karthikai deepangal Serial Stories

கார்த்திகை தீபங்கள் -23

23

” என்னத்தடி  மூணு  பேரும் காலையிலிருந்து  உருட்டிட்டு இருக்கீங்க …ஆனால் எந்த பதார்த்தமும் தயாராகி இருப்பது போல் தெரியவில்லையே …? ” சொர்ணத்தாய் குரல் உயர்த்தி கத்தினாள் .

இதறகெல்லாம் பூந்தளிர் சும்மா இருக்கமாட்டாள் .” வடையும் , கேசரியும் தயார் ..முதல்ல பார்த்துட்டு அப்புறம்  பேசுங்க.இதோ இப்படி ….மூடியிருக்கிற பாத்திரத்தை திறந்து பார்க்கனும்  ..” இப்படி ஏதாவது பதிலடி உடனடியாக கொடுப்பாள் .இன்றோ …

” இப்போ தயாராகிடும் அத்தை ….” எந்திரமாக பதிலளித்தாள் .மூன்று பெண்களுமே அவளை ஆச்சரியமாக பார்த்தனர் .அட…பூந்தளிரா பேசுறது ….? பேச்சில் எவ்வளவு பவ்யம் ….? அல்லது ஒரு விலகல் ….???

” என்ன பூவு …? ” வெங்காயத்தின் தோல் உரித்தபடி பொன்னி கேட்டாள் .

பூந்தளிர் திரும்பி அவளை கூர்மையாக பார்க்க பொன்னி தலை குனிந்து கொண்டாள் . ” எனக்கும் ரகசியங்கள் இருக்கும் பொன்னிக்கா … ” உரித்த வெங்காயத்தை பூந்தளிர் வெட்ட ஆரம்பித்தாள் .

பொன்னியின் கண்கள் கலங்கி விட ,உதட்டை கடித்துக்    கொண்டாள் . சொர்ணத்தாய் இருவரையும் நெருங்கி அவர்கள் தோள்களை பற்றி தன்புறம் திருப்பினாள்.” என்னாச்சு இரண்டு பேருக்கும் …? “

” ஒண்ணுமில்லையே …”

” கண்ணு கலங்கியிருக்கே ….”

” அ…அது …வெங்காயம் ….”




” ஆமாம் அத்தை வெங்காயம் ….” இந்த பதிலில் திருப்தியில்லாமல் இருவரையும் சொர்ணத்தாய் உறுத்து பார்க்க வெளியே ” சொர்ணா …” என பொன்னுரங்கம் அழைக்கவும் ” வர்றேங்க .உங்க மாமனார் வந்துட்டார் .சீக்கிரம் சமையலை முடிங்க …” பரபரப்பாக வெளியே போய்விட்டாள் .

” நேற்றென்ன உங்க ரெண்டு பேர் வீட்டுக்காரங்களுக்கும் செம போதை போல ….” கேரட் ஒன்றை கடித்தபடி அடுப்படி மேடை மேல் ஏறி அமர்ந்து காலாட்டிய அனுராதாவை அறையலாம் என வந்த்து பூந்தளருக்கு .

” என்ன …குருவுமா …? ஏன் பூவு …? ” பொன்னி அதிர்ந்து கேட்டாள் .

” எனக்கென்ன தெரியும் …? ” பூந்தளிர் முணுமுணுத்தாள் .

” என்னம்மா …இப்படி பொறுப்பில்லாமல் பேசுகிறாய் …நீ கேட்க வேண்டியதுதானே …? “

” நீங்கள் கேட்டீர்களா அக்கா …? “

” அது …வந்து …நீயும் நானும் ஒன்றா …? “

” ஏன் …நாம் இருவரும் ஒரே வீட்டிற்கு வாக்கப்பட்டு வந்திருக்கிறோம் .இருவரும் ஒன்றுதானே …”

” அ…அது இல்லைம்மா .இங்கே என் நிலை வேறு …”

” அப்படி என்ன வித்தியாச நிலைமை …? “

பொன்னி தடுமாற பூந்தளிர் கிடைத்த வாய்ப்பில் அவளை துருவ முயல , அனுராதா சுவாரஸ்யமாக இருவரையும் வேடிக்கை பார்த்தபடி அடுத்த காரட்டை கையில் எடுத்தாள் .

