karthikai deepangal Serial Stories

கார்த்திகை தீபங்கள்-26

26

” உன் அளவு எனக்கு இந்த கும்பாபிசேகம் முக்கியமில்லை பூந்தளிர் .அதனால் நான் இங்கிருக்க வேண்டிய அவசியமும் இல்லை ….”

” உங்களை போல் என்னால் எல்லாவற்றையும் உதற முடியாது அத்தான் .புரியுமென்று நினைக்கிறேன. ….”

” ம் ….இது போல் ஒரு நிலைமை வரக்கூடாதென்றுதான் ரொம்பவே மெனக்கெட்டேன். ஆனால் …ப்ச் …இந்த வேலையை நான் ஏன் ரொம்ப விரும்பினேன் தெரியுமா பூந்தளிர் …? “

அவளுக்கு தெரியும் .பூந்தளிர் , குமரன் இருவருமே அவரவர் படிப்பிற்கேற்ற வேலையை தேடிக்கொண்டு திருமணம் முடித்து    சென்னையில் செட்டிலாகி விடவேண்டுமென்பது குமரனின் ஆசை .அதனால் அப்போதிருந்தே அவளை வேலைக்கு அப்ளை செய்யும்படி நச்சரித்து கொண டே இருப்பான் .இதில் பூந்தளிருக்கென்னவோ அவ்வளவு விருப்பமில்லாமலேயே இருந்த்து . தன்னால் வேறு ஒருவனின் கீழ் அவன் சொல் கேட்டு வேலை பார்க்க முடியுமா …என்ற சந்தேகம் அவளுக்குண்டு

.தனக்கு கொஞ்சம் மண்டைக்கனம் அதிகம்தான் போல …என்று எண்ணியவளுக்கு தொடர்ந்து அன்று குருபரன் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை திமிர் என்றது நினைவு வர …உண்மையிலேயே  தான்   அப்படித்தானோ …என்று யோசிக்க ஆரம்பித்தாள் .

” அடிக்கடி வேறெங்கோ போய்விடுகிறாய் பூந்தளிர் …” குமரனின் குரல் வறண்டு ஒலித்தது .

” அ…அது ..இல்லை அத்தான் .அன்று அவர் எனக்கு திமிர் அதிகம் என்றாரா …நான் கோப்ப்பட்டு அவரிடம் சண்டை போட்டேனா …இப்போது யோசித்து பார்த்தால் அப்படித்தானோ என்று தோன்றுகிறது . உண்மையில் நான் கொஞ்சம் திமிர் பிடித்தவள்தானோ ….? ” குமரனிடமே சந்தேகம் கேட்க அவன் புன்னகைத்தான் .

” இப்போது இன்னமும்  கூடியிருக்கிறது .ஆனால் அந்த குழந்தைத்தனம் அப்படியே இருக்கிறது ….”

” அப்போ நீங்களும் நான் திமிர் பிடித்தவளென்றா சொல்கிறீர்கள் ….? “

” திமிரோடு இப்போது கொஞ்சம் கொழுப்பும் சேர்ந்திருக்கிறது ….” சொன்னபடி வந்தவன் குருபரன் .

” என்னது கொழுப்பா …? அதென்ன நீங்கள் எனக்கு தினமும் சமைத்து …சமைத்து கொட்டினீர்களா …நான் கொழுப்பெடுத்து போக …? “

” பின்னே இல்லையா …எத்தனை நாட்கள் நீ தேவையில்லாமல் சண்டை போட டு விட்டு சாப்பிடாமல் படுத்த போதெல்லாம் உனக்காக நான் சாப்பாடு கொண்டு வந்து கொடுத்திருக்கிறேன் …”

” ஒரே ஒரு நாள் தோசை சுட்டுட்டு வந்து கொடுத்தீர்கள் …அதை போய் பெரிதாக சொல்கிறீர்களே …? “

” உனக்கு நான் புரோட்டா வாங்கி கொடுக்கவில்லை ….? “




” அது ஒரு நாள் .இதையெல்லாம் கணக்கு வைத்துக் கொண்டா இருக்கிறீர்கள் …? சை அதனால்தான் சாப்பாடு என் உடம்பில் ஒட்டவே மாட்டேனென்கிறது ….அடிக்கடி உடம்புக்கு முடியாமல் போந் விடுகிறது ” சலித்து கொண்டாள் .

