karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 17

 

17

நிச்சயிக்கப்பட்ட நிகழ்வுகள் ஏதுமற்ற

என் நாட்களை

மரங்கொத்தி கொத்த விடா சூதானத்தை

யாரிடம் கற்பேன் ?

” அண்ணா …” வேகமாக கார்த்திக்கின் கையை ஓடிப்போய் பற்றிக்கொண்டாள் .

” இது சரியில்லை சுகுமார் …” நடுங்கிய தங்கையின் கரங்களை அழுத்தியபடி சொன்னான் கார்த்திக் .

” லவ்வர்ஸுக்கு இடையே நீ வராதே கார்த்திக் …” இப்போதும் சுகுமார் குரலில் அதிகாரம்தான் .

” என் தங்கை சுகுமார் .இன்னமும் அவளை உனக்கு மணம் முடித்து தரவில்லை .அதன்பிறகுதான் உனக்கு அதிகாரம் வரவேண்டும் .அந்நிய ஆண் தன் தங்கையை தவறான நோக்கத்தில் தொடுவதை எந்த அண்ணனும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டான் ….”

” சரிதான் நிறுத்து கார்த்திக் .என்னவோ உன் தாய் வயிற்றில் உனக்கு பிறகு பிறந்த உன் சொந்த தங்கை போல் பதறுகிறாயே …எங்கேயோ கிடந்தவளை தூக்கி கொண்டு வந்து …”

” சுகுமார் …” கர்ஜனை போல் பின்னிருந்து சண்முகபாண்டியனின் குரல் வந்த்து .

” இனி உங்கள் இருவரின் திருமணத்திற்கு முன்பு , நீ சாத்விகாவை சந்திக்க முயற்சிக்காதே …” உறுதியாக கூறினார் .

இதுநாள் வரை மாமாவை எதிர்த்து ஒரு வார்த்தை பேசியிராத மருமகன்தான் . ஆனால் இப்போதோ ….எல்லாம் தன் கையில் என்ற எண்ணம் நிறைய …

” சந்தித்தால் என்ன செய்வீர்கள் மாமா …? ” தைரியமாக முகம் நிமிர்ந்து கேட்டு வாயை மூடும் முன் …

” என் மகளுக்கேற்ற மாப்பிள்ளை நீயில்லையென முடிவெடுத்து , இந்த திருமணத்தை நிறுத்தி விடுவேன் …” அழுத்தமாக அறிவித்து விட்டு மகளின் தோள்களை ஆதரவாக அணைத்தபடி உள்ளே திரும்பினார் .

அப்பா , அண்ணனுக்கு இடையில் பாதுகாப்பாக செல்லும் சாத்விகாவை கோபமாக பார்த்து கால்களை ஆத்திரத்துடன் தரையில் உதைத்தான் சுகுமார் .

——————

” என்னப்பா யோசிக்கிறீர்கள் …? “

” இனியும் இந்த திருமண ஏற்பாடுகளை தொடர வேண்டுமா ..என யோசிக்கிறேன் கார்த்திக் ” சண்முகபாண்டியன் சாத்விகாவை பார்த்தபடி கூற , அவள் வெறுமையாக அவரை பார்த்துவிட்டு பார்வையை திருப்பிக் கொண்டாள் .அந்த செய்கை சணமுகபாண்டியனை மிகவும் வேதனைபடுத்தியது .

” என்னடா பேபி செய்யலாம் …? ” மகளிடமே கேட்டார் .

முதன்முதலாக சுகுமாருடனான திருமணத்தையும் இப்படித்தான் , அவளிடம் கேட்டுத்தான் முடிவு செய்தார் .அப்போது சாத்விகாவிடம் சுகுமாரை மறுப்பதற்கான காரணங்கள் எதுவுமில்லை .இப்போதோ …அவனை மணப்பதற்கென ஒரே ஒரு காரணம் கூட அவளிடம் இல்லை .

” உங்கள் இஷ்டம்பா ….”

” அப்பா உன் இஷ்டத்தை கேட்கிறார் பாப்பா …” கார்த்திக் அவளருகில் அமர்ந்தான் .




” என் தங்கை மகனை திருமணம் செய்து கொள் என்பீர்கள் .சரியென இவள் யோசிக்கும் போதே …அவன் கையை பிடித்து இழுப்பான் .இப்போது அவன் வேண்டாம்தானே என்பீர்கள் .இதற்கும் இவள் தலையசைக்க வேண்டும் .பெண்ணின் உணர்வுகளுடன் விளையாடுவதை நீங்கள் …ஆண்கள் எப்போதுதான் நிறுத்த போகிறீர்கள் …? ” சௌந்தர்யா கோபத்தோடு எரிச்சலும் கலந்து கேட்டாள் .

