karai purandoduthe kana Serial Stories கரை புரண்டோடுதே கனா

கரை புரண்டோடுதே கனா – 20

20

 

 

ஆர்யனின் பார்வையின் அர்த்தம் புரியாமல் ஆராத்யா கீழே பார்க்க, அங்கே பரமசிவம் வாய்விட்டு சிரித்தபடி இருக்க, அவருக்கு இருபக்கமும் சதுரகிரியும், மலையரசனும் அமர்ந்திருந்தனர்.. சிரிக்கும் அப்பாவை பார்த்தபடி தாங்களும் தந்தையின் உற்சாகத்தில் பங்கெடுத்தபடி இருந்தனர்..
மனோரமா வாய் விட்டு சிரித்தபடி அவர்களை நெருங்கி திடுமென ஒரு விம்மலுடன் அவர்களுக்கு கீழே தரையில் அமர்ந்தாள்.. கண்ணீரும், சிரிப்புமாக அண்ணாந்து பார்த்து.. “அப்பா” என அழைத்து விட்டு அவரது மடியில் முகம் புதைத்தாள்..
பரமசிவத்தின் சிரிப்பு நின்றது.. ஆனால் அவரது முகத்தின் பரவசம் மாறவில்லை.. விம்மலுடன் தன் மடி சாய்ந்திருக்கும் மகளின் தலையை வருடினார்..
“சீ கழுதை சிரிக்க வேண்டிய நேரத்தில் எதற்கு அழுதுகிட்டு இருக்கிறாய்..? கண்ணீரை துடை..” மகளை செல்லமாக வைதார்..