” வீட்டில் வேலையே பார்க்காமல் சாப்பிட மட்டுமே  செய்தால்
முடியாமல்தான் போகும் ….”

” நான் வீட்டு வேலை செய்வதில்லையா ….? நான் ஸ்கூலை கவனிப்பேனா ….வீட்டில் உங்களுக்கு சமைத்து கொட்டிக் கொண்டிருப்பேனா …? “

” அப்படி …இப்படி சமைச்சிடாதே …என் நிலமை பரிதாபமாக போய்விடும் .ஏதோ வீட்டில் அம்மாவும் , மதினியும் இருப்பதால் என் பாடு ஓடிவிடுகிறது …”

” ஓஹோ …இப்படி ஒரு எண்ணமா உங்களுக்கு …இப்போ கேட்டுக்கோங்க ….அடுத்த வாரம் முழுவதும் உங்களுக்கு மூணு வேளையும் நான்தான் சமைச்சி போட போறேன் ….”

” அடுத்த வாரம் முழுவதும் நான் ஙெளியூருக்கு போய்விடப் போகிறேன் ….”

சுற்றுப்புறம் மறந்து தங்களுக்கென தனி உலகொன்றில் நுழைந்து விட்ட அந்த இருவரையும் ஆச்சரியமாக பார்த்தபடி இருந்தான் குமரன் .பூந்தளிரை அவனுக்கு தெரியும். வார்த்தைக்கு …வார்த்தை வாயாடுபவள் .குருபரன் அப்படி இல்லை .எண்ணி எண்ணி பேசுபவன் …பாதி பேசுவான் …பாதிக்கு கையசைத்து ஜாடை சொல்வான் . பலமுறை அவனிடம் அவ்விதம் பேச்சு வாங்கி விட்டு ஜாதித்திமிர் என்று பல்லை கடித்திருக்கிறான் குமரன் .அவனா இப்படி பேசுகிறான் …!!!

” ஹலோ நான் ஒருவன் இங்கே இருக்கிறேன் ….” இருவருக்குமிடையே கையை அசைத்தான் .

” இன்னமுமா இருக்கிறீர்கள் …? ” குருபரனின் கூர் பார்வை கத்தியாய் குமரனின் அடி வயிற்றில் சொருகியது .

” இருங்கள் அத்தான் .நீங்கள்தான் எனக்கு சப்போர்ட் ….” பூந்தளிருக்கு குருபரனுடனான சண்டையை நிறுத்தும் எண்ணமில்லை.

” சென்னைக்கு கிளம்பிக் கொண்டிருப்பவரை …ஏன் வம்பிழுக்கிறாய் பூந்தளிர் …? “

” அதெப்படி உங்களுக்கு தெரியும் …? “

” இப்போதுதானே பேசிக் கொண்டிருந்தீர்கள் .”

” நாங்க பேசினதை கேட்டுட்டு இருந்தீங்களாக்கும் …”

” என்ன ரகசியமா பேசுனீங்க …இதோ சுற்றி இத்தனை பேருக்கு நடுவில் பேசுனீங்க .அதில் கொஞ்சம் காத்துவாக்கில் என் காதிலும் வந்து விழுந்த்து .,..”

” காத்துவாக்கில் ….” குமரன் நக்கலாக இழுக்க …

” ஆமாம் …காத்துவாக்கில் ….” குருபரன் அழுத்தி சொன்னான் .

” உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டுமே பூந்தளிர் ….” குமரன் குருபரனை பார்த்தபடி கூற ….அவன் முகம் கறுத்தது .

