Serial Stories uravu solla oruvan உறவு சொல்ல ஒருவன்  

உறவு சொல்ல ஒருவன் – 14

                                            14

” அம்மா …என்னம்மா …? ” ஆதரவாக தாயின் தோள்களை அணைக்க முயன்றவனின் கைகளை தட்டிவிட்டாள் அவள் .

” டேய் போதும்டா , சும்மா என்னை இப்படி அணைத்து கொஞ்சி சமாதானப்படுத்தலாமென்று பார்க்காதே “

ஆக , இது இவனது பாணி . துயரத்துடனோ , கோபத்துடனோ இருப்பவர்களை வசப்படுத்த இது போல் அணைத்து …குழைவாக பேசி சமாளித்து …சிரித்து …

சிறிது நிம்மதியான மனத்துடன் உள்ளே வந்த சத்யாவை அதிர வைத்த ஜெபசீலியின் பேச்சு …இப்போது மகனிடம் அவளது பெருமித அலுத்தலை கேட்டதும் குறைந்த்து .அம்மாவையும் ,மகனையும் சுவாரசியமாக வேடிக்கை பார்க்கலானாள் .




” ஐ…சும்மாதானம்மா …எங்க அம்மாவுக்கு கோபமெல்லாம் வராதுதானே …” அன்னையின் கன்னத்தை செல்லமாக கிள்ளியபடி மலையாளத்தில் கொஞ்சிய கிறிஸ்டியனை கண்டதும் மனம் சற்று முன் வானத்தில் பறந்த உணர்வை மீண்டும் அடைந்த்து .

இவன் வசியக்காரன் .எளிதாக பிறரை வசியம் செய்து விடுகிறான் …

” ஆமாம் அம்மா நம்பாதீர்கள் .உங்கள் மகனுக்கு அடுத்தவரை இப்படி கொஞ்சி ஏமாற்றுவதென்றால் ரொம்ப இஷ்டம் . இவர் கொஞ்ச ஆரம்பித்துவிட்டால் நாம் ஜாக்கிரதையாகிக் கொள்ள வேண்டும் ….,”

ஏதோ என்னாலானது என தானும் இடையில் நாலு வார்த்தைகளை போட்டு வைத்தாள் .

அம்மாவின் கன்னத்தை விட்டுவிட்டு இடுப்பில் கை வைத்தபடி இவளை செல்லமாக முறைத்தான் கிறிஸ்டியன் .அவனுக்கு உதட்டை சுழித்து பழிப்பு காட்டினாள் .

” என்னடா இவள் என்ன சொல்கிறாள் …? ” புரியாத தமிழுக்கான விளக்கம் கேட்ட தாயை சமாளிக்க ….

” அ…அதுவாம்மா …அது வந்து …இவள் வந்து …” என திணறினான் .இடையில் நெற்றியில் தட்டி தலையை லேசாக சொறிந்து கொண்டான் .

அவனது இந்த செய்கைகள் சத்யமித்ராவிற்கு மிகுந்த சந்தோசத்தை கொடுக்க …

” என்ன செய்வதென்று தெரியாமல் நீங்கள் கூட இப்படியெல்லாம் விழிப்பீர்களா …? ” மெல்லிய குரலில் அவனிடம் முணுமுணுத்து விட்டு …

” உங்கள் மகன் சாகசக்காரரம்மா .யாரை எப்படி வசப்படுத்துவதென்று நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார் ….” என்றாள் சத்தமாக .

ஜெபசீலி மீண்டும் விளக்கத்திற்காக மகனை பார்க்க சத்யாவை ஒரு சவால் பார்வை பார்த்துவிட்டு தாயின் தோளணைத்து தன்னருகே இழுத்துக் கொண்டவன் …

” என் செல்ல அம்மால்ல ….நீங்க இப்படி கத்தலாமா …? இவள் பேச்சு இப்போது நமக்கு எதற்கு ? இது உங்கள் ஓய்வு நேரம்தானே ..வாங்க போய் தூங்கலாம் ….”

நாடியை பற்றி செல்லம் கொஞ்சிய மகனின் மாயப்பேச்சில் குளிர்ந்த அந்த தாய் இப்போது மகனின் கையில் சேயாகி தலையசைத்து உள்ளே நடந்தாள் .

