karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 50

  50

கன்னத்தில் கன்னம் தேய்த்து

பத்திரங்கள் கொடுக்கிறாய்

பதட்டங்கள் குறைந்த பொழுதுகள்

பட்டமென பறக்கின்றன .

” வேண்டாம் சாத்விகா , அவசரப்பட்டு முடிவெடுக்காதே …” வீரேந்தர் பதட்டமாக பேசினான் .




” இதை ஏன் என்னிடம் சொல்லவில்லை வீரேந்தர் …? “

” மேலும் , மேலும் உன் மனதை காயப்படுத்த வேண்டாமென்றுதான்மா .அன்று நடந்த கொடுமைகளிலேயே அதுதான் பெரிய கொடுமை …இதனை உன்னிடம் சொன்னால் …” 
” நான் உங்களை விட்டு போய்விடுவேனென நினைத்திருப்பீர்கள் .எனது பிறப்பு விசயத்தை மறைத்ததற்காக என்னை கண்ணாக வளர்த்த குடும்பத்தையே விட்டு பிரிந்தவள் நான் .நீங்கள் என் வாழ்வின் பெரிய …பெரிய விசயங்களையெல்லாம் மறைத்திருக்கிறீர்கள் .என் அன்னைக்கு துரோகம் செய்தவர்களின் நாட்டிலேயே இன்று வரை உழைத்து கொண்டிருக்கிறீர்கள் .    இப்போது …”

” பிரிந்து வந்துவிடுங்கள் சிஸ்டர் .இந்த துரோக பூமி வேண்டாம் .இந்த துரோகிகளும் வேண்டாம் .நாம் நமது நாட்டிற்கு போய்விடலாம் …” மாலிக்கின் குரலில் உற்சாகம் பொங்கியது .

” வந்து விடுகிறேன் மாலிக் .அதற்கு முன் ஒரு விசயம் .எனது வாழ்வின் நான்றியாத முக்கிய பாகமொன்றை நீதான் எனக்கு காட்டியிருக்கிறாய் .இன்னமும் என் வாழ்வின் மர்ம பக்கங்கள் முடிந்தபாடில்லை .நீ இந்த அளவு என்னை கூப்பிடும் போது நானும் உன்னுடனேயே வந்திருப்பேன் . ஆனால் கேப்டன் சக்கரவர்த்தியின் வீர ரத்தம் என்னுள்ளும் கொஞ்சம் ஓடுகிறது .அது என்னை அந்நிய நாட்டு பக்கம் காலடி எடுத்து வைக்காதே என தடுக்கிறது …”

வீரேந்தரின் முகம் தெளிய மாலிக்கின் முகத்தில் புன்னகை மறைந்து  கூர்மை பரவியது .” என்ன சொல்ல வருகிறீர்கள் சிஸ்டர் …? “

” தனது உயிருக்குயிரான ஒரே மகளை தனது நாட்டு மிருகங்கள் கொடூரமாக சீரழித்த போதும் , கேப்டன்   சக்கரவர்த்தியோ , நாட்டுக்காகவே உழைத்து கொண்டிருந்த நர்ஸ் சந்திரிகாவே தங்கள் தாய் நாட்டின் மீது ஙெறுப்பு கொள்ளவில்லை .குற்றுயிராய் கிடந்த மகளை எப்படி மீட்பதென தவித்தார்களே தவிர , யாரோ சில மிருகங்கள. செய்த தவறுக்கு தாய் நாட்டையே அந்நிய நாட்டிற்கு காட்டிக் கொடுக்கவோ ,மனம் வெறுத்து நாட்டை விட்டு வெளியேறவோ முயலவில்லை ்இதோ இப்போது வரை தங்கள் நாட்டுக்காகத்தான் உழைத்து கொண்டிருக்கின்றனர் .தங்கள் மகனையும் அதே பணியில்தான் அமர்த்தியிருக்கின்றனர் .நானும் அதே குடும்பம் தான் மாலிக் .அவர்களின் தேச பக்தியில் சிறிதாவது எனக்கு இருக்காதா …? நான் எப்படி உன்னுடன் வருவேன் …? “

