karthikai deepangal Serial Stories

கார்த்திகை தீபங்கள்-19

19

” ஏங்க இங்க வாங்களேன் …சீக்கிரம் வாங்க ….” கதவுக்கு வெளியே ஒலித்த மனைவியின் குரலை நம்ப முடியாமல் பார்த்தான் குருபரன் .அவனையா அழைக்கிறாள் …? ஷவரிலிருந்து தலையை இழுத்துக் கொண்டவன் திருகி அதை நிறுத்தினான் .

” தளிர் கூப்பிட்டாயா …? “

” ஆமாம் சீக்கிரம் வாங்க ….” போனை கையில் வைத்துக் கொண்டு குளியலறை முன் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தவள் , கதவை திறந்து வந்து நின்று ” என்ன விசயம் தளிர் …? ” என்று கேட்டவனை ஆர்வத்துடன் நமிர்ந்து பார்த்தாள் .மிரண்டாள் .

” சீ …இப்படியா வந்து நிற்பீங்க …?”

குனிந்து தன்னை பார்த்துக் கொண்டவன் ” பாத்ரூமில் குளிச்சிட்டிருந்தவனை கூப்பிட்டால் துண்டை கட்டிட்டுத்தான் வருவான் .இது ஒரு குத்தமா …? விசயத்தை சொல்லு ….” ஈரம் சொட்டும் உடலுடன் நிதானமாக நடந்து போய் அலமாரியை திறந்து வேறு ஒரு உலர்ந்த துண்டை எடுத்து உடலை துடைத்துக் கொள்ள தொடங்கினான் .

குளத்தில் குளித்த களிறென , திரண்டிருந்த நீர்த்துளிகள் சொட்ட சொட்ட திண்ணக்கமாய் நிமிர்ந்திருந்த உடலுடன் இளைத்த தேக்கு மரத்துண்டாய் மின்னியபடி  தலை துவட்டி நின்றவனின் பக்கம் இழுத்த விழிகளை தன் பக்கம் இழுக்க முடியாமல் , வாய் வார்த்தை தந்தியடித்தது பூந்தளிருக்கு .

” நீ …நீங்க டிரெஸ் மாத்திட்டு வாங்க .சொல்றேன் ….” அவனுக்கு முதுகு காட்டி சோபாவில் அமர்ந்து கொண்டாள் .தோள்களை குலுக்கியபடி அவன் உடை மாற்றும் அறைக்குள் போனதும்தான் பூந்தளிரின் நாசி சுவாசிக்க துவங்கியது .

” ம் சொல்லு ….” எதிரே நின்றவனை நிமிர்ந்து பார்த்து , அவன் முழு உடையில் திருப்தி பட்டுக் கொண்டவள் தன் போனை அவன் முன் நீட்டினாள் .” இங்கே பாருங்களேன் .நீங்க அன்னைக்கு சொன்னீங்களே .வெங்காய சேமிப்பு குடோன் .அதை உழவன் மகனுக்கு அனுப்பினேனே …அதை இன்னைக்கு அவர் போஸ்ட்டில் போட்டிருக்கிறார் ….எத்தனை லைக் கமெண்ட்ஸ் பாருங்க ….”




” ம் …இதுதானா …நான் என்னமோ முக்கியமான விசயம்னு நினைச்சேன் ….” நகரப் போனவனின் கையை பற்றினாள் .

” அதென்ன அப்படி சாதாரணமாக சொல்றீங்க …? இதை எத்தனை பேர் பார்த்திருப்பாங்க தெரியுமா …? இது எத்தனை பேருக்கு உதவும் தெரியுமா …? “

” ம் …ம் …” கையை திருப்பி வாட்சை பார்த்துக் கொண்டான் .

” அதோட இன்னோரு விசயம் என்னன்னா அந்த உழவன் மகன் இருக்காரே ,அவர் ரொம்ப படித்தவர் .விபரம் தெரிந்தவர் .எப்பவுமே அவர்தான் இது போல் புதுப்புது ஐடியால்லாம் பேஷ்புக்ல போடுவார் .இப்போ நான் சொன்ன ஒரு விசயத்தை …அவரே ஒத்துக்கிட்டு இங்கே போஸ்ட்டாக போட்டிருக்கிறார்னா …ஹையோ …எனக்கு குதிக்கனும் போல இருக்கே …” நிஜம்மாகவே கை தட்டி குழந்தையாய் குதித்தாள் .

