karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 44

44

உள்ளத்தை உருவி எடுத்து

உன்னில் ஒட்டிக்கொண்டு

புல்லில் உருட்டுகிறாய் என்னை

பனித்துளி சேகரித்துக்கொண்டு வருகிறேன்

காத்திரு … கவனத்துடன் …

புயல் மழை அடிக்கலாம் ….

” மத பிரிவினை  இந்தப் பக்கம் மிகவும் அதிகமா வீரா …? ” சாத்விகாவிற்காக தனது வேகத்தை மகவும் மட்டுப்படுத்தி ஓடிக்கொண்டிருந்தான் வீரேந்தர் .ஆனாலும் அவனுக்கிணையாக ஓடியவளுக்கு பயங்கரமாக மூச்சிரைத்தது .

” ஆமாம் .சாதி பிரச்சனையும் மிக அதிகம் “

” ஓ…நீங்கள் அன்றே சொன்னீர்களே .இந்த சாதி பிரச்சினைக்காக என் அப்பா கூட ஏதோ நிறைய போராடியதாக ….இங்கே அப்பா எந்த இடத்தில் வேலை பார்த்தார் …? என்னென்ன செய்தார் …?”




” உன் அப்பாவும் , என் அப்பாவும்தான் நண்பர்கள் .இதனை நீ அப்பாவிடம்தான் கேட்கவேண்டும் …”

” ஏனோ உங்களுக்கு தெரியாதாக்கும் ..? “

” தெரியாது …” நிர்தாட்சண்யமாக மறுத்து விட்டு சலனமின்றி ஓடிக் கொண்டிருந்தான் .

” பொய் சொல்ல மாட்டேனென்றீர்களே …”

” தேவையென்றால் உண்மையை மறைக்க தயங்க மாட்டேனென்றேனே …”

மண்ணாங்கட்டி இரண்டுக்கும் அப்படி என்ன பெரிய வித்தியாசமாம் …இவனுக்கெல்லாம் கையில் துப்பாக்கியை கொடுத்ததற்கு பதில் மைக்கை கொடுத்திருக்க வேண்டும் .பெரிய அரசியல்வாதியாகி இருப்பான் .குமுறிய உள்ளத்தை வெளியே காட்டாமல் பல்லை கடித்து மறைத்தபடி தனது ஓட்டத்தை துரிதப்படுத்தி முன்னால் சென்று கொண்டிருந்தவனுடன் இணைந்தாள் .

” என் அப்பா மேல் உங்களுக்கு ஒரு ஹீரோ ஒர்சிப் இருப்பது தெரியும் .ப்ளீஸ் அதற்கு காரணமான சம்பவங்கள் ஒன்றரண்டு சொல்லுங்களேன் .அப்பாவை பற்றி கேட்க ஆசையாக இருக்கிறது “

முன்பே யோசித்து பாடம் பண்ணி வைத்திருந்த வார்த்தைகளை கோர்த்து பேசினாள் .முதலிலேயே சக்கரவர்த்தியை பற்றிய பேச்சை எடுத்துவட்டால் ,வீரேந்தர் சந்தேகப்பட்டு வாயில் பசை தடவிக் கொள்வான் ்அதனாலேயே சண்மிகபாண்டியனிலிருந்து மெல்ல சக்கரவர்த்திக்கு திரும்ப நினைத்தாள் .

” அப்பா காஷ்மீரில் வேலை செய்த போது , உன் அப்பாவும் அங்கே போலீஸ் அதிகாரியாக இருந்தார் .காஷ்மீரினுள் சாதி , மத பிரச்சினைகள் அதிகம் . அது போன்ற நேரங்களில் மக்களுக்கு உன் தந்தை நிறைய ஆதரவளித்திருப்பதாக கேளவிப்பட்டிருக்கிறேன் …”

” ம் .உங்கள் அப்பாவும் என் அப்பாவும் நாட்டிற்காக கடுமையாக உழைத்தார்கள் என்று சொல்லுங்கள் . “

” அப்படித்தான் கேள்வி …”

ஒழுங்காக பதில் சொல்கிறானா பார் …கையிலிருந்து நழுவ துடித்த மீனை மீண்டும் இழுக்க தூண்டில் போட முனைந்தாள் சாத்விகா .

” உங்கள் அம்மா …என் அம்மா …அவர்கள் என்ன செய்தார்கள் …? “

” அவரவர் கணவனுக்கு உதவி செய்தார்கள் …” நக்கல் பார்வையொன்றை சாத்விகா பக்கம் எறிந்தான் .