அன்னையை அணைத்து நடந்தபடி திரும்பி சத்யாவை பார்த்து எப்படி …என புருவம் உயர்த்தினான் கிறிஸ்டியன் .

” எப்பா ….” என தனது வியப்பை புருவ அசைவில் காட்டியவள் தேங்கிய புன்னகையுடன் தனது அறை நோக்கி நடந்தாள் .சாந்தனு தூங்கும் நேரமாயிற்றே தூங்கியிருப்பானா …?

அங்கே அறையினுள் தூங்கிக்கொண்டிருந்த சாந்தனுவின் அருகில் அமர்ந்திருந்த ரோஸி இவளைக் கண்டதும் எழுந்து ….

“உங்களை பார்க்காமல்  ரொம்ப அழுதுவிட்டான் மேடம் .எங்கள் யாராலும் சமாளிக்க முடியவில்லை .கடைசிவரை அழுதழுது அசந்துதான் தூங்குகிறான் ….” தகவல் சொல்லிவிட்டு போனாள் .

கன்னங்களில் கண்ணீர் கறையுடன் இன்னமும் சிறு ஏக்க விசும்பல்களுடன் உறங்கிய குழந்தையை தாய் மனம் பதற பார்த்தபடியிருந்தாள் சத்யமித்ரா .

இந்தக்கோபத்தில்தான் தன்னை வீட்டை விட்டு போய்விடுமாறு ஜெபசீலி சொல்லியிருக்க வேண்டுமென ஊகித்தாள் .இங்குள்ளவர்கள் எல்லோரும் ஏதோ பிள்ளையை நான்தான் பேசி பேசி என் பக்கமாக பிடித்து வைத்திருப்பதாகத்தானே நினைக்கிறார்கள் .

பெருமூச்சுடன் இந்த பிரச்சினைக்கான தீர்வை யோசிக்க ஆரம்பித்தாள் .

மாலை நேரம் வழக்கமான ஜெபசீலியுடனான தோட்ட விளையாட்டின் போது அவள் இடுப்பை விட்டு இறங்க மறுத்த சாந்தனுவை ” போ ப்ரின்ஸ் ….” என கட்டாயம் காட்டி இறக்கி விட்டாள் .




தாயின் கடினத்தில் முகம் வாடிய குழந்தை அரைகுறை மனதுடன் ஜெபசீலியுடன் பந்தை தூக்கி போட்டுக் கொண்டிருந்தான் .

குழந்தையின்  இணக்கமற்ற அந்த விளையாட்டிற்கே   அதிக பரவசம் காட்டிய ஜெபசீலியை பாசம் கலந்த பரிவுடன் பார்த்தாள் .தற்செயலாக திரும்பிய ஜெபசீலி சத்யாவின் இந்த பரிவுப் பார்வையை தான் விரும்பவில்லையென காட்டினாள் .

” நீ பக்கத்திலேயே நின்று கொண்டு என்னுடன் விளையாட சொன்னால் அவன் எப்படி என்னுடன் ஒட்டுவான் …? ஒருவேளை அதுதான் உன்னுடைய திட்டமோ …? “

மனம் துடிக்க உள்ளே நடந்து மறைந்துகொண்டாள் சத்யா .கடவுளே முருகா …சாந்தனுவை இவர்களோடு இணக்கமாக பழக வைக்க ஏதாவது வழி காட்டிவிடு என வேண்டிக்கொண்டாள் .

மறுநாள் மாலை ,

” ப்ரின்ஸும் , அம்மாவும் எங்கே சத்யா …? இங்கே விளையாடிக்கொண்டிருப்பார்களென நினைத்தேனே …” தோட்டத்தில் நின்று கொண்டிருந்த சத்யாவிடம் கேட்டான் கிறிஸ்டியன் .

” இரண்டு பேரும் கொஞ்சம் வாக்கிங் போல் நடந்து வரலாமென பக்கத்து பார்க்கிற்கு போயிருக்கிறார்கள் …”

” என்ன …தனியாகவா …? “

” ஏன் தனியாக போனால் என்ன …? அப்போதுதான் சாந்தனு அவர்களுடன் பழகுவானென்று நான்தான் அவனைக் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தேன் …”

” சரிதான் சத்யா .ஆனாலும் ப்ரின்ஸ் குழந்தை .அம்மா உடல்நலம் சரியில்லாதவர்கள் . அவர்கள் இருவரையும் தனியாக அனுப்புவதென்றால் …யோசித்திருக்க வேண்டாமா …? சரி வா நாம் போய் பார்க்கலாம் …” இருவரும் கிளம்பினர் .