குரிபரனுக்கு தலையலடித்துக் கொள்ளலாம் போலிருந்த்து .அவன் முக்கிய வேலை ஒன்றிற்காக கிளம்பிக் கொண்டிருக்கிறான் .இப்போது அவனை பிடித்து வைத்துக் கொண்டு ஒரு சாதாரண விசயத்திற்கு இந்த குதி குதிக்கிறாளே .” உன்னை எந்த கணக்கில் சேர்க்க …பெரிய மனுசி மாதிரி தொண்டை தண்ணி வத்த சாதி பற்றி பேசுகிறாய் .திடீரென ஒன்றுக்கு மில்லா விசயத்தற்கு இப்படி குழந்தையாய் குதிக்கிறாய் … நீ புத்திசாலி குழந்தையா …? முட்டாள் பெரிய மனுஷியா …? ” என்றவனை இடுப்பில் கை தாங்கி முறைத்தாள் .

” நான் ஒரு விசயத்தை பெரியதாக பேசினால் அது உங்களுக்கு ஒன்றுமில்லாத்தாக போய்விடுமா …? இல்லை …இப்படி இந்த பேஸ்புக்கில் கண்டவர்களோடு பேசுகிறாளே …இவள் எப்படிப்பட்டவளாய் இருப்பாளென யோசிக்கிறீர்களா …? “

இந்த பேச்சில் ஒரு நிமிடம் திகைத்து நின்றவன் சட்டென கோபத்தில் விழிகள் சிவக்க அவளது இதழ்கள் இரண்டையும் தன் இரு விரல்களால் பற்றி இழுத்தான் .” என்ன வாய்டி உனக்கு ….? நாக்கிலும் , உதட்டிலும் விச ஊசி சொருகி வைத்திருப்பாயா …?நினைத்த நேரத்தில் நினைத்தபடி எப்போதும் குத்த தயாராய் ….” பேசப் பேச விரல் அழுத்தத்தை அதிகப்படுத்தி அவன் உதடுகளை இழுக்க , இழுபட்ட உதடுகள் வலிக்க அவன் கையோடு முகத்தை நகர்த்தி இழுபடுதலை குறைத்து கைக்கு கிடைத்த அவன் மார்பில் குத்தினாள் .” வ்விவ் விட்டூ …” பேச்சு வராமல் திணறினாள் .

அவளது விழி ஒரம் லேசான ஈரத்தை காணவும் அவள் இதழ்களை விடுவித்தவன் ” ராட்ச்சி ….” அவள் தோள்களை பற்றி கட்டிலில் தள்ளிவிட்டு அறைக்கதவை அறைந்து சாத்திவிட்டு போனான் .கண் கலங்க சிறதுநேரம் படுக்கையில் கிடந்தாள் பூந்தளிர் .” போடா பொறுக்கி ….” அழுகையினூடே வைதாள் .நான் அப்படித்தான்டா செய்வேன் ….தனது போனை எடுத்து அந்த உழவன் மகனுக்கு நன்றி மெசேஜை அனுப்ப துவங்கினாள் .

———————-

அண்ணாந்து வானத்தை பார்த்தபடி கயிற்று கட்டிலில் படுத்திருந்தாள் பூந்தளிர் .சூரியன் நீலவானத்தை தன் வெண்கதிரால் வெண்மையாக்கி வைத்திருந்தான் .அந்தளவு வெயில் இருந்த்து ்ஆனால் அந்த இடம் மட்டும் இயற்கையாக குளிர்ச்சியூட்டப்பட்ட ஏஸி அறை போல் இருந்த்து .மெல்ல பக்கவாட்டில் திரும்பி பார்த்தாள் .அகன்று ,பரந்து , விரிந்திருந்த அந்த ஆலமரங்கள் அந்த இடம் முழுமைக்கும் ஒரு குளிர்ச்சி போர்வையை போர்த்து நின்றிருந்தன .தன் இறகுக்கடியில் குஞ்சுகளை காக்கும் கோழி போல் அந்த மரம் தங்களை பாவிப்பதாய் பூந்தளிருக்கு தோன்றியது .எழுந்து அமர்ந்து சுற்றியிருந்த வயல்வெளிகளை பார்த்தாள் .அறுவடை முடிந்து பதராய் இருந்தது .