மாலிக்கின் சிரிப்பு சுத்தமாக மறைந்து முகம் கறுத்தது .” உங்கள் குடும்பமே முட்டாள் குடும்பம் …”

” இருந்துவிட்டு போகிறோம் மாலிக் .உன்னை போல தீவிரவாதிகளை பிடிக்க எங்களை போன்ற முட்டாள் குடும்பங்கள் வேண்டியதாகத்தான் இருக்கிறது …ஸ்டெடியாக குறி வை சாத்விகா …” மனைவியை எச்சரித்து விட்டு  மாலிக்கின    கைகளை பின்னால் வளைத்து பிடித்து அவனை சோதித்து அந்த பென்டிரைவை எடுத்துக் கொண்டான் வீரேந்தர் .இன்னமும் அவனிடமிருந்த துப்பாக்கி , கத்தியை எடுத்து தூர எறிந்தான் .அடுத்து நின்றிருந்த வஹீப்பை சோதனையிட ஆரம்பித்தான் .

” தாய்நாட்டிற்கு எப்படி விசுவாசமாக இருக்க வேண்டுமென என் கணவரையும் , மாமனாரையும் பார்த்து பயின்று கொள் மாலிக் …” சாத்விகா அவன் மீதிருந்த பார்வையை அகற்றாமல் சொன்னாள் .

” என்ன பெரிய விசுவாசம் ….அந்த ஐந்து பேரையும் வேலையில் இருந்து கொண்டே ப்ளான் போட்டு தன் கைகளாலேயே கொன்றிருக்கின்றனர் அப்பாவும் , மகனும் …இந்த இருபது வருடங்களாக இதற்காகவே ராணுவத்தில் இருந்து விட்டு , தங்கள் வேலை முடிந்த்தும் ஒன்றுமறியாத பிள்ளை போல் விலகி வந்து பாதுகாப்பு படை …அது இதுவென ஏதோ பெயரிட்டுக் கொண்டு பிரதமரிலிருந்து …அதிகாரிகள் வரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் .இதையறியாத உங்கள் ராணுவபடை அவர்களிடம் ஆலோசனை கேட்டு நின்று கொண்டிருக்கிறது …”

” ஆஹா …இது ஆண்பிள்ளைத்தனம் .ஆக என் மாமனாரும் , கணவரும் தங்கள் வீட்டையும் விடவில்லை .நாட்டையும் விடவில்லை …” சாத்விகாவின் குரல் சந்தோஷித்தது .

” நீ நிறைய தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறாய் மாலிக் .உன்னை உயிரோடு விடத்தான் வேண்டுமா, என யோசித்து கொண்டிருக்கறேன் …” வீரேந்தர் சாதாரண குரலில் சொல்லியபடி வஹீப்பையும் , சாந்தினியையும் சோதித்து அவர்களின் ஆயுதங்களை எடுத்து வெளியே வீசியிருந்தான் .

” தேவையில்லை என நினைக்கிறேன் வீரா …” சாத்விகா குரல் கொடுக்க …

” உங்களை பெற்றவள் யாரென தெரியுமா சிஸடர் …? அதை உங்களிடம் சொன்னார்களா …? முழுதாக தாங்கள் பெற்ற மகளையே உரகத்திலிருந்து . மறைத்து வைத்துள்ளார்களே அதை கேட்டீர்களா …? ” மாலிக் கடைசி வாய்ப்பாக சாத்விகாவை மீண்டும குழப்ப முயன்றான் .

” கேட்கவில்லை …கேட்பேன் …கேட்க மாட்டேன் .அது என் இஷ்டம் .இது என் குடும்பம் …இது என் நாடு .இதில் நீ நடுவில் வந்து குழப்பாதேடா …” கத்திய சாத்விகா ட்ரிக்கரை அழுத்தி விட குண்டு மாலிக் மீது சீறி பாய்ந்த்து .அவன் துள்ளி பனியில் விழுந்தான் .

