Serial Stories uravu solla oruvan உறவு சொல்ல ஒருவன்  

உறவு சொல்ல ஒருவன் – 9

                                                9

ஜெபசீலி செல்வந்தர் வீட்டில் பிறந்து செல்வமும் செல்வாக்குமாய் வளர்ந்தவள் .அவளுக்கென தந்தை தேர்ந்தெடுத்து மணம் முடித்த ஆடம்ஸும் அதே வகையாய் பணம் படைத்தவனாய் இருந்த்தோடு கூடுதலாக மனைவி மீது ஆசையும் , காதலும் கொண்டவனாய் இருக்க …வைரங்களாய் பிறந்த இரு ஆண் மக்களுடன் அவள் வாழ்வு கொஞ்சநாட்கள் முன்பு வரை அவளுக்கு தித்திப்புகளையே வாரி வழங்கிக் கொண்டிருந்த்து.

தன் காதல் தனது உரிமை என மூத்த மகன் டேவிட் அவர்கள் வாழ்விலிருந்து வெளியேறிய போதுதான் அவள் தன் வாழ்வின் கசப்பினை முதலில் உணர்ந்தாள் . பிறகு அவள் வாழ்வில் அடுத்தடுத்த அடிகள்தான் .




பிரிந்திருந்தாலும் நன்றாக இருப்பதாக திருப்தி பட்டிருந்த மகன் ஒரேடியாக அவர்களை விட்டு போனான் . அவனது வாரிசை தங்கள் வீட்டிற்கு கொண்டு வர வேண்டுமென்ற ஆசையை …ஆடம்ஸ் மறுத்தார் .அநேகமாக ஆடம்ஸ் மறுத்த ஜெபசீலியின் ஆசை இதுவாகத்தான் இருக்கும் .

செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்த ஜெபசீலியின் மீது இடி போல் வந்து இறங்கியது அவளது நோய் .இப்படி அவளே அறியாமல் அவளுள் புற்று வளர்ந்திருக்கும் என்று அவளால் நம்பவே முடியவில்லை .

தொடர்ந்து எத்தனை சிகிச்சைகள் , எத்தனை மருந்துகள் …மாத்திரைகள் …ஊசிகள் .உடலும் மனமும் ரணமாகிப் போய் அவளாகவே சீக்கிரமாக செத்துப் போய்விட விரும்ப தொடங்கினாள் .

” இந்த கடுமையிலிருந்து விரைவில் என்னை விடுவிக்க வேண்டுமென கர்த்தரிடம் வேண்டிக்கொள்ளுங்கள் …” தேவனுக்கான ஜெப வேளை ஒன்றில் அவள் கணவனிடமும் , மகனிடமும் வைத்த இந்த வேண்டுதல் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது .

குடும்பத்தின் மூத்த மகன் அவர்களை பிரிந்த போதோ …இல்லை நிரந்தரமாக அவர்களை விட்டு போன போதோ கூட ஆடம்ஸிடம் இல்லாத அதிர்வு இப்போது ஜெபசீலியின் வார்த்தைகளால் வந்த்து .சிறுத்துவிட்ட முகத்துடன் மனைவியின் முகத்தை ஆராய்ந்தவர் ஒன்றும் சொல்லாமல் எழுந்து சென்று விட , ஆதரவாய் அமைந்த மகனின் தோள்களில் சாய்ந்தாள் ஜெபசீலி .

அவளது கணிப்பு தவறாது உடனடியாக டேவிட்டின் மகனை இங்கே அழைத்து வர ஏற்பாடு செய்தார் ஆடம்ஸ் .தனது குறைந்து விட்ட வாழ்நாளின் இறுதியை பேரனின் உதவியுடன் இனிப்பாக கழித்துவிட வேண்டுமென்ற எண்ணம் மட்டும்தான் ஜெபசீலியிடம் முதலில் இருந்த்து .