ஆனாலும் இங்கே குளிர்ச்சி குறையவில்லை .காரணம் அதோ அந்த கிணறுதான் .அந்த வயல்வெளியின் நடு நாயகமாய் ஒரு அரசனை போல் வீற்றிருந்த்து அது .பூந்தளிர் இன்னமும் அதன் பக்கம் போய் எட்டிப் பார்க்கவில்லை .அதென்னவோ சிறு வய
திலிருந்தே  அவளுக்கு கிணறென்றால் கொஞ்சம் பயம் .இப்போது அந்த கிணற்றிலிருந்து உயரமாய் குழாய் வெளியே எடுக்கப்பட்டு மோட்டார் மூலம் தண்ணீர் பூஞ்சிதறலாய் அருவி போல் சிதறிக் கொண்டிருக்க அதில் ராஜா , ரவி , கீர்த்தனா ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர் .அவர்களின் துணைக்கு குருபரனும் , முருகேசனும் .அன்று போல் இன்றும் குருபரன் அவளுக்கு யானையையே நினைவுறுத்தினான் .இவன் யானை மாதிரிதான் இருக்கிறான் .கறுப்பாய் , உயரமாய் ,உருண்டு , திரண்டு …பேச்சு கூட அப்படித்தான் யானை பிளறல் போல …தன்னிச்சையாய் உதடு குவித்து    அவன் முதுகுக்கு வக்கலம் காட்டினாள் .

சட்டென அவன் திரும்பி பார்த்து விட , பார்வையை அவசரமாக ஆலமரத்துக்கு திருப்பிக் கொண்டாள் .எம்மாடி …பெரிய வில்லாளகண்டனா இருப்பான் போலவே …முதுகிலும் கண்ணை வச்சிட்டு இருக்கான் .மெல்ல ஓரக்கண்ணால் பார்க்க அவன் திரும்பி குளிக்க துவங்கியிருந்தான். அன்று அவன் இதழ்களை இழுத்து காயப்படுத்தியதிலிருந்து அவள் பக்கமே திரும்புவதில்லை .கோபமாம் …நல்லதுதான் என பூந்தளிரும் விட்டு விட்டாள் .அவளுக்கும் அவனிடம் முகம் திருப்ப ஏதாவதொரு காரணம் வேண்டும் .இயல்பாக அவனுடன் பழகி அவனது ரகசிய பார்வைகளையும் , சீண்டல் பேச்சுக்களையும் எதிர்கொள்ள முடியுமென அவளுக்கு தோன்றவில்லை .அதனால் அவனிடமிருந்து ஆன மட்டும் தள்ளியே இருக்க நினைந்தாள் .

இன்று   காலை எட்டு மணிக்கெல்லாம் கிளம்பி அவர்கள் எல்லோருமாக இங்கே வந்துவிட்டுருந்தனர் .இது போல் மாதமொருமுறை குடும்பத்தனர் அனைவருமாக தோட்டத்திற்கு வந்து அங்கேயே குளித்து , மூன்று வேளை சமைத்து உண டு , உறங்கி இரவு படுக்க வீட்டிற்கு செல்வதுண்டு .இப்போதும் அங்கே மற்ற பெண்கள் மூவரும் சமைத்துக் கொண்டிருக்க , பூந்தளிர் மட்டும் இந்த இடத்தையெல்லாம் நான் பார்த்ததேயில்லையே என , சமையலுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு இங்கே வந்து படுத்துக் கொண்டு இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தாள்.இப்போது காற்றில் மட்டன் பிரியாணி வாசம் மித்ந்து வரத்துவங்க , கண்களை மூடி வாசத்தை உள்ளிழுத்தாள் .வயிறு பசிக்க ஆரம்பித்தது .