” இங்கே என்ன நடக்கிறது …? ” குருபரனின் குரலில் மூன்று பெண்களுமே திடுக்கிட்டனர் .பூந்தளிர் அவன் முகம் பார்க்க பிடிக்காமல் அடுப்பிடம் திரும்பி கொள்ள ,பொன்னி கண்டிப்புடன் கொழுந்தனை முறைத்தாள் .   அனுராதா மேடையை விட்டு அவசரமாக இறங்கினாள் .அவளுக்கு குருபரனிடம் எப்போதும் கொஞ்சம் உள்ளூற பயம் உண்டு .மதினி என்ற மரியாதையை எல்லா நேரமும்  கொடுக்கமாட்டான் .அனுராதாவின் தவறான செயல்பாடுகளை தயங்காமல் சுருக் சுருக்கென பேச்சால் குத்துவான் . அதனால் அவள் முடிந்தவரை குருபரனின் வழியில் வராமல் ஒதுங்கி போய்விடுவாள் .

பூந்தளிரின் திரும்பிய முதுகை பார்த்தவன் , பொன்னியின் கண்டிப்பு பார்வைக்கு தடுமாறினான் . .அருகிலிருந்த அனுராதாவை பார்த்து விட்டு  கொழுந்தனை கேட்க துடித்த தன் நாவை கட்டினாள் பொன்னி .இவளே போதும் …ஊர் முழுதும் போய் என் கொழுந்தன் குடிகாரன் என பரப்பி விட்டு வருவாள் .

பேச முடியாது கண்ணால் முறைத்தமதினியை    தயக்கமாய் பார்த்தவன் ” இன்னைக்கு தஞ்சாவூர் போகிறேன் மதினி .அங்கே உங்களுக்கு … வீட்டுக்கு எதுவும் வாங்கி வர வேண்டுமா …? ” என்றான் .

” உன் அம்மாவிடம் கேட்பதுதானே ….” பொன்னி முறைப்பை நிறுத்தவில்லை .

” சரி …அப்படியே பூந்தளிருக்கு ஸ்கூட்டி வாங்கி விடலாமென்று நினைக்கிறேன் .சரிதானே …? ” கேள்வி தனக்கல்ல …பூந்தளிருக்கு என உணர்ந்த பொன்னி …” அதை அங்கேயே கேளு …அனு நீ போய் சாப்பிட இலை வெட்டிட்டு வா …” என அவளை அனுப்பிவிட்டு தானும் ஏதோ வேலை போல் வெளியேறினாள் .

குருபரன் பூந்தளிரின் முதுகை பார்த்தபடியே சிறிது நேரம் நின்றான் .அவள் திரும்ப போவதில்லை என உணர்ந்தவன் …” பதினோரு மணிக்கு ஸ்கூலுக்கு வருகிறேன் பூந்தளிர் .தயாராக இரு ….” சொல்லிவிட்டு நகர்ந்தான் .




” நேற்று அண்ணனின் மனதை தெரிந்து கொள்வதற்காக அவருக்கு கொஞ்சம் கள்ளை இளநீரில் கலந்து குடுத்தேன் .அப்படியே நானும் கொஞ்சம் குடிக்க வேண்டியதாயிற்று பூந்தளிர் ….”

ஒன்று …இரண்டு …..மூன்று …என  யாரிடமோ …என்னமோ சொல்கிறானென ஜீப்பின் வெளியே கடந்து போன மரங்களை எண்ணிக் கொண்டிருந்தாள் பூந்தளிர் .இருவருமாக தஞ்சாவூர் போய் கொண்டிருந்தனர் .

” அண்ணன் …நிறைய விசயங்களை  ரொம்ப நாட்களாக மனதிற்குள் மறைத்து வைத்து புழுங்கிக் கொண்டிருந்திருக்கிறார் பூந்தளிர் .நான் சாதாரணமாக பேசிய போது , அவர் எதுவும் பதில் சொல்வதாக தெரியவில்லை .அதனால்தான் அவருக்கு போதையேற்றி கொஞ்சம் சுயநினைவை மறக்கடித்து …அவர் மனதை வெளியே வர வைத்தேன் “

பூந்தளிர் திரும்பி அவனை முறைத்தாள் .