” எதற்கு இப்போதிந்த நக்கல் …? நான் அப்படி உங்களுக்கு உதவ்வில்லை என குத்தி காட்டுகிறீர்களாக்கும் …? ஒன்று சொல்லுங்கள் .புருசனுக்கு உதவ என்றே பிறவி எடுத்த ஜென்மங்களா பெண்கள் …?” கணவனின் மனம் போல் பேசி அவனிடம் விசயங்களை வாங்க வேண்டுமென்ற உறுதி சாத்விகாவிற்கு மறந்து போனது .அடிதடியாக இருந்தாலும் பரவாயில்லை இப்போது அவனுடன் ஒரு சண்டை போட்டாக வேண்டுமென்ற உடனடி அவசர சூழலொன்று அவளுக்கு உண்டாகிவிட்டது .

ஓடியதால் எழுந்த இரைப்புடன் கோப இரைப்பு சேர்ந்து கொள்ள தன் பாதையை மறைத்து இடுப்பில் கை வைத்து நின்றபடி முறைத்த மனைவியை அளவிட்டவன் , வந்த புன்னகையை அடக்கியபடி ” ஆமான்டி ..்அப்படித்தான்டி …போடி …” என்றான் .

” எத்தனை டி …உன்னை ..” எக்கி அவன் தோள்களில் குத்தியவளின் கைகளை பின்னால் வளைத்து சரித்து அந்த புல் தரையில் உருட்டிவிட்டான் .திடுமென அவன் அப்படி தள்ளுவானென எதிர்பாராத சாத்விகா கீழே விழுந்து உருண்டு கத்த ஆரம்பித்தாள் .அவளுக்கு தெரிந்த மிருகங்களின் பெயரையெல்லாம் அவளது வசவுக்கு துணை சேர்த்துக் கொண்டிருந்த போது , அவள் யாரிடமோ ஏதோ முக்கியமாக பேசுகிறாள் பாவனையில் தனது ஜாக்கிங்கை நிதானமாக தொடர்ந்தான் வீரேந்தர் .

புற்களை பிய்த்து அவன் முதுகில் எறிந்தபடி ” பிசாசு….சாத்தான் …ராட்ச்சன் …” என தனது வசவு மொழிகளை சாத்விகா தடம் மாற்றிக்கொண்டிருந்த போது …” போதும் பாப்பா …என்ன இது …? ” பரிவுடன் கூடிய அதட்டலுடன் வந்தார் சக்கரவர்த்தி .

” உங்க புள்ளையை கேளுங்க , புள்ளையா பெத்து வச்சிருக்கீங்க …அரக்கன் …ஒருநாள் இவனுக்கு என்கிட்ட இருக்கு .எஎப்படி தள்ளி விட்டிருக்கிறான் பாருங்க ….” அழுகை வந்துவிட்ட குரலை மறைத்தபடி லேசான தனது முழங்கை சிராய்ப்பை உயர்த்தி காட்டினாள் .

” என்ன பிள்ளைங்களோ …இப்படியா சின்ன பிள்ளைங்க  மாதிரிதள்ளிவிட்டு விளையாடுவீங்க …? “சலித்தபடி அவள் எழ கை கொடுத்தார் சக்கரவர்த்தி .

” உள்ளே வாடா …லேசாக சாவ்லான் போட்டுவிடலாம் ” அவள் காயத்தை ஆராய்ந்த சக்கரவர்த்தியை யோசனையாக பார்த்தவள் …

” நீங்கள் காஷ்மீரில் வேலையில் இருந்த போது செய்த சாதனைகளைத்தான் கேட்டேன் அங்கிள் .அதற்கு இப்படி தள்ளிவிட்டு போய்விட்டார் …” குழந்தை குரலில் கூறியபடி அவரது பாவனைகளை ஆராய்ந்தாள் .

சக்கரவர்த்தியின் உடலில் ஒரு திடுக்கிடல் ஓடியது .காஷ்மீர் என்றாலே இவர் ஏன் இப்படி அதிர்ச்சியாகிறார் …? சக்கரவர்த்தி பதிலின்றி அவள் கைகளை பற்றியபடி வீட்டினுள் நடந்தார் .