” என்ன விசயம் அத்தான் …? “




” உழவன் மகன் பற்றி …அவர் நேற்று ஒரு பதிவு போட்டிருந்தார் படித்தாயா …? ” குமரனின் குரலில் உனக்கு தெரியாத , புரியாத விசயமொன்றை நாங்கள் இருவருமாக பேசுகிறோமே என்ற செய்தி இருந்த்து .

” என்ன போட்டிருந்தார் …? ” பூந்தளிர் வேகமாக தனது போனை எடுத்து பார்க்க துவங்கினாள் .குருபரன் சிறு சலிப்புடன் இருவரையும் பார்த்தபடி நின்றான் .

” வெள்ளை சோளம் , துவரையோடு …சென்டுமல்லியையும் சேர்த்து விதைப்பது எப்படின்னு போட்டிருக்கிறார் …”

” சோளமும் , துவரையும் சரி …ஒன்றாக விதைக்கலாம் இப்போது நாங்கள் கூட எங்கள் வயலில் அதைத்தான் விதைத்திருக்கிறோம் .இதோடு சென்டுமல்லி எப்படி சேர்த்து போட முடியும் …? ஏங்க உங்களுக்கு தெரியுமா …? ” பூந்தளிர் இயல்பாக குருபரனையும் அவர்கள் பேச்சில் இழுக்க , அவன் பதிலின்றி திரும்பி நடந்தான் .

ஒரு விபரம் சொன்னால் கேட்டுக் கொள்ளும் பொறுமை இருக்கிறதா பாரேன் ….இவனுக்குத்தான் உடல் முழுக்க திமிர்…அவன் முதுகை பார்த்துக் கொண்டிருந்த பூந்தளிரை ….தன் பேச்சு பக்கம் திருப்பினான் குமரன் .

” நீ தவறாமல் அவர் பதிவுகளை படித்து விடுவாயே …? இதை எப்படி விட்டாய் …? “

பூந்தளிர் திணறினாள் .அவள் கொஞ்சநாட்களாக அந்த உழவன்மகனை தவிர்த்து வருகிறாள் .ஏனென்றால் அவன் பூந்தளிரிடம் கொஞ்சம் அதிக அக்கறை எடுத்து கொள்வது போல் அவளுக்கு தோண ஆரம்பித்திருந்த்து . அடிக்கடி அவளிடம் இன்பாக்ஸில் பேச முயன்றான் . அவளது குடும்ப விபரங்களை துருவினான் . உங்கள் ஊருக்கு வந்தால் உங்களை சந்திக்கலாமா ….எனக் கேட்டான் .ஏதோ ஒரு நெருடல் வர பூந்தளிர் அவனை தவிர்க்க தொடங்கினாள் .

” அ…அது …இந்த கும்பாபிசேக வேலை கொஞ்சம் அதிகம்.அதனால்தான் …நீங்களே சொல்லுங்களேன் , என்ன எழுதியிருக்கிறார் …? “

” சென்டுமல்லி நாற்று நடவு பூந்தளிர் .அதனால் சோளமும் , துவரையும் விதைக்கும் போதே , இதற்கு தனியாக நாற்றுப்பாத்தி அமைத்து வைத்துக் கொள்ள வேண்டும் ….” தனது போனை எடுத்து பார்த்தபடி அவன் படிக்க ஆரம்பிக்க முதலில் கவனமாக கேட்ட பூந்தளிரின் கவனம் பத்து நிமிடங்களிலேயே மாறியது .

திடுமென எதிரே இருந்த பூந்தளிரை காணாமல் போயிருக்க வெற்றிடத்துடன் பேசிக்கொண்டிருப்பதை உணர்ந்த குமரன் திகைத்தான் . கண்களால் அவளை தேட அவள் கொஞ்ச தூரம் தள்ளி குருபரனுடன் கை கோர்த்து நின்றுகொண்டிருந்தாள் .எதையோ அவனுக்கு சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தாள் . குமரன் எரிச்சலுடன் அந்த இடத்தை விட்டு அகன்றான் .

திடுமென சிறு இரைப்புடன் தன்னருகே வந்து நின்ற பூந்தளிரை ஆச்சரியமாக பார்த்த குருபரன் , அவள் முகம் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு சிவத்திருப்பதை பார்த்து ” தளிர் …என்னடா …? ” என்றான் ஆதரவாக .

