karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 18

18

உருட்ட உருட்ட உளைந்து கொண்டே செல்கிறது

அந்த மட் பாண்டம்

கேட்டு வாங்கிய பிறிதொரு தவணையிலும்

கழுத்து நெரிபட்டு கோணலாகிறது

குயவனாலேயே ….

என்ன வார்த்தை அது …? தட்டுவாணி …இது போன்ற வார்த்தை களை அறிந்தவளில்லை சாத்விகா .அவளது தாயாக இருக்க கூடும் எனக் கருதுபவளின் முகமறியா பிம்பத்திற்கு அவளது அத்தையென அறியப்பட்டவள் சொன்ன வார்த்தை இது .இது …இதன் அர்த்தம் என்னவாக இருக்க கூடும் …? மிக்க கெட்டவளென்ற அர்த்தம்தானே …? அவளை பெற்றவள் கெட்டவளா …? இது போன்ற வார்த்தைகளால் வசை பாடக் கூடிய அளவு கெட்டவளா …?

” அந்த வார்த்தையின் அர்த.தம் என்னம்மா …? “

சௌந்தர்யா அவள் தலையை வருடினாள் .

” விடும்மா …அவர்கள் ஏதோ வாய்க்கு வந்த்தை தெரியாமல் உளறுகிறார்கள் …”

” தெரியாமல் உளறுபவர்கள் இப்படியெல்லாம் உளறுவார்களா அம்மா ..? “

” உன் சாரதா அத்தை அவர்கள் காரியம் ஆகவேண்டுமென்றால் என்ன வேண்டுமானாலும் உளறுவார்கள் .நாம் எல்லோருமாக சுகுமாரை திட்டி அனுப்பினோமல்லவா …அந்த கோபத்தை இப்படி காட்டுகிறார்கள் …”

சௌந்தர்யா சமாதானமாக சொன்னாலும் , அது முழு  உண்மையல்ல என்றே சாத்விகாவிற்கு தோன்றியது .ஏனென்றால் சாரதா பேசிய வாரத்தைகள் சுகுமாரை நடத்திய முறைக்காக ஏற்பட்ட ஒருநாள் கோபமாக தெரியவில்லை .வருடம் வருடமாக மனதடியில் புதையுண்டு கிடந்த வன்ம்ம் இப்போது வார்த்தைகளாக வந்த்து போலிருந்த்து .

” என்னை பெற்றவள் யார் அப்பா …? ” இரவு உணவின் போது சண்முகபாண்டியனிடம் கேட்டாள் .

யாரிடமோ மகள் என்னவோ பேசுகின்றாள் பாவனையில் அவர் சப்பாத்திக்கு குருமா தொட்டுக்கொண்டிருந்தார் .

” அப்ப்ப்பா …” சாத்வகாவின் அழுத்தமான அழைப்பில் தலை நிமிர்ந்தவர் ” நீ சாப்பிடவல்லையா பேபி …? ” என்றார் .

தன் முன் வைத்திருந்த டிபன் தட்டை தள்ளி விட்டவள் ” என் அம்மா யாரென்று கேட்டேன் …? ” என்றாள் .

” நான்தான்டி உன் அம்மா …” சௌந்தர்யா வந்து நின்றாள் .அவளை அலட்சியப்படுத்தி

” அப்பா ….என்னை பெற்றவள் யார் என்கிறேன் …? ” என்றாள் .

” உன் அம்மா என் தோழி .மிகவும் நல்லவள் .” சண்முகபாண்டியன் மெல்லிய குரலில் சொன்னார் .

” என் அப்பா ….? ” சண்முகபாண்டியன் நிமிர்ந்து சாத்விகாவை பார்த்த பார்வையில் அது நானில்லையா …என்ற கேள்வி இருந்த்து .அது மனதை நெருடியபோதும் அந்த நெருடலை தள்ளிவிட்டு ….

” எனக்கு பதில் சொல்லுங்கள் ” என்றாள் .

சண்முகபாண்டியன் மௌனமாக சாப்பிட தொடங்கினார் .அவர் கையில் தட்டிலிருந்த சப்பாத்திகள் துண்டாட பட்டாலும் ஒரு துண்டு கூட நாக்கை சந்திக்கவில்லை .