” ஏய் …ஏன்டி சுட்ட …? ” வீரேந்தர் அதிர்ந்து கேட்டான் .

” அவன் பேசியது எனக்கு பிடிக்கவில்லை .சுட்டேன் …”

முனகியபடி கீழே கிடந்த மாலிக்கை எட்டி பார்த்தவன் ” சுட்டதுதான் சுட்டாய் .கரெக்டாக இதயத்தில் சுட்டிருக்க வேண்டாமா …? தோளில் சுட்டு வைத்திருக்கிறாய் .இப்படி கொஞ்சம் கொஞ்சமாக ரத்தம் போய் அவன் எப்போது சாக …? ” சலித்தான் .

” அ…அது நான் நெஞ்சுக்குத்தான் குறி வைத்தேன் .அது தோளில் பட்டுவிட்டது …”

” சுத்தம் .சுடத் தெரியாமலேயேதான் தைரியமாக துப்பாக்கி எடுத்து வந்தாயா …? “

” இல்லை வீரா .கொஞ்சம் கொஞ்சம் சுடுவேன் .நிறைய என்.சி.சி கேம்பிலெல்லாம் சுட்டிருக்கிறேனே ..அடுத்து இந்த சாந்தினியை சுடலாமென்று நினைக்கிறேன் .நம் வீட்டிற்குள்ளிருந்தே நம்மிடமே நாடகமாடினாளே .ஏய் உன் நிஜ பெயர் என்னடி …? ” சாத்விகா துப்பாக்கியை சாந்தினி பக்கம் திருப்ப ….அவள் அருகே நின்றிருந்த நிதின் அலறினான் .

” ஐயோ …கேப்டன் காப்பாற்றுங்கள் .உங்கள் மனைவி இவளை சுடுகிறேனேன என்னை சுட்டு வைப்பார்கள் .என்சி.சி கேம்ப் பயிற்சி …”

” அச்சோ சாத்வி விட்டுடா பாவம் .அவர் நம்ம ஆள் ” என்றான் வீரேந்தர் .” ஓ…அப்படியா …” என்றுவிட்டு பிழைத்து போ பார்வையுடன் சாத்விகா துப்பாக்கியை இறக்கிக் கொண்டாள் .

” அடப்பாவி நீ எங்கிளிடம் நடித்தாயா …? ” வஹீப் அதிர்ச்சியாக நிதின் பக்கம் திரும்ப , ” யெஸ் மை டியர் .நான் நன்றாக நடித்தேனதானே …” கேட்டபடி தன்   கையை கராத்தே போல் வைத்து வஹீப்பின் கழுத்தில் வெட்டினான் நிதின் .வஹீப்  கழுத்து ஒரு மாதிரி கோணலாக சாய்ந்து கொள்ள , பொத்தென தரையில் விழுந்து ஒரு மாதிரி துடித்தான் .அவனை காலால் உருட்டி விட்டு பெருமிதமாக நிமிர்ந்த நிதின் அவனை கேவலமான பார்வை பார்த்துக் கொண்டிருந்த சாத்வகாவை பார்த்து விழித்தான் .

” வெறும் கையால் அடிக்கிறீர்களே .உங்களுக்கு துப்பாக்கியெல்லாம் சுட தெரியாதா …? ” இப்போதுதான் பத்து பேர்களை சுட்டவளை போல் துப்பாக்கியை உயர்த்தி போஸ் கொடுத்துக் கொண்டு கேட்டாள் .




” ஹி …ஹி .்கொஞ்சம் கொஞ்சம் தெரியும் மேடம் .நீங்கள் துப்பாக்கியை உங்கள் கணவரிடம் கொடுத்து விடுங்களேன் சேப்டி கேட்சை வேறு எடுத்து வைத்திருக்கிறீர்கள் ….ப்ளீஸ் …கேப்டன் துப்பாக்கியை வாங்கிக் கொள்ளுங்கள் …” நிதின் துப்பாக்கியின் திசைக்கு எதிர் திசையில் நின்று கொண்டான் .