பதில் சொல்லாமல் இடது கையால் அவன் கையை கோர்த்துக் கொண்டவள் வலது கையால் சுட்டிக் காட்டினாள் .அங்கே ….

கதிர்வேலன் நின்றிருந்தான். அவன் கை விரலை பிடித்தபடி கீர்த்தனா நின்றிருந்தாள் .கும்பாபிசேக விசேசத்திற்காக நிறைய வந்திருந்த பலூன் வியாபாரிகளில் ஒருவரிடம் இருவரும் பலூன் வாங்கிக்கொண்டிருந்தனர் .ஆப்பிள் பலூன் ஒன்றை வாங்கி கையில் வைத்துக் கொண்டு இரண்டு குட்டி பலூன்கள் உருண்டு கொண்டிருந்த பெரிய பலூன் ஒன்றை பார்த்து கை நீட்டிக் கொண்டிருந்தாள் கீர்த்தனா .அதையும் வாங்கி மகளின் கையில் கொடுத்துவிட்டு அவள் கை பிடித்து நடந்தான் கதிர்வேலன் . இப்போது கீர்த்தனா அழகாக பாட்டு பாடியபடி    குச்சியில் சிவப்பு , பச்சை கோடுகளோடு சுற்றியிருந்த சவ்வுமிட்டாய்கார்ர் பக்கம் விரல் நீட்டினாள் .




சவ்வு மிட்டாய்கார்ர்  பாடிய பாட்டை குழந்தையோடு தானும் சேர்ந்து ரசித்தபடி ,மகள் கேட்ட வாட்ச்சை அவள் கைகளில் வாங்கி கட்டிவிட்டான் .வாட்சை கட்டுவதற்காக அவளை தன் கைகளில் தூக்கியிருந்தவன் , பிறகும் அவளை கீழே இறக்கிவிடாமல் தூக்கியபடியே நடந்தான் . கையில் கட்டியிருந்த வாட்சிலிருந்து சிறிது பிய்த்தெடுத்து அப்பாவின் வாய்க்குள் போட்டாள் கீர்த்தனா .அவன் அதை ரசித்து சுவைத்தான் .இருவருமாக அடுத்து ராட்டினங்கள் சுற்றிக் கொண்டிருந்த பகுதிக்குள் நுழைந்தார்கள் .

” உஷ் …தளிர் இது சந்தோசப்பட வேண்டிய நேரம் .இப்போது எதற்கு கண்ணீர் …? ” அதட்டிய குருபரனின் குரலும் நெகிழ்வில் கரகரத்தது .

” நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள் ….” பூந்தளிர் உணர்வுப் பெருக்குடன் அவன் தோள்களில் சாய்ந்தாள் .

” நானில்லை தளிர் …அண்ணன்தான்…அவர்தான் வாழ்க்கையில் ஜெயித்திருக்கிறார் ….”

” டேய் …” பின்னாலிருந்து குருபரனின் சட்டை இழுக்கப்பட , அவன் திரும்பி பார்த்தான் .முருகேசன் நின்றிருந்தான் .இங்கே என்னடா செய்கிறீர்கள் ரெண்டு பேரும் …பல்லை கடித்தான் அவன் .அவனது கோபத்திற்கு காரணம் புரியாமல் இருவரும் அவனை பார்த்தனர் .

” என்ன அண்ணா …? “

” ஐயா அந்தப்பக்கம் நின்று கொண்டிருக்கிறார் .இப்போது இங்கே வருவார் .அது வரை இப்படியே நின்று கொண்டிருக்க போகிறீர்களா …? ” அப்போதுதான் தாங்கள் நின்று கொண்டிருந்த நிலையை பார்த்தனர் இருவரும் .குருபரனின் கையை கோர்த்திருந்த பூந்தளிர் அப்படியே அவன் தோளில் தலையை சாய்த்திருந்தாள் . அவன் அவள் தலையை தன் தோளோடு வளைத்து அழுத்தியிருந்தான் .