” மிகவும் நல்லவளுக்குத்தான் உங்கள் அகராதியில் தட்டுவாணி என்ற பெயரோ …? “

சண்முகபாண்டியனுக்கு நிமிரும் எண்ணமில்லை .உடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ரங்கநாயகி கொஞ்சம் பரிதாபமாக சாத்விகாவை பார்த்தாள் .

” நான் இந்த வீட்டு பெண்ணில்லையென்ற உண்மை என் நெஞ்சுக்குள் அரிப்பு புழுவாய் அரிக்கிறதே அப்பா ….”

” அதனால்தான் பேபி இந்த உண்மை உனக்கு தெரியவேண்டாமென நினைத்தேன் …”

” ஆனால் இப்போது தெரிந்துவிட்டதே .இனியேனும் என் இறந்தகாலத்தை எனக்கு தெரியப்படுத்ழிவிடுங்கள் அப்பா “




” ஏன்மா ….உன் இறந்தகாலத்திற்குள் திரும்ப போகுமளவு , உனக்கு இந்த நிகழ்காலம் என்ன கெடுதல் செய்து கொண்டிருக்கிறது …?அம்மா , அப்பா போய்  நாங்கள் உனக்கு காலமாகி போனோமல்லவா …? ” வேதனையோடு சண்முகபாண்டியன் கேட்டது சாத்விகாவை பாதிக்கவில்லை .

” நீங்கள் என்னை எப்படி ப்ரைன் வாஷ் பண்ண நினைத்தாலும் நான் மசிய மாட்டேன் .எனக்கு என்னை பெற்றவர்களின் விபரம் வேண்டும் …” உறுதியாக கேட்ட சாத்விகாவை நிமிர்ந்து பார்த்த சண்முகபாண்டியனின் முகத்தில் எஃகின் கடினம் வந்திருந்த்து .

” சொல்லமுடியாது …உன்னால் முடிந்த்தை பார்த்துக் கொள் ….” தட்டிலேயே கை கழுவி விட்டு எழுந்து போனவரை அதிர்ச்சியாக பார்த்தாள் .

இப்படி ஒரு குரலில் சண்முகபாண்டியன் அவளிடம் பேசியதில்லை .இதோ இப்போதுதான் ….இப்போது அவர் தந்தையாக தெரியவில்லை ….காவல்துறை உயர் அதிகாரியாக …குற்றவாளியின் கழுத்தில் ஷூக்காலால் நசுக்கும் அதிகாரியாக ….

சாத்விகா சிறுபிள்ளையாக இருக்கும் போது ஒரு முறை தந்தையை பார்க்க ஸ்டேசனுக்கு போகும் சந்தர்ப்பம் ஒன்று வாய்த்தபோது , அங்கே சண்மிகபாண்டியன் குற்றவாளி ஒருவனை தனது பெல்டால் அடி துவைத்து கொண்டிருந்தார் .சரிந்து விழுந்தவனின் கழுத்தில் தன் ஷூக்காலை வைத்து அழுத்தியபோது சாத்விகா …அப்பா என அலறிவிட்டாள் .திரும்பியவர் இவளை பார்த்ததும் …

” சௌந்தரி பேபியை வீட்டற்கு கூட்டி போ …” மனைவியிடம் உறும சௌந்தர்யா அவளை அவசரமாக வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டாள் .பிறகு ஒரு வாரமாக தந்தையின் அருகேயே போக பயந்த மகளை சண்மிகபாண்டியனும் , சௌந்தர்யாவும் சேர்ந்து மெல்ல மெல்ல சமாதானம் செய்து மீட்டு வந்தனர் .