புன்னகைத்தபடி மனைவியிடமிருந்து துப்பாக்கியை வாங்கிய வீரேந்தர் , அதை வேகமாக திருப்பி சாந்தினியின் பின்மண்டையில் தாக்க , அவள் கீழே விழுந்து மயக்கமானாள் .

வெள்ளை பனி முழுவதையும் சிகப்பாக்கியபடி கொஞ்சம் , கொஞ்சமாக மயங்கிக் கொண்டிருந்த , மாலிக் அருகில் குனிந்தான் வீரேந்தர் “.எதிரி நாட்டுக்காரன்தான்  ஆனாலும் நீ வீரன் மாலிக் .உன் வீரத்திற்கு நான் தலை வணங்குகிறேன் .உன் இயக்கத்தின் விபரங்கள. முழுவதும் இந்த பென்டிரைவில் இருக்கிறது .இதை வைத்து உன் இயக்கம் முழுவதையும் நாங்கள் ஒரே மாதத்தில் அழித்துவிடுவோம் .பெட்டர் லக் நெக்ட் டைம் “

” இந்திய நாட்டு மக்கள் எப்போதும் தங்கள் நாட்டு பற்றால் என்னை ஆச்சரியப்படுத்து கின்றனர் .இந்த நாடு அவர்களுக்கு எதுவுமே செய்வதில்லை .ஆனால் அவர்கள் தங்கள் நாட்டை விடுவதில்லை .எனது ஆச்சரியங்கள் சக்கரவர்த்தி , வீரேந்தர் …இதோ இப்போது ….” என்றவன்  சாத்விகாவை நோக்கி கை  நீட்டினான் …” என் சிஸ்டர் …நான் செத்துக் கொண்டிருக்கிறேன் சிஸ்டர் .ஒரே ஒரு முறை உங்கள் கையை பற்றிக் கொள்ள விரும்புகறேன் .”

” வேண்டாம் …” சாத்விகா பயந்து வீரேந்தர் பின்னால் ஒதுங்க ” உங்கள் போட்டோவை பார்த்த நாளிலிருந்து உங்கள் மேல் எனக்கு ஒரு சகோதர வாஞ்சை .நீங்கள் என்னுடன் எங்கள் நாட்டிற்கு வர சம்மதித்திருந்தால் சந்தோசப்பட்டிருப்பேன் .இப்போது மிகவும் சந்தோசப்படுகிறேன் .தங்கையை கணவன் வீட்டில் வாழ வைத்து விட்ட அண்ணனின் திருப்தியுடன் போகிறேன் .உங்கள் வாழ்வில் என்றாவது ஒரு நாளாவது அண்ணனென்ற சொல்லை உச்சரிக்கும் போது என்னை ஒரே ஒரு முறையாவது நினைத்துக் கொள்ளுங்கள் .எனக்கு விடை கொடுங்கள் சிஸ்டர் . ” தயங்கிய சாத்விகாவின் கையை பற்றி மாலிக்கின் கையில் வைத்தான் வீரேந்தர் .

” இது முடிவல்ல கேப்டன் .எங்கள் நாட்டிற்கான போராட்டத்தை நாங்கள் விட மாட்டோம் .நான் போனால் , என்னை விட வலிமையான வீரனொருவன் எனக்கு பின்னால் வரப் போகிறான் என அர்த்தம் .தயாராக இருங்கள் கேப்டன் ….”

” ம் …சாகசங்கள் எனக்கு எப்போதும் பிடித்தமானவை மாலிக் .நான் காத்திருக்கிறேன் .” அலை பாய்ந்த மாலிக்கின் விழிகள் சாத்விகாவின் மேல் நிலைத்தபடி நிற்க அவன் உயிர் அடங்கியது .வீரேந்தரும் , சாத்விகாவும் கொஞ்சம் கனத்த மனத்துடன் எழுந்தனர் .