ஆனால் அக் குழந்தையை நேரில் பார்த்த பின்போ தான் முதன் முதலில் மடி தாங்கிய கருவின் பிம்பத்தை… அப்படியே தனது மகனை தன் பேரனில் பார்த்தவளால் …அவனை விட்டு விட முடியவில்லை .உடனேயே அவனை அள்ளி மடியிறுத்திக் கொள்ள வேண்டும் …முடிந்தால் தனக்கு சக்தியிருந்தால் மீண்டும் அக்குழந்தையை தனது கருவறைக்குள்ளேயே கொண்டு சென்றுவிட வேண்டுமென்பது போன்ற வேகத்தில் இருந்தாள் அவள் .ஆனால் ….

இவன் என் மகன் என உரிமையோடு அணைத்து நின்றிருந்த பெண் ….அவளோடு இணைந்து நின்றிருந்த பேரன் ….அப்படி என்ன உறவு இவர்களுக்குள் ….இவளென்ன அவனை பெற்றெடுத்தாளா …? இல்லை இவன் அவளிடமிருந்து வந்தானா …? இப்படி உருகிக் கொள்வதற்கு .

தான் பெறாத ஒரு குழந்தையின் மேல் ஒரு பெண்ணால் இவ்வளவு பாசம் வைக்க முடியுமென்பதை  ஜெபசீலியால் ஒத்துக்கொள்ள முடியவில்லை .இப்போதைக்கு இந்த உலகிலேயே அவள் மிக அதிகப்படியாக வெறுக்கும் ஜீவனாக சத்யமித்ரா மாறிப்போனாள் .

” கொஞ்சம் இந்த பக்கம் திரும்புங்கள் அம்மா .இந்த மையை உங்கள் புருவங்களுக்கு வரைந்துவிடுகிறேன் …” மென்மையாக தன் தாடை பற்றிய சத்யமித்ராவை கண்களாலேயே எரித்து விடுவது போல் பார்த்தாள் .

” புருவங்களை சுருக்காதீர்கள் …” தன் வேலையில் கவனமாயிருந்தாள் அவள் .

தள்ளி நின்றபடி தனது குட்டிக்கண்களை விரித்தபடி இவர்களை பார்த்துக்கொண்டிருந்தான் சாந்தனு .

” ஏய் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் …? ” அனலை வாரி இறைத்தபடி வந்து நின்றான் கிறிஸ்டியன் .

” உஷ் ….கொஞ்சம் மெல்ல பேசுங்களேன் .அம்மா அதிர்கிறார்கள் பாருங்கள் …” திடீரென வந்து நின்று கத்திய மகனின் குரலுக்கு அதிர்ந்த ஜெபசீலியின் தோள்களை வருடியபடி சொன்னாள் .

” உன் முட்டாள்தனத்தை நிறுத்து சத்யா .உன்னை என்ன சொன்னால் என்ன செய்து கொண்டிருக்கிறாய் .இதையெல்லாம் அம்மா விரும்ப மாட்டார்கள் .நீ வெளியே போ …”

” உங்கள் அம்மாவிற்கு என்னை பிடிக்காவிட்டாலும் எனக்கு உங்கள் அம்மாவுடனான நெருக்கம் ரொம்பவே முக்கியம் கிருஷ் .நான் அவர்களை நெருங்கினால்தான் ப்ரின்ஸும் அவர்களை நெருங்குவான் .இதனை அவர்களுக்கு என்னால் விளக்க முடியவில்லை .எங்கள் இருவருக்குமிடையே ஒரு மாநிலமே விரிந்து கிடக்கிறது .நீங்களே உங்கள் மொழியில் அவர்களுக்கு விளக்குங்கள் ….” என்றவாறு ஜெபசீலியின் ஆடைகளை நீவி சரிப்படுத்த தொடங்கினாள் .

காந்தல் மாறி கனியத் தொடங்கியது கிறிஸ்டியின் முகம் .” ஒன்டர்புல் ….” என்றான் விழிகளை விரித்து .