” எனக்கு வேறு வழி தெரியவில்லை பூந்தளிர் .இப்போது அண்ணன் அவர் மனபாரத்தையெல்லாம் கொட்டிவிட்டார் .இனி அந்த பிரச்சனைக்கான தீர்வை நாம் பார்க்க வேண்டும் …”

” ஓஹோ …நீங்கள் …ஆண்கள் எல்லோரும் சுயநினைவற்ற போதையில் இருக்கும் போதுதான் , உங்கள் மன வக்கிரங்களெல்லாம் வெளியே வருமோ …? “

குருபரன் மௌனமானான் .ஸ்டியரிங்கை பிடித்தபடி மெல்லிய குரலில் ” மனதின் அன்புகள் ,  ஆசைகள் கட்டுப்படுத்த முடியாமல் வெளிவருமென்றும் வைத்துக் கொள்ளலாம் ….” என்றான் .

” மண்ணாங்கட்டி .இது போன்ற கட்டுப்பாடற்ற நிலைமைகளை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் .இதெல்லாம் அன்போடு சேர்த்தியா …?முழுக்க மன வக்கிரம் .ஆண்பிள்ளை திமிர் ….”

” சரி விடு …இந்த விசயத்தை நாம் பிறகு பேசலாம் .இப்போது அண்ணன் , மதினியை கவனிக்கலாம் .  எனக்கு உன்னுடைய ஒத்துழைப்பும் தேவை ….”

” ம் …நிச்சயம் என் முழு ஒத்துழைப்பு உண்டு ….” என்றவள் அவன் திரும்பி அவளை ஒரு மாதிரி பார்க்கவும் ,

” பொன்னி அக்காவிற்கான செயல்பாடுகளில் மட்டும் ….” என அழுத்தி சொன்னாள் .தோள்களை குலுக்கிக் கொண்டவன் அண்ணனை பற்றி பேசத்துவங்கினான் .நிறைய தயக்கத்துடன் மெல்ல சொல்ல துவங்கினான் .

” அண்ணனுக்கு ….அவரது விந்தணுக்களில் பிரச்சினை …”

” என்ன …? ” பூந்தளிருக்கு அதிர்ச்சி .

” ம் …மனைவியுடன் திருப்தியான தாம்பத்யம் வைத்துக் கொள்ளலாமென்றாலும்  கருத்தரிக்கும் அளவு அண்ணனுடைய விந்தணுக்களில் வீரியம் இல்லை .இது மருத்துவ சிகிச்சையில் தெரிய வர அண்ணன் மிகவும் மனமுடைந்திருக்கிறார் .அந்த நேரத்தில் மதினிதான் அண்ணனை தேற்றியிருக்கிறார் .இருவருமாக தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்து கொண்டிருந்த போது , இங்கே வீட்டில் , உறவினர்களுக்கிடையில் நெருக்கடி அதிகமானது .அனைவருமாக அண்ணனை இரண்டாம் திருமணத்திற்கு வற்புறுத்திக் கொண்டிருக்க , தனது நிலைமையை வெளியே சொல்ல முடியாமல் அண்ணன் தவித்திருந்திருக்கிறார் ….”




” எதற்கு தவித்திருக்க வேண டும் .இன்னொரு திருமணத்திற்கு பேசுபவர்களிடம் பட்டென போட்டு உடைக்க வேண்டியதுதானே …எனக்கு எத்தனை கல்யாணம் முடித்தாலும் பிள்ளை இருக்காது என்று ….,” பூந்தளிர் எரிச்சலாக சொன்னாள் .

” ஒரு பெண்ணாக இதை நீ எளிதாக சொல்லிவிடலாம் பூந்தளிர் .ஆனால் ஆணின் இடத்திலிருந்து பார்த்தால்தான் புரியும் ் நீ செய்ய சொல்வது எவ்வளவு கடினமென்று ..”

” என்ன கடினம் …? உங்கள் அண்ணனின் உடல் குறைக்கு அவ்வளவு நாட்களாக உங்கள் மதினி வீணாக மலடி பட்டம் சுமந்து கொண்டிருக்கவில்லை …? அது அவர்களுக்கு கடினமில்லாமல் மிக லேசாக இருந்திருக்குமோ …? “

குருபரன் பெருமூச்சு விட்டான் .” நம் சமுதாய அமைப்பு அப்படி இருக்கிறது பூந்தளிர். ஆண்கள் ஆரம்பத்திலிருந்தே சிம்மாசனத்தின் மேலேற்றியே வளர்க்கபடுகிறார்கள் அவ்வளஙு எளிதாக அவர்களால் கீழிறங்க முடிவதில்லை …”