உடல் முழுவதும் கூச்சம் அலையடிக்க , அவசரமாக கணவனிடமிருந்து விலகி நின்றாள் பூந்தளிர் .

” ஹி ….ஹி …சும்மாண்ணா ….வேடிக்கை பார்த்துட்டு இருந்தோம் ….” குருபரன் அண்ணனிடம் வழிந்தான் .

” உங்க வழிசல் தாங்கலைடா சாமி …” முருகேசன் நோகாமல் தலையிலடித்துக் கொண்டு நகர்ந்தான் .கணவனின் உல்லாச பார்வையை சந்திக்கும் தெம்பின்றி நகர்ந்தாள் பூந்தளிர் .ஏனோ அம்மனை பார்க்க வேண்டும் போலிருக்க கோவிலினுள் நுழைந்தாள் .

பந்தலுக்கு அடியில் செங்கற்களை அடுக்கி யாக குண்டங்கள் தயாராக ஆரம்பித்துவிட்டன. யாகத்திற்கான பந்தக்கால் அன்று காலைதான் நடப்பட்டிருந்த்து .நாளையிலிருந்து யாகம் தொடங்கிவிடும் .

கதிர்வேலனும் , கீர்த்தனாவும் அப்பாவும் , மகளுமாக ஒன்ற ஆரம்பித்து விட்டது மனம் முழுவதும் நிறைவாக பரவியிருக்க , ஒன்றும் கேட்க தோன்றாமல் அம்மன் முகத்தை பார்த்தபடி கை கூப்பி நின்றாள் .வாழ்க்கையை நிறைவாக்கி விட்டாய்தாயே ….வேண்டுதலொன்றும் தோன்றாமல் நன்றியை மட்டுமே அம்மனிடம்   உரைத்தது அவளது உள்ளம் .

மனம் நிறை நிம்மதியுடன் பூந்தளிர் கோவிலை விட்டு வந்தாலும் , அந்த உலகாளும் அன்னை மகளின் வாழ்வை அறிவாளல்லவா …? உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன் …கவலைப்படாமல் போ மகளே என்பது போல் சிரித்தபடி இருந்தாள் அந்த அன்னை .

———————-

அன்று மாலை கோவில் மண்டபத்தில் பட்டிமன்றம் நடக்க ஊர் முழுவதும் அங்கே கூடியிருந்த்து .பூந்தளிர் ஸ்பீக்கர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த்தாலோ என்னவோ …அந்த சத்தத்தில் அவளுக்கு தலைவலி வந்துவிட்டது . வீட்டிற்கு போய் மாத்திரை போட்டு படுத்து கொள்ளலாமென சொர்ணத்தாயிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள் .

அவள் திறப்பதற்கு முன்பே திறந்திருந்த வீட்டு கதவை பார்த்து குழம்பியபடி உள்ளே நுழைந்தாள் .எப்போதும் கலகலப்பாக இருக்கும் வீடு இன்று யாரும் இல்லாமல் ஒருவித அமானுஷ்ய தோற்றம் காட்டிக் கொண்டிருந்த்து.ஏனோ ஒரு விநோத உணர்ச்சி உடம்பில் ஓட உள்ளே யார் இருக்கிறார்கள் …ஒவ்வொரு அறையாக பார்க்க ஆரம்பித்தாள் .அவர்கள் வீட்டிற்கு இரண்டு சாவி உண்டு .ஒன்று சொர்ணத்தாயிடம் இருக்கும் .இன்னொன்று ஆண்கள் யாரிடமாவது இருக்கும் .

பொன்னியின் அறைக்குள் யாராவது இருக்கிறார்களா என பார்த்துக் கொண்டிருந்த போது , அறை வாசலில் ஏதோ சத்தம் கேட்க திரும்பி பார்த்தவள் திடுக்கிட்டாள் . கதிர்வேலன் அறையினுள் வந்து கொண்டிருந்தான் .




What’s your Reaction?
+1
27
+1
21
+1
0
+1
1
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!