” தேங்க்யூ …” என்று அவளிடம் நெகிழ்ந்து விட்டு தாயின் அருகே அமர்ந்து அவள் தோள்களை ஒரு கையால் அணைத்துக் கொண்டு மறு கையால் அவள் விரல்களை நீவியபடி மலையாளத்தில் மெல்லிய குரலில் தாய்க்கு விளக்கம் அளிக்க தொடங்கினான் .

முன்தினம் அவன் கோவிலில் தன் கைகளை வருடியபடி தன் அன்னைக்காக வேண்டியது நினைவு வந்த்து சத்யமித்ராவிற்கு .இவன் வசியக்காரன் .மிக எளிதாக எதிராளியை வசியப்படுத்தி விடுகிறான் என தோன்றியது .

இதோ கோபம் குறைந்து அமைதி பரவ தொடங்கியது ஜெபசீலியின் முகத்தில் .முழுச்சம்மதம் இல்லையென்றாலும் தன் பேரனுக்காக ” ம் …ம் ….” என ஒத்திக்கொண்டாள் .

தன்புறம் திரும்பிய கிறிஸ்டியின் பார்வையிலிருந்து தனதை சாந்தனு புறம் திருப்பி ” ப்ரின்ஸ் அந்த சாலை எடு …..” என்றாள் .

தன்னருகே கிடந்த சாலை எடுத்து வந்து ஜெபசீலியை பார்த்தபடி சத்யமித்ராவிடம் கொடுத்தான் குழந்தை .

” இங்கே வா .இந்தப் பக்கம் பிடித்துக்கொள் .இதை பாட்டிக்கு போட்டு விடுவோம் ….” அவனை கட்டில் மேல் ஏற்றி விட்டவள் சுடிதார் சாலின் ஒரு முனையை அவன் கையில் கொடுத்துவிட்டு ….

” என்னை மாதிரியே நீயும் பாட்டி மேல் போடு …..” என்றபடி சாலினை போட்டு பின் பண்ணினாள் .ப்ரின்ஸின் பக்கமும் சரி செய்தாள் .

” சரியா …இப்போ பாட்டி அழகாயிட்டாங்க இல்லை ப்ரின்ஸ் …”

அம்மாவிற்காக தலையாட்டினான் குழந்தை .

” சரி அம்மா போய் பாட்டிக்கு சாப்பாடு எடுத்துட்டு வருவேன் .நீ அதுவரை பாட்டிக்கிட்ட பேசிட்டு இருக்கனும் .சரியா ….? “

தனது கையை பிடித்தபடி தானும் வெளியேறி விட துடித்த குழந்தையை மென்மையாக பிடித்து கட்டிலில் அமர வைத்துவிட்டு …




” ப்ரின்ஸ் பாட்டிக்கு காய்ச்சல் .அவுங்களை நீதான் பார்த்துக்கனும் ….நான் இப்போ வந்திடுவேன் …” கண்டிப்புடன் கூறினாள் .

ஜெபசீலியை கிறிஸ்டியனிடம் கண்ணால் காட்டி ” அவனிடம் கொஞ்சம் உணர்ச்சிவசப் படாமல் மெல்ல அவனை தொடாமல் அமைதியாக பேசிக் கொண்டு மட்டும் இருக்க சொல்லி விட்டு  நீங்கள் மெல்ல வெளியே வந்துவிடுங்கள் ….” என்றுவிட்டு வெளியேறினாள் .

இதற்கு அதிருப்தியடைந்த தாயை சமாதானப்படுத்தி புரிய வைத்துவிட்டு கிறிஸ்டியனும் அறையை விட்டு மெல்ல வெளியேறினான் .

அறைக்கு வெளியே போட்டிருந்த சோபாவில் கைகளை கட்டியபடி அமர்ந்திருந்த சத்யமித்ராவின் அருகே வந்து அமர்ந்தான் .

“உங்கள் அம்மா ் சமாதானமாகி விட்டார்களா  …அதற்குள் வந்துவிட்டீர்கள் …? “

” பின்னாலேயே வரச்சொல்லி மேடம் உத்தரவு போட்டு விட்டீர்களே .அதுதான் அம்மாவை அவசரமாக சமாதானப்படுத்தினேன் …” பணிவு போல் தலையை குனிந்தான் .