அதன் பிறகு சண்முகபாண்டியன் தன் மகளிடம் மிக மென்மையாக மாறி போனார் .செம்பருத்தி பூவொன்று தேனை தனக்குள் தேக்கி வைத்து காப்பதை போல் மகளை காத்து வந்தார் .இதோ நேற்று வரை அப்படிப்பட்ட தந்தையாகத்தான் இருந்தார் .ஆனால் இன்றோ …சாத்விகா தன் சிறுவயதில் பார்த்த அந்த ரௌத்ர தந்தையை நினைவுறுத்தினார் .அந்த பார்வையிலேயே பெல்ட்டடி வாங்கிய வேதனையை அடைந்த சாத்விகா , ஆதரவிற்காக அன்னையை நோக்க அவள் முன்பே அந்த இடத்தை விட்டு போயிருந்தாள் .

வேடிக்கை பார்க்கும் பாவனையில் பார்த்திருந்த பாட்டியை தவிர்த்து அண்ணனிடம் திரும்பியவள் அவன் யோசனையுடன் தன்னையே பார்த்தபடி இருப்பதை பார்த்தாள் .

” ஏன் பாப்பா நாங்கள் எல்லோரும் இத்தனை வருடங்களாக உன்னை கண்ணுக்குள் வைத்து வளர்த்திருக்கிறோமே .இந்த பாசத்தை விட யாரென்றே நீ அறியாத உன் பெற்றோர்கள் உனக்கு மக்கியமாக போய்ஙிட்டார்களா …? ” மகுந்த வேநனையோடு கேட்டான் .

” உங்கள் பாசத்தை நான் குறை கூறவில்லை அண்ணா .ஆனால் யாராலே நான் தவிர்க்கப்பட்டிருக்கிறேன் , தவிக்க விட பட்டிருக்கறேன் என்ற இந்த உணர்வு என்னை கொன்று கொண்டே இருக்கிறதண்ணா .இதனை தெரிந்து கொள்ளாவிட்டால் நான் …என் சாவு கூட நல்லவிதமாக அமையாது என்பது போல் ….”




” போதும் முட்டாள்தனமாக உளறிக் கொண்டிருக்காதே .நீ இந்த அளவு பேசிய பிறகு உன் பிறப்பின் உண்மைகளை மறைத்து ஒன்றும் ஆக போவதில்லை .சாப்பிட்டு விட்டு உன் ரூமுக்கு போ .நான் அங்கே வந்து எல்லாவற்றையும் சொல்கிறேன் …”

” நன்றி அண்ணா ….” என்ற சாத்விகா சொன்னதை கேட்க கார்த்திக் அங்கே இல்லை .எழுந்து போயிருந்தான் .இன்னமும் டிவியில் சீரியல் பார்க்கும் பாவனையிலேயே அமர்ந்திருந்த ரங்கநாயகியை எரிச்சலாக பார்த்துவிட்டு சாத்விகாவும் எழுந்து போனாள் .

தனது அறைக்குள் நிலையில்லாமல் அங்குமிங்கும் நடந்தபடி கார்த்திக்கின் வரவிற்காய் காத்திருந்தாள் .மணி பத்தாகி விட்டதே …இன்னும் இந்த அண்ணன் ஏன் வரவில்லை …? பொறுக்க முடியாமல் தன் அறையை விட்டு வந்து கார்த்திக்கின் அறையினுள் பார்த்தாள் .அவன் அங்கே இல்லை .அப்பாவுடன் பேசிக் கொண்டிருக்கிறானோ …? சண்முகபாண்டியன் அறை கீழே இருந்த்து .

மேலேயிருந்து கீழே எட்டி அப்பாவின் அறையை பார்த்தாள் .பின்னிருந்து அவள் தோளை தொட்டாள் ரங்கநாயகி .

” என்னம்மா…உன் அண்ணனுக்காக காத்திருக்கிறாயா ..? உன் அப்பாவோடு பேசிக் கொண்டிருக்கிறான் .இப்போது வந்துவிடுவான் .நிறைய சொல்வான் .உன்னை பெற்ற அம்மா , அப்பாவை பற்றி நிறைய சொல்வான் .கவனமாக கேட்டுகொள் கண்ணு …”

ரங்கநாயகி அவள் கன்னத்தை தட்டிவிட்டு செல்ல சாத்விகா குழப்பத்துடன் நின்றாள் .

What’s your Reaction?
+1
15
+1
10
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!