பொன்னிரங்கமும் , கதிர்வேலனும் பேசியபடி வரும் சத்தம் கேட்க பூந்தளிர் அவசரமாக கட்டிலிலிருந்து எழுந்து நின்றாள் .
” ஊமத்தூர் கரகாட்ட கோஷ்டிக்கு சொல்லியாச்சுங்கய்யா …சுரையூர் வில்லுப்பாட்டுக்காரங்களும் வர்றேன்னுட்டாங்க …அந்த டீவில பேசுற பட்டிமன்றங்காரங்களுக்கு அட்வான்ஸ் கொடுத்தாச்சு .அப்புறம் ….” கதிர.வேலன் இழுக்க …

” அப்புறமென்னடா …? “




” சினிமாக்காரங்களைத்தான் யாரையும் கூப்பிட வேண்டான்னுட்டீங்க .ஒரு பாட்டு கச்சேரிக்காவது சொல்லுவோமா …?இல்லை திரை கட்டி நாலு புதுப்படமாவது போட்டு விடுவோமா …? “

” அதெல்லாம் ஒரு கழுதையும் வேண்டாம் .சும்மாவே நம்ம சனங்க இப்போ பாட்டு , படம்னு எந்நேரமும் டிவி முன்னாடிதானே விழுந்து கடக்காங்க .சாமி கும்பிட வந்த இடத்திலேயும் அந்த கண்றாவியை ஏன் கட்டி இழுக்கனும. …?”

கோவில் கும்பாபிசேகம் முடிந்த்தும் ஒரு வாரத்திற்கு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர் .அந்த ஏற்பாடுகளைத்தான் பேசிக்கொண்டிருந்தனர் .குளித்துக் கொண்டிருந்தவர்கள் ஒவ்வொருவராக திரும்பி வரத் துவங்கினர் .இவர்களின் பேச்சை கேட்டபடி வந்த குருபரன் …

” பாட்டு நம்ம ஒவ்வொருத்தரோட வாழ்க்கையின் ஆதாரம் ஐயா .பாட்டுக் கச்சேரி இல்லாமல் எந்த திருவிழாவும் நிறைவாக இருக்காது .ஆனால் நீங்கள் சொல்வதும் சரிதான் எப்போதும் சினிமா பக்கம் ஓடும் ஜனங்களையும் நாம் ஒத்துப்போக கூடாது .இது சரியாக வருமா என்று பாருங்கள் .பாட்டுகச்சேரி வைப்போம் .ஆனால் எளிமையான கிராமத்து நாட்டுப்புற பாடல் பாடும் குழுவினரை அழைத்து , அவர்களை பாடச் சொல்வோம் ்என்ன சொல்கிறீர்கள் …? ‘

” சூப்பர் …உங்க யோசனை அருமை .அப்படியே செய்யலாம் மாமா .நலிந்து போய் கொண்டிருக்கும் அந்த கலைக்கும் , கரைஞர்களுக்கும் நாமும் ஏதாவது செய்த்து போலிருக்கும் ….” குருபரன் பேசி முடித்ததுமே அவனை  பாராட்டி துள்ளினாள் பூந்தளிர் .புருவம் சுருக்கி அவளை பார்த்துவிட்டு மௌனமானான் அவன் .

ம்க்கும் …உங்க ரெண்டு பேரில் யார் எதை சொன்னாலும் …மற்றவர்க்கு சூப்பர் …அற்புதம் .எப்படித்தான் இப்படி சலிக்காமல் ஒருத்தருக்கொருத்தர் ஜால்ரா தட்டுறீங்களோ …?தம்பியையும் , தம்பி மனைவியையும் தங்களுக்குள் . கண்ணால் சலித்துக் கொண்டனர் கதிர்வேலனும் , முருகேசனும் .

” வச்சிடலாம் தாயி .நீயே சொன்னப்புறம் அதில் தடையேது .. பொன்னுரங்கம் மருமகளுக்கு பச்சை கொடி காட்ட …

” ஐயா அந்த ஐடியா சொன்னது நான் ….” குருபரன் குரல் கொடுத்தான் .

” சரிதான்டா நீ சொன்னால் என்ன …உன் வீட்டுக்காரி சொன்னால் என்ன …? இரண்டு பேரும் ஒன்றுதான் .நீயே அந்த நாட்டுப்புற பாட்டுக்காரங்களை   பேசி ஏற்பாடு பண்ணிடு …இப்போ எல்லோரும் வாங்க சாப்பிடலாம் ்குறும்பாடு அப்போதிலிருந்து சட்டிக்குள்ள இருந்து கூப்பிட்டே இருக்கு ….” காற்றில் மிதந்து கொண்டிருந்த கறி வாசனையை முகர்ந்தபடி எழுந்தார் .