” நான் சொன்னது உத்தரவு போலவா இருந்த்து ….? ” முறைத்தாள் .

” ஆமாம் .ஆனால் இனிமையான …ஒரு குட்டிக்குழந்தை மழலையில் அழகாய் இடும் உத்தரவு போல் …”

” அதென்ன என்னைப் பார்த்தால் குழந்தை போலவா இருக்கிறது .எப்போது பார்த்தாலும் இப்படியே கூறுகிறீர்களே ….” அவனோடு சண்டையிட தோதாக சோபாவில் அவன் புறம் திரும்பி சம்மணமிட்டு அமர்ந்தாள் .

பீறிட்ட சிரிப்பை அடக்கிக்கொண்டு அவள் நாடி தொட்டு ஆட்டி ” மை சுவீட் பேபி …” என்றான் .

அவசரமாக தனது செய்கையை மாற்றிக்கொண்டு திரும்பி அமர்ந்தவளின் கைகளை பற்றி ” ரொம்ப நன்றி சத்யா .நான் முதலில் கொஞ்சம் தவறாக நினைத்துவிட்டேன் “

” அவர்கள் படுக்கையிலேயே இருந்தாக வேண்டுமென்ற கட்டாயமேதும் இருக்கிறதா ..? அதாவது எழுந்து நடப்பது அவர்களால் முடியாதா ..? “

” இல்லை சத்யா .இது அம்மா அவர்களுக்கே போட்டிக்கொண்ட சிறை .எப்போதும் அழகாக அலங்காரம் செய்து கொண்டு ரொம்ப ப்ரெஷ்ஷாக இந்த வீடு முழுவதும் வலம் வந்துகொண்டு வேலைக்கார்ர்களை வேலை வாங்கியபடி இருப்பார்கள் .இப்போது இந்த நோயினால் எடுத்த ட்ரீட்மென்ட்டினால் அவர்கள் முடியெல்லாம் உதிர்ந்து தோற்றம் ரொம்ப மாறிவிட்டது .அதனால் வெளியே வரவே கூச்சப்பட்டு உள்ளேயே இருக்கிறார்கள் ….”

அவன் சொல்வதை கேட்டுக்கொண்டவள் ” கொஞ்சம் இருங்க ரோசி .அம்மாவிற்கு சாப்பாடு கொஞ்சநேரம் கழித்து கொடுக்கலாம் …” கையில் உணவு தட்டோடு வந்த ரோசியை நிறுத்தினாள் .

” நான் பார்த்துக்கொள்கிறேன் ரோசி ” அவள் கை தட்டை வாங்கிக் கொண்டு அனுப்பினான் கிறிஸ்டியன் .

” கொஞ்ச நேரம் ஆகட்டும் …இன்று நான்தான் உங்கள் அம்மாவிற்கு சாப்பாடு கொடுக்க போகிறேன் …” என்றாள் .

” அதனை அம்மா விரும்பமாட்டார்கள் சத்யா …”

” வேறு வழியில்லை .அவர்கள் விரும்பித்தான் ஆக வேண்டும் …” பத்துநிமிடங்கள் தனது வாட்சில் நேரம் பார்த்து அமர்ந்திருந்தவள் தட்டுடன் உள்ளே நுழைந்தாள் .

கட்டிலில் பாட்டியின் கையை பிடித்தபடி பிடித்தமில்லாமல் தான் என்றாலும் அமர்ந்திருந்த சாந்தனுவை திருப்தியுடன் பார்த்தவள் …

” சாப்பிடலாமா அம்மா …? ” ஜெபசீலியின் முறைப்பை அலட்சியப்படுத்தி அவள் முன் கட்டிலிலேயே சிறு மேசையை அமைத்து சாப்பாட்டினை பரிமாறினாள் .