தள்ளி நின்ற வசுமதி வேகமாக தானும் வந்து தகப்பனின் மடியில் சாய்ந்து கொள்ள பரமசிவத்தின் கண்கள் கலங்கியது.. இரு மகள்களையும் தன் மடி சேர்த்துக் கொண்டார்.. அருகில் அமர்ந்திருந்த மகன்களின் கன்னம் வருடினார்.. ஒரு கூட்டுப் பறவைகளின் பாச சங்கமம் அங்கே அருமையாக நிகழ்ந்து கொண்டிருந்தது..
தனது கன்னத்தில் ஆர்யனின் கை அழுத்தமாக படிவதை உணர்ந்து அவனைப் பார்த்த ஆராத்யா அவன் தன் கண்ணீரை துடைப்பதை அறிந்த பிறகே தன் கண்ணீரையும் உணர்ந்தாள்..
“எங்கள் குடும்பத்தை ஒன்றாக சேர்த்ததற்கு மிகவும் நன்றி ஆரா..”
“இதையெல்லாம் எதிர்பார்த்துதான் இந்த கலாட்டாவா..?” ஆல்பத்தை காட்டிக் கேட்டாள்..
“ம்.. எதிர்பார்த்தேன்.. ஆனால் இந்த அளவு இல்லை.. சிறு உற்சாகத்தை அவர்களுக்கிடையே கொண்டு வரலாமென நினைத்தேன்.. ஆனால் புதையல் போல் இந்த சந்தோசம் கிடைத்து விட்டது.. பாவம் அவர்களும் ஒன்றாக சேர்வதற்கு இதுபோல் ஒரு சிறு சந்தர்ப்பத்தைத்தான் எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.. கிடைத்த சிறு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி விட்டார்கள்.. இருபது வருடங்கள் கழித்து எங்கள் குடும்பம் சேர்ந்து விட்டது..”
“அதென்ன உங்கள் குடும்பம்..? நான் இந்தக் குடும்பத்தில் ஒருத்தி கிடையாதா..?” ஆராத்யா தனது வழக்கமான வாதத்தில் இறங்கினாள்..
“நீயும் இந்தக் குடும்பமா ஆரா..? அது எப்படி..?” ஆர்யனின் விழி ஊடுறுவலுக்கு ஆராத்யாவிற்கு பதில் சொல்லத் தெரியவில்லை..
இவன் ஏன் இப்படிப் பார்க்கிறான்..? அவன் பார்வையை தாங்க முடியாது தலை குனிந்தாள்.. ஆர்யன் அவளருகே நெருங்கினான்..
“இங்கே என்னை நிமிர்ந்து பார் ஆரா..”
“ம்ஹீம்..” தலையசைத்தாள்..
“ஏன்..?”
“நீ.. நீ ரொம்பக் கெட்டவன்..” இதைச் சொல்லும் போது ஆராத்யாவின் குரல் நடுங்கியது.. இப்படிக் கெட்டவனாய் போய் விட்டாயே என மனம் அழுதது..
“நிமிர்ந்து என்னை.. என் கண்களை பார் ஆரா.. நான் கெட்டவனா..? கெட்ட செயல்கள் செய்பவனா..? அப்படியா உனக்கு தோன்றுகிறது..?”
ஆர்யனின் கண்களுக்குள் பார்த்த ஆராத்யாவால் அப்படி நினைக்க கூட முடியவில்லை.. செய்வதறியாது அவள் விழிகள் படபடத்தன..
“யோசி ஆரா.. உணர்ச்சி வசப்படாமல் என்னை, நம் குடும்பத்தை உன் மனதில் நிறுத்தி யோசி, நான் ஆராவு குடும்பத்து பையன், மனோரமாவின் மருமகன் கெட்டவனாக இருப்பேனா..?”
“அன்று அப்படித்தான் இருந்தாய்..” ஆராத்யா இன்னமும் முணுமுணுப்பாய் தான் பேசினாள்..
“அன்று நீ கூட என் எண்ணத்தில் கெட்டவளாக இருந்தாய் ஆரா.. நம் மன எண்ணங்கள் சில நேரங்களில் நமக்கு துரோகம் செய்து விடுகிறது..”
ஆராத்யா விலுக்கென நிமிர்ந்து அவனை பார்த்தாள்.. அவள் விழிகள் அவனிடம் மேலும் விளக்கத்தை யாசித்தன..
“சொல்கிறேன் ஆரா, பிறகு.. அங்கே பார் இளங்கோவும், ஸ்ரீமதியும் நம்மை பார்த்து விட்டு வருகிறார்கள்.. ஏய் அதைக் கொடு..” ஆர்யன் ஆராத்யா கையிலிருந்த ஆல்பத்தை பிடுங்கத் தொடங்க, ஆராத்யா “முடியாது” எனக் கத்தியபடி படியிறங்கி ஓடி கீழே அமர்ந்திருந்த பெரியவர்களை சுற்ற ஆரம்பித்தாள்,
அவளை மற்றவர்கள் சுற்ற, பழைய வெறுப்பும், பகையும் மறந்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வாய் விட்டு சிரித்து தங்கள் நெடுநாள் மனப்பாரத்தை தொலைத்துக் கொண்டார்கள்.. இப்போது வீட்டினர் யாரும் அறியாத அந்நியோன்யம் ஆராத்யா ஆர்யனுக்குள் மலர்ந்திருந்தது..
அப்பா காலிங் என ஆராத்யாவின் செல்போன் திரை மின்ன அவளுள் உற்சாகம் பொங்கியது..
“டாட் எப்படி இருக்கீங்க..?” போனை ஆன் செய்து கத்தலாய் கேட்டாள்..
“ஆராக் குட்டி எப்படிடா இருக்கிறாய்..?” மகளின் உற்சாகம் தந்தையின் குரலிலும் இருந்தது..
“வெரி பைன் டாட்.. வாட் அபவுட் யு..?”
“ம்.. நானே போன் பண்ணவும்தான் என்னை நினைவு வந்ததா..?” குறைபாடாக ஒலித்த தந்தையின் குரல் கத்தியாக ஆராத்யாவின் நெஞ்சில் இறங்கியது..