” டிரைவர்தான் கூட போயிருக்கிறாரே …” காரில் போகும் போது கேட்டாள் .

” அவர் காரோடு வெளியே நிற்பார் ….” கவலையான  கிறிஸ்டியனின் வார்த்தைகளில் அந்த அளவு கவலை சத்யமித்ராவிற்கு வரவில்லை .

அவனது கவலை தேவையற்றதே போல் அங்கே பார்க்கில் ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருந்தனர் இருவரும் . ஊஞ்சல் , சீ சா ,அப் அன்ட் டவுன் , குட்டி ராட்டினம் என ஒவ்வொன்றாக பேரனை ஏற்றி இறக்கி விட்டு அவனைப் போலவே தானும் குழந்தையாக மாறி விளையாடிக் கொண்டிருந்த தாயை தூரத்திலிருந்து பார்த்ததும் நிம்மதியானான் .

அருகே போகப் போன சத்யாவின் கையை பிடித்து இழுத்து சற்று மறைவாக இருந்த பெஞ்சில் உட்கார்ந்து கொண்டவன் ” நாம் கொஞ்சநேரம் இங்கிருந்தே பார்ப்போம் ,” என்றான் .

” ரொம்ப நாட்கள் கழித்து ….அண்ணன் வீட்டை விட்டு போன பிறகு இப்போதுதான் அம்மா முகத்தில் இந்த சிரிப்பை பார்க்கிறேன் சத்யா .அண்ணனும் இருக்கும்போது எங்கள் குடும்பம் எப்படியிருக்கும் தெரியுமா .? எந்நேரமும் கலாட்டாவும் , காமெடியுமாக வீடே இரண்டுபடும் .அப்பா கலகல டைப் கிடையாது .ஆனால் அம்மா அவருக்கு எதிர் .எந்நேரமும் சிரிப்பும் , பேச்சுமாக வீட்டை சுற்றி வருவார்கள் .”

” அப்பாவை எங்களால் எதற்கும் எளிதாக அணுக முடியாது .ஆனால் அம்மா …எங்கள் இருவருக்கும் அன்னையாக இருந்த நேரத்தை விட ஒரு தோழனாக இருந்த நேரங்கள்தான் அதிகம் .நாங்கள் மூவரும் எதையுமே எங்களுக்குள் மறைத்ததில்லை .அப்படித்தான் நினைத்திருந்தோம் டேவிட் காதலுடன் வந்து நிற்கும் வரை .”

” ஆனால் எந்த முன் தகவலுமே இல்லாமல் திடீரென ஒரு தமிழ் பெண்ணை திருமணம் முடித்துவிட்டேன் என அவன் வந்து நின்ற போதே அம்மா மிகவும் அதிர்ந்து விட்டார்கள் . அப்பா வேறு நீதான் அவனுக்கு செல்லம் கொடுத்து கெடுத்துவிட்டாய் என திட்ட ஆரம்பித்துவிட்டார் .அம்மா மிகவும் ஓய்ந்துவிட்டார்கள் ….”

மனதில் பாரம் ஏறிக்கொள்ள விளையாண்டு கொண்டிருந்த ஜெபசீலியை பார்த்தாள் .இரண்டு சமவயது குழந்தைகள் விளையாடுவது போல்தான் தோன்றியது .

” அம்மா ப்ரின்ஸிடம் டேவிட்டை பார்க்கிறார்கள் சத்யா .அவனை தனதாக்கிக் கொள்ளும் வேகத்தில் ஏதாவது தவறாக உன்னிடம் பேசிவிட்டால் நீ அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாதே …”

” இதெல்லாம் நீங்கள் எனக்கு சொல்லவேண்டுமா கிருஸ் …நான் அறியமாட்டேனா ..? அங்கே பாருங்களேன் ஆன்ட்டியை ஊஞ்சலில் உட்கார வைத்து
ப்ரின்ஸ் தள்ளிவிடுவதை . இங்கே குழந்தை யாரென்று தெரியவில்லை …”

கிறிஸ்டியனிடமிருந்து பதில் வராமல் போகவே திரும்பி அவனை பார்த்து என்னவென புருவங்களை உயர்த்தினாள் .