” என்ன சௌந்தர்யா நம் பேபிக்கு நல்லது என யோசித்து செய்த்துதானே …வெளி மாப்பிள்ளையை விட நம் சொந்தம் என்றால் நமக்கு கட்டுப்பட்டு இருப்பான் .பேபியை நம் பார்வையிலேயே வைத்துக் கொள்ளலாமென்றுதான் இந்த திருமண ஏற்பாடே செய்தேன் …”

” நீங்கள் தேர்ந்தெடுத்ந மாப்பிள்ளையின் லட்சணத்தை பார்த்தீர்கள் தானே …அவனுக்கு என்ன தைரியம் இருந்தால் என் வீட்டற்குள்ளேயே …என் பெண்ணின் கையையே பிடித்து  இழுப்பான் …? “

” ஷ் …அம்மா நடந்தது குறித்து இப்போது நமக்குள் தர்க்கம் வேண்டாம் .இந்த திருமணத்தை நடத்துவதா ..? வேண்டாமா …அதை மட்டும் பேசுவோம் ….” கார்த்திக் தாய் , தந்தையை சமாதானப்படுத்தினான் .

” என் பெண்ணுக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம் ….” சௌந்தர்யா உறுதியாக கூறினாள் .

” மாமா உங்களிடம் என்னவோ மிரட்டுவது போல் பேசிக்
கொண்டிருந்தாரே …அது என்ன விசயம்பா ..? ” சாத்விகா கேட்டாள் .

” அது …சுகுமார் எடுத்துக் கொண்டுள்ள ஒரு கேஸ்மா .இந்த வாரம் கோர்ட்டிற்கு வருகிறது .அதற்காக போலிஸ் தரப்பில் சாதகமாக நான் சாட்சிகளை தயார் செய்ய வேண்டுமென்பது தனசேகரின் விருப்பம் …”

” நீங்கள் என்னப்பா சொன்னீர்கள் …? “

” இன்று சுகுமார் உன்னிடம் நடந்து கொண்ட முறைக்கு பிறகும் நான் அதற்கெல்லாம் சம்மதிப்பேனா பேபி …? “

” அப்போது …இதற்கு முன்பு , அப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு இருந்த்தா அப்பா …? “

சண்முகபாண்டியன் மௌனமானார் .

” உங்கள் வேலையில் நீதியும் , நேர்மையும் உங்களுக்கு எந்த அளவு முக்கியமென்று எனக்கு தெரியும் அப்பா .அதையெல்லாம் நினைக்காமல் …எதையாவது செய்தேனும் இந்த திருமணத்தை நடத்த வேண்டுமென நினைத்தீர்களா அப்பா …? “

” உனக்காகத் தான்டா பேபி …”

” நான்தான் அப்படி எனக்கு வேண்டாமென்று சொன்னேனே அப்பா ….அதற்கு பிறகும் ….அந்த சுகுமாரை யே எனக்கு மணம் பேச வேண்டுமென்று எண்ணியிருந்தீர்களானால் ….ஏனப்பா …? “

” நான்தான் சொன்னேனே பேபி .உன்னை எங்கள் அருகிலேயே வைத்து பார்த்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்தோம் ….” சண்முகபாண்டியனின் குரல் பிசிறடித்தது .

” உங்கள் குரல் நடுங்குகிறது அப்பா .நீ சொல் அண்ணா …இந்த திருமணம் நடக்கவில்லையென்றால் உன்னை கொன்றே விடுவேனென மிரட்டனாயே …ஏன் அண்ணா …? அவ்வளவு உயர்ந்த மாப்பிள்ளையா அந்த சுகுமார் …? “

” சாத்விகா அதுதான் அப்பா காரணம் சொல்கிறாரே .பிறகும் நீ ஏன் அவரை குற்றவாளி போல் கேள்வி கேட்டு கொண்டிருக்கிறாய் …? ” சௌந்தர்யா அதட்டினாள் .

” என்னம்மா கொஞ்ச நேரம் முன்பு எனக்காக பேசியது போலிருந்த்து .இப்போது அப்பா பக்கமும் , உங்கள் பிள்ளை பக்கமும் பேசுகிறீர்கள் …? ” உங்கள் பிள்ளையில் அழுத்தம் கொடுத்தாள் .

” சாத்விகா நீ தப்பான வழியில் யோசிக்கிறாய் …போதும் இத்தோடு நிறுத்தி விடு …” கார்த்திக் எச்சரித்தான் .