” சாப்பிடுங்கம்மா ….” சப்பாத்தியை பிய்த்து காயுடன் சேர்த்து  அவள் வாயில் வைத்தாள் .அவஸ்தையுடன் விழுங்கிய ஜெபசீலியை கண்டுகொள்ளாமல் நான்கு வாய்களை தள்ளியவள் சப்பாத்தியை பிய்த்து காய் சேர்த்து தனித்தனியாக வைத்து விட்டு …

” ப்ரின்ஸ் இதை பாட்டிக்கு குடு செல்லம் .அம்மா கை அழுக்கா இருக்கு .கழுவிட்டு வர்றேன் ….” பாத்ரூமிற்குள் சென்றாள் .

திரும்ப வந்து பார்த்தபோது கண்களில் வியப்புடன் ஒரு சோபாவில் தள்ளி அமர்ந்தபடி கிறிஸ்டியன் பார்த்தபடி இருக்க , கண்களில் கண்ணீருடன் பேரன் தடுமாறி தன் வாயில் வைத்த உணவை விழுங்கிக் கொண்டிருந்தாள் ஜெபசீலி .

” அச்சோ விழுந்திடாதீங்க செல்லம் .இப்படி எழுந்திரிச்சு நின்னு ஊட்ட கஷ்டமா இருக்கில்ல.இதோ இப்படி உட்கார்ந்துக்கோங்க .வசதியாக இருக்கும் ….” சாந்தனுவை தூக்கி ஜெபசீலி மடியில் அமர வைத்தாள் .

மேசையை அவனுக்கேற்றபடி வசதியாக அமைத்தவள் ” இப்போ கொடுங்க …” என்றாள் .

சாந்தனு கடமையே கண்ணானாவனாக ஒரு ஆர்வத்துடன் ஒவ்வொரு வாயாக ஏதோ விளையாட்டு போல் பாட்டியின் வாயில் ஊட்டினான் .தன் மடியில் அமர்ந்திருந்த பேரனை அனைத்துக் கொள்ள உயர்ந்த ஜெபசீலியின் கைகளை பிடித்து தடுத்தாள் .

” கொஞ்சம் பொறுமையாக இருங்கம்மா .” என்றாள் .முறைத்த ஜெபசீலிக்கு பதிலாக கிறிஸ்டியனை பார்க்க அவன் தன் அம்மாவின் அருகே அமர்ந்து விளக்க ஆரம்பித்தான் .

ஒரு நான்கு நாட்கள் இது போல் சாந்தனுவை  ஜெபசீலியுடன் பழக்கியவள் ஐந்தாவது நாள் …” நீங்கள் ஏன் வெளியே வரக் கூடாது …? ” என்றாள்

” சத்யா அது அம்மாவிற்கு பிடிக்காது என்றேனே …” இடைமறித்த கிறிஸ்டியனை கண்டுகொள்ளாமல் …அவன் மொழிபெயர்க்க போவதில்லை என உணர்ந்து …

” உங்களுடைய கால்கள் பலமாகத்தானே இருக்கின்றன.பிறகு ஏன் இப்படி படுத்தே கிடக்க வேண்டுமென நினைக்கிறீர்கள் …? ” நிதானமாக வார்த்தைகளை உச்சரித்து கூடவே சைகைகளும் பண்ணி அவளுக்கு புரிய வைத்தாள் .

கோபத்துடன் நிமிர்ந்த ஜெபசீலி படபடவென சீறினாள் .” என் வீடு …என் உடல் …என் இஷ்டம் .வாயை மூடிக்கொண்டு போடி …” தாயின் மலையாளத்தை மொழிபெயர்க்க சங்கடப்பட்டு கிறிஸ்டியன் மௌனமாக இருக்க அரைகுறையாக அதை புரிந்து கொண்டு தோள்களை குலுக்கினாள்.

” உங்கள் பேரனுக்கு வெளியே தோட்டத்தில் விளையாடுவதென்றால் மிகுந்த இஷ்டம் .அப்போது நீங்களும் அவனுடன் விளையாடலாமே என்றுதான் கேட்டேன் .பிறகு உங்கள் விருப்பம் ….” என்றவள் தாய்க்கு மொழிபெயர்க்கும்படி மகனிடம் சைகை காட்டிவிட்டு பாட்டி  மடியிலிருந்த சாந்தனுவை தூக்கிக்கொண்டு வெளியேறிவிட்டாள் .

