Serial Stories uravu solla oruvan உறவு சொல்ல ஒருவன்  

உறவு சொல்ல ஒருவன் – 15

15

தன் முகத்தின் முன் நீண்ட கோரை பற்கள் தன்னை கடித்து குதறத்தான் போகிறதென்ற உறுதியோடு கண்களை மூடிய ஜெபசீலி , திடீரென தன் மேல் பாரமாக நின்ற நாய் விநோதமான அலறலுடன் துள்ளி தூரப்போய் விழுந்து கால்களை உதைத்து விறைத்து கிடந்து அடங்குவதை …இன்னமும் நம்பமுடியாமல் பார்த்தாள் .

” ஆன்ட்டி …அம்மா …” என கூவியபடி தன்னருகில் ஓடிவந்தவர்களை விலக்கியபடி ” ப்ரின்ஸ் ” என்ற கூவலுடன் ஓடினாள் .




கீழே விழுந்த அதிர்ச்சியில் சுருண்டு கிடந்த  சாந்தனு அவளை கண்டதும் ” பாட்டி …” எனக் கத்தியபடி அவள் மேலே தாவிக் கொண்டவன் , தானாக அவள் முகம் முழுவதும் முத்தங்களை பதிக்க தொடங்கினான் .

” என்டே அம்மே …என்டே அப்பே …என்டே ஜீவனே ….” மலையாளத்தில் புலம்பலாய் கொஞ்சியபடி ஜெபசீலி பதிலுக்கு குழந்தையை முத்தமிட்டுக்கொண்டிருந்தாள் .
இவர்களின் பாசப்பிணைப்பினை சுற்றிலுமிருந்தோரெல்லாம் கை தட்டி ஆரவாரித்து உற்சாகப் படுத்தினர் .கண்கள் கலங்க இதனை பார்த்தபடியிருந்த சத்யாவின் தோள்களை தட்டி …

” உஷ் …பப்ளிக்கில் வைத்து அழாதே சத்யா ” என்றுவிட்டு கலங்கியிருந்த தன விழிகளை அவள் காணாமல் திருப்பிக் கொண்டான் கிறிஸ்டியன் .

” எ…எப்படி …துப்பாக்கி …எப்படி …திடீரென்று …? ” கேட்க நினைத்ததை கேட்க முடியாமல் உணர்ச்சிவசப்பட்டதில் குரல் குழறியது சத்யாவிற்கு .

” அது ….எப்போதும் பாதுகாப்பிற்காக வைத்திருப்பேன் .இன்று உதவியது ….”

சத்யாவை பார்த்ததும் சாந்தனு அவளிடம் அம்மாவென தாவினான் .அவள் ஆசையோடு அவனை உச்சி முகர்ந்தாள் .அவளிடமிருந்து திமிறி இறங்கிய சாந்தனு கீழே தள்ளி விழுந்து கிடந்த ஜெபசீலியின் விக்கை எடுத்துவந்தான் .

ஜெபசீலியை கீழே அமர வைத்து தானே அந்த விக்கை அவன் தலையில் மாட்டிவிட்டான் .சத்யமித்ரா நெகிழ்ந்தாள் .

தொடர்ச்சியான சிகிச்சையினால் முடி உதிர்ந்து போய் இருக்கும் ஜெபசீலியை பார்க்கவே சாந்தனு விரும்புவதில்லை .அவனே இப்போது விக்கை எடுத்து வந்து தலையில் பொருத்தி அவளை அழகு பார்க்கிறானென்றால் ….

” ப்ரின்ஸ் …ஆன்ட்டியின் அன்பை உணர்ந்து கொண்டான் …” கிறிஸ்டியனிடம் தழுதழுத்தாள் .

,” ஜீசஸ் க்ரேட் …முருகா சரணம் ….” இருவரும் ஒரே நேரத்தில் சொல்லிவிட்டு புன்னகைத்துக் கொண்டனர் .
அதன் பிறகு வந்த நாட்களில் பாட்டிக்கும் , பேரனுக்கும் இடையே ஒட்டுதல் அதிகரித்தது .இரவு தூங்கும்போது மட்டும் சத்யமித்ராவை தேடினான் சாந்தனு .மற்ற அவனுடைய நேரங்கள் அனைத்திலும் ஜெபசீலியே இடம்பெற்றிருந்தாள் .