” நீங்கள் வேலை பார்த்த இடம் .நம் நாட்டின் முக்கிய ராணுவ இடம் .நிச்சயம் நிறைய சம்பவங்கள் அங்கே நடந்திருக்கும் .என் அப்பா கூட அங்கேதான் வேலை பார்த்தார் .அதை பற்றியெல்லாம் நான் தெரிந்து கொள்ள நினைப்பது தப்பா அங்கிள் …? ” தனது குழந்தை நடிப்பை தொடர்ந்தாள் .

” அங்கிளா …? ” மெல்லிய முனகலுடன் சோபாவில் அமர்ந்தார் .

ஒரு அங்களுக்கு இவர் எதற்கு வேதனைப்படுகிறார் .அப்போ காஷ்மீரை பற்றிய பேச்சிற்கு கவலைபடவில்லையா …இந்த அழைப்பற்காகத்தானா …? குழப்பத்துடன் அவர்ருகே அமர்ந்தாள்

” என்ன ஆச்சு அங்கிள் …? “

” என்னை ஏன் அப்படி அழைக்கிறாய் …? “

” உங்கள் மனைவி மேடமென்று அழைக்க சொன்னார்கள் .அப்போது சார் என சொல்ல வேண்டுமா …? ” நான் எதை கேட்க நினைத்தால் ,இவர் எதையோ பேசுகிறாரே …சாத்விகாவிற்கு மனத்தாங்கல் .

” வேண்டாம் .நீ என் மகனை திருமணம் செய்து கொண்டிருக்கிறாய் .அந்த முறைப்படி பார்த்தால் நான் உனக்கு மாமனார் .அதனால் …” என்றவர் தயங்கி நிறுத்தி பின் ” மாமா என்றே அழை ” என்றார் .

இதில் சாத்விகாவிற்கு உடன்பாடில்லை .என்று சந்திரிகா மேடமென்று அழைக்க சொன்னாளோ …அந்த நாளிலிருந்தே அவளை அப்படித்தான் அழைக்கிறாள் .உறவு சொல்லி அழைக்க அவளே சொல்லும் வரை அப்படி அழைக்ககூடாது என்ற கொள்கையொன்றையிம் அவசரமாக எடுத்து வைத்திருந்தாள் .ஆனாலும் சந்திரிகா போல் கறாராக இல்லாமல் நெகிழ்வாக பேசும் சக்கரவர்த்தியிடம் அவளால் அப்படி பேச முடியவில்லை .அதனாலேயே உறவுகளுக்கு பொதுவாக ‘ அங்கிள் ‘ என போட்டு வைத்தாள் .இப்போதும் அவரது ‘ மாமா’ வை ஏற்க முடியவில்லை .இருந்தாலும் தனக்கு இப்போது காரியம் ஆக வேண்டும் என்பதால் பவ்யமாக குரலை மாற்றி ” சரி மாமா ” என தலையை உருட்டி வைத்மாள் .

” எனக்கு நீங்களும் , அப்பாவும் காஷ்மீரில் செய்த வேலைகளை பற்றி ணொல்லுங்களேன் …”




” ஹிஜ்புல் முஜாகிதீன் ” என்றொரு இயக்கம் காஷ்மீரில் மிக வேகமாக வளர ஆரம்பித்தது .அது  பாகிஸ்தானுடன் காஷ்மீர் சேர வேண்டும் என்பதை வலியுறுத்தும் இயக்கமாகும்.காலித் வானி என்பவன் அதன் தலைவன் .மிக இளம்வயதின்ன் .தனது பதினைந்தாம் வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி போராளிகளுடன் தன்னை இணைத்து கொண்டவன் .மிகத் தீவிரமாக காஷ்மீருக்காக போராடினான் .தீவிரவாதிகளென்றால் காட்டிற்குள் எங்கோ ஒளிந்து மறைந்து கொண்டு வாழ வேண்டும் .்என்ற அடிப்படை கோட்பாடை தகர்த்து தோளில் துப்பாக்கியுடன் , வெடிக்கும் பேச்சுக்களுடன் எந்நேரமும் ராணுவ கட்டுப்பாடுகள் நிறைந்திருக்கும் காஷ்மீர் நகர வீதிகளில் வலம் வர ஆரம்பித்தான் .