” அதென்ன சில நேரம் மட்டும் இந்த அழைப்பு …? ம் ….கிருஸ் …” அவள் உச்சரித்த தனது பெயரை தானே மென்மையாக உச்சரித்து பார்த்தான் .

நாக்கை லேசாக கடித்துக்கொண்டாள் .திடுமென்றுதான் …அவள் சில அந்நியோன்னியங்களை உணரும்  நேரங்களில் மட்டும்தான்  அவளையறியாமலேயே இந்த பெயர் வந்துவிடுகிறது .

வெளேரென்ற இரு பல்வரிசைகளிடையே லேசாக கடிபட்டுக் கொண்டிருந்த  இளம் ரோஜா நாக்கில் ரசனையாக பார்வையை பதித்தவன் ” அழகு ” என்றான் .
ஒரு விரல் நீட்டி அந்த நாக்கு நுனியை தீண்டினான் .சட்டென அவள் நாக்கை உள்ளிழுத்துக் கொள்ள மெல்ல இதழ்களை வருடிவிட்டு விரலை எடுத்தான் .

சூடேறிய முகத்தை மறைக்க எதிரிலிருந்தவனை பார்க்க முடியாமல் பார்வையை தடுமாற்றத்துடன் விளையாடிக் கொண்டிருந்தவர்களுக்கு கொண்டு போனாள் சத்யமித்ரா .

எல்லா விளையாட்டுகளிலும் மாறி மாறி விளையாடி  களைத்து ,  ஐஸ்க்ரீம் வாங்கி தின்று முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பும் எண்ணத்தில் இருந்தனர் ஜெபசீலியும் , ப்ரின்ஸும் ….

” கிளம்பிவிட்டார்கள் போல …” கிறிஸ்டியனின் முகத்தை பார்க்காமல் பேசியவளை இமை தட்டாமல் பார்த்தபடி ….” ம் ….” என்றான் .

அந்த தீட்சண்ய பார்வையின் தகிப்பை தாங்க முடியாமல் “போகலாமா ? ” என எழுந்தாள் .




” போகவேண்டுமா …? ” விருப்பமின்மையை ஏக்கமாக வெளிப்படுத்தினான் .

திடீரென சூழ்நிலையில் ஒரு பரபரப்பு .அங்குமிங்குமாக ஓடத்துவங்கினர் அனைவரும் .சிலரது அலறல் கூட கேட்டது .மயக்கத்திலிருந்து வெளிவந்த இருவரும் …வேகமாக சுற்றிலும் பார்க்க ….

வெறிநாய் ஒன்று எப்படியோ அந்த பார்க்கினுள் நுழைந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் வெறியுடன் விரட்டிக்கொண்டிருந்த்து .

” கிருஸ் …ஆன்ட்டி …ப்ரின்ஸ் ….” கத்தலுடன் அவன் கையை பற்றியவளை பாதுகாப்பாய் தனது கைவளைவுக்குள் இழுத்துக் கொண்டவன் , நாயின் ஓட்ட திசையை கவனித்தான் .

அது ஜெபசீலியின் திசையைத்தான் சுற்றிக்கொண்டிருந்த்து .ப்ரின்ஸ் அலறலுடன் ஜெபசீலியுடன் ஒட்டிக்கொண்டிருந்தான் .அவள் தன்னுயிர் போல் குழந்தையை தன்னோட அணைத்துக்கொண்டு ஓட நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள் .

தனது இலக்கை நிர்ணயித்துக்கொண்ட நாய் அவர்களின் மேல் பாயத்தொடங்கிய அதே விநாடி , அவள் ப்ரின்ஸை தூக்கி பக்கத்தில் அழகுக்காக ” பம்மென்று ” வளர்த்து வைக்கப்பட்டிருந்த புதர்செடியை நோக்கி எறிந்துவிட்டு தான் சுருண்டு கீழே விழுந்தாள் .

நாய் அவள் வயிற்றின் மேல் முன்னங்கால்களை பதித்து அவள் முகத்தை நோக்கி வாயை திறந்த்து .

What’s your Reaction?
+1
1
+1
3
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Priya
Priya
4 years ago

Mem ippo ok ஆகிடுச்சா

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!