுக்கென்னவோ அன்று பொன்னிக்காக நியாயம் கேட்டு பூந்தளிர் அவனிடம் பயமில்லாமல் நின்றதிலிருந்து அவள் மேல் கொஞ்சம் பயம் வந்திருந்த்து .

” சிலநேரம் எனக்கு கூட இப்படித்தாண்ணே இவகிட்ட  பயமா இருக்கு …” குருபரன் அண்ணனின் காதில் முணுமுணுத்ததை கேட்டுவிட்ட பூந்தளிர் அவனை முறைக்க , கதிர்வேலன் தம்பியிடம் ” அது சரியாத்தான்டா தோணுது ….” என்றான் .

அண்ணனும் , தம்பியுமாக செய்யும் கிண்டலுக்கு என்ன பதிலடி கொடுக்கலாமென யோசித்து நின்ற பூந்தளிரின் சிந்தனையை தடுத்து அவள் கை பிடித்து வாசலுக்கு இழுத்து சென்றான் குருபரன் .பூந்தளிரோடு வீட்டினர் அனைவரும் ஆவலோடு வாசலுக்கு சென்றனர் .

அங்கே …வெட்டி வைத்த வெண்ணைய் கட்டி போல் புத்தம் புதிதாக மின்னியபடி நின்றுகொண்டிருந்த்து ஒரு மாருதி ஐ 20 கார் .

” என் பிறந்தநாள் பரிசு …” கார் சாவியை நீட்டிய கணவனை பிரமிப்பாய் பார்த்தாள் பூந்தளிர் .அனுராதாவின் முகத்தில் அக்னி எறிய துவங்கியது .




What’s your Reaction?
+1
30
+1
20
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!