சாந்தனு தூங்கும் நேரங்களில் தோணாமல் வீட்டு பொறுப்புகளை அவள் கைகளில் வைத்தாள் சத்யமித்ரா .அவளையறியாமலேயே தனக்கு வந்திருந்த ஆட்கொல்லி நோயின் வாதையை மறந்து ….சிகிச்சையின் கொடூர வலிகளை பொறுத்துக் கொண்டு உயிர் வாழும் ஆசையுடன் ஒவ்வொரு நாளையும் தள்ள தொடங்கினாள் ஜெபசீலி .

” நோய் குணமாவதற்கு மற்ற எல்லாவற்றையும் விட அந்த நோயாளியின் மனநிலை ரொம்ப முக்கியம் .இதுநாள் வரை நானிருந்து என்ன செய்ய போகிறேனென்று எந்நேரமும் சாக தயாராக இருப்பதை போலிருந்த உங்கள் மனைவி இப்போது ஒவ்வொரு நிமிடத்தையும் வாழ விரும்புகிறார்கள் .அந்த ஆசைதான் அவர்களுக்கான மருந்து .இனி கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் குணமாவார்கள் என நம்புவோம் .ஆனால் இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் எது …யார் …? “

ரெகுலர் செக்கப்பிற்கு வந்த டாக்டர் கேட்க …நீதான் என சொல்லாமல் சொன்ன கிறிஸ்டியனின் பார்வையை கவனியாது பொருள் விளங்கா பார்வையுடன் அவளை வெறித்துக் கொண்டிருந்த  வில்லியம்ஸின்  பார்வையை சந்தித்தபடி இருந்தாள் சத்யமித்ரா .

அவரிடமிருந்து ஒரே ஒரு ஆறுதல் பார்வைக்காக அவள் மனம் ஏங்கியது .ஆனால் வழக்கமான  கண்டுகொள்ளாத அலட்சிய பாவனையுடன் டாக்டருடன் பேசியபடி வில்லியம்ஸ் வெளியே போய்விட்டார் .

ஜெபசீலி கூட இப்போது கொஞ்சம் முகம் சுளிக்காமல் சத்யாவிடம் பேச ஆரம்பித்திருந்தாள் .இவர்கள்  இருவருக்குமிடையே இணைப்பு பாலமாக சாந்தனு இருந்ததால் இந்த பெண்களுக்கிடையேயான ஒட்டுதல் கொஞ்சம் சுலபமாக …இயல்பாக அமைந்து வந்த்து .

ஆனால் வில்லியம்ஸ் வீட்டிலேயே இருப்பதில்லை .அப்படி இருக்கும் நேரங்களிலும் தனது மனைவி அருகில்தான் இருப்பார் .அப்போது சத்யமித்ரா அங்கே வந்தால் உடனடியாக வெளியேறிவிடுவார் .கிறிஸ்டியன் இவர்கள் இருவரையும் அடிக்கடி பேச வைக்கும் முயற்சிகளையும் எளிதாக முறித்துவிட்டு பழைய அலட்சிய பார்வையோடுதான் சத்யாவை கடந்து கொண்டிருந்தார் .

” எல்லாம் சரியாகிவிடும் சத்யா …” இதமான குரலில் சொன்னான் கிறிஸ்டியன் .ஏதோ ஓர் நம்பிக்கையுடன் தலையசைத்தாள் சத்யமித்ரா .

” நம்ம ப்ரின்ஸ் இப்போது நம்முடனெல்லாம் நன்றாக பழக ஆரம்பித்து விட்டானில்லையா அண்ணா …? ” சமர்த்தாக சேரில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சாந்தனுவை பார்த்தபடி கேட்டாள் கரோலின் .