உங்கள் நாடு பாகிஸ்தான் என்ற விதையை பொது மக்கள் மனதில் அழுத்தமாக பதிக்க ஆரம்பித்தான் .அவனது இயக்கத்திற்கென தனி உடை, அடையாளம் என உருவாக்கிக் கொண்டு , அந்த எளிய மக்களுக்கான சிறு சிறு உதவிகளை செய்து கொண்டு அவனும்நா , அவன் இயக்கத்தினரும் நாடு முழுவதும் சுற்றி வந்தார்கள் .சிறு பிள்ளை விளையாட்டு என நாங்கள் …ராணுவத்தினர் அவர்களை முதலில் அலட்சியமாக விட்டுவிட்டோம் .ஆனால் மாநிலம் முழுவதும் அவன் பெயர் ஒலிக்க ஆரம்பித்த போது …நாங்கள் விழித்து கொள்ள ஆரம்பித்த போது …அந்த இயக்கம் ஆலமர வேராய் மாநிலம் முழுவதும் பரவி விட்டது …”

” காஷ்மீர் முழுவதுமே ராணுவ கட்டுப்பாட்டில்தானே இருந்த்து .அந்த நேரத்தில் இது போல் ஒரு இயக்கத்தை இந்த அளவு வளரும் வரை எப்படி கவனிக்காமல் இருந்தீர்கள் மாமா …? இது தவறல்லவா ..? “

” தவறுதான் …நான்தான் சொன்னேனே அவன் …அந்த காலித் வானி மிக இளவயதுடையவன் .அவனை பார்த்தால் ஒரு தீவிரவாதியென யாராலும் சொல்லமுடியாது .மிகவும் ஒல்லியாக , அப்பாவி முகத்துடன் நமது பக்கத்து வீட்டு பையன் போல் இருப்பான் .அவன் பேசிய நாட்டுரிமை பேச்சிக்களை சரிதான் போடா சின்னப் பையா என நாங்கள் முதலில் அலட்சியம் செய்துவிட்டோம் .மக்கள் கூடி நிற்கும் தெருக்களில் அவன் பேசிய பேச்சுக்களை நாங்களும் கூட்டத்தோடு சேர்ந்து நின்று கை தட்டி ரசிக்க கூட செய்திருக்கறோம் .ஆனால் ஆறே மாதங்களில் காஷ்மீர இளைஞர்களை தன் வசமிழுத்து , தன் வயதையே ஒத்த பதினெட்டலிருந்து இருபத்தியிரண்டு வயதேயான மிக இளைய இளைஞர் கும்பலொன்றை வைத்து  தீவிரவாத கும்பலொன்றை உருவாக்கி விட்டான் .

அந்த இளைஞர் கூட்டங்களுக்கு அவன்தான் ஹீரோ .அவன் கண் காட்டினால் அவர்கள் தங்கள் கழுத்தையே கூட அறுத்து கொள்வார்கள் .அந்த நிலைமையில் அவர்களை வைத்திருந்தான் .தைரியமாக அவர்கள் படை சூழ கையில் துப்பாக்கியோடு காஷ்மீர் எங்களுடைமை என முழக்கமிட்டபடி தெருக்களில் வலம் வர ஆரம்பித்தான் .இதன் பிறகுதான் அவனது வலிமையை நாங்பள் உணர ஆரம்பித்தோம் “

” ம் …சோம்பேறி ராணுவம் .அரசாங்கமே உங்கள் கையில் ஒரு மாநில உரிமையை கொடுத்துள்ளது .அதனை நல்லபடியாக கவனிக்காமல் , இப்படி தீவிரவாத இயக்கத்தை கண் முன்னாலேயே வளர விட்டுள்ளீர்களே …” சாத்விகா எரிச்சலாக கூறினாள் .

” உண்மைதான் .காலித் விசயத்தில் நாங்கள் மிகவும் அலட்சியமாகத்தான் இருந்துவிட்டோம் …” சக்கரவர்த்தி தயங்காமல் ஒத்துக்கொண்டார.” இப்போது அந்த இயக்கத்தை அவனை …உடனடியாக அழிக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருந்தோம் .காஷ்மீர் மாநில போலீஸ் , ராணுவம் இருவரும் கை கோர்த்தோம் . அவனை தீவிரமாக கண்காணித்து திட்டம் தீட்டி , அவன் குழுவினரைப் போல் வேடமணிந்து அவன் இயக்கத்தினுள் ஊடுறுவி நுழைந்து அவனது நடமாட்டத்தை அறிந்து இறுதியாக ஒருநாள் மக்கள் முன்னலையிலேயே அவனை …அவன் கூட்டத்தின் முக்கிய ஆட்கள் சிலரை என்கவுண்டர் செய்தோம் .இதற்கு எங்களுக்கு ஒரு வருடம் ஆனது …”