” நம்ம பள்ளிக்கூட பிள்ளைங்களை விட்டு கொஞ்சம் கலைநிகழ்ச்சிகள் பண்ண சொல்லலாமுங்களா மாமா …? நாட்டியம் , நாடகம் …சிலம்பம் கூட சுத்தி காட்ட சொல்லலாம் …”

” ம் …இதுவும் நல்ல யோசனைதான் தாயி .ஏற்பாடுகளை நீ பாரு …ஜமாய்ச்சுடலாம் …”

ஆண்களுக்கு இணையாக பேசியபடி நடந்து வந்த பூந்தளிரை பார்த்த அனுராதாவின் கண்கள் எரிந்தன .அது விறகடுப்பில் ஊதி ஊதி எரிய வைத்த விறகுப் புகையாலும் இருக்கலாம் .பொண்ணா …லட்சணமா கூடச்சேர்ந்து சட்டி ,பானை கழுவாமல் அதென்ன திமிரா நிமிர்ந்தாப்புல  ஆம்பளைங்களுக்கு சரி சமமான பேச்சு …? பொருமினாள் .

அனுராதா அந்த வீட்டில் தனியாக படித்த மருமகளென்ற மமதையுடன் வலம் வந்து கொண்டிருந்தாள் .இந்த பூந்தளிர் வரவும் அவளது மாய்மாலங்கள் இந்த வீட்டில் யாரிடமும் செல்லவில்லை .வீட்டிலுள்ள அனைவர்க்கும் அவள் உயர்வாக போய்விட்டாள் .அவளது பிள்ளைகள் ராஜாவும் , ரவியும் கூட சித்தி …சித்தியென அவள் பின்னேதான் ஓடுகின்றனர்.பெரிய முதலாளியம்மா போல இந்த விட்டில் பூந்தளிர்தான் அதிகாரம் செய்து கொண்டிருக்கிறாள் .இதனை அனுராதா சுத்த்மாக விரும்பவில்லை .இரண்டு ஆண் வாரிசுகளைஅந்தக் குடும்பத்தற்கு பெற்று கொடுத்த அவளே அந்த குடும்பத்தின் மகாராணியாக வலம் வர விரும்பினாள் .ஆனால் இங்கே நிலைமை மாறிக் கொண்டிருக்கிறது …என்ன செய்யலாம் யோசித்தவளை …

” ஏய் சோறு வெந்துடுச்சு இறக்கி வடி….” சொர்ணத்தாயின் அதிகார குரல் .

எரிச்சலுடன் மண்பானையை ஜாக்கிரதையாக எடுத்து கை நடுங்க சரித்து வடிகட்டினாள் .கொஞ்சம் தவறவிட்டாலும் பானை உடைந்த்து .அவள் தொலைந்தாள் .இந்த நவீன காலத்தில் மண்பானையில் சமைப்பார்களா …சரியான காட்டான் குடும்பம் …அந்தக் குடும்பத்தில் தானும் ஒருத்தி என்பதை உணராமலேயே தன்னைத் தானே சாடிக் கொண்டாள் .மாதமொரு முறை இங்கே தோட்டத்திக்கு வரும் நாள் மட்டும் முழுக்க முழுக்க விறகடுப்பு , மண்பானை சமையல் எனபது அந்த குடும்பத்தின் பழக்கம் .மற்றொரு அடுப்பில்   கறிப்பிரியாணி கூட பெரிய மண்பானையில் செய்யப்பட்டு
மேலே மண்தட்டினால் மூடப்பட்டு , அதன் மேல் கங்குகள் அள்ளி வைக்கப்பட்டிருந்தன. மணக்க மணக்க தம் பிரியாணி தயாராகிக் கொண்டிருந்தது .




அனுராதாவின் நாவில் உமிழ்நீர் சுரந்தாலும் சிறு கறித்துண்டை கூட ருசி பார்க்கவென்று வாயில் எடுத்து போட முடியாது ்சொர்ணத்தாய் கண் கொத்தி பாம்பு போல் அருகிலேயே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் .பொன்னி மாலை டிபனுக்கு பணியாரத்திற்கான மாவை தள்ளிநிருந்த கல்லுரலில் ஆட்டிக் கொண்டிருந்தாள் .சமையலுக்கான மசாலாக்களை கூட்டி வைத்துவிட்டுத்தான் போயிருந்தாள் .இந்த மண்பானைகளை மாமியாரின் மேற்பார்வையில் அடுப்பில் ஏற்றி இறக்குவதற்குள் அனுராதாதான் தவித்து போய்விட்டாள் .