” இவர்களை என்ன செய்வது …? ” கீழே விழுந்து கிடந்தவர்களை காட்டி வீரேந்தர் கேட்க , ” நான் பார்த்து கொள்கிறேன் கேப்டன் .நீங்கள் மேடமுடன் ஹெலிகாப்டரில் டில்லி போய்விடுங்கள் ” என்றான் நிதின் .

ஒரு வழியாக பனியை தாண்டி சூரியன் அந்தப் பகுதியில் மங்கலாக எட்டிப் பார்க்க ஆரம்பித்தான் .   வீரேந்தரும் , சாத்விகாவும் ஹெலிகாப்டரில் பறந்தபடி கீழே பார்த்தபோது நிதின் மாலிக்கின் சடலத்தையும் , மற்ற இருவரையும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டிருந்தான் .

” உனக்கு எப்போது தெரியும் பேபி …? ” வீரேந்தர் எதை கேட்கிறானென புரிந்து அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் .

” உங்கள் அப்பாவின் அறையை ஆராய்ந்தபோது …அன்று உங்கள் ரேங்க் கார்டெல்லாம் எடுத்தேனே …அப்போது உங்கள் பள்ளி சம்பந்தமான நிறைய பில்கள் , பீஸ் கட்டிய ரசீதுகள் கிடைத்தன .அதில் ப்ரீதி என்ற பெண்ணிறகு பீஸ் கட்டிய ரசீதுகள் சில கிடைத்தன. இனிசியல் உங்கள் அப்பா பெயர் .நீங்கள படித்த அதே பள்ளி .உங்கள் வயது …இதெல்லாவற்றைநும் வைத்தும் , அன்று நடந்த அந்த சம்பவத்தை சொன்ன போது உங்கள் அனைவரின்து யரத்தை வைத்தும்      நானாக ஊகித்தேன் .”

” ம் …” என மௌனமாக ஹெலிகாப்டரை இயக்கியபடி இருந்தான் .

” அ…அவர்கள் இ..இப்போது நன்றாக இருக்கிறார்கள் தானே …? ” சாத்விகாவின் குரல் நடுங்கியது .




” ம் .மிகவும் நன்றாக இருக்கிறார்கள் .ஆனால் அவர்களுக்கு நம்மை தெரியாது …”

” என்ன சொல்கிறீர்கள் .புரியவில்லை …? “

” அந்த சம்பவத்தின் போது அவர்களுக்கு மனப்பாதிப்பு ஏற்பட்டு பழைய நினைவுகளெல்லாம் மறந்துஙிட்டது .ட்ரீடமென்ட் எடுத்தால் நினைவுகளை மீட்டு விடலாம்தான் .ஆனால் அப்படி மீட்டு சந்தோசப்பட எந்த நல்ல நினைவுகள் அவர்களுக்கு இருக்கிறது ..? அதனால் நாங்கள் அவர்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கவே இல்லை .தன் மன பாதிப்பிலிருந்து வெளி வந்த ஒரு நாளில் பிறந்த குழந்தையாய் அவர்கள் தனது மற்றொரு வாழ்க்கையை தொடங்கினார்கள் .அவர்களை பற்றிய எல்லா விசயமும் தெரிந்த ஒரு நல்லவர் அவரை திருமணம் செய்து கொள ள முன்வர , சந்தோசமாக அவரிடம் ஒப்படைத்து விட்டு நாங்கள் விலகிக் கொண்டோம் .இப்போது தள்ளி நின்று யாரோ போல் அவர் வாழ்வை ரசித்து கொண்டிருக்கிறோம் “

கலங்கிய கண்களை கணவனின் தோளில் தேய்த்து துடைத்துக் கொண்டாள் சாத்விகா .டில்லியில் அவர்கள் இறங்கிய போது அவர்களுக்காக அவர்களது மொத்த குடும்பமும் காத்திருந்த்து .

What’s your Reaction?
+1
20
+1
10
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!