” ஓ…மக்கள் ஆதரவு பெற்ற ஒரு இயக்க தலைவனை , அவர்களிடையேயே இருந்து கொண்டு , அவர்கள் முன்னேயே கொல்வதென்பது …மிகவும் கடினமாக இருந்திருக்குமே மாமா …”

” மிகவும் கடினம் .அதனை சொற்களால் சொல்ல முடியாது .நீ கற்பனையில் கூட பார்த்திருக்க மாட்டாய் .மக்களின் ஆதரவு பெற்ற ஒரு தலைவனை அவர்கள் கண் முன்னாலேயே கொல்வது என்பது மிகுந்த கொடுமை .அதன்பிறகும் நாங்கள் அந்த மக்களுடன்தான் வசித்தாக வேண்டும் .அந்த என்கவுன்டர் முடிவதற்குள் , அதில் பங்கு கொண்ட ஒவ்வொரு ராணுவ வீரரும் மனதால் , உடலால் மிகவும் பாடு பட்டுவிட்டோம் …” சக்கரவர்த்தியின் குரலில் கலக்கம் தெரிய ,தனை மறந்து அவர் கைகளை பற்றிக் கொண்டாள் சாத்விகா .

” கவலைபடாதீர்கள் மாமா .நம் நாட்டிற்காக நீங்கள் செய்த்து தானே .உங்கள் கடமைதானே .அரசாங்க ஊழியன் அரசாங்க உத்தரவை பின்பற்றுவது நியாயம்தானே …” தேறுதலாக பேசினாள் .

” காலித் இறந்தபோது அவன் வயது இருபத்தி ஒன்று ்அவனது இறுதி ஊர்வலத்தில் கிட்டதட்ட ஒரு லட்சம் மக்கள் கலந்து கொண்டனர் .அத்தனை பேருக்கும் அவன் தெய்வமாக இருந்தான் .அவன் இறந்த்தும் , அவனது இயக்கத்து ஆட்கள் தங்கள் கட்டுப்பாடுகளை இழந்து மாநிலம் முழுவதும் வன்முறை செயல்களை செய்ய ஆரம்பித்தார்கள் .அரசாங்க சொத்துக்களை அழிப்பது , ராணுவ குடியிருப்புக்குள் புகுந்து ராணுவ வீர்ர்களின் குடும்பத்தை தாக்குவது , அவர்கள் குழந்தைகளை கொல்வது , பெண்களை சீரழிப்பது போன்ற கொடூரமான காரியங்களில் இறங்க ஆரம்பித்தார்கள் …”

” இங்கே என்ன செய்கிறீர்கள் …? ” கோபமான கத்தலுடன் வந்து நின்றாள் சந்திரிகா .




” ஒன்றுமில்லை சந்திரா .சும்மா …பாப்பா காஷ்மீர் பற்றி கேட்டாள் .சொல்லிக் கொண்டிருந்மேன் …” சக்கரவர்த்தி சமாதானமாக பேசினார் .

” ஆஹா , பள்ளிக்கூடம் போகும் பாப்பா ்அவளுக்கு நீங்கள் சந்தேகத்தை தெளிய வைத்துக் கொண்டிருக்கிறீர்களாக்கும் .வேண்டாங்க இவள் ரொம்ப டேன்ஜரானவள் .இவளிடம் பேச்சு கொடுக்காதீர்கள் .அது நமக்குத்தான் ஆபத்து “

நான் என்ன அபாய அறிவிப்பா ….வழக்கம்போல் எகிற துடித்த நாக்கை அடக்கிய சாத்விகா …

” அந்த ஹிஜ்புல் முஜாகிதீன் இயக்க ஆட்கள் அவர்கள் தலைவன் காலித் இறந்த்தும் கலாட்டாவில் இறங்கினார்களாமே .அது போன்ற நேரங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்கள் மருந்துக்களோடு ஒரு நர்ஸாக  நீங்கள் தான் உதவினீர்களா அத்தை …? “

குரலை மிக குழைத்து , பாராட்டுதலையும் சேர்த்து .்எதற்கும் இருக்கட்டுமென ஒரு அத்தை உறவையும் சேர்த்து போட்டு கேள்வி கேட்டு வைத்தாள் சாத்விகா .அதற்கு பலனிருப்பது போல் கோப முகம் சாந்தமுற அமைதியானாள் சந்திரிகா .

What’s your Reaction?
+1
12
+1
8
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!