” மண்பானை சமையல் எனக்கு பழக்கமில்லை அத்தை ….” மெல்ல கூறி பார்த்தாள் .

” உனக்கு வேறு எதுதான் பழக்கம் …? ” வெட்டுவது போல் வந்த்து சொர்ணத்தாயின் குரல் .பூந்தளிர் கார் ஓட்டிக் காண்பித்த நாளிலிருந்து அவள் இப்படித்தான் …உனக்கென்ன தெரியும் …என்ற ரீதியில் நடத்தப்படுகிறாள் .அனைவராலும் .்.அவள் கணவன் உட்பட .படித்தவள் என கொஞ்சம் மரியாதையோடு பார்க்கப்பட்டு வந்தவள் .இப்போது பல்லைக் கடித்து கொண்டு திரும்பிய போது …இலைகளை கழுவி எடுத்து வரிசையாக போட்டுக் கொண்டிருந்த பூந்தளிர் கண்ணில்பட்டாள் .நாங்கள் மாஞ்சு மாஞ்சு சமைத்து அடுக்க , இவள் சூளுவாக சட்டியை தூக்கி பரிமாறுவாளாக்கும் .அவளை பரிமாற விடக்கூடாது எனத் தோன்றிவிட , அவள் கையில் எடுத்த சட்டியை பிடுங்கினாள் .” என்னிடம் கொடு ….”

பூந்தளிரோ தனக்கு பரிமாறும் எண்ணமேயில்லை என காட்டினாள் .” நீங்களே போடுங்க்க்கா .சமையல் வாசனை நாக்கை ஊற வைக்கிறது .நான் சாப்பிட உட்கார போகிறேன் …”

என்னது …ஆம்பளைங்க கூட சாப்பிட உட்காருவாளா இவள் ….? அனுராதா அதிர்ந்து மாமியாரை பார்த்தாள் .

” புது கல்யாணமானவங்க , புருசனும் , பொண்டாட்டியுமா சேர்ந்து உட்காருங்க .பொன்னியும் , அனுராதாவும் பரிமாறட்டும் ….” நெற்றி வியர்வையை முந்தானையால் துடைத்தபடி நகர்ந்தாள் சொர்ணத்தாய் .

இப்படி திருமணமான புதிதில் தானும் , கணவனுமாக சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டிருக்கிறோமா …அனுராதாவின் நினைவடுக்குகளில் அது போன்ற ஞாபகங்கள் எதுவுமில்லை .இவளென்ன அப்படி உசத்தி …அனுராதா அள்ளி.இலையில்   வைத்த பிரியாணி அடுப்பு சூட்டை விட அதிகம் கொதித்தது .

குனிந்து தன் இலையை முகர்ந்த பூந்தளிர் ” அத்தை நீங்கள் சொன்னது சரிதான் .மண்பானை சமையலுக்கென தனி வாசனை இருக்கிறது .ம்ப்பா ….வாசனைக்கே சாப்பிடனும் போலிருக்கிறதே ….” சொன்னபடி கை நிறைய அள்ளி வாய் நிறைய திணித்துக் கொண்டாள் .அனுராதாவின் அடிவயிற்று புகைச்சலோ என்னவோ உடனே அவளுக்கு புரையேறியது.

” காணாத்தை கண்டது போல் விழுங்கினால் இப்படித்தான் ….” தட் தட்டென அவள் தலையில் அறைந்த குருபரன் தண்ணீரை எடுத்து நீட்டினான் .சுற்றிலுமிருந்தோருக்கெல்லாம் கரிசனமாக பட்ட இந்த தலை தட்டலின் பின்னாலிருந்த கணவனின் வஞ்சத்தை தட்டல் வாங்கிய பூந்தளிரின் தலை மட்டும்தான் உணர்ந்த்து .பாவி கிடைத்த சந்தர்ப்பத்தில் என்ன வாங்கு …வாங்குகிறான் .பூந்தளிருக்கு தன் கண்களின் கண்ணீருக்கு காரணம் புரையேறியதா …இல்லை புருசனின் அருமை தட்டலா …என்ற சந்தேகம் வந்த்து .அவசரமாக தலை மேலிருந்த அவன கையை எடுத்து விட்டு கொஞ்சம் தள்ளி அமர்ந்து கொண்டாள் .