” ஓஹோ …உங்கள் அண்ணன் சிம்மாசன ராஜாவாக அமர்ந்து கொண்டு பொன்னி அக்காவை காலடியில் போட்டு மிதித்து கொண்டிருந்தார் போல . …”

” இல்லை மதினியை அந்த நிலைமைக்கு அவர் விடவில்லை . தன் மனைவி மேலிருந்த அந்த மலடி என்ற  களங்கத்தை , பழியை துடைக்க நினைத்தார் .அதனால் அவர் டாக்டர்களின் யோசனைப்படி செயற்கை கருத்தரிப்பிற்கு சம்மதித்தார் ….”

இப்பொது பூந்தளிருக்கு கதிர்வேலன் மேல் கொஞ்சம் நல் அபிப்ராயம் தோன்றியது .ஆனால் உடனேயே மறையவும் செய்த்து .

”  அந்த மலடி பட்டத்திற்கு காரணமே இவர்தானே … அத்தோடு தனது ஆண்பிள்ளை தன்மையை ஊருக்குள் காட்ட வேண்டுமல்லவா …அதற்காக சம்மதித்திருப்பார் ….”

” ஆத்திரத்தில் யோசிக்காமல் பேசுவதே உன் வழக்கமாகி விட்டது . இந்த விபரங்களை அண்ணன் என்னிடம் சொன்ன போது முழு போதையில் இருந்தார் .அந்த நேரத்தில் மன உண்மை , உணர்வுகள்….உன் பாணியில் சொல்லவேண்டுமென்றால் மன வக்கிரங்கள் தான் வெளியே வருமே தவிர உண்மையின் மீது முலாம் பூசிய பொய்கள் இல்லை .”

குருபரனின் கண்டிப்பான பேச்சு உரைத்த உண்மைகள் மனதில் பதிய பூந்தளிர் மௌனமானாள் .

” மதினி அனுபவிக்கும் துன்பங்களை போக்கும் வெறியில்தான் அண்ணன் செயற்கை முறை கருத்தரிப்பிற்கு சம்மதித்திருக்கிறார் .அதற்கு ஒப்பாமல் …திருமண பந்த்த்தையே முறித்து பிரிந்து சென்று விடக் கூட தயாராக இருந்த மதினியையும் அதட்டி , மிரட்டி பல வகைகளில் அவர்கள் மனதை மாற்றி அந்த மருத்துவ முறைக்கு சம்மதிக்க வைத்திருக்கிறார் .அப்போது இருவர் மனதிலுமே தங்களுக்கு ஒரு குழந்தை என்ற எண்ணத்தை விட கணவன் , மனைவியாக நாம் ஒருவரையொருவர் பிரியாமல் வாழ வேண்டுமென்ற ஆசைதான் அதிகம் இருந்திருக்கிறது “

” கரு உண்டானது .ஆரம்பத்தில் சந்தோசமாக இருந்தாலும் போகப் போக …மதினியின் கரு வளர …வளர அண்ணனால் அந்த கருவை ஒத்துக்கொள்ள முடியவில்லை .என் குழந்தை இல்லையே இது ….என்ற நெருடல் அவர் மனதினுள் அரித்துக் கொண்டே இருந்திருக்கிறது .அந்த அரிப்பு கீர்த்தனா பிறந்த்தும் மிக அதிகமாகி குழந்தையையே வெறுக்கும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டது .”

” அண்ணன் இப்போது மதினியிடம் இந்த குழந்தை வேண்டாம் .அநாதை ஆசிரமத்தில் விட்டு விடலாமென சொல்லத் துவங்க , பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையை மதினி எப்படி விடுவார்கள் …அவர்கள் மறுக்க …இப்போது வரை இவர்களிருவருக்குமிடையே இந்த பிரச்சினைதான் . ” குருபரன் முடித்தான் .

” உங்கள் அண்ணன் சுயநலக்கார்ர் …..”