கொஞ்சம் கோபத்துடனேயே அவளை பார்க்க வந்தவனிடம் ” உங்கள் அம்மா அறையை விட்டு வெளியே வர சம்மதித்து விட்டார்கள்தானே …? ” ஆர்வமாக கேட்ட சத்யமித்ராவை ஆச்சரியமாக பார்த்தான் .

” அதற்காகவா அப்படி பேசினாய் ..? “




” ஆமாம் ….எழுந்து நடக்க தெம்பு இருக்கும் போது எதற்கு படுக்கையில் கிடக்க வேண்டும் . அவர்கள் நடமாட ஆரம்பித்தாலே உடம்பில் பாதி தெம்பு வந்துவிடும் “

” ம் …பரவாயில்லை பேபி .சிலநேரம் கொஞ்சம் பெரிய பெண் மாதிரியும் யோசிக்கத்தான் செய்கிறாய் …”

” கிண்டலா …? உங்கள் அம்மாவை பழைய மாதிரி நடமாட வைக்கிறேன் பாருங்கள் …” சவால் போல் சொன்னாள் .

இரண்டு நாட்கள் கழித்து ஆபிசிலிருந்து வீடு திரும்பிய ஆடம்ஸும் , கிறிஸ்டியனும் கலகலவென்ற சிரிப்போடு வீட்டு தோட்டத்தில் சாந்தனுவுடன் பந்தை தூக்கி போட்டு விளையாண்டு கொண்டிருந்த ஜெபசீலியை வியப்புடன் பார்த்தனர் .

கலங்கிய கண்களை மறைத்தபடி ஆடம்ஸ் அங்கே கிடந்த நாற்காலியில் இருவரையும் பார்த்தபடி
அமர்ந்து விட , கிறிஸ்டியனின் கண்கள் சத்யமித்ராவை தேடியது .

பெரிய செம்பருத்தி செடியின் பின்புறம் மறைந்து நின்று பாட்டியையும் , பேரனையும் பார்த்துக் கொண்டிருந்தவளின் பின் சென்று தோள்களை தட்டினான் .திடுக்கிட்டு திரும்பியவள் தடுமாற அவள் தோள்களை அணைத்து நிறுத்தியவன் …

” ரொம்ப பெரிய விசயம் செய்திருக்கிறாய் சத்யா .அம்மாவை திரும்ப இவ்வளவு மகிழ்ச்சியாக பார்ப்போமென்று நினைக்கவேயில்லை .இதற்கு எப்படி நன்றி சொல்ல …? ” என்றவன் அவள் தோள்களை மெல்ல இழுத்து தன் மேல் சாய்த்துக்கொண்டு மென்மையாக அணைத்துக்கொண்டான் .

” ரொம்ப நன்றி சத்யா …” அவள் உச்சந்தலையில் தன் கன்னம் சாய்த்துக்கொண்டான் .

காதிற்குள் அவனது இதய ஓசை டிக்டிக்கிட …திக்திக்கென துடித்த தன் இதயத்தோடு மூச்சு விட திணறியபடி அவன் அணைப்பில் இருந்தவள் …

” போதும் விடுங்க ….” முணுமுணுத்தாள் .

சிறு மூச்சுடன் அவளை விடுவித்தவன் அவள் கண்களுக்குள் தன் கண்களை கலக்க முயல , அதனை எதிர்நோக்கும் திராணியின்றி தலை குனிந்தபடி மெல்ல நகர்ந்து வீட்டினுள் ஓடினாள் .

” இது உங்கள் குடும்பத்தின் வழி வழியான பழக்கமோ …? ” அவளது பாதையை மறித்து நின்று கரோலின் கேட்ட கேள்வி மனதோடு உடலும் நெகிழ்ந்திருக்கும் இந்த நேரத்தில் சத்யமித்ராவின் மனதில் படவில்லை .

                                                           

What’s your Reaction?
+1
1
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!