” அள்ளி முழுங்காதே …எங்கேயும் ஓடிடாது ….” சொன்னபடி குழம்பு பாத்திரத்தை அவள் பக்கம் நகர்த்தினாள் சொர்ணத்தாய் .வயிறு முட்ட உண்டதும் கண்ணை சுழற்றி தூக்கம் வர சாப்பிட்டதும் படுக்க விரும்பாது அப்படியே மெல்ல நடக்க தொடங்கினாள் பூந்தளிர் .

இப்போது வெயில் கொஞ்சம் குறைந்திருக்க வாய்க்கால் கரையோரமாக மெல்ல நடந்தாள் .சுற்றுப்புறம் சோம்பலான மதிய அமைதியில் இருக்க வாய்க்காலில் ஓடும் தண்ணீரின் மெல்லிய சலசல சத்தம் இனிய நாதமாக ஏதோ ஓர் இனப ஏகாந்த்ததை உணர்த்தியது .சேலையை உயர்த்தி மெல்ல நுனிக்கால்களால் ஸ்படிகமென ஓடிய அந்த வாய்க்கால் நீரை ஸ்பரிசித்து சிலிர்த்தாள் .

“மாதமொரு முறை இப்படி வந்து கும்பலாக கூத்தடிப்பதை நிறுத்த வேண்டும் …” அவளிக்கு பின்னால் அனுராதாவின் குரல் .அவளுக்கு பதில் சொல்லவோ …திரும்பி அவளை பார்க்கவோ கூட பிடிக்கவில்லை பூந்தளருக்கு .அனுராதா அவளிடம் பேசும் எண்ணத்தில் வந்திருப்பது புரிந்த்து . அவள் முகத்தை பார்க்க கூட பூந்தளிருக்கு பிடிக்கவில்லை .   திரும்பாமல் தன் போக்கில் நடந்தாள் .

” உன்னிடம்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன் ….”

அதிகாரத்தை பார் ….என எண்ணியவள் ” ஆமாம் மாதமொரு முறை என்பதை வாரமொரு முறையாக மாற்ற வேண்டும் ” என்றாள் .சொல்லவிட்டு திரும்பி அவளை பார்த்து நின்று கொண்டாள் .இப்போது மாறும் அனுராதாவின் முகத்தை அவள் பார்க்கவேண்டும் .அவள் நினைத்தபடி வேகமும் , வெறுப்புமாக அவளது முகம் மரமேறும் விலங்கென மாறியது .




” ஏய் …திமிராடி உனக்கு முன்னாலேயே இந்த வீட்டு மருமகள் நான் தெரியுமா …? “

” ஷ் …அப்பா ….” புழுக்கம் போல் தனக்கு தானே விசிறிக்கொண்டாள் பூந்தளிர் .” இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலப்பா …” என்றாள் .

” வேண்டாம் …பூந்தளிர் உன் புருசனை நம்பி எந்த உத்தரவாத்த்தையும் வச்சுக்காதே .நான் உன்கிட்ட முதல்லேயே …”

” தூ ” காறி துப்பினாள் .” கொசு வாய்க்குள்ளே போயிடுச்சு . மானங் கெட்டது .எத்தனை தடவை சொன்னாலும் தெரிய மாட்டேங்குது .கொசுவை சொன்னேன் .எல்லோரும் தூங்குறாங்களே .நீங்க தூங்கலையாக்கா …? “

அனுராதாவின் முகம் இந்த உதாசீனத்தில் செந்தனலாய் மாறியது .” இப்போ உன் காலம்டி .எனக்கும் ஒரு காலம் வரும் …” போய்விட்டாள் .

தலையசைத்து அவளை அலட்சியப்படுத்திவிட்டு நடந்தாள் பூந்தளிர் .பொன்னி கிணற்றுமேட்டில் உட்கார்ந்திருக்க கண்டு அங்கே போனாள் .