வில்லியம்ஸ் , ஷீபா , கரோலின் , ரேச்சல் ,ஜெபசீலி அனைவரும் அங்கே  அமர்ந்திருந்தனர் .வேலைக்காரம்மாவை பரிமாறுவதை கவனித்தபடி ஜெபசீலி சாந்தனுவையும் பார்த்துக் கொண்டிருந்தாள் .
தானின்றி சாந்தனு அவர்கள் குடும்பத்தினருடன் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிக்கட்டுமென சத்யமித்ரா சிறிது நேரம் கழித்து சாப்பிட போகலாமென காத்திருந்தாள் .

சாந்தனு சமர்த்தாக தாத்தா , பாட்டிக்கு இடையிலிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு ,” எனக்கு இட்லிதான் வேண்டும் ” என அதிகாரம் செய்து கொண்டிருந்தான்.

” ப்ரின்ஸ் செல்லம் புட்டு சாப்பிடுடா ….” ஜெபசீலி கொஞ்சினாள் .

” நோ …இட்லி வேணும் .சட்னி ..சாம்பாரோடு …” ஒற்றை விரலை ஆட்டி தோரணையாக அவன் சொன்ன விதத்தில் குடும்பத்தினர் அனைவரும் நெகிழ்ந்தனர் .

” ரோசம்மா …இட்லி கொண்டு வாங்க ….” வில்லியம்ஸின் குரலுக்கு சமையல்காரம்மா இட்லியுடன் வந்தாள் .

” ஐயோ குழந்தை என்ன அழகாக கேட்கிறாண்ணா .அப்படியே நம்ம டேவிட்டை நினைவுபடுத்துகிறான் …,” கரோலின் சாந்தனுவை கொஞ்சினாள் .

ரேச்சல் எழுந்து வந்து சாந்தனுவை முத்தமிட போனாள் .அவன் அவளை தள்ளிவிட்டான் .

” எச்சி வைக்காதே …” என்றான் .எல்லோரும் சிரித்தனர் .

ஷீபா கூட ” ஸ்மார்ட் பாய் ” என புன்னகைத்தாள் .

” இனிமேல் தினமும் மெனு சொல்லப்போவது நம்ம ப்ரின்ஸ்தான் …ஓ.கே ப்ரின்ஸ் , இனி நீங்களே என்ன சமைக்கனும்னு தினமும் சொல்லிடுங்க சரியா …? ” வில்லியம்ஸ் தமிழில் பேரனிடம் குழைய அவன் தலையை சரித்து அவரை பார்த்து அவரது தமிழில் திருப்தியாகி …

” ம் …ம் …ஓ.கே …,” என்றான் .

அந்த வீட்டில் அனைவரும் பேசவே யோசிக்கும் வில்லியம்ஸை அலட்சியமாக பார்த்து சரி போனால் போகிறது பிழைத்து போ பாணியில் சாந்தனு பதில் சொல்ல …ஜெபசீலி …

,” எத்தனுக்கு எத்தன் என் பேரன் …” கணவரை கேலியாக பார்த்தாள் .

சட்டென தனது பெரியமனித தனத்தை தட்டி பறித்த பேரனை கோபமாக பார்க்க முடியாது , பொங்கிய சந்தோசத்துடன் சிரித்தார் வில்லியம்ஸ் .

குடும்ப தலைவர் சிரிக்க கூடச்சேர்ந்து அனைவரும் சிரித்தனர் .அப்போது நிறைந்த அந்த மகிழ்ச்சியில் தானும் கலந்து கொள்ள ஆசைப்பட்டு உள்ளே வந்தாள் சதயமிதரா .

ஷீபாவி்ன் அருகே அவள் அமர போனபோது அந்த நாற்காலியை அநிச்சை போல் டேபிளுக்கு அடியில் தள்ளினாள் ஷீபா .

தன்னருகேயிருந்த நாற்காலியை தன்னருகே இழுத்துக்கொண்டு அதன் மேலும் தனது காலை இழுத்து போட்டுக்கொண்டாள் கரோலின் .