” ம் …இப்போது நீங்கள் மூவரும் ஒன்றாகி விட்டீர்கள் .நான் தனியாக அநாதையாக நிற்கிறேன் …” அவர்கள் எதிரே எழுந்து நின்றுகொண்டு சொன்னாள் .

” சாத்விகா நீ என் பொண்ணுடி ….” சௌந்தர்யா எழுந்து சாத்வகாவை அணைத்து கொள்ள முயல , கையை உயர்த்தி அவளை தடுத்தாள் சாத்விகா .

” என் பெயரில் நிறைய சொத்துக்களை நீங்கள் வாங்கி  வைத்திருப்பது தெரியும் .ஒரு வேளை உங்களுக்கு கட்டுப்பட்டு இருக்கும் மாப்பிள்ளையானால் , அந்த சொத்துக்களை பெண்ணுக்கென கொடுத்த மாதிரியும் இருக்கும் .நீங்களே அனுபவித்த மாதிரியும் இருக்குமென்று …அது மாதிரி எண்ணமெதுவும் உங்களுக்கு உண்டோ …? ” நிதானமாக அழுத்தி , ஆனால் தெளிவாக கேட்டாள் .

சண்முகபாண்டியனும் , சௌந்தர்யாவும் அவளை நம்பமுடியாமல் பார்க்க …கார்த்திக் முகத்தில் அறையும் வேகத்தில் கைகளை உயர்த்தியவன் …” சீ போடி ….” என தள்ளினான் .

தடுமாறியவளை தாங்கி நிமிர்த்திய ரங்கநாயகி ” என்னடி கேட்ட அநாதை நாயே …” என அவள் கன்னத்தில் அறைந்தார்.

” வேண்டாம் இவளை வீட்டிற்குள் கொண்டு வராதே என்று அன்றே சொன்னேனே கேட்டாயா …? இவள் பிறப்பு சரியில்லை .இவள் அம்மா சரியில்லை …அவள் புத்திதான் இவளுக்கும் இருக்கும் .இவள் நமக்கு வேண்டாமென்றேன் .கேட்டாயா …? நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாயே .அது வாலை குழைத்துக்கொண்டு திரும்ப தெருவிற்கே போகிறது பார் ….” மீண்டும் சாத்விகாவை அறைந்தார் .

” அடிங்க பாட்டி …இன்னும் நாலு அடி கூட அடிங்க .ஆனால் என் பிறப்பு உண்மையை மட்டும் சொல்லிடுங்க .எங்கேயோ ஏதோ தவறு நடந்திருக்கிறது .அது எங்கே …? எப்படி நடந்த்து …? எதனால் என்னை துரத்துகறது …என எனக்கு தெரிய வேண்டும் .தயவுசெய்து அதை மட்டும் சொல்லிவிடுங்கள் ….”




” எங்கேயோ தவறு நடக்கவில்லை .அந்த தவறே நீதான் ….அந்த தவறை சரியாக்க வேண்டுமென்று என் மகன் நினைத்தான் .ஆனால் தவறோடு சேர்ந்து சேர்ந்து கடைசி வரை எல்லாமே தவறாகவே போய்விட்டது …”

” என்ன பாட்டி சொல்கிறீர்கள் …? ” சாத்விகாவின் குரலில் தைரியம் குறைந்து அழுகை எட்டி பார்க்க தொடங்கியது .

” மீதியை நான் சொல்கிறேனடி திமிர் பிடித்தவளே …” கத்தியபடி  வந்தாள் சாரதா .

சாத்விகா கேட்ட அதிகப்படி சொற்களால் அதிர்ச்சியில் பேசாமல் இருந்த சண்முகபாண்டியன் தங்கையை கண்டதும் சுய உணர்விற்கு வந்தார் .

ம்ஹூம் இவள் என் பேபியை மிகவும் வருத்திவிடுவாளே ….வேகமாக தங்கையை அவர் தடுக்கும் முன் …சாரதா வார்த்தைகளை கொட்டியிருந்தாள் .

” அப்பன் யாருன்னே தெரியாமல் ஒரு தட்டுவாணி கழுதைக்கு பொறந்த பொண்ணு நீ .என் அண்ணன் வளர்த்தார் என்ற ஒரே காரணத்தால் நான் உன் பிறப்பை குடையாமல் என் மகனுக்கு மணம் முடிக்க சம்மதித்தேன் .ஆனால் அந்த நன்றி விசுவாசம் கொஞ்சமும் இல்லாமல் ….” சாரதா பேசிக் கொண்டே போக ….

பத்து நாட்களில் இரண்டாவது முறையாக மயங்கி சரிந்தாள் சாத்விகா .

What’s your Reaction?
+1
15
+1
9
+1
1
+1
0
+1
0
+1
1
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!