” என்னக்கா கொஞ்ச நேரம் படுக்கலாமே …? ” பொன்னி திரும்பாமல் கிணற்றினுள்   பார்த்படி இருக்க , அவள் தோள்களை பிடித்து உலுக்கினாள் .

” ஏதாவது கேட்டாயா பூவு …? ” தூக்கத்தில் எழுப்பியது போல் மலங்க விழித்தாள் .

” காலையிலிருந்து உடகாராமல் வேலை செய்து கொண்டிருந்தீர்களே .கொஞ்சம் படுக்கலாமே எனக் கேட்டேன் …”

” ம் …எனக்கு மதிய உறக்கம் பழக்கமில்லை பூவு .கொஞ்சம் ஓய்வாகத்தான் இங்கே உட்கார்ந்தேன் …”

” உங்களுக்கும் மச்சானுக்கும் ஏதாவது பிரச்சனையாக்கா …? ” பூந்தளிர் பொன்னியின் கைகளை வருடியபடி கேட்டாள் .

” இல்லையே …யார் சொன்னார் …? அப்படி இல்லையே …? அவரா சொன்னார் ….? சொல்லியிருக்க மாட்டாரே …”

” அக்கா ரிலாக்ஸ் .ஏன் பதறுகிறீர்கள் …? இன்று காலை வயல்காட்டுக்குள் மச்சானும் , நீங்களும் ஏதோ சண்டையிட்டுக் கொண்டது போல் தெரிந்த்து .அதுதான் ….” கணவன் மனைவி சண்டை ….நீ எப்படி இதை கேட்கலாமென பொன்னி கேட்டுவிடுவாளோ என கேள்வியை நிறுத்தினாள் பூந்தளிர் .

” நீ இந்த கிணற்றில் இறங்கி குளித்திருக்கிறாயா பூவு …? ” என்றாள் அவள் .இது பேச்சை மாற்றும் யுக்தி என புரிந்த போதும் , அவளது கேள்வி பூந்தளிரின் வயிற்றில் புளியை கரைத்தது . கிணற்றுக்கு இவ்வளவு அருகில் இருந்தும் அவள் இது வரை கிணற்றினுள் எட்டிப் பார்க்கவில்லை .அது ஒரு வகை மனப்பிராந்தி அவளுக்கு .சிறு வயதிலிருந்தே இருக்கும் .கிணற்றினுள் பார்த்தால் தலை சுற்றி மயக்கம் வரும் .

” இல்லைக்கா …நான் கிணற்று பக்கமே போனதில்லை ….”

” ஏன் …? “

” வ…வந்து எனக்கு நீச்சல் தெரியாது ….”

” நீச்சல் தெரியாதா …? இதையெல்லாம் முன்னாடியே சொல்றதில்லையா …? ” கேட்டபடி வந்து நின்றவன் குருபரன் .

” உங்க்கிட்ட எதுக்கு சொல்லனும் …? ” பூந்தளிர் அவனை சந்தேகமாக பார்த்தாள் .இவன் வந்து நிற்கும் விதமே சரியில்லையே …ஏதோ தப்புத் தப்பா செய்யப் போகிறவன் போல் , வேட்டைக்கு போகும் மாடசாமி போல் நிற்கிறானே .அவன் கண்களில் மின்னிய வஞ்சத்தில் உள்ளூற நடுங்கினாள் பூந்தளிர் .

” வேறே எதுக்கு …உனக்கு நீச்சல் கத்து தர்றதுக்குத்தான் .அதுக்குத்தானே குரு ….? ” பொன்னி கொழுந்தனை வம்பிழுத்து கொண்டிருந்த போது …

” இல்லை மதினி …இதுக்கு ….” என்றவன் யாரும் எதிர்பாரா நொடியில் பூந்தளிரை பிடித்து கிணற்றினுள் தள்ளி விட்டு விட்டான் .அவள் சிறு அலறலுடன் நீரினுள் விழுந்து மறைந்தாள் .

மேலிருந்து எட்டி பார்த்தவன் ” அப்பாடா தொல்லை ஒழிந்த்து ….” எனக் கைகளை தட்டிக் கொண்டான் .




What’s your Reaction?
+1
22
+1
19
+1
1
+1
3
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!