“ஐய்யோ என்ன டாடி.. உங்களை மறப்பேனா..? நீங்க என் செல்ல டாடி.. பட்டு டாடி.. உங்க நினைவு இல்லாமல் போகுமா..?” ஏதேதோ புகழாரங்களை சூட்டி மெல்ல மெல்ல அப்பாவின் கோபத்தை இறக்கினாள் ஆராத்யா..
அப்போது அந்தப் பக்கம் கடந்து போன ஆர்யன் அவள் கொஞ்சல்களைக் கேட்டு நின்று, ஜாடையாக யாரென்றான். அப்பா என அவள் வாயசைக்க தோள்களைக் குலுக்கிக் கொண்டு போய்விட்டான்..
ஆராத்யா அரைமணி நேரமாக தந்தைக்கு குழந்தையாக மாறி செல்லம் கொஞ்சி, கெஞ்சி அவரது கோபத்தை குறைத்து சமாதானப்படுத்தினாள்..
“நீ சின்னப்பிள்ளை உன்னை விட்டுடுடலாம்.. ஆனால் உன் அம்மாவிற்கே கூட என்னை மறந்து விட்டதே..” அப்பாவின் இந்தக் குற்றச்சாட்டில் ஆராத்யாவிற்கே அதிர்வுதான்..
இங்கு வந்த பிறகு அம்மா அப்பாவுடன் பேசவில்லையா..? அவள் ஏதேதோ குழப்பத்துடன் இங்கே வந்த நாளிலிருந்து இருந்ததால் மனோரமாவை சரியாக கவனிக்கவில்லை.. அம்மா அப்பாவுடன் பேசியிருப்பாள் என்றே நினைத்திருந்தாள்.. இப்போது..
தாய்க்கும் சேர்த்து தானே தந்தையை சமாதானப்படுத்தினாள்.. “ஏன் டாட் ரமாதான் உங்களுக்கு பேசனுமா..? நீங்க ரமாவுக்கு பேச மாட்டீங்களா..? அன்று டூர் போகும் போது மம்மியிடம் சொல்லிக் கொள்ளாமல் கூட போனீர்களே.. ரமாவிற்கும் அந்தக் கோபம் இருக்கும் தானே..? நீங்களே பேசி உங்க பொண்டாட்டியை சரி பண்ணுங்களேன்..”
எதிர் முனையிலிருந்து பதில் வராததிலேயே அப்பா குழம்ப ஆரம்பித்து விட்டார் என புரிந்து கொண்ட ஆராத்யா மெல்லிய சிரிப்போடு “ஓகே டாடி நீங்க நல்லா யோசிங்க, நான் அப்புறம் உங்ககிட்ட பேசுறேன்.. பை..” என்று போனை கட் செய்தாள்..
அடுத்த நொடியே அறைக்குள்ளிருந்து போன் ஒலித்தது.. அது மனோரமாவின் போன்.. பால்கனியில் நின்று பேசிக் கொண்டிருந்த ஆராத்யா உள்ளே போய் பார்க்க “மாது காலிங்” என ஒளிர்ந்தது அது..
ம்.. இரண்டே நொடியில் இந்த போனிற்கு வந்தாயிற்று.. எதற்கிந்த வீம்பு..? போனை கையில் எடுத்தபடி மனோரமாவை தேடினாள்.. மாடியில் அவளைக் காணாது கீழே பார்க்க, அங்கே சோபாவில் அமர்ந்து பரமசிவத்துடன் பேசிக் கொண்டிருந்தாள் மனோரமா..
சந்தோசம் தளும்பி நிற்கும் தாயின் முகத்தை ஒரு நிமிடம் மன நிறைவுடன் பார்த்து நின்றவள்,
“ரமா” எனக் கத்தினாள்..
“மாது காலிங்..” போனை காட்டினாள்..
“போனை ரூமிலேயே வை ஆரா.. அப்பாவிடம் ஒரு முக்கியமான விசயம் பேசிக் கொண்டிருக்கிறேன்.. ஐந்தே நிமிடத்தில் வந்து விடுகிறேன்..” திரும்பவும் அப்பாவிடம் பேசப் போய்விட்டாள்..
இதற்குள் மாதவனின் போன் இரண்டு முறை முழுமையாக ரிங் கொடுத்து கட்டாகிவிட்டது.. தானே அப்பாவிடம் விளக்கி விடுவோமென நினைத்து ஆராத்யா போணில் அப்பாவின் நம்பரை அழுத்திய போது, அவள் காது திருகப்பட்டது..
“அம்மாவை பெயர் சொல்லித்தான் கூப்பிடுவாயா..? எந்த வீட்டு பழக்கம் இது..ம்..?” ஆர்யன் அவள் காதை செல்லமாக திருகியபடி நின்றிருந்தான்..
“ஷ்.. ஆ.. வலிக்குது.. விடுங்க.. எல்லாம் இந்த வீட்டு பழக்கம்தான்..” அவன் கை அழுத்தத்திற்கு அதிகமாக குதித்தாள்..
“நாங்களெல்லாம் எங்க அம்மாவை பெயர் சொல்லித்தான் கூப்பிடுகிறோமா.. ம்..?”
“அம்மாவை கூப்பிட்டால்தானா..? நீங்க அத்தையை பெயர் சொல்லிக் கூப்பிடவில்லை..?”
“அ.. அது மனோ எனக்கு ப்ரெண்ட் மாதிரி.. நான் சின்னப் பிள்ளையிலிருந்தே அப்படித்தான் கூப்பிடுவேன்..”
“ரமா கூட எனக்கு ப்ரெண்ட் மாதிரிதான்.. நானும் சின்னப்பிள்ளையிலிருந்து அப்படித்தான் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்..”
“இந்த வாய் இல்லைன்னாலும் நீ உருப்பட மாட்டடி..” ஆர்யன் காதை விட்டு விட்டான்.. அவள் உதட்டை ஒரு விரலால் தொட்டுக் காட்டி சொன்னான்..
தேனருவி சொறியலை தன் உச்சந்தலையில் உணர்ந்தாள் ஆராத்யா அவனது தொடுகையில்.. இதழ் பிரித்து அவன் விரலைக் கடிக்க, அவன் கையை உதறி அவள் உதடுகளை கொத்தாக பிடித்தான்.
“கொஞ்ச நேரம் சும்மா இருக்கியாடி நீ..?”
“ஏய் போடா நான் ஏன் சும்மா இருக்கனும்..?” அவன் மார்பில் குத்தி தள்ளி அவனிடமிருந்து தன் உதடுகளை விடுவித்துக் கொண்டாள்..
“அங்கே சென்னையில் உன் கம்பெனியை அநாதரவாக விட்டு விட்டு ரொம்ப நாட்களாக இங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறாயே.. இது சரியா..?”