” சாப்பிடும் போது கூட ஒரு ப்ரைவஸி இல்லை …” அலுத்தாள் ஷீபா .

மனம் கலங்கிய சத்யா ரேச்சலின் பரிதாப பார்வையில்
மேலும் கலங்கினாள் .இதையெல்லாம் பார்த்தும் பார்க்காத்து போல் வில்லியம்ஸும் , ஜெபசீலியும் சாந்தனுவிடம் கவனம் குவித்திருந்தனர் .

மெல்லிய அவமான உணர்வு பரவ …சத்யா டைனிங் ரூமை விட்டு வெளியேறினாள் .கலங்கிய கண்களுடன் தலை குனிந்து நடந்தவள் எதிரே வந்த கிறிஸ்டியனுடன் மோதுவது போல் போய் சட்டென நின்றாள் .

” சாப்பிட்டாயா சத்யா …? உன்னிடம் பேச வேண்டும் .நீ ஹாலில் இரு சாப்பிட்டுவிட்டு வருகிறேன் ” விலகி நடந்தவன் திடீரென நின்று அவளை உறுத்தான் .

சத்யமித்ரா வெளியேறிய வழியை  சிறு குற்றவுணர்வுடன் பார்த்தபடியிருந்த ஜெபசீலியை ” ப்ரின்ஸை பார் ஜெபி .எங்கே பார்க்கிறாய் …? ” வில்லியம்ஸ் அதட்டினார் .

ஐந்து நிமிடங்கள் கூட இருக்காது , சத்யமித்ராவின் கைகளை பற்றி அழைத்தபடி உள்ளே நுழைந்தான் கிறிஸ்டியன் .

” இங்கே உட்கார் சத்யா …,” வில்லியம்ஸின் அருகேயிருந்த நாற்காலியையே இழுத்து போட்டான் .பார்வை அப்பாவின் மேல் இருந்த்து .

அவளருகே தான் அமர்ந்தான் .

” ரோசம்மா இட்லி கொண்டு வாங்க ” குரல் கொடுத்தான் .

மகனின் இந்த செயலில் தன் கணவனுக்கான மரியாதை குறைவை உணர்ந்த ஜெபசீலி ” கிறிஸ்டி ….” என அதட்ட அவளை கையுயர்த்தி தடுத்த வில்லியம்ஸ் சாப்பிடுவதை நிறுத்தியிருந்த அனைவரையும் சாப்பிடுமாறு சைகை காட்டினார் .

நாற்காலி நுனியில் அமர்ந்திருந்த சத்யா சங்கடத்துடன் எழுந்து நின்றாள் .சுற்றுப்புறத்தில் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்த சாந்தனு …சட்டென தனது இருக்கையிலிருந்து தாவி டேபிள் மேல் அமரந்து கொண்டான் .

” அம்மா ….இங்கே உட்காருங்க …” தான் அமர்ந்திருந்த நாற்காலியை காட்டினான் .




அம்மா உட்கார இடம் இல்லை என நினைத்தான் போலும் .குழந்தையின் இந்த பாசத்தை மறுக்க முடியாமல் மீண்டும் அமர்ந்த சத்யாவின் உள்ளம் ஏனோ படபடவென அடித்துக்கொண்டது .

அவ்வளவு நேரமாக கலகலவென இருந்த அந்த இடம் இப்போது எந்த சத்தமும் இல்லாமல் அமைதியானது .நிமிர்ந்து பார்க்காவிட்டாலும் தன்னை குத்திய வில்லிம்ஸின் பார்வையில் சத்யாவின் கைகள் நடுங்கின .

அன்று மாலை ….

” உன்னுடன் பேச வேண்டும் . ஆபிஸ் ரூமிற்கு வா ” என்றுவிட்டு வில்லியம்ஸ் நடந்த போது …

மத்தளம் கொட்டிய மனதுடன் அவர் பின்னால் போவதா …வேண்டாமா …? என யோசிக்க தொடங்கனாள் சத்யமித்ரா .

What’s your Reaction?
+1
1
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!