” உண்மைதான் .அதனை அவரே ஒத்துக் கொள்கிறார் .என் மனைவி தங்கம்டா …அவளை இப்போதும் நான் விட்டுக் கொடுக்க தயாரில்லை .ஆனால் அவளோ அந்த யாரோ ஒரு குழந்தைக்காக என்னையே விட்டு விட தயாராக இருக்கிறாளே என அழுகிறார் …”

” யாரோ ஒரு குழந்தையா …? கீர்த்தனா பத்து மாதங்கள் உங்கள. மதினியின் வயிற்றனுள் அவர்கள் சதையை , ரத்தத்தை பங்கு போட்டு வளர்ந்தவள் .தன் உயிரை உருக்கி அந்த குழந்தையை பெற்றிருக்கிறார்கள் .அவ்வளவு சுலபமாக அதனை அநாதையென தூக்கி கொடுத்து விடுவார்களாமா …?”

” ம் …இதைத்தான் நாம் அண்ணனுக்கு புரிய வைக்கவேண்டும் . அண்ணன் மனதில் கீர்த்தனா மதினி குழந்தையென்ற எண்ணம் பதிந்து கிடக்கிறது .அவள் அவர்கள் இருவரின் குழந்தையென உணர்த்தி விட்டால் …அண்ணன் சரியாகிவிடுவார் ….”

” அப்படியெல்லாம் உணர்ந்து திருந்துகிறவரா உங்க அண்ணன் ….”
” நிச்சயம் மாறுவார் பூந்தளிர் .நீ அண்ணனுக்காகவோ , எனக்காகவோ கூட வேண்டாம் ்உன் பொன்னி அக்காவிற்காக இந்த விசயத்தில் என்னுடன் ஒத்துழை …” ஜீப்பை தஞ்சாவூரினுள் நிறுத்தியிருந்தவன் அவளை நோக்கி தன் கையை நீட்டினான் .மனமில்லாமல் தன் கையை அவன் கையில் வைத்தவள் ” பொன்னி அக்காவிற்காக ்…” என முணுமுணுத்தாள் .




” நன்றி தளிர் ” அவள் கைகளை ஒரு முறை அழுத்தி விடுவித்தவன் ” வா …” என இறங்கி அந்த டூ வீலர் ஷோரூமனுள் அழைத்து சென்றான் .

சில வண்டிகளை பார்த்து விபரம் கேட்டு விசாரித்து ஓட்டி பார்த்து பூந்தளிர் ஒன்றை தேர்ந்தெடுக்க , குருபரன் எதிலும் திருப்தியில்லாமலேயே இருந்தான் .” அடுத்த வாரம் வருகிறோம் ….” என வண்டி வாங்காமலேயே அவளை அழைத்து வந்துவிட்டான் .

” ஏன் …இன்னும் கொஞ்ச நாள் உங்கள் பைக்கிலேயே என்னை உட்கார வைத்து அழைத்து சென்று …சிதரவதை செய்யும் திட்டமோ …? ” மதிய உணவுக்காக ஹோட்டலில் உட்கார்ந்திருந்த போது அவனை எள்ளலாக பார்த்துக் கேட்டாள் .

பதிலின்றி மெனுகார்டில் உணவுகளை தேர்ந்தெடுத்தபடி இருந்தவன் சர்வர் போனதும் பூந்தளிரை உற்று பார்த்தான் .

” எங்கே என் கண்ணை பார்த்து கொஞ்சம் முன்பு கேட்ட கேள்வியை கேளு …”

பூந்தளிர் முகத்தை திருப்பிக் கொண்டாள் .” உங்கள் முகத்தை பார்க்க எனக்கு பிடிக்கவில்லை ….”

” ஆனால் எனக்கு உன்னை …உன் முகத்தை …உன் கண்களை பார்க்க மிகவும் பிடிக்கறது ….” என்றவன் அவனுக்கு பிடித்தமான விசயத்தை செய்ய தொடங்கனான் .

திமிர் பிடித்தவன் …பேச்சையும் , பார்வையையும் பார் ….படபடத்த தன் விழிகளை ஒரு வித தவிப்புடன் இலக்கின்றி அந்த ஹோட்டலை சுற்றி ஒட விட்டாள் .திடீரென ஓரிடத்தில் அவளது கருவிழிகள் விரிந்து பின் நிலைத்தன .

இவனா …இவன் எங்கே இங்கே …? உடம்பில் தீப்பற்றியது போலொரு பரபரப்பு பூந்தளிரினுள் தோன்றியது .எதிரிலிருந்த கணவனை மறந்தவள் , வேகத்துடன் அவள் பார்த்தவன் புறம் எழுந்து ஓடத் துவங்கினாள் .




What’s your Reaction?
+1
26
+1
20
+1
1
+1
2
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!