“தங்கை கல்யாணம்மா.. நான் கல்யாண வேலை பார்க்க வேண்டாமா..? அங்கே என் ப்ரெண்ட்சிடம் கம்பெனி பொறுப்பை ஒப்படைத்து விட்டுத்தான் வந்திருக்கிறேன்.. இங்கிருந்தே தொழிலை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்..”
விபரம் சொன்னவன் அவள் கையை தன் கையில் எடுத்துக் கொண்டான்.. “ஆரா உனக்கு இந்த வருடத்தோடு படிப்பு முடிந்து விடுகிறதுதானே..? நீ நம் கம்பெனிக்கே வேலைக்கு வருகிறாயா..?” எதிர்பார்ப்பு நிறைந்த அவன் கேள்வி ஆராத்யாவிற்கு புன்னகையை கொடுத்தது..
“ஐய்யோ அப்போ என் ஹெல்மெட் என்ன ஆவது..?”
“நீ மட்டும் இல்லை தாயே.. உன் ஓட்டை ஹெல்மெட்டும் சேர்ந்துதான்.. அதையும் இழுத்துக் கொண்டே வா..”
“என்னது என் ஹெல்மெட் ஓட்டையா..? அதன் அருமை உனக்கு தெரியாது..” ஆராத்யா வாயைத் திறக்க.. ஆர்யன் ஓடியே போய்விட்டான்.. சிரித்தபடியே தன் கையிலிருந்த போனை பார்த்தவள், மீண்டும் தந்தையிடம் பேச நினைத்தபோது, கீழே ஒரு விநோத சம்பவம் நடந்தது..
ஸ்ரீமதியும், தேன்மொழியும் வீடு முழுவதும் ஒவ்வொரு அறையாக சுற்றி பார்த்து விட்டு வந்து கட்டைவிரலை உயர்த்திக் காண்பித்தனர்.. வசுமதியும் சொர்ணாவும் பின்பக்க முன்பக்க கதவுகளை மூடினர்.. வரலட்சுமியும், சுப்புலட்சுமியும் நடுக்கூடத்தில் வந்து அமர, மற்றப் பெண்களும் அவர்களருகே வந்து தரையில் அமர்ந்தனர்..
“ஆம்பளைங்க யாரும் இல்லைல்ல..? நல்லா பார்த்துட்டீங்க தானே..?” வரலட்சுமி ரகசிய குரலில் கேட்க,
“இல்லை..” என எல்லாப் பெண்களும் ரகசியமாகவே பதில் சொல்லினர்..
இந்த மர்மத்தை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் ஆராத்யா கையிலிருந்த போனை அறையினுள் வைத்துவிட்டு படியிறங்கினாள்.. மறுநிமிடமே போன் ஒலிக்க ஆரம்பித்தது.. மீண்டும் மீண்டும் மாது அழைப்பதை சொன்ன போன் அமைதியான போது அதான் சார்ஜ் இறங்கியிருந்தது..

What’s your Reaction?
+1
6
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!